Chocks: சீனா - ஹாங்காங் அரசியல்

Saturday, February 12, 2022

சீனா - ஹாங்காங் அரசியல்

சீனா - ஹாங்காங் அரசியல்

சுருக்கம்
  1. முகவுரை
  2. அபின் போர்கள் 
  3. ஹாங்காங்கின் வளர்ச்சி
  4. ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்
  5. ஹாங்காங்கின் அரசியல்
  6. சீனாவின் ஆதிக்கம்
  7. குடை இயக்கம்
  8. 2019 ஹாங்காங் போரட்டம்
  9. முடிவுரை
  10. விவரணைகள் 
முகவுரை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் 1997 இல் பிரிட்டிஷ் அரசு தனது காலனி நாடான ஹாங்காங்கை ஒப்படைத்த போது ஹாங்காங்கின் பல தனித்துவமான அம்சங்களை சுதந்திரமாக அனுபவிக்க ஹாங்காங்கிற்கு 50 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதாகவும் பின்னர் வரும் ஆண்டுகளில் மேலும் முடிவு எடுப்பதாகவும் சீன அரசு உறுதியளித்தது. ஆனால், இன்று உலகின் மிக முக்கியமான நிதி மையங்களில் ஒன்றான ஹாங்காங்கில் ஜனநாயகத்தை கடுமையாக நிராகரிப்பதன் மூலம் சீனாவின் வாக்குறுதிகள் பொய்த்து போவதாக தெரிவது கவலைக்குரியது.

ஏன் அப்படி? வாருங்கள், இதைப் பற்றி மேலும் அறிய கட்டுரைக்குள் நுழைவோம். 

அபின் போர்கள் 

சீனர்கள் பிரிட்டிஷ் அபினை ஒரு பொழுதுபோக்கிற்கான போதைப்பொருளாக புகைத்தனர். ஆனால், நாளடைவில் பலருக்கு பொழுதுபோக்காக ஆரம்பித்தது விரைவில் ஒரு பெரிய போதையாக மாறியது. இதையொட்டி பிரிட்டிஷின் அபின் வர்த்தகத்தை சீன குயிங் பேரரசு எதிர்த்த காரணத்தால் 1839 இல் சீனாவுக்கும் பிரிட்டிஷிக்கும் இடையே முதல் அபின் போர் (First Opium War) தொடங்கியது. 1841 இல் சிறிய மீன்பிடி சமூகமாகவும் கடற்கொள்ளையர்களுக்கு புகலிடமாகவும் அரிதாக மக்கள் வசித்த இடமாகவும் விளங்கிய ஹாங்காங்கை ஆக்கிரமித்து அதை இராணுவ நிலையமாக பயன்படுத்த தொடங்கியது பிரிட்டிஷ். இறுதியாக 1842 இல் நான்கிங் ஒப்பந்தத்தின் (Treaty of Nanking) மூலம் முதல் அபின் போரை முடிவுக்கு கொண்டு வந்த சீன குயிங் பேரரசு ஹாங்காங்கை பிரிட்டிஷிற்கு வழங்கியது, வெளிநாட்டு வணிகர்களுக்கு ஐந்து சீன துறைமுகங்களை திறந்தது, வணிக சலுகைகளை வழங்கியது மற்றும் துறைமுக பகுதியில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீன சட்டம் பொருந்தாது என்பதை உறுதி செய்தது.
அபின் வர்த்தகத்தை இன்னும் எளிமையாக்கவும் சீனாவில் அதிகப்படியான வணிக சலுகைகளைப் பெறவும் பிரிட்டிஷும் பிரான்சும் கைகோர்த்து சீனாவுக்கு எதிராக 1856 இல் இரண்டாம் அபின் போரில் (Second Opium War) ஈடுபட்டது. 1860 இல் இரண்டாம் அபின் போர் முடிந்த பிறகு கவுலூன் தீபகற்பத்தை (Kowloon Peninsula) உள்ளடக்கியதாக பிரிட்டிஷ் காலனி விரிவடைந்தது. மேலும் 1898 இல் சீனாவிடம் இருந்து புதிய பிரதேசங்கள் (New Territories) என்று அழைக்கப்படும் ஹாங்காங்கின் எஞ்சிய பகுதிகளை 99 வருட குத்தகைக்கு பிரிட்டிஷ் பெற்ற போது ஹாங்காங்கின் எல்லை மேலும் நீட்டிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஹாங்காங்கின் நாகரீக வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் பிரிட்டிஷ் உறுதி செய்தது.

ஹாங்காங்கின் வளர்ச்சி

ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா ஆழ்கடல் துறைமுகம் ஆசியாவின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாகும். மேலும் பல சிறந்த துறைமுகங்களை கொண்ட ஹாங்காங் ஏற்றுமதி இறக்குமதி மையத்தின் துறைமுகமாக மாறியது. 1950 களில் ஹாங்காங் பெருநிறுவனங்களுக்கு சர்வதேச நிதி மையம், வணிக மையம் மற்றும் வர்த்தக மையமானது. சிறிய மீன்பிடி சமூகமாக இருந்த ஹாங்காங் நாளடைவில் "கிழக்கின் முத்து" ஆனது என்றால் மிகையல்ல. மேலும் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் நிலவிய உறுதியற்ற தன்மை, வறுமை அல்லது துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் ஹாங்காங் புகலிடமாக இருந்தது.
ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்

1980 களின் முற்பகுதியில் 99 ஆண்டு குத்தகைக்கான காலக்கெடு நெருங்கிய போது பிரிட்டிஷும் சீனாவும் ஹாங்காங்கின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன. சீனக் கம்யூனிஸ்ட் அரசு ஹாங்காங் முழுவதையும் மீண்டும் சீன ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வாதிட்டது. இறுதியாக 1984 இல் இரு தரப்பும் சீன-பிரிட்டிஷ் கூட்டு ஒப்பந்தத்தில் (Sino-British Joint Declaration) கையெழுத்திட்டது. 

இவ்வொப்பந்தம் மூலம் 99 ஆண்டு குத்தகைக்கான காலக்கெடு முடிந்த பிறகு 1997 முதல் “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” (One Country, Two Systems) என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதியாக (Hong Kong Special Administrative Region - HKSAR) நிர்வகிக்கப்படும் என்றும் 50 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை தவிர அதிக அளவிலான சுயாட்சியை கொண்டிருக்கும் என்றும் பிற்கால நிலை குறித்து வரும் ஆண்டுகளில் கலந்தாலோசிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

ஹாங்காங்கிற்கு சொந்த சட்ட அமைப்பு, எல்லைகள், ஒன்று கூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாப்பதாக கூறினாலும் கூட்டு ஒப்பந்தத்தை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையில் "தற்போதைய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு மாற்று ஒப்பந்தம் இல்லை" என்ற கூற்று சீனாவின் குறிப்பிடத்தக்க செல்வாக்கை சுட்டிக்காட்டுவதாக விமர்சிக்கப்பட்டது.
ஹாங்காங்கின் அரசியல்

1997 முதல் சீன கம்யூனிஸ்ட் அரசின் ஆதரவை பெற்றவர் மட்டுமே ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகியாக (Chief Executive of Hong Kong) பொறுப்பேற்கிறார். 75 லட்சம் மக்கள் தொகையும் 45 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1500 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழு மூலம் மட்டுமே தலைமை நிர்வாகி தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1997-2047 காலகட்டத்திற்குப் பிறகு ஹாங்காங்கின் அரசியல் நிலை என்னவாக அமையப்போகிறது என்பது எதிர்காலத்தில் தான் தெரியவரும்.
சீனாவின் ஆதிக்கம்

இன்று ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் சீரழிந்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஹாங்காங்கில் சொந்த சட்ட அமைப்பு வழங்கிய ஜனநாயக உரிமை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் கல்வி சுதந்திரம் வீழ்ச்சியடைந்து வருவதாக பரவலாகக் கருதப்படுகிறது. மேலும் ஹாங்காங்கில் அரங்கேறும் சீன ஆதிக்கத்தை விமர்சித்து கட்டுரைகள் எழுதிய ஹாங்காங் எழுத்தாளர்களை சீன அரசு கைது செய்தது. ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீன அரசு தலையிடுவதாக ஹாங்காங் மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன. இதையொட்டி, ஹாங்காங்கில் உள்ள பெரும்பாலான மக்கள் சீன இனத்தவர்களாக இருந்தாலும் ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் தங்களை சீனர்கள் என்று அடையாளப்படுத்துவதில்லை.
குடை இயக்கம்

2017 ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்தல் குறித்த தேசிய மக்கள் காங்கிரஸ் (National People's Congress - NPC) நிலைக்குழுவின் 2014 ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவின் அடிப்படையில் சீனா ஒரு உண்மையான ஜனநாயக தேர்தல் முறையை உருவாக்க விரும்பவில்லை என்ற அச்சத்தை ஏற்படுத்திய காரணத்தால் 2014 இல் ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது. 2014 ஹாங்காங் பொதுமக்கள் சீற்றத்தின் திடீர் வெடிப்புக்கு ஆழமான வேர்களைக் கொண்டிருந்தது.

2014 நிலைக்குழுவின் முடிவுக்கு முன்னர் வரை 2017 ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்தலை உள்ளூர் கருத்துகளின் வரம்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சீனத் தலைவர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் அணுகுவார்கள் என்று ஹாங்காங்கில் நம்பிக்கை நிலவியது. அதற்கு பதிலாக நிலைக்குழு வகுத்துள்ள புதிய விதிகளின்படி சீன அரசு தங்கள் நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடிய வகையில் நியமனக் குழுவைக் கட்டுப்படுத்த முடியும் என்ற உட்பொருளை வெளிப்பட்டது.

காவல்துறையினரின் மிளகு தெளிப்பான் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டக்காரர்கள் குடைகளைத் திறந்ததால் இந்த இயக்கத்திற்கு குடை இயக்கம் என்று பெயரிடப்பட்டது. ஹாங்காங் ஆட்சியின் உச்சபட்ச தலைவரான தலைமை நிர்வாகியை ஹாங்காங் மக்கள் அனைவரும் ஜனநாயக வழியில் ஓட்டளித்து தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்தம் கோரி குடை இயக்கம் போராடியது.
2019 ஹாங்காங் போரட்டம்

சீனா, தைவான் அல்லது மக்காவு பகுதிகளில் குற்றம் இழைத்து விட்டு தப்பியோடி வந்த ஹாங்காங்வாசிகளை சீனா, தைவான் அல்லது மக்காவு பகுதிகளுக்கு நாடு கடத்தி குற்ற வழக்கு விசாரணை நடத்த ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத் திருத்த மசோதாவை (Anti-Extradition Law Amendment Bill Movement) கேரி லாம் தலைமையிலான ஹாங்காங் அரசு பிப்ரவரி 2019 இல் முன்மொழிந்தது.
சீனாவிலிருந்து பூரண சுதந்திர அந்தஸ்து கோரும் அரசியல் ஆர்வலர்களையும் சீன அதிருப்தியாளர்களையும் நாடு கடத்துவதற்கு இந்த சட்ட மசோதா தவறாகப் பயன்படுத்தப்படும் என்று ஹாங்காங் மக்கள் கருதினர். இதையொட்டி, சீனாவின் கைப்பாவையாக செயல்படும் ஹாங்காங் அரசை விமர்சித்தும், சீனாவின் ஆதிக்கத்தை கண்டித்தும், புதிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 15 மார்ச் 2019 முதல் ஹாங்காங் மக்கள் கடுமையாக போராட தொடங்கினர். சீன அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஹாங்காங் அரசு முழு அரசு பலத்தை பயன்படுத்தி போராட்டத்தை நிறுத்த தங்களால் இயன்றவரை முயற்சித்தது. ஆனால், மக்களின் தொடர் போராட்டத்தால் ஹாங்காங் அரசு பணிந்தது. இறுதியாக 23 அக்டோபர் 2019 அன்று அதிகாரப்பூர்வமாக மசோதா திரும்பப் பெறப்பட்டது.

போராட்டத்தை கலவரம் என்று வகைப்படுத்தல் கூடாது, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல், காவல்துறையின் அட்டூழியங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை, ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஜனநாயக வாக்குரிமை வழங்குதல் போன்ற கோரிக்கையை எழுப்பிய மக்கள் குரலுக்கு ஹாங்காங் அரசு செவி சாய்க்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை

1997 இல் பிரிட்டிஷ் அரசு ஹாங்காங்கை ஒப்படைத்த போது "ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்" என்று அழைக்கப்படும் ஒரு கட்டமைப்பின் கீழ் 50 ஆண்டுகளுக்கு பிராந்தியத்திற்கு கணிசமான அரசியல் சுயாட்சியை அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் ஹாங்காங்கின் சுதந்திரத்தை ஒடுக்குவதன் மூலம் நகரத்தில் வெகுஜன எதிர்ப்புகளையும் சர்வதேச விமர்சனங்களையும் சீன அரசு சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலகட்டத்தில் ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் ஒப்பீட்டளவில் பதட்டமானவை. இப்போதும் ஹாங்காங்கில் சுதந்திரம் கோரி போராட காரணங்கள் அப்படியே தான் உள்ளன. ஆனால், ஹாங்காங் விடுதலை கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தெரியவில்லை. அதே நேரத்தில் ஹாங்காங்கில் சுதந்திரம் கோரிய போராட்ட உணர்வாளர்கள் உறங்கவில்லை என்பதையும் Be Water, My Friend என்று குறிப்பிட்ட One Man Army புரூஸ் லீ இதே ஹாங்காங்கிலிருந்து வந்தவர் என்பதையும் சான்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விவரணைகள் 


History of Hong Kong from Britain to Special Status

How Britain Got China Hooked on Opium?



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...