Chocks: போலக்குளம் பீதாம்பரன் வழக்கு

Sunday, December 12, 2021

போலக்குளம் பீதாம்பரன் வழக்கு

போலக்குளம் பீதாம்பரன் வழக்கு

சுருக்கம்
  1. முகவுரை
  2. ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு
  3. போலி மனித உடல் பரிசோதனை
  4. போலக்குளம் பீதாம்பரன்
  5. ஆரம்பகட்ட விசாரணை
  6. சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை
  7. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
  8. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
  9. சி.பி.ஐ விசாரணை
  10. இறுதியில் நடந்ததென்ன?
  11. தடயவியல் மருத்துவர் உமாதாதன்
  12. முடிவுரை
  13. விவரணைகள்
// அனைத்து வழக்குகளின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக அமைய வேண்டிய கட்டாயமில்லை என்ற அடிப்படையில் இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன். //

முகவுரை

உலக சினிமாவில் கொலையை துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பது மிக பிரபலமான கதைக்களங்களில் ஒன்றாகும். அவ்வகையில் சுவாரஸ்யமான துப்பறியும் திரைப்படங்களின் வரிசையில் மம்முட்டி நடித்த சி.பி.ஐ திரைப்படத் தொடர் மலையாள சினிமாவில் புகழ் பெற்றது.

1988 இல் சி.பி.ஐ திரைப்படத் தொடரின் முதல் திரைப்படமாக வெளியான ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு திரைப்படத்தில் மம்முட்டி நடித்த சேதுராம ஐயர் சி.பி.ஐ கதாபாத்திரமும் கொலையை விசாரிக்கும் நுட்பமும் 1983 இல் கேரளாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட போலக்குளம் பீதாம்பரன் கொலை வழக்கை விசாரித்த ராதா வினோத் ராஜு என்ற நிஜ சி.பி.ஐ அதிகாரியால் ஈர்க்கப்பட்டது.
ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு

11-02-1988 அன்று வெளியான ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு திரைப்படத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஓமனா (லிஸ்ஸி) விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்பட்ட நிலையில் போலி மனித உடல் (Humanoid Dummy) நுட்பத்தை பயன்படுத்தி ஓமனாவின் மரணம் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் சி.பி.ஐ அதிகாரி சேதுராம ஐயர் (மம்முட்டி) நிரூபிப்பார். தமிழ்நாட்டில் ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு திரைப்படம் ஒரு வருடம் ஓடியது மட்டுமல்லாமல் படத்தின் வீடியோ கேசட் விற்பனையிலும் சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது.
போலி மனித உடல் பரிசோதனை

மொட்டை மாடியில் இருந்து ஒரு போலி மனித உடலை நேராக குதிப்பது போல கீழே இறக்கிவிட்டும் மற்றொரு போலி மனித உடலை யாரோ தள்ளிவிடுவது போலவும் தூக்கி எறிவர். அப்படி தூக்கி எறியப்பட்ட போலி மனித உடல்கள் தோராயமாக தரையிறங்கும் இடத்தை கண்டறிந்து அது கொலையா? தற்கொலையா? என்பதை விசாரணை அதிகாரிகள் நிறுவிட முயல்வர்.
போலக்குளம் பீதாம்பரன்

கேரளாவில் மதுபான கடையில் பரிமாறுபவராக வாழ்க்கையைத் தொடங்கிய நாராயணன் நாளடைவில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவராக வளர்ந்து மதுபான வியாபாரத்தில் கோலோச்சினார். 1980 காலகட்டத்தில் எர்ணாகுளம் மாவட்டம் பாலாரிவட்டத்தில் தனது முதல் சுற்றுலா இல்லமான போலக்குளம் சுற்றுலா இல்லத்தை திறந்த நாராயணன் தனது சுற்றுலா இல்லத்தின் வரவேற்பாளராக பீதாம்பரனை நியமித்தார். பாலாரிவட்டத்தில் ஹரிஹரசுதா கோவில் அறங்காவலராக நாராயணன் இருந்து போது அக்கோவில் நிர்வாகத்தை கவனித்து கொண்டது பீதாம்பரனின் தந்தை தாமோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
போலக்குளம் நாராயணனின் நம்பகமான நண்பராக, நேர்மையான இளைஞராக, விசுவாசமான ஊழியராக பணிபுரிந்து வந்த பீதாம்பரன் 22-04-1983 அன்று அதிகாலை 4.30 மணியளவில் போலக்குளம் சுற்றுலா இல்லத்தின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஆரம்பகட்ட விசாரணை

சில காயங்கள் கீழே குதித்ததால் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சில காயங்கள் கீழே குதித்ததால் ஏற்பட்டிருக்காது என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை கூறியதால் இறந்தவர் முதலில் அடித்து துன்புறுத்தி பின்னர் தூக்கி எறியப்பட்டதாக உள்ளூர் காவல்துறை எண்ணியது. பிரேத பரிசோதனை சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்யாமல் உண்மையில் பீதாம்பரன் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் கொள்ளாமல் ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில் உள்ளூர் காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்தது.
நாராயணனின் கணக்கு பேரேட்டில் குறைவான வருமான கணக்கை எழுதி பணத்தை பீதாம்பரன் திருடியதாக, நாராயணனின் கள்ளக் கணக்கை பீதாம்பரன் அறிந்து மிரட்டியதாக, நாராயணனின் மகளை காதல் வலையில் சிக்க வைக்க பீதாம்பரன் திட்டமிட்டதாக பல்வேறு கிசுகிசுக்கள் பரப்பப்பட்டது. இதற்கிடையே பீதாம்பரன் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி பீதாம்பரனின் தந்தை தாமோதரன் அல்வே (Aluva) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து கேரளா அரசின் கீழ் இயங்கும் சிறப்பு குற்றப்பிரிவு பீதாம்பரன் வழக்கை விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை

நீண்ட கால மன அழுத்தம் பிரச்சனை காரணமாக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மருந்துகளை உட்கொண்டு வந்த பீதாம்பரன் திடீரென மருந்துகளை சில காலம் உட்கொள்வதை நிறுத்தியதன் விளைவாக ஏற்பட்ட மோசமான மனநிலையால் அவதிக்குள்ளாகி பீதாம்பரன் தற்கொலை செய்திருக்கலாம் என்று வழக்கை விசாரித்த சிறப்பு குற்றப்பிரிவு முடிவு செய்தது.

பீதாம்பரன் உடலில் இருந்த 18 காயங்களில் வலது காலின் பின்புறத்தில் இருந்த 13வது காயம் விசாரணை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. அவ்வகையில் முதன்மையான தாக்கத்தை வலது காலின் பின்புறம் தாங்கி கொண்டு பீதாம்பரன் உடல் செங்குத்தாக தரையில் மோதியதாக நிரூபிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கொலைக்கான வாய்ப்பை நிராகரித்து பீதாம்பரன் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக சிறப்பு குற்றப்பிரிவு முடிவுக்கு வந்தது. மேலும் தீர ஆராயாமல் ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில் உள்ளூர் காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்தது தவறு என்றும் சிறப்பு குற்றப்பிரிவு கூறியது.

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தனது மகன் பீதாம்பரனுக்கு மன அழுத்தம் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றும் சிறப்பு குற்றப்பிரிவு பொய்யான ஆதாரங்களைத் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டி வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கேரளா உயர் நீதிமன்றத்தை அணுகினார் தாமோதரன். தாமோதரன் மனுவை ஏற்றுக் கொண்டு கேரளா மாநில அரசு பீதாம்பரன் வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

நான்கு மாதங்கள் ஆகியும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க கேரளா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்துள்ளதால் மேலும் மூன்று மாத கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் கேரளா அரசு உடனடியாக மற்றொரு மனுவை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தள்ளுபடி செய்யப்பட இறுதியாக கேரளா அரசு விசாரணையை நடத்தியது ஆனால் வழக்கில் எந்தவொரு புதிய ஆதாரத்தையும் அது வெளிப்படுத்தவில்லை.

இந்திய எல்லையில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவுக்கு எதிராகவும் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சிறப்பு அனுமதியை வழங்குவதே சிறப்பு விடுப்பு மனு ஆகும்.

சி.பி.ஐ விசாரணை

கேரளா அரசின் போக்கை கண்டித்து ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் தாமோதரன். தாமோதரன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு பீதாம்பரன் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 1986 ஆம் ஆண்டு பீதாம்பரன் வழக்கு மீண்டும் புதிதாக விசாரிக்க சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

22-04-1983 அன்று போலக்குளம் சுற்றுலா இல்லத்தின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து பீதாம்பரன் தற்கொலை செய்து கொண்டதாக சிறப்பு குற்றப்பிரிவு கூறிய நிலையில் கட்டிடத்தில் இருந்து 10 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பீதாம்பரன் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக சி.பி.ஐ வாதித்தது.

இதை நிரூபிக்கும் வகையில் சி.பி.ஐ அதிகாரி ராதா வினோத் ராஜு தலைமையில் வர்கீஸ் தாமஸ் உதவியில் போலி மனித உடல் நுட்பத்தை கொண்டு பரிசோதனை நடத்தியது. இறந்த பீதாம்பரனின் எடைக்கு சமமான ஒரு போலி மனித உடல் மொட்டை மாடியில் இருந்து கீழே வீசப்பட்டது. மற்றொரு போலி மனித உடல் மொட்டை மாடியில் இருந்து தானாக விழுந்தது போல் ஒரு நொடியில் கைவிடப்பட்டது. தூக்கி வீசப்பட்ட போலி மனித உடல் கட்டிடத்தின் சுவரில் இருந்து தள்ளி விழுந்ததால் பீதாம்பரன் கொல்லப்பட்டதாக சி.பி.ஐ முடிவு செய்தது.

இறுதியில் நடந்ததென்ன?

பீதாம்பரன் கொலைக்கான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தது. கொலை மற்றும் சதித்திட்டம் பிரிவுகளின் கீழ் போலக்குளம் நாராயணன் A-1, டிரைவர் A-2, ரூம் பாய் A-3, மேனேஜர் A-4 ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று முடிவு செய்து ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் தரப்பில் அடுத்தடுத்து மேல்முறையீடு செய்யப்பட விசாரணை நீதிமன்றம் A-4 யை விடுவித்தது உயர் நீதிமன்றம் A-3 யை விடுவித்தது ஆனால் பீதாம்பரனின் மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என்று தீர்ப்பளித்து A-1 மற்றும் A-2 தண்டனைகளை உறுதி செய்தது.

இறுதி வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இறந்தவரின் மரணம் கொலை அல்ல என்றும் அது தற்கொலை அல்லது விபத்து காரணமாகவும் இருக்கலாம் என்றும் இறந்தவர் மன அழுத்தம் பிரச்சனையால் அவதிப்பட்டவர் என்றும் ஆதாரத்துடன் உண்மையை (Fact) நிரூபிக்காமல் பிரேத பரிசோதனை அறிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு மரணம் கொலையால் நிகழ்ந்ததென ஒற்றை பார்வையில் அனுமானம் (One sided assumption) செய்ய முயல்வது தவறு என்றும் கடுமையாக வாதிட்டார். 

முடிவில் போதிய ஆதாரத்துடன் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால் (Guilt should be proved beyond any reasonable doubt) பீதாம்பரன் கொலைக்கான சாத்தியம் நிராகரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். மேலும் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ (ஒன்றிய அரசு) முன்வைத்த வாதங்கள் ஏற்கப்படாமல் சிறப்பு குற்றப்பிரிவு (கேரளா அரசு) முன்வைத்த வாதங்கள் ஏற்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

தடயவியல் மருத்துவர் உமாதாதன்

பீதாம்பரன் வழக்கில் சி.பி.ஐ பயன்படுத்திய போலி மனித உடல் பரிசோதனையை அறிவியலற்றது என்றும் போலி மனித உடல் உண்மை மனித உடலுக்கு மாற்றாகக் கருதப்பட முடியாது என்றும் கட்டிடத்தின் உயரம் கூடுதலாக இருந்தால் உடல் 10 மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கும் குதிக்க நேரிடும் என்றும் போலக்குளம் சுற்றுலா கட்டிடத்தின் மொட்டை மாடி 20 மீட்டர் உயரத்தில் இருந்ததும் தரையில் உடலின் இருப்பிடத்தையும் கொண்டு அது தற்கொலை என நிறுவிட முடியும் என்றும் தடயவியல் மருத்துவர் உமாதாதன் வாதிட்டார்.

சர்வதேச அளவில் பல தடயவியல் நிபுணர்களால் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் போலி மனித உடல் பரிசோதனையானது அறிவியல்பூர்வமற்றது என்று நிராகரிக்கப்பட்டது. ஏனெனில் போலி மனித உடல் பரிசோதனை முடிவுகள் ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமான முடிவினை தரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் பரிசோதனை நடைமுறைக்கு (Practical) முரணாக கோட்பாடு (Theoretical) அடிப்படையில் அமைந்தது என்றும் கட்டிடத்தின் உயரத்திற்கு ஏற்ப உடல் வீழ்ச்சியின் தூரம் மாறுகிறது (The fall coverage increases with the height of the building) என்றும் நிரூபித்தது.

முடிவுரை

ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு திரைப்படத்தில் போலி மனித உடல் பரிசோதனையை பயன்படுத்தி ஓமனா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் சி.பி.ஐ அதிகாரி சேதுராம ஐயர் தலைமையிலான விசாரணை குழு நிரூபிக்கும். சினிமாவில் ஆய்வுக்குரிய போலி மனித உடல் பரிசோதனை சித்தரிப்பு ரசிகர்களுக்கு பெரும் நம்பகத்தன்மையை அளித்தது. ஏனெனில் உண்மை நிலவரத்திற்கு (Matter of fact) மாறாக வண்ணமயமான பொய் கருத்துக்களை (Colorful Lying Ideas) தானே சினிமா ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இங்கிலாந்து வழியில் உலக நாடுகள் பலவும் பின்பற்றி வரும் “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது” என்ற கூற்று இன்று வரை விவாதப் பொருளாக தொடர்கிறது. இருப்பினும் ஜனநாயக நாட்டில் குற்றவியல் நீதி அமைப்பின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று சந்தேகத்தின் பலன் எப்போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீட்டிக்கப்பட வேண்டும். அவ்வகையில் பீதாம்பரன் வழக்கில் உறுதியான ஆதாரங்களுடன் கொலை குற்றம் நிறுவப்படாததால் (Lack of Concrete Evidence) உச்ச நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

விவரணைகள்

India Today News Coverage on Peethambaran Case


Dead Men Tell Tales by Dr.Umadathan


Oru CBI Diary Kurippu Movie ((Malayalam)


Peethambaran Case Story (Malayalam)


Peethambaran Case Details - 1


Peethambaran Case Details - 2


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...