படையப்பாவும் நானும்
10 ஏப்ரல் 1999 அன்று காலம் கோடை கால விடுமுறை கொண்டாட்டமாக படையப்பா படம் ரிலீஸானது. அப்போது முழு ஆண்டு தேர்வை முடித்து விடுமுறையில் இருந்த எனக்கு வயது சுமார் 9. உறவினர் விசேஷத்திற்கு அம்மாவும் அக்காவும் ஊருக்கு சென்றுவிட்டனர். அப்பா வீட்டில் இருந்தார். நான் அய்யா வீட்டில் இருந்தேன்.
சிறு வயதில் இருந்தே ரஜினி படம் என்றால் ரொம்ப பிடிக்கும். அய்யா வீட்டில் இருந்த நான் எப்படியாவது படையப்பா படம் பார்க்க வேண்டுமென திட்டம் தீட்டினேன். மத்திய நேரத்தில் மழை கொட்ட ஆரம்பித்தது. படையப்பா படம் பார்க்க இன்றே அப்பாவை கூட்டிட்டு போக சொல்லுங்க என்று அய்யாவிடம் அழுது அடம் பிடித்து ஹாலில் சில அடி உருண்டேன். அய்யாவும் (அப்பாவின் அப்பா) போன் செய்து "தம்பி! படையப்பா படையப்பான்னு உருள்றான் இவன அடக்க முடியல வந்து படத்துக்கு கூட்டிட்டு போ என்றார். அப்பா மழை பெய்துன்னு சொல்லுங்க என்றுள்ளார். அவனே மழை நல்லா பெய்துன்னு பாத்துக்கிட்டு தானே இருக்கான். அப்புறம் என்னப்பா சொல்ல" என்றார் அய்யா.
மாலை சுமார் 5:45 மணிக்கு கருப்பு கலர் ரெயின் கோட் போட்டு கொண்டு கொட்டும் மழையில் பஜாஜ் ஸ்கூட்டரில் அய்யா வீட்டுக்கு அப்பா வந்தார். நான் ஸ்கூட்டர் சத்தம் கேட்ட உடனே என் அழுகையை நிறுத்தி நல்ல பிள்ளை ஆனேன். ஸ்கூட்டர் சத்தம் பிள்ளைகளுக்கு ஒரு சிக்னல் போல தானே. ஹா ஹா.
ஏம்பா கார்ல வரலன்னு கேட்டேன். எப்படியும் இந்நேரம் தியேட்டர் பார்கிங் புல்லாகிரும் அப்புறம் காரை நிறுத்துவது சிரமமாகும்ல அதான் என்றார். உடனே நான் இன்னைக்கு படம் கன்பர்ம் என்று எண்ணி குதூகலம் ஆனேன். அய்யா வீட்டுல டீ சாப்பிட்டு தேன்குழல் முறுக்கை எடுத்துக் கொண்டு தியேட்டருக்கு புறப்பட ஆயத்தமானோம். நான் ப்ளூ கலர் ரெயின் கோட் போட்டு கொண்டு பஜாஜ் ஸ்கூட்டரில் பின்பக்கம் அமர்ந்து கொள்ள நாங்கள் 6:30 மணிக்கு நேராக குருவிக்காரன் சாலை அருகே உள்ள "ஷா - ஹாஜீரா" தியேட்டருக்கு சென்றோம். தினசரி ஐந்து காட்சிகள் அதில் 7 மணிக்கு நான்காம் காட்சி. இரண்டு டிக்கெட் கிடைத்தது ஆனால் வெவ்வேறு சீட் இருக்கைகள் தான் கிடைத்தது (அன்று சில தியேட்டர்களில் சீட் நம்பர் முறை பின்பற்றப்பட்டது). அப்பா சற்றே யோசித்தாலும் டிக்கெட் வாங்க சொன்னேன். டிக்கெட் ரஜினி படத்துடன் நல்ல வழுவழுப்பான பேப்பரில் இருந்தது. ரொம்ப நாள் அதை பாதுகாத்து வைத்திருந்தேன் ஆனால் வீட்டு மராமத்து பணியின் போது காணாமல் போனது.
நான் முன்னாடி இருக்கையிலும் அப்பா ரொம்ப பின்னாடி இருக்கையில் என்னை பார்க்கும் பொருட்டு அமர்ந்து கொண்டோம். இடைவேளையில் முறுக்கை சாப்பிட்டு கோன் ஐஸ் (இந்த குவாலிட்டி இன்று மிஸ்ஸிங்) சாப்பிட்டு பிறகு படத்தை பார்த்து ரசித்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்ப புறப்பட்டோம். தொழிற்பேட்டை வழியாக சுமார் 10:30 மணிக்கு வந்த போது 4-5 நாய்கள் கூட்டமாக எங்கள் ஸ்கூட்டரை துரத்தியது. அதிலிருந்து தப்பித்து வீடு வந்தது இன்றும் நன்கு நினைவில் உள்ளது. நான் முதல் முறையாக சீட் இடம் மாறி தனியாக அமர்ந்து பார்த்த படம் படையப்பா தான்.
தியேட்டரில் "என் வழி தனி வழி, ரொம்ப டைம் எடுத்துக்காத படையப்பா, எனக்கு இன்னொரு முகம் இருக்கு போன்ற வசனங்கள், சிவாஜியின் தூண் காட்சி, கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினி நடனம், மாப்பிள்ளை காமெடி, ஓப்பனிங் பாடல், பாம்பு புற்று காட்சி, ஊஞ்சல் காட்சி" போன்ற காட்சிகளை ஆரவாரமாக கண்டதையும் இப்படம் வெளிவந்த நேரத்தில் ஜவுளி கடையில் படையப்பா டிரஸ் ரொமப் பேமஸ் அதை வாங்கி சில காலம் அணிந்ததையும் எண்ணிப்பார்த்து மகிழ்கிறேன். இன்று இப்படத்தில் சில முரணான கருத்துக்கள் இருப்பதை அறிகிறேன் இருப்பினும் எனது தியேட்டர் நினைவலைகளில் படையப்பா படத்திற்கு தனித்த இடம் உண்டு.
நன்றி படையப்பா! 😍
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment