Chocks: ஈரானும் வல்லரசுகளும்

Sunday, February 27, 2022

ஈரானும் வல்லரசுகளும்

ஈரானும் வல்லரசுகளும்
சுருக்கம்
  1. முகவுரை
  2. ஆங்கிலோ-பாரசீக ஒப்பந்தம்
  3. 1921 இல் ஆட்சிக் கவிழ்ப்பு
  4. பஹ்லவி வம்ச ஆட்சி
  5. 1953 இல் ஆட்சிக் கவிழ்ப்பு
  6. எண்ணெய்யில் பங்கு
  7. ஈரானும் அணுஉலையும்
  8. வெண்மைப் புரட்சி
  9. OPEC எரிபொருள் கூட்டணி
  10. ரிச்சர்ட் நிக்சனும் ஈரானும்
  11. ஈரானிய புரட்சியும் மாற்றமும்
  12. ஈரானிய புரட்சியின் தாக்கம்
  13. ரொனால்ட் ரீகனும் ஈரானும்
  14. அமெரிக்கா - ஈரான் உறவுநிலை
  15. அமெரிக்காவின் இரகசிய உதவி
  16. அமெரிக்கா - ஈரான் சண்டை
  17. ஜார்ஜ் புஷும் ஈரானும் 
  18. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்
  19. டிரம்ப்பும் ஈரானும்
  20. அமெரிக்கா - ஈரான் மோதல்
  21. சவுதி அரேபியாவில் தாக்குதல்
  22. எச்சரித்த டிரம்ப்
  23. ஈரான் தளபதி படுகொலை
  24. ஏவிய ஈரான் இறங்கிய அமெரிக்கா
  25. டிரம்ப் விதித்த தடைகள்
  26. ஜோ பிடனும் ஈரானும்
  27. ஈரானில் போராட்டம் 
  28. முடிவுரை
  29. விவரணைகள்
முகவுரை

ஈரானில் ஏகாதிபத்தியம் எண்ணெய் அரசியலால் பின்னப்பட்டது. ஒரு சக்தி வாய்ந்த நாடு தன்னைப் போல் சக்தி இல்லாத மற்ற நாடுகளை கட்டுப்படுத்தும் அரசியல் அமைப்பு ஏகாதிபத்தியம் எனப்படும். எண்ணெய் அரசியல் என்பது எண்ணெய் வளங்களைப் பயன்படுத்துவதற்காக இராணுவப் படைகளை நிலைநிறுத்துதல், ஆட்சிக் கவிழ்ப்புகளை நிகழ்த்துதல், கைப்பாவை அரசுகளை நிறுவுதல் போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் பெட்ரோலிய உற்பத்தியில் பெரும் பங்கைப் பெறுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாகும். 

வாருங்கள்! வல்லரசு அரசியல் எப்படி இருக்கும் என்பதை இக்கட்டுரையின் மூலம் சிறிதளவு அறிந்து கொள்வோம்.

ஆங்கிலோ-பாரசீக ஒப்பந்தம்

1900 களின் முற்பகுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து 1909 இல் ஆங்கிலோ-பெர்சியா எண்ணெய் நிறுவனம் (Anglo-Persian Oil Company) தொடங்கப்பட்டது. இது பிரிட்டனின் பார்வையில் ஈரானின் மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரித்தது. ஆங்கிலோ-பாரசீக எண்ணெய் நிறுவனத்தின் துளையிடும் உரிமைகளை மையமாகக் கொண்டு 1919 இல் பிரிட்டன் மற்றும் பெர்சியாவை உள்ளடக்கிய ஆங்கிலோ-பெர்சியா ஒப்பந்தம் (Anglo-Persian Agreement) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் பெர்சியா எண்ணெய் விநியோகத்தில் பிரிட்டனுக்கு கிடைக்கின்ற ஏகபோக உரிமை பெர்சியா எண்ணெய் இருப்புக்களை பிரிப்பதில் சிக்கல்களை உருவாக்கும் என்று அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உட்பட பல வெளிநாட்டு அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

முதல் உலகப் போர் மற்றும் ரஷ்யப் புரட்சி வெடித்தவுடன் உலகின் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார-அரசியல் ஒரு மாற்றக் காலத்தை கடந்து கொண்டிருந்தது. பெர்சியாவை மறைமுகமாக பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்தி வந்த பிரிட்டன் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து பெர்சியாவில் இருந்து தனது படைகளை வாபஸ் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. மறுபுறம் பெர்சியாவில் சோவியத் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைக் குறைப்பதற்கும் பெர்சியாவில் சோவியத் சார்பு ஆட்சி தோன்றுவதைத் தடுப்பதற்கும் பிரிட்டனுக்கு பெர்சியாவில் நம்பகமான மாற்று தேவைப்பட்டது. அதையொட்டியே 1919 ஆங்கிலோ-பெர்சியா ஒப்பந்தம் போன்ற பொருளாதார விவகாரங்களில் பிரிட்டன் வேலை செய்யத் தொடங்கியது.
1921 இல் ஆட்சிக் கவிழ்ப்பு

1919 ஆங்கிலோ-பெர்சியா ஒப்பந்தத்தை ஈரானின் கஜர் வம்ச அரசு (Qajar Dynasty) முறையாக நடைமுறைப்படுத்த தவறியதே 1921 ஆட்சி கவிழ்ப்புக்கான தொடக்கப்புள்ளி ஆகும். ஆட்சி கவிழ்ந்த பிறகு பெர்சியாவில் அமையப் போகும் புதிய அரசின் மூலம் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று பிரிட்டன் கண்டறிந்தது.

பிரிட்டன் ஆதரவில் 21 பிப்ரவரி 1921 அன்று கஜர் வம்ச அரசின் 17வது பிரதமர் ஃபதோல்லா கான் அக்பர் (Fathollah Khan Akbar) ரேசா கான் பஹ்லவி (Reza Khan Pahlavi) உதவியுடன் சையத் ஜியாவுதீன் தபதாபாய் (Sayyed Ziaoddin Tabatabai) கவிழ்த்தார். பின்னர் சையத் ஜியா அல்தின் ஈரானின் 18வது பிரதமரானார். பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு சில மாதங்களில் அவர் ரேசா கானுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த காரணத்தால் 1921 இல் நாடு கடத்தப்பட்டார். அதை தொடர்ந்து அஹமது குவாம் (Ahmad Qavam) ஈரானின் 19வது பிரதமரானார்.
பஹ்லவி வம்ச ஆட்சி

சையத் ஜியா அல்தினுக்காக அதிகாரத்தைக் கைப்பற்றி புதிய அரசிற்கு பலம் அளித்த இராணுவத் தளபதி ரேசா கான் பஹ்லவி 1921 இல் போர் அமைச்சராகவும் 1923 இல் பிரதமராகவும் 1924 இல் அதிகாரத்தை ஒருங்கிணைக்க முயன்று இறுதியில் 1925 இல் மன்னராக அரியணை ஏறினார். 

சட்டமன்ற ஆதரவின் மூலம் கத்தார் ஷாவை வெளியேற்றி 15 டிசம்பர் 1925 அன்று தன்னை ஷாவாக நியமித்து பஹ்லவி வம்ச ஆட்சியை நிறுவினார் ரேசா கான் பஹ்லவி. பிரிட்டன் ஆதரவுடன் கிளர்ச்சிகளை அடக்கி சர்வாதிகார சக்தியுடன் பெர்சியாவில் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை நிறுவி மேற்கத்தியமயமாக்கலுக்கு ஆதரவாக ஆட்சி செய்தார். மேலும் ரேசா கான் பஹ்லவியின் மூத்த மகன் முகமது ரேசா பஹ்லவி அரியணையின் வாரிசாக சட்டசபை அங்கீகரித்தது.

1921 ஆட்சி கவிழ்ப்பின் உண்மையான வெற்றியாளர்கள் ரேசா கான் பஹ்லவி மற்றும் பிரிட்டன். பிரிட்டனின் இராணுவ சதி ரேசா கான் பஹ்லவியை அரியணையில் அமர்த்தியது. பின்னர் அவர் பிரிட்டன் மற்றும் பெர்சியர்களுக்கு சாதகமாக நவீனமயமாக்கலை மேற்கொண்டார். 1935 இல் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடிதப் பரிமாற்றத்தில் பெர்சியா என்பதற்குப் பதிலாக ஈரான் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று ரேசா கான் பஹ்லவி ஆணையிட்டார். இவ்வகையில், பெர்சியாவுக்கு பதிலாக ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயராக மாறியது.

இரண்டாம் உலகப் போரின் (1939-1945) தொடக்கத்தில் ஈரானை நடுநிலையான நாடாக அறிவித்தார் ரேசா கான் பஹ்லவி. அவர் ஈரான் மீது கண் வைத்திருந்த ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு அஞ்சினார். இன வளர்ச்சி மற்றும் தொழில் விரிவாக்க திட்டத்தில் ஜெர்மனி மிகவும் உறுதியாக இருப்பதை கண்டு ஜெர்மனியிடம் இருந்து அரசியல் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பம் பற்றி அறியவும் ஜெர்மனியுடன் வர்த்தகத்தை அதிகரிக்கவும் ரேசா கான் பஹ்லவி விருப்பம் கொண்டார். 

இந்நிலையில் 1941 இல் பிரிட்டனும் சோவியத் யூனியனும் ஈரானை ஆக்கிரமித்த பிறகு ரேசா கான் பஹ்லவி நாடு கடத்தப்பட்ட வாழ்க்கைக்கு ஒப்புக்கொண்டால் அவர்கள் ரேசா கான் பஹ்லவி குடும்பத்தை ஆட்சி அதிகாரத்தில் வைத்திருக்க முன்வந்தனர். இதையடுத்து 16 செப்டம்பர் 1941 அன்று ரேசா கான் மகன் முகமது ரேசா பஹ்லவி (Mohammad Reza Pahlavi) மன்னரானார். 1944 இல் ரேசா கான் தென் ஆப்பிரிக்காவில் காலமானார்.
1953 இல் ஆட்சிக் கவிழ்ப்பு

18 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ அமெரிக்கர்கள் பெர்சியாவை பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் ஈரானிய சீர்திருத்தவாதிகள் அமெரிக்க ஜனநாயகம் மீது கவர்ச்சி கொண்டிருந்தனர். அமெரிக்க வழக்கறிஞரும் நிதி நிபுணரும் பெர்சிய அரசு பொருளாளருமான வில்லியம் மோர்கன் ஷஸ்டர் (William Morgan Shuster) 1911 இல் ஈரானின் அரசியலமைப்பையும் நிதியமைப்பையும் மறுசீரமைத்தார்.
1951 இல் ஆங்கிலோ-ஈரானிய எண்ணெய் நிறுவனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் எண்ணெய் தொழில்துறை நிறுவனங்களை தேசியமயமாக்க பிரதமர் முகமது மொசாதக் (Mohammad Mosaddegh) தலைமையிலான ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்து எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது ஈரானின் பொருளாதாரத்தைப் பாதித்தது. மன்னர் முகமது ரேசா பஹ்லவிக்கும் பிரதமர் முகமது மொசாடெக்கிற்கும் இடையே அதிகாரப் போட்டி ஏற்படத் தொடங்கியது. மேலும் ஈரானிய எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கிய முகமது மொசாதக்கை வெளியேற்றுவது பற்றி 1952 இன் பிற்பகுதியில் பிரிட்டன் அமெரிக்காவை பரஸ்பர நலன்களுக்காக அணுகியதை அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. 
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவுத்துறை சதித் திட்டத்தின் விளைவாக 19 ஆகஸ்ட் 1953 அன்று பிரதமர் முகமது மொசாதக்கின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. அதை தொடர்ந்து ஜெனரல் ஃபஸ்லோல்லாஹ் சாஹெடி (Fazlollah Zahedi) ஈரானின் 36வது பிரதமரானார். 1925 முதல் 1953 வரை அரசியலமைப்பு முடியாட்சியின் வடிவமாக 28 ஆண்டுகள் ஈரானை பஹ்லவி வம்சம் ஆட்சி செய்தது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் 1953 இல் தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து 1979 இல் பஹ்லவி வம்சம் தூக்கியெறியப்படும் வரை மேலும் 26 ஆண்டுகளுக்கு எதேச்சதிகார முடியாட்சியாக இருந்தது.
எண்ணெய்யில் பங்கு

1900 களின் பிற்பகுதியில் இருந்து தங்க முட்டையிடும் வாத்தாக உருவான எண்ணெய் தொழிலில் முக்கிய திருப்புமுனையாக 1953 இல் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு 1954 இல் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கொடுத்த அழுத்தம் காரணமாக 29 அக்டோபர் 1954 அன்று 25 வருட எண்ணெய் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் (The Consortium Agreement of 1954) கையெழுத்திட்டார் முகமது ரேசா பஹ்லவி. கூட்டமைப்பு ஒப்பந்தமானது ஈரானிய எண்ணெய் உற்பத்தியில் 50% உரிமையை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. இவ்வொப்பந்தம் 1979 இல் காலாவதியானது.

ஈரானில் செயல்படும் மேற்கத்திய எண்ணெய் கூட்டமைப்பிடம் அதன் தற்போதைய ஒப்பந்தம் 1979 இல் காலாவதியான பிறகு புதுப்பிக்கப்படாது என்று 1973 இல் முகமது ரேசா பஹ்லவி கூறினார். மேலும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தற்போதைய உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும் அல்லது நல்ல தள்ளுபடி விலையில் 25 ஆண்டுகள் எண்ணெய் வழங்குவதற்கான உத்தரவாதத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அவர் எச்சரித்தார். இதற்கிடையே 1979 இல் எண்ணெய் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக ஈரானிய புரட்சி மூலம் முகமது ரேசா பஹ்லவி பதவியை மேற்கத்திய நாடுகள் நீக்கியதாக சதிக் கோட்பாடு உள்ளது. 

ஈரானும் அணுஉலையும்

8 டிசம்பர் 1953 அன்று நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்க ஜனாதிபதி டுவைட் ஐசனோவர் (Dwight Eisenhower) அணுக்கள் பயன்பாடு தொடர்பாக “அமைதிக்கான அணுக்கள்” (Atoms for Peace) என்ற தலைப்பில் ஒரு முக்கியமான உரையை ஆற்றினார். அமைதிக்கான அணுக்கள் திட்டத்தின் மூலம் வளரும் நாடுகள் அமெரிக்காவிடமிருந்து அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெற்று அணுசக்தித் திட்டத்திற்கான அடிப்படை அடித்தளத்தை அமைத்துக் கொள்ளும்.

1957 இல் அமெரிக்க முயற்சியின் ஒரு பகுதியாக “அமைதிக்கான அணுக்கள்” ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்டன. இதை தொடர்ந்து ஈரானுக்கு அணுஉலை மற்றும் ஆயுதங்கள் தர செறிவூட்டப்பட்ட யுரேனிய எரிபொருளை அமெரிக்கா வழங்கி வந்தது.

வெண்மைப் புரட்சி

26 ஜனவரி 1963 அன்று மேற்கத்திய தாக்கத்தின் வெளிப்பாடாக முகமது ரேசா பஹ்லவி ஈரானை உலகளாவிய சக்தியாக மாற்றும் நீண்ட கால நோக்கத்துடன் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலம் மறுகட்டமைப்பைத் தொடங்கினார். முகமது ரேசா பஹ்லவி தொடங்கிய வெண்மைப் புரட்சியின் கீழ் லட்சக்கணக்கான தொழிலாளர் வர்க்கக் குடும்பங்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய நில மானியத்தை அறிமுகப்படுத்தினார், எழுத்தறிவு கழகங்களை உருவாக்கி ஈரானின் கல்வியறிவு விகிதத்தை இரட்டிப்பாக்கினார், தொழிலாளர்களுக்கு இலாபப் பகிர்வு போன்ற பொருளாதார திட்டங்களை அறிமுகப்படுத்தினார், அரசு நிதியுதவியுடன் கனரக தொழில் திட்டங்களைத் தொடங்கினார் மற்றும் மேய்ச்சல் நிலங்களை தேசியமயமாக்கினார். நிலச் சீர்திருத்தத் திட்டங்களால் ஈரானின் பரம்பரை நிலப்பிரபுக்கள் தங்கள் செல்வாக்கையும் அதிகாரத்தையும் இழந்தனர்.

1963 இல் அறிவிக்கப்பட்ட வெண்மைப் புரட்சிக்கு எதிராக முகமது ரேசா பஹ்லவியின் அரசை கடுமையாக எதிர்த்து வந்தார் மதகுரு அயதுல்லா ருஹோல்லா கொமேனி. 1963 இல் கொமேனியை சிறையில் தள்ளியது நாடு தழுவிய கலவரங்களுக்கு வழிவகுத்தது. இதையொட்டி, 1964 இல் ஈரானில் இருந்து கொமேனி நாடு கடத்தப்பட்டார்.

OPEC எரிபொருள் கூட்டணி

ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் உலக எண்ணெய் விநியோகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் மேற்கத்திய நிறுவனங்களுக்கு போட்டியாகவும் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி மீதான தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டவும் 14 செப்டம்பர் 1960 அன்று “பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு” (Organization of the Petroleum Exporting Countries - OPEC) நிறுவப்பட்டது. 1970 களில் OPEC லாபங்கள் உயர்ந்து மேற்கத்திய பொருளாதாரத்தின் மீது குழு கணிசமான செல்வாக்கைப் பெற்றது. ஈரானின் சந்தை செல்வாக்கு அதிகரித்ததால் அந்நாடு அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக மாற்றியது. தற்போது OPEC அமைப்பில் அல்ஜீரியா, அங்கோலா, எக்குவடோரியல் கினியா, காபோன், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, காங்கோ குடியரசு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 13 நாடுகள் உள்ளன.
ரிச்சர்ட் நிக்சனும் ஈரானும்

1972 இல் சோவியத் ரஷ்யாவின் நேச நாடான ஈராக்கை எதிர்க்கவும் மத்திய கிழக்கில் அமெரிக்க பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கவும் உதவி கேட்டு முகமது ரேசா பஹ்லவியை ஈரானில் சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன். சந்திப்பின் போது ஈரான் தனக்குத் தேவையான அணுசக்தி அல்லாத ஆயுதங்களையும் வாங்கிக் கொள்ளலாம் என்று ரிச்சர்ட் நிக்சன் உறுதியளித்தார்.

1973 அரபு-இஸ்ரேலிய போரில் இஸ்ரேலை ஆதரித்த அமெரிக்காவிற்கு எதிராக OPEC அமைப்பிலுள்ள அரபு நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் பொருளாதாரத் தடை விதித்தன. அந்நேரத்தில் அரபு நாடு அல்லாத ஈரான் அமெரிக்காவை ஆதரித்ததால் முகமது ரேசா பஹ்லவியை எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்கினார்.
ஈரானிய புரட்சியும் மாற்றமும்

7 ஜனவரி 1978 முதல் முகமது ரேசா பஹ்லவியின் மேற்கத்தியமயமாக்கல், நவீனமயமாக்கல் மற்றும் மதச்சார்பின்மை முயற்சிகளை எதிர்த்து முறைப்படுத்தப்பட்ட ஈரானிய புரட்சி தொடங்கப்பட்டது. பரவலான உள்நாட்டு அமைதியின்மைக்கு மத்தியில் முகமது ரேசா பஹ்லவி தற்காலிக வசிப்பிடத்தைத் தேடி ஜனவரி 1979 இல் எகிப்துக்கு தப்பிச் சென்றார். இடையில் அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக தனது செல்வாக்கை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு சென்றார். பல தரப்பிலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் முகமது ரேசா பஹ்லவியை அமெரிக்காவில் சிகிச்சை பெற அனுமதித்தார்.

மேற்கத்திய நாடுகளின் அரசியல் ஆதிக்கத்திற்கு ஆதரவாக தலையாட்டி வந்த முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சியை மக்கள் எதிர்த்து வந்த வேளையில் ஈரானிய புரட்சி வெடித்தது. ஈரானின் மேற்கத்தியமயமாக்கலை தொடர்ந்து எதிர்த்து வந்த மதகுருவான அயதுல்லா ருஹோல்லா கொமேனி துருக்கி, ஈராக், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்ட 15 ஆண்டுகளுக்கு பின்னர் 1 பிப்ரவரி 1979 அன்று ஈரானுக்குத் திரும்பியது ஈரானியப் புரட்சியில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
11 பிப்ரவரி 1979 அன்று முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது. மேற்கத்திய சார்பு முடியாட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சி அகற்றப்பட்டு ஷியா பிரிவின் இஸ்லாமிய மதகுருவான அயதுல்லா ருஹோல்லா கொமேனி ஈரான் நாட்டின் உச்ச தலைவராகி (Supreme Leader of Iran) முடியாட்சியில் இருந்து கடுமையான இஸ்லாமிய இறையாட்சிக்கு மாற்றினார். 

குரானுக்கு எதிராக உள்ள முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் ஆகிய இரண்டு கொள்கைகளையும் இஸ்லாமியர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் நம் நாடு கிழக்கும் இல்லை மேற்கும் இல்லை இனிமேல் இஸ்லாமிய குடியரசு என்றும் கோமெய்னி பிரசங்கித்தார். மேலும் ஈரான் புரட்சியை அதன் அண்டை நாடுகளுக்கும் பரப்பிட முயற்சிக்கும் என்றும் கொமேனி கூறினார்.
ஈரானிய புரட்சியின் தாக்கம்

1980 களில் ஈரானியப் புரட்சி மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பை எதிரொலித்தது. சவுதி அரேபியா, எகிப்து, சிரியா, மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் எழுந்தனர். எடுத்துக்காட்டாக,

# சவுதி அரேபியா, 1979 = சவுதி அரேபிய இராணுவம் கிளர்ச்சியாளர்களிடமிருந்து பெரிய மசூதியின் (Grand Mosque) கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது.

# எகிப்து, 1981 = இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு எகிப்திய அதிபர் அன்வர் சதாத் (Anwar Sadat) படுகொலை செய்யப்பட்டார்.

# சிரியா, 1982 = சிரியாவில் இஸ்லாமியர்களின் கிளர்ச்சி (Hama Masscare) ஒடுக்கப்பட்டது.

# லெபனான், 1983 = ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாமையும் (US Embassy Bombing and Barracks Bombing) வெடிகுண்டுகளால் தகர்த்தது.

ரொனால்ட் ரீகனும் ஈரானும்

4 நவம்பர் 1979 அன்று ஈரானிய மாணவர் குழு 52 அமெரிக்கர்களை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட முகமது ரேசா பஹ்லவியை நாடு கடத்த வேண்டும் என்று கோரியது. ஈரான் குடிமக்களுக்கு எதிராக குற்றம் இழைத்ததாக முகமது ரேசா பஹ்லவி மீது பதியப்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்துவதற்காக அவரை திரும்பக் கோரியது. ஈரானிய மாணவர் குழுவின் கோரிக்கை அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டு ஈரான் உடனான அனைத்துவித பொருளாதார உறவுகளையும் அமெரிக்கா துண்டித்தது.

444 நாட்களுக்குப் பிறகு 20 ஜனவரி 1981 அன்று ரொனால்ட் ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில நிமிடங்களுக்குப் பிறகு அல்ஜியர்ஸ் உடன்படிக்கை (Algiers Accords) கையொப்பம் இடப்பட்டவுடன் அமெரிக்க பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஈரானிய அரசியலில் தலையிட மாட்டோம் என்று அமெரிக்கா உறுதியளித்தது.

அமெரிக்கா - ஈரான் உறவுநிலை

1979 ஈரானியப் புரட்சி காரணமாக ஆட்சி மாறிய பிறகு 1980 முதல் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் முறையான தூதரக உறவுகள் இல்லை. மாறாக அமெரிக்காவில் ஈரானின் முகமாக பாகிஸ்தானும் ஈரானில் அமெரிக்காவின் முகமாக சுவிட்சர்லாந்தும் செயல்படுகிறது. வாஷிங்டன் டி.சியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஈரானிய நலன்கள் பிரிவு மற்றும் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அமெரிக்க நலன்கள் பிரிவு மூலம் இரு நாட்டு தொடர்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்காவின் இரகசிய உதவி

நிகரகுவா (Nicaragua) அரசை கவிழ்க்கும் நோக்கத்திற்காக கான்ட்ராஸ் (Contras) கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க அரசு இராணுவ உதவி மற்றும் நிதியுதவி வழங்கக்கூடாது என்று அமெரிக்க காங்கிரஸ் தடை செய்தது. எனவே அமெரிக்க காங்கிரஸின் உத்தரவையும் ஈரான் மீதான ஆயுதத் தடையையும் மீறி நிகரகுவாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு நிதியளிக்க ஈரானுக்கு ஆயுத விற்பனை மூலம் கிடைத்த நிதியை அமெரிக்க அரசு பயன்படுத்தியது என்று செய்திகள் பரவியது. இச்செய்தியை மறுத்து லெபனான் பிணைக் கைதிகள் விவகாரத்தை ரொனால்ட் ரீகன் நிர்வாகம் கூறியது.

லெபனானில் ஹிஸ்புல்லாவால் அமெரிக்கர்கள் பலர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். ஈரானிய துணை ராணுவமான இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் ஹிஸ்புல்லா கூட்டணி வைத்துள்ளது. அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்க ஹிஸ்புல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆயுத விற்பனை ஈரானுக்கு உதவும் என்று ரொனால்ட் ரீகன் நிர்வாகம் நம்பியது. அதனால் ஆயுதத் தடையை மீறி ஈரானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்றது என்று அதிகாரபூர்வமாக காரணம் சொல்லப்பட்டது. இருப்பினும் லெபனானில் அமெரிக்க பிணைக் கைதிகள் பிடிக்கப்படுவதற்கு முன்னர் 1981 இல் ஈரானுக்கு ஆயுத விற்பனை அங்கீகரிக்கப்பட்டது அமெரிக்க அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியாக லெபனானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு அமெரிக்கப் பிணைக் கைதிகளையும் ஹிஸ்புல்லா விடுவிக்க ஈரான் $1 மில்லியன் முதல் $2 மில்லியன் வரை நிதியுதவி அளித்தது.

20 ஆகஸ்ட் 1985 முதல் அமெரிக்க அரசியலில் பரப்பபை கிளப்பிய ஈரான் - கான்ட்ரா விவகாரத்திற்கு (Iran-Contra Affair) முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 4 மார்ச் 1987 அன்று தொலைக்காட்சி உரையில் “எனக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்படும் எனது நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என்று ஊழலுக்கு ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் பொறுப்பேற்றார். இன்று வரை இந்த ஆயுத பரிவர்த்தனைகளில் ரொனால்ட் ரீகனின் பங்கு உறுதியாகத் தெரியவில்லை ஆனால் சில அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - ஈரான் சண்டை

14 ஏப்ரல் 1988 அன்று ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரானிய அகழ்பீரங்கி ஒரு அமெரிக்க போர்க்கப்பலை கிட்டத்தட்ட அழித்தது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் பிரேயிங் மன்டிஸ் (Operation Praying Mantis) என்ற திட்டத்தின் கீழ் 18 ஏப்ரல் 1988 அன்று அமெரிக்கப் படைகள் இரண்டு ஈரானிய எண்ணெய் தளங்களை அழித்து ஒரு போர்க்கப்பலை மூழ்கடித்தது. மேலும் 3 ஜூலை 1988 அன்று ஈரானிய பயணிகள் விமானத்தை போர் விமானம் என்று தவறாக நினைத்து அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியது. பயணிகள் விமானத்தில் இருந்த 290 பேரும் கொல்லப்பட்டனர்.
ஜார்ஜ் புஷும் ஈரானும் 

9/11 பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அல்-கொய்தா உறுப்பினர்களின் புகலிடமான ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக அகதிகளை பாதுகாக்க, முற்போக்கு சக்திகளை அரவணைக்க, ஜனநாயக அரசை நிறுவ பான் ஒப்பந்தத்தின் (Bonn Agreement) மூலம் அமெரிக்கா உறுதியளிக்கிறது. அமெரிக்காவின் பான் ஒப்பந்த திட்டத்தை ஈரானும் ஆதரித்தது.

ஈரானின் பான் ஒப்பந்த இணக்கத்திற்கு பிறகு 29 ஜனவரி 2002 அன்று ஸ்டேட் ஆஃப் தி யூனியன் (State of the Union) உரையில் பேரழிவு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரான், ஈராக் மற்றும் வட கொரியா நாடுகள் "தீமையின் அச்சு" (Axis of Evils) என்று அமெரிக்கா ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கூறியது சர்ச்சையானது. அவரது பேச்சு ஈரானின் முந்தைய அரசியல் நகர்வை உலுக்கியது. பான் ஒப்பந்தத்தை ஈரான் ஆதரித்த பிறகு வெளிவந்த “தீமையின் அச்சு” உரை ஈரானுக்கு துரோக உணர்வை விளைவித்தது.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்

வெகு காலமாக ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் குறித்து அமெரிக்கா கவலையடைந்தது. அதையொட்டி 14 ஜூலை 2015 அன்று ஈரானுக்கும் அமெரிக்கா உட்பட பல உலக வல்லரசுகளுக்கும் இடையே ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என்றதொரு கூட்டு விரிவான செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action - JCPOA) செய்யப்பட்டது. பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் அணு உலையை அகற்றி மறுவடிவமைப்பு செய்வது, ஆயுத சரிபார்ப்பு வழிமுறைகளை அனுமதிப்பது, குறைந்தது 15 ஆண்டுகளுக்கு யுரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது.
டிரம்ப்பும் ஈரானும்

8 மே 2018 அன்று ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் ஈரான் மீது அதிகபட்ச அழுத்தத்தை வழங்க பொருளாதாரத் தடைகள் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கையை ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகள் கண்டித்தார்கள் ஆனால் குடியரசுக் கட்சியினர், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பாராட்டினர். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஒப்பந்தத்தின் விதிமுறைகளை புறக்கணித்து யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்தது.

15 ஏப்ரல் 2019 அன்று ஈரானிய இராணுவத்தின் ஒரு கிளையான இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை (Islamic Revolutionary Guard Corps - IRGC) டிரம்ப் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார். வேறொரு நாட்டின் அரசாங்க இராணுவத்தின் ஒரு பகுதியை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது அதுவே முதல் முறை. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னுடைய அழுத்தம் காரணமாக அமெரிக்கா இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறியது சர்ச்சையானது. இதற்கிடையே, அமெரிக்காவின் நடவடிக்கை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் பிரபலத்தை அதிகரிக்கும் என்று ஈரான் தலைவர் ரூஹானி கூறினார்.

அமெரிக்கா - ஈரான் மோதல்

12 மே 2019 அன்று ஓமன் வளைகுடாவில் புஜைரா கடற்கரையில் இரண்டு சவுதி அரேபிய எண்ணெய் டேங்கர்கள், ஒரு நோர்வே எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு எமிராட்டி பதுங்குக் கப்பல் ஆகிய நான்கு எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்தன. 13 ஜூன் 2019 அன்று ஹோர்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் வளைகுடாவை கடக்கும் போது ஜப்பானிய எண்ணெய் கப்பல் மற்றும் ஒரு நோர்வே எண்ணெய் கப்பல் ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன. இந்த இரு தாக்குதலுக்கும் ஈரான் மீது குற்றம் சாட்டி ஈரான் நாட்டை பயங்கரவாத தேசம் என்று டிரம்ப் கூறினார். மத்திய கிழக்கிற்கு 1000 கூடுதல் படைகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்த பிறகு அமெரிக்க ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதையொட்டி பிரிட்டன் பகுதியான ஜிப்ரால்டருக்கு (Gibraltar) அருகே சென்று கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்வதாக சந்தேகத்தின் பேரில் ஈரானிய கப்பலை கைப்பற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஜிப்ரால்டர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில்  தாக்குதல்

14 செப்டம்பர் 2019 அன்று சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் மையமான சவுதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் பாதியை நிறுத்தியது மற்றும் கச்சா விலையில் முன்னெப்போதும் இல்லாத உயர்வை ஏற்படுத்தியது. சவுதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகளை வலுப்படுத்த அமெரிக்க துருப்புக்களை சவுதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில் டிரம்ப் அனுப்பினார். ஏமனின் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபியாவின் தலையீட்டை மேற்கோள் காட்டி தாக்குதலுக்கு ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் (Houthi Rebels) பொறுப்பேற்றனர். ஆனால் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் தாக்குதலுக்கு நேரடியாக ஈரானைக் குற்றம் சாட்டினர்.

எச்சரித்த டிரம்ப்

29 டிசம்பர் 2019 அன்று ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள கத்தாயிப் ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் பணி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி சுமார் 25 போராளிகளை கொன்றது. அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் போராளிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாக ஈராக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களும் ஈரானிய போராளிகளும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கைப்பற்ற முயன்றனர். எதிர்ப்பாளர்கள் "அமெரிக்காவிற்கு மரணம்" (Death to America) என்று கோஷமிட்டு ஈராக்கில் இருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவின் சொத்துக்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு ஈரான் மிகப் பெரிய விலையை கொடுக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

ஈரான் தளபதி படுகொலை

3 ஜனவரி 2020 அன்று உச்ச தலைவர் அலி கமேனிக்கு (Ali Khamenei) அடுத்தபடியாக ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ஈரான் ராணுவத்தின் தலைமை தளபதி காசிம் சுலைமானியை (Qasem Soleimani) பாக்தாத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கொன்றது. அவருடன் ஈராக் போராளிகளின் தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸும் ஏழு ஈரானிய மற்றும் ஈராக்கிய நாட்டவர்களும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பழிவாங்குவதாக உறுதியளித்து அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் கட்டுப்பாடுகளுக்கு இனி உறுதியளிக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்தது. மேலும் அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானிய படைகள் அதிக எச்சரிக்கையுடன் இருந்த நேரத்தில் தவறுதலாக உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
ஏவிய ஈரான் இறங்கிய அமெரிக்கா

22 ஏப்ரல் 2020 அன்று தனது முதல் இராணுவ செயற்கைக்கோளை ஈரான் ஏவியதால் ஈரானின் நீண்ட தூர ஏவுகணை திறன்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டது. சில நாட்களுக்குப் பிறகு ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தில் தாங்கள் இன்னும் இருப்பதாகவும் பாதுகாப்பு சபை தீர்மானத்தின் மூலம் ஈரானுக்கு எதிரான பலதரப்பு தடைகளை திரும்பப் பெற முயற்சிப்பதாகவும் அமெரிக்கா கூறியது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷ்யா டிரம்ப் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்த போது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அமெரிக்கா கைவிட்டதாக வாதிட்டது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு மிக அருகில் ஈரானிய கடற்படை கப்பல்கள் வந்து அச்சுறுத்தியது. ஆனால் இராணுவ ரீதியாக பதிலளிக்காமல் அமெரிக்க கடற்படை இதை ஆபத்தான மற்றும் துன்புறுத்தும் அணுகுமுறை என்று கண்டித்தது.

ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் அக்டோபரில் காலாவதியாகவிருக்கும் ஈரான் மீதான ஐ.நா ஆயுதத் தடையை ஒரு தசாப்த கால நீடிக்க டிரம்ப் முயன்றார். மேலும் ஈரான் ஒப்பந்தத்தை மீறுவதாகவும் அதன் ஆயுதக் களஞ்சியத்தை நிரப்ப அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் வாதிட்டார். ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரான் மீதான ஆயுதத் தடையை நீட்டிப்பதற்கான அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச ஆதரவின் பற்றாக்குறை காரணமாக தோல்வியடைந்தது.

டிரம்ப் விதித்த தடைகள்

அக்டோபர் - டிசம்பர் 2020 காலகட்டத்தில் எண்ணெய் மற்றும் நிதித் துறைகளில் உள்ள நிறுவனங்களைக் குறிவைத்து புதிய பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானுக்கு எதிராக தனது அதிகபட்ச அழுத்த பிரச்சாரத்தை டிரம்ப் அதிகரித்தார். 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஈரானிய அரசு குறுக்கீடு செய்ததாகவும், இரசாயன ஆயுதங்களை உருவாக்கியதாக சந்தேகித்தும், 2019 இல் ஈரானிய ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் காரணமாகவும் புதிய நடவடிக்கைகளுக்கான காரணங்களாக அமெரிக்கா மேற்கோளிட்டுள்ளது.

ஜோ பிடனும் ஈரானும்

ஜனவரி 2020 இல் ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை திரும்பக் கொண்டுவரும் நோக்கில் ஈரானிய அணுசக்தி ஒப்பந்த கூட்டணியினர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொண்டு ஒப்பந்தத்திற்கு திரும்புவதற்கான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

2021 ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் கடந்தகால நீதித்துறைத் தலைவராக இருந்த மதகுரு இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றார். 2017 இல் முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் 2021 இல் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1988 இல் வழக்கு விசாரணைக் குழுவில் இருந்த நான்கு பேரில் ஒருவராக ஈரானில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதித்ததால் இப்ராஹிம் ரைசி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளரால் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
இப்ராஹிம் ரைசி அரசு அதிகாரத்திற்கு மாறிய பிறகு கடினமான சூழல் நிலவிய போதும் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து சட்டவிரோத அமெரிக்கத் தடைகளையும் நீக்குமாறு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது மற்றும் அமெரிக்கா மீண்டும் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறாது என்பதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்ட ஈரானின் அணுசக்தி நிலையம் மீதான சைபர் தாக்குதலுக்குப் பிறகும் பேச்சுவார்த்தை நீடித்தது. இதையொட்டி, தாக்குதலுக்கு பதிலடியாக மேம்பட்டவற்றுடன் யுரேனியம் செறிவூட்டலின் தூய்மை அளவை 20% முதல் 60% வரை அதிகரித்து தரத்தை ஈரான் மாற்றியது.

ஈரானில் போராட்டம் 

1979 ஈரானியப் புரட்சிக்குப் பின் பழமைவாதத்திற்கு திரும்பிய ஈரானில் நீதி, மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் நிற்பதாக ஈரானியர்கள் உறுதியளிக்கின்றனர். உதாரணமாக இன்று ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மனித குலத்திற்கு எதிராக தான் செய்த குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிற்கும்படி உலக வல்லரசுகள் நிர்பந்திக்க வேண்டும் என்று ஈரானியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முடிவுரை

1900 களின் பிற்பகுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஈரான் எப்போதும் வல்லரசுகளின் கைகளில் இருந்தது. ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானுக்கும் வல்லரசுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் இடையேயான உறவுமுறை சீர்குலைந்தது. ஆனால் ஈரானுக்குள் அமைதியான அரசியல் இருக்கக் கூடாது என்பதை வல்லரசுகள் உறுதிப்படுத்தின.

சுருங்கச் சொன்னால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மத்திய கிழக்கில் எரிபொருள் தொழில்துறையின் எழுச்சிக்குப் பிறகு எரிபொருள் அரசியல் என்பது வல்லரசுகளின் சர்வதேச இராஜதந்திரத்தின் முக்கியமான அம்சமாக உள்ளது. எரிபொருளுக்கான போட்டி தொடர்வதால் பெட்ரோலிய பொருட்களின் சுத்திகரிப்பு, போக்குவரத்து, விற்பனை மற்றும் பயன்பாடு கணக்கீடுகள்  முக்கியத்துவம் பெறுகின்றன.

விவரணைகள் 

1921 Persian Coup


1953 Iranian Coup





Iran History in 15 minutes


Video 1 = US - Iran Relations


Video 2 = US - Iran Relations




Iranian Nuclear Deal (JCPOA)


Trump quits Iranian Nuclear Deal


Bush defines enemies as "Axis of Evil"


Iran paid for release of US hostages in Lebanon


I could have wiped Iran off the Map, says Jimmy Carter 


வாசித்தமைக்கு நன்றி. 

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...