Chocks: சில நேரங்களில் சில நிறுவனங்கள்

Tuesday, January 18, 2022

சில நேரங்களில் சில நிறுவனங்கள்

சில நேரங்களில் சில நிறுவனங்கள்

விவரங்கள்
  1. முகவுரை 
  2. SSI நிறுவனம்
  3. ABCL நிறுவனம்
  4. Satyam நிறுவனம்
  5. Pentafour நிறுவனம்
  6. DSQ Software நிறுவனம்
  7. விவரணைகள்
முகவுரை 

"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்" என்ற பழமொழி அனைத்து வணிகர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் மேலாண்மை திறன் (Management Skills) சில வணிகர்களுக்கு பல்வகை வணிகத்தில் வெற்றியை தரக்கூடும். அதே நேரத்தில் கைவசம் உள்ள தெரிந்த தொழிலை விட்டுவிட்டு சரியான திட்டமிடல் இல்லாமல், பல்வகை வணிகம் (Diversified Business) செய்ததால் சந்தை மதிப்பை இழந்த நிறுவனங்கள் ஏராளம். அப்படி சரிந்த சில நிறுவனங்களை பற்றி காண்போம்.

SSI நிறுவனம்

1991 இல் சென்னையை தலைமையிடமாக கொண்டு SSI நிறுவனத்தை சுரேஷ் கல்பாத்தி தொடங்கினார். கணினி வழிக் கற்பித்தல் மையமாக தொடங்கப்பட்டு, 1999 இல் மென்பொருள் சேவைகளை வழங்குவதற்காக IT துறையிலும் தடம் பதித்தது. மாணாக்கர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று சீராக வளர்ந்து கொண்டிருந்த SSI நிறுவனம், 2003 இல் தொழிற்பயிற்சி சேவை நிறுவனமான Aptech நிறுவன பங்குகளை வாங்கி தங்களின் Education பிரிவை Aptech நிறுவனத்துடன் இணைத்தது.

வெவ்வேறு காலத்தில் FMCG துறையில் ஈடுபட Velvette International, Entertainment துறையில் ஈடுபட Telephoto, Hospitality துறையில் ஈடுபட Ooty Dasaprakash, Real Estate துறையில் ஈடுபட Binny Mills போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தது SSI நிறுவனம். இவ்வாறு, தங்களின் முகமதிப்பான (Face Value) கணினி சார்ந்த கல்வி தொழிலை விட்டு வெளியேறி பல்வகை வணிகத்தில் (Diversified Business) ஈடுபட்டதும் கேதன் பரேக்கின் K-10 பங்குகளில் ஒன்றாக சிக்கிய பின்னரும் SSI நிறுவனம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தது. அதை தொடர்ந்து, SSI நிறுவனம் தனது IT பிரிவை Scandent Solutions நிறுவனத்திற்கும் Real Estate பிரிவை PVP குழுமத்திற்கும் விற்றது. இன்று சுரேஷ் கல்பாத்தி குடும்பத்தினர் AGS திரையரங்குகள், AGS திரைப்பட தயாரிப்பு, AGS திரைப்பட விநியோகம், Veranda Learning Solutions, Kalpathi Investments போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ABCL நிறுவனம்
1995 முதல் அமிதாப் பச்சனின் ABCL நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மையில் ஈடுபட்டு வந்தது. இந்தியாவில் 1996 இல் உலக அழகி போட்டியை ஏற்பாடு செய்ததன் மூலம் ABCL நிறுவனத்திற்கு நிதிச்சுமை ஏற்பட்டது. இறுதியாக, 1999 இல் ABCL நிறுவனம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு நிலுவைத்தொகையான 90 கோடி ரூபாயை கட்சிக்காரர்களுக்கு செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு சென்றது. பல்வேறு நிதிக் கடமைகளில் தவறியதைத் தொடர்ந்து தொழில்துறை மற்றும் நிதி மறுகட்டமைப்புக்கான பணியகத்தால் (Board for Industrial and Financial Reconstruction) ABCL நிறுவனம் பொருளாதார நோய்வாய்ப்பட்ட பிரிவாக (The Sick Industrial Companies) பட்டியலிடப்பட்டது. ABCL தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் குப்தாவின் மோசமான நிர்வாகமே நிறுவனத்தின் மோசமான செயல்பாட்டிற்கு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர் கோகோ கோலா இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட வாய்ப்புகள் இன்றியும், கடன் சுமையாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அமிதாப் பச்சன், ஒரு கட்டத்தில் தனக்கு தெரிந்தது நடிப்பு மட்டுமே என்பதை உணர்ந்தார். அதையெடுத்து, பிரபல நடிகர் என்ற கர்வத்தை விட்டுவிட்டு தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவிடம் வாய்ப்பு கேட்டு அவரது ஆதரவில் 2000 இல் மொஹப்பதீன் திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடிக்க தொடங்கினார். அத்துடன் 2000 முதல் தொலைக்காட்சியில் கவுன் பனேகா குரோர்பதியை (Kaun Banega Crorepati) தொகுத்து வழங்க முடிவு செய்தார். இறுதியில், Sahara குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் ஆதரவு மற்றும் ஊடக வருமானம் மூலம் அமிதாப் பச்சன் மீண்டு வர தொடங்கினார்.

2000 பிற்பகுதியில் திரையுலகில் அமிதாப் பச்சன் மீண்டும் வெற்றி பெற தொடங்கிய பிறகு, நலிவடைந்த ABCL நிறுவனத்தின் மறுமலர்ச்சிக்கு ஆலோசனை வழங்க, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அமர் சிங்கின் நண்பரும், முன்னணி பங்குத் தரகருமான கேதன் பரேக்கை அணுகியது. அதன் பிறகு, ABCL நிறுவனத்தில் முதலீடு செய்ய நிதி திரட்டி வந்த கேதன் பரேக், K-10 இல் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்ககளின் முதலீட்டாளர்கள் மூலம் ABCL நிறுவனத்தில் தனது நிதியையும் முதலீடு செய்தார். இவ்வாறு, கேதன் பரேக் கொண்டு வந்த நிதியை பயன்படுத்தி, கடனை அடைக்கவும், புதிய முயற்சிகளை தொடங்கவும் ABCL நிறுவனம் திட்டமிட்டது.

கேதன் பரேக்கின் Triumph International Finance India நிறுவனம் வழங்கிய மூலதன மறுசீரமைப்பு திட்ட ஆலோசனையின்படி அமிதாப் பச்சன் செயல்பட தொடங்கினார். மேலும், ABCL நிறுவனம் AB Corp எனப் பெயர் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயல் அதிகாரியாக ரமேஷ் புலபாகா தலைமையில் புதிய நிர்வாக குழு 2001 இல் உருவாக்கப்பட்டது. நாளடைவில் AB Corp பல்வேறு மாற்றங்களை கண்டு இறுதியில் திரைப்பட தயாரிப்புகளை குறைத்து கொண்டது. சுருக்கமாக, Sahara குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் பங்கு ஆய்வாளர் கேதன் பரேக் ஆகியோர் அமிதாப் பச்சனின் வாழ்க்கையை மறுசீரமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.

Satyam நிறுவனம்


1987 இல் ஐதராபாத்தை தளமாக கொண்டு Satyam தொழில்நுட்ப நிறுவனத்தை ராமலிங்க ராஜு நிறுவினார். ராமலிங்க ராஜுவுக்கு தேஜா ராஜு மற்றும் ராம ராஜு என்று இரு மகன்கள். Maytas Infra நிறுவனத்தை மூத்த மகன் தேஜா ராஜு வழிநடத்தினார் மற்றும் Maytas Properties நிறுவனத்தை இளைய மகன் ராம ராஜு வழிநடத்தினார். ராமலிங்க ராஜுவின் Satyam நிறுவனத்தின் பெயரை திருப்பி போட்டால் Maytas என்பது குறிப்பிடத்தக்கது. 2008 பிற்பகுதியில் மகன்களுக்கு சொந்தமான Maytas Properties & Maytas Infra நிறுவனங்களை Satyam நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ராமலிங்க ராஜு முன்மொழிந்தார். இந்த கையகப்படுத்தல் மூலம் Satyam நிறுவனம் தனது வணிகத்தை பல்வகைப்படுத்தி உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்த உதவும் என்றார் ராமலிங்க ராஜு. இதையெடுத்து, Satyam நிறுவனத்தின் "What Business Demands" என்ற Tagline, "Play The Game, Transform The Business" என்று மாற்றப்பட்டது.  

Satyam - Maytas இணைப்பு திட்டம் குறித்த செய்திகள் பங்குச்சந்தையில் காட்டுத்தீயாக பரவ, Satyam நிறுவனத்தின் 2,10,000 பங்குத்தாரர்களில் பெரும்பாலானோர் இந்த ஒப்பந்தம் நெறிமுறையற்றது என்றும் ராமலிங்க ராஜுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு பிணை எடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் கருதினர். இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால், Satyam நிறுவனத்தின் பங்கு விலையில் கடும் சரிவை ஏற்படுத்தியது. Satyam - Maytas இணைப்பு திட்டம் Satyam நிறுவனம் கவிழ்வதற்கு அச்சாரம் இட்டது. மேலும், ராமலிங்க ராஜுவின் செயல்திட்டம் குறித்து இந்திய வணிக நெறிமுறை மீதான விவாதத்தைத் தூண்டியது.

கொந்தளிப்புக்கு மத்தியில், Maytas நிறுவனங்களை கையகப்படுத்த Satyam நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மறுத்தது. இதையொட்டி, Maytas நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டார் ராமலிங்க ராஜு. அத்துடன்,  2009 இல் ராமலிங்க ராஜு, Satyam நிறுவனத்தின் கணக்குகளை பல ஆண்டுகளாக கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அந்நிறுவனத்தின் கணக்கியல் புத்தகங்களில் இருந்த சுமார் 7,000 கோடி ரூபாய் பொய் கணக்கு (Accounting Fraud) என்பதை அவர் வெளிப்படுத்தினார். Maytas நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், அவை Satyam நிறுவனத்தின் பதிவுகளில் உள்ள மோசடி பரிவர்த்தனைகளை மறைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார். Satyam - Maytas இணைப்பு தொடர்பான சர்ச்சையை அடுத்து, கணக்கு மோசடியை ஏற்று ராமலிங்க ராஜு ராஜினாமா செய்தார். Satyam ஊழல் அம்பலமானதும், விசாரணையின் போது K-10 பட்டியலில் Satyam நிறுவனமும் அடங்கும் என்பதால், கேதன் பரேக்கின் பல கோடி ஊழலில் Satyam தொடர்பு குறித்து அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) ஆய்வு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சினைக்கு பிறகு, Satyam நிறுவனத்தை Mahindra குழுமம் வாங்கியது.

Pentafour நிறுவனம்
1976 இல் சென்னையை தலைமையிடமாக கொண்டு Pentagon Agency and Consultancy என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. AC, UPS, Water Heater, Stabilizer போன்ற நுகர்வோர் மின்னணு பொருட்களை தயாரித்து வர்த்தகம் செய்தல் மற்றும் திட்ட நிதி, நிர்வாகம் தொடர்பான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் நிறுவனம் ஈடுபட்டது. 1985 இல் Pentagon Agency எனப் பெயர் மாற்றப்பட்டு மேற்கூறிய நுகர்வோர் தயாரிப்புகளுக்கான குத்தகை, வாடகை கொள்முதல் மற்றும் அமெரிக்காவிற்கு தோல் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் தடம் பதித்தது.

1991 இல் Pentafour Software and Exports Limited (PSEL) என பெயர் மாற்றப்பட்டு IT மற்றும் Media தொழிலில் முதன்மையாக செயல்பட தடம் பதித்தது. அதையொட்டி, Pentafour Software நிறுவனம் மென்பொருளில் ஈடுபட Pentasoft Technologies என்ற பெயரிலும், வரைகலை தொழிலில் ஈடுபட Pentamedia Graphics என்ற பெயரிலும் இரு நிறுவனமாக கட்டமைக்கப்பட்டது. 1997 இல் எழுத்தாளர் சுஜாதா தொடங்கிய Media Dreams நிறுவனத்தை 2000 இல் Pentamedia Graphics வாங்கியது. இந்நிறுவனம் சில Animation திரைப்படங்கள் மற்றும் பாரதி, பாண்டவர் பூமி, லிட்டில் ஜான், பம்மல் கே சம்மந்தம், விசில் உட்பட சில திரைப்படங்களை தயாரித்தது. மோனிஷா என் மோனலிசா, படையப்பா, காதலர் தினம், முதல்வன், எம்.குமரன் S/O மகாலட்சுமி, குளிர் 100 டிகிரி உட்பட சில திரைப்படங்களின் Special Effects பணிகளை செய்தது. Pentafour நிறுவனர் சந்திரசேகரனின் மகள் அனிதா உதீப், விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா பாடலை பாடியவர் மற்றும் குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளடைவில், Pentafour நிறுவனர் சந்திரசேகரன் Software மற்றும் Graphics சேவைகள் வணிகத்துடன் Resorts, Multiplex, Sports போன்ற பல்வகைப்பட்ட தொழில் முயற்சிகளில் இறங்கினார். இவ்வாறு, தங்களின் முகமதிப்பான மென்பொருள் மற்றும் வரைகலை சார்ந்த தொழிலை தாண்டி பல்வகை வணிகத்தில் (Diversified Business) ஈடுபட்டதும் கேதன் பரேக்கின் K-10 பங்குகளில் ஒன்றாக சிக்கிய பின்னரும் Pentafour நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்க அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்தது.

DSQ Software நிறுவனம்
1992 இல் சென்னையை தலைமையிடமாக கொண்டு DSQ Software நிறுவனத்தை கொல்கத்தாவை சேர்ந்த தினேஷ் டால்மியா தொடங்கினார். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட DSQ Software நிறுவனம் 2000 பணியாளர்களுடன் 2000 இல் சுமார் 675 கோடி ரூபாய் வருவாயை  ஈட்டியது. இதற்கிடையே, கேதன் பரேக்கின் பங்குச்சந்தை ஊழல் வெடித்த பிறகு, 2002 இல் DSQ Software நிறுவனம் பின்னடைவை சந்திக்க, 2003 இல் DSQ Software நிறுவனத்தை Scandent Solutions நிறுவனத்திற்கு விற்றுவிட்டு, 2003 முதல் 2006 வரை அமெரிக்காவில் வசித்து வந்தார் தினேஷ் டால்மியா. பின்னர் வெவ்வேறு காலகட்டத்தில் Scandent Solutions நிறுவனத்தை Cambridge Solutions நிறுவனம் வாங்க, அதை Xchanging நிறுவனம் வாங்க, அதை DXC Technologies நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

கேதன் பரேக் செய்த K-10 பங்குச்சந்தை ஊழலில் DSQ Software நிறுவன பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்த தினேஷ் டால்மியா உள் வர்த்தகம் (Insider Trading) செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2013 இல் 7 ஆண்டுகளுக்கு பங்கு வர்த்தகம் செய்ய தினேஷ் டால்மியா மற்றும் அவரது குழுமத்தை SEBI தடை செய்தது. மேலும், 2019 இல் SEBI வழிகாட்டுதல்களுக்கு இணங்க தவறியதற்காக தினேஷ் டால்மியாவுக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. உள் வர்த்தக முறைகேடு மட்டுமின்றி வெவ்வேறு காலகட்டத்தில் அமெரிக்காவில் தொழில் தொடங்க வீழ்ச்சியடைந்த DSQ Software நிறுவனத்தின் 1.30 கோடி பங்குகளை முன்னுரிமை ஒதுக்கீடு மூலம் போலி நிறுவனங்களுக்கு மாற்றி அமெரிக்க முதலீட்டாளர்களை சுமார் 600 கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கிலும், கொல்கத்தா பங்குச்சந்தையில் 10 லட்சம் போலி பங்குகளின் விற்பனை மூலம் 20 கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கிலும் தினேஷ் டால்மியா கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

விவரணைகள் 

தெரிந்ததை விட்டால் வம்பு, தெரியாததைத் தொட்டால் சங்கு


// SSI நிறுவனம் // 


2008 - SSI to merge with PVP Ventures


// ABCL நிறுவனம் //

1995 - Launch of ABCL 


1999 - ABCL is a sick company


From Bankruptcy to Crorepati


When Amitabh Bachchan Went Bankrupt


Big B Bailout for Big B


Amitabh Bachchan Survived Tax Investigation


Parekh Spills the Beans


// Satyam நிறுவனம் //

YouTube Video on Satyam Scam in English


YouTube Video on Satyam Scam in Tamil


// DSQ Software நிறுவனம் // 

Rise and fall of Dinesh Dalmia 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...