மந்திரி ஆகாத ஒரு ராஜாவின் கதை
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
முகவுரை
அரசியல் அரங்கில் மந்திரி ஆகாதவர் ஆனாலும், திரையுலகில் “மந்திரி” ஆகி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் அமைத்து ராஜாவாக ஆண்டவர் புரூஸ் லீ (Bruce Lee). தற்காப்புக் கலைஞர் (Martial Artist), தற்காப்புக் கலைப் பயிற்சியாளர் (Instructor), திரைப்பட நட்சத்திரம் (Actor), திரைப்பட தயாரிப்பாளர் (Producer), மற்றும் சிந்தனையாளர் (Philosopher) எனப் பல்துறை வல்லுநராக வெற்றி நடை போட்டவர் அவர். புரூஸ் லீ நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்; ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது என்றால் அது மிகையல்ல. “அழகான வாழ்க்கை வாழ்ந்தவன் மட்டுமே அழியாத நினைவுகளை விட்டுச் செல்கிறான்” என்ற வாழ்க்கை நெறியை தன் வாழ்வில் செயல்படுத்தியவராக, புரூஸ் லீயின் முழு ஆளுமையும் வெளிப்படுகிறது.
தொடக்க காலம்
நவம்பர் 27, 1940 அன்று காலை 7:12 மணிக்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். சீன ஜோதிடக் கணிப்பின்படி (Chinese Astrology) ‘டிராகன்’ ஆண்டின் (1940) ‘டிராகன்’ மணி (7:00 - 9:00 மணி) நேரத்தில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை லீ ஹோய் சூன் (Lee Hoi-chuen), ஹாங்காங்கைச் சேர்ந்த புகழ்பெற்ற கான்டோனீஸ் ஓபரா பாடகரும் நடிகரும் ஆவார். சர்வதேச ஓபரா சுற்றுப்பயணத்திற்காக சான் பிரான்சிஸ்கோவில் தங்கியிருந்த காலத்தில், லீ ஹோய் சூன் மற்றும் கிரேஸ் ஹோ (Grace Ho) தம்பதியினருக்கு மகனாக புரூஸ் லீ பிறந்தார்.
ஹாங்காங்கிலும் அமெரிக்காவிலும் இரட்டைக் குடியுரிமை கொண்டவராக வளர்ந்த அவர், குடும்பத்தினருடன் ஹாங்காங்கின் கவுலூனில் (Kowloon) தனது குழந்தைப் பருவத்தை கழித்தார். தனது தந்தையின் வழிகாட்டுதலில் சுமார் 20 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இளம் வயதில் உள்ளூர் தெருக் கும்பல்களுடன் அடிக்கடி மோதிக்கொண்ட அவரது சுறுசுறுப்பு மற்றும் கலகலப்பான இயல்பை நல்வழிப்படுத்த வேண்டும் என்று தந்தை விரும்பினார். அந்த எண்ணத்தின் விளைவாகவே தற்காப்புக் கலை மற்றும் நடனத்தில் அவருக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டது.
குங்பூ கற்றலும் நடன வெற்றியும்
தனது 13-ஆவது வயதில் புரூஸ் லீ, புகழ்பெற்ற விங் சுன் (Wing Chun) குங்பூ மாஸ்டர் யிப் மேன் (Yip Man) அவர்களிடம் குங்பூ பயிற்சியைத் தொடங்கினார். அந்த முடிவு தற்காப்புக் கலை வரலாற்றையே மாற்றியமைக்கப் போகிறது என்பதை அப்போது யாரும் உணரவில்லை.
இதோடு மட்டுமல்லாமல், 108 விதமான சா சா படிகளை (Cha-cha Steps) கற்றுத் திறம்பிய சிறந்த நடனக் கலைஞராகவும் புரூஸ் லீ திகழ்ந்தார். 1958 ஆம் ஆண்டு ஹாங்காங் Crown Colony Cha-cha சாம்பியன் பட்டத்தை அவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்காப்புக் கலையின் ஓட்டமும் நடனத்தின் தாளமும் பின்னாளில் அவரது திரைச் சண்டைக் காட்சிகளில் அற்புதமான இணைவை உருவாக்கின.
அமெரிக்க வாழ்க்கை
1959 ஆம் ஆண்டு, தனது 18-ஆவது வயதில் புரூஸ் லீ ஹாங்காங்கை விட்டு வெளியேறி, கையில் நூறு டாலர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகருக்கு வந்தார். அங்கு குடும்ப நண்பரின் உணவகத்தில் பணிபுரிந்தபடியே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் (University of Washington) தத்துவக் கல்வியில் சேர்ந்தார்; எனினும், பட்டப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யவில்லை. தத்துவச் சிந்தனையும் அவரது தற்காப்புக் கலைச் சிந்தனையும் ஆழமாக கலந்ததால், அது அவரை மேலும் உயர்ந்த சிந்தனை நிலைக்கு எடுத்துச் சென்றது.
1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், குங்பூ மீதான ஆழமான ஆர்வத்தின் காரணமாக உணவகப் பணியை விட்டுவிட்டு, தனது முதல் தற்காப்புக் கலைப் பள்ளியான ஜுன் பேன் குங்பூ நிறுவனம் (Jun Fan Kung Fu Institute) சியாட்டிலில் தொடங்கினார். பின்னர் ஓக்லாந்து (Oakland) மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) சைனாடவுன் பகுதிகளில் மேலும் இரண்டு பள்ளிகளைத் திறந்தார்.
ஆகஸ்ட் 17, 1964 அன்று தனது காதலி லிண்டா எமரி (Linda Emery) அவர்களை சியாட்டிலில் திருமணம் செய்து கொண்டார். பிப்ரவரி 1, 1965 அன்று மகன் பிராண்டன் லீ (Brandon Lee) பிறந்தார். மகன் பிறந்த சில நாட்களுக்குள், அவரது தந்தை லீ ஹோய் சூன் ஹாங்காங்கில் காலமானார். தனது குடும்பத்தில் முதல் பேரக்குழந்தை பிறந்த செய்தியை தந்தை அறிந்து கொண்டிருந்தார் என்பதே புரூஸ் லீக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. பின்னர், ஏப்ரல் 19, 1969 அன்று மகள் ஷானன் எமரி லீ (Shannon Emery Lee) பிறந்தார்.
ஒரு அங்குல குத்து நுட்பம்
1964 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற லாங் பீச் இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் (Long Beach International Karate Championship) போட்டியில் புரூஸ் லீ (Bruce Lee) “ஒரு அங்குலக் குத்து” (One-inch Punch) என்ற நுட்பத்தை நிகழ்த்தி மேற்கத்திய நாடுகளில் பரவலான கவனத்தைப் பெற்றார். வெறும் ஒரு அங்குலத் தொலைவிலிருந்து எதிரிலிருந்தவரை கணிசமான தூரம் பின்னுக்கு தள்ளும் இந்த நுட்பம், கை வலிமையை மட்டும் சார்ந்ததல்ல.
உடலின் அனைத்து பகுதிகளையும் (கால், இடுப்பு, தோள், முழங்கை, மணிக்கட்டு) ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து பயன்படுத்துவதன் மூலம் உருவாகும் சக்தியே இதன் அடிப்படை. இந்த நுட்பம் அவரது விங் சுன் பயிற்சியிலிருந்து வடிவெடுத்தது.
உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து இயக்கும் உயர்ந்த கட்டுப்பாட்டுத் திறனை (Mastery and Precision) வெளிப்படுத்திய இந்த ஒரே நுட்பமே, புரூஸ் லீயின் தற்காப்புக் கலை மேதைமையையும் (Martial Genius) மனித உடல் இயக்கங்களை அவர் எவ்வளவு ஆழமாகப் புரிந்திருந்தார் என்பதையும் தெளிவாக நிரூபிக்கிறது.
ஜே செப்ரிங்கின் அறிமுகம்
லாங் பீச் சாம்பியன்ஷிப் போட்டியில் புரூஸ் லீயின் அசாதாரண திறன்களைக் கண்ட ஹாலிவுட் சிகையலங்கார நிபுணர் (Hair Stylist) ஜே செப்ரிங் (Jay Sebring), அவரை தனது வாடிக்கையாளரும் தொலைக்காட்சி தயாரிப்பாளருமான வில்லியம் டோசியர் (William Dozier) அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, 1966 ஆம் ஆண்டு 26 வயதான புரூஸ் லீ, வில்லியம் டோசியர் தயாரித்த The Green Hornet தொலைக்காட்சி தொடரில் “கேட்டோ” (Kato) என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஜே செப்ரிங், புரூஸ் லீயின் நெருங்கிய நண்பராக மட்டுமல்லாமல், சிறந்த நடிகராகவும் குங்பூ ஆசிரியராகவும் அவர் உயர்வதற்கு முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார்.
1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 மற்றும் 10 இரவில் “மேன்சன் குடும்பம்” (Manson Family) என அழைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களால் ஜே செப்ரிங், நடிகை ஷரோன் டேட் (Sharon Tate) உள்ளிட்ட ஏழு பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த துயரச் சம்பவம், இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ (Quentin Tarantino) இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான “Once Upon a Time in Hollywood” திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜீத் குனே டோ தத்துவம்
The Green Hornet தொடர் திடீரென ரத்து செய்யப்பட்ட பின்னர், அமெரிக்க ஹாலிவுட்டில் பணிபுரிந்த காலத்தில் புரூஸ் லீ இன அடிப்படையிலான பாகுபாட்டை (Racial Discrimination) எதிர்கொண்டார். அந்தக் காலகட்டத்திலேயே, தனது சொந்த தற்காப்புக் கலையை உருவாக்கத் தொடங்கிய அவர், அதற்கு ஜீத் குனே டோ (Jeet Kune Do) என்று பெயரிட்டார். நீண்ட காலமாக நிலவிய தற்காப்பு மரபுகளை அப்படியே பின்பற்றாமல், புரூஸ் லீயின் தற்காப்புக் கலை ஒரு தத்துவ அடித்தளத்தின் மீது (Philosophical Foundation) கட்டமைக்கப்பட்டது. தனிப்பட்ட சுதந்திரம், நேரடித்தன்மை மற்றும் எளிமை ஆகியவை அவரது சிந்தனையின் மையக் கருத்துகளாக அமைந்தன. “பயனுள்ளதை ஏற்று, பயனற்றதை நீக்கி, உனக்கு சொந்தமானதைச் சேர்” என்ற அவரது கொள்கை, வெறும் சண்டை நுட்பமாக மட்டுமல்லாமல் வாழ்க்கைத் தத்துவமாகவே உயர்ந்தது.
சிந்தித்து முடிவெடுத்தார்
1960 களின் நடுப்பகுதியில் புரூஸ் லீ தனது வாழ்க்கையின் முக்கியமான சந்திப்பில் (Crossroads) நின்றார். நாடு முழுவதும் குங்பூ பள்ளிகளை விரிவாக்குவதா, அல்லது நடிப்பில் முழு கவனம் செலுத்துவதா என்ற கேள்வி அவரை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியது. பள்ளிகள் அதிகரித்தால், கற்பித்தலின் தரத்தின் மீது உள்ள தனது கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று அவர் அஞ்சினார். தற்காப்புக் கலை மீதான தனது காதலும் அதன் தரமும் நீர்த்துப் போகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இறுதியில், நடிப்பின் வழியாக உலகளவில் தற்காப்புக் கலை மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தலாம் என்று முடிவெடுத்தார். திரையரங்கின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனங்களைத் தொட முடியும் என்று புரூஸ் லீ நம்பினார்.
திரைப்பட சாதனைகள்
ஹாலிவுட்டில் இனத் தடைகளை எதிர்கொண்ட புரூஸ் லீ, தனது திரை வாழ்க்கையை தடையின்றி தொடர ஹாங்காங்கிற்கு திரும்பினார். அங்கு அவர் தொடர்ச்சியாக தயாரிப்பாளர் ரேமண்ட் சோவ் தயாரித்த The Big Boss (1971), Fist of Fury (1972) மற்றும் The Way of the Dragon (1972) ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களும் ஒவ்வொன்றாக முந்தைய படத்தின் வசூல் சாதனைகளை முறியடித்து புதிய வரலாற்றை படைத்தன. தற்காப்புக் கலையை முற்றிலும் புதிய வடிவில் உலகிற்கு அறிமுகப்படுத்திய இந்த திரைப்படங்கள், ஹாங்காங்கில் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளைக் குவித்தன. புரூஸ் லீ உருவாக்கிய கதாபாத்திரங்கள் இனத்துவேஷத்துக்கும் (Racial Hatred) ஆட்சி அடக்குமுறைக்கும் (Oppression) எதிரான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தின. இதன் தாக்கம் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகங்களிலும் வலுவான அடையாளமாக ஒலித்தது.
Enter the Dragon மற்றும் சர்வதேச புகழ்
ஹாங்காங் திரைப்படங்களின் வெற்றி ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாக, வார்னர் பிரதர்ஸ் (Warner Bros.) ஆதரவுடன் உருவான முதல் ஹாலிவுட்–ஹாங்காங் கூட்டு தயாரிப்பான “Enter the Dragon” திரைப்படத்தில் புரூஸ் லீ நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம், ஹாலிவுட் தயாரிப்பில் தலைமை கதாபாத்திரம் வகித்த முதல் ஆசிய அமெரிக்க நடிகர் என்ற வரலாற்றுச் சிறப்பை (Historic Distinction) அவர் பெற்றார். துரதிர்ஷ்டவசமாக, திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 1973 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று அவர் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு வெளியான “Enter the Dragon” திரைப்படம் சர்வதேச அளவில் அவரை அழியாத நட்சத்திரமாக நிலைநிறுத்தியது.
1972 ஆம் ஆண்டு தனது கனவுத் திட்டமாக “The Game of Death” திரைப்படத்தை இயக்கி, எழுதி, தயாரித்து, நடித்தார் புரூஸ் லீ. ஆனால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக, “Enter the Dragon” படப்பிடிப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. புரூஸ் லீ மறைந்த பின்னர், இயக்குநர் ராபர்ட் க்ளூஸ் (Robert Clouse) மற்றும் தயாரிப்பாளர் ரேமண்ட் சோவ் (Raymond Chow) ஆகியோரின் ஆதரவுடன் Stand-in கலைஞர்களைப் பயன்படுத்தி திரைப்படம் இயன்றவரை நிறைவு செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டு Golden Harvest நிறுவனம் மூலம் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மரணமும் மருத்துவ விசாரணையும்
1973 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று, நடிகை பெட்டி டிங் (Betty Ting Pei) அவர்களின் வீட்டில் இருந்த புரூஸ் லீக்கு திடீரென சிறிய தலைவலி ஏற்பட்டது. அவர் வழக்கமாக எடுத்துக்கொள்வதாகக் கூறப்பட்ட Equagesic என்ற வலி நிவாரணி மாத்திரையை பெட்டி டிங் வழங்கினார். அதை உட்கொண்ட பிறகு அவர் ஓய்வெடுக்க படுக்கையறைக்கு சென்றார். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அவரை எழுப்ப முயன்றபோது பதில் அளிக்கவில்லை. உடனடியாக மருத்துவ உதவி அழைக்கப்பட்டாலும், அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்; மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் முன்பே அவர் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 32 மட்டுமே.
பின்னர் விரிவான தடயவியல் நோயியல் (Forensic Pathology) விசாரணை நடத்தப்பட்டது. ஒன்பது நாள் மரண விசாரணையில் பல்வேறு நிபுணர்கள் சாட்சி அளித்தனர். பிரேத பரிசோதனையை (autopsy) மேற்கொண்ட டாக்டர் லைசெட் (Dr. Lycette) அவர்களின் அறிக்கையில், மூளையின் எடை 1,400 கிராமிலிருந்து 1,575 கிராமாக அதிகரித்திருந்தது குறிப்பிடப்பட்டது. Equagesic மருந்தில் உள்ள கூறுகள் அஸ்பிரின் ஒவ்வாமையை (Aspirin Allergy) தூண்டி, மூளையில் திரவ வீக்கமான (Cerebral Edema) நிலையை ஏற்படுத்தியதால் கோமா மற்றும் மரணம் ஏற்பட்டதாகத் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக, அதிகாரப்பூர்வமாக அவரது மரணம் தற்செயல் மரணம் (Death by Misadventure) என அறிவிக்கப்பட்டது.
புதிய மருத்துவ கோணம்
புரூஸ் லீ அவர்களின் வயிற்றில் கஞ்சா (Cannabis) தடயங்களும் கண்டறியப்பட்டன. இருப்பினும் 1973 ஆம் ஆண்டில் கஞ்சாவால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த மருத்துவ ஆய்வுகளும் விழிப்புணர்வும் இன்றைய அளவிற்கு விரிவாக இல்லாததால், தடயவியல் நிபுணர் டொனால்ட் டீரே (Donald Teare) கஞ்சாவால் மரணம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவ்வாறு கூறுவது பொறுப்பற்றதாகும் என்றும் தெரிவித்தார். அதனால் அந்நேரத்தில் கஞ்சா அவரது மரணத்திற்கான முக்கிய காரணமாக கருதப்படவில்லை.
இதற்கு மாற்றாக, 2022 ஆம் ஆண்டு Clinical Kidney Journal இதழில் வெளியான ஆய்வு ஒன்று, ரத்தத்தில் சோடியம் அளவு குறைபாடு (Hyponatremia) அவரது மரணத்திற்கான சாத்தியமான காரணமாக இருக்கலாம் என முன்மொழிந்தது. அதிகப்படியான தண்ணீர் அருந்துதல் மற்றும் கஞ்சா பயன்படுத்துதல் ஆகியவை சேர்ந்து சோடியம் அளவை குறைத்து, மூளை வீக்கத்தை அதிகரித்திருக்கலாம் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மரண காரணம் “Death by Misadventure” என்பதே இன்று வரை மாற்றமின்றி உள்ளது.
சதி கோட்பாடுகள்
புரூஸ் லீயின் மரணம் குறித்து எழுதப்பட்ட சதி கோட்பாடுகள், முற்றிலும் கற்பனையான ஊடக அறிக்கைகளை (Media Reports) அடிப்படையாகக் கொண்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கோட்பாடுகளில் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அவை ஒரு அசாதாரண மனிதனின் மரணத்தை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள மறுத்த மக்களின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன.
பெட்டி டிங் மீதான குற்றச்சாட்டு
பெட்டி டிங் வீட்டில் புரூஸ் லீ காலமான நிலையில், தயாரிப்பாளர் ரேமண்ட் சோவ் தரப்பில் இருந்து, மனைவி லிண்டா அருகிலிருந்தபோது புரூஸ் லீ காலமானார் என்ற தவறான செய்தி பரப்பப்பட்டது. ஆனால் ஹாங்காங் பத்திரிகைகள் பின்னர் உண்மையை வெளிக்கொணர்ந்தன. அதன் பின்னர், புரூஸ் லீ மற்றும் பெட்டி டிங் இடையே காதல் உறவு இருந்ததாகவும், அந்த உறவை முடிக்க புரூஸ் லீ விரும்பியதால் பழிவாங்கும் நோக்கில் பெட்டி டிங் அவருக்கு அபாயகரமான மருந்து கொடுத்ததாகவும் அதனால் புரூஸ் லீ காலமானதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டினர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
கஞ்சா சம்பந்தப்பட்ட கோட்பாடு
புரூஸ் லீயின் வயிற்றில் கஞ்சா தடயம் கண்டறியப்பட்டதால், அதுவே அவரது மரணத்திற்கான காரணம் என்று சிலர் வாதிட்டனர். புரூஸ் லீக்கு சிறிதளவு மது அருந்தினாலே முகம் சிவந்து குமட்டல் ஏற்படும் என்பதால், அவர் கஞ்சாவை விரும்பினார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும், தடயவியல் நிபுணர்கள் கஞ்சாவால் மட்டுமே மரணம் ஏற்பட்டது என்ற கோட்பாட்டை நிராகரித்தனர்.
ரேமண்ட் சோவ் மீதான சந்தேகம்
புரூஸ் லீயின் அகால மரணத்தால் அவரது திரைப்படங்களை சர்வதேச சந்தையில் மிக அதிக விலைக்கு விற்க முடியும் என்று தயாரிப்பாளர் ரேமண்ட் சோவ் எண்ணியிருக்கலாம் என்றும், அதனால் புரூஸ் லீயின் மரணத்தில் அவரது பங்கு இருந்திருக்கலாம் என்றும் கதைக்கப்படுகிறது. புரூஸ் லீயை வைத்து படமாக்கப்பட்ட 11 நிமிட காட்சிகளையும், “Stand-in” கலைஞரை பயன்படுத்தியும், புரூஸ் லீயின் நிஜ வாழ்க்கை இறுதிச் சடங்கின் காட்சிகளை வெட்கமற்ற முறையில் சேர்த்தும் “The Game of Death” திரைப்படத்தை ரேமண்ட் சோவ் தயாரித்தது இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். இருப்பினும், எந்தவித குற்றவியல் ஆதாரமும் (Criminal Evidence) இல்லாதது கவனிக்கத்தக்கது.
குடும்ப சாபம் என்ற கோட்பாடு
புரூஸ் லீயின் இறப்பிற்கு குடும்ப சாபமே காரணம் என்ற கோட்பாட்டை நம்புபவர்கள், அவர் பிறப்பதற்கு முன்பே அவரது பெற்றோர் ஒரு மகனை இழந்திருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். “The Game of Death” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, புரூஸ் லீயின் கதாபாத்திரம் சுடப்படுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன; அதேபோல், அவரது மகன் பிராண்டன் லீயும் 1993 ஆம் ஆண்டு “The Crow” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தற்செயலாக படப்பிடிப்பு தளத்தில் சுடப்பட்டார் என்ற ஒற்றுமையையும் அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். ஆனால், இந்தக் கோட்பாட்டை மறுக்கும் வகையில், புரூஸ் லீயின் மூத்த சகோதரர் பீட்டர் லீ (Peter Lee) 69 வயது வரை வாழ்ந்தார் என்றும், இளைய சகோதரர் ராபர்ட் லீ (Robert Lee) இன்றும் உயிருடன் உள்ளார் என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குங்பூ மாஸ்டர்களின் கோபம்
1964 ஆம் ஆண்டு நடைபெற்ற தற்காப்புக் கலைச் சண்டையில் (Martial Arts Duel), ‘தான் வென்றால் புரூஸ் லீ அமெரிக்க மாணவர்களுக்கு கற்பிப்பதை நிறுத்த வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் வோங் ஜாக் மேன் (Wong Jack Man) புரூஸ் லீயுடன் மோதினார். சர்ச்சைக்குரிய போட்டியின் முடிவில் புரூஸ் லீ வென்றதாகக் கூறப்பட்டது. பின்னர், ஆணவப் போக்குடன் சண்டையிட்டதற்கு வோங் ஜாக் மேன் வருத்தம் தெரிவித்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், பழங்கால சீனக் கலை நுட்பங்களை சீனரல்லாத வெளிநாட்டு மாணவர்களுக்கு புரூஸ் லீ தொடர்ந்து கற்றுக்கொடுத்ததால் கோபமடைந்த சீன குங்பூ மாஸ்டர்களின் குழுவால் அவர் கொல்லப்பட்டார் என்ற கோட்பாடும் உள்ளது. இந்த கோட்பாட்டிற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை என்பதே உண்மை.
மாபியா கொலை கோட்பாடு
புரூஸ் லீயின் வெற்றி திரைப்படங்கள் சீன மொழி திரைப்படத் துறையின் வளர்ச்சியை அச்சுறுத்தியதால் சீன மாபியா கும்பல் அவரை கொலை செய்தது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். புரூஸ் லீ பணம் கொடுக்க மறுத்ததால் ஹாங்காங் மாபியா கும்பல் அவரை கொன்றதாகவும் சில குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்தக் கோட்பாடுகளும் நிரூபிக்கப்படாமலே உள்ளன.
இத்தனை சதி கோட்பாடுகள் இருந்தபோதிலும், புரூஸ் லீ உலகளவில் ஒரு அடையாளச் சின்னமாகவே நிலைத்திருக்கிறார். இந்தக் கோட்பாடுகள் அவரது தனிப்பட்ட கவர்ச்சியையோ, உடல் வலிமையையோ, அல்லது திரைப்படங்களின் மாயாஜாலத்தையோ மங்கச் செய்யவில்லை எனச் சொன்னால் அது மிகையாகாது.
உலகளவில் தாக்கம்
1970 களில் புரூஸ் லீயின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது என்றால் அது மிகையாகாது. 1960 களில் ஹாலிவுட் திரைப்பட உலகில் Detective மற்றும் Cowboy திரைப்படங்கள் ஏற்படுத்திய எழுச்சியை, 1970 களில் புரூஸ் லீயின் சாகசத் திரைப்படங்கள் ஒரு வகையில் தணித்தன. பாரம்பரிய தற்காப்புக் கலைத் திறன் மூலம் உலகத் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளை மாற்றியமைத்ததுடன், ஹாலிவுட் உலகில் ஆசியர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் புரூஸ் லீ ஒரு முக்கிய தூண்டுகோலாக (Catalyst) இருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.
1970 களின் பிற்பகுதியில், சில இந்திய நடிகர்கள் தங்களின் சண்டைக் காட்சிகளில் புரூஸ் லீயின் பாணியைப் பின்பற்ற முயற்சி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், புரூஸ் லீயின் ரசிகர்கள் அதிகரித்ததன் விளைவாக இந்தியாவில் கராத்தே (Karate) பயிற்சி பள்ளிகள் பெருமளவில் தொடங்கப்பட்டன. அக்காலகட்டத்தில் மறைந்த நடிகர் கராத்தே மணி (Karate Mani) தமிழ்நாட்டில் பிரபலமான கராத்தே மாஸ்டராக விளங்கினார்.
இன்னொரு நாயகன் உதயமானார்
“Enter the Dragon” திரைப்படத்தில் பல எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் சண்டைக் காட்சியில், பெயர் தெரியாத எதிரிகளில் ஒருவராக ஒரு இளம் ஸ்டண்ட் நடிகர் பணியாற்றினார். அந்தக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, புரூஸ் லீ தன்னை தாக்கிய அந்த ஸ்டண்ட் நடிகரின் முகத்தில் தவறுதலாக மர தடியால் அடித்தார். காயமடைந்த ஸ்டண்ட் நடிகரிடம் புரூஸ் லீ விரைந்து சென்று நலம் விசாரித்தார். ஸ்டண்ட் நடிகரின் கரிசனத்தால் நெகிழ்ந்த புரூஸ் லீ, பின்னரும் அவரையே பல்வேறு ஸ்டண்ட் காட்சிகளுக்கு தொடர்ந்து தேர்ந்தெடுத்தார்.
பின்னாளில் அந்த ஸ்டண்ட் நடிகர் அளித்த நேர்காணல்களில், “ஒவ்வொரு நாளும் உதைக்கப்பட்டும், குத்தப்பட்டும், அடிபட்டும் பழகியவன் தான் நான். ஆனால் புரூஸ் லீ தவறுதலாக என்னை காயப்படுத்தியபோது, அவர் காட்டிய அக்கறை என்னை மிகவும் நெகிழச் செய்தது. அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக உள்ளது. என் திரையுலகப் பயணத்திற்கும் அவர் ஒரு பெரும் உத்வேகமாக (Inspiration) இருந்தார்” என்று நினைவுகூர்ந்துள்ளார். புரூஸ் லீ விதைத்த விதைகளில் முளைத்த அந்த ஸ்டண்ட் நடிகர் பின்னர் உலகப் புகழ் பெற்ற ஜாக்கி சானாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கௌரவங்கள்
1993 ஆம் ஆண்டு, ஹாலிவுட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (Hollywood Chamber of Commerce) வழங்கும் Walk of Fame இல் புரூஸ் லீக்கு நட்சத்திரம் வழங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு, TIME பத்திரிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் 100 முக்கிய நபர்கள் பட்டியலில், Heroes & Icons பிரிவில் புரூஸ் லீ சேர்க்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு, பிரீமியர் (Premiere) பத்திரிகை காலமான பிரபல திரை நட்சத்திரங்களில், வால்ட் டிஸ்னி (Walt Disney) மற்றும் ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick) ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகச் செல்வாக்கு மிக்க ஆளுமையாக புரூஸ் லீயை பட்டியலிட்டது. 2013 ஆம் ஆண்டு, Sports Illustrated வெளியிட்ட சர்வகால சிறந்த 50 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 15 ஆம் இடத்தில் புரூஸ் லீ இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு, இனப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக, Bosnia நாட்டின் Mostar நகரில் புரூஸ் லீயின் சிலை நிறுவப்பட்டது. மேலும், 2013 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் Chinatown பகுதியில் அமெரிக்காவின் முதல் புரூஸ் லீ சிலையை நிறுவுவதில், அவரது மகள் ஷானன் லீ முக்கிய பங்காற்றினார்.
ஆய்வாளர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால், 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய கலைஞராகவும் கலாச்சாரச் சின்னமாகவும் புரூஸ் லீ கருதப்படுகிறார். தனது திரைப்படங்களில் தேசியவாத உணர்வுகளை (Nationalist Sentiments) பிரதிநிதித்துவப்படுத்தியதன் காரணமாக, உலகம் முழுவதும், குறிப்பாக அரசியல் ஆர்வலர்களிடையே, அவர் பரவலாக அறியப்பட்டவராக விளங்கினார் என்று கூறினால் அது மிகையாகாது.
புரூஸ் லீ குடும்பம்
1973 ஆம் ஆண்டு புரூஸ் லீ காலமான பிறகு, அவரது மனைவியும் தற்காப்புக் கலை கலைஞருமான லிண்டா லீ (Linda Lee) தனது குழந்தைகளை வளர்ப்பதில் முழு கவனம் செலுத்தினார். பின்னர் 1988 ஆம் ஆண்டு டாம் பிளீக்கர் (Tom Bleecker) என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1990 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த லிண்டா லீ, 1991 ஆம் ஆண்டு பங்குத் தரகர் புரூஸ் கேட்வெல் (Bruce Cadwell) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
புரூஸ் லீயின் மகளும் பிராண்டன் லீயின் தங்கையுமான ஷானன் லீ, 1994 ஆம் ஆண்டு அந்தோனி இயன் கீஸ்லர் (Anthony Ian Keasler) என்பவரை திருமணம் செய்து பின்னர் பிரிந்தார். இவர்களுக்கு ரென் (Ren) என்ற ஒரு மகள் உள்ளார். 2002 ஆம் ஆண்டு புரூஸ் லீ அறக்கட்டளை (Bruce Lee Foundation) நிறுவப்பட்டது. சில திரைப்படங்களில் நடித்தும், சில தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தும் வரும் ஷானன் லீ, தனது தந்தையின் புகழையும் தத்துவத்தையும் உலகெங்கும் பரப்பும் முயற்சிகளில் முன்நிலையில் உள்ளார்.
பிராண்டன் லீ
ஓக்லன்ட்டில் பிறந்து ஹாங்காங்கில் வளர்ந்த பிராண்டன் லீ, தனது தந்தை புரூஸ் லீயின் மரணத்திற்குப் பிறகு சியாட்டிலில் குடியேறினார். நியூயார்க் (New York) நகரில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனம் (Lee Strasberg Theatre & Film Institute) யில் நடிப்பு பயிற்சி பெற்றதுடன், பாஸ்டன் (Boston) நகரில் உள்ள எமர்சன் கல்லூரியில் (Emerson College) நாடகக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். தனது வருங்கால மனைவி எலிசா ஹட்டன் (Eliza Hutton) உடன் வாழ்ந்த பிராண்டன் லீ, ஆற்றல்மிக்கவும் கவர்ச்சியூட்டுவதாகவும் திறமையான நடிகராக அறியப்பட்டார்.
1993 மார்ச் 31 அன்று, The Crow திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் மைக்கேல் மாசி (Michael Massee) பிராண்டன் லீயை சுடும் காட்சியை படக்குழு படமாக்கிக் கொண்டிருந்தது. வெற்று தோட்டாக்களால் நிரப்பப்பட்டதாக கருதப்பட்ட துப்பாக்கிக்குள் உண்மையான தோட்டா துண்டு இருந்தது யாருக்கும் தெரியவில்லை. அந்தக் காட்சியில் சுடப்பட்ட தோட்டாத்துண்டு பிராண்டன் லீயின் வயிற்றுப் பகுதியில் பாய்ந்து கடுமையான காயம் ஏற்படுத்தியது. ஆறு மணி நேர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் பலனளிக்காமல், மதியம் 1:03 மணியளவில் அவர் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 28 மட்டுமே.
பிராண்டன் லீயின் மரணம் திரைப்படப் படப்பிடிப்புகளில் துப்பாக்கி கையாளுதல் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளில் நிரந்தரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கு பிறகு வெளியான The Crow திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டையும், வணிக ரீதியாக வெற்றியையும் பெற்றது. 32 வயதில் காலமான புரூஸ் லீயும், 28 வயதில் காலமான அவரது மகன் பிராண்டன் லீயும் சியாட்டில் (Seattle) நகரில் உள்ள லேக் வியூ கல்லறையில் (Lakeview Cemetery) ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முடிவுரை
புரூஸ் லீயின் கதை, சிறுமைப்படுத்தப்படுவதை (Marginalization) மறுத்த ஒரு மனிதனின் கதை. ஹாலிவுட்டில் தலைமை கதாபாத்திரம் மறுக்கப்பட்டபோது, தன்னை நிரூபிக்க அவர் வேறு மேடை தேடினார். “சீன மாணவர்களுக்கு மட்டுமே குங்பூ கற்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டபோது, உலகிற்கே கற்பித்தார். வெறும் சினிமா நட்சத்திரம் என்று தள்ளி வைக்கப்பட்டபோது, தத்துவஞானியாக உலகை வழிநடத்தினார்.
32 வயதில் அகால மரணம் (Untimely Death) அடைந்த புரூஸ் லீ, அந்த குறுகிய வாழ்நாளில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தினார். தனது திரைப்படங்கள் மூலம் ஆசியர்களைப் பார்க்கும் உலகின் பார்வையை மாற்றினார். தற்காப்புக் கலையை வன்முறையின் கருவியாக அல்ல, தன்னறிவின் பாதையாக உலகுக்கு எடுத்துரைத்தார். சாகசத் திரைப்படக் கலையின் கதை சொல்லும் முறையை தலைகீழாக மாற்றினார்.
புரூஸ் லீ எப்படி இறந்தார் என்று ஆச்சரியப்படும் பலர், அவரைச் சுற்றியுள்ள சதிக்கோட்பாடுகளை ஆராய முயல்கிறார்கள். ஆனால் அதைவிட அவர் எப்படி வாழ்ந்தார் என்பதையே மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். தனது சுய வெளிப்பாடு, சமத்துவக் கண்ணோட்டம், தத்துவ சிந்தனை மற்றும் தற்காப்புக் கலை ஆகியவற்றின் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களை புரூஸ் லீ தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. உடலால் மறைந்தாலும், அழியாப் புகழால் என்றும் வாழ்பவர் புரூஸ் லீ.
விவரணைகள்
புரூஸ் லீயின் கதை - News 7 Channel
Bruce Lee's Death Revealed - History Channel
Japan’s Enduring Love of Bruce Lee
Who killed Bruce Lee? The Hyponatremia Hypothesis
Bruce Lee's Murder Theory
Real Story of Bruce Lee's Death
Brandon Lee Death Cause
Bruce Lee Conspiracy
Bruce Lee Philosophy
Bruce Lee Quotes
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.











No comments:
Post a Comment