Chocks: கேரளாவை உலுக்கிய ஒரு மாணவரின் கதை

Sunday, December 5, 2021

கேரளாவை உலுக்கிய ஒரு மாணவரின் கதை

கேரளாவை உலுக்கிய ஒரு மாணவரின் கதை

சுருக்கம்
  1. முகவுரை
  2. ராஜனும் ராஜாக்கண்ணும் 
  3. நக்சல் தாக்குதல்
  4. இரு மாணவர்கள் கைது
  5. காக்காயம் விசாரணை முகாம்
  6. சித்தரிப்பும் உண்மையும்
  7. மக்களின் குரல் ஓங்கியது
  8. தந்தையின் போராட்டம்
  9. இரு முதலமைச்சர்கள்
  10. வேறுபட்ட வாக்குமூலங்கள்
  11. முக்கிய சாட்சியங்கள்
  12. உயர்நீதிமன்றம் ஆணை
  13. பதவி விலகிய முதலமைச்சர்
  14. கேரளா அரசு பதில்
  15. ஒப்புக்கொண்ட பிரதிவாதிகள்
  16. உயர்நீதிமன்றம் தீர்ப்பு 
  17. ராஜனின் உடல்
  18. முடிவுரை
  19. துணுக்கு செய்தி 
  20. விவரணைகள்
முகவுரை

அரசியல் ரீதியாக சுதந்திர இந்தியாவின் கருப்பு பக்கங்களில் சாதி, மதம், இனம், வர்க்கம் சார்ந்த தாக்குதல்கள் போல நெருக்கடி நிலை (State of Emergency from 25-06-1975 to 21-03-1977) கால தாக்குதல்களும் கவனத்திற்குரியது. நெருக்கடி நிலை காலத்தின் போது கேரளா காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது இறந்த ராஜன் என்பவர் குறித்த வழக்கும் விசாரணையும் கேரளா அரசியலை புரட்டி போட்டது. இன்று வரையில் ராஜன் பின்புலம் ஆய்வுக்குரியது என்றாலும் அதிகாரத்தின் பிடியில் அவருக்கு நிகழ்ந்த கொடூரம் ஊரறிந்த ரகசியம் என்பதை மறுக்க இயலாது. 

ராஜனும் ராஜாக்கண்ணும் 

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் தாலுக்காவில் கம்மாபுரம் ஒன்றியத்தில் முதனை கிராமத்தில்  இருளர் இனத்தை  சேர்ந்த ராஜாக்கண்ணு 1993 இல் ஒரு திருட்டு வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி காவல் நிலையம் கொட்டடியில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த திருட்டு வழக்கில் ராஜாக்கண்ணுக்கு தொடர்பு இல்லை என்றும் லாக் அப் மரணத்திற்கு காரணம் காவல்துறையினர் என்றும் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து வழக்கில் வாதாடி ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு நீதி பெற்று தந்தவர் சந்துரு. ராஜாக்கண்ணு கொலை வழக்கில் தொடர்புடைய காவல் துறையினருக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனையும் அரசு மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜாக்கண்ணு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட் ஜெய் பீம் திரைப்படத்தில் ஆட்கொணர்வு மனு குறித்தும் சாட்சிகளிடம் விசாரிப்பது குறித்தும் ராஜன் வழக்கு மேற்கோள் காட்டப்பட்டு இருக்கும்.
நக்சல் தாக்குதல்

28-02-1976 அன்று இரவு நேரத்தில் கோழிக்கோடு மாவட்டம் கயன்னா காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி காவல் நிலையத்தில் இருக்கும் துப்பாக்கிகளை எடுத்து செல்ல நக்சல்கள் முயன்றதாகவும் காவல்துறையினரின் எதிர் தாக்குதலில் ஒரு நக்சல் கொல்லப்பட பின்னர் நக்சல்கள் அனைவரும் துப்பாக்கியை விட்டுவிட்டு ஓடியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இது புல்பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலின் ஓராண்டு நினைவு தினம் என்று நக்சல்கள் தரப்பில் கூறப்பட்டது.
நெருக்கடி நிலை காலத்தின் போது கேரளாவில் நக்சல் இயக்கம் உச்சத்தில் இருந்தது குறிப்பாக வடக்கு மாவட்டங்களான கண்ணூர் மற்றும் வயநாட்டில் தான் பெரும்பாலான நக்சல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நக்சல்களின் கயன்னா காவல் நிலையம் தாக்குதல் பற்றி விசாரிக்கையில் கயன்னா கிராமத்திற்கு அருகிலுள்ள கோழிக்கோடு மண்டல பொறியியல் கல்லூரியில் (N.I.T - R.E.C) மேற்கு வங்காளம் (நக்சல் என்ற சொல் மேற்கு வங்காளத்தில் 1967 நக்சல்பாரி எழுச்சி நடந்த நக்சல்பாரி கிராமத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது) மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருவதால் கயன்னா காவல் நிலையம் தாக்குதலில் கோழிக்கோடு மண்டல பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சந்தேகிக்கித்தனர்.

இரு மாணவர்கள் கைது

நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரத்தில் 28-02-1976 அன்று கயன்னாவில் நடைபெற்ற காவல் நிலையம் தாக்குதல் நடந்த மறுநாள் 01-03-1976 அன்று அதிகாலை பல்கலைக்கழக கலை விழாவில் பங்கேற்றுவிட்டு கோழிக்கோடு மண்டல பொறியியல் கல்லூரி வளாகத்திற்குத் திரும்பிய ராஜன் மற்றும் ஜோசப் சாலி ஆகிய இறுதியாண்டு மாணவர்களுக்கு நக்சல் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
01-03-1976 அன்று காலை சுமார் 7 மணியளவில் கல்லூரி விடுதி காப்பாளர் மூலம் ராஜன் மற்றும் ஜோசப் சாலி ஆகியோர் கைது செய்யப்பட்ட தகவலை கல்லூரி முதல்வர் பேராசிரியர் பஹாவுதீன் பெற்றார். உடனடியாக கல்லூரி முதல்வர் அருகிலுள்ள குன்னமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தார். இரு மாணவர்கள் கைது குறித்து தங்களிடம் எந்த தகவலும் இல்லை என்றும் கோழிக்கோடுக்கு அருகிலுள்ள மலூர்குன்னு விசாரணை முகாமில் விசாரியுங்கள் என்றும் குன்னமங்கலம் காவல்துறையினர் பரிந்துரைத்தனர். மலூர்குன்னு விசாரணை முகாமுக்கு சென்று விசாரிக்க அங்கிருந்தும் கைது பற்றி எந்த தகவலும் கல்லூரி முதல்வருக்கு கிடைக்கவில்லை.

காக்காயம் விசாரணை முகாம்

ராஜன் கைதான உடன் சாஸ்தமங்கலத்தில் தட்டச்சு நிறுவனம் நடத்தி வந்த K.ராஜன் என்ற தையல்காரரும் காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டார். ராஜன், K.ராஜன், ஜோசப் சாலி ஆகிய மூவரும் காக்காயத்தில் அமைக்கப்பட்டிருந்த விசாரணை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ராஜனின் இருப்பிடம் மட்டும் ரகசியம் காக்கப்பட்டது.
இந்த கொடூர விசாரணை முகாம் நக்சல் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை விசாரிப்பதற்காகவே பிரதானமாக அமைக்கப்பட்டது. ஸ்காட்லாந்து யார்டில் சிறப்பு பயிற்சி பெற்று கேரளா திரும்பியதும் உள்துறை அமைச்சர் கருணாகரனின் விருப்ப அதிகாரியாக வலம் வந்த குற்றப்பிரிவு காவல்துறை துணைத்தலைவர் ஜெயராம் படிக்கல் இந்த விசாரணை முகாமுக்கு தலைமை வகித்தார்.

சித்தரிப்பும் உண்மையும்

1970களில் சுதந்திரமாக சிந்திக்கக் கூடிய இளைஞனாகவும் நண்பர்களுக்கு அன்பானவராகவும் ஆசிரியர்களுக்கு அடக்கமான மாணவராகவும் படிப்பில் சிறந்தவராகவும் நுண்கலைகளில் திறமையானவராகவும் திகழ்ந்து வந்த ராஜன் இடதுசாரி கம்யூனிச அனுதாபியாக இருந்துள்ளார். அப்படி அனுதாபியாக இருந்ததாலே நக்சல் வழியில் இயங்கும் தீவிர இடதுசாரி கம்யூனிச (மா சே துங்) இயக்கவாதிகளுடன் நெருக்கம் காட்டியதாகவும் ஜோசப் சாலியுடன் இணைந்து கயன்னா காவல் நிலையம் தாக்குதலை ராஜன் திட்டமிட்டதாகவும் வதந்தி சித்தரிக்கப்பட்டது.

பல்கலைக்கழக கலை விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உள்துறை அமைச்சர் கருணாகரன் ஆதரவு பெற்ற அமைச்சர் வெல்ல ஈச்சரனை கிண்டல் செய்து “தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவன் நாயா? அல்லது முட்டாளா?” என வேண்டுமென்றே இரு பொருள்பட ராஜன் ஒரு பாடலைப் பாடியதாக வதந்தி சித்தரிக்கப்பட்டது.

மொத்தத்தில் காவல்துறையினரால் கூறப்படும் ராஜன் உண்மையான நக்சல் இயக்கவாதியா? என்பது பொதுமக்களின் மனதைக் குழப்பிக் கொண்டிருந்த இயல்பான கேள்வி. இதற்கு விடையாக விசாரணையின் போது பல தரப்பினரும் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில் ராஜன் நக்சல் இயக்கவாதி அல்ல என்றே நிறுவப்பட்டது. 

மக்களின் குரல் ஓங்கியது

இந்தியாவில் நாடு தழுவிய நெருக்கடி நிலை காலத்தின் போது ராஜன் கைது செய்யப்பட்ட விதம் சர்ச்சையானதால் மாணவர் சங்கங்கள், அரசியல் குழுக்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ராஜன் கைது பிரச்சினையை தங்கள் கையில் எடுத்தனர். கேரளா அரசின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைக்கு எதிராகவும் ராஜன் குடும்பத்தினருக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கும் வகையில் பாதிரியார் வடக்கன் மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார். ராஜன் வழக்கு குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாதிரியார் வடக்கன் மிரட்டல் விடுத்தார்.
தந்தையின் போராட்டம்

நக்சல் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளதாக 02-03-1976 அன்று கோழிக்கோடு மண்டல பொறியியல் கல்லூரியில் இருந்து கவலைக்குரிய தகவலை பெற்றார் ஓய்வுபெற்ற இந்தி பேராசிரியரும் ராஜனின் தந்தையுமான ஈஸ்வர வாரியர். இச்செய்தி தனது மகள்கள் ரேமா மற்றும் சாந்தினியை வருத்தப்படுத்தக்கூடும் என்று அஞ்சி பல்கலைக்கழகத் தேர்வுகள் முடியும் வரை அவர்களுக்குத் தந்தை தெரிவிக்கவில்லை.
ராஜனின் உண்மை நிலை குறித்து அறிய கேரளா காவல்துறை தலைவர், காவல் நிலையம், உள்துறை செயலாளர், முதலமைச்சர், உள்துறை அமைச்சர், எம்.பி.க்கள் மற்றும் டெல்லி அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்களை கொடுத்தார். மேலும் முதலமைச்சர் அச்சுத மேனன் மற்றும் உள்துறை அமைச்சர் கருணாகரனை சந்தித்து பேசி உதவிட கோரினார்.

தொடக்கம் முதலே மகனை மீட்கும் முயற்சிகள் அனைத்தும் பயனற்று போக இறுதியில் நெருக்கடி நிலை நீக்கப்பட்டு இயல்பான நிர்வாகம் திரும்பிய பிறகு நீதிமன்றத்தை நாடினார் ராஜனின் தந்தை. 01-03-1976 முதல் காணாமல் போன ராஜனின் நிலை குறித்து அறிய 25-03-1977 அன்று கேரளா அரசு ராஜனை ஆஜர்படுத்த கோரி கேரளா வரலாற்றில் முதல் முறையாக ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) ஒன்றை கேரளா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் ஈஸ்வர வாரியர். இம்மனுவை நீதிபதி சுப்ரமணியன் பொட்டி மற்றும் நீதிபதி காலித் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.

இரு முதலமைச்சர்கள்

01-03-1976 அன்று ராஜன் கைது செய்யப்பட்ட நேரத்தில் கம்யூனிஸ்ட் சார்பில் கேரளா முதலமைச்சராக அச்சுத மேனனும் காங்கிரஸ் சார்பில் உள்துறை அமைச்சராக கருணாகரனும் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணியில் பதவி வகித்தனர். 25-03-1977 அன்று ஈஸ்வர வாரியர் வழக்கு தொடர்ந்த நேரத்தில் காங்கிரஸ் சார்பில் கேரளா முதலமைச்சராக கருணாகரன் பதவி வகித்தார்.
ஒரு வழக்கிற்காக இரண்டு முதலமைச்சர்களின் பெயர்கள் உருண்டாலும் ராஜன் வழக்கில் அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது கருணாகரன் தான் ஏனெனில் ராஜன் காணாமல் போன போது அவரே உள்துறை அமைச்சராகவும் ஈஸ்வர வாரியர் வழக்கு தொடர்ந்த போது அவரே முதலமைச்சராகவும் இருந்தார்.

வேறுபட்ட வாக்குமூலங்கள்

மனுதாரரான ஈஸ்வர வாரியர் நீதிமன்றத்தில் "தனது மகனும் கோழிக்கோடு மண்டல பொறியியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவருமான ராஜன் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் கல்வி உதவித்தொகை பெற்றவராகவும் மேடை பாடகராகவும் உள்ளார். சந்தேகத்தின் பேரில் காவல்துறை ராஜனை கைது செய்ததை தொடர்ந்து கம்யூனிஸ்ட் முதலமைச்சர் அச்சுத மேனனிடம் ராஜனை விடுவிக்க கோரிக்கை வைத்த போது உள்துறை விஷயங்களை காங்கிரசை சேர்ந்த அமைச்சர் கருணாகரன் கையாள்வதாக கூறியதாகவும் 10-03-1976 அன்று உள்துறை அமைச்சர் கருணாகரனிடம் நிரபராதியான ராஜனை விடுதலை செய்யுமாறு கோரியதாகவும் அதற்கு ராஜன் ஒரு முக்கிய வழக்கில் சிக்கியுள்ளதாகவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய உள்துறை அமைச்சர் கருணாகரன் உறுதி கூறியதாகவும்" வாக்குமூலம் அளித்தார். மேலும் “1977 சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஒரு முக்கிய வழக்கில் தொடர்புடைய ராஜன் கைது செய்யப்பட்டுள்ளதாக கருணாகரன் பேசினார்” என்று கூறினார்.

ராஜனின் தந்தை ஈஸ்வர வாரியரை தான் இதுவரை சந்தித்ததே இல்லை என்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராஜன் குறித்து பேசவில்லை என்றும் கருணாகரன் திட்டவட்டமாக மறுத்தார். மேலும் ராஜன் கைது செய்யப்பட்டதாக கூறிய ஈஸ்வர வாரியரின் குற்றச்சாட்டை மறுத்தும் காவல்துறையால் ராஜன் கைது செய்யப்படவில்லை என்றும் முதலமைச்சர் கருணாகரன், குற்றப்பிரிவு காவல்துறை துணைத்தலைவர் ஜெயராம் படிக்கல் மற்றும் உயரதிகாரிகளின் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

முக்கிய சாட்சியங்கள்

ஜெயராம் படிக்கல் தலைமையின் கீழ் இயங்கிய காக்காயம் விசாரணை முகாமில் சுற்றுலா பங்களாவின் ஒரு அறையில் ராஜன் உருட்டல் முறையில் சித்ரவதை செய்யப்படுவதை தாங்கள் பார்த்ததாக K.ராஜன் மற்றும் ஜோசப் சாலி (08-03-1976 அன்று MISA சட்டத்தின் கீழ் ஜோசப் சாலி விசாரிக்கப்பட்டு வழக்கு நடந்தது) ஆகியோர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். உருட்டல் என்றால் கொடூர சித்திரவதை மூலம் கேள்வி கேட்கப்படும் நபரை மேசையில் நிர்வாணமாக படுக்க வைத்து அவரின் இடுப்பு முதல் குதிகால் வரை இரும்பு உருளை மற்றும் மர உருளை உருட்டப்படும்.

01-03-1976 அன்று அதிகாலை கல்லூரி விடுதியில் இருந்து பல்கலைக்கழக கலை விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பிய ராஜனை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர் என்று கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஜேக்கப் ஜார்ஜ் மற்றும் தாமஸ் ஜார்ஜ் ஆகிய இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.

உயர்நீதிமன்றம் ஆணை

முக்கிய சாட்சியங்களின் அடிப்படையில் 01-03-1976 அன்று அதிகாலை கல்லூரி விடுதியில் இருந்து காவல்துறையினரால் ராஜன் கைது செய்யப்பட்டு காக்காயம் விசாரணை முகாமில் உள்ள சுற்றுலா பங்களாவில் அடைக்கப்பட்டு காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்டார் என்பது தெளிவாகிறது என்று நீதிபதிகள் கூறினர்.
01-03-1976 அன்று ராஜன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் 21-04-1977 அன்று நீதிமன்றத்தில் ராஜனை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் ஒரு வேளை ராஜன் விடுவிக்கப்பட்டார் என்றால் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் ஒரு வேளை ராஜனை ஆஜர்படுத்த முடியாவிட்டால் 19-04-1977 அன்றுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதை பொறுத்து 23-05-1977 அன்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கேரளா அரசுக்கு 13-04-1977 அன்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

பதவி விலகிய முதலமைச்சர்

19-03-1977 அன்று நடைபெற்ற கேரளா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கேரளாவின் புதிய முதலமைச்சராக கருணாகரன் 25-03-1977 அன்று பதவியேற்று கொண்டார்.

சட்டமன்றத்திலும் ஊடகத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் ராஜன் வழக்கு விவகாரம் புயலை கிளப்ப அதற்கு காவல்துறை ராஜனை கைது செய்யவில்லை என்று கேரளா அரசு கூறி வந்தது. அரசுக்கு பாதகமாக 13-04-1977 தேதியிட்ட உயர்நீதிமன்ற ஆணைக்கு பிறகு அரசியல் புயலில் தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாமல் பதவியேற்ற ஒரு மாதத்தில் முதலமைச்சர் பதவியை 26-04-1977 அன்று ராஜினாமா செய்து கரை ஒதுங்கினார் கருணாகரன். அதை தொடர்ந்து உடனடியாக காங்கிரஸ் சார்பில் ஏ.கே.அந்தோணி முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.

கேரளா அரசு பதில்

19-04-1977 அன்று நீதிமன்றத்தில் ராஜனை ஆஜர்படுத்த முடியாது ஏனென்றால் கேரளா மாநிலத்தில் காவல் நிலையம் கொட்டடி, சிறை கொட்டடி மற்றும் விசாரணை முகாம் என்று எவ்விடத்திலும் ராஜன் இல்லை என்றும் காணாமல் போன மாணவர் ராஜனை கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இடைவிடாமல் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜனை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் எதுவும் கைவிடப்படாது என்றும் கேரளா அரசு தெரிவித்தது. ராஜன் வழக்கு தொடர்பாக சில காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்து குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

ஒப்புக்கொண்ட பிரதிவாதிகள்

வழக்கில் திடீர் திருப்பமாக பிரதிவாதிகளால் புதிய பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. தொடக்கம் முதலே ராஜனை கைது செய்யவில்லை என்று கூறி வந்த முதல்வர் கருணாகரன் முன்னாள் முதல்வர் கருணாகரன் ஆன பிறகு 23-05-1977 அன்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறிய நிலையில் 04-04-1977 அன்று தாக்கல் செய்த முதல் பிரமாண பத்திர செய்திகளுக்கு முரணாக 22-05-1977 அன்று தனது இரண்டாவது பிரமாண பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் “விசாரணை அதிகாரியின் 17-05-1977 தேதியிட்ட அறிக்கையின் அடிப்படையிலும் எனக்கு தெரிந்த வரையிலும் 02-03-1976 அன்று காக்காயம் விசாரணை முகாமில் சட்டவிரோத காவலில் இருந்த போது சித்திரவதையின் விளைவாக ராஜன் இறந்துவிட்டார் என்று நினைக்க எல்லா காரணங்களும் உள்ளன. சட்டவிரோத காவலில் இருந்த ராஜன் இறந்துவிட்ட சூழ்நிலையில் ஆட்கொணர்வு மனு குறித்த விசாரணைக்கு தன்னால் இணங்க முடியாது” என்றார்.

ஆரம்பத்தில் ஈஸ்வர வாரியரை சந்திக்கவில்லை என்று மறுத்த கருணாகரன் புதிய வாக்குமூலத்தில் “10-03-1976 அன்று ஈஸ்வர வாரியர் என்னைச் சந்தித்து கயன்னா காவல் நிலையம் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தனது மகன் ராஜன் கைது செய்யப்பட்டு காக்காயம் விசாரணை முகாமில் இருப்பதாக என்னிடம் கூறினார். அவருடைய மகனை வழக்கில் இருந்து விலக்கி வைக்க எனது சிபாரிசை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் காவல்துறை விசாரணையில் தலையிடுவது முறையல்ல என்று கூறி அனுப்பினேன்” என்றார்.

மேலும் “07-01-1977 தேதியிட்ட காவல்துறை தலைவர் அறிக்கையின் அடிப்படையில் நம்பி காவல்துறையினரால் ராஜன் கைது செய்யப்படவில்லை என்று சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன். ராஜன் விஷயத்தில் இந்த அறிக்கையைத் தவிர வேறு எந்த தகவலும் தொடக்கத்தில் என்னிடம் இல்லை. காவல்துறை தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மையை சந்தேகிக்க எனக்கு எந்த வழியும் இல்லாமல் போனது” என்றார்.

மேலும் “01-03-1976 அன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மனுதாரரின் மகன் ராஜன் காக்காயம் விசாரணை முகாமில் இருந்த போது சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாக 02-03-1976 அன்று இறந்தார் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. சித்திரவதையால் ராஜன் இறந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. 13-04-1977 தேதியிட்ட நீதிமன்ற தீர்ப்பு முதலமைச்சராக இருந்த எனக்கு இந்த விஷயத்தில் முக்கிய கவனத்தை ஈர்க்கவும் உண்மைகளை வெளிக்கொணர சில விரைவான நடவடிக்கைகளை எடுக்கவும் உதவியது என்பதை சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

ராஜன் வழக்கு விசாரணையில் முதலில் பொய் சாட்சியம் அளித்ததற்காக முன்னாள் முதல்வர் கருணாகரன் மற்றும் உயரதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 191 மற்றும் 193 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இடைநீக்கத்தில் இருந்த காவல்துறை துணைத்தலைவர் ஜெயராம் படிக்கல், காவல்துறை கண்காணிப்பாளர் லட்சுமணன் மற்றும் காவல் ஆய்வாளர் புலிகோடன் நாராயணன் காவலில் வைக்கப்பட்டனர். உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் விடுவிக்கப்பட்டனர். பொய் சாட்சியம் குறித்த வழக்கு எர்ணாகுளம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

நீதிபதிகள் "கருணாகரன் தனது பல்வேறு வாக்குமூலங்களில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். ராஜன் கைது செய்யப்பட்டது குறைந்தபட்சம் 10-03-1976 முதலாவது கருணாகரனுக்கு தெரியும் என்று நீதிமன்றம் நம்புகிறது அதனால் ராஜன் கைது குறித்து அவருக்கு முன் அறிவு இல்லை என்று கூறுவது உண்மையல்ல. இப்போது வழக்கில் கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில் கருணாகரனுக்கு எதிராக பொய் சாட்சியம் குறித்த முதன்மையான விசாரணைக்கு வழக்கு இருப்பதை காண்கிறோம்" என்றனர். இதற்கிடையே பொய் சாட்சியம் அளித்ததற்காக தன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் கருணாகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்ற விசாரணையில் காக்காயம் விசாரணை முகாமில் இருந்த ராஜன் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உட்பட பிரதிவாதிகள் இறுதியாக ஒப்புக்கொண்டாலும் ராஜனின் உடல் பாகங்களோ அல்லது எச்சங்களோ கிடைக்கவில்லை. அதனால் இறந்தவரின் உடல் கொலைக்கான ஆதாரமாக (Corpus Delicti) கிடைக்காததால் காவல்துறை அதிகாரிகளை கொலைக்கான வழக்காக விசாரிக்க முடியவில்லை (Confessing Doesn't Mean Automatically Be Convicted). இருப்பினும் ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மீது சட்டவிரோத காவலில் வைத்தல், காவலில் வைத்து சித்திரவதை செய்தல், கொலை முயற்சி போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டன.

ராஜனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயராம் படிக்கல் உட்பட மூவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு ராஜன் வழக்கின் விசாரணை கோவை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ராஜனை சித்திரவதை செய்து கொன்றதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விலக்கு அளித்து சிறிய குற்றங்களுக்காக மூவருக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கு என்பதால் மறு விசாரணை இல்லாமல் வாதங்கள் மற்றும் எதிர் வாதங்களுக்கு பிறகு மூவரும் நிரபராதி என்று கூறி உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
ராஜனின் உடல்

மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட ராஜனின் உடல் காக்காயம் அணையில் கற்களை கட்டி பலநூறு அடி ஆழத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் அல்லது சர்க்கரை ஆலையில் கொழுந்துவிட்டு எரியும் பாத்திரத்தில் வீசப்பட்டு இருக்கலாம் அல்லது சுவற்றில் புதைத்து இருக்கலாம் அல்லது அமிலத்தால் உருக்கி இருக்கலாம் என்று ராஜனின் உடல் குறித்த தேடல் விடையில்லா கேள்வியாக நீடிக்கிறது.

முடிவுரை

பல்வேறு சர்ச்சைகள் பின்னப்பட்டாலும் ராஜன் வழக்கு குறித்த வழக்கும் விசாரணையும் முடிவும் இளைஞர்களின் எழுச்சியை உறுதி செய்தது அதிகார மையத்தின் மனசாட்சியை உலுக்கியது என்றால் மிகையல்ல.

இது போன்ற மனித உரிமை மீறல் நிலை மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்று தொடர்ந்து பேசி வந்த  ஈஸ்வர வாரியர் தன்னுடைய பாசப் போராட்டமும் சட்டப் போராட்டமும் ஒன்றாக கலந்த ராஜன் வழக்கு குறித்து “Memories of a Father” என்ற மலையாள நூலை எழுதியுள்ளார்.  
துணுக்கு செய்தி 

// ஊடகவியலாளர் சாம் ராஜப்பா //

கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ராஜனின் கதி என்னவென்று அறிந்திட ராஜனின் தந்தை ஈஸ்வர வாரியர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் சாம் ராஜப்பா என்பவர் மூத்த காவல்துறை அதிகாரியின் உதவியுடன் ராஜனின் சக நண்பர் உட்பட சந்தேகத்திற்குரிய நக்சலைட்டுகள் சிலர் அடைக்கப்பட்ட அதே சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்கொட்டடியில் இருந்த ராஜனின் சக நண்பர் “குற்றப்பிரிவு காவல்துறையினரின் மூன்றாம் தர சித்திரவதை நடவடிக்கைகளால் ராஜன் போலீஸ் காவலில் இறந்துவிட்டார்” என்று சாம் ராஜப்பாவிடம் கூறினார். கொடூர சித்ரவதைகளால் ராஜன் இறந்துவிட்டார் என்பதை தீர புலனாய்வு செய்து உண்மை நிலவரங்களை பத்திரிகை வாயிலாக உலகிற்கு சாம் ராஜப்பா தெரியப்படுத்தினார். 

கேரள அரசு ஆரம்பத்தில் இந்த அறிக்கையை மறுத்தாலும் தொடர் விசாரணை காட்சிகளுக்கு பின்னர் தனது ஆரம்பகட்ட மறுப்பை திரும்பப்பெற்று போலீஸ் காவலில் ராஜன் இறந்தார் என்ற உண்மையை ஒப்புக்கொண்டது. சாம் ராஜப்பாவின் புலனாய்வு கட்டுரை ஈஸ்வர வாரியரின் மகன் ராஜனுக்கு நீதி கிடைக்க முக்கிய காரணிகளில் ஒன்றானது என்றால் மிகையல்ல.

மூத்த ஊடகவியலாளர் சாம் ராஜப்பா 16-01-2022 அன்று கனடாவில் காலமானார். 2017 நவம்பரில் பத்திரிக்கைத் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக Press Council of India அமைப்பின் மதிப்புமிக்க ராஜா ராம் மோகன் ராய் விருதை சாம் ராஜப்பா பெற்றது நினைவுகூரத்தக்கது.
விவரணைகள்

Jai Bhim Refers to Rajan Case


Rajan Case vs State of Tamil Nadu


CM Karunakaran Resigns


Rajan Case - Related Incidents


Rajan Case - Malayalam Movie Piravi (1989)


Veteran journalist of Kerala Rajan case fame Sam Rajappa passes away


Innocent Victim of Brutal Emergency, Rajan


Rajan Died in Police Custody


Rajan Case Verdict


Rajan Case History


Rajan Case Details - 1


Rajan Case Details - 2


Rajan Case Details - 3


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...