இந்து சமய அறநிலையத்துறை
சுருக்கம்
- முகவுரை
- மெட்ராஸ் கொடை மற்றும் இறையுறு சொத்து ஒழுங்குமுறை, 1817
- சமயநிலை கொடை சட்டம், 1863
- அறநிலைய கொடை சட்டம், 1890
- உரிமையியல் நெறிமுறை தொகுப்பு சட்டம், 1908
- அறநிலைய கொடை மற்றும் சமய அறக்கட்டளை, 1920
- நீதிக்கட்சி அமைத்த இந்து சமய அறநிலைய வாரியம், 1927
- இதர சட்டங்கள்
- இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1951
- தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1959
- அறங்காவலர் பணி நியமனம்
- கோவில் பணியாளர்களுக்கு ஊதியம்
- கோவில் நுழைவுச் சட்டம், 1939 மற்றும் 1947
- இந்து சமய அறநிலைய ஆணையம்
- இந்து சமய நிறுவனங்கள்
- பக்தர்கள் நன்கொடைகள்
- வக்பு வாரியம் மற்றும் அறநிலையத்துறை வேறுபாடு
- திராவிடக் கட்சிகளின் குறிப்பிடத்தக்க அறப்பணிகள்
- முடிவுரை
- நினைவில் கொள்ள வேண்டியது
- விவரணைகள்
குறிப்பு = சொல்லிலே தேன் தடவி சொல்லாமல் விஷம் தடவி பேசும் ஆன்மீகவாதிகள் சிலர் கோவில்களை அரசிடம் இருந்து விடுவிப்பதற்கு தீவிர பிரச்சாரம் செய்துவரும் வேளையில் அறநிலையத்துறை அரசிடம் மட்டுமே இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர இக்கட்டுரையை படித்து பகிர வேண்டுகிறேன்.
முகவுரை
தென்னிந்தியாவின் பெரும் கோவில்கள் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், மைசூரார்கள், திருவிதாங்கூரார்கள், கொச்சினியர்கள் மற்றும் பல மன்னர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டன. கோவில்களுக்கு சொந்தமாக பல சொத்துக்கள் இருப்பதால் பழங்காலத்திலிருந்தே மன்னர்கள் அவற்றின் பராமரிப்பைக் கவனித்து வந்தனர்.
பிரிட்டிஷ் இந்தியா மன்னராட்சியை அகற்றிய பிறகு பல கோவில்கள் ஆதிக்க சாதியினரால் கையகப்படுத்தப்பட்டன. முறையான பரிவர்த்தனைகள் இல்லாமல் கோவில் சொத்துக்கள் தனியாருக்கு மாற்றப்பட்டது. எனவே, கோவில் சொத்துக்கள் தவறாகக் கையாளப்படுவதாகவும், விற்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் பக்தர்கள் பிரிட்டிஷ் இந்தியாவிடம் பல புகார்களை அளித்தனர். இதன் நேரடி விளைவாக, மோசமான கோவில் நிர்வாகத்தை சரி செய்ய பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது கோவில்களை நிர்வகிப்பதற்கென அறநிலையத்துறையை உருவாக்கியதாகும்.
மெட்ராஸ் கொடை மற்றும் இறையுறு சொத்து ஒழுங்குமுறை, 1817
வங்காளம், மெட்ராஸ் மற்றும் பம்பாய் மாகாணங்களில் கோவில் அறநிலைய விதிமுறைகள் முறையே 1810, 1817 மற்றும் 1827 இல் உருவாக்கப்பட்டது. கோவில் சன்னதியில் உள்ள சிலைகள் சட்டப்பூர்வ உரிமை உள்ள ஒரு நபராக கருதப்பட்டது. கோவிலின் நிதி மேலாண்மை உள்ளூர் முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1817 இல் மெட்ராஸ் கொடை மற்றும் இறையுறு சொத்து ஒழுங்குமுறையின் கீழ் கோவில் நிர்வாகங்களை மேற்பார்வையிடவும், கோவில் நிலங்களின் வாடகையை வசூல் செய்யவும், கோவில் விளைபொருட்களை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யவும், கோவில் கட்டிடங்களை பராமரிக்கவும், கோவில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதை தடுக்கவும் வருவாய் வாரியத்திற்கு பரந்த அதிகாரம் வழங்கப்பட்டது.
சமயநிலை கொடை சட்டம், 1863
1817 சட்டத்திற்கு மாற்றாக இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் "சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருந்து அரசு விலகவும், அரசுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை பெறாமல் இருக்கவும்" சமயநிலை கொடை சட்டம், 1863 உருவாக்கப்பட்டது.
அறநிலைக் கொடை சட்டம், 1890
இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் "வறுமையை ஒழித்தல், கல்வியை மேம்படுத்தல், மருத்துவ உதவியை வழங்குதல் அல்லது பொது நலனுக்கான வேறு ஏதேனும் காரணத்தை மேம்படுத்துதல்" என தொண்டு நோக்கங்களுக்காக அறநிலைக் கொடை சட்டம், 1890 உருவாக்கப்பட்டது. இதில் கட்டாய மத போதனை தடுக்கப்பட்டது.
உரிமையியல் நெறிமுறை தொகுப்பு சட்டம், 1908
இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய உரிமையியல் நெறிமுறை தொகுப்பு சட்டம் என்பது "உரிமையியல் வழக்கில் நீதிமன்றங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையை ஒழுங்குபடுத்தும் சட்டத் தொகுப்பாகும்".
தொண்டு அல்லது சமய இயல்புடைய பொது நோக்கத்திற்காக நிறுவப்பட்ட வெளிப்படையான அல்லது மறைமுகமான நம்பிக்கை மீறப்பட்டதாகக் கூறப்படும் பட்சத்தில், 1908 உரிமையியல் நெறிமுறை தொகுப்பு சட்டத்தின் 92 வது பிரிவின் கீழ் ஒரு நபருக்கு உரிமைகள் உள்ளன. இதன் மூலம் “எந்த அறங்காவலரையும் நீக்குதல், புதிய அறங்காவலரை நியமித்தல், எந்த ஒரு சொத்தையும் அறங்காவலரிடம் ஒப்படைத்தல், நிதி ஆதாரங்களை இயக்குதல்” உட்பட பற்பல விஷயங்கள் ஆராயப்படுகின்றன.
அறநிலைய கொடை மற்றும் சமய அறக்கட்டளை, 1920
இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் "சமய அறக்கட்டளை நிர்வாகத்தின் மீது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கும் அறக்கட்டளை நடைமுறைகளை எளிதாக்குவதற்கும்" அறநிலைய கொடை மற்றும் சமய அறக்கட்டளை, 1920 சட்டம் உருவாக்கப்பட்டது. இது சமயம் சார்ந்த அறக்கொடை நோக்கங்களுக்காகவும், அத்தகைய அறக்கட்டளைகளின் அறங்காவலர்களுக்கு வழிகாட்டவும் உருவாக்கப்பட்டது. 1920 இன் அறநிலைய கொடை மற்றும் சமய அறக்கட்டளை 1882 இன் இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் இல்லாத பொது அறக்கட்டளைகளுக்குப் பொறுப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக, பொதுமக்களுக்கு உதவுவதற்காக சமய அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
நீதிக்கட்சி அமைத்த இந்து சமய அறநிலைய வாரியம், 1927
காலங்காலமாக பார்ப்பன சாதியினர் மற்றும் இதர ஆதிக்க சாதியினர் கோவில் அறங்காவலர்களாக கேள்வி கேட்பாரின்றி கோவில் வளங்களை சூறையாடி வந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி கோவில்களின் நிர்வாக சீர்கேட்டை கண்டு வெகுண்டெழுந்தது. 1920 இல் நீதிக்கட்சி சார்பில் பனகல் அரசர் மெட்ராஸ் மாகாண முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கோவில்களை அரசு கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முயன்றார். இதற்காக, 1922 இல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் 1925 இல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதைய வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி, வைஸ்ராய் லார்ட் இர்வின் பிரபுவிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெற்றார்.
இறுதியில், இந்த சட்டத்தின் மூலம் மெட்ராஸ் மாகாணம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் 1927 இல் இந்து சமய அறநிலைய வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோவில்களின் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப்பட்டது, நிர்வாகம் சரிவர நடைபெறாத கோவில்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டது, ஜாதி வேறுபாடின்றி யாரையும் கோயிலின் நிர்வாகத்தில் சேரவும் அதன் வருவாயை நிர்வகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது, கோவில்கள் அரசுக்கு உட்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகக் கருதப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். சுருக்கமாக, இந்து சமய அறநிலையத்துறையின் மூலகர்த்தாவான நீதிக்கட்சியால் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய இந்தியாவின் கோவில் நிர்வாக அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதர சட்டங்கள்
1928 இன் 1, 1929 இன் V, 1930 இன் IV, 1931 இன் XI, 1934 இன் XI, 1935 இன் XII, 1938 இன் XX, 1939 இன் XXII, 1939 இன் XXII, 1944 இன் V மற்றும் 1946 இன் X ஆகிய இதர சட்டங்கள் அறநிலையம் சார்ந்து இயற்றப்பட்டன.
இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1951
1940 இல் (1939-1946 வரை பிரிட்டிஷ் கவர்னர் ஆட்சி) இந்து சமய அறநிலைய வாரியத்தை சீர்திருத்த ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்து சமய நிறுவனங்களை வாரியத்தின் மூலம் அரசு கண்காணிப்பதை விட அரசே நேரடியாக நிர்வகிப்பது கூடுதல் பலனை தரும் என்று சிறப்பு அதிகாரி பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில் 1942 இல் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு அலுவல் சாரா குழு, இந்து சமய அறநிலைய வாரியத்தை அரசின் முக்கிய நிர்வாகமாக மாற்றுவது நன்மை பயக்கும் என்று பரிந்துரைத்தது. மேலும் 1950 இல் சட்டக் குழுத் தலைவர் திரு.சி.ஆர்.தாஸ் கோவில் நிர்வாகங்களில் நடக்கும் அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்க உரிய ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இந்த சூழலில் தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு கூடுதல் திருத்தங்களுடன் அரசுத்துறையாக செயல்பட இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம் 1951 இல் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் அறநிலையத்துறை ஆணையர் கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட வழிவகை செய்யப்பட்டன, கோவில்களின் அனைத்து விவகாரங்களும் அரசால் நிர்வகிக்கப்பட்டன, உரிமைகள் மற்றும் பொறுப்புகள் கொண்ட நிர்வாகத்தின் பல்வேறு நிலைகள் நிறுவப்பட்டன, பரம்பரை கோவில் பணியாளர்கள் ஒழிக்கப்பட்டனர். அக்காலகட்டத்தில் இந்த சட்டத்திற்கு வலதுசாரிகள் பலத்த எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1959
முந்தைய அனைத்து சமய சட்டங்களுக்கும் மாற்றாக தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டத்தை 1959 இல் தமிழ்நாடு அரசு இயற்றியது. இச்சட்டம் 01 ஜனவரி 1960 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக பணிகளை ஆணையராக I.A.S அதிகாரி ஒருவர் கவனித்து வருகிறார். ஆணையருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.
கோவில் சார்ந்து பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டு அதற்கென நிர்வாகிகள் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்து சமய நிறுவனங்களின் விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்க ஒரு ஆலோசனைக் குழுவும் அங்கீகரிக்கப்பட்டது. கோவில் அலுவலர்களுக்கு உரிய அதிகாரங்கள் மற்றும் கடமைகள் வரையறுக்கப்பட்டது. கோவில் நிதி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் வரையறுக்கப்பட்டது. மேலும் கோவில் சொத்துக்கள் தனிநபர்களுக்கு முறைகேடாக மாற்றப்பட்டது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தீர்க்க வழிவகை செய்யப்பட்டன.
அறங்காவலர் பணி நியமனம்
இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1959 இன் கீழ் கோவில்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட பரம்பரை அல்லாத அறங்காவலர்களை அரசு நியமிக்கிறது. அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் குறைந்தபட்சம் ஒரு பெண் மற்றும் ஆதி திராவிட அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட கூடுதல் உறுப்பினர்கள் இருப்பர். இந்தக் குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள்.
அறங்காவலர் குழுவில் தற்காலிக காலியிடம் ஏற்பட்டால் அடுத்த அறங்காவலர் குழு தேர்ந்தெடுக்கப்படும் வரை கோவில் அறங்காவலர்களின் பணிகளைச் செய்ய இடைக்கால தக்கார் தேர்வு செய்யப்படுவார்.
கோவில் பணியாளர்களுக்கு ஊதியம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஒன்றியத்தை மதச்சார்பற்ற அரசு என்று வரையறுக்கிறது. மதச்சார்பற்ற கோட்பாட்டின் படி, இந்து கோவில்களுக்கு ஒன்றிய அரசு செலவு செய்ய முடியாது. கோவில் பணியாளர்களுக்கு மாநில அரசின் கருவூலத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டு கோவில்கள் தமிழ்நாடு அரசுக்கு செலுத்தும் 14% வரியிலிருந்து கோவில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
கோவில் நுழைவுச் சட்டம், 1939 மற்றும் 1947
1924-1925 காலகட்டத்தில் கேரளாவில் பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டம், தமிழ்நாட்டில் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டது. காங்கிரஸ்வாதி வைத்தியநாத ஐயர் தலைமையில் ஐந்து ஆதி திராவிடர்கள் மற்றும் ஒரு நாடார் சமூகத்தினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 8 ஜூலை 1939 அன்று இரவு 8.45 மணிக்குள் நுழைந்தனர். 11 ஜூலை 1939 அன்று மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் முதல்வர் ராஜாஜி கோவிலுக்குள் நுழைபவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிப்பவர்களையும் மட்டும் பாதுகாக்கும் வகையில் மெட்ராஸ் கோவில் நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீடு சட்டத்தை 1939 இல் இயற்றினார். 22 ஜூலை 1939 அன்று ஹரிஜன் இதழில் வைத்தியநாத ஐயர் மற்றும் அவரது குழுவினரை கோவில் நுழைவுக்காக காந்தி பாராட்டி எழுதினார். மேலும் 13 செப்டம்பர் 1939 அன்று வாழ்த்துக் கடிதமும் எழுதினார்.
1939 இல் மேம்போக்கான சட்டத்தை இயற்றிய ராஜாஜியின் அரசியல் சூழ்ச்சியை அறிந்து “கோவிலுக்குள் அனைவரும் செல்லலாம் என்றொரு பொது சட்டத்தை இயற்றாமல் கோவிலுக்குள் நுழைய நினைப்பவர்களை மட்டும் பாதுகாக்க ஓர் சட்டம் இயற்றுவது சமூக அநீதி ஆகும்” என்று பெரியார் கண்டனம் தெரிவித்தார். இறுதியாக அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் மெட்ராஸ் கோவில் நுழைவு அங்கீகாரச் சட்டத்தை 1947 இல் மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் முதல்வர் ஓ.பி.ராமசாமி நிறைவேற்றினார்.
இந்து சமய அறநிலைய ஆணையம்
இந்திய ஒன்றிய அரசு 1960 இல் இந்து சமய அறநிலைய தொடர்பான பிரச்சனைகளை விசாரிக்க இந்து சமய அறநிலைய ஆணையத்தை நிறுவியது. டாக்டர்.சி.பி.ராமசுவாமி ஐயர் 1960 முதல் 1962 வரை ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆணையம் சில பரிந்துரைகளை அளித்தது. கோவில் நிர்வாகத்திற்கான ஆணையப் பரிந்துரைகள் தற்போதைய தரநிலையாகக் கருதப்படுகிறது.
*அர்ச்சகர்களும் பூசாரிகளும் ஆகமங்கள், அர்ச்சனைகள், சடங்குகள் குறித்தான பயிற்சி பள்ளிகளை மாநில அரசுகள் நிறுவ வேண்டும்.
*1959 இந்து சமய மற்றும் தொண்டு அறக்கொடை சட்டத்தின் 97 வது பிரிவின் அடிச்சுவடுகளைப் போன்று மாநில அரசுகள் பொதுநல நிதிகளை நிறுவ வேண்டும்.
*இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் சமய அறநிலையங்களை நிர்வகிப்பதற்கான நிலையான சட்ட கட்டமைப்பை அரசு செயல்படுத்த வேண்டும்.
*இந்து சமய அறநிலையங்களை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றாத மாநில அரசுகள், அறங்காவலர்கள் மீது கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கு தகுந்த சட்டத்தை விரைவாக இயற்ற வேண்டும்.
*கோவில் அறங்காவலர்களை நீக்கவும், இடைநிலைத் தலைவர்களை நியமிக்கவும், அவசரநிலை ஏற்பட்டால் தேவையான பிற திருத்த நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.
தனியார் வசம் இருந்த பழங்கோவில்கள், சமஸ்தானம் வசம் இருந்த பழங்கோவில்கள் மற்றும் துணை கோவில்கள் பலவும் தமிழ்நாடு அரசால் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இப்போது, இந்து சமய அறநிலையத்துறை 9,166 பட்டியலிடப்பட்ட கோவில்கள் மற்றும் 36,802 பட்டியலிடப்படாத கோவில்கள் நிர்வாகங்களுக்கு பொறுப்பாக உள்ளது.
கோவில் நிலங்களில் விவசாயம் செய்து வரும் குத்தகைதாரர்களுக்கு இடையே நிலுவையில் உள்ள வாடகை பாக்கி, நியாயமான வாடகை நிர்ணயம், கடனைத் தீர்த்தல் போன்ற தகராறுகளைத் தீர்ப்பதற்கு தமிழ்நாடு பயிரிடும் வாடகைதாரர் பாதுகாப்பு சட்டம் 1955 இன் கீழ் வருவாய் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இந்திய ஒன்றியம் மாநிலங்களில் இந்து சமய அறநிலையச் சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. வெளிநாடுகளை பொறுத்தவரையில் சிங்கப்பூரில் 1968 இன் இந்து அறநிலையச் சட்டமும் மலேசியாவில் 1906 இன் இந்து அறநிலையச் சட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
பக்தர்கள் நன்கொடைகள்
பக்தர்கள் "திருவிழாக்களை நடத்தவும், சத்திரங்களை பராமரிக்கவும், கட்டிடங்களை பழுது பார்க்கவும், அறநிலையங்களை நிர்வகிக்கவும், கோவில் பணியாளர்கள் நலனை காக்கவும்" நன்கொடைகள் வழங்குவதும் கோவில்களுக்கு தானமாக "நிலங்கள், கட்டிடங்கள், தங்கம், வெள்ளி மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள்" வழங்குவதும் வழக்கம். கோவிலுக்கு அளிக்கப்படும் பங்களிப்புகள் அரசால் தணிக்கை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
வக்பு வாரியம் மற்றும் அறநிலையத்துறை வேறுபாடு
மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு மாநில அரசும் இந்து சமய அறநிலையத்துறையை மேற்பார்வை செய்கிறது. ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு மாநில அரசும் வக்பு வாரியங்களை மேற்பார்வை செய்கிறது. வக்பு சட்டம், 1954 (இப்போது 1995 சட்டத்தின் துணைப்பிரிவு) கீழ் வக்பு வாரிய விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக 1964 இல் ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான ஒன்றிய வக்பு சபை (Central Waqf Council) நிறுவப்பட்டது. சுருக்கமாக, இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சட்டம், 1959 மற்றும் வக்பு வாரியம் வக்பு சட்டம், 1995 கீழ் செயல்படுகின்றன.
திராவிடக் கட்சிகளின் குறிப்பிடத்தக்க அறப்பணிகள்
இதில் குறிப்பாக "பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிப்பு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோவில்களை ஒருங்கிணைக்க அறநிலையத்துறை அமைச்சகம், பழைமையான சிலைகள் மீட்பு, கோவில் ஓவியங்கள் புதுப்பித்தல், கோவில் சிற்பங்கள் பராமரித்தல், திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் புனரமைப்பு, தஞ்சைப் பெரிய கோவிலின் 1000 வது ஆண்டுவிழா, கோவில் வருமானங்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லங்கள், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள், கோவில் நிலங்களை மீட்டல், கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியம், அன்னதானத் திட்டம், குடமுழுக்கு, கோவில் பணி வரன்முறை, அறநிலையத்துறை சார்பில் நிதிநிலை அறிக்கை, கோவில் ஆவணங்களை அரசு இணையத்தளத்தில் பதிவேற்றல்" போன்ற அறப்பணிகள் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்கவை.
முடிவுரை
ஒன்றிய இந்தியா முழுவதும் கோவில் வளங்களைக் கண்காணிப்பதற்கான அடித்தளத்தை நிறுவிய இந்து அறநிலையச் சட்டத்தை திராவிட இயக்கத்தின் மூதாதையரான நீதிக்கட்சி 1925 இல் உருவாக்கியது. நீதிக்கட்சி கொண்டு வந்த சட்டத்தின் செயல்திறன் சிறப்பாக இருந்த காரணத்தால் காங்கிரஸ் முதல்வர் காமராஜர் 1959 இல் அச்சட்டத்தை கூடுதல் திருத்தங்களுடன் மேம்படுத்தினார். மேலும் திராவிடக் கட்சிகள் கோவில்களின் நிர்வாகத்தைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் கூடுதல் திருத்தங்கள், திட்டங்கள் மற்றும் செயல்படுத்தல்களுடன் சட்டத்தை நெருக்கமாகப் பின்பற்றி வருகின்றன.
"உயர் சாதியினரும், ஆன்மிக குருக்களும் தங்கள் சொந்த லாபத்திற்காக கோவில் வளங்களை கொள்ளையடிப்பதைத் தவிர்க்கவும், சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், சமய சொத்துக்களை நிர்வகிக்கவும்" அறநிலையத்துறையை அரசு இடைவிடாது கவனித்துக்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.
நினைவில் கொள்ள வேண்டியது
கேள்வி = இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 26 வது பிரிவு, "மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக நிறுவனங்களை உருவாக்க, பராமரிக்க, மத தொடர்பான விவகாரங்களை நிர்வகிக்க, சொத்துகளை வாங்க, சொத்துகளை சட்டப்படி நிர்வகிக்க" உரிமை வழங்குகிறது. இதன்படி, இந்து கோவில்களுக்கு அரசாங்கத்தின் இந்து அறநிலையத்துறை கண்காணிப்பு தேவையா?
பதில் = இந்து கோவில்களின் மேலாண்மை பணியை இந்து அறநிலையத்துறை செய்கிறது. இதற்கான விதிமுறைகள் 26 வது பிரிவில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளிலிருந்து மாறுபடுகின்றன. இந்த பின்னணியில், உச்ச நீதிமன்றம் "கோவில் சொத்து நிர்வாகம்" (Administering Temple Property) என்பது "கோவில் விவகாரங்களை நிர்வகித்தல்" (Managing Temple Affairs) என்பதற்கு முற்றிலும் மாறுபட்டது என தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விவரணைகள்
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.