Chocks: சீனா - தைவான் அரசியல்

Sunday, February 13, 2022

சீனா - தைவான் அரசியல்

சீனா - தைவான் அரசியல்

சுருக்கம்
  1. முகவுரை
  2. தைவானிய மக்கள்
  3. முதலாம் சீன-ஜப்பானியப் போர்
  4. சீனாவில் தேசியவாத கட்சி ஆட்சி
  5. தேசியவாதமும் கம்யூனிஸ்டும் 
  6. இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்
  7. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி
  8. தைவானில் தேசியவாத கட்சி ஆட்சி
  9. முதலாம் கூட்டு அறிக்கை
  10. இரண்டாம் கூட்டு அறிக்கை
  11. தைவான் உறவுகள் சட்டம்
  12. மூன்றாம் கூட்டு அறிக்கை
  13. ஆறு உறுதிமொழிகள்
  14. சீனாவின் ஆசை வார்த்தை
  15. சுதந்திரத்தை நோக்கி தைவான்
  16. டிரம்ப்பும் பிடெனும்
  17. தைவானில் வளர்ச்சி
  18. சுருக்கமான கருத்து
  19. முடிவுரை
  20. விவரணைகள்
முகவுரை

தைவானின் அரசியல் நிலை தொடர்பான சர்ச்சை சீன உள்நாட்டு போரின் விளைவாகவும் சீனா தற்போது இரண்டாக பிரிந்ததன் விளைவாகும். சீன மக்கள் குடியரசு (சீனா என அழைக்கப்படுகிறது) மற்றும் சீனக் குடியரசு (தைவான் என அழைக்கப்படுகிறது) ஆகிய இரு நாட்டுக்கும் இடையே நிலவும் நாள்பட்ட பிரச்சனை தான் என்ன? வாருங்கள் அறிவோம்.

தைவானிய மக்கள்

தெற்கு சீனாவிலிருந்து வந்த ஆஸ்ட்ரோனேசிய (Austronesian) பழங்குடி மக்கள் தான் தைவானில் முதலில் அறியப்பட்ட பூர்வீக தைவானிய குடிகள் (Indigenous Taiwanese) என்று வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது.

நவீன சீனாவின் மஞ்சள் நதிப்படுகையைச் சேர்ந்த கிழக்கு ஆசிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஹான் சீனர்கள். ஹான் சீனர்கள் உட்பிரிவில் கான்டோனீஸ், மக்கானீஸ், ஹக்கா, ஹோக்லோ போன்ற பல துணை குழுக்கள் உள்ளன. சீனாவில் கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும்பான்மையான ஹான் சீனர்கள் சுமார் 120 கோடிக்கும் அதிகமாக சீன மக்கள் குடியரசின் நேரடி அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். 

17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் தைவானை காலனித்துவப்படுத்திய போது சீனாவில் நிலவிய இன்னல்களில் இருந்து தப்பிக்க சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தைச் சேர்ந்த ஹக்கா (Hakka) சீனர்கள் மற்றும் புஜியான் (Fujian) மாகாணத்தைச் சேர்ந்த ஹோக்லோ (Hoklo) சீனர்கள் கணிசமான எண்ணிக்கையில் தைவானில் குடியேறினர். ஹக்கா, ஹோக்லோ, பூர்வீக தைவானிய குடிகள் தான் பிரதான தைவானிய மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் 1945 இல் இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகும் 1949 இல் சீன போரின் முடிவிற்குப் பிறகும் சீன தேசியவாதக் கட்சி பிரமுகர்கள் உட்பட பல மெயின்லேண்டர்கள் சீனாவிலிருந்து தைவானுக்கு புலம்பெயர்ந்தனர். மெயின்லேண்டர்கள் 20 நூற்றாண்டின் பிற்பகுதியில் தைவானில் பிறந்திருந்தாலும் மூதாதையர்கள் தைவானியல்லாத வம்சாவளியாக கருதப்படுவார்.
முதலாம் சீன-ஜப்பானியப் போர்

1683 முதல் 1895 வரை சீனாவின் குயிங் பேரரசால் தைவான் நிர்வகிக்கப்பட்டது. கொரியாவில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக சீன குயிங் பேரரசுக்கும் ஜப்பானியப் பேரரசுக்கும் இடையே முதலாம் சீன-ஜப்பானியப் போர் ஆகஸ்ட் 1894 இல் தொடங்கி ஒரு வருடத்திற்கும் குறைவாகவே நீடித்து ஏப்ரல் 1895 இல் முடிவடைந்தது. இப்போரில் தோல்வியடைந்த சீன குயிங் பேரரசு தைவானை ஜப்பானிடம் ஒப்படைத்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளும் இரண்டாம் சீன-ஜப்பானியப் போர் என்று அழைக்கப்பட்ட போரில் மீண்டும் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தேசியவாத கட்சி ஆட்சி

1912 இல் குயிங் பேரரசு ஆட்சியை சன் யாட்-சென் (Sun Yat-Sen) தலைமையிலான சீன தேசியவாத கட்சி வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து 1912 முதல் சீனாவை சீனக் குடியரசு (Republic of China) எனப் பெயரிட்டு சீன தேசியவாத கட்சி ஆட்சி செய்து வந்தது. இத்தகைய சூழலில் குயிங் பேரரசு வீழ்ச்சிக்கு பிறகு சீனாவில் தேசிய அதிகாரம் சிதைந்து நாடு பல பகுதிகளாக உடைந்து சக்தி வாய்ந்த போர் பிரபுத்துவவாதிகளான (Warlords) உள்ளூர் தலைவர்களால் ஒவ்வொரு பகுதியும் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஏறக்குறைய இந்தப் பிரச்சனையும் தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சி வீழ்ந்த பிறகு உள்ளூர் தலைவர்களான பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுடன் போரிட்டதைப் போன்றதே.

தேசியவாதமும் கம்யூனிஸ்டும் 

1924 இல் சீனாவில் போர் பிரபுத்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சீன தேசியவாத கட்சி வளர்ந்து வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தது. இதுவே முதலாம் ஐக்கிய முன்னணி (United Front) என்றானது. இருவரும் இணைந்து தேசிய புரட்சிப் படையை உருவாக்கி உள்ளூர் தலைவர்களை எதிர்த்து வந்தனர். 

இத்தகைய சூழலில் சீன தேசியவாத கட்சியின் மேன்மையைப் பயன்படுத்தி சீன கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிசத்தைப் பரப்பியது. மறுபுறம் கம்யூனிஸ்டுகளை உள்ளிருந்து கட்டுப்படுத்த சீன தேசியவாத கட்சி விரும்பியது. இவ்வாறு, இரு கட்சிகளும் தங்கள் சொந்த நோக்கங்களைக் கொண்டிருந்த காரணத்தால் ஐக்கிய முன்னணி தொடர்ந்து நீடிக்க முடியாததாக இருந்தது. 1927 இல் சீன தேசியவாத கட்சி தங்கள் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகளை அகற்றியது. இதையொட்டி, 1927 இல் சீனக் குடியரசு தலைவர் சியாங் கை-ஷேக் (Chiang Kai-Shek) தலைமையிலான சீன தேசியவாத கட்சிக்கும் மாவோ சேதுங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே சீனாவில் முதலாம் உள்நாட்டுப் போர் (1927-1936) மூண்டது.
இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்

ஜப்பானிய ஆதிக்கத்தை முழுமையாக எதிர்க்க சீனக் குடியரசுக்கும் ஜப்பானியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாம் சீன-ஜப்பானியப் போரில் (1937-1945) இரண்டாம் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு உள்நாட்டின் நலன் கருதி மீண்டும் இருகட்சிகளும் இணைந்து செயல்பட்டனர்.

இதே காலகட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் அச்சு நாடுகளின் ஒரு பகுதியாக ஜப்பானும் நேச நாடுகளின் ஒரு பகுதியாக சீனாவும் சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது. 1945 இல் இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தைவான் மீதான கட்டுப்பாட்டை ஜப்பான் கைவிட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளில் ஒன்றான சீனா அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஆதரவுடன் தைவானை ஆட்சி செய்யத் தொடங்கியது.

இதற்கிடையே, இரண்டாம் உலகப் போரும் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரும் முடிவுற்ற பிறகு இரு கட்சிகளின் கூட்டணி மீண்டும் முறிந்து 1945 இல் சீனாவில் இரண்டாம் உள்நாட்டுப் போர் (1945-1949) மூண்டது.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி

சீன தேசியவாத கட்சியின் ஆட்சியை வீழ்த்தி 1 அக்டோபர் 1949 இல் மதியம் 3:00 மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மாவோ சேதுங் தலைமையில் சீன மக்கள் குடியரசு (People's Republic of China) ஆட்சி அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த சீன தேசியவாத கட்சியின் தலைவர் சியாங் கை-ஷேக்கும் அவரது படைகளும் டிசம்பர் 1949 இல் தைவானுக்குத் தப்பிச் சென்று சீனாவை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன் பலமான இராணுவத்தை கட்டமைத்தனர்.

தைவானில் தேசியவாத கட்சி ஆட்சி

குயிங் ஆட்சியின் முடிவுக்குப் பிறகு முறையான மத்திய அரசு அதிகாரத்தில் இல்லாததால் பல உள்ளூர் தலைவர்களால் சீனா துண்டு துண்டானது. இந்த நேரத்தில் சியாங் காய்-ஷேக் சீன தேசியவாதக் கட்சியின் சன் யாட்-சென் அமைத்த புரட்சிகர இராணுவத்தின் தலைவராக உயர்ந்தார். சன் யாட்-சென் மரணத்திற்குப் பிறகு சியாங் காய்-ஷேக் இராணுவத்தைக் கைப்பற்றி குழப்ப நிலையில் இருந்த சீனாவை ஒன்றிணைத்தார். அவர் நவீனமயமாக்கலை ஊக்குவித்தார் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) சீன வெற்றிக்கு தலைமை தாங்கினார்.

1911 இல் நிறுவப்பட்ட சீனக் குடியரசு 1949 வரை முழு சீன நிலத்தையும் கட்டுப்படுத்தியது. சீன உள்நாட்டுப் போரில் தோற்ற பிறகு சீனக் குடியரசு தைவானை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. அதாவது 1949 இல் சீன கம்யூனிஸ்டுகளால் தோற்கடிக்கப்பட்ட பிறகு சீனாவில் இருந்து தப்பித்து சியாங் காய்-ஷேக் மற்றும் பல்லாயிரம் மெயின்லேண்டர்கள் தைவானுக்கு புலம்பெயர்ந்தனர். தைவான் மக்கள் தொகையில் சியாங் கை-ஷேக் குழுவினர் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக இருந்த போதிலும் பல ஆண்டுகளாக தைவானின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர். 1950 இல் தைவானில் மறைமுக ஜனாதிபதி தேர்தல் மூலம் ஜனாதிபதியாகி ஒரு அரசை நிறுவி தைவானை நவீனப்படுத்தினார் சியாங் காய்-ஷேக்.

தைவானில் சீன தேசியவாத கட்சி ஆட்சியின் ஆரம்ப தசாப்தங்களில் பல தைவானியர்கள் அதனை காலனித்துவ ஆட்சியாகக் கருதினர். மெயின்லேண்டர்களுக்கும் பூர்வீக தைவானியர்களுக்கும் இடையிலான இன வேறுபாடுகள் அரச வன்முறை மற்றும் அரசியல் ஒடுக்குமுறை மூலம் மெயின்லேண்டர்களுக்கு ஆதரவாக சீன தேசியவாத கட்சியால் கட்டமைக்கப்பட்டது. நாளடைவில் மக்கள்தொகையில் ஆதிக்கம் செலுத்திய பூர்வீக தைவானியர்கள் ஜனநாயக நடைமுறையை வலியுறுத்தி போராடத் தொடங்கினர்.

1975 இல் சியாங் கை-ஷேக் இறந்த பின்னர் அவரது மகன் சியாங் சிங்-குவோ (Chiang Ching-Kuo) 1978 மற்றும் 1984 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987 இல் ஜனாதிபதி சியாங் சிங்-குவோ 1949 முதல் தைவானில் நடைமுறையில் இருந்த இராணுவச் சட்டத்தை அதிரடியாக நீக்கியது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, தைவானில் முதல் முறையாக சட்டப்பூர்வமாக அரசியல் கட்சிகள் தொடங்கிடும் சூழல் சுலபமானது.

முதலாம் கூட்டு அறிக்கை

1949 இல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா அதை முறையாக அங்கீகரிக்கவில்லை. 23 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே எந்த இராஜதந்திர உறவும் இல்லாமல் இருந்த சூழலில் சோவியத்து கம்யூனிஸ்ட் அரசுடனான உறவில் செல்வாக்கு பெறும் நோக்கில் 1972 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் சீன கம்யூனிஸ்ட் அரசுடனான அமெரிக்க உறவை இயல்பாக்க சீனாவுக்கு பயணம் செய்தார். அதையொட்டி இரு அரசுகளும் முதலாம் கூட்டு அறிக்கையை (First Communique) வெளியிட்டன.

முதலாம் கூட்டு அறிக்கையில் இரு தரப்பும் பரஸ்பரம் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கவும் தைவான் நீரிணையின் இருபுறமும் உள்ள அனைத்து சீன மக்களும் ஒரே ஒரு சீனாவை பராமரிப்பதாகவும் தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றால் அந்த நிலைப்பாட்டை சவால் செய்யாமலும் அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது என்றும் சீனா-தைவான் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியது. தைவானின் எதிர்காலம் தொடர்பான அமெரிக்காவின் தெளிவற்ற நிலைப்பாட்டிற்கு ஏற்றுக்கொள்கிறது (Accepts) என்பதற்கு பதிலாக ஒப்புக்கொள்கிறது (Agrees) என்ற சொல் விமர்சிக்கப்பட்டாலும் அது இராஜதந்திர பயன்பாடாக பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கூட்டு அறிக்கை

பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒருவரையொருவர் அங்கீகரித்து 1 ஜனவரி 1979 இல் இரு அரசுகளும் இராஜதந்திர உறவுகளை முழுமையாக நிறுவுவதாக இரண்டாம் கூட்டு அறிக்கையை (Second Communique) வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் சீனாவும் தூதர்களை பரிமாறிக் கொண்டு தூதரகங்களை 1 மார்ச் 1979 இல் அமைத்தது. சுருங்கச் சொன்னால் 1979 ஒப்பந்தத்தின் மூலம் 1949 இல் நிறுவப்பட்ட சீன கம்யூனிஸ்ட் அரசை 30 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.
தைவான் உறவுகள் சட்டம்

239 இல் பதிவு செய்யப்பட்ட சீன பதிவுகளில் ஒரு சீனப் பேரரசர் தைவான் தீவை ஆராய்வதற்கு ஒரு படையை அனுப்பியதாக உள்ள கூற்றை சீனா அதன் பிராந்திய உரிமைக்கோரல்களை ஆதரிக்கப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க தைவானுக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டி வந்தது. 

இருப்பினும் 1972 இல் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான விருப்பத்தை அமெரிக்கா அறிவித்த பிறகு தைவான் உடனடியாக அமெரிக்காவைக் கண்டித்தது தைவானிலும் அமெரிக்காவிலும் பரவலான எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. மேலும் ஜனவரி 1979 இல் அமெரிக்கா-சீனா உறவு முறையாக புதுப்பிக்கப்பட்ட பிறகு தைவான் பிரச்சினை சர்ச்சைக்குரியதாக மாறியது.

இதையொட்டி, ஏப்ரல் 1979 இல் அமெரிக்க மக்களுக்கும் தைவான் மக்களுக்கும் இடையே இராஜதந்திரம் இல்லாத உறவுகளை செழிக்க வைக்கும் நோக்கில் தைவான் உறவுகள் சட்டத்தில் (Taiwan Relations Act) அமெரிக்க கையெழுத்திட்டது. இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையில் வெளிநாட்டு அரசு உடனான அமெரிக்க உறவுகளின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்தையும் நிர்வகிக்கும் ஒரே சட்டம் இதுவாகும். 

ஒருபுறம் தைவானுடன் அதிகாரப்பூர்வமற்ற உறவுகளை கொண்டாலும் மறுபுறம் தைவானுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்குவதாகவும் சர்வதேச அமைப்புகளில் தைவானை உறுப்பினராக்க ஆதரிக்கவும் தைவானின் ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும் தைவானுக்கு எதிரான சீனாவின் எந்தவொரு தாக்குதலும் கடுமையான கவலையை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா உறுதியளித்தது.
மூன்றாம் கூட்டு அறிக்கை

தைவானுக்கு ஆயுதங்களை வழங்கிடும் அமெரிக்காவின் ஆயுத விற்பனை அளவு குறித்து சீனா கடும் ஆட்சேபனைகளை எழுப்பியதால் 1981 இல் அமெரிக்கா-சீனா உறவுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையொட்டி, தைவான் உடனான அமெரிக்காவின் உறவுகள் குறித்து சீனாவின் கவலைகளை தீர்க்கும் முயற்சியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அலெக்சாண்டர் ஹெய்க் ஜூன் 1981 இல் சீனாவிற்கு பயணம் செய்தார். மேலும் மே 1982 இல் துணை ஜனாதிபதி புஷ் சீனாவிற்கு பயணம் செய்தார். 

ஆகஸ்ட் 1982 இல் தைவானுக்கான ஆயுத விற்பனை குறித்த மூன்றாவது கூட்டு அறிக்கையை (Third Communique) அமெரிக்காவும் சீனாவும் வெளியிட்டன. இதன்படி தைவானுக்கு ஆயுத விற்பனையை படிப்படியாக குறைக்கவும் தைவான் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை எட்டுவதற்கான முயற்சியையும் சீனாவின் விவகாரத்தில் முந்தைய இரண்டு அறிக்கைபடி நடப்போம் என்றும் அமெரிக்கா விவரித்தது.
ஆறு உறுதிமொழிகள்

ஆகஸ்ட் 1982 இன் மூன்றாவது கூட்டு அறிக்கை பிரகடனத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தைவான் உடனான உறவுகளை எளிதாக்க அமெரிக்கா முயன்றது. அதையொட்டி ஆறு உறுதிமொழிகள் (Six Assurance) ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி, இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் தைவானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்துவதற்கான தேதியை அமெரிக்கா நிர்ணயிக்காது, தைவான் உறவுகள் சட்டத்தின் விதிமுறைகளை அமெரிக்கா மீறாது, இறையாண்மை குறித்த தைவானின் கோரிக்கை மீது அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றாது, தைவான் பிரச்சனையை அமைதியான முறையில் சீனர்கள் தீர்க்க வேண்டும் என்று உறுதியளிக்கப்பட்டது. சீனா மற்றும் தைவான் உறவுகளை மூன்றாவது அறிக்கை மற்றும் ஆறு உறுதிமொழிகள் ஒப்பந்தம் மூலம் இரு நாட்டு கோரிக்கைகளையும் மென்மையான முறையில் அமெரிக்கா திறம்பட சமாளித்தது என்றால் மிகையல்ல.
சீனாவின் ஆசை வார்த்தை

1980 களில் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவுகள் மேம்படத் தொடங்கினாலும் சீனக் குடியரசு பெயரில் இயங்கும் தைவான் அரசை சீனா சட்டவிரோதமானதாக கருதியதால் இரு தரப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற பேச்சுக்கள் தான் நடந்தன. 

தைவான் மக்களை கவர்ந்திழுக்க "ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்" (One Country, Two Systems) என்ற ஹாங்காங் கொள்கையை வலியுறுத்தி சீன ஒருங்கிணைப்பை ஏற்றுக் கொண்டால் தைவானுக்கு குறிப்பிடத்தக்க சுயாட்சி வழங்கப்படும் என்று தொடர்ந்து ஆசை வார்த்தைகளை கூறி வருகிறது சீனா. அதையொட்டி, பொடி வைத்து பேசிய சீனாவின் ஆசை வார்த்தைகளை நிராகரித்தது தைவான் அரசு. 
சுதந்திரத்தை நோக்கி தைவான்

1950 முதல் 1990 வரை நடந்த ஏழு தேர்தல்களில் சீன தேசியவாத கட்சி வேட்பாளர் மட்டுமே மறைமுகமாக தைவான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 இல் சீன தேசியவாத கட்சியை சேர்ந்த லீ டெங்-ஹுய் (Lee Teng-Hui) தைவான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னணியில் சீனாவும் தைவானும் நில உரிமைக்காகப் போராடி வந்தாலும் அவை 1990 களில் இருந்து பொருளாதார உறவுகளை மேம்படுத்தத் தொடங்கியது. 

தைவானில் “ஜனநாயகத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் ஜனாதிபதி லீ டெங்-ஹுய் (Lee Teng-Hui) தைவான் அரசியலமைப்பை ஜனநாயகம் நோக்கி வழிநடத்தி ஜனநாயகப்படுத்தினார். இதன் விளைவாக, 1996 தைவான் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கட்சி (Democratic Progressive Party) போட்டியிட்டது ஆனால் லீ டெங்-ஹூயிடம் தோற்றது. ஆனால், 2000 தைவான் ஜனாதிபதி தேர்தலில் சீன தேசியவாத கட்சியை சேர்ந்த லியன் சானை (Lien Chan) எதிர்த்து ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளர் சென் ஷுய்-பியான் (Chen Shui-Bian) தைவான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். இதையொட்டி 2000 இல் தைவானில் சீன தேசியவாத கட்சி சாராத முதல் ஜனாதிபதியாக சென் ஷுய்-பியான் தேர்வானார்.

2000 இல் தைவான் ஜனாதிபதி சென் ஷுய்-பியான் வெளிப்படையாக சுதந்திரத்தை ஆதரிக்க தொடங்கியது சீனாவை அச்சுறுத்தியது. இதற்கிடையே, 2004 இல் சென் ஷுய்-பியான் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, 2005 இல் சீனாவில் இருந்து பிரிந்து செல்ல முயன்றால், தைவானுக்கு எதிராக அமைதியற்ற வழிகளைப் பயன்படுத்த சீனாவின் உரிமையை கூறும் பிரிவினை எதிர்ப்பு சட்டத்தை (Anti-Secession Law) சீனா நிறைவேற்றியது.

2008 தைவான் ஜனாதிபதி தேர்தலில் சீன தேசியவாத கட்சி சார்பில் வென்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மா யிங்-ஜியோ (Ma Ying-Jeou) பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் சீனா உடனான உறவுகளை மேம்படுத்த முயன்றார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2016 மற்றும் 2020 இல் ஜனநாயக முற்போக்குக் கட்சி சார்பில் தைவானின் தற்போதைய ஜனாதிபதி சாய் இங்-வென் (Tsai Ing-Wen) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் சீனாவிடமிருந்து அதிகாரப்பூர்வ சுதந்திரத்தை கோருகிறார். மேலும் தைவானின் Keep Taiwan Free போன்று பல்வேறு மக்கள் இயக்கங்கள் தைவானின் சுதந்திர உரிமைக்கோரலுக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.
டிரம்ப்பும் பிடெனும்

இராஜதந்திர உறவுகளைத் துண்டித்து 1979 இல் அமைக்கப்பட்ட அமெரிக்க-தைவான் கொள்கையை மீறும் வகையில் 2016 இல் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பை சீனக் குடியரசின் (தைவான்) ஜனாதிபதி சாய் இங்-வென் தொலைபேசியில் அழைத்து “அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து சுமார் 10 நிமிடங்கள்” பேசினார். நீண்ட காலமாக தங்களுக்குரிய அங்கீகாரத்திற்காக பாடுபட்ட தைவான் மக்களால் இந்த திடீர் தொலைபேசி அழைப்பு பரவலான வரவேற்பை பெற்றது. ஆனால், தைவான் அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியது சீனாவை கோபப்படுத்தியது.

அக்டோபர் 2021 இல் ஜோ பிடெனின் அமெரிக்க அரசு "தைவான் பிராந்தியத்தை சுற்றி ஒருதலைப்பட்சமாக எந்த மாற்றத்தையும் சீனா மேற்கொள்ளக் கூடாது" என்று எச்சரித்தது. மேலும் நவம்பர் 2021 இல் "1979 தைவான் உறவுகள் சட்டத்தை காப்பதாகவும் தைவானின் சுதந்திரம் தைவானிடம் உள்ளது என்றும் அதை அவர்களுக்கு உள்ளாகவே சுமூகமாக பேசி முடிவெய்த வேண்டும்" என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சீன அதிபர் சீ சின்பிங்கை சந்தித்த பின்னர் கூறினார்.
தைவானில் வளர்ச்சி

சீனா-தைவான் விவகாரத்தில் தைவான் மீதான சீன அரசின் உரிமைகோரலையும் தைவான் மீதான தைவான் அரசின் உரிமைகோரலையும் நேரடியாக அங்கீகரிக்காத வகையில் அமெரிக்காவின் நிலைப்பாடு உள்ளது. அமெரிக்காவின் நிலைப்பாடு ஆய்வுக்குரியது என்றாலும் அமெரிக்காவின் உதவியோடு தைவான் ஆசியாவின் மிகவும் செழிப்பான பொருளாதாரங்களில் ஒன்றாக வளரத் தொடங்கியது. மின்னணுவியல், ஜவுளி, ஆடை மற்றும் காலணி போன்ற தைவான் உற்பத்தியின் பெரும்பகுதி ஏற்றுமதியில் தொழில்களில் உலகப் புகழ் பெற்றது. 

அமெரிக்காவின் ஆதரவிற்கு பிறகு 1 ஜனவரி 2002 முதல் உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organisation - WTO) தைவான் உறுப்பினராக உள்ளது. இன்று தைவான் பொருளாதாரம் ஆசியாவில் 8வது பெரிய பொருளாதாரமாகவும் உலகில் 22வது பெரிய பொருளாதாரமாகவும் உள்ளது. 2022 இல் தைவானின் பொருளாதாரம் 4.6% வளர்ச்சியடையும் என்றும் தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $700 பில்லியன் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் மேம்பட்ட பொருளாதாரக் குழுவில் தைவான் சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 2021 இல் 11 ஆண்டுகளில் மிக விரைவான GDP வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்று சீனாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் தைவானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமான கருத்து

சீனக் கம்யூனிஸ்ட் அரசு தைவானை ஒருபோதும் நேரடியாகக் கட்டுப்படுத்தவில்லை என்றாலும் அது எப்போதும் தைவானை ஒரு பிரிந்த மாகாணமாக கருதுகிறது. அதையொட்டி, சீனாவின் அழுத்தத்தால் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தைவானை சீனாவின் ஒரு மாகாண பகுதியாக (Taiwan, Province of China) பட்டியலிட்டுள்ளது. மொத்தத்தில் தைவானின் பிராந்திய உரிமையில் சீனாவின் அரசியல் நிலைப்பாடு மாறவில்லை. மேலும் சீனா - தைவான் மோதலில் சீனாவை சமரசம் செய்யாமல் மற்றும் தைவானுக்கு உறுதியளிக்காமல் அமெரிக்கா தனது அரசியல் சாதுரியத்துடன் எவ்வளவு காலம் முன்னேற முடியும்? என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
முடிவுரை 

இன்று பூர்வீக தைவானியர்கள் மற்றும் மெயின்லேண்டர்கள் தங்கள் கசப்பான காலங்களை மறந்து தைவானின் எதிர்கால நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் மற்றும் சீனாவிடம் இருந்து முழு ஜனநாயக சுதந்திரம் கோரி தைவானிய தேசியவாதத்தை வலியுறுத்துகின்றனர். உலகப் பொருளாதாரத்தில் உயரப் பறந்தாலும் தைவானின் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பது வருத்தத்துக்குரியது. இருப்பினும் எதிர்காலத்தில் தைவானியர்களின் சுதந்திர போராட்ட முடிவில் ஒரு வெளிச்சம் இருக்கும் என்று நம்புவோம்.
விவரணைகள்

Who owns Taiwan?

Taiwan and China explained


Why China and Taiwan hate each other?


Why China and the US are at odds over Taiwan?


Three experts on U.S.A role and response options in Taiwan-China conflict


China and Taiwan - A really simple guide to a growing conflict


What's behind the China-Taiwan divide? 


US warns China over pressure on Taiwan


Trump and Tsai Call - The dynamics in Taiwan

https://thediplomat.com/2016/12/the-tsai-trump-call-the-dynamics-in-taiwan/

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -