Chocks: நடிகர் நாகேஷ்

Friday, November 12, 2021

நடிகர் நாகேஷ்

நடிகர் நாகேஷ்

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. நாகேஷ்-மனோரமா விரிசல்
  3. நாகேஷின் இயல்பு
  4. 1970-1980 காலகட்டம்
  5. நாகேஷ்-கமல்ஹாசன் நட்பு
  6. முடிவுரை
முகவுரை

பிராமண குடும்பத்தில் பிறந்த நாகேஷ், கிறிஸ்தவ பெண் ரெஜீனாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு என மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் குடும்ப வாழ்க்கை நெடுநாள் இனிமையாக இருக்கவில்லை. ஏனெனில், நாகேஷ் மைத்துனர் செல்வராஜின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற விசாரணைக்காக, ரெஜினா மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறை கைது செய்தது. வழக்கு நடைபெற்று உரிய விசாரணைக்கு பிறகு, ரெஜினா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

நாகேஷ்-மனோரமா விரிசல்

மேற்கண்ட வழக்கு விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் நாகேஷ்-மனோரமா உறவில் விரிசல் ஏற்பட 1968க்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. 1970 நவக்கிரகம் படம் மூலம் நாகேஷையும் மனோரமாவையும் இணைந்து நடிக்க வைக்க முயன்றார் இயக்குனர் K.பாலச்சந்தர் (K.B). ஆனால் மனோரமாவுடன் இணைந்து நடிக்க நாகேஷ் மறுத்தார். பிறகு மனோரமா கதாபாத்திரத்தை மாற்றி C.K.சரஸ்வதியை சேர்த்தார் K.B. இதை தொடர்ந்து நாகேஷ் உடன் இணைந்து நடிப்பதை மனோரமாவும் தவிர்த்து வந்தார்.

ஒரு முறை காசே தான் கடவுளடா நாடகத்தின் விழாவுக்கு வந்திருந்த நாகேஷிடம் இயக்குனர் ஸ்ரீதர் மனோரமா பிரச்சனை குறித்து பேசி சமாதானம் செய்தார். அதை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அன்னமிட்ட கை (1972) படத்தில் மனோரமாவுடன் இணைந்து நாகேஷ் வசனம் பேசி நடித்தார். ஆனால் இதற்கு பிறகு நாகேஷ்-மனோரமா பல படங்களில் நடித்திருந்தாலும் எந்த படத்திலும் அவர்கள் இருவருக்கும் இடையே கலந்துரையாடும் வசனக் காட்சிகள் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.

நாகேஷின் இயல்பு

சரியோ தவறோ சட்டென பேசக்கூடிய இயல்பு உடையவர் நாகேஷ். அப்படி ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டில் எம்.ஜி.ஆர் இல்லாத நேரம் பார்த்து ஷூட்டிங்குக்கு “கிழவா ரெடி ஆகியாச்சா?” என்று எம்.ஜி.ஆரை நாகேஷ் கேலியாக விமர்சிக்க அதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் நடிக்க நாகேஷை அணுகவில்லை தயாரிப்பாளர்கள்.

கமல்ஹாசனும் ஜெய்சங்கரும் நாகேஷும் பேசிக்கொண்டு இருக்கையில் "ஜெய்சங்கர் சோப்பு வாங்க வேண்டியதே இல்லை ஏன்னா ஜெய்சங்கர் உடம்பு பூராவும் முடியா இருக்கு அப்புறம் எதுக்கு சோப்பு? ஒன்லி ஷாம்பு!" என்று கேலியாக கூற ஜெய்சங்கர் உட்பட அனைவரும் சிரித்தனர்.

1970-1980 காலகட்டம்

1970 தொடக்கங்களில் எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாமல், மனோரமாவுடன் ஜோடி சேர மறுத்ததால், உடல் நலிவுற்ற தாயார் இறந்திட என்று நாகேஷ் தொடர்ந்து சிரமங்களை சந்தித்தார். அந்நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளில் சோலோவாக அல்லது குமாரி சச்சுவுடன் இணைந்து நடித்தார் நாகேஷ். 1972 பிறகு எம்.ஜி.ஆர் ஆதரவுக்கரம் நீட்ட உலகம் சுற்றும் வாலிபன், நல்ல நேரம், உரிமைக்குரல், நாளை நமதே, உழைக்கும் கரங்கள் போன்ற படங்களில் நடித்தார் நாகேஷ்.

ஒரு காலகட்டத்தில் பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்த நாகேஷ் 1970 இறுதிகளில் 1980 தொடக்கங்களில் தொடர் திரைப்பட வாய்ப்பின்றி சிரமப்பட்டார். இந்த காலகட்டத்தில் சுருளிராஜன் நகைச்சுவை துறையில் கொடி கட்டி பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகேஷ்-கமல்ஹாசன் நட்பு

நாகேஷ் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் கமல்ஹாசன். அவரது அலுவகத்தில் நடிகர்களில் நாகேஷ் புகைப்படம் மட்டுமே மாட்டப்பட்டிருக்கிறது. அண்மையில் சென்னையில் ஒரு சாலைக்கு நடிகர் நாகேஷ் பெயரை சூட்ட வேண்டும் என்றும் நடிகர் நாகேஷ் பெயரில் ஒரு விருதை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் கடல் மீன்கள், அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், MMKR, மகளிர் மட்டும், நம்மவர், அவ்வை சண்முகி, காதலா காதலா, வசூல் ராஜா MBBS, தசாவதாரம் போன்ற படங்களில் நாகேஷ் நடித்தார். 

கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை, நடனம் என்று பல்வேறு வேடங்களில் கலக்கிய அற்புத கலைஞரான நாகேஷை கௌரவித்து தமிழ்நாடு அரசும் இந்திய ஒன்றிய அரசும் இதுவரை தனிச்சிறப்பு செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரியது. நடிகர் நாகேஷுக்கு விருது கிடைத்தால் அது விருதுக்கு தான் பெருமை சேர்க்கும். இனி வருங்காலங்களில் இந்நிலை மாறுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

முடிவுரை

நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமானது என்பதற்கு சார்லி சாப்ளின் முதல் விவேக் வரை யாரும் விதிவிலக்கல்ல. இதில் நாகேஷும் விதிவிலக்கல்ல. வாங்கிய கடனை கட்ட இயலாததால் நாகேஷ் தியேட்டரை விற்ற வேண்டிய நிலைக்கு நாகேஷ் குடும்பம் சென்றது. திரைத்துறையில் நன்கு வளர்ந்திருக்க வேண்டிய மகன் ஆனந்த் பாபு மது பழக்கத்திற்கு அடிமையாகி தனது நல்வாழ்வை இழந்தார்.

திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி, எதிர் நீச்சல் மாது, காதலிக்க நேரமில்லை செல்லப்பா, அன்பே வா ராமையா, சர்வர் சுந்தரம், அபூர்வ சகோதரர்கள் தர்மராஜ், MMKR அவினாசி, நம்மவர் பேராசிரியர் ராவ், மகளிர் மட்டும் சடலம், அவ்வை சண்முகி ஜோசப் என்று விதவிதமான கதாபாத்திரங்கள் மூலம் நம் நினைவுகளை மீட்டிவிட்டு கொண்டிருக்கிறார்.

விவரணைகள் 

நாகேஷ் எனும் நாயகன்


நடிகர் நாகேஷ் கடந்து வந்த பாதை


திருவிளையாடல் நகைச்சுவை காட்சி 


காதலிக்க நேரமில்லை நகைச்சுவை காட்சி 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...