Chocks: சீனா - திபெத் அரசியல்

Saturday, February 12, 2022

சீனா - திபெத் அரசியல்

சீனா - திபெத் அரசியல்

சுருக்கம் 
  1. முகவுரை
  2. மங்கோலிய பேரரசு
  3. சாக்கிய லாமா
  4. தலாய் லாமா
  5. சீன தேசியவாத கட்சி 
  6. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 
  7. பதினேழு அம்ச ஒப்பந்தம்
  8. தலாய் லாமா தப்பித்தார்
  9. இந்திய - சீனப் போர் 
  10. திபெத் தன்னாட்சி பகுதி
  11. நோபல் பரிசு
  12. முடிவுரை 
  13. விவரணைகள் 
முகவுரை

வரலாற்றுக்கு முந்தைய கால திபெத் குறித்து புராணக் கதைகளை தவிர்த்து முறையாக பதிவு செய்யப்படவில்லை. ஆனால், 7ஆம் நூற்றாண்டில் திபெத் இராஜ்ஜிய பேரரசர் சாங்ட்சான் காம்போவின் (Songtsen Gampo) ஆட்சியின் கீழ் முதன்முதலில் இந்திய பௌத்த நூல்கள் திபெத்தில் மொழிபெயர்த்து பௌத்த மதத்தை அறிமுகப்படுத்திய பிறகு நம்பகமான வரலாறு தொடங்குகின்றன. 

இந்த காலகட்டத்தில் திபெத்திய எழுத்து முறையும் திபெத்திய பாரம்பரியமும் நன்கு வளர்ச்சியை கண்டது. இந்தியாவில் இருந்து பௌத்தம் திபெத்தில் 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை தீவிரமாக பரப்பப்பட்டது. இதையொட்டி, திபெத்திய பௌத்தம் பள்ளிகள் பல உருவாக்கப்பட்டது.
மங்கோலிய பேரரசு

842 இல் திபெத் இராஜ்ஜியத்தின் கடைசிப் பேரரசரான லாங்தர்மா (Langdarma) காலமான பிறகு திபெத்தில் ஒற்றுமை கடுமையாக பாதிக்கப்பட்டு சீர்குலைந்தது. 9 முதல் 11ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் துண்டு துண்டான சகாப்தத்தின் போது (Era of Fragmentation) திபெத்தில் பௌத்த வளர்ச்சி குறைந்து திபெத்தியர்கள் பலர் வணிகர்களாக இருந்தனர். 

பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் மங்கோலிய இளவரசர் கோடன் (Godan) சாக்ய லாமாவையும் முன்னணி திபெத்திய பிரமுகர்களையும் அழைத்து மங்கோலிய அதிகாரத்திற்கு அடிபணியுமாறு வலியுறுத்தியதன் விளைவாக ஒருங்கிணைந்த திபெத் மங்கோலிய பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது. இதுவே மங்கோலியர்கள் மற்றும் திபெத்தியர்கள் இடையே புரவலர் மற்றும் பாதிரியார் (Patron and Priest) உறவை நிறுவியது. இதையொட்டி திபெத்திய பௌத்தம் திபெத்தை தாண்டி மங்கோலியா மற்றும் சீனா வரை பரவியது.

சாக்கிய லாமா

மங்கோலியப் பேரரசு நான்காக பிரிக்கப்பட்ட பிறகு குப்லாய் கான் (Kublai Khan) யுவான் பேரரசை நிறுவி திபெத் பகுதியை இணைத்துக் கொண்டார். ஒற்றுமையற்ற மங்கோலிய பழங்குடியினருக்கு பௌத்தம் ஆன்மீக மையமாக விளங்கியதால் குப்லாய் கான் திபெத்திய பௌத்த சாக்கிய பள்ளியின் 5வது தலைவரான ட்ரோகன் சோக்யால் பாக்பா (Drogon Chogyal Phagpa) என்ற சாக்கிய லாமாவுக்கு புரவலர் மற்றும் பாதிரியார் உறவின் அடிப்படையில் கணிசமான உள்ளூர் அதிகாரங்களை வழங்கினார். 

யுவான் ஆட்சியின் போது ​​சீனா மற்றும் திபெத் ஆகிய இரண்டும் குப்லாய் கானின் கீழ் மங்கோலியர்களால் ஆளப்பட்டன. மேலும் யுவான் ஆட்சி (1271-1368) காலத்தில் திபெத்தின் ஒருங்கிணைப்பு சாக்கிய லாமாவின் கீழ் நிறுவப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். 

தலாய் லாமா

4வது பௌத்த பள்ளியாக திபெத்திய பௌத்த கெலுக் பள்ளி ஒப்பீட்டளவில் தாமதமாக 15ஆம் நூற்றாண்டில் தான் நுழைந்தது. 1578 இல் மங்கோலிய பேரரசர் அல்தான் கான் (Altan Khan) 3வது தலாய் லாமாவான சோனம் கியாட்சோவுக்கு (Sonam Gyatso) “ஞானத்தின் பெருங்கடல்” என்று பொருள்படும் “தலாய் லாமா” (Dalai Lama) பட்டத்தை முதன்முதலாக வழங்கினார். நாளடைவில் தலாய் லாமாவின் அபார வளர்ச்சியால் சாக்யா லாமாவின் அரசியல் எழுச்சி தணிந்தது. பாரம்பரிய திபெத்திய பௌத்தத்தின் கெலுக் பள்ளியில் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக அதிகாரம் கொண்ட மிக முக்கியமான நபர்களில் பஞ்சன் லாமாவும் (Panchen Lama) ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

17ஆம் நூற்றாண்டில் 5வது தலாய் லாமா நகாவாங் லோப்சங் கியாட்ஸோவின் (Ngawang Lobsang Gyatso) காலத்தில் திபெத் உள்நாட்டு அரசியல் குழப்பத்தில் இருந்தது. கோஷாட் (Khoshut) பேரரசர் குஷி கான் (Kushi Khan) அளித்த இராணுவ உதவியால் குழப்ப நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தார் 5வது தலாய் லாமா. உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு திபெத்தை ஒருங்கிணைத்து காண்டன் ஃபோட்ராங் (Ganden Phodrang) என்ற திபெத்திய அரசை 1642 இல் நிறுவி 5வது தலாய் லாமா திபெத்தின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவராக அரியணை ஏறினார். மேலும் ஒரு சுதந்திரமான அரச தலைவராக சீன குயிங் பேரரசு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தினார். 

யுவான் (Yuan), மிங் (Ming), குயிங் (Qing) பேரரசுகள் மற்றும் சீன தேசியவாத கட்சி (Chinese Nationalist Party) எழுச்சி பெற்ற வெவ்வேறு காலகட்டத்தில் 1642 முதல் 1959 வரை பல்வேறு 10 தலாய் லாமாக்கள் பல்வேறு சமூக ஆதரவு மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு இடையில் திபெத்தை ஆண்டனர். 
சீன தேசியவாத கட்சி 

1720 இல் சீன குயிங் பேரரசு தங்கள் கண்காணிப்பில் உள்ள ஒரு பகுதியாக திபெத்தை கருதியது. 1894 முதல் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக 1911 இல் குயிங் பேரரசு வீழ்ந்தது. 1912 இல் சீன தேசியவாத கட்சி (Chinese Nationalist Party) சீனாவை சீனக் குடியரசு (Republic of China) என பெயரிட்டு ஆளத் தொடங்கியது. 

சீனாவில் ஏகாதிபத்திய ஆட்சி முடிவுக்கு வந்ததும் திபெத் தனது சுதந்திரத்தை மீண்டும் வலியுறுத்தியது. அதையொட்டி, குயிங் பேரரசை வீழ்த்திய புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் லாசாவில் நிலை கொண்டிருந்த சீனப் படைகளை வெளியேற்றி 1912 இல் திபெத்தின் சுதந்திரத்தை 13வது தலாய் லாமா அறிவித்தார். ஆனால், திபெத் முழுவதையும் கட்டுப்படுத்தும் தனது விருப்பத்தையும் உரிமைகளையும் சீனக் குடியரசு தொடர்ந்து சுட்டிக்காட்டியது திபெத்திய மக்களை வெறுப்படைய செய்தது. 1949 வரை சுதந்திரமாக ஆட்சி செய்திட சீனக் குடியரசின் ஆதிக்கத்தை எதிர்த்து திபெத் தொடர்ந்து போராடியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 

1949 இல் மாவோ சேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (Chinese Communist Party) சீன தேசியவாத கட்சியின் ஆட்சியை வீழ்த்தி சீனாவை கைப்பற்றி சீனக் குடியரசை சீன மக்கள் குடியரசு (People's Republic of China) என பெயரிட்டு ஆளத் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திபெத்தில் கீழ்மட்ட விவகாரங்களை தலாய் லாமா கவனித்துக் கொள்ளவும் உயர்மட்ட விவகாரங்களை சீன மக்கள் குடியரசு கவனித்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் நாளடைவில் தலாய் லாமாவின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்க சீன மக்கள் குடியரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் கம்யூனிசத்தை பரப்பும் நோக்கத்துடன் திபெத்தில் உள்ள பௌத்த மடங்களை எரித்தும் பௌத்த சின்னங்களை அழித்தும் பௌத்த துறவிகளை சிறையில் தள்ளியும் பௌத்த வாழ்க்கை முறையை அச்சுறுத்தியும் வந்தது சீன மக்கள் குடியரசு.
பதினேழு அம்ச ஒப்பந்தம்

1951 இல் சீன மக்கள் குடியரசு கொடுத்த அழுத்தம் காரணமாக திபெத்திய தலைவர்கள் பதினேழு அம்ச ஒப்பந்தத்தில் (Seventeen Point Agreement) கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் திபெத்துக்கு சுயாட்சி வழங்குவதாகவும் பௌத்த மதத்தை மதிப்பதாகவும் கூறினாலும் திபெத்தின் தலைநகர் லாசாவில் சீன சிவில் மற்றும் ராணுவ தலைமையகத்தை நிறுவ அனுமதிக்கிறது கவனிக்கத்தக்கது.

பதினேழு அம்ச ஒப்பந்தத்தை ஒரு சட்ட ஒப்பந்தமாக இரு அரசாலும் பரஸ்பரம் வரவேற்கப்பட்டதாக கருதுகிறது சீன மக்கள் குடியரசு. இருப்பினும் கட்டாயத்தின் பேரில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் செல்லாது என்று 14வது தலாய் லாமாவும் திபெத்திய மக்களும் கருதுகின்றனர். பதினேழு அம்ச ஒப்பந்தத்தின் மூலம் திபெத்தில் 70 ஆண்டுகால அடக்குமுறையை சீனா மேற்கொண்டு வருவதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

தலாய் லாமா தப்பித்தார்

1950 கள் முதல் திபெத்தின் பௌத்த வாழ்வியல் முறையை கடுமையாக ஒடுக்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதமேந்திய படையெடுப்பை எதிர்த்து திபெத்தியர்கள் படிப்படியாக கிளர்ச்சியில் ஈடுபட தொடங்கினர். மேற்குலக ஆதரவுக்கு இணங்க திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை நிறுத்தி வைப்பதாக சீன மக்கள் குடியரசு சுட்டிக்காட்டிய போதும் திபெத்தில் கிளர்ச்சி தொடர்ந்தது.

1959 இல் திபெத் தலைநகர் லாசாவில் முழு அளவிலான புரட்சி வெடித்ததையொட்டி பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்களைக் கொன்றும் சிறையில் தள்ளியும் திபெத்தியப் புரட்சியை சீன மக்கள் குடியரசு கொடூரமாக நசுக்கியது. இதை தொடர்ந்து 14 வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ (Tenzin Gyatso) தனது அமைச்சர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான திபெத்தியர்களுடன் இந்தியாவிலுள்ள தர்மசாலாவுக்கு தப்பி சென்றார். அங்கு அவர் நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுக்கான அரசு நிர்வாகப் பணிகளை (Government in Exile) ஏற்றுக் கொண்டார். அன்றைய காலகட்டத்தில் இந்தியா பிரதமர் நேரு திபெத்தியர்களின் மீட்பராக செயல்பட்டார் என்றால் மிகையல்ல. இன்று இந்தியாவில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட திபெத்திய அகதிகள் உள்ளனர்.
இந்திய - சீனப் போர் 

1954 இல் பிராந்திய ஆக்கிரமிப்பு இல்லாத ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை வலியுறுத்தி கையெழுத்தான சீன - இந்திய ஒப்பந்தத்தை (Sino - Indian Agreement, 1954) சீன மக்கள் குடியரசு 1962 போரின் மூலம் காற்றில் பறக்கவிட்டது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான இமயமலை எல்லை மோதல் மற்றும் 1959 இல் தலாய் லாமாவுக்கு இந்தியா பிரதமர் நேரு அடைக்கலம் கொடுத்த காரணத்தால் இந்திய - சீனப் போர் (20 அக்டோபர் 1962 - 21 நவம்பர் 1962) நடைபெற்றது. இறுதியாக இப்போரில் இந்தியாவை தோற்கடித்து இந்தியாவின் லடாக்கில் உள்ள அக்சாய் சின் (Aksai Chin) பகுதியை சீனா கைப்பற்றியது. 

சீனாவின் திட்டமிட்ட தீடீர் தாக்குதலை எதிர்பார்க்காத நேரு சீனாவின் நம்பிக்கை துரோகத்தால் மனம் உடைந்து போனார் என்றால் மிகையல்ல. இந்திய - சீனப் போர் முடிந்த 18 மாதங்களுக்கு பிறகு நேரு காலமானதும் குறிப்பிடத்தக்கது.
திபெத் தன்னாட்சி பகுதி

காண்டன் ஃபோட்ராங் (Ganden Phodrang) என்ற திபெத்திய அரசு 1959 வரை 14வது தலாய் லாமாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1959 இல் நடைபெற்ற திபெத்திய கிளர்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு 1965 இல் தன்னாட்சி பிராந்தியமாக (Tibet Autonomous Region) சீனாவின் ஒரு மாகாணமாக திபெத்தை கைக்கொண்டது சீன மக்கள் குடியரசு. 

1966 இல் மாவோ சேதுங்கின் கலாச்சாரப் புரட்சியால் (Cultural Revolution) திபெத்தில் ஏராளமான பௌத்த மடங்கள் மற்றும் கலாச்சார கலைப்பொருட்கள் அழிக்கப்பட்டது. கல்வி மற்றும் மொழி கொள்கைக்கு பெயரளவில் சுயாட்சி அளித்துவிட்டு தன்னாட்சி நிர்வாகத்தின் மூலம் இன்றும் திபெத்தின் மீது உறுதியான பிடியை கொண்டிருக்கிறது சீன மக்கள் குடியரசு. 
நோபல் பரிசு

1987 இல் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமைக் குழுவில் "ஐந்து அம்ச அமைதித் திட்டம்" குறித்து 14வது தலாய் லாமா உரையாற்றினார். மேலும் 1989 இல் மக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் வரலாறையும் பாதுகாப்பதற்காக சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் அமைதிக்கான தீர்வுகளை பரிந்துரைத்ததற்காக 14வது தலாய் லாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முடிவுரை 

1980 களில் முழு சுதந்திர கோரிக்கையை கைவிட்டு சீனாவுக்கு கீழ் திபெத்திற்கு அரசியல் சுயாட்சி (Political Autonomy) பெற வழிவகுக்கும் ஒரு நடுத்தர வழி (Middle Way) அணுகுமுறையை தலாய் லாமா கோரினார். ஆனால், தலாய் லாமாவின் நடுத்தர வழி அணுகுமுறை ஒரு போலித்தனம் என்றும் அவர் உண்மையிலேயே சுதந்திர தாகத்தை கைவிடவில்லை என்றும் சீனா குற்றம் சாட்டியது.

சீனாவின் ஏழ்மையான பகுதியாக சுமார் 67 லட்சம் மக்களை கொண்ட திபெத்தை அமைதி மண்டலமாக நிறுவவும் திபெத்துக்கு உண்மையான சுயராஜ்ஜியத்தை அளிக்கவும் திபெத்தின் எதிர்காலம் குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும் 14வது தலாய் லாமா தயாராக இருந்தாலும் சீனா தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டதாக தெரியவில்லை. சுருங்கச் சொன்னால் எதிர்கால திபெத்தின் அமைதி குறித்து சர்ச்சையே நீடிக்கிறது.
விவரணைகள் 

Is Tibet a Country?


Cultural Revolution in Tibet




வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள்

இந்திய சமூகங்கள் மீதான அரசியல் படுகொலைகளின் விளைவுகள் பொருளடக்கம்  முகவுரை மகாத்மா காந்தியின் படுகொலை இந்திரா காந்தியின் படுகொலை ராஜீவ் காந்...