இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை
19 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் இருந்தே பார்ப்பனர் அல்லாதோர் சங்கமும் முஸ்லீம் லீக் அமைப்பும் வகுப்புவாரி உரிமைகளை கோரி வந்தனர். 1912 இல் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கம் மாகாண சேவைகளில் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதித்துவம் பற்றி விசாரிக்க ராயல் ஆணையத்தை (Royal Commission) நியமித்தது. பார்ப்பனர் அல்லாத இந்துக்களின் அந்தஸ்தை உயர்த்த குறிப்பிடத்தக்க அளவில் பாடுபட்ட நீதிக்கட்சி, அரசு ஊழியர்கள் தேர்வு மற்றும் கல்வி சேர்க்கையில் இட ஒதுக்கீடு அவசியம் என்றும் போராடியது. 1916 இல் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி, தொழில், அரசுப் பணிகளில் பங்கேற்கவும் பார்ப்பனர் அல்லாதோரின் நலன்களை பாதுகாக்கவும் "பார்ப்பனர் அல்லாதோர் கொள்கை" (Non-Brahmin Manifesto) அறிக்கை வெளியிடப்பட்டது.
1921 இல் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்த, அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் கல்வி இட ஒதுக்கீடுக்காக சமூகங்களை வகைப்படுத்தி, நீதிக்கட்சி அரசு இந்தியாவில் முதல் வகுப்புவாத அரசாங்க ஆணையை (Communal G.O) அமல்படுத்தியது. ஆரம்ப புள்ளி விவரங்கள் சமமற்ற பிரதிநிதித்துவத்தை காட்டியதால், 1922 இல் இரண்டாவது வகுப்புவாத அரசாங்க ஆணை உடன் திருத்தத்திற்கு வழிவகுத்தது. இது பார்ப்பனர் அல்லாதவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சமூகங்களுக்கு அனைத்து வேலை தரங்களையும் (Grades) திறக்கும் ஒரு ரோஸ்டர் முறையை (Roster System) அறிமுகப்படுத்தியது. இருப்பினும், பார்ப்பனர்களின் லாபி 1927 வரை ஆணைகளை முழுமையாக செயல்படுத்துவதை தாமதப்படுத்தியது.
இறுதியில், பெரியாரின் தொடர் முயற்சிகள் காரணமாக 1928 இல் கட்சி சாராத மெட்ராஸ் மாகாண முதல்வர் பி.சுப்பராயனால் மூன்றாவது வகுப்புவாத அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 44%, பார்ப்பனர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தலா 16% மற்றும் பட்டியல் சாதியினர் 8% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சமூக அரசியல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இந்த ஏற்பாடு சுதந்திரத்திற்கு பிறகும் நடைமுறையில் இருந்தது. இது பார்ப்பனர் அல்லாதவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியது.
இதற்கிடையே, 1950 இல் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காத சி.ஆர்.ஸ்ரீநிவாஸன் என்ற பார்ப்பன மாணவரும், மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத போதும் சம்பகம் துரைராஜன் என்ற பார்ப்பன மாணவியும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (1928) ஆணை அமலில் இருந்தால் தங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காது என்று தனித்தனியாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இரு வழக்குகளும் இணைக்கப்பட்டு "மெட்ராஸ் மாநில அரசு எதிர் சம்பகம் துரைசாமி வழக்கு" என்ற பெயரில் விசாரிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினரான பார்ப்பனர் ஆலடி கிருஷ்ணசுவாமி ஐயர், சம்பகம் துரைராஜன் சார்பில் ஆஜராகி வாதாடினார். இது அதிகார அரசியலில் பார்ப்பனர்களின் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வழக்கை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம் "கல்வித்துறையானது, மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு கூடாது அதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (1928) செல்லாது" என்று தீர்ப்பளித்தது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் சமத்துவ உரிமைக்கு எதிராக இட ஒதுக்கீடுகளை வழங்குவது இந்திய அரசியலமைப்பின் 16(2) பிரிவின்படி, உரிமையை மீறுவதாகும் என்று கூறி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுதந்திர இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமைகள் பறிபோனதாக குற்றம் சாட்டி தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் காமராஜர் பிரதமர் நேருவிடம் தமிழ்நாட்டில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை விளக்கி நியாமான நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதையொட்டி, பிரதமர் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1951 இல் இந்திய அரசியலமைப்பின் 15(4) பிரிவின்படி, “சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய மாநில அரசாங்கத்தை அனுமதிக்கிறது” என்ற முதல் சட்ட திருத்தத்தை அமல்படுத்தியது. அதன்படி, வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
# இதையொட்டி, பிரிவு 15, உட்பிரிவு 4 சட்டத்தின் மூலம் SC/ST பிரிவுக்கு 15%, BC பிரிவுக்கு 25% மற்றும் OC பிரிவுக்கு 60% என்று இட ஒதுக்கீடு சீரமைக்கப்பட்டது.
# 1951 இல் முதல்வர் குமாரசாமி ராஜா SC/ST பிரிவுக்கு 16% மற்றும் BC பிரிவுக்கு 25% என இட ஒதுக்கீட்டை சீரமைத்தார்.
# 1969 இல் முதல்வர் கலைஞர் SC/ST பிரிவுக்கு 18% மற்றும் BC பிரிவுக்கு 31% என இட ஒதுக்கீட்டை உயர்த்தினார்.
# 1980 இல் முதல்வர் எம்.ஜி.ஆர் BC பிரிவுக்கு 31% இல் இருந்து 50% என இட ஒதுக்கீட்டை ஏற்றினார்.
# 1990 இல் முதல்வர் கலைஞர் ST பிரிவுக்கு 1%, SC பிரிவுக்கு 18%, BC பிரிவுக்கு 30% மற்றும் MBC பிரிவுக்கு 20% என இட ஒதுக்கீட்டை திருத்தினார்.
சம்பகம் துரைசாமி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுக்கவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பெரியார் மேற்கொண்ட அதிரடி போராட்டத்தால் விளைந்த முதல் சட்ட திருத்தம் தான் மண்டல் ஆணையத்தை நியமிக்க உதவியது என்று சொன்னால் மிகையாகாது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கலைஞர். 07 ஆகஸ்ட் 1990 அன்று வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு சமூகத்தில் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு நிறுவன வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. அந்நேரத்தில், தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு பகிர்வு 69% நிலையை அடைந்தது.
வி.பி.சிங் அரசு வழங்கிய 27% இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் 1992 இல் உச்சநீதிமன்றத்தில் இந்திரா சஹானி தொடுத்த வழக்கில் மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. அந்நேரத்தில், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தனர். இதையொட்டி, 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கில், 1993 இல் அ.தி.மு.க முதல்வர் ஜெயலலிதா "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழ் பணி நியமனங்கள் அல்லது பதவிகள்)" சட்டத்தை இயற்றி 1994 இல் குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றார். இச்சட்டமானது இந்திய அரசியலமைப்பின் 31(B) பிரிவின்படி ஒன்பதாவது அட்டவணையில் (குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள், ஒழுங்குமுறைகள், விதிகள் எதுவும் செல்லாததாக கருதப்படக்கூடாது) இணைக்கப்பட்டு எதிர்கால நீதிமன்றங்களின் தலையீட்டிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தமிழ்நாட்டு முதல்வர்களின் முயற்சியால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை 69% ஆக உயர்த்தி, அதற்கான உரிய சட்டங்களை இயற்றி, சட்ட மோதல்களில் இருந்து இட ஒதுக்கீட்டு விதிகளைப் பாதுகாத்து உள்ளனர். மொத்தத்தில், பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்று வரை இட ஒதுக்கீடு முறையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
// துணுக்கு செய்தி //
1924 இல் நீதிக்கட்சி அரசு ரோஸ்டர் முறையை பயன்படுத்தி அரசு ஊழியர்களை நியமிக்க பணியாளர் தேர்வு வாரியத்தை (Staff Selection Board - S.S.B) நிறுவியது. இந்த அமைப்பு குறிப்பிட்ட சதவீதங்களின் அடிப்படையில் ஒரு கேடருக்குள் வெவ்வேறு பிரிவுகளுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது. S.S.B அமைப்பின் அடித்தளம் பின்னர் இன்றைய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமாக (Tamil Nadu Public Service Commission - T.N.P.S.C) மாற்றப்பட்டது.
விவரணைகள்
தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு கடந்து வந்த பாதை - News7 Tamil
20% MBC இட ஒதுக்கீட்டின் கதை - News7 Tamil
இட ஒதுக்கீட்டுக் கொள்கை
Reservation Policy: A Vital Strategy for Social Transformation
Benefits for Adi Dravidar during the Justice Party Ruling
Reservation for Backward Classes in Tamil Nadu
State of Madras vs Champakam Dorairajan
Indra Sawhney vs Union Of India
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment