Chocks: ஏரியும் ஆராய்ச்சியும்

Tuesday, August 9, 2022

ஏரியும் ஆராய்ச்சியும்

ஏரியும் ஆராய்ச்சியும்

பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. மர்ம ஏரி 
  3. ஆய்வுகளின் ஒரு பகுதி 
  4. கோட்பாடுகள் 
  5. நந்தா தேவி ராஜ் ஜாட் யாத்திரை 
  6. மலையேற்றம் தடை 
  7. முடிவுரை
  8. விவரணைகள் 
முகவுரை 

1942 இல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​ரூப்குண்ட் ஏரியில் பனிக்கட்டிக்கு அடியில் சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களை இந்திய வனப் பாதுகாவலர் H.K.மத்வால் கண்டுபிடித்தார். ரூப்குண்ட் ஏரி, உத்தரகண்ட் மாநிலத்தில், இந்தியாவின் மிக உயரமான மலைகளில் ஒன்றான திரிசூலின் செங்குத்தான சரிவின் அடிப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரத்தில் உள்ளது. 
மர்ம ஏரி 

வழக்கமாக ஆண்டு முழுவதும் உறைந்து கிடக்கும் இந்த ஏரி, பருவம் மற்றும் வானிலைக்கு ஏற்ப விரிவடைந்து சுருங்குகிறது. பனி உருகும்போது மட்டுமே சதையுடன் கூடிய எலும்புக்கூடுகள் நன்கு தெரியும். இதுவரை இங்கு சுமார் 800 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரூப்குண்ட் ஏரியில் உள்ள உடல் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து பல மர்மங்களைத் தீர்க்க முயன்று வருகின்றனர்.
அதே நேரத்தில் “இவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எப்போது, ​​எப்படி இறந்தார்கள்?” என்பது போன்ற பல விடை தெரியாத கேள்விகளால் குழப்பத்தில் உள்ளனர். உள்ளூர் அரசாங்கம் சுற்றுலாவுக்கான விளம்பரங்களில் ரூப்குண்ட் ஏரியை “மர்ம ஏரி” என்று குறிப்பிடுகிறது.

ஆய்வுகளின் ஒரு பகுதி 

ஏரியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களை ஆய்வு செய்தவர்கள் “இறந்தவர்களில் பல உடல்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், சில உடல்கள் சராசரி உயரத்தை விட உயரமானது, சில உடல்கள் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது, சில இறப்புகள் வெவ்வேறு காலத்தில் நிகழ்ந்திருக்கலாம்” என்று கண்டறிந்தனர். மேலும் இறந்தவர்கள் மரபணு ரீதியாக வேறுபட்டவர்கள் என்றும் ஒரு குழுவினர் தெற்காசியாவில் வாழும் மக்களைப் போன்ற மரபணுக்களைக் கொண்டிருப்பதாகவும் மற்ற குழுவினர் ஐரோப்பாவில் வாழும் மக்களைப் போன்ற மரபணுக்களைக் கொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கோட்பாடுகள் 

கோட்பாடு 1 = நாட்டுப்புற பாடல்கள் வாயிலாக தெய்வமாக வணங்கப்படும் இந்தியாவின் இரண்டாவது உயரமான மலையான "நந்தா தேவி" பெரும் புயலை உருவாக்கி ஏரியைக் கடக்க முயன்ற மக்களைக் கொன்றது. 

கோட்பாடு 2 = 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பேரிடரில் இப்பகுதியை ஆண்ட இந்திய மன்னரின் குடும்பத்தினர் மற்றும் காவல்படை வீரர்கள் புதையுண்டனர் . 

கோட்பாடு 3 = 19 ஆம் நூற்றாண்டில் திபெத்தை தாக்க முயன்ற இந்திய வீரர்கள் இமயமலைக்கு மேல் தங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி இறந்தனர். 

கோட்பாடு 4  = பண்டைய காலத்தில் பரவிய ஒரு தொற்றுநோயால் இறந்தவர்கள் ஒன்றாக புதைக்கப்பட்டனர். 
இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்கூறிய கோட்பாடுகள் ஆதாரமற்றவை என்று கண்டறியப்பட்டது. மேலும் பண்டைய காலத்தில் இப்பாதை ஜப்பானிய போர் படையினருக்கு / திபெத்திய வர்த்தகர்களுக்கு சொந்தமானது என்று கருதப்பட்டது. ஆனால் தொல்லியல் ஆய்வுகளின் படி இப்பகுதியில் போர்க் கருவிகளோ வர்த்தகப் பொருட்களோ கிடைக்கவில்லை. ஏரி வர்த்தக பாதையில் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நந்தா தேவி ராஜ் ஜாட் யாத்திரை 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நந்தா தேவி ராஜ் ஜாட் யாத்திரை என்பது உத்தரகாண்டின் மூன்று வார கால இந்து புனித யாத்திரை மற்றும் திருவிழா ஆகும். இந்த யாத்திரையின் இறுதித் தலமான ஹோம்குண்ட் செல்லும் வழியில் ரூப்குண்ட் அமைந்துள்ளது. 2004 இல் வெளியிடப்பட்ட தடயவியல் அறிக்கையின்படி, 9 ஆம் நூற்றாண்டில் ஹோம்குண்ட் பகுதிக்கு புனித யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த யாத்ரீகர்கள் வழியில் உள்ள ரூப்குண்ட் பகுதியில் மிக குறுகிய ஆனால் கடுமையாக பெய்த பாறாங்கல் அளவு ஆலங்கட்டி மழையால் தாக்கப்பட்டு இறந்தனர். நிற்க!!! ஆய்வின்படி இறந்தவர்களில் ஒரு குழுவினர் ஐரோப்பாவில் வாழும் மக்களைப் போன்ற மரபணு அமைப்பைக் கொண்டிருந்தனர் என்றால் கிறிஸ்தவ மதத்தை முன்னிறுத்தும் ஐரோப்பியர்கள் இந்து புனித யாத்திரைக்கு வருவார்களா? இவ்வாறு ஒன்று தொட்டு தொன்றுதொட்டு சிக்கலான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. 
மலையேற்றம் தடை 

பல்லுயிர், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக உத்தரகாண்டின் உயரமான இடங்களில் முகாமிடுவதற்கு தடை விதித்து 2019 இல் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் ரூப்குண்ட் உச்சியை ஒரே நேரத்தில் அடைய சிரமப்பட்டனர். மலையேற்றத் தடை கிராம மக்களின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியது.
முடிவுரை 

இமயமலையில் உள்ள ரூப்குண்ட் ஏரி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு 80 ஆண்டுகளுக்குப் பிறகும், எலும்புக்கூடுகளின் மர்மம் இன்றுவரை தொடர்கிறது. இப்பகுதியை பல்வேறு நாட்டைச் சேர்ந்த பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் பல செய்தது உண்டு, செய்வது உண்டு.

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இன்னும் பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் சில பதில்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் அது கதையை அளவிட முடியாத வழிகளில் வளப்படுத்துகிறது.
விவரணைகள்



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...