QWERTY விசைப்பலகையின் வரலாறு
பொருளடக்கம்
- முகவுரை
- ஆரம்பகால தட்டச்சு இயந்திரம்
- அகரவரிசையும் சிக்கலும்
- தந்தியும் சிக்கலும்
- விசைப்பலகை பரிசோதனைகள்
- QWERTY விசைப்பலகை
- ரெமிங்டன் எண் 1 தட்டச்சு இயந்திரம்
- ரெமிங்டன் எண் 2 தட்டச்சு இயந்திரம்
- தரநிலையாக QWERTY
- DVORAK விசைப்பலகை
- தட்டச்சு சந்தை
- முடிவுரை
- விவரணைகள்
முகவுரை
QWERTY விசைப்பலகை தினசரி அடிப்படையில் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் ஒரு பொதுவான கருவியாகும். 1870 களில் தட்டச்சு இயந்திரத்திற்காக உருவாக்கப்பட்ட QWERTY விசைப்பலகை இன்று கணினி விசைப்பலகைகளுக்கான தரநிலையாக உள்ளது.
நீங்கள் தட்டச்சு செய்யும் போது விசைப்பலகை ஏன் QWERTY அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று யோசித்திருக்கலாம். அவ்வாறு, QWERTY விசைப்பலகை வடிவமைக்கப்பட்ட விதத்திற்கு பல சுவாரஸ்யமான விளக்கங்கள் உள்ளன.
ஆரம்பகால தட்டச்சு இயந்திரம்
வணிக நிறுவனங்களை திறம்பட நடத்துவதற்காக அமெரிக்க கண்டுபிடிப்பாளரும் செய்தித்தாள் வெளியீட்டாளருமான கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் தனது சகாக்கள் கார்லோஸ் கிளிடன், ஜேம்ஸ் டென்ஸ்மோர் மற்றும் சாமுவேல் சோல் உதவியுடன் அமெரிக்காவில் ஆரம்பகால தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்து 1868 இல் காப்புரிமை பெற்றார்.
1868 இல் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் மற்றும் அவரது சகாக்கள் தங்களின் முதல் தட்டச்சு இயந்திரத்தை சிகாகோவில் உள்ள போர்ட்டர்ஸ் டெலிகிராப் கல்லூரியின் முதல்வர் எட்வர்ட் பேசன் போர்ட்டர் அவர்களுக்கு வழங்கினர். முதல் தட்டச்சு இயந்திரத்தின் விசைப்பலகை 28 விசைகளைக் கொண்டிருந்தது மற்றும் பியானோவைப் போல வடிவமைக்கப்பட்டது. ஒரு வரிசையில் A முதல் M வரை மற்றொரு வரிசையில் N முதல் Z வரை என்று விசைப்பலகை அகரவரிசையில் அமைக்கப்பட்டது. தட்டச்சு இயந்திரம் போர்ட்டர்ஸ் கல்லூரியில் பயன்படுத்தப்பட்ட ஹியூஸ் ஃபெல்ப்ஸ் பிரிண்டிங் டெலிகிராப்பை ஒத்திருந்தது.
அகரவரிசையும் சிக்கலும்
பயனர்கள் ஒவ்வொரு எழுத்தையும் எளிதாக அடையாளம் காணும் வகையில் ஆரம்பகால தட்டச்சு இயந்திரத்தில் விசைப்பலகை அகரவரிசைப்படி வடிவமைக்கப்பட்டன. அகரவரிசைப்படி அமைக்கப்பட்ட விசைப்பலகை பயனர்களை அதிக வேகத்தில் தட்டச்சு செய்ய அனுமதித்தன. ஆனால் பயனர்கள் நெருக்கமாக அமைந்துள்ள இரு விசைகளை மிக விரைவாக அழுத்தும் போது அந்தந்த விசைகளுடன் தொடர்புடைய நெம்புகோல்கள் தடைப்பட்டன. எனவே விசை நெரிசலை குறைக்கும் வகையில் புதிய விசைப்பலகை அமைப்பு தேவைப்பட்டது.
தந்தியும் சிக்கலும்
மோர்ஸ் குறியீட்டின் உதவியுடன் மின் சமிக்ஞைகளை சுமந்து செல்லும் கம்பிகளை பயன்படுத்தி நீண்ட தூரத்திற்கு செய்திகளை அனுப்பும் முறை “தந்தி” எனப்படும். இவ்வாறு, தந்தி இயக்குபவர்கள் அகரவரிசை முறை குழப்பமானதாகவும் மோர்ஸ் குறியீட்டை மொழிபெயர்ப்பதில் சிரமம் இருப்பதாகவும் எண்ணினர்.
எடுத்துக்காட்டாக மோர்ஸ் குறியீட்டில் Z என்பது “. . . .” என்றும் SE என்பது “. . . .” என்றும் குறிக்கிறது. செய்தி பகிர்வின் போது Z என்பது SE உடன் இணைத்து குழப்பப்பட்டது. சில நேரங்களில் மோர்ஸ் குறியீட்டை பெறுபவர்கள் பின்வரும் கடிதங்களை பெறும் வரையில் Z அல்லது SE பொருந்துமா என்பதை தீர்மானிக்க முடியவில்லை. எனவே, தந்தி இயக்குபவர்களுக்கு எளிதாக்க, மோர்ஸ் குறியீட்டை பெறுபவர்கள் வேகமாக தட்டச்சு செய்ய விசைப்பலகையில் Z மற்றும் E ஆகிய இரண்டிற்கும் இடையே S என்பதை வைக்க யோசித்தனர்.
விசைப்பலகை பரிசோதனைகள்
விசை நெரிசலை தவிர்ப்பதற்கும் தந்தி வழிமுறையை எளிதாக்குவதற்கும் விசைகளை ஒழுங்கமைப்பதற்கும் ஒரு திறமையான வழியைக் கண்டறிய கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் விசைப்பலகை அமைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.
இதன் பின்னணியில், 1870 இல் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் தட்டச்சு இயந்திரத்தில் எழுத்துக்களை 4 வரிசைகளாக ஒழுங்கமைத்தார். முதல் வரிசையில் எண்கள், இரண்டாவது வரிசையில் உயிரெழுத்துக்கள் மற்றும் நிறுத்தற்குறிகள், மூன்றாவது வரிசையில் 10 எழுத்துக்கள், நான்காவது வரிசையில் 10 எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டன.
1873 இல் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் 1870 விசைப்பலகை அமைப்பை விட சற்றே மேம்பட்ட ஒரு விசைப்பலகையை வடிவமைத்தார். இது QWERTY அமைப்பின் முன்மாதிரியாக மோர்ஸ் குறியீடு பயனர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
QWERTY விசைப்பலகை
1870 களில் தொழில்முறை தட்டச்சு செய்பவர்கள் இல்லாத காலகட்டத்தில் தந்தி இயக்குபவர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்கள் தான் தட்டச்சு இயந்திரங்களை பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இதன் பின்னணியில், கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ், விசைப்பலகைகளை அதிகம் பயன்படுத்திய தந்தி இயக்குபவர்களின் உள்ளீட்டை கொண்டு தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு, விசைப்பலகை சிக்கலை தீர்க்க QWERTY விசைப்பலகையை வெற்றிகரமாக உருவாக்கினார். அடிக்கடி பயன்படுத்தப்படும் E, T, A, O, I, N எழுத்துக்களை விசைப்பலகை முழுவதும் பரப்பியும் E, D சொற்களின் சேர்க்கைகள் ஒரே விரலால் அடிக்கப்படுவதை உறுதி செய்தும் விசைப்பலகையை வடிவமைத்தார்.
சுருக்கமாக, QWERTY விசைப்பலகையானது, ஆரம்பகால விசைப்பலகையின் அகரவரிசை எழுத்துக்களை இடமாற்றம் செய்து வெவ்வேறு வரிசைகளில் எழுத்துக்களை ஒழுங்குபடுத்தியும் விரல்களை இலகுவாக பயன்படுத்தவும் விசைப்பலகையின் நெரிசலை தவிர்க்கவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, QWERTY விசைப்பலகையில் உள்ள விசைகள் தட்டச்சு செய்பவரின் வேகத்தை குறைக்கும் ஒரு இரகசிய நோக்கத்தை கொண்டிருப்பதாக ஒரு கட்டுக்கதை பரவியது. இருப்பினும் நாளடைவில் இந்த கட்டுக்கதை பரவலாக மதிப்பிழந்தது.
ரெமிங்டன் எண் 1 தட்டச்சு இயந்திரம்
அமெரிக்க உள்நாட்டு போரை (1861-1865) தொடர்ந்து துப்பாக்கி தயாரிப்பாளரான ரெமிங்டன் நிறுவனம் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் இறங்கியது. இதன் பின்னணியில் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் தட்டச்சு இயந்திரத்தின் உற்பத்தி உரிமையை ரெமிங்டன் நிறுவனத்திற்கு 1873 இல் விற்றனர்.
கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸின் வழிகாட்டுதலில் ரெமிங்டன் நிறுவனம் அசல் வடிவமைப்பில் தேவையான மாற்றங்களை செய்து QWERTY விசைப்பலகையுடன் கூடிய Sholes & Glidden தட்டச்சு இயந்திரங்களை 1874 இல் உற்பத்திக்கு கொண்டு வந்தது. இதனை, ரெமிங்டன் எண் 1 தட்டச்சு இயந்திரம் எனவும் கூறுவர்.
ரெமிங்டன் எண் 2 தட்டச்சு இயந்திரம்
ரெமிங்டன் எண் 1 தட்டச்சு இயந்திரத்தில் பெரிய எழுத்துக்கள் (Upper Case) மட்டுமே இருந்தன. அதனால் 1878 இல் ரெமிங்டன் நிறுவனம் Shift Key உடன் புதிய மாடலான எண் 2 தட்டச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது.
ரெமிங்டன் எண் 2 தட்டச்சு இயந்திரத்தில் உள்ள Shift Key வசதி ஒவ்வொரு விசையையும் பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்தாக (Upper and Lower Case) பயன்படுத்த அனுமதித்தது. மேலும் தட்டச்சு இயந்திரத்தின் உள்ளே ஒரு கருப்பு ரப்பர் ரோலர் வைக்கப்பட்டு அது விசைகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க பயன்படுத்தப்பட்டது. 1890 வாக்கில் ரெமிங்டன் எண் 2 தட்டச்சு இயந்திரங்கள் சுமார் 1,00,000 அலகுகள் வரை விற்பனையானது.
தரநிலையாக QWERTY
1893 இல் ரெமிங்டன், கலிகிராஃப், யோஸ்ட், டென்ஸ்மோர் மற்றும் ஸ்மித்-பிரீமியர் ஆகிய ஐந்து பெரிய தட்டச்சு உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து அமெரிக்காவில் தட்டச்சு இயந்திர உற்பத்தியாளர்களைக் கட்டுப்படுத்தும் குறிக்கோளுடன் நியூயார்க்கில் யூனியன் தட்டச்சு அறக்கட்டளையை உருவாக்கினர். அத்துடன் அப்போது தரமான தட்டச்சு இயந்திரங்களுக்கான விலையை 100 டாலர்களாக நிர்ணயித்தனர்.
விசைப்பலகைகளுக்கான தரநிலையாக QWERTY அமைப்பை பயன்படுத்த அமெரிக்க அறக்கட்டளை நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, நாளடைவில் உலகம் முழுவதும் QWERTY விசைப்பலகை கொண்ட தட்டச்சு இயந்திரங்களின் சேவையும் அதன் தேவையும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
DVORAK விசைப்பலகை
QWERTY விசைப்பலகைக்கு எதிராக வெவ்வேறு காலகட்டத்தில் பல விசைப்பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் DVORAK விசைப்பலகை ஒரு கட்டத்தில் QWERTY விசைப்பலகைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
1936 இல் டாக்டர் ஆகஸ்ட் டுவோராக் மற்றும் டாக்டர் வில்லியம் டீலி ஆகியோரால் DVORAK விசைப்பலகை வடிவமைக்கப்பட்டது. தட்டச்சு செய்பவர்களுக்கு எழுத்துக்களை விரைவாகக் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட DVORAK விசைப்பலகை மூலம் தட்டச்சு வேகத்தை 74 சதவீதமும் துல்லியத்தை 68 சதவீதமும் அதிகரிக்க முடியும் என்று டாக்டர் டுவோராக் வாதிட்டார்.
மேலும் QWERTY அமைப்பில் உள்ள அசாதாரண எழுத்து சேர்க்கைகள் தான் பெரும்பாலும் நிகழும் எழுத்து பிழைகளுக்கு காரணம் என்றும் டுவோரக் கூறினார். டாக்டர் டுவோராக் வாதங்களை முன்வைத்த போதிலும், DVORAK விசைப்பலகை QWERTY விசைப்பலகை பயன்பாட்டை மாற்றுவதில் தோல்வியடைந்தது. DVORAK விசைப்பலகை வேகமானது என்ற கூற்றுகளும் பரவலான விமர்சனங்களை பெற்றது. மேலும் DVORAK விசைப்பலகை அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், பயனர்கள் ஏற்கனவே QWERTY விசைப்பலகையின் செயல்பாட்டை நன்கு அறிந்திருந்ததால் புதிய தட்டச்சு முறையைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை.
தட்டச்சு சந்தை
தட்டச்சு இயந்திரங்களை பயன்படுத்தி எப்படி தட்டச்சு செய்வது என்று மக்களுக்கு தட்டச்சு கல்வியை முதல் முறையாக ரெமிங்டன் நிறுவனம் வழங்கியது. தங்கள் வணிக நோக்கங்களை முன்னெடுத்து செல்ல விரும்பும் நிறுவனங்கள், பயிற்றுவிக்கப்பட்ட தட்டச்சர்களை பணியமர்த்த தட்டச்சு இயந்திரங்களை வாங்க வேண்டியிருந்தது, அவை கணினிகள் பயன்பாடு உருவாகும் வரை தட்டச்சு இயந்திரங்களுக்கான சந்தையை உறுதி செய்வதாக அமைந்தது.
காலப்போக்கில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையில் தட்டச்சு இயந்திரங்களின் வடிவமைப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதே நேரத்தில் கணினிகளின் எழுச்சிக்கு பிறகு தட்டச்சு இயந்திர உற்பத்தியில் இனி ஏகபோகத்தை அனுபவிக்க முடியாது என்பதால், பல்வேறு தட்டச்சு இயந்திர உற்பத்தி நிறுவனங்களை கையகப்படுத்துதல்/இணைத்தல்/மூடுதல் ஆகியவை நடந்தன. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, விசைப்பலகையை பொருத்தவரை QWERTY அமைப்பானது தட்டச்சு இயந்திரங்களில் இருந்து தொடுதிரைகளுக்கு இடம்பெயர்ந்துள்ளது என்பது நுட்பமாக கவனிக்கத்தக்கது.
முடிவுரை
QWERTY விசைப்பலகை என்பது முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு. ஆனால், அதே நேரத்தில் பழைய கனமான தட்டச்சு இயந்திரங்கள் முதல் நவீன கால தொடுதிரை இயந்திரங்கள் வரை QWERTY விசைப்பலகை வெற்றிகரமாக அதன் தொடர்பை தக்க வைத்து கொள்ளும் வகையில் பொருத்தமானதாக உள்ளது. இக்கட்டுரை QWERTY விசைப்பலகையின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் என்று எண்ணி நிறைவு செய்கிறேன்.
விவரணைகள்
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment