Chocks: ஈரான் - ஈராக் போர்

Friday, March 18, 2022

ஈரான் - ஈராக் போர்

ஈரான் - ஈராக் போர்

*இது நாடுகளின் வரலாறு அல்ல போர்களின் சுருக்கம் மட்டுமே!
யார் இந்த கொமேனி?

1979 இல் அயதுல்லா ருஹோல்லா கொமேனி தலைமையில் அரங்கேற்றப்பட்ட ஈரானியப் புரட்சி மூலம் ஈரானிய மன்னர் முகமது ரேசா பஹ்லவியின் மேற்கத்திய சார்பு முடியாட்சி அகற்றப்பட்டு இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. இப்புரட்சியின் பின்னணியில் “தியாகம் இஸ்லாத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அண்டை நாடான ஈராக் உட்பட உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இஸ்லாமியப் புரட்சிகளில் ஈடுபட வேண்டும்” என்று கொமேனி தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்.

ஈரானிய ஆட்சியாளர் முகமது ரெசா பஹ்லவியை வீழ்த்த உதவிய புரட்சி முறைகளைப் பயன்படுத்தி ஈராக்கிய ஆட்சியாளர் சதாம் ஹுசைனின் ஆட்சியை தூக்கி எறிந்து தனது ஆட்சிமுறையின் கீழ் ஒரு இஸ்லாமிய குடியரசை நிறுவ கொமேனி கடுமையாக முயன்றார். தனது புரட்சியை ஈராக்கில் புகுத்த கொமேனி தீவிர அரசியல் நடவடிக்கைகளை தொடங்கிய போது ஈரான் - ஈராக் அமைதி உருகுலைந்தது. 
யார் இந்த சதாம் ஹுசைன்?

“1968 ஆட்சிக் கவிழ்ப்பு” சதி மூலம் ஈராக்கில் அரபு சோசலிஸ்ட் பாத் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் சதாம் உசேன் முக்கிய பங்கு வகித்தார். இதை தொடர்ந்து 1968 இல் ஈராக்கின் துணை அதிபராக சதாம் ஹுசைன் மற்றும் அதிபராக அஹ்மத் ஹசன் அல் பக்கர் பதவியேற்றனர். நாளடைவில் அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கமாக பாதுகாக்க எண்ணி நோய்வாய்ப்பட்ட அதிபர் அஹ்மத் ஹசன் அல் பக்கரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார். அதை தொடர்ந்து 1979 இல் அதிபர் பதவியை சதாம் ஹுசைன் ஏற்றுக் கொண்டார்.

1979 இல் ஈரானியப் புரட்சியின் தாக்கத்தால் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையினரான ஷியாக்கள் ஈராக்கில் கிளர்ச்சியில் ஈடுபடக்கூடாது என்றும் ஈரான் உடனான எல்லை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றும் வளைகுடாவில் புவிசார் அரசியல் மையமாக ஈராக்கை மாற்றிட வேண்டும் என்றும் முடிவெடுத்தார் ஈராக் நாட்டின் சிறுபான்மையினரான சன்னி பிரிவை சேர்ந்த சர்வாதிகாரி சதாம் ஹுசைன்.

Yes, you read it right. Saddam Hussein, a Sunni from the minority, became the 'dictator' of Iraq, which is dominated by Shia.
தொடங்கியது போர் 

22 செப்டம்பர் 1980 அன்று ஈராக் இராணுவம் ஈரான் - ஈராக் எல்லையைக் கடந்து ஈரானை ஆக்கிரமித்தது. இதுவே நீடித்த ஈரான் - ஈராக் போரைத் தூண்டியது. இப்போரில் ஈராக்கை ஆதரித்து சவூதி அரேபியா, குவைத் மற்றும் பிற அரபு நாடுகள் நிதியளித்தன. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஈராக்கை மறைமுகமாக ஆதரித்தது. சிரியா மற்றும் லிபியா மட்டுமே ஈரானை வெளிப்படையாக ஆதரித்தது.

நவீன காலத்தின் இரத்தக்களரியான ஈரான்-ஈராக் போரில் சுமார் 2,50,000 ஈரானியர்கள் 2,50,000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதாகவும் 10,00,000 பேர் காயமடைந்ததாகவும் போரின் பொருளாதாரச் செலவு ஒரு டிரில்லியன் டாலர்களை ($ 1 Trillion) தாண்டியதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மத, பொருளாதார, பிராந்திய மற்றும் அரசியல் மோதல்களால் தூண்டப்பட்ட ஈரான் - ஈராக் போர் 20 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட போரில் ஒன்றாகும்.

1980 இல் ஈரானிய புரட்சியை நடுநிலையாக்க சில வாரங்கள் மட்டுமே ஆகும் என்று ஈராக் நம்பியது தவறு. ஈரானிய புரட்சியின் எதிர்ப்புத் தலைவர் ஷாபூர் பக்தியார் (Shapour Bakhtiar) மற்றும் ஈரான் ஜெனரல் கோலாம் அலி ஓவிசி (Gholam Ali Oveissi) ஆகியோர் சதாம் ஹுசைனுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினர்.
தீர்மானம் 598

1980 இல் தொடங்கிய ஈரான்-ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நியாயமான சமாதான பிரேரணையை முன்வைக்க ஐக்கிய நாடுகள் அதிக காலம் பொறுமையாக காத்திருந்தது ஆய்வுக்குரியது. இறுதியாக 20 ஜூலை 1987 அன்று ஈரான் - ஈராக் இடையே “உடனடி போர் நிறுத்துதல், போர்க் கைதிகளை திருப்பி அனுப்புதல் மற்றும் இரு நாட்டு தரப்பும் சர்வதேச எல்லைக்கு திரும்புதல்” ஆகிய தீர்மானங்களை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (தீர்மானம் 598) வலியுறுத்தியது. சரியாக ஒரு வருடம் கழித்து 20 ஜூலை 1988 அன்று ஈரான் ஈராக்குடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையொட்டி, இரு நாட்டினரும் தங்களின் ராணுவ துருப்புக்களை திரும்பப் பெறவும் 20 ஆகஸ்ட் 1988 அன்று ஈரான்-ஈராக் போர் முடிவுக்கு வந்தது.
இறுதி நிலை

ஈரான் மீதான முதல் தாக்குதல் ஈராக்கால் தொடங்கபட்ட பிறகு போர் தொடங்குகிறது. ஈராக் தனது இலக்கை அடையாததால் ஈரான் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் ஈரான் - ஈராக் போரில் வெற்றியாளர்கள் இல்லை என்றும் ஏறக்குறைய 8 ஆண்டுகள் நீடித்த போர் ஒரு முட்டுக்கட்டையில் (Stalemate) முடிந்தது என்றும் கருதுகின்றனர்.
விவரணைகள்

Iran - Iraq War Videos




வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும்

மகாபாரத போரும் நாட்காட்டி ஊழலும் பொருளடக்கம்    முதலாவது  பகடை விளையாட்டு சகுனியின் எதிர்பார்ப்பு சகுனியின் கேலி தருமனின் இறுதி தோல்வி திரௌப...