Chocks: நீரின் நண்பர்

Saturday, January 29, 2022

நீரின் நண்பர்

நீரின் நண்பர்

சுருக்கம்
  1. முகவுரை
  2. பயிற்சியும் தொடக்கமும்
  3. திருப்புமுனையும் சாதனையும்
  4. வாய்ப்பும் ஓய்வும்
  5. கல்வியும் வேலையும்
  6. நண்பன் விளையாட்டு அறக்கட்டளை
  7. முடிவுரை
  8. விவரணைகள்
முகவுரை

விளையாட்டுகளில் பங்கேற்பதன் மூலம் ஆண்களும் பெண்களும் உடல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் வலிமை பெற்றவர்களாக இருக்க வேண்டுமென தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பேசியிருக்கிறார். அப்படியாக விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட ஒருவர் ஈரோட்டில் பிறந்தார்.

குற்றாலத்துக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல், இவர் பெயருக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு மட்டுமல்ல நீரிலே தான் இவரது விளையாட்டு வாழ்வு தொடங்கியது. ஆம், சரியாக கணித்துவிட்டீர்கள்! குற்றாலீஸ்வரனை பற்றித் தான் காண இருக்கிறோம்.

பயிற்சியும் தொடக்கமும்

8 நவம்பர் 1981 அன்று வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் சிவகாமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் குற்றாலீஸ்வரன். அவர் ஒரு மாத குழந்தையாக இருந்த போதே குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது.
பெற்றோர் ஊக்குவிப்பும் சென்னை D.A.V பள்ளியின் ஆதரவும் குற்றாலீஸ்வரனின் நீச்சல் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தது. குழந்தை பருவத்திலே நீச்சல் விளையாட்டில் ஆர்வம் செலுத்தியவர் இளம் வயதிலே முறையான நீச்சல் பயிற்சி பெற தொடங்கினார். முதல் முதலாக மாவட்ட அளவிலான "Ribbon Meet” எனப்படும் நீச்சல் போட்டியில் பங்கேற்று ஆறாவது இடத்தை பெற்றார். பின்னர் கடலில் 5 கிலோமீட்டர் நீச்சல் போட்டியில் பங்கேற்று நான்காவது இடத்தைப் பெற்றார். 1990 களில் பல மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்.

திருப்புமுனையும் சாதனையும்

பெரும்பாலும் குளங்களில் நீந்தி வெல்வதை சலிப்பாக உணர்ந்த குற்றாலுக்கு கடலில் 5 கிலோமீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

ஏப்ரல் 1994 ஆம் ஆண்டு தனது 12 வயதில் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்துள்ள பாக்கு நீரிணையை (Palk Strait) கடந்து நீந்தினார். பிறகு ஆகஸ்ட் 1994 ஆம் ஆண்டு அன்று ஆங்கிலக் கால்வாயை (English Channel) கடந்து நீந்தினார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ராட்னெஸ்ட் கால்வாய் (Rottnest Channel), இத்தாலியின் மெசினா நீரிணை (Straits of Messina), இத்தாலியின் ஜானோன் சர்சியோ (Zannone Circeo) மற்றும் இறுதியாக பத்து டிகிரி கால்வாயை (Ten Degree Channel) கடந்து நீந்தினார்.

1966 ஆம் ஆண்டு 36 வயதில் வங்காளத்தை சேர்ந்த மிஹிர் சென் ஒரு நாட்காட்டி ஆண்டிற்குள் ஐந்து கால்வாய்களில் நீந்தி சாதனை புரிந்திருந்தார். இவ்வாறு, 1994 ஆம் ஆண்டு ஒரு நாட்காட்டி ஆண்டிற்குள் ஆறு கால்வாய்களில் நீந்தி மிஹிர் சென்னின் சாதனையை குற்றாலீஸ்வரன் முறியடித்தார். இதையொட்டி கின்னஸ் உலக சாதனையில் நுழைந்தார். 1994 ஆம் ஆண்டு குற்றாளீஸ்வரன் உலக சாதனை படைக்க ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசு உதவியும் ஆதரவும் தந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ஒன்றிய அரசு இவரது சாதனையை அங்கீகரித்து 1996 ஆம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருதை வழங்கியது. அந்த நேரத்தில் இவ்விருதை வென்ற இளைய நபர் என்ற பெருமையையும் பெற்றார்.
வாய்ப்பும் ஓய்வும்

1994 ஆம் ஆண்டு சாதனை படைத்த பிறகு 1995 மற்றும் 1998 ஆகிய மூன்றாண்டு இடையில் உலகம் முழுவதும் நடைபெற்ற பல சர்வதேச நீச்சல் போட்டிகளில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்கேற்றார். நீச்சல் உலகத் தொடருக்கு (World Series Swimming) உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நீச்சல் வீரர்களில் ஆசியாவைச் சேர்ந்த ஒரே வீரர் குற்றாலீஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உலகெங்கிலும் நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவிற்காக பல்வேறு பதக்கங்களை வென்றார்.

1990 களின் தொடக்கத்தில் நீச்சல் பங்களிப்பிற்கு தமிழ்நாடு மாநில அரசு மற்றும் 1990 களின் பிற்பகுதியில் இந்திய ஒன்றிய அரசு நிதியுதவி அளித்து ஆதரவை நல்கினாலும் 1990 களின் இறுதியில் தனியார் நிறுவன Sponsors ஆதரவுக்கரம் நீட்டிட விருப்பம் காட்டாததால் தொழில்முறை நீச்சலில் (Professional Swimming) இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறும் முடிவை எடுத்தார்.

கல்வியும் வேலையும்

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் (Anna University Campus) பொறியியலில் இளங்கலை பட்டமும் Sponsorship மூலம் அமெரிக்காவின் டல்லாஸ்ஸில் உள்ள University of Texas கல்லூரியில் முதுகலை பட்டமும் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள Sloan Institute of Management கல்லூரியில் மேலாண்மை பட்டமும் பெற்றார்.

Intel, Barclays, Citi, Virtusa, Flow Capital போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தவர் தற்போது கனடாவில் Nanban Ventures நிறுவனத்தில் பொது பங்குதாரராக பணிபுரிந்து வருகிறார்.

நண்பன் விளையாட்டு அறக்கட்டளை

விளையாட்டு மற்றும் கல்விக்கு இடையே ஒரு தேர்வை எதிர் கொண்டபோது Sponsorship குறைபாடு காரணமாக ​​குற்றாலீஸ்வரன் கல்வியை தேர்ந்தெடுத்தார். இந்த பொருளாதார குறைபாட்டை உணர்ந்து விளையாட்டை அனைவருக்கும் உரிய நிலையானதாக மாற்றும் முயற்சியில் அடிமட்டத்திலிருந்து விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு 29 ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினம் அன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நண்பன் விளையாட்டு அறக்கட்டளை (Nanban Sports Foundation) என்னும் நிறுவனத்தை குற்றாலீஸ்வரன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தனது சொந்த விளையாட்டு பயண அனுபவத்தில் கற்ற பாடத்தை வைத்து சமூகத்திற்கு திருப்பி அளித்தல் (Contributing to society) என்ற முறையில் குற்றாலீஸ்வரன் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது.
முடிவுரை

விளையாட்டு துறைகளில் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போல நீச்சல் லாபகரமான துறையும் அல்ல கவர்ச்சிகரமான துறையும் அல்ல. போதிய Sponsorship இல்லாமல் நீச்சல் விளையாட்டில் கலந்து கொண்டு தொடர்ந்து பதக்கங்களை வென்று காட்சி பெட்டிகளை (Showcase) அலங்கரித்து இருந்திருந்தால் மட்டும் குற்றாலீஸ்வரனின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்காது. அதையொட்டியே நீச்சல் விளையாட்டில் வளரக்கூடிய வயதில் தனது ஆசைக்குரிய தொழில்முறை நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து பின்னர் உரிய கல்வி பெற்று அதற்குரிய பணி செய்து இன்று சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்க கூடிய நிலைக்கு குற்றாலீஸ்வரன் முன்னேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வானில் சிறகடித்து பறக்கும் பறவையை போல உயர பறப்பதற்கு பல வீரர்கள் வலிமையாக இருந்தும் உரிய Sponsorship இல்லாததால் தொடர் ஊக்கமும் பொருளாதார உதவியும் இன்றி தவிக்கிறார்கள். இனி வருங்காலங்களில் ஒலிம்பிக் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் இந்தியா கடைசி இடத்தில் தான் இருக்கும் என்ற சூழல் மாற தான் வேண்டும் என்றால் அதற்கு குற்றாலீஸ்வரன் போன்று நல்லுள்ளம் கொண்ட பெருநிறுவனங்கள் பலதரப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கவும் Sponsorship செய்யவும் முன் வர வேண்டும்.

சுருங்கச் சொன்னால் ஒரு பொறியாளரின் வாழ்க்கைத் தரம் போலவே ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கைத் தரம் அமைய வேண்டுமானால் ஊக்கம் அளித்தால் மட்டும் போதாது செலவழிக்கவும் முன் வர வேண்டும் என்பதே இறுதி பார்வை.

விவரணைகள்






வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும் பொருளடக்கம்    முதலாவது  பகடை விளையாட்டு சகுனியின் எதிர்பார்ப்பு சகுனியின் கேலி தருமனின் இறுதி தோல்வி திரௌப...