இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors
குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, இதே தலைப்பில் மேலும் சான்றுகளை பார்வையிட வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சுருக்கம்
- முகவுரை
- ஜெரால்டு புல் கைவண்ணம்
- ஈராக் பீரங்கி ஒப்பந்தமும் ரத்தும்
- ஜெரால்டு புல் படுகொலை
- இந்திரா காந்தி அணுமுறை
- பீரங்கி வாங்க திட்டமிட்ட இந்திரா காந்தி
- ராஜீவ் காந்தியும் ஓலோப் பால்மேயும்
- பீரங்கி வாங்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி
- Bofors பீரங்கி ஒப்பந்தம்
- பீரங்கி வெடிப்பதற்கு முன் ஊழல் வெடித்தது
- நாடாளுமன்ற கூட்டுக் குழு
- வி.பி.சிங் விலகல்
- அமிதாப் பச்சன் விலகல்
- அருண் நேரு மற்றும் அயோத்தி
- அரசியல் சதுரங்க விளையாட்டு
- 1989 தேர்தல் முடிவை மாற்றிய Bofors
- ஆட்சியமைத்த தேசிய முன்னணி
- ராஜீவ் காந்தி படுகொலை
- விசாரணை கோணம்
- சித்ரா சுப்ரமணியம்
- ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம்
- Bofors நிறுவனமும் ஸ்வீடன் அரசியலும்
- Bofors விவகாரத்துக்குப் பிறகு
- வாஜ்பாயின் அரசியல்
- பா.ஜ.கவின் Tehelka ஊழல்
- பா.ஜ.கவின் Rafale ஊழல்
- நிரூபிக்கப்படாத Bofors குற்றச்சாட்டு
- முடிவுரை
- பின்னிணைப்பு
- கதை சுருக்கம்
- துணுக்குச் செய்தி
- விவரணைகள்
முகவுரை
1981 இல் பிரதமர் இந்திரா காந்தி வழிகாட்டலில் காங்கிரஸ் கட்சி நடத்திய விவசாயிகள் பேரணியில் உரையாற்றியதன் மூலம் அரசியலில் நுழைந்தார் ராஜீவ் காந்தி. பின்னர் அதே ஆண்டு, அமேதி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, காங்கிரஸ் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, கட்சி மற்றும் ஆட்சியில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த, காங்கிரஸ் கட்சியில் இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில் ராஜீவ் காந்தி அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார்.
தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் தொலைத்தொடர்பு (Telecommunication) துறைகளின் அடிப்படையில், பிரபல பொறியாளர் சாம் பிட்ரோடா உட்பட பல்வேறு துறைசார் வல்லுனர்களின் துணையுடன், பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியாவை நவீனமயமாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தினார். இன்றைக்கு இந்தியா உலகளவில் IT மற்றும் Telecommunication துறையில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் ராஜீவ் காந்தி இட்ட அடித்தளம் என்றால் அது மிகையாகாது. மேலும், வாக்களிக்கும் வயதை 21 இல் இருந்து 18 ஆகக் குறைத்தார், தொலைதூரக் கல்விக்காக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை (IGNOU) நிறுவினார், மக்கள் பிரதிநிதிகள் அரசியல் கட்சி மாறுவதைத் தடுக்க கட்சி தாவல் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார், கிராமங்கள் மேம்பாட்டுக்கு பஞ்சாயத்து ராஜ் முறையை செயல்படுத்த முனைந்தார் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியை ஊக்குவித்தார். ராஜீவ் காந்தி முக்கியமான சீர்திருத்தங்களையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் கொண்டு வந்தார் என்றால் அது மிகையாகாது.
இதற்கிடையில், "Bofors ஊழல், ஜனாபதியுடன் முரண், சீக்கியர் விவகாரம், இந்திய அமைதி காக்கும் படை (IPKF), போபால் விஷவாயு விபத்து, உள்நாட்டு பிரிவினை குழுக்கள், ஷா பானு வழக்கு, அயோத்தி சர்ச்சை, உட்கட்சி பிரச்சனை, பா.ஜ.கவின் வளர்ச்சி மற்றும் மூன்றாவது அணி அரசியல்" என்று ராஜீவ் காந்தி ஆட்சிக் காலம் அரசியல் பரபரப்பால் நிறைந்திருந்தது.
இதில் குறிப்பாக, 1980 களின் பிற்பகுதியில் Bofors ஊழல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்புயலில் சிக்கிய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. பொதுவில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், ஒரு காலத்தில் பரவலாக விவாதிக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட Bofors வழக்கின் சாராம்சத்தை (Key Points) வாசகர்களின் வசதிக்காக சுருக்கமாக பதிவு செய்துள்ளேன்.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனரும் (Space Research Corporation - SRC) கனடா ஆயுத விஞ்ஞானியுமான ஜெரால்ட் புல் உளவு நாவலில் உள்ள கதாபாத்திரம் போன்று எதிரிகளுக்குப் பஞ்சமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார். உலகின் பல நாடுகளுக்கு ஆயுதங்களை வடிவமைத்தார். குறிப்பாக 1960 களில் ஸ்வீடிஷ் பாதுகாப்பு நிறுவனம் பீரங்கி குண்டுகளின் பயண தூரத்தையும் தாக்கும் துல்லியத்தையும் மேம்படுத்த "Base Bleed" தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்த தொழில்நுட்பம் பின்னர் ஜெரால்ட் புல் மூலம் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு பீரங்கி தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டது. மேலும், 1970 களின் பிற்பகுதியில் வழமையான பீரங்கிகளை விட மிக நீண்ட தூரம் சென்றடையும் GC-45 என அழைக்கப்பட்ட 155 mm பீரங்கியை ஜெரால்ட் புல் வடிவமைத்தார்.
ஜெரால்டு புல்லிடமிருந்து GC-45 பீரங்கிக்கான வடிவமைப்பு உரிமையை ஆஸ்திரியாவின் Voestalpine நிறுவனத்தின் ஆயுதப் பிரிவான Noricum வாங்கியது. ஜெரால்டு புல்லின் GC-45 பீரங்கி வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்து, அதற்கு GHN-45 பீரங்கி என்று பெயரிடப்பட்டது.
ஈராக் பீரங்கி ஒப்பந்தமும் ரத்தும்
14-06-1980 அன்று சதாம் ஹுசைனின் அணுசக்தித் திட்டத்திற்குத் தலைமை தாங்கிய எகிப்திய விஞ்ஞானி யாஹ்யா எல் மஷாத் (Yahya El Mashad) பாரிஸில் உள்ள ஹோட்டல் அறையில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இப்படுகொலைக்கு இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் (Mossad) மீது குற்றம் சாட்டப்பட்டது.
22-09-1980 முதல் 20-08-1988 வரை ஈரானுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கு நிறைய படைக்கலம் (Arms) தேவைப்பட்டது. இப்போருக்கு மத்தியில் 07-06-1981 அன்று ஓபரா நடவடிக்கை (Operation Opera) மூலம் இஸ்ரேலிய விமானப்படையினர் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலால் கட்டி முடிக்கப்படாத ஈராக் அணு உலை தகர்க்கப்பட்டது. அரபு-இஸ்ரேல் உறவுகளில் பதற்றம் நிலவிய சூழலில், சதாம் ஹுசைன் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்காக அணு உலை வடிவமைப்பதை இஸ்ரேல் விரும்பவில்லை.
யாஹ்யா எல் மஷாத் மறைவு மற்றும் அணு உலைத் தகர்ப்பு ஆகியவற்றுக்குப் பிறகு சதாம் ஹுசைன் ஆயுதங்களை வடிவமைக்க விஞ்ஞானியை தேடிய போது ஜெரால்டு புல் நட்பு கிட்டியது. இதையொட்டி, பராமரிக்க எளிதாகவும், மிக நீண்ட தூரம் துல்லியமாக தாக்கும் சக்தியையும் கொண்ட GHN-45 பீரங்கிகளை, ஜெரால்ட் புல்லின் மேற்பார்வையில், ஈராக்கிற்காக உருவாக்க Voestalpine நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், ஈராக்கிற்கு 160 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டன.
Voestalpine நிறுவனம் மட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், ஆஸ்திரிய அரசுக்கு தீவிர கவலைகளை ஏற்படுத்தியது. இதனால், 1979 இல் யூத மதத்தை சேர்ந்த ஆஸ்திரிய அதிபர் புருனோ கிரேஸ்கி (Bruno Kreisky), ஆஸ்திரியாவின் நடுநிலைச் சட்டங்களை ஈராக் மீறியதாக குற்றம்சாட்டி பீரங்கி ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக, ஈராக்கிற்காக தயாரிக்கப்பட்ட 160 பீரங்கிகள் கிடப்பில் கிடந்தன.
ஜெரால்டு புல் படுகொலை
ஆஸ்திரியாவின் நடவடிக்கைகளைப் பற்றி கவலைப்படாமல், உறுதியுடன் இருந்த சதாம் ஹுசேன், ஆயுதப் பொறியாளர் ஜெரால்ட் புல்லை தனது நாட்டில் பணியாற்றச் செய்தார். அதையொட்டி, 1981 இல் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, சுதாரித்துக் கொண்ட சதாம் ஹுசைன், வான்வெளி தாக்குதல்களிலிருந்து ஆய்வுக்கூடங்களைப் பாதுகாப்பதற்காக 1988 இல் அணு ஆயுத ஆய்வுக்கூடங்களை நிலத்தடிக்கு (Underground) மாற்றினார். அங்கு சதாம் ஹுசைன் வேண்டுகோளுக்கிணங்க உலகின் அதி நவீன Supergun (Project Babylon) தயாரிப்பு மற்றும் எறிபடையியல் ஏவுகணைத் (Ballistic Missile) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ஜெரால்டு புல் ஈடுபட்டு வந்தார்.
ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த ஜெரால்டு புல், 22-03-1990 அன்று தனது பிரஸ்ஸல்ஸ் குடியிருப்பில் நுழைந்த போது, மர்ம நபரால் முதுகில் மூன்று முறையும், தலையில் இரண்டு முறையும் சுடப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையாளி அடையாளம் காணப்படாத சூழலில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, ஜெரால்டு புல் வீட்டுக் கதவில் சாவி இருந்தது, மேலும் அவரது பெட்டியில் $20,000 ரொக்கம் அப்படியே கிடந்தது. எனவே, இது திருட்டாகக் கருதப்படவில்லை; மாறாக, ஈராக் அரசுக்காக ஜெரால்டு புல் மேற்கொன்டுள்ள ஆயுத ஆராய்ச்சிகள் ஆபத்தை விளைவிக்கும் என்று கருதியே, இஸ்ரேலிய உளவுத்துறையான Mossad ஜெரால்டு புல்லை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்திரா காந்தி அணுமுறை
இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவின் சர்வதேச அந்தஸ்து கணிசமாக வளர்ந்தது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதிலும், அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியாக உலக அரங்கில் இந்தியாவை நிலைநிறுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.
உலகத் தலைவர்களிடம் நட்புறவு பாராட்டிய பிரதமர் இந்திரா காந்தி, சோவியத் யூனியன் தலைவர் லியோனிட் ப்ரெஷ்நேவ் (Leonid Brezhnev) பரிந்துரையின் பேரில், சோவியத் யூனியன் தயாரித்த Sukhoi Su-7 போர் விமானங்களை வாங்கினார். 1971 இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக சோவியத் யூனியனின் போர் விமானங்களும் ஒரு காரணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பீரங்கி வாங்க திட்டமிட்ட இந்திரா காந்தி
இந்தியாவின் ஆயுதக் களஞ்சியத்தை எளிதில் மிஞ்சும் வகையில் 1977 இல் பாகிஸ்தானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்றது அமெரிக்கா. இதையொட்டி, 1980 இல் மீண்டும் பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவுக்கு அதிநவீன 155 mm பீரங்கிகளை வாங்க முடிவு செய்தார். இந்த பின்னணியில், பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பரான ஆஸ்திரிய அதிபர் புருனோ கிரேஸ்கி, சதாம் ஹுசைனின் ஈராக்கிற்காக தயாரான 160 பீரங்கிகளை பெற்றுக் கொள்ளும்படி பிரதமர் இந்திரா காந்தியிடம் கேட்டுக் கொண்டார். அத்துடன், இந்தியாவுக்கு பீரங்கி வடிவமைப்புத் தொழில்நுட்பத்தை வழங்கவும் ஆஸ்திரிய அரசு முன்வந்தது. இதற்கிடையில், 1983 இல் 155 mm பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை Bofors நிறுவனத்திற்குத் தருமாறு ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். இதிலிருந்து இந்தியாவுக்கான Bofors அத்தியாயம் தொடங்கியது.
லெப்டினன்ட் ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நான்கு நாடுகளின் ஆயுதங்களைப் பற்றி ஆய்வு செய்து, 1982 இல் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் மாயதாஸ் தலைமையில் இந்திய அரசின் சார்பில், பிரான்சின் Sofma (TR-F1), ஸ்வீடனின் Bofors (FH 77-B), இங்கிலாந்தின் International Military Services (FH-70) மற்றும் ஆஸ்திரியாவின் Voestalpine (GHN-45) ஆகியோரிடம் இருந்து பீரங்கிகள் குறித்து மேலதிக விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இறுதியாக, 1984 இல் பிரான்சின் Sofma (TR-F1) மற்றும் ஆஸ்திரியாவின் Voestalpine (GHN-45) நிறுவனங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியா பீரங்கிகளை வாங்குவதற்கு முன்பு, 1983 இல் ஆஸ்திரிய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற தவறியதால், புருனோ கிரேஸ்கி ஆட்சி அமைக்காமல் விலகினார். மேலும், 31-10-1984 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, பீரங்கிப் பேச்சுவார்த்தை முடங்கின.
ராஜீவ் காந்தியும் ஓலோப் பால்மேயும்
1984 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 31-12-1984 அன்று பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, 25-09-1985 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சகப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே, 16-01-1986 அன்று டெல்லிலியில் நடைபெற்ற இந்திரா காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
1985 செப்டம்பரில் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்த ஓலோப் பால்மேயின் ஸ்வீடிஷ் சமூக ஜனநாயகக் கட்சிக்கு (Swedish Social Democratic Party - SSDP) அதிகளவு பணம் தேவைப்பட்டது. இந்நேரத்தில், 1985 காலகட்டத்தில், ஸ்வீடன் கடுமையான பொருளாதார அழுத்தங்களை சந்தித்திருந்தது. இதன் காரணமாக, ஸ்வீடனின் ஆயுதத் துறையிலும் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. ஸ்வீடனின் Bofors நிறுவனம் பல முக்கிய ஆயுத ஒப்பந்தங்களை தவறவிட்டு, பொருளாதார சவால்களை எதிர்கொண்டது. இந்நிலையில், இந்தியா பீரங்கிகளை வாங்க திட்டமிட்டதை முன் வைத்து, ராஜதந்திர ரீதியில் பீரங்கிகளை விற்பனை செய்ய Bofors முடிவு செய்தது.
பீரங்கி வாங்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி
பிரான்சின் Sofma (TR-F1) மற்றும் ஆஸ்திரியாவின் Voestalpine (GHN-45) நிறுவனங்களுடன் பேச திட்டமிட்டிருந்த இந்திரா காந்தி அகால மரணமடைந்தபின், ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு, பீரங்கி வாங்கும் அணுகுமுறையில் இந்திய அரசின் புதிய அத்தியாயம் தொடங்கியது. இது இந்தியாவுடனான பீரங்கி ஒப்பந்தம் குறித்து ஸ்வீடனின் Bofors நிறுவனத்திற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அனாட்ரானிக் ஜெனரல் கார்ப்பரேஷனின் (Anatronic General Corporation) நிறுவனர் வின் சத்தா, இந்திய அரசுடன் தொடர்பு கொள்வதற்கான தங்களின் முகவராக Bofors நிறுவனம் அறிவித்தது.
இந்தியாவுக்கு புதிய பீரங்கிகளை வாங்க திட்டமிட்ட ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசானது பீரங்கித் தேர்வு செயல்முறையை (Artillery Selection Process) விரைவுபடுத்தியது. மேலும், பாதுகாப்பு அமைச்சகம், பீரங்கி முகவர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டோம் என்றும், எந்த அதிகாரிகளையும் சந்திக்க முகவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தது. எந்தவொரு வணிக செயல்முறையிலும், முகவர்களின் தலையீடுகள் இருக்கின்ற சூழலில், அதிகார முகவர்களை களையெடுக்கும் வகையில் இந்திய அரசு மேற்கொண்ட துணிச்சலான அணுகுமுறை பரவலாக பாராட்டப்பட்டது.
இந்திய அரசின் பாதுகாப்பு கொள்முதல் கொள்கை (Defence Procurement Policy) காரணமாக, பாதுகாப்பு அமைச்சகம் Bofors நிறுவனத்திடம் அதன் முகவரை பணிநீக்கம் செய்ய அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்களுக்கான முகவர் இனி கிடையாது என்று Bofors அறிவித்தது.
Bofors பீரங்கி ஒப்பந்தம்
ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து டெண்டர் விவரங்களைப் பெற்ற இந்திய அரசு, 1985 இல் பீரங்கிகளை வாங்குவதற்கு பாதுகாப்பு செயலாளர் எஸ்.கே.பட்நாகர் தலைமையில் ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தது. பீரங்கியை வாங்குவதற்கான பட்டியலில் இருந்து ஆஸ்திரியாவின் Voestalpine (GHN-45) நிறுவனத்தை நீக்கி, பிரான்சின் Sofma (TR-F1) மற்றும் ஸ்வீடனின் Bofors (FH 77-B) ஆகிய நிறுவனங்களை எஸ்.கே.பட்நாகரின் குழு தேர்ந்தெடுத்தது. 1984 இல் பிரான்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க விரும்பிய லெப்டினன்ட் ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி, 1986 இல் ராணுவத் தளபதியாக பதவியேற்ற பிறகு, பரிந்துரை குழுவின் இழுபறிக்கு இடையில் இந்திய ராணுவத்தின் சார்பில் ஸ்வீடனின் Bofors நிறுவனத்தை தேர்ந்தெடுக்க இந்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
ராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியின் பரிந்துரை அடிப்படையில், Bofors தேர்வை பாதுகாப்புத்துறையில் கையாளும் பிரதமர் ராஜீவ் காந்தி, பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அருண் சிங், நிதியமைச்சர் வி.பி.சிங் ஆகிய மூவரும் அங்கீகரித்தனர். அதைத் தொடர்ந்து, 24-03-1986 அன்று இந்திய ராணுவத்திற்காக, சுமார் 400 FH 77-B பீரங்கிகளை (Field Howitzer - FH) கொள்முதல் செய்வதற்கு இந்திய அரசும் ஸ்வீடன் அரசின் ஆதரவு பெற்ற Bofors ஆயுதத் தயாரிப்பு நிறுவனமும் ரூ.1,437 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் எஸ்.கே.பட்நாகர், Bofors நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் அர்ட்போ மற்றும் நோபல் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆண்டர்ஸ் ஜி.கரிபெர்க் ஆகியோர் கையெழுத்திட்டனர். அன்றைய காலகட்டத்தில், இந்திய ஒப்பந்தமானது Bofors நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தமாகும். அத்துடன், வெளிநாட்டு நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட முக்கிய ராஜதந்திர ஒப்பந்தமாகும்.
பீரங்கி வெடிப்பதற்கு முன் ஊழல் வெடித்தது
Bofors ஒப்பந்தத்தின் படி, Bofors நிறுவனத்திடம் உத்தரவாதம் பெற்ற பின்னர், இந்திய அரசு மொத்த தொகையில் ரூ.296 கோடியை முன்பணமாக செலுத்தியது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட ஒரு ஆண்டிற்குப் பிறகு, 16-04-1987 அன்று ஸ்வீடன் வானொலியில், ஸ்வீடிஷ் சட்டங்களை மீறி, இந்திய ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக Bofors முகவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அநாமதேய நபரால் குற்றம் சாட்டப்பட்டது. இத்துடன், Bofors ஊழல் பற்றிய சித்ரா சுப்ரமணியத்தின் கட்டுரைகள் இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பை கணிசமாக மாற்றியது.
இத்தாலி தொழிலதிபர் ஒட்டாவியோ குவாட்ரோச்சி, அனாட்ரானிக் ஜெனரல் கார்ப்பரேஷன் நிறுவனர் வின் சத்தா, Bofors தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ, SPIC நிறுவனர் ஏ.சி.முத்தையா, லண்டனிலுள்ள இந்துஜா சகோதரர்கள், பாதுகாப்பு செயலாளர் எஸ்.கே.பட்நாகர், கூடுதல் செயலாளர் என்.என்.வோஹ்ரா, ராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி, பிரதமர் ராஜிவ் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் மற்றும் நிறுவன தலைவர்களும் Bofors பீரங்கி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக Bofors நிறுவனத்திடமிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், Bofors நிறுவனம் டெண்டர் விவரங்களை திடீரென மாற்றி அமைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இத்துடன், Bofors லஞ்சப்பணத்தை ஒட்டாவியோ குவாட்ரோச்சி கையாள்வதற்கு A.E Services, வின் சத்தா கையாள்வதற்கு Svenska Inc மற்றும் இந்துஜா சகோதரர்கள் கையாள்வதற்கு Moineao S.A, McIntyre Corporation போன்ற வெளிநாட்டு போலி நிறுவனங்கள் (Shell Companies) இடைத்தரகு பணிகளை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தொடர்ந்து, Bofors ஊழல் வெடித்ததும், சி.பி.ஐ தரப்பிலான இந்திய புலனாய்வுக் குழு பல்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு நபர்களை விசாரித்து, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள வங்கிப் பதிவுகளைப் பெறத் தொடங்கியது.
ஆரம்பத்தில், இந்திய ராணுவம் பிரான்சின் Sofma அல்லது ஆஸ்திரியாவின் Voestalpine பீரங்கிகளை வாங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மேயின் SSDP கட்சிக்கு அதிக நிதி வழங்கி, அவரது ராஜீவ் காந்தி நட்பை பயன்படுத்தி, முகவரான ஒட்டாவியோ குவாட்ரோச்சி வழியாக இந்திய ஒப்பந்தத்தை மார்ட்டின் ஆர்ட்போவின் Bofors நிறுவனம் பெற்றதாக ஸ்வீடன் எதிர்க்கட்சிகள் மற்றும் இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
Bofors தலைவர் மார்ட்டின் ஆர்ட்போவின் நாட்குறிப்பில் உள்ள Q, Nero, Gandhi Trustee Lawyer போன்ற சங்கேதப் பெயர்கள் பீரங்கி ஒப்பந்தத்துடன் தொடர்புடையது என விசாரணைக் குழு கருதியது. இதையொட்டி, ஒரு சாதாரண நாட்குறிப்பை வைத்து, Q என்றால் Quattrocchi, Nero என்றால் Arun Nehru என்று ஊடகங்கள் பூதாகரமாக எழுதத் தொடங்கின. சாமியார் சந்திராசாமி மற்றும் சவூதி அரேபியா ஆயுத வியாபாரி அட்னன் கஷோகி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மார்ட்டின் ஆர்ட்போ, ராஜீவ் காந்தியைச் சந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ராஜீவ் காந்தி மற்றும் ஓலோப் பால்மே விமானத்தில் பயணம் செய்த போது, ஊழல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், ராஜீவ் காந்தி தரப்பு இந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி மறுத்தது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு
நாடாளுமன்றத்தில் Bofors பீரங்கி ஒப்பந்தம் குறித்த ஊழல் வெடித்த பின், 20-04-1987 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய ராஜீவ் காந்தி, முகவர்கள் அல்லது லஞ்சம் தொடர்பான ஆதாரங்களை யாராவது வழங்கினால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், Bofors ஊழலை விசாரிக்க இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை (Joint Parliamentary Committee - JPC) பிரதமர் ராஜீவ் காந்தி அமைத்தார். அவ்வகையில், 06-08-1987 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணா சந்திரா பந்த், நாடாளுமன்ற அவையில் முன்மொழிந்த முடிவின் அடிப்படையில் பி.சங்கரானந்த் தலைமையில் JPC உருவாக்கப்பட்டது. JPC, சுமார் 50 அமர்வுகளை நடத்தி, Bofors ஒப்பந்தத்திற்காக ராஜீவ் காந்தி உட்பட யாராலும் பணம் கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை, கேட்கப்படவில்லை என்கிற இறுதி அறிக்கையை 26-04-1988 அன்று சமர்ப்பித்தது. JPC காங்கிரஸ் ஆதரவாளர்களால் நிரப்பப்பட்டது என்று குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட JPC அறிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்தனர்.
இதற்கிடையில், அ.தி.மு.க ஜானகி அணியைச் சேர்ந்த JPC உறுப்பினரான ஆலடி அருணா, JPC கருத்துகளுடன் உடன்படவில்லை என்றும், JPC அறிக்கையில் தனது ஆட்சேபனைகளை சேர்த்து வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார், இது ஆதாரமற்ற குறுக்கீடு என JPC தலைவர் பி.சங்கரானந்த் கூறினார். ஆட்சேபனைகளைத் தெரிவிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பல்ராம் ஜாகர் அனுமதி அளித்ததை அடுத்து, JPC குழுவின் பெரும்பான்மையான பார்வையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நீண்ட அறிக்கையை ஆலடி அருணா வெளியிட்டார்.
1989 இல் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு, ஸ்வீடனின் Bofors ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக வழிவகுத்த செலவினங்கள் மதிப்பீட்டில் முறைகேடுகள் இருப்பதாகவும், பீரங்கி ஒப்பந்தம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது என்றும், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India - CAG) டி.என்.சதுர்வேதியின் சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியானது.
CAG கூறிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ராஜீவ் காந்தியை ராஜினாமா செய்யக் கோரியும், முறையான விசாரணைக் கோரியும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 73 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24-06-1989 அன்று ராஜினாமா செய்தனர். மேலும், "1989 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது, ஏனெனில் இது உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான கடைசி வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம்" என்று பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் கூறினார். இரண்டாம் நிலை சரிபார்க்கப்பட்ட தகவல் இல்லாமல் (Without Second-hand Verified Information), வாஜ்பாயும் அத்வானியும் ராஜீவ் காந்தியைப் பற்றிய கருத்துக்களை தங்கள் விரும்பம் போல உருவாக்கினார்கள். ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்திக்கும், இத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாட்ரோச்சிக்கும் Bofors ஊழலில் பங்குள்ளது என்றும் பா.ஜ.க. செய்திகளை பரப்பத் தொடங்கினர்.
வி.பி.சிங் விலகல்
31-12-1984 முதல் 23-01-1987 வரை நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், வணிக ஒழுங்குமுறையை எளிமையாக்குதல், வரி ஏய்ப்பவர்களைக் கண்காணித்து வழக்குத் தொடுத்தல், தங்கக் கடத்தலைக் கட்டுப்படுத்த தங்க வரியைக் குறைத்தல் போன்ற காரியங்களை செய்தார். மேலும், வரி ஏய்ப்பு தொடர்பாக திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்கள் மீது அதிரடியாக சோதனைகளை நடத்தினார்.
வி.பி.சிங்கின் நிதியமைச்சகம், The Indian Express செய்திகளின் உதவியுடன் திருபாய் அம்பானிக்கு எதிராக விசாரணைகளை தீவிரமாக தொடங்கியது. 1986 இல் திருபாய் அம்பானி உள்ளிட்ட சில பணக்கார இந்தியர்கள் நாணயக் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறியதாகக் கருதப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்க, அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழலை விசாரித்தவரும், Fairfox குழுமத்தின் தலைவருமான மைக்கேல் ஹெர்ஷ்மேன் (Michael Hershman) என்பவரை, அமலாக்க இயக்குநரகத்தின் தலைவர் புரே லால் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் வினோத் பாண்டே ஆகியோருடன் கலந்தாலோசித்து, வி.பி.சிங் பணியமர்த்தினார். மேலும், திருபாய் அம்பானிக்கு எதிராக தொழில்துறை போட்டியாளராக இருந்த நுஸ்லி வாடியா, The Indian Express நிறுவனர் ராம்நாத் கோயங்கா, அவர்களின் நண்பர் எஸ்.குருமூர்த்தி மற்றும் வி.பி.சிங், புரே லால், வினோத் பாண்டே ஆகியோர் அனைவரும் கைகோர்த்து செயல்படுவதாக திருபாய் அம்பானியின் ஆதரவாளர்களால் குற்றம் சாட்டப்பட்டனர். இதற்குப் பிறகு, அமைச்சரவை மாற்றத்தின் (Cabinet Reshuffle) காரணமாக, வி.பி.சிங் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பாதுகாப்புத்துறைக்கான அமைச்சராக மாற்றப்பட்டார்.
ராஜீவ் காந்தி தனது பாதுகாப்புத்துறை இலாகாவை 24-01-1987 அன்று வி.பி.சிங்கிடம் ஒப்படைத்தார். 24-01-1987 முதல் 12-04-1987 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக வி.பி.சிங் இருந்த காலத்தில், HDW நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் Bofors விவகாரம் ஊடக வெளிச்சம் பெற்றது. இப்போது நிதித்துறைக்கு பதிலாக பாதுகாப்புத்துறை விவகாரங்களை விசாரிப்பதில் ஆர்வம் காட்டிய வி.பி.சிங், HDW நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தில் முகவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா? என்பதை விசாரிக்க உத்தரவிட்டார். வி.பி.சிங்கின் நோக்கம் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையா? அல்லது ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராக வழக்கைத் தயாரிப்பதா? என்று புகைச்சல் கிளம்பியது. அதைத் தொடர்ந்து, அரசுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இருந்து வி.பி.சிங் ராஜினாமா செய்தார். 13-04-1987 அன்று வி.பி.சிங்கிற்கு பதிலாக கிருஷ்ணா சந்திரா பந்த் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1987 இல் அமைச்சர், ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்த பிறகு, 1988 இல் அமிதாப் பச்சன் ராஜினாமாவால் காலியான அலகாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் ஜன் மோர்ச்சா சார்பில் வேட்பாளராக வி.பி.சிங் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவையில் நுழைந்தார். மேலும், Bofors ஒப்பந்தம் தொடர்பாக சுவிஸ் வங்கிகளில் லஞ்சப்பணம் வைப்பு (Deposit) செய்யப்பட்டதாக, வி.பி.சிங் பணியமர்த்திய மைக்கேல் ஹெர்ஷ்மேன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன் பிறகு, Bofors ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போது, ராணுவத் துறைக்கான நிதி (Defence Budget) ஒதுக்கீடு செய்த நிதியமைச்சராக இருந்ததை மறந்து, ராஜீவ் காந்தி அரசு Bofors ஒப்பந்தத்தில் ஊழல் புரிந்ததாக வி.பி.சிங் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.
அமிதாப் பச்சன் விலகல்
1984 இல் அமிதாப் பச்சன் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்று, நீண்டகால குடும்ப நண்பரான ராஜீவ் காந்திக்கு ஆதரவாக அரசியலில் நுழைந்தார். 1984 இல் அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில், லோக் தளம் கட்சியை சேர்ந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரான எச்.என்.பகுகுணாவை எதிர்த்து போட்டியிட்டு, 68.20% வாக்குகளை பெற்று 1,87,795 வாக்கு வித்தியாசத்தில் அமிதாப் பச்சன் வெற்றி பெற்றார். அலகாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமிதாப் பச்சனின் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
1987 இல் அமிதாப் பச்சனின் சகோதரரும் தொழிலதிபருமான அஜிதாப் பச்சன் சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியதாக The Indian Express செய்தி வெளியிட்டது. இதனால், ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் அமிதாப் பச்சனுக்கு Bofors ஊழலில் தொடர்பு இருக்கலாம் என பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ய தொடங்கினர். ஸ்வீடன் வானொலி செய்திகளின் வாயிலாக Bofors ஊழல் வெடித்ததைத் தொடர்ந்து, ஜூலை 1987 இல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அமிதாப் பச்சன் ராஜினாமா செய்து அரசியலை விட்டு ஒதுங்கினார்.
இதற்கிடையில், 1990 இல் Bofors ஊழலில் அஜிதாப் பச்சன் பணம் பெற்றதாக ஸ்வீடன் செய்தித்தாள் Dagens Nyheter செய்தி வெளியிட்டது. உடனடியாக, அஜிதாப் பச்சன் லண்டன் நீதிமன்றத்தில் Dagens Nyheter செய்தித்தாள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அஜிதாப் பச்சன் கதை இந்திய புலனாய்வாளர்களிடமிருந்து வந்ததாக கூறிய Dagens Nyheter செய்தித்தாள் நிறுவனம், அஜிதாப் பச்சனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவதூறு வழக்கில் அஜிதாப் பச்சன் வெற்றி பெற்றார்.
அருண் நேரு மற்றும் அயோத்தி
இந்துக்கள் தரிசனம் செய்ய பாபர் மசூதியின் பூட்டுகளைத் திறக்க வேண்டும் என்று உமேஷ் சந்திர பாண்டே என்ற வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, 1986 இல், பைசாபாத் (இப்போது அயோத்தி) மாவட்ட நீதிமன்றம் பாபர் மசூதியின் பூட்டைத் திறக்க உத்தரவு பிறப்பித்து தரிசனத்துக்கு அனுமதித்தது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், காங்கிரஸ் அரசு பாபர் மசூதியைத் தரிசனத்திற்காக திறந்து விட்டது.
இந்நிலையில், பிரதமர் ராஜீவ் காந்தியைக் கலந்தாலோசிக்காமல், உள்துறை இணை அமைச்சராக இருந்த அவரது நெருங்கிய நண்பரான அருண் நேருவின் உத்தரவின் பேரில், உத்தரப்பிரதேச முதல்வர் வீர் பகதூர் சிங் மசூதியைத் தரிசனத்திற்காக திறக்க அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில், பிரதமர் அலுவலக அதிகாரி வஜாஹத் ஹபிபுல்லாவிடம் "தன்னைக் கலந்தாலோசிக்காமல், பூட்டை திறக்க உத்தரவு பிறப்பித்து அதைச் செயல்படுத்திய பிறகு தான் தனக்கு தெரியும்" என்று ராஜீவ் காந்தி கூறியதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது. ராஜீவ் காந்தியை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த அருண் நேரு பூட்டை திறக்க உத்தரவிட்டாரா? என்ற சர்ச்சை நீடித்த வேளையில், சில மாதங்கள் கழித்து அமைச்சரவையில் இருந்து அருண் நேருவை ராஜீவ் காந்தி நீக்கினார்.
மொத்தத்தில், தாத்தா ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் பூட்டப்பட்ட கதவுகள் பேரன் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டது என்பது அயோத்தி சர்ச்சையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும், உள்கட்சி எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் சங்கப் பரிவார் அமைப்புகள் எழுச்சி பெற்றன.
அரசியல் சதுரங்க விளையாட்டு
25-09-1985 முதல் 18-07-1987 வரை பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருந்த அருண் சிங், வெளியிடப்படாத தனிப்பட்ட காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், பதவி விலகலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் விவகாரம் காரணமல்ல என்றார். Bofors விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசிய ராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி அருண் சிங்குக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கார்கில் போரின் போது பா.ஜ.க. அரசின் சார்பில், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ஆலோசகராக அருண் சிங் நியமிக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகரும் உறவினருமான அருண் நேரு, Bofors ஒப்பந்தம் மற்றும் அயோத்தி விவகாரம் இரண்டிலும் சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் செயல்பட்டார். இதனால், ராஜீவ் காந்திக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டன. ராஜீவ் காந்தி அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக பணியாற்றி வந்த அருண் நேரு, அக்டோபர் 1986 இல் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
1985 இல் ஷா பானு தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரு வருட விவாதத்திற்கு பிறகு சர்ச்சைக்குரிய முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 மசோதாவை ராஜீவ் காந்தியின் அரசு நிறைவேற்றியது. இம்மசோதாவை எதிர்த்தும், ராஜீவ் காந்தியின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்தும், எரிசக்தித்துறை இணை அமைச்சராக இருந்த ஆரிப் முகமது கான் ராஜினாமா செய்தார்.
ராஜீவ் காந்தியின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்திய வி.சி.சுக்லா, 1987 இந்திய ஜனாதிபதி தேர்தலில் ராஜீவ் காந்தியின் வேட்பாளரான ஆர்.வெங்கடராமனை எதிர்த்து, ஜெயில் சிங்கை இரண்டாவது முறையாக போட்டியிடச் செய்து, காங்கிரஸைப் பிளவுபடுத்த முயற்சி செய்ததாக காங்கிரஸ் ஆதரவாளர்களால் குற்றம் சாட்டப்பட்டது.
பிரதமர் ராஜீவ் காந்தி மீது அதிருப்தியில் உள்ள சில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவருக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக கருதப்பட்ட வேளையில், 14-07-1987 அன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அருண் நேரு, ஆரிப் முகமது கான், வி.சி. சுக்லா ஆகிய மூன்று அதிருப்தியாளர்களை காங்கிரஸில் இருந்து ராஜீவ் காந்தி வெளியேற்றினார்.
ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பணியாற்றிய முப்தி முகமது சயீத், 1987 இல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ராஜீவ்-பாரூக் ஒப்பந்தத்தில் அதிருப்தி அடைந்து, தனது அமைச்சர் பதவி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இவருடன் சத்யபால் மாலிக் Bofors ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகினார்.
காங்கிரஸில் இருந்து அதிருப்தியாளர்களை வெளியேற்றுவது குறிப்பிடத்தக்க அரசியல் இயக்கமாக மாறி, ராஜீவ் காந்தியின் அரசியல் சூழலுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அவ்வகையில், Bofors ஊழல் வெடித்த காலகட்டத்தில் காங்கிரஸில் இருந்து சிலர் ராஜினாமா செய்தாலும், சிலர் நீக்கப்பட்டாலும், அவர்கள் அனைவரும் அரசியலில் தங்கள் இடங்களை தக்க வைத்துக் கொண்டனர். காங்கிரஸ் உறவை முறித்துக் கொண்ட அருண் நேரு, ஆரிப் முகமது கான், வி.சி.சுக்லா, முப்தி முகமது சயீத், சத்யபால் மாலிக் உள்ளிட்டோர் வி.பி.சிங் தலைமையில் ஒருங்கிணைந்து 1987 இல் ஜன் மோர்ச்சா கட்சியை தொடங்கினர். அதன் பிறகு, 1988 இல் ஜனதா கட்சி, லோக் தளம், ஜன் மோர்ச்சா கட்சிகளை இணைத்து வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டது.
1989 தேர்தல் முடிவை மாற்றிய Bofors
Bofors ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தி ஊழல் செய்ததாக ஆதாரம் இல்லாமல் பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்த பிரச்சாரங்கள், காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கையும், ராஜீவ் காந்தியின் Mr.Clean பிம்பத்தையும் அசைத்துப் பார்த்தது. இதையொட்டி, பீரங்கிகளை வாங்கியதில் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட Bofors ஊழல் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியது. இது 1989 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவை மாற்றியது மற்றும் பல தசாப்தங்களாக இந்திய அரசியலின் சரித்திரத்தையும் மாற்றியது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு Bofors ஊழல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் முதன்மைக் காரணமாக இருந்தது.
ஆட்சியமைத்த தேசிய முன்னணி
சென்னையில் அக்டோபர் 1988 இல் ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அசாம் கண பரிஷத், இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வி.பி.சிங், தேவி லால், என்.டி.ராமராவ், கலைஞர் போன்ற தலைவர்கள் ஒருங்கிணைந்து தேசிய முன்னணியை உருவாக்கினர். தேசிய முன்னணிக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என்.டி.ராமாராவ் தலைவராக, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பி.உபேந்திரா பொதுச் செயலாளராக, ஜனதா தளம் கட்சி தலைவர் வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றனர். தேசிய முன்னணி தலைவர்களுக்கு சமூக நீதியைப் பறைசாற்றும் மண்டல் ஆணையத்தின் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது முதன்மையான திட்டமாக இருந்தது. அவ்வகையில், தேசிய முன்னணியின் அரசியல் செயல்பாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. 1989 ஜனவரியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கலைஞர் தலைமையிலான தி.மு.க அவ்வெற்றியைத் தேசிய முன்னணியின் வெற்றி விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தது.
இதற்கிடையில், 1989 நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க மூன்றாவது அணியான தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமராக அமர்ந்தார். தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தோல்வியைத் தழுவினாலும், வி.பி.சிங் அமைச்சரவையில் தி.மு.க சார்பில் ராஜ்யசபா உறுப்பினரான முரசொலி மாறன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
Bofors ஊழலை அணுகிய முறையும், அதன் அரசியல் விளைவுகளும், தேசிய முன்னணியின் சார்பில் வி.பி.சிங் பிரதமரானதில் மிக முக்கியப் பங்கு வகித்தது. வி.பி.சிங் அரசு, வருங்காலத்தில் இந்தியா Bofors நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் செய்யாது என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், 22-01-1990 அன்று Bofors வழக்கில் சி.பி.ஐ FIR பதிவு செய்தது. அத்துடன், வி.பி.சிங் அரசால் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அருண் ஜெட்லி, Bofors ஊழல் தொடர்பான வழக்குகளை கையாண்டார். ஆனால், ராஜீவ் காந்தி மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக அவர் எந்த ஆதாரத்தையும் வெளிக்கொணரவில்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர்களுக்கு SPG பாதுகாப்பு இல்லை என்று கூறி, ராஜீவ் காந்தி உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்ட போதிலும், அவருக்கு வழங்கப்பட்ட SPG பாதுகாப்பை வி.பி.சிங் அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
மண்டல் ஆணையத்தின் அறிக்கைப்படி முதல் கட்டமாக வேலைகளில் 27% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் வி.பி.சிங் 07-08-1990 அன்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், சட்டமேதை அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி, அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கௌரவித்தது வி.பி.சிங் அரசு. அம்பேத்கரையும், பெரியாரையும் கொண்டாடும் ஆட்சியாக விளங்கிய வி.பி.சிங்கின் சமூக நீதி ஆட்சிக் காலகட்டத்தில், தலித் இயக்கம் புதிய ஆற்றலைப் பெற்றது என்றால் அது மிகையாகாது.
இதனிடையே, பிரதமர் வி.பி.சிங் அறிவித்த இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்ட ராம் ரத யாத்திரைக்குப் பா.ஜ.கவை சேர்ந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான அத்வானி ஏற்பாடு செய்தார். பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் வி.பி.சிங் ஆதரவுடன், 23-10-1990 அன்று ராம் ரத யாத்திரையை தடுத்து, பா.ஜ.க தலைவர் அத்வானியை சமஸ்திபூரில் கைது செய்தார். அதற்குப் பிறகு, வி.பி.சிங் அரசுக்கு வழங்கிய ஆதரவை பா.ஜ.க திரும்பப் பெற்றதால், 07-11-1990 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
வி.பி.சிங் ஆட்சி கவிழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன், பிரதமர் பதவியை நோக்கி கண் வைத்திருந்த சந்திரசேகர், 05-11-1990 அன்று ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை (ராஷ்ட்ரிய) தொடங்கினார். 10-11-1990 அன்று காங்கிரஸ் ஆதரவுடன், சந்திரசேகர் பிரதமராக அமர்ந்தார். பின்னர், சந்திரசேகர் அரசு ராஜீவ் காந்தியை "வேவு பார்ப்பதாக" குற்றம்சாட்டி, காங்கிரஸ் ஆதரவை வாபஸ் வாங்கியது. இதன் மூலம், 1991 இல் புதிய நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையெடுத்து, ராஜீவ் காந்தி இந்தியா முழுவதும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
ராஜீவ் காந்தி படுகொலை
இந்தியாவுக்குப் பீரங்கிகளை வாங்க ஆஸ்திரியா உள்ளிட்ட வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, 31-10-1984 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். 1984 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி, இந்தியாவுக்குப் பீரங்கிகளை வாங்க ஸ்வீடனுடன் ரூ.1,437 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஸ்வீடன் மற்றும் இந்திய அதிகாரிகள் பீரங்கி ஒப்பந்தத்தை உறுதி செய்ய குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஸ்வீடனுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முகவர்கள் ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட சூழலில், Bofors ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, 28-02-1986 அன்று ஸ்வீடன் பிரதமர் ஓலோப் பால்மே படுகொலை செய்யப்பட்டார்.
தி.மு.க. அரசின் வேண்டுகோளை மீறி, ஒரிசாவில் இருந்து ரகசியமாக சென்னைக்கு வந்திருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவின் படுகொலைக்கு பிறகு, தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு குலைந்துவிட்டதாக சுப்பிரமணியம் சுவாமி மற்றும் ஜெயலலிதா தரப்பினர் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து 30-01-1991 அன்று பிரதமர் சந்திரசேகர் தி.மு.க அரசைக் கலைத்தார். அந்நேரத்தில், வி.பி.சிங் அரசால் ராஜீவ் காந்திக்குரிய SPG பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை சந்திரசேகர் அரசும் தொடர்ந்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக, ராஜீவ் காந்தி 21-05-1991 அன்று மனித வெடிகுண்டு தாக்குதலில் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கிடையில், பத்மநாபா படுகொலையின் போது கலைஞர் டெல்லியில் இருந்ததும், ராஜீவ் காந்தி படுகொலையின் போது கலைஞர் ஆட்சியில் இல்லை என்பதும், தமிழ்நாடு குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விசாரணை கோணம்
காஷ்மீர் விடுதலை அமைப்பு, சீக்கிய விடுதலை அமைப்பு, அசாம் விடுதலை அமைப்பு, ஈழ விடுதலை அமைப்பு, நேபாளம் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து ஒருங்கிணைந்த அச்சுறுத்தலை ராஜீவ் காந்தி எதிர்கொண்டதாக ஜெயின் ஆணையத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியது. இதற்கிடையில், ராஜீவ் காந்தி படுகொலையில் விடுதலைப் புலிகளின் பங்கு குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டாலும், பொதுவாக, விடுதலைப் புலிகள் தங்களின் பல நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்பதாக ஒப்புக்கொள்ளும் நிலையில், ராஜீவ் காந்தி மரணம் ஒரு துன்பியல் சம்பவம் என்றும், அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர்கள் மறுத்தனர்.
மேலும், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், காணொளி ஆதாரங்களை சிதைத்ததாக சந்தேகிக்கப்பட்ட எம்.கே.நாராயணன், சர்வதேச செல்வாக்கு கொண்ட சாமியார் சந்திராசாமி (ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு பிரதமரான நரசிம்ம ராவுக்கு நெருக்கமானவர்), சவூதி அரேபியா ஆயுத வியாபாரி அட்னன் கஷோகி, ஸ்ரீபெரும்புதூர் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்த ஆர்.கே.ராகவன், மற்றும் ராஜீவ் காந்தியை ஓரங்கக்கட்ட எண்ணிய சுப்ரமணியசாமி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அவர்களிடம் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளைத் தாண்டி விசாரணை கோணம் நகரவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அதிகாரி கே.ரகோத்தமன் கூறியதும், பேரறிவாளனின் வாக்குமூலத்தை முறையாக பதிவு செய்யவில்லை என்று மற்றொரு விசாரணை அதிகாரி தியாகராஜன் கூறியதும் கவனிக்கத்தக்கது.
சீக்கியர்கள் கோரும் காலிஸ்தான் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய இந்திரா காந்தி படுகொலையும், தமிழர்கள் கோரும் தமிழீழப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய ராஜீவ் காந்தி படுகொலையும் இன்று வரை பயன்படுகிறது. அதே நேரத்தில், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய இருவரையும் படுகொலை செய்வதால் காலிஸ்தான் மற்றும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு அரசியல் ஆதாயம் இல்லாத நிலையில், அந்த போராளி இயக்கங்கள் இதனை 100% செய்திருக்கும் என முடிவு செய்ய முடியாது. போராளி குழுக்களின் ஆதரவின்றி, இந்திரா காந்தியை சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங் ஆகிய இரு சீக்கியர்களும், ராஜீவ் காந்தியை தனு என்ற ஈழத் தமிழச்சியும் "அறியப்படாத நபருக்காக" படுகொலைகளை செய்திருக்கலாம் என்றும் சர்வதேச ஆயுத வியாபாரம், வல்லரசுச் சதி, மற்றும் இந்துத்துவா அரசியல் ஆதாயம் ஆகியவை இந்த படுகொலைகளுக்கிடையே உள்ள இணைப்புப் புள்ளிகள் என அரசியல் விமர்சகர்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி மற்றும் அவர்களது நெருங்கிய நண்பரான ஓலோப் பால்மே ஆகியோரின் மூன்று படுகொலைகளுக்கும் ஆயுத வியாபாரத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ள ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணை, விரிவான ஆய்வு மற்றும் அலசல்களுக்கு உட்பட்டதாக உள்ளது. எனவே, விசாரணைக் குழு வெற்றிகரமாக உண்மையை வெளிப்படுத்தியதா? அல்லது அவ்வாறு செய்யத் தவறியதா? என்ற கேள்வி இன்றும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது.
சித்ரா சுப்ரமணியம்
புகழ்பெற்ற பிராமண குடும்பத்தைச் சேர்ந்த சித்ரா சுப்பிரமணியம், நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமனின் உறவினர் (Grand-niece) மற்றும் Rice ராமையாவின் பேத்தி ஆவார். அவரது கொள்ளு தாத்தா வி.சுப்பிரமணியம், நான்காம் கிருஷ்ண ராஜா உடையாரின் அரச ஆலோசகராக பணியாற்றியவர். இந்துஸ்தானி இசை மற்றும் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற சித்ரா சுப்பிரமணியம், 1979 இல் India Today இதழில் நிருபராக தனது ஊடக பணியை ஆரம்பித்தார். 1983 இல் சுவிட்சர்லாந்துக்கு இடம் பெயர்ந்த சித்ரா சுப்பிரமணியம், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிருபராக பணியாற்றி, The Hindu உட்பட பல பத்திரிகைகளுக்கு செய்திகளை எழுதி வந்தார்.
16-04-1987 அன்று ஒரு அநாமதேய நபர் ஸ்வீடன் வானொலியில் "இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததன் மூலம் ஸ்வீடனுக்கு Bofors பீரங்கி ஒப்பந்தம் சாத்தியமானது" என்று குற்றம் சாட்டினார். ஸ்வீடன் வானொலியில் ஒலிபரப்பான Bofors செய்தி இந்திய மக்களின் காதுகளை எட்டும் முன்பே, ஐரோப்பாவில் வசித்த இந்திய பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியத்தின் காதுகளுக்கு எட்டியது. அதன் பிறகு, ஸ்வீடன் வானொலியில் பேசிய அநாமதேய நபரை தொடர்பு கொண்டு, Bofors பீரங்கி ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை திரட்டிய சித்ரா சுப்ரமணியம், 09-10-1989 அன்று ஆசிரியர் என்.ராமுடன் இணைந்து The Hindu பத்திரிகையில் Bofors ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக முதன்முதலில் எழுதினார். இதற்குப் பிறகு, மற்ற ஊடகங்களும் Bofors செய்திக்கு கவனம் செலுத்தத் தொடங்கின.
பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம், தொடக்கத்தில் The Hindu ஆசிரியர் என்.ராமுடன் இணைந்து Bofors பற்றி புலனாய்வு செய்தார். அவர்கள் மூன்று பகுதி கட்டுரையின் முதல் பகுதியை இணைந்து வெளியிட்டனர். ஆனால், Bofors ஊழல் குறித்த இரண்டாம் பகுதி கட்டுரையை The Hindu நிறுவனர் ஜி.கஸ்தூரி வெளியிட அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஜி.கஸ்தூரி தன்னிச்சையாக செயல்பட்டு பத்திரிகை நெறிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக பகிரங்கமாக விமர்சித்த என்.ராம், ஜி.கஸ்தூரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ஆனால் சாதகமான தீர்ப்பை பெறவில்லை.
இதற்கிடையில், Bofors குறித்து The Hindu வெளியிடுவதை நிறுத்திய பிறகு, Bofors ஒப்பந்தம் குறித்து ஸ்வீடன் வானொலியில் பேசிய அநாமதேய நபரின் ரகசிய விவரங்களை டெல்லி அரசியல் வட்டாரத்தில் The Hindu "தலைமை" பகிர்ந்ததாக சித்ரா சுப்ரமணியம் குற்றம் சாட்டினார். இதன் பிறகு, என்.ராம் சம்மதத்துடன், சித்ரா சுப்ரமணியம் The Indian Express மற்றும் The Statesman நாளிதழில் எழுதத் தொடங்கினார். மேலும், The Indian Express அதிபர் ராம்நாத் கோயங்கா ஆதரவில், பொருளாதார நிபுணர் அருண் ஷோரி, வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி உள்ளிட்ட பலர் Bofors விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை இணைத்து விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
26/11 தாக்குதலின் போது, தொலைக்காட்சிகள் மும்பையின் நிலைமையை நேரலையில் ஒளிபரப்பினார்கள். இது நிகழ்நேர தகவல்களை வழங்கி பயங்கரவாதிகள் மேலும் தாக்குவதற்கு உதவியதாக விமர்சிக்கப்பட்டது. அதே போல், Bofors குறித்து சித்ரா சுப்ரமணியம் எழுதிய ஊடகக் கட்டுரைகள், Bofors விசாரணையை குறைமதிப்புக்கு உட்படுத்தியதாகவும், அவர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை நிலைநிறுத்தும் முயற்சியில் Bofors தலைப்பில் ஊடக விசாரணை (Media Trial) செய்வதாகவும், "சொல்லப்படுகிறது, கூறப்படுகிறது, கிசுகிசுக்கப்படுகிறது, இது அல்லது அது" என்று பொருள்பட எழுதுவதாகவும் விமர்சிக்கப்பட்டார்.
சித்ரா சுப்ரமணியத்தின் ஊடக கட்டுரைகள், 1989 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் காங்கிரஸுக்கு எதிரான பரப்புரைக்கான ஆதாரமாக பயன்படுத்தப்பட்டன. Bofors ஊழலில் பணம் பெற்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துவதில் சித்ரா சுப்ரமணியம் உண்மையில் கவனம் செலுத்தியிருந்தால், 1989 நாடாளுமன்ற தேர்தலில் ராஜீவ் காந்தி தோல்வியடைந்த பிறகு, அவர் தனது புலனாய்வைத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக, அவர் ராஜீவ் காந்தியை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதில் அதிக ஆர்வம் காட்டியதோடு, ராஜீவ் காந்தி தோல்வி அடைந்த பிறகு Bofors புலனாய்வை படிப்படியாக குறைத்து கொண்டார்.
Bofors ஊழல் நடந்ததா? என்பதை நிரூபிக்க முயற்சிக்காமல், தேர்தலின் போக்கை மாற்றவும், தனது ஊடக வாழ்க்கையை நிறுவவும் Bofors கதையை விவரித்த சித்ரா சுப்ரமணியம், காங்கிரஸ் சம்பந்தப்பட்ட புலனாய்வுக் கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமாக இருந்தார், ஆனால் பா.ஜ.கவை குறிவைத்து புலனாய்வுத் கட்டுரைகள் எழுதுவதில் விருப்பம் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால், பா.ஜ.கவின் சர்ச்சைக்குரிய Rafale ஒப்பந்தத்தை சித்ரா சுப்ரமணியம் ஆதரித்து எழுதியுள்ளார். அவரது இந்த போக்கு யதார்த்தமாக அமைந்திருக்கவில்லை, ஏனெனில் வலதுசாரியான RSS ஆதரவாளராக அறியப்படும் சித்ரா சுப்ரமணியனின் ஊடகத் தர்மம் ஆய்வுக்குரியது.
சித்ரா சுப்ரமணியன், Bofors பற்றி எழுதிய கட்டுரைகள் விசாரணைக்கு பலனளிக்காத போதிலும், அவை அவரை பிரபலமாக்கின. 2014 இல் பத்திரிகையாளர்கள் விக்னேஷ் வெள்ளூர் மற்றும் தன்யா ராஜேந்திரன் தொடங்கிய The News Minute என்ற இணைய பத்திரிகையின் இணை நிறுவனராக அவர் பணியாற்றத் தொடங்கினார். மேலும், வலதுசாரி பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி நிர்வகிக்கின்ற Republic TV ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம்
அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய Bofors வழக்கை விசாரித்த ஸ்வீடன் காவல்துறை முன்னாள் இயக்குநர் ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் (Sten Lindstrom), சித்ரா சுப்ரமணியத்துடன் தொடர்பில் இருந்தவர் என்றும், ஸ்வீடன் வானொலியில் பேசிய அநாமதேய நபர் என்பதும் 2012 இல் வெளியானது.
1990 இல் இந்திய புலனாய்வாளர்கள் குழுவை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது, அமிதாப் பச்சன் உட்பட சிலரை விசாரிக்கச் சொல்லி ஒரு பட்டியலை இந்திய புலனாய்வாளர்கள் தன்னிடம் வழங்கியதாக ஸ்டென் லிண்ட்ஸ்ட்ரோம் கூறினார். இந்த பின்னணியில், Dagens Nyheter செய்தித்தாளில் இந்திய புலனாய்வாளர்கள் பச்சன் குடும்பத்தை Bofors ஊழலுடன் பொய்யாக இணைத்து பேசினார்கள் எனும் கருத்தையும் ஸ்டென் லிண்ட்ஸ்ட்ரோம் தெரிவித்தார். மேலும், ராஜீவ் காந்தி எந்த தவறும் செய்யவில்லை என்றும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ஊழலில் ஈடுபடவில்லை என்றும், மாறாக ஸ்வீடன் அரசு, வளர்ச்சி திட்டத்திற்கான நிதியை விதிகளை மீறி ஒப்பந்தத்திற்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய ஸ்டென் லிண்ட்ஸ்ட்ரோம் விசாரணையின் தீவிரத்தை இந்திய புலனாய்வாளர்கள் சேதப்படுத்தியதாகவும், அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் உண்மைக்கு புறம்பாக சேறு பூசினார்கள் என்று 2012 இல் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஸ்வீடன் அரசியல்வாதிகள், ஸ்வீடன் அதிகாரிகள் மூலம் Bofors ஒப்பந்தம் பற்றிய போலியான குற்றச்சாட்டுகளை பரப்பி, ஓலோப் பால்மேயை பதவியில் இருந்து நீக்க முயன்றனர் என்று ஓலோப் பால்மேயின் ஆதரவாளர்கள் கூறினர். அதே நேரத்தில், நிதி சிக்கலில் இருந்த பிரதமர் ஓலோப் பால்மே, Bofors நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து விதிமுறைகளை மீறிய ஆயுத விற்பனைக்கு துணைபுரிந்து ஊழலில் ஈடுபட்டதாக ஸ்வீடன் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
Bofors நிறுவனமும் ஸ்வீடன் அரசியலும்
ஸ்வீடன் அரசியல் தலைவர்களின் ஆதரவுடன், அரசு விதிமுறைகளை புறக்கணித்து Bofors நிறுவனம் மற்றும் Nobel Kemi துணை நிறுவனம் ஆயுத விற்பனையை மேற்கொண்டதாக எழுந்த குற்றசாட்டுகள் 1980 களின் பிற்பகுதியில் ஸ்வீடனில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கின. வளைகுடாவில் Bofors நிறுவனத்தின் சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்பான ரகசிய ஆவணங்களை ஸ்வீடிஷ் அமைதி மற்றும் நடுவர் சங்கத்திற்கு அளித்து, ஸ்வீடனில் Bofors ஊழலை விசாரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் Bofors பொறியாளர் இங்வார் பிராட் (Ingvar Brat) என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான், ஈராக், சிரியா, எகிப்து, பர்மா, ஓமன், பஹ்ரைன், துபாய், தாய்லாந்து, இந்தியா, தைவான், கிழக்கு ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு விதிமுறைகளை மீறி ஆயுத விற்பனைகள் நடைபெற்றதாக விசாரணைகள் நடந்த போதிலும், ஆயுத விற்பனை மேலாளர் மற்றும் ஆயுத வியாபாரி ஆகிய இரு நபர்கள் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டனர். இந்த ஊழல்கள் ஸ்வீடன் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி, கடுமையான ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்தன. அத்துடன், ஸ்வீடன் ஆயுத ஊழல் தொடர்பான பிரச்சாரம் 1988 இல் நடைபெற்ற தேர்தலில், அணு சக்தி எதிர்ப்பு இயக்கமான பசுமைக் கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பெற உதவியது.
மேலும், பிரதமர் ராஜீவ் காந்திக்கு தர்மசங்கடம் ஏற்படுவதற்கான வாய்ப்பை தவிர்க்க, இந்திய அதிகாரிகள் தொடர்பான Bofors புகார்களை விசாரிக்காது இருப்பதாக ஸ்வீடன் அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், ராஜீவ் காந்தி இந்த ஊழலில் ஈடுபட்டதாக ஸ்வீடன் விசாரணையில் குறிப்பிடப்படவில்லை. முக்கியமாக, இந்திய அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் குற்றவியல் சான்றோடு நிரூபிக்கப்படவில்லை. மொத்தத்தில், ஸ்வீடனுக்குள் இருந்த ஊழல் விவகாரம் இந்தியாவுக்கும் கொண்டு வரப்பட, Bofors ஊழல் விவகாரத்தில் ராஜீவ் காந்தியை பலியாக்கி, ஊடக பிரச்சாரத்தின் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தை பா.ஜ.க தங்கள் வளர்ச்சிக்காக வலுவாக பயன்படுத்திக் கொண்டது.
இந்தியாவுக்கு முன்பே ஸ்வீடனில் கிளம்பிய Bofors ஊழல் விவகாரம் என்பது "ஓலோப் பால்மே படுகொலைக்கு தொடர்பான ஆயுத வியாபார இணைப்பையும், ஸ்வீடனில் ஆராய்ச்சி நிறுவனங்களின் வளர்ச்சியையும்" உள்ளடக்கியதாக உள்ளது. இதற்கிடையில், ஸ்வீடனின் Bofors / Nobel Kemi தொடர்பான ஆயுத விற்பனை குறித்த விசாரணை, அமெரிக்காவின் CIA கவனத்தையும் ஈர்த்தது. "Sweden's Bofors Arms Scandal" என்று தலைப்பிட்ட CIA அறிக்கையின் நகல் விவரணைகள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
Bofors விவகாரத்துக்குப் பிறகு
நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத Bofors ஊழலின் ஒரே முகமாக ராஜீவ் காந்தியைக் குற்றம் சாட்டி, பல அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயம் அடைந்தனர். Bofors ஊழல் வெடித்த போது, வி.பி. சிங், அருண் நேரு, வி.சி.சுக்லா, கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி உள்ளிட்ட பலர் முரண்பட்ட தகவல்களைப் பகிர்ந்தனர். குறிப்பாக, வி.பி. சிங் சமூக நீதியை நிலைநாட்டியவர் என்றாலும், பிரதமர் ராஜீவ் காந்தியை கலந்தாலோசிக்காமல் மேற்கொண்ட நடவடிக்கைகள், பிளவுகளை உருவாக்கி கட்சி ஒற்றுமையை குலைத்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தின.
Bofors ஊழல் குறித்து பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தால் 1989 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த தோல்வி, இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு, 33 ஆண்டுகளில் காங்கிரஸ் 15 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தது. குறிப்பாக, ராஜீவ் காந்திக்கு பிறகு, நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமர் பதவியை அலங்கரிக்க இயலவில்லை. மேலும், 1989 முதல் தேசிய அரசியலில் எதிர்நீச்சல் போட, தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது அவசியமாகி விட்டது. இதன் மூலம், இந்திய ஒன்றியம் கூட்டணி அரசியல் யுகத்தில் நுழைந்தது.
1957 முதல் சட்டமன்ற உறுப்பினர், ஆந்திர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய நரசிம்ம ராவ், ஒரு கட்டத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர், மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பிய நரசிம்ம ராவ், 1991 இல் பிரதமராக பதவியேற்றார். நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில், பொதுவுடைமை (Socialism) கொள்கையைத் தாண்டி, தாராளமயமாக்கல் (Liberalism) யுகத்தில் இந்தியா நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், Bofors ஊழல் மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, 1989 முதல் 1999 வரை இந்தியா 7 வெவ்வேறு பிரதமர்களை கண்டது, இது அந்த காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பை பாதித்த தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
வாஜ்பாயின் அரசியல்
1984 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும், வாஜ்பாய் மற்றும் அத்வானி இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இணைந்து ஆதாரமற்ற Bofors ஊழலுக்கு எதிராக செய்த பிரச்சாரத்தின் மூலம், 1989 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 85 இடங்களை வென்றது. இவ்வாறு, காங்கிரசுக்கு எதிரான Bofors பிரச்சாரத்தை பயன்படுத்தி வளர தொடங்கிய பா.ஜ.க, முந்தைய 85 தொகுதிகளை விட கூடுதலாக 1991 நாடாளுமன்றத் தேர்தலில் 120 இடங்களை வென்றது. தேர்தல் அரசியலில் தங்களை மெல்ல நிலைநாட்டிய பா.ஜ.கவும், அதை சார்ந்த இந்துத்துவா அமைப்புகளும், திட்டமிட்டு சமூக நீதி காவலர் அம்பேத்கரின் நினைவு நாளான 06-12-1992 அன்று பாபர் மசூதியை இடித்து, தங்களின் உண்மையான தீவிரவாத முகத்தை வெளிப்படுத்தின. மேலும், Bofors மற்றும் அயோத்தி விவகாரங்கள் மூலம் அரசியலில் வளர்ந்த வாஜ்பாய், பா.ஜ.கவின் சார்பில் 1999 முதல் 2004 வரை பிரதமராகப் பதவி வகித்தார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், Bofors தொடர்பான முதல் குற்றப்பத்திரிகை 22-10-1999 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
Bofors ஊழலுக்கு ராஜீவ் காந்தி அரசு தான் காரணம் என்று குற்றம் சாட்டிய தலைமை கணக்குத் தணிக்கையாளர் டி.என். சதுர்வேதி, வாஜ்பாயின் அழைப்பின் பேரில் 1991 இல் பா.ஜ.கவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, பா.ஜ.க ஆதரவில் 1992 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இரு முறை ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் (2002-2007) கர்நாடக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். 18-04-1987 முதல் 03-12-1989 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணா சந்திரா பந்த், திட்டக்குழு ஆணையத்தின் 23 வது துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் Bofors விசாரணை குழுவின் அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிய அருண் ஜெட்லி, பா.ஜ.க கட்சியில் மெல்ல வளர்ந்து, பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல், வணிகம், தொழில் மற்றும் சட்டம் போன்ற பல முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை வகித்தார். வி.பி. சிங்கின் கல்லூரி நண்பரான, வி.பி. சிங்கின் பதவிக்காலத்தில் வருவாய்த்துறை செயலாளராகவும், அமைச்சரவை செயலாளராகவும் பணியாற்றிய வினோத் பாண்டே, பீகார், ஜார்கண்ட் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநராக வாஜ்பாயின் பா.ஜ.க அரசால் பல்வேறு ஆண்டுகளில் நியமிக்கப்பட்டார்.
Bofors ஒப்பந்தத்தின் மூலம் ராஜீவ் காந்தி லஞ்சம் வாங்கியதாக பட்டித்தொட்டி எங்கும் வாஜ்பாய் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், அதே Bofors ஊழலில் சிக்கிய இந்துஜா சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுவதைத் தவிர்த்தது, வாஜ்பாயின் பாராமுகத்தை காட்டியது. இத்தகைய சூழலில், மே 1998 இல் சக்தி நடவடிக்கை (Operation Shakti) அல்லது பொக்ரான்-II (Pokharan-II) என்ற பெயரில் பிரதமர் வாஜ்பாய் அணுகுண்டு சோதனையை நடத்திய பிறகு, ஜூன் 1998 இல் பிரதமர் வாஜ்பாயின் முதன்மைச் செயலாளரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான பிரஜேஷ் மிஸ்ரா, இந்துஜா சகோதரர்களுடன் பிரிட்டிஷ் பிரதமரை சந்தித்தது சர்ச்சையானது. இது வாஜ்பாயிக்கும் இந்துஜா வணிக சாம்ராஜ்யத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தியது.
பா.ஜ.கவின் Tehelka ஊழல்
இந்தியாவைச் சேர்ந்த Tehelka இதழ் நடத்திய Operation West End நடவடிக்கை, வாஜ்பாயின் தலைமையிலான பா.ஜ.க அரசின் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தங்களில் மேற்கொள்ளப்படும் மோசடிகளை வெளிக்கொணர்ந்தது. Tehelka இதழ், லண்டனை தலைமையிடமாகக் கொண்டு, West End International என்ற பெயரில் போலி உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கியது. பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க தலைவர்களிடம் இந்திய அரசுக்கு கையடக்கமான உளவு புகைப்பட கருவிகளை (Spy Camera) விற்பனை செய்ய சிபாரிசு செய்யுமாறு அந்த நிறுவனம் கேட்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பா.ஜ.க தேசியத் தலைவர் பங்காரு இலட்சுமணன் அந்த போலி நிறுவனத்திடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெறும் போது மறைவாக காணொளியில் படம் பிடிக்கப்பட்டார்.
Tehelka ஊழல் வழக்கில், 2012 இல் பங்காரு இலட்சுமணன் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளானார். ஜாமீனில் வெளிய வந்த பிறகு, உடல்நலக்கோளாறு காரணமாக 2014 இல் காலமானார்.
பா.ஜ.கவின் Rafale ஊழல்
2007 இல் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் போர் விமானங்களைப் பெறுவதற்கான டெண்டர்களை அறிவித்தது. 2008 இல் Medium Multi-Role Combat Aircraft (MMRCA) என்ற பெயரில், போர் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ரூ.55,000 கோடியை ஒதுக்கியது. இது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக மாறியது. 2012 இல் பிரான்சை சேர்ந்த Dassault Aviation நிறுவனத்திடம் 126 Rafale போர் விமானங்களை பெறுவதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. இதில், 108 Rafale போர் விமானங்களை இந்திய அரசின் Hindustan Aeronautical Limited (HAL) நிறுவனத்தை உள்ளூர் பங்குதாரராக கொண்டு உருவாக்க திட்டமிடப்பட்டது. 2014 இல் HAL மற்றும் Dassault Aviation இடையே 108 உள்ளூர் மற்றும் 18 நேரடி Rafale போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இந்நிலையில், 28-03-2015 அன்று பாதுகாப்பு தொழிலில் அனுபவமில்லாத அனில் அம்பானியின் Reliance குழுமம் Reliance Defence Limited (DRL) என்ற நிறுவனத்தை தொடங்கியது. இந்த சூழலில், 10-04-2015 அன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசின் முந்தைய ஒப்பந்த விவரங்களை மாற்றி, 36 Rafale விமானங்கள் பிரான்சில் தயாரிக்கப்படும் என்று பாரீசில் அறிவித்தார். HAL நிறுவனத்திற்கு பதிலாக, அனில் அம்பானியின் DRL நிறுவனம் Dassault Aviation நிறுவனத்தின் உள்ளூர் பங்குதாரராக தேர்வு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, Dassault Aviation மற்றும் DRL இணைந்து 51:49 என்ற பங்கு பகிர்வில் Dassault Reliance Aerospace Limited (DRAL) என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
இதன் பின்னணியில், 13-04-2015 அன்று அனில் அம்பானியின் Reliance நிறுவனம் பிரான்சுக்கு செலுத்த வேண்டிய EUR 151 மில்லியன் வரி பாக்கியில் EUR 143.7 மில்லியன் வரி ரத்து செய்யப்பட்டது; EUR 7.3 மில்லியன் மட்டுமே பெற்றுக் கொண்டு பிரான்ஸ் அரசு கணக்கை தீர்த்தது. HAL என்ற அரசு நிறுவனத்தை நீக்கி, அனில் அம்பானிக்கு சொந்தமான DRL என்ற தனியார் நிறுவனத்தை கூட்டாளியாக தேர்வு செய்த மோடி அரசு, ஒரு Rafale போர் விமானத்தின் அடிப்படை விலை ரூ.670 கோடி எனக் கணக்கீட்டில், ரூ.24,170 கோடிக்கு பதிலாக, இரண்டு மடங்கு கூடுதலாக ரூ.60,000 கோடிக்கு வாங்கியுள்ளது. இதற்கு, மோடி அரசு பல்வேறு காரணங்களை கூறினாலும், அனில் அம்பானியை திவால் ஆகாமல் காப்பாற்ற ரூ.30,000 கோடி வழங்குவது மற்றும் வரி பாக்கிகளை தளர்த்துவது தான் "மறைந்திருக்கும் காரணங்கள்" என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், 2018 இல் Rafale ஊழல் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, சட்டப் பிரிவு 32 இன் கீழ் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே (Limited Power) உள்ளது என்று வலியுறுத்தியது. மேலும், பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகள் Rafale குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள போதிலும், Rafale வழக்கு பிரான்சின் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியல் உலகில் ஆதாரமற்ற, நீதிமன்றத்தால் யாருமே தண்டிக்கப்படாத Bofors வழக்கு ஒரு அரசியல் பழமொழியாக மாறிவிட்ட சூழலில், பா.ஜ.கவின் முகத்தை கிழிக்கும் விதமாக நிரூபிக்கப்பட்ட Tehelka ஊழலும், நிலுவையில் உள்ள Rafale ஊழலும் அரசியல் ஊடங்களில் பேசுபொருளாக மாறாமல் போனது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும்.
நிரூபிக்கப்படாத Bofors குற்றச்சாட்டு
Bofors நிறுவனத்துடன் ஆயுத ஒப்பந்தத்தை முடிக்க ராஜீவ் காந்தி தரப்பு ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 04-02-2004 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் ராஜீவ் காந்திக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பளித்தது. மேலும், 04-03-2011 அன்று குவாட்ரோச்சி மீதான வழக்கை தொடர்வதில் அர்த்தமில்லை எனக் கூறி சி.பி.ஐ வழக்கை வாபஸ் பெறக்கோரி மனு தாக்கல் செய்தபோது, டெல்லி உயர் நீதிமன்றம் குவாட்ரோச்சியை Bofors வழக்கிலிருந்து விடுவித்தது. ரூ.250 கோடி செலவாகிய இந்த வழக்கில் இனிமேலும் கூடுதல் நிதி செலவிட முடியாது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. இதற்கிடையில், 2017 அக்டோபரில் வலதுசாரி ஊடகமான Republic TV இல் மைக்கேல் ஹெர்ஷ்மேனின் நேர்காணலை மேற்கோளாக மேற்கொண்டு, Bofors வழக்கை மறுஆய்வு கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தாமதத்திற்கு வழங்கப்பட்ட காரணங்களை ஏற்க முடியாது என 02-11-2018 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒட்டுமொத்தமாக, காங்கிரஸ் அல்லாத அரசுகளும், குறிப்பாக பா.ஜ.க, Bofors ஊழலில் யாரையும் குற்றவாளியாக்க முடியவில்லை என்பதும், எந்தவொரு குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகத் தெரிய வருகிறது.
அரசியல் உலகில், யூகத்தின் அடிப்படையில் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறல்ல. ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரின் கடமையாக இருக்க வேண்டும். காரணம், குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்காமல் வெறும் பிரச்சாரத்தின் அடிப்படையில் உண்மையாகக் கருத முடியாது. அப்படி உண்மையென மக்களை நம்ப வைப்பது, சட்ட அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும்.
மொத்தத்தில், Bofors ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தி அரசில் யாரும் தவறு செய்யவில்லை என்றும், ராஜீவ் காந்தியின் Mr.Clean அரசியல் பிம்பத்தைக் கெடுக்க பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களால் புனையப்பட்ட கதை என்றும், இன்று வரை நிரூபிக்கப்படாத Bofors ஊழலைச் சுற்றியுள்ள அரசியலை இரண்டு அடிப்படைகளில் அணுகலாம். இன்னும் சொல்லப்போனால், பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், கட்சியின் வரலாறு மற்றும் வளர்ச்சி (History and Development of BJP) என்ற பிரிவில் Bofors வழக்கில் பா.ஜ.க ஏற்படுத்திய தாக்கத்தை குறிப்பிடுகிறது. இதன்மூலம், Bofors சர்ச்சை பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களித்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
// பா.ஜ.க இணையதளத்தில் உள்ள பதிவின் சுருக்கம் //👇
1989 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரத்தில் Bofors ஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்தது. 1989 தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே இருந்தன. 1984 இல் பா.ஜ.கவுக்கு 2 இடங்கள் கிடைத்திருந்த நிலையில், 1989 இல் அதன் தொகை 85 ஆக உயர்ந்தது, மேலும் ராஜீவ் காந்தி அரசும் வீழ்ந்தது. இந்த தேர்தலில் அத்வானி முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு (Lok Sabha) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முடிவுரை
ஆதாரம் இல்லாமல், எதிர்கட்சிகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட Bofors ஊழல் பிரச்சாரத்தால் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் வெற்றியை இழந்தது. பா.ஜ.கவாலும் ஊடகங்களாலும் மிகைப்படுத்தப்பட்ட Bofors ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. 1980 களில் இருந்து, காங்கிரஸ் தலைமையை சுற்றி ஆதாரமற்ற ஊழல் கதைகளைப் பரப்பி, பா.ஜ.க அரசியல் செல்வாக்கு பெற்று வருகிறது.
உதாரணமாக, 2 G அலைக்கற்றை வழக்கை பா.ஜ.க மற்றும் ஊடகங்கள் தரப்பு காங்கிரஸ் மற்றும் தி.மு.கவுக்கு எதிரான கருவியாகப் பயன்படுத்தின. இதன் மூலம், தேர்தல் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதியில், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இது இந்திய அரசியலில் ஊடகம் மற்றும் பா.ஜ.கவின் அரசியல் அறம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. மொத்தத்தில், எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதை ஊடகங்களில் மிகைப்படுத்தி, பா.ஜ.க பெற்ற வெற்றிகள் இந்திய அரசியல் சூழலை விளக்குகின்றன.
பின்னிணைப்பு
ரூ.1,437 கோடி மதிப்பிலான Bofors ஒப்பந்தம், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், ஸ்வீடனின் Bofors நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது. ராஜீவ் காந்தி குழுவினர் Bofors நிறுவனத்திடம் இருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மொத்த ஒப்பந்தத் தொகை கணக்கீட்டின்படி ரூ.64 கோடி (4.5%) லஞ்சமாகப் பெறப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மொத்த ஒப்பந்தத் தொகை கணக்கீட்டின்படி ரூ.250 கோடி (17.5%) விசாரணைக்காக செலவிடப்பட்டது. ஆனால், இறுதியில் இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்ட Bofors வழக்கில், உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சி.பி.ஐ தவறியதால், யாருக்கும் தண்டனை விதிக்கப்படவில்லை என்று நீதிமன்ற தீர்ப்புகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு, இந்த வழக்கின் முக்கியமான நான்கு நீதிமன்ற தீர்ப்புகளின் சுருக்கம் (Key Points) பதிவிடப்படுகிறது.
Kartongen Kemi Och Forvaltning AB vs State through CBI (2004)
இந்திய அரசை ஏமாற்றுவதற்காக Bofors நிறுவனத்துடன் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அரசு ஊழியர்கள் விடுவிக்கப்படுகின்றனர். அத்துடன், Bofors ஒப்பந்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட லஞ்சம், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்படுகின்றன. இருப்பினும், ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் முகவர்கள் ஒழிக்கப்பட்டதால் Bofors ஆயுதம் தரத்தில் சிறந்தது, விலை மலிவானது என்று இந்திய அரசை தவறாக வழிநடத்தி நிதி இழப்பை ஏற்படுத்தியதாக, பிரிவு 120 பி (சதி) மற்றும் பிரிவு 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் இந்துஜா சகோதரர்கள் மற்றும் அரசிடம் போலி ஆவணங்களை சமர்பித்ததாக, பிரிவு 465 (போலி ஆவணம்) இன் கீழ் Bofors தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ தீர விசாரித்து சமர்பிக்க வேண்டும்.
மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை Bofors சதித்திட்டத்துடன் நேரடியாக தொடர்புபடுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், Bofors குற்றச்சாட்டுகளில் இருந்து ராஜீவ் காந்தி விலக்கப்படுகின்றார். இந்த வழக்கு தற்போது விரைவான நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்களுடன் மேலதிக விசாரணைக்காக தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றப்படுகின்றது.
Srichand P. Hinduja vs CBI (2005)
நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்ட விசாரணை தொடர்பாக, இந்துஜா சகோதரர்கள் மற்றும் Bofors நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ததில், அரசு தரப்பில் சி.பி.ஐ மூலம் அசல் ஆவணங்களை முன்வைக்கவோ அல்லது மோசடி குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவோ தவறியுள்ளதென்பது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, பிரிவு 120 பி (சதி) மற்றும் பிரிவு 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் இந்துஜா சகோதரர்கள் மற்றும் பிரிவு 465 (போலி ஆவணம்) எனும் பிரிவின் கீழ் Bofors நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை நிலைநாட்டுவது சாத்தியமற்றது. எனவே, விசாரணையின் தவறான நடைமுறை மற்றும் ஆதாரங்களின் பற்றாக்குறை அடிப்படையில், இந்துஜா சகோதரர்கள் மற்றும் Bofors நிறுவனத்திற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்பட்டு, வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்த வழக்கில், 14 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் போது ரூ.250 கோடி பொது நிதி வீணடிக்கப்பட்டது. ஊடகங்களின் வழி பெரும் பொய் பிரச்சாரம் உருவாகியிருந்தாலும், அது நீதிமன்றத்தில் பொய் என நிரூபிக்கப்பட்டது. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மன உளைச்சலும், தொழில்முறை பாதிப்பும் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் மிக கடுமையான முறையில் கண்டிக்கப்படுகின்றன.
CBI vs Ottavio Quattrocchi (2011)
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 19 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், வழக்கில் இணை குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் இறந்துவிட்டனர் அல்லது பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும், மலேசியா மற்றும் அர்ஜென்டினா நாடுகளிலிருந்து ஒட்டாவியோ குவாட்ரோச்சியை அழைத்து வருவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ள சூழலில், ஒட்டாவியோ குவாட்ரோச்சிக்கு எதிரான வழக்கை கைவிடுவதற்கு சி.பி.ஐயின் சிறப்பு வழக்கறிஞர் பரிந்துரைத்துள்ளார்.
நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்ட விசாரணை தொடர்பாக, மலேசியா மற்றும் அர்ஜென்டினா நீதிமன்றங்கள் Bofors வழக்கு அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டதாக கூறி, ஒட்டாவியோ குவாட்ரோச்சியின் நாடு கடத்தலை நிராகரித்துள்ளதாக அறியப்படுகிறது. மேலும், விசாரணைக்கு எந்த சட்டபூர்வமான ஆதாரங்களும் இல்லாததையும், பொது நலனைக் கருத்தில் கொண்டும், சி.பி.ஐயின் பரிந்துரையை ஏற்று, ஒட்டாவியோ குவாட்ரோச்சியை இந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவிக்கின்றது.
CBI vs Srichand P. Hinduja (2018)
சிறப்பு விடுப்பு மனுவை (Special Leave Petition - SLP) தாக்கல் செய்ய 4,522 நாட்கள் தாமதம் ஏற்பட்டதற்கு மனுதாரர் அளித்த காரணங்கள் திருப்திகரமாக இல்லாததுடன், ஏற்கனவே வழக்கறிஞர் அஜய் அகர்வால் தாக்கல் செய்த மற்றொரு மேல்முறையீட்டில் சி.பி.ஐ ஒரு தரப்பாக இருப்பதை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த தனி மனுவை விசாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்கிறது. எனவே, சிறப்பு விடுப்பு மனு தொடர்புடைய விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
பின்குறிப்பு = 08-05-2019 அன்று, நீதிமன்ற அனுமதியின்றி, தேவைப்பட்டால் வழக்கை மேலும் விசாரிக்க சி.பி.ஐக்கு சுதந்திரமான உரிமை உள்ளது என டெல்லி நீதிமன்றம் குறிப்பிட்டது. அதனையொட்டி, 16-05-2019 அன்று, பிரிவு 173(8) இன் கீழ் மேலதிக விசாரணை மேற்கொள்வதற்கான முடிவை தெரிவித்துவிட்டு, Bofors வழக்கு தொடர்பாக நிலுவையில் உள்ள விசாரணை மனுவை டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ வாபஸ் பெற்றது. இதோடு, வழக்கறிஞர் அஜய் அகர்வாலும் Bofors வழக்கில் விசாரணை கோரிய மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கதை சுருக்கம்
சதாம் உசேனுக்கு ஜெரால்ட் புல், ஆஸ்திரியாவின் Voestalpine நிறுவனத்தின் கீழ், ஈராக்கிற்காக மேம்பட்ட 155 mm பீரங்கிகளை வடிவமைத்தார். இருப்பினும், ஈராக்கிற்கான விற்பனையை நிறுத்திய ஆஸ்திரியா அரசு அதற்கு பதிலாக, இந்த பீரங்கிகளை வாங்குவது பற்றி பரிசீலிக்குமாறு இந்திரா காந்தியை வலியுறுத்தியது. உயர் ரக ஆயுதங்களை வாங்க முடிவு செய்திருந்த இந்திரா காந்தி, பிரான்ஸ் அல்லது ஆஸ்திரியாவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் விளிம்பில் இருந்தார். ஆனால், ஒப்பந்தம் முடிவாவதற்கு முன்பே அவர் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின், ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, ஸ்வீடனின் Bofors நிறுவனத்துடன் ரூ.1,437 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Bofors ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு முகவர்கள் மூலம் ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஸ்வீடன் வானொலியில் தகவல் வெளியானது. பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியன் Bofors ஊழல் பற்றிய கட்டுரைகளை எழுதி பரப்பினார். இதற்கிடையில், வி.பி.சிங் மற்றும் பிற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, தேசிய முன்னணியை உருவாக்கினார்கள், அது 1989 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. 1987-1990 களில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க, Bofors ஊழலைப் பயன்படுத்தி அரசியல் உலகில் செல்வாக்குடன் படிப்படியாக விரிவடைந்தது.
Bofors வழக்கின் விசாரணையின் போது பலர் விசாரிக்கப்பட்டு, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை; இதனால் ராஜீவ் காந்தி உட்பட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எனினும், 1987 இல் புனையப்பட்ட Bofors வழக்கினால், சுமார் 37 ஆண்டுகளாக காங்கிரஸ் இன்று வரை Bofors ஊழல் வடுவை (Scar) சுமந்து வருகின்றது. மேலும், பொய்யாக புனையப்பட்ட Bofors வழக்கின் மூலம் பா.ஜ.க வளர்ச்சி பெற்றதையும், ஊடகங்களின் பாரபட்சமான பிரச்சாரத்தையும், காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்கள் அரசியல் லாபம் அடைந்ததையும் யாரும் மறுக்க இயலாது.
துணுக்குச் செய்தி
# புருனோ கிரேஸ்கி ஆட்சிக்காலத்திற்கு பிறகு, ஆஸ்திரியாவின் Voestalpine நிறுவனம் 1984-1985 இல் ஈரான்-ஈராக் போரின் போது ஈரானுக்கும் ஈராக்கிற்கும் GHN-45 பீரங்கிகளை தயாரித்து வழங்கியது. இதன் பின்னணியில் உள்ள Noricum ஊழல் (Noricum Scandal) என்பது தனிக் கதை ஆகும்.
# Bofors ஊழல் இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியதால், இந்திய அரசு Bofors உடனான புதிய ஒப்பந்தங்களை நிறுத்தியது. இதற்கிடையில், ஏற்கனவே இருந்த Bofors பீரங்கிகள் 1999 இல் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியாவுக்குத் தீர்க்கமான வெற்றியை அளித்தது குறிப்பிடத்தக்கது.
# Bofors வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்டுள்ள நிலையில், இந்த சிறிய நூலானது வழக்கின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறது. "கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்" என்ற பழமொழியின் பொருளுக்கேற்ப, உன்னிப்பாக ஆராய்ந்தால், Bofors வழக்கின் பின்னணி "ஊதி பெரிதாக்கப்பட்ட பலூன்" போன்றதாகும்.
விவரணைகள்
Indira Gandhi Visits Austria to Stimulate the Economic Co-operation
Bofors Scandal: Delhi High Court Gives Clean Chit to Rajiv Gandhi
Tehelka Sting Case: Former BJP Chief Bangaru Laxman Convicted
Indira Gandhi Negotiates with France for 150 Mirage Warplanes
Questions raised about Government's decision to buy Bofors Gun
Seven party National Front Formally Launched in Madras
BJP using Bofors Case for Political Gains - Ajay Aggarwal
The Army is being made scapegoats in the Bofors Drama
Delhi HC Clean Chit to Rajiv Gandhi in Bofors Case
Sten Lindstrom about Amitabh Bachchan Clearance
Indira Gandhi Memorial Speech by Olof Palme
Vajpayee about Amitabh Bachchan and Rekha
Gandhi Expels 3 Former Ministers from Party
Bofors Gun was Not the Army's First Choice
Sweden's Bofors Arms Scandal - CIA Report
Gerald Bull Behind Iraq's Super Gun
Chitra Subramaniam's View on RSS
The Bofors Scandal Case Summary
The Rafale Scandal Case Summary
History and Development of BJP
National Front Comes to Power
Amitabh Bachchan on Bofors
The Guns of Saddam Hussein
Who Got the Bofors Money?
JPC Report about Bofors
Bofors Ghost
Sri Lankan History
போபர்ஸ் ஊழலையும் ரபேல் ஊழலையும் ஒப்பிடாதீர்கள் - ப.சிதம்பரம்
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
அருமையான தொகுப்பு. வாழ்த்துகள்
ReplyDelete