Chocks: சின்னங்களின் வரலாறு

Saturday, February 5, 2022

சின்னங்களின் வரலாறு

சின்னங்களின் வரலாறு

இந்தியா தேசிய காங்கிரஸ் 

1952 முதல் 1969 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னமாக "பூட்டிய இரட்டை காளை மாடுகள்" இருந்து வந்தது. 
1969 இல் உட்கட்சிப் பூசல்கள் காரணமாக இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (R) மற்றும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் (O) என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. இந்திரா காங்கிரஸ் (R) கட்சிக்கு "பசுவும் கன்றும்" சின்னமும் ஸ்தாபன காங்கிரஸ் (O) கட்சிக்கு "கை ராட்டை சுற்றும் பெண்" சின்னமும்  ஒதுக்கப்பட்டது.
1977 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு சுவரண் சிங் தலைமையிலான காங்கிரஸ் (S) மற்றும் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (I) என்று இந்திரா காங்கிரஸ் (R) இரண்டாக பிரிந்தது. அதை தொடர்ந்து சுவரண் சிங் காங்கிரஸ் கட்சிக்கு "பசுவும் கன்றும்" சின்னமும் இந்திரா காங்கிரஸ் (I) கட்சிக்கு "கை" சின்னமும்  ஒதுக்கப்பட்டது. பின்னர் இந்திரா காங்கிரஸ் (I) கட்சியே  மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாக மாறி தேர்தலில் "கை" சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி

1952 முதல் 1977 வரை பாரதிய ஜன சங்கத்தின் சின்னமாக "எண்ணெய் விளக்கு" இருந்து வந்தது.
1977 இல் பாரதிய ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்த பிறகு ஜனதா கட்சியின் சின்னமாக "சக்கரத்திற்குள் கலப்பையை சுமந்து செல்லும் மனிதன்" இருந்து வந்தது. ஸ்தாபன காங்கிரஸ் (O), பாரதிய லோக் தளம், சோசலிஸ்ட் கட்சி, பாரதிய கிராந்தி தளம், பாரதிய ஜன சங்கம் உட்பட பல கட்சிகள் இணைந்து உருவானதே ஜனதா கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
1977 நாடாளுமன்ற தேர்தலில் வென்று மூன்று வருடங்கள் ஆட்சி செய்த ஜனதா கட்சியின் ஆட்சி 1980 இல் கலைக்கப்பட்ட பின்னர் பழைய பாரதிய ஜன சங்கத்தின் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கினர். அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் "தாமரை" சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம்

1949 இல் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) 1957 இல் முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் சேவல் மற்றும் உதயசூரியன் ஆகிய சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1962 இல் தேர்தல் ஆணையம் தி.மு.கவை ஒரு மாநில கட்சியாக அங்கீகரித்து "உதய சூரியன்" சின்னத்தையும் ஒதுக்கியது. பலமுறை பிளவு கண்ட போதும் இந்தியாவில் ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னத்தை பறிகொடுக்காமல் தொடர்ந்து வைத்திருக்கும் ஒரே மாநில கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1972 இல் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) தொடக்கம் முதலே தேர்தலில் "இரட்டை இலை" சின்னத்தில் போட்டியிட்டது. 1987 இல் எம்.ஜி.ஆர் காலமான பிறகு அ.தி.மு.க கட்சியானது ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என்று இரண்டாக பிரிந்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட காரணத்தால் ஜெயலலிதா அணி "சேவல்" சின்னத்திலும் ஜானகி அணி "புறா" சின்னத்திலும் போட்டியிட்டனர். 1989 தேர்தலுக்கு பிறகு ஒரு கட்டத்தில் ஜெயலலிதா அணியும் ஜானகி அணியும் இணைந்து மீண்டும் ஒரே அ.தி.மு.கவான பிறகு அக்கட்சிக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. 
2016 இல் ஜெயலலிதா காலமான பிறகு அ.தி.மு.க கட்சியானது எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் அணி என்று பிளவு கண்டதை தொடர்ந்து இரட்டை இலை சின்னம் நிரந்திரமாக முடக்கப்படும் சூழல் உண்டானது. பின்னர் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இணைந்து ஒன்றிய பா.ஜ.க அரசின் தயவால் அ.தி.மு.கவுக்கு உரிய இரட்டை இலை சின்னத்தை மீட்டனர்.
இதர கட்சிகள் 

1989 இல் டாக்டர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) 1989 இல் முதன் முதலாக நாடாளுமன்ற தேர்தலில் "யானை" சின்னத்தில் போட்டியிட்டது. 1997 இல் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அரசியல் கட்சியாக அங்கீகரிப்பட்டு யானை சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு 1998 முதல் "மாம்பழம்" சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது பா.ம.க.
1994 இல் வைகோ அவர்களால் தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) 1996 தேர்தலில் "குடை" சின்னத்தில் போட்டியிட்டது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட "பம்பரம்" சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது ம.தி.மு.க.
1996 இல் மூப்பனார் அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா) கட்சி தொடக்கம் முதலே தேர்தலில் "சைக்கிள்" சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. மூப்பனார் மறைவுக்குப் பிறகு 2002 முதல் 2014 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் த.மா.கா இணைக்கப்பட்டது. பின்னர் 2014 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.கா கட்சி வாசன் அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. சில தேர்தலில் வாசனின் த.மா.கா தென்னத்தோப்பு மற்றும் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
2005 இல் விஜயகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) தொடக்கம் முதலே தேர்தலில் "முரசு" சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
1958 இல் ஆதித்தனார் அவர்களால் நிறுவப்பட்ட நாம் தமிழர் கட்சி (நா.த.க) 2010 இல் சீமான் அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து தேர்தலில் "விவசாயி" சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது நா.த.க.
2018 இல் கமல்ஹாசன் அவர்களால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம) தொடக்கம் முதலே தேர்தலில் "டார்ச்லைட்" சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. 
1999 முதல் தேர்தலில் போட்டியிட தொடங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) நட்சத்திரம், மோதிரம், பானை என்று தேர்தலுக்கு தேர்தல் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெவ்வேறு விதமான "அரிவாள் மற்றும் சுத்தியல்" சின்னத்தில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும் பொருளடக்கம்    முதலாவது  பகடை விளையாட்டு சகுனியின் எதிர்பார்ப்பு சகுனியின் கேலி தருமனின் இறுதி தோல்வி திரௌப...