Chocks: தமிழ் சினிமாவும் இசைத்துறையும்

Friday, November 12, 2021

தமிழ் சினிமாவும் இசைத்துறையும்

தமிழ் சினிமாவும் இசைத்துறையும் 

# கே.பாலச்சந்தர் - இளையராஜா - மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் 
# வைரமுத்து - இளையராஜா - பாரதிராஜா
# பஞ்சு அருணாச்சலம் - இளையராஜா 
# எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி 
# எம்.ஜி.ஆர் - கண்ணதாசன் - வாலி 
# எம்.ஜி.ஆர் - டி.எம்.எஸ் - எஸ்.பி.பி 
குறிப்பு 

ஒரு கத்தியில் இருக்கூர்மை இருக்க முடியாது என்பதால் ஒரு பிரச்சனை புயலாக கிளம்பி அக்கத்தி துண்டாகி விட்டால் அது இரண்டு கத்தியாக மாறக்கூடும். இப்படி வாழ்வில் சில விஷயங்கள் Just Like That என்று அரங்கேறிவிடும் ஏனெனில் மனிதர்களுக்கு இடையில் மனக்கசப்பு எழுவது சகஜமானது.

இங்கு சில பிரபலங்களுக்கு இடையில் நிலவிய மனக்கசப்பு குறித்து காண இருக்கிறோம். இந்த செய்தி எல்லாம் உண்மையா? கிசு கிசுவா? என்று கேட்டால் நிச்சயம் கிசு கிசு அல்ல ஆனால் உண்மையா? என்றால் நிச்சயம் அது சம்பந்தப்பட்ட தரப்புக்கு மட்டுமே தெரியும் மற்றவை யூகமாக அமையும். அப்படி யூகமான முறையில் கேட்டதை, படித்ததை, அறிந்ததை எழுதியுள்ளேன். 

இதில் நீதி எந்தப்பக்கம் என்று எடுத்துரைக்கும் நீதிபதி நானல்ல நீங்களும் அல்ல என்று எண்ணியே கட்டுரையை வாசியுங்கள். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இக்கட்டுரையை எழுதவில்லை என்பதை தெளிவு செய்கிறேன்.

கே.பாலச்சந்தர் - இளையராஜா - மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் 

புது புது அர்த்தங்கள் (1989) திரைப்பட ரீ-ரிகார்டிங் வேலைகளை விரைவாக முடித்து தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்தது கவிதாலயா நிறுவனம். அந்நேரத்தில் பிசியாக இருந்த இளையராஜா ரீ-ரிகார்டிங் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார். அதற்கு கால அவகாசம் தர மறுப்பு தெரிவித்து ரீ-ரிகார்டிங்குக்கு ட்ராக் எடுத்து போட்டுக் கொள்கிறோம் (இதை ஆங்கிலத்தில் Filler என்றும் கூறுவதுண்டு) என்று கவிதாலயா நிறுவனம் இளையராஜாவிடம் சொல்லியது. இதனால் பாலச்சந்தர் - இளையராஜா கூட்டணி தொடர்ந்து பயணிக்க முடியாமல் விரிசல் அடைந்தது. 

பின்னர் பாலச்சந்தர் பல இசையமைப்பாளர்களை பயன்படுத்தி தனது திரைப்படங்களை இயக்கினார், தயாரித்தார். மணிரத்தினம் இயக்கத்தில் பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தது. பாலச்சந்தர் தயாரிப்பு என்பதால் இசைக்கு இளையராஜா கிடையாது. மணிரத்னமும் பாலசந்தரும் வைரமுத்துவும் புது இசைமைப்பாளரை தேட அவர்களின் தேடலுக்கு இசைப்புயலாக வந்து நின்றவர் ஏ.ஆர்.ரகுமான். புதியவரான ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் மணிரத்தினம் - பாலச்சந்தர் இணைந்த அத்திரைப்படம் தான் ரோஜா (1992). ரோஜா திரைப்படத்திற்கு முன்னர் வரை மணிரத்னம் இயக்கிய 11 திரைப்படங்களுக்கும் இசையமைத்தது இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து - இளையராஜா - பாரதிராஜா 

வைரமுத்து, இளையராஜா, பாரதிராஜா ஆகிய மூவருமே தேனியை சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் எவ்வளவு திறமைகள் இருந்தாலும் பங்காளி சண்டைகள் தவிர்க்க இயலாமல் போனது துரதிர்ஷ்டமானது. இணைந்த கைகளாக உச்சத்தை தொட்டவர்கள் பின் தனித்தனியாக உச்சத்தை தொட்டனர்.

வைரமுத்து - இளையராஜா பிரிவுக்கு காரணம் அவர்களுக்கு இடையே நிலவிய மனக்கசப்பு தான். எடுத்துக்காட்டாக தாய்க்கு ஒரு தாலாட்டு திரைப்படத்தில் "இளமை காலம்" என்ற பாடலில் "பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை" என்று வரிகளை எழுதி வார்த்தை ஜாலம் புரிந்திருப்பார் வைரமுத்து. இத்திரைப்படத்திற்கு வைரமுத்து எழுதிய பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பின்னர் கடைசி நேரத்தில் மேலும் ஒரு பாடலை புதிதாக கவிஞர் வாலியை எழுத வைத்து சேர்த்தார் இளையராஜா. இத்திரைப்பட டைட்டில் கார்டில் பாடல்கள் வாலி, வைரமுத்து என்று காட்டப்பட்டதன் மூலம் தான் ஒப்புக்கொண்ட எந்த படத்தின் முழு பாடல்களையும் தானே எழுத வேண்டும் என எண்ணும் வைரமுத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. 

சிந்து பைரவி திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய பாடலில் பல்லவியை எடுத்துவிட்டு கிராமிய பாடலில் இருந்து எடுத்து "பாடறியேன் படிப்பறியேன்" என்ற பல்லவியை சேர்த்தார் இளையராஜா. இசை பாடும் தென்றல் திரைப்படத்தில் "எந்தன் கைக்குட்டையை" பாடலை எழுதிய வைரமுத்துவிடம் இது பாடல் வரிகள் போல அல்ல உரைநடை போல இருக்கிறது என்று இளையராஜா கூறியுள்ளார். இப்படி சூழலில் இளையராஜா வைரமுத்து கூட்டணி கடைசியாக பணியாற்றி வெளிவந்த திரைப்படம் புன்னகை மன்னன் (1986).

பாரதிராஜா - இளையராஜா ஆகியோருக்கு இடையே மனக்கசப்பு நிலவிய காலகட்டத்தில் முதல் முறையாக தேவேந்திரன் என்னும் புதிய இசையமைப்பாளரை கொண்டு வேதம் புதிது என்ற படத்தை இயக்கினார் பாரதிராஜா. இதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு ஹம்சலேகா, தேவா, வித்யா சாகர் என்று பல இசையமைப்பாளர்களுடன் பயணித்தார் பாரதிராஜா. 1990 களுக்கு பிறகு கிழக்கு சீமையிலே (1993) திரைப்படம் மூலம் பாரதிராஜாவும் ஏ.ஆர்.ரகுமான் இசையை பயன்படுத்திக் கொண்டார். 

பஞ்சு அருணாச்சலம் - இளையராஜா 

கண்ணதாசனின் சகோதரன் மகன் பஞ்சு அருணாச்சலம் கண்ணதாசனிடம் தான் திரைத்தொழிலை கை பழகினார். அக்காலகட்டத்தில் கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் மிகவும் அன்னியோன்னியமாக பழகி வந்தவர்கள். கண்ணதாசனிடம் உதவியாளராக வேலை செய்து வந்த பஞ்சு அருணாச்சலத்திற்கு தானும் ஏதாவது பெரிதாக சாதித்து பெயர் வாங்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. 

1975 காலகட்டத்தில் பாபி, ஆராதனா, ஷோலே, ஜூகுனு, யாதோங்கி பாரத் போன்ற இந்தி திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்களை விட அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றன. தமிழ்நாட்டில் பாலிவுட் திரைப்படங்கள் வெற்றிவாகை சூட அதில் இடம்பெற்ற பாடல்கள் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. அப்போது திசை மாறிய பறவையாக தமிழ் திரைப்படங்கள் விளங்க காரணம் பாலிவுட் இசை தமிழ் நாட்டை ஆக்கிரமிப்பு செய்தது தான். அதனால் புது இசையமைப்பாளரை அறிமுகம் செய்து தமிழ் சினிமா இசைக்கு புத்துணர்ச்சி அளிக்க இளையராஜா அமைவார் என்ற நம்பிக்கையில் அவரை அன்னக்கிளி (1976) திரைப்படத்தில் அறிமுகம் செய்தார் பஞ்சு அருணாச்சலம். 

எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி 

சர்வர் சுந்தரம் (1964) திரைப்படத்தில் இடம்பெற்ற "அவளுக்கென்ன அழகிய முகம்" பாடல் காட்சி ஷூட்டிங்க்கு இசையமைப்பாளர் ராமமூர்த்தி வர இயலாத நாளில் இந்தி இசையமைப்பாளர் நௌஷாத் அலி முன்னிலையில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டும் இருக்க இப்பாடல் காட்சியை படமாக்கினர் இயக்குனர் K.பாலச்சந்தர். எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் இடையில் நிலவிய மனக்கசப்பை இப்பாடல் காட்சி ஷூட்டிங் ஊதி பெரிதாக்கியது. இதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் (1965) திரைப்படத்திற்கு இசையமைத்த பிறகு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். 

தனியாக பிரிந்த பின்னர் வயலின் மேஸ்ட்ரோ ராமமூர்த்தி 19 திரைப்படங்களுக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 500+ திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனை விட திரை அனுபவத்திலும் வயதிலும் ராமமூர்த்தி மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் - கண்ணதாசன் - வாலி 

பரணி ஸ்டூடியோவில் நடந்த விழாவில் தமிழ் திரையுலக அணுகுமுறையை கெடுப்பதே எம்.ஜி.ஆர் தான் என்று எம்.ஜி.ஆரை தாக்கி பேசினார் கண்ணதாசன். இந்நிகழ்ச்சி நடந்த பின்னர் தனது திரைப்படங்களுக்கு கண்ணதாசன் எழுத கூடாது என்று எம்.ஜி.ஆரும் எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்கு தான் எழுதமாட்டேன் என்று கண்ணதாசனும் ஒரு இடத்திலும் கூறவில்லை ஆனால் கண்ணதாசன் பேச்சினால் திரையுலகில் எம்.ஜி.ஆர் - கண்ணதாசன் இணைந்து பணியாற்ற முடியாத சூழல் அமைந்தது. 

அந்நேரத்தில் நீலகண்டன் இயக்கத்தில் அண்ணாதுரை திரைக்கதையில் எம்.ஜி.ஆரின் 50 வது திரைப்படமாக வெளிவந்த நல்லவன் வாழ்வான் (1961) படத்தில் குத்தாலம் அருவியிலே பாடலை எழுதி எம்.ஜி.ஆரின் நட்பு வட்டத்தில் நுழைந்தார் வாலி. பின்னர் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர்களில் வாலி முக்கிய இடத்தை பிடித்தார். இருப்பினும் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் - கண்ணதாசன் மீண்டும் இணைந்து பணியாற்றியது வேறு கதை. 

எம்.ஜி.ஆர் - டி.எம்.எஸ் - எஸ்.பி.பி 

வாஹினி ஸ்டுடியோவிற்கு வருகை தந்த டி.எம்.எஸ் எம்.ஜி.ஆரை பார்த்து "வணக்கம் அண்ணன்" என்றார். அந்நேரத்தில் மூன்று நடிகைகளுக்கு நடுவில் நின்று பேசி கொண்டிருந்த எம்.ஜி.ஆர் "உள்ள போங்க! பேசிட்டு வரேன்" என கூறினார். நடிகைகள் முன்னர் அவ்வாறு கூறியதை அவமதிப்பாக கருதி வருந்தினார் டி.எம்.எஸ்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பான அடிமைப்பெண் திரைப்படத்திற்கு ஒரு பாடலை மட்டும் ரிகார்டிங் செய்ய டி.எம்.எஸ்சை கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். தனது மகளின் திருமண வேலைகள் காரணமாக டி.எம்.எஸ் உடனடியாக பின்னணி பாட வர இயலவில்லை.  பின்னர் தெலுங்கில் 20 பாடல்களுக்கு மேல் பாடி வளர்ந்து வந்த எஸ்.பி.பியை "ஆயிரம் நிலவே வா" பாடல் மூலம் தமிழ் திரையுலகில் எஸ்.பி.பி வளர வழிவகை செய்தார் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் தனக்கு பின்னணி பாட எஸ்.பி.பியை பயன்படுத்தி கொண்ட எம்.ஜி.ஆர் பின்னர் ஒரு கட்டத்தில் கே.ஜே.யேசுதாஸை பயன்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவரணைகள்

இளையராஜா - வைரமுத்து பிரிந்த கதை


கே.பாலச்சந்தர் - இளையராஜா


எம்.ஜி.ஆர் - கண்ணதாசன்


எம்.ஜி.ஆர் - எஸ்.பி.பி 


பஞ்சு அருணாச்சலம் - இளையராஜா 


பஞ்சு அருணாச்சலம் பற்றி சில குறிப்புகள்


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...