Chocks: ஈழமும் சிங்களமும்

Friday, December 17, 2021

ஈழமும் சிங்களமும்

ஈழமும் சிங்களமும்

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சுருக்கம்
  1. முகவுரை
  2. விஜயனும் குவேனியும்
  3. குவேனியின் சாபம்
  4. விஜயனின் வருகை அஞ்சல் தலை
  5. இலங்கையில் பாண்டியர்கள்
  6. இலங்கையில் சோழர்கள்
  7. இலங்கை இராச்சியம்
  8. இலங்கை காலனித்துவம்
  9. பிரிட்டிஷின் கட்டுப்பாடு
  10. பிரிட்டிஷுக்கு பிந்தைய காலம்
  11. இலங்கை அரசு
  12. தந்தை செல்வா
  13. JVP கிளர்ச்சிகள்
  14. உள்நாட்டுப் போர்கள்
  15. பூமாலை நடவடிக்கை 
  16. இந்திய அமைதி காக்கும் படை
  17. பத்மநாபா படுகொலை 
  18. ராஜீவ் காந்தி படுகொலை
  19. ஈழ அரசியலில் தமிழ்நாடு
  20. நார்வே அமைதிப் பேச்சுவார்த்தை
  21. விடுதலைப் புலிகள்
  22. தமிழ் இனக்குழு
  23. முடிவுரை
  24. துணைக்கதை
  25. விவரணைகள்
// துணைக்கதை //
  1. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னால்
  2. சிவராசன்
  3. ஹரிபாபு
  4. மனித வெடிகுண்டு தணு
  5. Bofors தொடர்பு
  6. விசாரணையும் மதிப்பீடும்
  7. துணுக்கு செய்தி
முகவுரை

"ஈழமும் சிங்களமும்" என்ற கட்டுரையானது சிங்களப் பெரும்பான்மையினருக்கு எதிராக உரிமைக்காகப் போராடும் ஈழத் தமிழர்களின் கதையைச் சொல்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஈழ-சிங்கள அரசியல் ஆரிய-திராவிட அரசியலை ஒத்திருக்கிறது.

விஜயனும் குவேனியும்

பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி பௌத்த பிக்கு மகாநாம தேரர் பாலி மொழியில் உண்மையும் கற்பனையும் கலந்து எழுதிய மகாவம்சம் நூலை கொண்டு பௌத்த சிங்களவர்கள் தங்கள் சரித்திரத்தை நிறுவுகின்றனர். மகாவம்சம் நூல் தீபவம்சம் நூலின் உதவியுடன் எழுதப்பட்டது, இது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய படைப்பாகும். தொல்பொருள் சான்றுகள் இல்லாத மகாவம்சம் நூலின்படி ஒடிசா (கலிங்கா) நாட்டை ஆட்சி செய்த சிங்கபாகுவின் மூத்த மகன் விஜயன். விஜயன் தங்களுக்கு பல்வேறு கொடுமைகளை இழைப்பதாக அந்நாட்டு மக்கள் தந்தை சிங்கபாகுவிடம் முறையிட அதனால் யாருக்கும் அடங்காத விஜயனை அவனது 700 நண்பர்களுடன் ஒரு கப்பலில் நாடு கடத்தினார் சிங்கபாகு. கப்பலில் கிளம்பியவர்கள் சில பகுதிகளில் தங்கிவிட்டு இறுதியாக இலங்கை தீவுக்கு வந்தடைந்தனர்.

இலங்கை தீவுக்கு வந்திறங்கிய விஜயனின் குழுவுக்கு தாழ்த்தப்பட்ட பெண்ணான யட்சினி குவேனி அடைக்கலம் கொடுத்தார். இலங்கைக்கு விஜயன் வந்த போது அங்கு இயக்கர், நாகர் போன்ற திராவிட பழங்குடிகுடியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இலங்கையில் வாழ்ந்த இராவணனின் வழித்தோன்றலாகக் கருதப்படுகிற குவேனி, தீவில் வாழ்ந்து வந்த இனக்குழுக்களை ஆள விரும்பிய விஜயனுக்கு உதவினாள். இறுதியாக, ஆதரவும் அடைக்கலமும் கொடுத்த குவேனியின் அழகிலும் அறிவிலும் மயங்கிய விஜயன் குவேனியை மணந்தார். விஜயன் - குவேனி தம்பதியினருக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தன.
விஜயனின் நண்பர்கள் இலங்கை தீவில் பல்வேறு பகுதிகளை பிரித்துக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். மேலும் எல்லா பகுதிகளையும் ஒருங்கிணைத்து விஜயன் ஒட்டுமொத்தமாக அரசாட்சி செய்ய வேண்டும் என்று விஜயனின் நண்பர்கள் கோரிக்கை வைத்தனர். நண்பர்களின் கோரிக்கையை ஏற்று அரசனாக முடிசூட்டிக் கொள்ள வேண்டி அரச குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மதுரைக்கு சென்று அங்கு ஆட்சி செய்து வந்த பாண்டிய அரச குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கை திரும்பி சிங்கள அரசை நிறுவினார் விஜயன். அதன் பின்னர் முதல் மனைவி குவேனி தனது இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு தனது அந்தரங்க வாழ்வில் இருந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் முற்றிலும் விலகி செல்லுமாறு கட்டளையிட்டார் அரசர் விஜயன்.

குவேனியின் சாபம்

தன்னை தாழ்த்தப்பட்ட பெண் என்று நிராகரித்து, தீவில் பிழைக்க அவள் செய்த உதவியை மறந்து நாட்டை ஆள்வதற்காக அரச பெண்ணை மணக்க எண்ணிய விஜயனின் ஆசையை குவேனி கண்டித்தாள். எனவே, குவேனி சிங்கள அரசர் விஜயனின் வம்சத்தை சபித்தாள். இலங்கை தீவு நான்கு திசைகளாலும் அழியட்டும், தலைவர்கள் அழிந்து போகட்டும், அந்நிய சக்திகளால் ஆக்கிரமிக்கப்படட்டும், இயற்கை சீற்றங்களால் அழியட்டும், அறிவில்லாத இனம் தோன்றட்டும், இனம் தனித்துவத்தை இழக்கட்டும், தீவு கடலுக்குள் மூழ்கட்டும், கொடிய நோய்கள் பரவட்டும், சிதைந்து சீரழியும் இனமாகட்டும் என்று சிங்கள அரசர் விஜயனின் வம்சத்துக்கு 9 வகையான சாபமிட்டார் குவேனி. இதற்கிடையில், இலங்கை எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு குவேனியின் சாபமே முக்கிய காரணம் என்று அறிவியலுக்கு புறம்பாக அறியாமையில் சிலர் கிசுகிசுக்கிறார்கள்.
விஜயனின் வருகை அஞ்சல் தலை

கி.மு.543 முதல் கி.மு.505 வரை தீவை ஆண்ட முதல் சிங்கள அரசர் விஜயனின் வழித்தோன்றல்களே சிங்கள அரசர்கள். அரசர் விஜயனின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் மறைவின் 2500வது ஆண்டை நினைவுக்கூறும் வகையில் 23.05.1956 அன்று 3 சென்ட் மதிப்புள்ள "விஜயன் வருகை" அஞ்சல் தலையை இலங்கை அரசு வெளியிட்டது.
சில தெளிவற்ற காரணங்களுக்காக 01.10.1966 அன்று “ விஜயன் வருகை" அஞ்சல் தலை இலங்கை அரசால் செல்லாததாக ஆக்கப்பட்டது. விஜயன் தீவுக்கு வந்த போது திராவிடப் பெண் குவேனி இருந்ததையும் சிங்கள இனத்தை தோற்றுவித்த விஜயன் வம்சம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல என்பதையும் ஒப்புக் கொள்வது போலாகும் என்பதால்"விஜயன் வருகை" அஞ்சல் தலை சிங்களப் பிரதிநிதிகளை ஈர்க்கவில்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. “விஜயனுக்கு எதிர் நிலையில் குவேனி” கதையை “ஆரியத்திற்கு எதிர் நிலையில் திராவிடம்” கோட்பாடாகக் கருதலாம்.

இலங்கையில் பாண்டியர்கள்
சங்க காலத்தில் கி.மு.103 முதல் கி.மு.88 வரை இலங்கை அனுராதபுரத்தில் பஞ்ச பாண்டியர்கள் அடுத்தடுத்து ஆட்சி புரிந்தனர். இவர்களில் கடைசி நான்கு பேரும் தனக்கு முன்னிருந்த அரசரை கொன்று ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக ஐந்தாவது பாண்டியனை கொன்றுவிட்டு சிங்கள அரசர் வலகம்பாகு வட இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

சூல வம்சம் நூலின்படி தமிழ்நாட்டில் களப்பிரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் பாண்டிய அரச மரபிலிருந்து பாண்டு குடும்பத்தினர் இலங்கைக்கு சென்றனர். அங்கு அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இராசரட்டை பகுதியை ஆண்டு வந்த சிங்கள அரசர் மித்தசேனனை தோற்கடித்து பாண்டு ஆட்சி செய்ய தொடங்கினான். ஆறு திராவிடர்களை கொண்ட பாண்டிய வம்சம் கி.பி 436 முதல் கி.பி 452 வரை தீவை ஆட்சி செய்தது. மௌரிய வம்சத்தின் வழித்தோன்றலான தாதுசேனன், கடைசி பாண்டிய மன்னன் பிட்டியனை கொன்றான், அதனால் பாண்டியர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தீவின் மீது தனது அதிகாரத்தை நிறுவினான்.

10 ஆம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டில் சோழர் படையெடுப்பின் போது அனுராதபுர இராச்சியம் பாண்டியர்களுக்கு அடைக்கலம் அளித்த செய்தி இடம் பெற்றிருக்கிறது. சோழப் பேரரசுக்கு எதிராக தங்கள் அதிகாரத்தை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பைக் கண்டுபிடிக்கும் வரை சோழப் பேரரசின் துன்புறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் சிங்களவர்களுடன் பாண்டியர்கள் கைகோர்த்தனர். இதனால், சிங்கள அரசு பாண்டியர்களுக்கு அளித்த ஆதரவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோழர்கள் போரை அறிவித்து இறுதியில் அனுராதபுரத்தை கைப்பற்றினர். பின்னர், வழக்கமான இராச்சியக் கதைகளின்படி, சிங்கள இராச்சியம் பாண்டியர்களுடன் மோதலில் ஈடுபட்டது. உதாரணமாக, 1263 இல், பாண்டிய வம்சத்தின் அரசர் இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன், யாழ்ப்பாண இராச்சியத்தின் சந்திரபானுவை வெற்றிகரமாக தோற்கடித்து, திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம் கோயிலில் பாண்டியக் கொடியை பொறித்தார்.

இலங்கையில் சோழர்கள்
பல்வேறு சோழ அரசர்கள், பல்வேறு காலகட்டங்களில், இலங்கை அரசர்களுக்கு எதிராக போரிட்டனர். குறிப்பாக, முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை கைப்பற்றி அப்பகுதிக்கு “மும்முடி சோழ மண்டலம்” என பெயரிட்டார். 1070 இல் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்புக்குப் பெற்றார். சாளுக்கியர்கள், கலிங்கர்கள், பாண்டியர்கள், சேரர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில் ஈடுபட்ட முதலாம் குலோத்துங்க சோழன், இலங்கையில் சோழப் படைகளை வழிநடத்த, அவரது மைத்துனன் ராஜேந்திரனை அனுப்பினார்.

சோழர்களை தோற்கடிக்க, முதலாம் விஜயபாகு சிங்களப் படைகளை திரட்டினார். மேலும், சோழர்களுடன் நேரடி மோதலில் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்த முதலாம் விஜயபாகு, ஒருபுறம் இரகசியத் தாக்குதல்களையும் மறுபுறம் நேரடி தாக்குதல்களையும் நடத்துவதற்காக படைகளை அனுப்பினார். இதே காலகட்டத்தில், பல்வேறு உள்நாட்டு போர்களால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சோழப் படையினர் இலங்கை மீதான கவனத்தை கைவிட்டு, தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மும்முடிச் சோழமண்டலத்தை "பொலன்னறுவை இராச்சியம்" எனப் பெயரிட்டு, முதலாம் விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினார்.

இதன் பின்னர், பொலன்னறுவை இராச்சியத்தின் முதலாம் பராக்கிரமபாகு, பாண்டியர்களின் அரியணை சச்சரவில் முதலாம் பராக்கிரம பாண்டியரை ஆதரித்தார். இதற்கு எதிராக, இரண்டாம் ராஜராஜ சோழன் குலசேகர பாண்டியனை ஆதரித்தார். சிங்களப்படைகள் விரைந்து செயல்படுவதற்கு முன்பே, சோழர்களின் ஆதரவால் முதலாம் பராக்கிரம பாண்டியரை கொன்று குலசேகர பாண்டியன் அரியணை ஏறினார். இதற்குப் பிறகு, முதலாம் பராக்கிரம பாண்டியனின் மகன் மூன்றாம் வீரபாண்டியன் அரியணை ஏறுவதற்காக முதலாம் பராக்கிரமபாகுவின் உதவியைப் பெற்றார். அதையொட்டி, குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் முடிவில், மூன்றாம் வீரபாண்டியனின் மகன் விக்ரம பாண்டியன் சிங்களப்படைகளை வீழ்த்தி, சோழர்களின் ஆதவுடன் அரியணை ஏறினார். பிற்காலத்தில், பொலன்னறுவை இராச்சியம் மூன்றாம் பராக்கிரம பாண்டியனால் ஆளப்பட்டது. இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட "யாழ்ப்பாண இராச்சியம்" பாண்டியர்களை இப்பகுதியிலிருந்து விரட்டியதன் மூலம் முக்கியத்துவம் பெற்றது, இது இறுதியில் பொலன்னறுவை இராச்சியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

இலங்கை இராச்சியம்

அடுத்தடுத்த தலைமுறை வாரிசுகளால் ஆளப்படுவது ஒரு இராச்சியத்தின் அடிப்படை அம்சமாகக் கருதப்படுகிறது. இவ்வகையில், சிங்களவர், சோழர், பாண்டியர் உள்ளிட்ட பல்வேறு அரச வாரிசுகளால் இலங்கை ஆளப்பட்டுள்ளது. ஒரு காலக்கட்டத்தில், இலங்கை வெவ்வேறு அரசியல் நகர்வுகள் மூலம் வெவ்வேறு இராச்சியங்களாகப் பிரிந்தது.

# யாழ்ப்பாண இராச்சியம் = தலைநகரம் - நல்லூர், முதன்மை மொழி - தமிழ், காலம் - 1215 முதல் 1619

# கண்டி இராச்சியம் = தலைநகரம் - கண்டி, முதன்மை மொழி - சிங்களம், காலம் - 1469 முதல் 1815

# கோட்டை இராச்சியம் = தலைநகரம் - கோட்டை, முதன்மை மொழி - சிங்களம், காலம் - 1412 முதல் 1597 வரை

இலங்கை காலனித்துவம்

15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பாவிற்கு வெளியே வர்த்தகம் செய்யத் தொடங்கி அந்த நாடுகளை ஆளத் தொடங்கின. அது போல இலங்கையின் காலனித்துவ ஆட்சிகளின் தோராயமான பட்டியல் பின்வருமாறு,

# போர்ச்சுகல் (1505 - 1658) = 1518 முதல் கோட்டையும், 1591 முதல் நல்லூரையும் ஆட்சி செய்தனர்.

# டச்சு (1658 - 1796) = 1658 முதல் கோட்டை மற்றும் நல்லூரை ஆட்சி செய்தனர்.

# பிரிட்டிஷ் (1796 - 1948) = 1795 முதல் கோட்டை மற்றும் நல்லூரையும், 1815 முதல் கண்டியையும் ஆட்சி செய்தனர்.

பிரிட்டிஷின் கட்டுப்பாடு

கண்டி ஆரம்பத்தில் கோட்டை இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில், தனி இராச்சியத்தை நிறுவிய கண்டி, கோட்டை மற்றும் நல்லூரை ஆள உதவுவதற்காக வெளிநாட்டு வர்த்தகர்களுடன் ஒரு கூட்டாண்மையை உருவாக்கியது. 1815 இல் கண்டி உடன்படிக்கையின் மூலம் பிரித்தானியர்கள் தீவின் மீது நேரடி அதிகாரத்தை பெற்றனர். இந்த ஒப்பந்தம் இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுநராக இருந்த சர் ராபர்ட் பிரவுன்ரிக் மற்றும் கண்டி அரசர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (மதுரை நாயக்கரின் உறுப்பினர்) ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை தீவுகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
1833 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் நிர்வாக காரணங்களுக்காக தீவின் மூன்று பகுதிகளான நல்லூர், கோட்டை மற்றும் கண்டி ஆகியவற்றை இணைத்து சிலோன் என்ற ஒருங்கிணைந்த மாகாணமாக மாற்றினர். சாதகமான துறைமுக வசதிகளுக்காக இலங்கையின் தலைநகராக கொழும்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. மூன்று பிரதேசங்களையும் பிரிட்டிஷ் இணைத்த போது சிங்களவர்கள் 75% ஆகவும் தமிழர்கள் 25% ஆகவும் இருந்தனர். அவ்வகையில், மூன்று பிரதேசங்களையும் ஒரே நாடாக மாற்றியதால் சிங்களவர்கள் பெரும்பான்மையினராகவும் தமிழர்கள் சிறுபான்மையினராகவும் ஆனார்கள். இந்த நிகழ்வுக்கு பிறகு சிங்களவர்கள் தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். இன முரண்பாடுகள் தீர்க்கப்படாத நிலையில், 04.02.1948 அன்று இலங்கைக்கு மேலாட்சி (Dominion) அந்தஸ்தை வழங்கி தீவை விட்டு வெளியேறியது பிரிட்டிஷ்.

பிரிட்டிஷுக்கு பிந்தைய காலம்

22.05.1972 அன்று இலங்கை மேலாட்சி (1948-1972) இலங்கை குடியரசாக (Republic) மாறியது. 31.08.1978 அன்று இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் இருந்து சிங்களம் மற்றும் தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்த பல அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டன. UNP, SLFP, SLPP மற்றும் JVP போன்றவை இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள். பிரதானமாக UNP அல்லது SLFP அல்லது SLPP கூட்டணி பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைத்துள்ளன. சில சமயங்களில் உள்நாட்டு அரசியல் பதட்டங்கள் இலங்கையில் அரசியல் நெருக்கடிகளுக்கு வகுக்கிறது. எளிமையாகச் சொல்வதானால், இலங்கையில் அரசியல் கட்சிகள் அடிக்கடி உருவாக்குதல் மற்றும் கலைத்தல், பிற கட்சிகளுடன் இணைதல், கூட்டணி அமைத்தல் மற்றும் கலைத்தல், அரசாங்கத்தை கவிழ்த்தல் மற்றும் பதவிகளை இழக்கும் அதே வேளையில், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எந்த உறுதியான நன்மைகளையும் மறுக்கின்றன. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகள் பல உள்ள நிலையில் சில கட்சிகளையும் கூட்டணிகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.

# பொன்னம்பலம் அருணாச்சலம் 1919 இல் தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒன்றிணைப்பதற்காக இலங்கை தேசிய காங்கிரஸை (Ceylon National Congress - CNC) நிறுவினார்.

# லெஸ்லி குணவர்த்தன 1935 இல் ட்ரொட்ஸ்கிசத்தை பிரதிநிதித்துவப்படுத்த லங்கா சமசமாஜ கட்சியை (Lanka Sama Samaja Party - LSSP) நிறுவினார்.

# சௌமியமூர்த்தி தொண்டமான் 1939 இல் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸை (Ceylon Workers Congress - CWC) நிறுவினார்.

# விக்கிரமசிங்க 1943 இல் கம்யூனிசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை (Communist Party of Sri Lanka - CPSL) நிறுவினார்.

# பொன்னம்பலம் 1944 இல் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸை (All Ceylon Tamil Congress - ACTC) நிறுவினார்.

# சேனநாயக்கா (நவீன இலங்கையின் தந்தை) 1946 இல் CNC யில் இருந்து பிரிந்து சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்த ஐக்கிய தேசிய கட்சியை (United National Party - UNP) நிறுவினார்.

# செல்வநாயகம் 1949 இல் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ACTC யில் இருந்து பிரிந்து இலங்கை தமிழ் அரசு கட்சியை (Ilankai Tamil Arasu Kachchi - ITAK) நிறுவினார்.

# பண்டாரநாயக்க 1951 இல் சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை சுதந்திரக் கட்சியை (Sri Lanka Freedom Party - SLFP) நிறுவினார்.

# ரோஹன விஜேவீர 1965 இல் ஜனதா விமுக்தி பெரமுனாவை (Janatha Vimukthi Peramuna - JVP) நிறுவி சிங்களவர்களுக்கான கம்யூனிசம் மற்றும் சோசலிச நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

# சௌமியமூர்த்தி தொண்டமான், செல்வநாயகம், பொன்னம்பலம் ஆகியோர் CWC, ITAK, ACTC கட்சிகளை இணைத்து 1972 இல் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை (Tamil United Liberation Front - TULF) நிறுவினர்.

# சம்பந்தன் தலைமையில் 2001 இல் EPRLF, PLOTE, TELO, ITAK, ACTC அமைப்புகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை (Tamil National Alliance - TNA) மறைமுக LTTE ஆதரவுடன் தொடங்கினர்.

# கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ACTC 2010 இல் TNA அமைப்பில் இருந்து பிரிந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை (Tamil National Peoples Front - TNPF) உருவாக்கினார்.

# மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் 2016 இல் இலங்கை பொதுஜன பெரமுனாவை (Sri Lanka Podujana Peramuna - SLPP) நிறுவினர்.

இலங்கை அரசு

இலங்கையின் அரசியல் நிலப்பரப்பு என்பது இரட்டை நிர்வாக அமைப்பு (ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற முறைகள் இரண்டையும் உள்ளடக்கியது) மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாகும். அரசு உறுப்பினர்கள் ஐந்து வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இலங்கை அரசு கீழே பட்டியலிடப்பட்டுள்ள மூன்று கிளைகளால் ஆனது.

நிர்வாக அதிகாரம் - இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நபரான ஜனாதிபதி தான் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப்படை தளபதி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக ஜனாதிபதி நியமனம் செய்வார். மக்களால் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிற ஜனாதிபதி இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும். நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு எந்த நேரத்திலும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கூட்டலாம், இடைநிறுத்தலாம் அல்லது கலைக்கலாம்.

சட்டமியற்றும் அதிகாரம் - இலங்கையின் ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். 196 உறுப்பினர்கள் பிராந்திய வாக்களிப்பின் மூலமும் 29 உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அனைத்து சட்டங்களையும் உருவாக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. ஜனாதிபதியின் பிரதிநிதியாக, பிரதமர் நாடாளுமன்றத்தின் முதன்மை கட்சியை வழிநடத்துகிறார் மற்றும் முக்கிய உள்நாட்டு சீர்திருத்தங்களை மேற்பார்வையிடுகிறார். அமைச்சர்களை வழிநடத்தும் இரண்டாவது சக்திவாய்ந்த நபர் பிரதமர்.

நீதித்துறை - இலங்கை நீதித்துறை அமைப்பானது உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றம் ஆகியவற்றை கொண்டுள்ளது. குற்றவியல் சட்டம் பிரிட்டிஷ் சட்டத்தை அடிப்படையாகவும் சிவில் சட்டம் ரோமன்-டச்சு சட்டத்தை அடிப்படையாகவும் கொண்டது.
தந்தை செல்வா

1948 இல் சேனநாயக்கா தலைமையிலான UNP அரசாங்கத்தினால் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் என்ற சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமானது தமிழர்களுக்கு குடியுரிமையை மறுத்தது. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் சமமான முறையில் 50:50 பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென கோரி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தார் பொன்னம்பலம். குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சேனநாயக்காவை இனவாதி என பொன்னம்பலம் அழைத்தார். ஆனால் பின்னர் சேனநாயக்கவின் UNP அரசாங்கத்தில் இணைந்து 1948 இல் தொழில்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சரானார் பொன்னம்பலம் என்பது விந்தையானது. 

UNP உடன் பொன்னம்பலம் இணைந்து செயல்பட்டதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொன்னம்பலத்தின் ACTC கட்சியில் இருந்து விலகி 1949 இல் இலங்கை தமிழ் அரசு கட்சியை (ITAK) செல்வநாயகம் நிறுவினார். தந்தை செல்வா என்று அழைக்கப்படும் செல்வநாயகம், 1957 இல் பண்டாரநாயக்கா-செல்வநாயகம் மற்றும் 1965 இல் சேனநாயக்க-செல்வநாயகம் ஆகிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக அகிம்சை வழியில் தொடர்ந்து போராடினார். இந்த ஒப்பந்தமானது, தமிழை அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிப்பதன் மூலமும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு பிராந்திய சபைகளை முன்மொழிவதன் மூலமும் இலங்கையில் தமிழர் உரிமைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், சிங்களவர்களின் எதிர்ப்புகள் காரணமாக, 1958 இல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, இனப் பிரச்சினைகளை தீர்ப்பதில் பின்னடைவு இலங்கையில் நடந்து வரும் இன மோதல்களை அதிகரித்தது.

தமிழ்நாட்டின் திராவிட அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த செல்வநாயகம் 1977 இல் தனது 79வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். செல்வநாயகத்தின் மறைவால் தமிழர்கள் தமது அரசியல் இலக்குகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்தனர் என்றால் அது மிகையாகாது.
JVP கிளர்ச்சிகள்

1971 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராக இருந்த போது அரசாங்கத்திற்கு எதிராக JVP ஆயுதமேந்திய கிளர்ச்சியை (ஏப்ரல் 1971 - ஜூன் 1971) நடத்தியது. JVP கிளர்ச்சியாளர்கள் பல நகரங்களை கைப்பற்றி வந்த சூழலில் இலங்கை இராணுவம் கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அந்நகரங்களை மீட்டனர். இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் இருந்த போது, இலங்கை அரசாங்கத்தை கைப்பற்றும் இலக்குடன் JVP மற்றொரு இராணுவ கிளர்ச்சியை 1987 இல் (ஏப்ரல் 1987 - டிசம்பர் 1989) முன்னெடுத்து தோல்வி அடைந்தது. 1987 கிளர்ச்சியின் போது JVP தரப்பின் ஆயுதப் பிரிவு தேசபிரேமி ஜனதா வியாபாரய (Deshapremi Janatha Vyaparaya - DJV) என்று அழைக்கப்பட்டது. JVP முன்னெடுத்த இரண்டு கிளர்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இறுதியாக, 13.11.1989 அன்று JVP தலைவர் ரோகன விஜேவீர படுகொலை செய்யப்பட்டார்; ஆனால் அவரது மரணம் தொடர்பாக துல்லியமான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
உள்நாட்டுப் போர்கள்

பல வருடங்களாக அகிம்சை வழியில் போராடி வெற்றி பெறாத நிலையில், தமிழீழத்திற்கு பிராந்திய சுயாட்சி கோரி போர்க்குணமிக்க கருத்தியல் எழுச்சி உருவாக்கப்பட்டது. 1980 கள் வரை தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே ஆங்காங்கே வன்முறைகள் நடந்தாலும், 24.07.1983 அன்று ஆளும் UNP உறுப்பினர்கள் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை தூண்டினர், இது நாடு முழுவதும் பரவியது, சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு இலங்கையில் முழு அளவிலான உள்நாட்டுப் போரைத் தூண்டியது. போர் வெடித்ததை தொடர்ந்து, பல தமிழர்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு சென்றனர், பல தமிழ் இளைஞர்கள் போராளிக் குழுக்களில் இணைந்தனர்.
தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த போராளிக் குழுக்களும் அரசியல் குழுக்களும் செயல்பட்டன. LTTE, EROS, TELO, EPRLF, PLOTE ஆகிய ஐந்து முக்கிய போராளிக் குழுக்களில் LTTE மேலாதிக்கம் செலுத்தி ஏனைய தமிழ் போராளிக் குழுக்களின் செயற்பாடுகளை அடக்கியதாக விமர்சிக்கப்பட்டது. லெபனான், லிபியா மற்றும் சிரியாவில் பாலஸ்தீனிய போராளிகளுடன் சில தமிழ் போராளிகளும் பயிற்சி பெற்றனர். இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது திண்டுக்கல் அருகே சிறுமலையில் RAW மூலமும் தமிழ் போராளிகள் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில முக்கியமான தமிழீழ குழுக்கள் பின்வருமாறு,

ராஜரத்தினம் 1961 இல் தமிழ் புலிகள் (Tamil Tigers - TT) என்ற போராளிக் குழுவை நிறுவினார். பின்னர், அது விடுதலைப் புலிகளுடன் இரண்டறக் கலந்தது.

நடராஜா தங்கதுரை மற்றும் செல்வராஜா யோகச்சந்திரன் ஆகியோர் 1969 இல் தமிழர் விடுதலை அமைப்பு (Tamil Liberation Organisation - TLO) என்ற போராளிக் குழுவை நிறுவினர், அது பின்னர் 1979 இல் தமிழீழ விடுதலை அமைப்பாக (Tamil Eelam Liberation Organization - TELO) ஆனது. இப்போது ஒரு அரசியல் கட்சியாக செயல்படுகிறது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் 1972 இல் தமிழ் புதிய புலிகள் (Tamil New Tigers - TNT) என்ற போராளிக் குழுவை நிறுவினார், அது பின்னர் 1976 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam - LTTE) ஆனது. இப்போது, அதன் இருப்பு நிச்சயமற்றது.

எலியதம்பி ரத்னசபாபதி, சங்கர் ராஜீ மற்றும் வேலுப்பிள்ளை பாலகுமார் ஆகியோர் 1975 இல் ஈழம் புரட்சிகர மாணவர்களின் அமைப்பு (Eelam Revolutionary Organization of Students - EROS) என்ற போராளிக் குழுவை நிறுவினர். இப்போது ஒரு அரசியல் கட்சியாக செயல்படுகிறது.

பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வரதராஜப் பெருமாள் ஆகியோர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) என்ற போராளிக் குழுவை 1980 இல் EROS இல் இருந்து பிரிந்து நிறுவினர். இப்போது ஒரு அரசியல் கட்சியாக செயல்படுகிறது.

# உமா மகேஸ்வரன் 1980 இல் LTTE  அமைப்பிலிருந்து பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (People's Liberation Organization of Tamil Eelam - PLOTE) என்ற போராளிக் குழுவை நிறுவினார். இப்போது ஒரு அரசியல் கட்சியாக செயல்படுகிறது.

டக்ளஸ் தேவானந்தா 1987 இல் EPRLF அமைப்பிலிருந்து பிரிந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (Eelam People's Democratic Party - EPDP) என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.

கருணா அம்மான் 2004 இல் LTTE அமைப்பிலிருந்து பிரிந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (Tamil Peoples Liberation Tigers - TPLT) என்ற போராளிக் குழுவை நிறுவினார். இப்போது ஒரு அரசியல் கட்சியாக செயல்படுகிறது.

குறிப்பு - 1988 இல் தொழிலதிபர் அப்துல்லா லுதுபி, தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் (PLOTE) ஆயுதமேந்திய கூலிப்படையின் உதவியுடன் மாலத்தீவில் ஆட்சியை கவிழ்க்க முயன்றார். மாலத்தீவு ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூமின் கோரிக்கையின் அடிப்படையில் ராஜீவ் காந்தியின் உத்தரவின் பேரில், இந்தியாவின் கற்றாழை நடவடிக்கையின் (Operation Cactus) மூலம் PLOTE அமைப்பின்  சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

பூமாலை நடவடிக்கை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை தமிழ்ப் புலிகளிடம் இருந்து கைப்பற்றும் இலக்குடன் 1987 இல் வடமராட்சி நடவடிக்கையை இலங்கை ஆயுதப்படையினர் முன்னெடுத்தனர். இலங்கை படையினரால் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். நடைபெற்று வரும் உள்நாட்டு மோதலில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மனிதாபிமான அடிப்படையில் தலையிட வேண்டும் என்று திராவிட அரசியல்வாதிகள் வலியுறுத்தினர். இலங்கையின் யாழ்ப்பாண முற்றுகையின் போது யாழ்ப்பாண பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு இந்திய கடற்படைக்கு பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். விடுதலை புலிகளுக்கு ஆதரவளிக்கும் செயலாக, ராஜீவ் காந்தியின் உத்தரவின் பேரில் 02.06.1987 அன்று யாழ்ப்பாணத்திற்கு உதவிகளை அனுப்ப இந்திய கடற்படை முடிவு செய்தது. இருந்தபோதிலும், இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையை பின்வாங்குமாறு உத்தரவிட்டதுடன், அவர்களது கடல் பகுதிக்குள் நுழைய தடை விதித்தது.
இரண்டு நாட்களுக்கு பிறகு ராஜீவ் காந்தி உத்தரவின் பேரில் 04.06.1987 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை வான்வழியில் கொடுப்பதற்காக இந்திய விமானப்படையால் பூமாலை நடவடிக்கை (Operation Poomalai) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்தியாவின் வான்வழி நடவடிக்கை இலங்கையின் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறுவதாகவும், கடைசி துப்பாக்கிச் சூடு வரை இலங்கை அரசு இந்தியாவை எதிர்க்கும் என்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், பூமாலை நடவடிக்கைக்கு பின்னர் மற்றும் கணிசமான வெளிப்புற உதவி இல்லாத நிலையில், ஜனாதிபதி ஜெயவர்த்தனே ராஜீவ் காந்தி அரசாங்கத்துடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். இதன் விளைவாக இந்திய அமைதி காக்கும் படை (IPKF) கையெழுத்தானது.

இதற்கிடையில், 30.07.1987 அன்று இலங்கை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பின் போது, இலங்கை ராணுவ வீரர் விஜித ரோஹனா, இலங்கை ராணுவத்தின் வடமராட்சி நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பூமாலை நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அமைதி காக்கும் படை

நேரு-கொத்தலாவல ஒப்பந்தம், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் சிறிமா-காந்தி ஒப்பந்தம் ஆகியவை இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகும். இந்த ஒப்பந்தங்கள் நாடற்ற தமிழர்களை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினரின் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டது. இருப்பினும், இந்த ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் பின்னர் சவால்கள் மேலோங்கின. இறுதியாக, 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் பிரச்சினை உள்நாட்டுப் போராக வளர்ந்தது.
இலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில், பூமாலை நடவடிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனேவும் 29.07.1987 அன்று கொழும்பில் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ராஜீவ் காந்தியின் ஒப்பந்தம் முந்தைய ஒப்பந்தங்களில் இருந்து வேறுபட்டது, ஏனெனில் அது மாகாணங்களுக்கு அதிகார பகிர்வை கோடிட்டுக் காட்டியது மட்டுமல்லாமல் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்துவதையும் உள்ளடக்கியது. ஒப்பந்தத்திற்கு இணங்க, இந்திய ஒன்றிய அரசு இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையை (Indian Peace Keeping Force - IPKF) நிலைநிறுத்தியது.
ஆரம்பத்தில் IPKF அமைப்புக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இருந்தது ஆனால் நாட்கள் செல்ல செல்ல IPKF மற்றும் விடுதலைப் புலிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதிக் கொண்டதால் பல இழப்புகள் மற்றும் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. இது நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டு போரில் பொங்கி எழும் நெருப்புக்கு எரிபொருளைச் சேர்த்தது. பின்னர் 24.03.1990 அன்று இந்திய பிரதமர் வி.பி.சிங் உத்தரவின் பேரில் IPKF இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா திரும்பினர்.

பத்மநாபா படுகொலை 

IPKF முயற்சிகளின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்து வட கிழக்கு மாகாணமாக உருவாக்கப்பட்டன. அங்கு 1988 இல் நடைபெற்ற தேர்தலில், பத்மநாபாவின் EPRLF வெற்றி பெற்று, மாகாண முதல்வராக வரதராஜ பெருமாள் ஆட்சி புரிந்தார். EPRLF தரப்பின் செல்வாக்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகளுடன் அதிகரிக்கத் தொடங்கிய போது, LTTE தரப்பு EPRLF உடன் மோதல் போக்கை கடைபிடிக்கத் தொடங்கியது. 

சுதந்திர ராஜா என்கிற சின்ன சாந்தன், இலங்கையிலிருந்து வந்து சென்னையில் தங்கி, ஒரு தொழில்துறை பயிற்சி மையத்தில் மாணவனாகச் சேர்ந்து, பத்மநாபாவின் அன்றாட நடவடிக்கைகளை வேவு பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், விடுதலைப் புலிகளின் உத்தரவின் பேரில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா, 19-06-1990 அன்று சிவராசன் குழுவினரால் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைச் சம்பவம் சென்னை மாநகரையே உலுக்கியது, படுகொலைக்குப் பிறகு சிவராசன் கும்பல் பிள்ளையார் திடல் வழியாக இலங்கைக்குத் தப்பிச் சென்றது. 

ஈழப் போராட்டம் சகோதரர்களின் யுத்தமாக மாறியது வேதனைக்குரியது என்று கூறிய கலைஞர், பத்மநாபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அத்துடன், சென்னையில் அனைத்து கட்சி இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையில், பத்மநாபா கொலையின் போது கலைஞர் டெல்லியில் இருந்ததும், ராஜீவ் காந்தி கொலையின் போது கலைஞர் ஆட்சியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பத்மநாபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ராஜீவ் காந்தி, பத்மநாபாவும் தனது தாயார் இந்திரா காந்தியும் ஒரே பிறந்தநாளைப் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டார்.

குறிப்பு = IPKF பின்வாங்கிய பிறகு, ஒருங்கிணைக்கப்பட்ட வட கிழக்கு மாகாணம் சட்டபூர்வமாக இல்லை என்று 2006 இல் இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இது மாகாணத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமாக மீண்டும் பிரிக்க வழிவகுத்தது. 

ராஜீவ் காந்தி படுகொலை

01-05-1991 அன்று இலங்கையிலிருந்து கோடியக்கரை வந்தடைந்த ஒற்றைக்கண் சிவராசன் மற்றும் தணு உட்பட 8 பேரை கோடியக்கரை சண்முகம் வரவேற்றார். ராஜீவ் காந்தியை கொல்லும் திட்டத்தின் மூளையாக செயல்பட்டு, கொலை பணிகளை சிவராசன் ஒருங்கிணைத்தார். இதே கும்பல், தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, 07-05-1991 அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் வி.பி.சிங்கிற்கு அருகில் இருந்து மாலை அணிவித்து ஒத்திகை பார்த்ததாக விசாரணையில் தெரியவந்தது.

1991 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 21-05-1991 அன்று ஓடிசா மற்றும் ஆந்திராவில் பிரச்சாரத்தை முடித்த பிறகு, விமான பழுது காரணமாக விமான பயணம் தாமதமடைந்து 8:30 மணியளவில் ராஜீவ் காந்தி சென்னை வந்தடைந்தார். இந்த விமானத்தின் தாமதம் குறித்து "மர்ம நபரிடம்" தகவல் பெற்ற சிவராசன் குழுவினர் ஸ்ரீபெரும்புதூருக்கு நேரத்தில் வந்தடைந்தனர். மைதானத்தில் சிவராசன் தலைமையில் நளினி, சுபா, முருகன், தணு, சின்ன சாந்தன், ஹரிபாபு உள்ளிட்டோர் குழுமினர். ராஜீவ் காந்திக்கான SPG பாதுகாப்பை வி.பி.சிங் அரசு ரத்து செய்ததை சந்திரசேகர் அரசும் தொடர்ந்திருந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, இரவு 9:50 மணியளவில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்திற்கு வந்தார். அப்போது, பிரச்சார மைதானத்தில் இருந்து மேடையை நோக்கி வந்த ராஜீவ் காந்தியை பலர் சூழ்ந்து கொண்டனர். அங்கே, சிறுமியான கோகிலவாணி ராஜீவ் காந்தியிடம் இந்தி கவிதையை படிக்கும் போது, காவலரின் எதிர்ப்பை மீறி ராஜீவ் காந்தி தாராள மனதுடன் சந்தனமாலையுடன் நின்று கொண்டிருந்த தணுவை அருகில் வர சொன்னார். நெருங்கி வந்த தணு, ராஜீவ் காந்திக்கு சந்தனமாலையை அணிவித்து, அவரது கால்களைத் தொட்டு வணங்கியபடி, ஆடையில் உள்ள மின்விசையை அழுத்திய போது, பயங்கர வெடிபொருட்கள் வெடித்ததால், சுமார் 10:10 மணிக்கு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தியுடன் 16 பேர் கொல்லப்பட்டனர், 43 பேர் காயமடைந்தனர். ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பிறகு, சிவராசன் குழுவினர் பிரச்சார மைதானத்தில் இருந்து கச்சிதமாக தப்பித்தனர்.
இதற்கிடையில், ஸ்ரீபெரும்புதூர் பிரச்சார கூட்டத்தில் புகைப்படம் எடுக்குமாறு புகைப்பட கலைஞர் ஹரிபாபுவிடம் சிவராசன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பிரச்சார மைதானத்தில், பத்து புகைப்படங்கள் மட்டுமே எடுத்த ஹரிபாபுவும் குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். படுகொலை நடந்த இடத்தில், புலனாய்வுக் குழு கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ஹரிபாபுவின் சினான் கேமரா (Chinon Camera) விசாரணைக்கு திறவுகோலாக இருந்தது. அதே நேரத்தில், பிரச்சாரக் கூட்டத்தில் காணொளி காட்சிகள் கையாளப்பட்டமை மற்றும் கோடியக்கரை சண்முகம் தற்கொலை செய்து கொண்ட விதம் ஆகியவை விசாரணைக் காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவின் (Special Investigation Team - SIT) தலைவராக மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation - CBI) இயக்குநர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணை பரபரப்பாக நடைபெற்ற காலத்தில், பலர் விசாரிக்கப்பட்டனர், பலர் கைது செய்யப்பட்டனர், சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இறுதியாக, விடுதலைப் புலிகள் உத்தரவின் பேரில் சிவராசன் வடிவமைத்த திட்டத்தின் படி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்று SIT தெரிவித்தது. ராஜீவ் காந்தியின் கொலையாளிகளான சிவராசன், சுபா உட்பட 7 பேர் ஜெ.ரங்கநாத்தின் கோணனகுண்டே (பெங்களூரு) இல்லத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்த தகவலை பெற்ற பிறகு, SIT அவர்களை உயிருடன் பிடிக்க முயற்சித்தது. இருப்பினும், அவர்கள் பிடிபடுவதற்கு முன்பு, ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான 20-08-1991 அன்று கோணனகுண்டே இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு வாதிடப்பட்டது, இதில் பல பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிரதிவாதிகளின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இறுதியாக, ராஜீவ் காந்தி கொலையாளிகள் அனைவரும் 2022 இல் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழ அரசியலில் தமிழ்நாடு

பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு தி.மு.க ஈழ விடுதலைக்கு குரல் கொடுத்து வருகிறது. குறிப்பாக 1950களில் அகிம்சை வழியில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர போராடிய தந்தை செல்வா தி.மு.கவின் நன்மதிப்பை பெற்றார். அண்ணா மறைவுக்கு பின்னரும் தொடர்ந்து ஈழ விடுதலைக்கு கலைஞர் பாடுபட்டார். 13.05.1985 அன்று தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக கலைஞர் தலைமையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு (Tamil Eelam Supporters Organization - TESO - டெசோ) உருவாக்கப்பட்டு அதன் உறுப்பினர்களாக க.அன்பழகன், கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் உட்பட பலர் செயல்பட்டனர். வெவ்வேறு காலகட்டங்களில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், மாநாடு, சட்டப்பேரவை தீர்மானம், பேச்சுவார்த்தை, ஈழத்திற்கு நிதி திரட்டல் என்று பல்வேறு வடிவங்களில் தி.மு.க ஈழப் போராட்டங்களை முன்னெடுத்து தமிழீழ விடுதலைக்கு பாடுபட்டது. 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவின் கொலைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு குலைந்துவிட்டதாக  சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஜெயலலிதா தரப்பினர் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து 30-01-1991 அன்று பிரதமர் சந்திரசேகர் கலைஞரின் தி.மு.க. அரசைக் கலைத்தார். தமிழ்நாட்டில் தமிழீழ பிரச்சனையில் ஆட்சியை இழந்த ஒரே கட்சி தி.மு.க ஆகும். மேலும், ஆட்சிக் கலைப்புக்கு பிறகு 21-05-1991 அன்று மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கிடையில், பத்மநாபா கொலையின் போது கலைஞர் டெல்லியில் இருந்ததும், ராஜீவ் காந்தி கொலையின் போது கலைஞர் ஆட்சியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க சார்பில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு அளித்தார். ஈழப் போராட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ள தனது சொந்த நிதியில் இருந்து சுமார் 4 கோடி ரூபாயை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கொடுத்தார் எம்.ஜி.ஆர். பிரபாகரன், கிட்டு, பேபி சுப்ரமணியம், பழ.நெடுமாறன் உட்பட பல்வேறு தமிழீழ ஆதரவாளர்கள் அடிக்கடி எம்.ஜி.ஆரை அலுவலகத்தில் சந்தித்து தமிழீழம் குறித்து விவாதித்துள்ளனர். பிரதமர் இந்திரா காந்தி ஈழத் தமிழர்கள் நலனில் அக்கறை கொள்ள, முதல்வர் எம்.ஜி.ஆர் ஆதரவளிக்க, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஒன்றிய அரசு சிறப்பு ராணுவ பயிற்சி அளித்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பத்திரிகைகளில் பிரபாகரன் அஞ்சலி செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அ.தி.மு.க சார்பில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், ஈழப் பிரச்சனையில் பல்வேறு முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்ததால், அ.தி.மு.க - விடுதலைப் புலிகள் உறவில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழீழம் மற்றும் விடுதலை புலிகளுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தவர். 2002 இல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததற்காக அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வைகோ, பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், தாயப்பன், பாவண்ணன், சாகுல் ஹமீது ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும், ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, தமிழீழ கிளர்ச்சியாளர்களுக்கான ஆதரவு மற்றும் தமிழீழம் அமைப்பதற்கான ஆதரவு தமிழ்நாட்டில் கணிசமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
நார்வே அமைதிப் பேச்சு

LTTE மற்றும் இலங்கை அரசுக்கு இடையே பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, ஆனால் 2000 க்கு பிறகு மிகவும் முக்கியமானதாக நார்வே சமரச பேச்சு அமைந்தது. அதாவது, இலங்கையின் 20 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் 2002 இல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நார்வே மத்தியஸ்தம் செய்தது. இதன் விளைவாக 23.02.2002 அன்று போர் நிறுத்த உடன்படிக்கை (Cease Fire Agreement-CFA) ஏற்பட்டது. எனினும், 2003 இல் பிராந்திய சுயாட்சிக்கு (Regional Autonomy) பதிலாக இடைக்கால சுயநிர்வாக அதிகாரம் (Interim Self Governing Authority - ISGA) வேண்டும் என்று விடுதலைப் புலிகள் முன்மொழிந்த பின்னர் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்தன. விடுதலைப் புலிகள் முன்மொழிவின் சாத்தியக்கூறுகளை மத்தியஸ்தர்கள் ஒப்புக்கொண்ட போதிலும், இலங்கை அரசு அதை நிராகரித்தது. இதன் விளைவாக, எந்த தீர்வும் எட்டப்படாமல் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட பின்னர், நான்காவது மற்றும் இறுதி உள்நாட்டுப் போர் தொடங்கியது.
கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, 2002 இல் நார்வே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு விடுதலை புலிகளுக்கு கணிசமான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் எதிர்பாராத திட்ட மாற்றத்தால் அது இறுதியில் தோல்வியடைந்தது. இலங்கை அரசின் அதிகார பரவலாக்கத்திற்கான முன்மொழிவை விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் முழு சுயராஜ்ய பிரச்சாரங்களுக்கு நகர்ந்திருக்க வேண்டும் என்றும் பரவலாக வாதிடப்படுகிறது.

விடுதலைப் புலிகள்

கட்டுப்படுத்தப்பட்ட ஈழப் பகுதிகளில் வங்கி சேவை, வரிவிதிப்பு, வர்த்தகம், நீதிமன்றப் பணி, காவல்துறை, ஆயுத இயக்கம், தொலைக்காட்சி / வானொலி / அச்சு ஊடகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து நன்கொடை சேகரிப்பது விடுதலைப் புலிகளின் முக்கிய நடவடிக்கைகள் ஆகும். இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளை உள்ளடக்கிய உலகின் முதல் போராளி அமைப்பாக விடுதலைப் புலிகள் விளங்கியது. முப்படைகளுக்கும் ஆயுதங்களை வாங்கும் பொறுப்பை செல்வராசா பத்மநாபன் ஏற்றிருந்தார். விடுதலைப் புலிகளின் சர்வதேச அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம் 2006 இல் மரணமடைந்தது பிரபாகரனுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அரசியல் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆரம்பத்தில், விடுதலை புலிகளுக்கு வலுவான வெளிப்புற ஆதரவு இருந்தது, ஆனால் இரண்டு உலகத் தலைவர்களின் (ராஜீவ் காந்தி மற்றும் ரணசிங்க பிரேமதாச) படுகொலைகளில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அது பெரும் பின்னடைவைச் சந்தித்தது மற்றும் உலகின் மிகவும் மோசமான பயங்கரவாத குழுக்களில் ஒன்றாக அறியப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், 2001 இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் “இது 10 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துன்பியல் சம்பவம். இது குறித்து மேலும் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை” என கூறியது குறிப்பிடத்தக்கது.

மியான்மர், தாய்லாந்து, மற்றும் கம்போடியாவில் கறுப்புச் சந்தை மூலம் ஆயுதங்கள், உளவுத்துறை தகவல்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் செய்வதற்காக ஹமாஸ், நக்சல், காலிஸ்தான், முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் விடுதலைப் புலிகள் சர்வதேச உறவுகளை பேணுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 11.09.2001 அன்று அமெரிக்கா மீதான அல்-கொய்தாவின் 9/11 தாக்குதலை தொடர்ந்து, ஆயுதமேந்திய போராளிக் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை உந்தப்பட்டது. இதையொட்டி, ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்திற்கான பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை உளவுத்துறை நிறுவனம் உருவாக்கியது. இந்தப் பட்டியலில் உலகின் மிகத் தீவிரமான பயங்கரவாத குழுக்களில் ஒன்றாக கருதப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கமும் சேர்க்கப்பட்டது. மேலும், ராஜீவ் காந்தியின் படுகொலையில் விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டுக்கு ஆளான பிறகு, இந்திய ஒன்றிய அரசு விடுதலை புலிகளுக்கு அளித்து வந்த உதவியை நிறுத்தியது.

18.05.2009 அன்று இலங்கை இராணுவம் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களை கொன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஈழ பகுதிகளை மீட்டது. மொத்தத்தில், ஒரு தெளிவான தீர்வு எட்டப்படாமல் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

தமிழ் இனக்குழு

1.7 கோடி சிங்களவர்கள், 50 லட்சம் இலங்கை தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களை உள்ளடக்கிய இலங்கையின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 2.2 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள், இஸ்லாமிய தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் மத்தியில் சாதி-மத பிளவுகள் காரணமாக ஒற்றுமையின்மை நிலவுவதாகவும் இந்த முரண்பாடுகள் தமிழீழ கிளர்ச்சி குழுக்களிலும் இருந்ததாகவும் பரவலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

# இலங்கை தமிழர்கள் - பழங்குடி தமிழர்களில் யாழ்ப்பாண இராச்சியத்தின் வழித்தோன்றல்களும் கடற்கரையைச் சுற்றியுள்ள பழங்குடியினரும் அடங்குவர்.

# இஸ்லாமிய தமிழர்கள் - வணிக நிமித்தமாக இலங்கை வந்த அரேபிய வணிகர்கள் (மூர்கள்) தமிழ் பெண்களை திருமணம் செய்து குடியேறினர்.

# மலையக தமிழர்கள் - தமிழர்கள் தோட்ட வேலைக்காக இலங்கையில் குடியேறினர்.
முடிவுரை

இலங்கையின் உள்நாட்டுப் போரால் 200 பில்லியன் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2.5 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், 5 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 15 லட்சம் பேர் அகதிகளாக மாறியதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. துன்பகரமான முடிவிற்கு வந்தாலும், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவி வரும் முரண்பாடுகள் இனிவரும் காலங்களில் சுமுகமாகத் தீர்க்கப்படும் என நம்புவோம்.

// துணைக்கதை //

இலங்கை - ஈழப் பிரச்சனையின் பின்னணியில் இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவை சீர்குலைத்த ராஜீவ் காந்தியின் படுகொலையை இந்த துணைக்கதை ஆராய்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னால்

உலகில் அதிகம் ஆராயப்பட்ட படுகொலை வழக்குகளில், சர்வதேச வலையமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி படுகொலை வழக்கும் ஒன்றாகும். விடுதலைப் புலிகள் உத்தரவின் பேரில், சிவராசனே இந்த படுகொலையை திட்டமிட்டதாக SIT தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலையை நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் தலைமையிலான ஜெயின் ஆணையம் தீர விசாரித்தது. முக்கியமாக, ராஜீவ் காந்தி படுகொலையில் சர்வதேச சதி நடந்திருக்கலாம் என, ஜெயின் ஆணையம் அறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து யாரையோ காப்பாற்றுவதற்காக, விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது; அல்லது யாருக்காகவோ ராஜீவ் காந்தியை கொல்ல, விடுதலைப் புலிகள் கூலிப்படையாக செயல்பட்டனர்; அல்லது இந்திய அமைதி காக்கும் படை நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் நோக்கில், விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்று விடுதலைப் புலிகளின் தலையீடு பற்றி பல கதைகள் பேசப்படுகின்றன. மறுபுறம், சர்வதேச ஆதரவைப் பெற்று, தமிழீழ நாடு கோரி போராடிய விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியை கொன்றிருக்க முடியாது என்று பரவலாக வாதிடப்படுகிறது. ஒரு வேளை, ஸ்ரீபெரும்புதூர் பிரச்சார கூட்டத்தின் காணொளி காட்சிகள் சிதைக்கப்படாமல் இருந்திருந்தால், இந்தப் படுகொலை பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிய வந்திருக்கலாம்.

சிவராசன்

சிவராசன் (சிவா மாஸ்டர்) என்ற பாக்கியச்சந்திரன் (பாக்கி அண்ணா) என்ற ரகுராமன் (ரகு), பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட போது விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகராக இருந்தார். அதற்கு பின்னான காலகட்டத்தில், இயக்கத்தை விட்டு விலகி எங்கோ சென்றதாக யாழ்ப்பாணத்தில் தகவல்கள் பரவின. இதனால், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது சிவராசன் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருக்கவில்லை என்ற கருத்து பரவலாக வாதிடப்படுகிறது. அதே சமயம், இந்த கட்டுக்கதையை விடுதலைப் புலிகள் தான் கசியவிட்டதாகவும் வாதிடப்படுகிறது. மேலும், ராஜீவ் காந்தி கொலையாளிகளை உயிருடன் பிடிப்பதில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மெத்தனம் காட்டி, கோணனகுண்டே வீட்டை முற்றுகையிட்டதாகவும், இதன் விளைவாக சிவராசன் கும்பல் உயிருடன் பிடிபடுவதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஹரிபாபு

புகைப்படங்களை எடுத்த பிறகு கூட்டத்திலிருந்து வீடு திரும்ப நினைத்திருக்கக்கூடிய ஹரிபாபு, குண்டுவெடிப்பின் போது கொல்லப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரிபாபுவின் கேமராவில் பதிவான புகைப்படங்கள் தான் விசாரணைக்கு முதல் அடித்தளம் ஆகியது. இதற்கிடையில், மே 2016 அன்று ரமேஷ் மற்றும் புகழேந்தி என்ற இரண்டு மருத்துவர்கள், ராஜீவ் காந்தி படுகொலையில் ஹரிபாபுவின் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை முரணாக உள்ளது என்று தடவியல் துறையின் மீது குற்றம் சாட்டினர். இதனால், ஹரி பாபு உயிருடன் இருப்பதாக வாதிக்கப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த ஹரி பாபுவுக்கு விருத்தசேதனம் (Circumcision) செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், ஹரி பாபுவின் அடையாளம் அந்த அறிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்றும் கூறப்பட்டது சர்ச்சைக்கு காரணமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, மருத்துவ காரணங்களுக்காக மதத்தை பொருட்படுத்தாமல் விருத்தசேதனம் செய்யலாம் என்ற விளக்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 
மனித வெடிகுண்டு தணு

சிங்களக் குண்டர்களால் தமிழர்களின் சத்தியாகிரகம் ஒடுக்கப்பட்ட பின்னர், தமிழீழ பிரச்சினைகளுக்கு அகிம்சை வழியில் தீர்வு காண்பதில் ஏ.ராஜரத்தினம் நம்பிக்கை இழந்தார். தமிழீழ இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கான உத்திகளை ஆராய்ந்தார். தமிழீழ நேதாஜி என்று அழைக்கப்பட்ட ஏ.ராஜரத்தினம் 1961 இல் தமிழ்ப் புலிகள் அமைப்பை நிறுவி, பல இளம் தமிழீழ போராளிகளுக்கு முன்மாதிரியாக செயல்பட்டார். 1970 களில் பிரபாகரனின் வழிகாட்டியாகவும், தமிழீழப் புரட்சிகர இயக்கம் மண்ணில் மலரத் தொடங்கிய காலகட்டத்தில், 1972 முதல் 1975 வரை விடுதலைப் புலிகளின் கொள்கையை வரையறுப்பதிலும் முக்கிய பங்காற்றிய ஏ.ராஜரத்தினம் 1975 இல் காலமானார். ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது, விடுதலைப் புலிகள் அமரர் ஏ.ராஜரத்தினத்தை நினைவுகூர்ந்து கௌரவித்ததாக நிச்சயமற்ற தகவல்கள் உள்ளன.

ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய மனித வெடிகுண்டாக செயல்பட்ட தணு என்கிற  தேன்மொழி என்கிற கலைவாணி ராஜரத்தினம், ராஜரத்தினத்தின் மகள் ஆவார். மட்டக்களப்பில் நடுநிலைப் பள்ளியில் பயின்ற தணு, ஆரம்பத்தில் தமிழீழப் புரட்சி இயக்கத்துடன் தொடர்புடைய அவரது தந்தை மற்றும் மற்ற போராளிகளால் உந்துதல் பெற்றார். ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் நவீன காலத்தின் முதல் மனித வெடிகுண்டாக தணு (1974-1991) அறியப்படுகிறார். சினிமா ஆர்வலர்கள் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சதியை 1970 இல் வெளியான CID சங்கர் தமிழ்த் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியுடன் ஒப்பிட்டுள்ளனர்.
Bofors தொடர்பு

இந்திய பிரதமர் இந்திரா காந்தி 1980 இல் ஆஸ்திரியாவில் இருந்து கனரக ஆயுதங்களை வாங்க திட்டமிட்டார். ஆனால், ஆஸ்திரிய ஒப்பந்தம் முடிக்கப்படுவதற்குள், இந்திரா காந்தி 31-10-1984 அன்று படுகொலை செய்யப்பட்டார். 1984 இல் ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி, ஆஸ்திரியாவை பட்டியலிலிருந்து நீக்கி, கனரக ஆயுதங்களை வாங்க ஸ்வீடன் அரசின் ஆதரவு பெற்ற Bofors ஆயுத நிறுவனத்துடன் ரூ.1,437 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தங்களை சுமூகமாக முடிக்க, ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இருவரும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதில், ராஜீவ் காந்தி தரப்பினர் ஸ்வீடனுடன் ஆயுத ஒப்பந்தத்தை முடிக்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், பிற்காலத்தில் ராஜீவ் காந்தி தரப்புக்கும் ஸ்வீடன் நிறுவனத்திற்கும் எதிராக எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Bofors ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, ஊழல் வெளிவருவதற்கு முன்னர் ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே 28-02-1986 அன்று படுகொலை செய்யப்பட்டார், மற்றும் Bofors ஊழல் வெளிவந்த பின்னர் ராஜீவ் காந்தி 21-05-1991 அன்று படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி மற்றும் அவர்களது நெருங்கிய நண்பரான ஓலோப் பால்மே ஆகியோரின் மூன்று படுகொலைகளுக்கும் ஆயுத பேரத்திற்கும் இடையிலான தொடர்பு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலையால் அரசியல் ஆதாயம் அடைந்த பயனாளிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையும் மதிப்பீடும்

1998 இல் ராஜீவ் காந்தியின் படுகொலையை தீர விசாரிக்கும் முயற்சியில், ஒன்றிய அரசால் பல்நோக்கு ஒழுங்கு விசாரணை ஆணையம் (Multi-Disciplinary Monitoring Agency - MDMA) நிறுவப்பட்டது. இதுவரை, இந்த வழக்கு தொடர்பான பல்நோக்கு ஒழுங்கு விசாரணை ஆணையத்தின் ஆவணங்கள் வெளியிடப்படவில்லை.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணமான வெடிகுண்டை பற்ற வைக்க பயன்படுத்தப்பட்ட 9V மின்கலத்தை வாங்கியதாக பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது. பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில், “பேரறிவாளன் வாங்கிய 9V மின்கலத்தை பயன்படுத்தியதன் உண்மையான நோக்கம் பேரறிவாளனுக்கு தெரியவில்லை” என்ற வாசகத்தைத் தவிர்த்துவிட்டதாக முன்னாள் CBI அதிகாரி தியாகராஜன் பேசியது பல சர்ச்சைகளை கிளப்பியது. தியாகராஜன், ரகோத்தமன் போன்ற முன்னாள் CBI அதிகாரிகளின் அறிக்கைகள் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணையின் நம்பகத்தன்மையை கணிசமாக பலவீனப்படுத்துகின்றன. இதற்கிடையில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக் கைதிகளாக இருந்த பேரறிவாளன், நளினி, முருகன், சின்ன சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகியோரை உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி 2022 இல் தமிழ்நாடு அரசு விடுதலை செய்தது.

காஷ்மீர் விடுதலை அமைப்பு, சீக்கிய விடுதலை அமைப்பு, அசாம் விடுதலை அமைப்பு, ஈழ விடுதலை அமைப்பு, நேபாளம் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து ஒருங்கிணைந்த அச்சுறுத்தலை ராஜீவ் காந்தி எதிர்கொண்டதாக ஜெயின் ஆணையத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியது. இதற்கிடையில், ராஜீவ் காந்தி படுகொலையில் விடுதலைப் புலிகளின் பங்கு குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டாலும், பொதுவாக, விடுதலைப் புலிகள் தங்களின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்பதாக ஒப்புக்கொள்ளும் நிலையில், ராஜிவ் காந்தி மரணம் ஒரு துன்பியல் சம்பவமாகவும், அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் மறுத்துள்ளனர். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், காணொளி ஆதாரங்களை சிதைத்தாக சந்தேகிக்கப்பட்ட எம்.கே.நாராயணன், Bofors பீரங்கி பேரத்தில் கிசுகிசுக்கப்பட்ட சாமியார் சந்திராசாமி (ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு பிரதமரான நரசிம்ம ராவுக்கு நெருக்கமானவர்), சவூதி அரேபியா ஆயுத வியாபாரி அட்னன் கஷோகி, ஸ்ரீபெரும்புதூர் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்த ஆர்.கே.ராகவன் மற்றும் ராஜீவ் காந்தியை ஓரங்கக்கட்ட எண்ணிய சுப்ரமணியசாமி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது ஆனால் அவர்களிடம் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளை தாண்டி விசாரணை கோணம் நகரவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அதிகாரிகளில் ஒருவரான கே.ரகோத்தமன் கூறியது கவனிக்கத்தக்கது. 
அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ள ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணை, விரிவான ஆய்வு மற்றும் அலசல்களுக்கு உட்பட்டதாக உள்ளது. எனவே, விசாரணைக் குழு வெற்றிகரமாக உண்மையை வெளிப்படுத்தியதா அல்லது அவ்வாறு செய்யத் தவறியதா என்ற கேள்வி இன்னும் விவாதத்திற்குரியதாக உள்ளது.

துணுக்கு செய்தி 

2004 இல் கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட வீரப்பன், இலங்கையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கவும் முடிவு செய்தார். ஒரு வேளை இருவரும் இணைந்திருந்தால், வீரப்பனையும் பிரபாகரனையும் கையாள்வதில் அரசுகளுக்கு புதிய சவாலாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், 18.10.2004 அன்று, ஆபரேஷன் கொக்கூன் என்ற சிறப்பு அதிரடிப்படையின் நடவடிக்கையின் விளைவாக, இலங்கைக்கு தனது திட்டமிடப்பட்ட பயணத்திற்காக மருத்துவ ஊர்தியில் அழைத்து செல்லப்பட்டபோது வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விவரணைகள்

FBI about LTTE


Sri Lankan History - 1


Sri Lankan History - 2


Sri Lankan History - 3


Sri Lankan History - 4


Who got the Bofors Money?


Vijitha Rohana Attacks Rajiv Gandhi


Norway Peace Talks

https://www.ipcs.org/issue_select.php?recNo=424

Sri Lankan Civil War Timeline Chart


Economic Damages due to Sri Lankan Civil War



ஈழமும் கலைஞரும்


தமிழீழம் அழிந்த கதை


வைகோவின் ஈழப் பயணம்


இலங்கை உள்நாட்டுப் போர்


ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி?


ராஜீவ் காந்தி படுகொலை ஒரு துன்பியல் சம்பவம்


ராஜீவ் காந்தி படுகொலையின் தடயவியல் அம்சங்கள்


ராஜீவ் காந்தி படுகொலையில் சொல்லப்படாத ரகசியங்கள்


ராஜீவ் காந்தி படுகொலை பற்றி வெளிவந்துள்ள சில புத்தங்கங்கள்

# ராஜீவ் கொலை - நளினி முருகன்

# பத்மநாபா படுகொலை - ஜெ.ராம்கி 

# ராஜீவ் காந்தி கொலை - செ.துரைசாமி

# ராஜீவ் கொலை வழக்கு - கே.ரகோத்தமன்

# முதல் மனித வெடிகுண்டு - பி.சந்திரசேகரன்

# தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுச்சாமி

# விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் சர்மா

# சிவராசன் டாப் சீக்ரெட் - இரா.பொ.இரவிச்சந்திரன்

# ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள் - நக்கீரன் புலனாய்வு குழு

Beyond the Tigers - Rajiv Sharma

First Human Bomb - P.Chandrasekharan

Conspiracy to Kill Rajiv Gandhi - K.Ragothaman

Rajiv Gandhi Assassination: The Investigation - D.R.Karthikeyan / Radhavinod Raju

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...