Chocks: தமிழ் ஏன் தேயாமல் வாழ்கிறது?

Friday, January 26, 2024

தமிழ் ஏன் தேயாமல் வாழ்கிறது?

தமிழ் ஏன் தேயாமல் வாழ்கிறது?
முகவுரை

தமிழ்நாட்டில் காணப்படாத தொல்லியல் எச்சங்கள் எகிப்து, கிரேக்கம், உரோம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. அவை தமிழை விட மிகவும் பழமையானவை என்று அறியப்படுகிறது. ஆனால் இன்று எகிப்திய மொழி எங்கே? கிரேக்க மொழி எங்கே? லத்தீன் மொழி எங்கே? எல்லாம் ஏன் அழிந்தது? தமிழ் மட்டும் எப்படி நிமிர்ந்து நிற்கிறது? ஒரு காரணம் இருக்கிறது, அது என்ன என்பதை சில பத்திகளில் ஆராய்வோம்.

பிரமாண்டமும் எளிமையும்

கிரேக்க அக்ரோபொலிஸ், எகிப்திய பிரமிட், ரோமன் மன்றம் போன்றவை மன்னர்களின் ஆடம்பர கலை சின்னங்கள் ஆகும். மாறாக, நெகிழ்வுத்தன்மை கொண்ட தமிழ் என்பது எளிமையின் அடையாளம் ஆகும். ஆடம்பர மரபில் வேரூன்றிய எகிப்து, கிரேக்கம், உரோம் நாகரிகங்கள் வீழ்ந்த நிலையில் பழங்கால மரபில் வேரூன்றிய தமிழ் நாகரிகம் இன்றும் செழித்தோங்கி வருகிறது. 

மூவேந்தர்கள்

பாண்டிய மன்னர் முதுகுடுமிப் பெருவழுதி, பிரம்மாண்ட யாகங்கள் நடத்த தொடங்கிய பிறகு "பிரம்மாண்டம்" என்ற கவர்ச்சி சொல் முக்கியத்துவம் பெற தொடங்கியது. அதுவே சோழர்கள் ஆட்சியில் உச்சம் பெற்றது. மேலும், பார்ப்பனர்களின் வருகைக்கு பிறகான பேரரசுகளின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கோவில்களும் அரண்மனைகளும் பிரம்மாண்டமான கட்டிடங்களாக கட்டப்பட்டன. இவ்வாறு, மக்களின் வாழ்வியல் எளிமையை விட்டு விலகி பிரம்மாண்டத்தின் வழியில் அதிகாரத்தை நிலைநிறுத்த ஆட்சி செய்த மூவேந்தர்கள் 12-13 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அழிந்து போனதே வரலாறு.

காலப்போக்கில் பல்வேறு இன்னல்களும் மாற்றங்களும் ஏற்பட்டாலும், தமிழ்நாடும், தமிழ் மொழியும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்து கொண்டிருக்கின்றன. எளிமையின் வேர்களை விடாமல் நம் மக்கள் கடைப்பிடிக்கும் எளிமையாலும் நெகிழ்வாலும் தான் தமிழ் தொடர்ந்து தேயாமல் வாழ்கிறது.

பழையதிலிருந்து புதியது

எகிப்து இஸ்லாத்தை தழுவியது, எகிப்திய மொழியின் வீழ்ச்சிக்கு பிறகு அரபு மொழி நிலைத்தது. ரோம் கிறித்தவத்தை தழுவியது, லத்தீன் மொழியின் வீழ்ச்சிக்கு பிறகு இத்தாலிய மொழி நிலைத்தது. கிரேக்கம் கிறித்தவத்தை தழுவியது, பண்டைய கிரேக்க மொழியின் வீழ்ச்சிக்கு பிறகு நவீன கிரேக்க மொழி நிலைத்தது.

ஆனால், நெடுங்காலம் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், தமிழ் சிற்சில மாற்றங்களுடன் வீறுநடை போடுகிறது. இதற்கு, மக்கள் தங்களை இனத்தால் திராவிடர்கள் என்றும் மொழியால் தமிழர்கள் என்றும் அடையாளப்படுத்தி கொள்வது மற்றும் திராவிட ஆட்சியாளர்கள் இன, மொழி அடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது முக்கிய காரணமாகும்.

திராவிட இயக்கம் 

தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் அவரது சகாக்களும் நம் மக்களின் எளிமையை பற்றி நெகிழ்வை பற்றி பேசினார்கள். அத்துடன் ஆரியர்கள் நுழைத்த பிரம்மாண்டத்தை பற்றி அதனால் வீழ்ந்த மன்னர்களை பற்றி பேசினார்கள். மேலும், அதிகாரம் என்பது மலர் கிரீடம் அல்ல அது முள் கிரீடம் என்றளவில் எளிமையை கடைப்பிடிக்க திராவிட இயக்கம் வலியுறுத்தியது. நம்மவர்களிடம் "எளிமையும் நெகிழ்வும்" உளமார இருப்பதால் தான் தமிழ் மொழியானது பல நூற்றாண்டுகளை கடந்தும் நிலைக்கிறது.

மோடியின் பிரம்மாண்டம்

2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஊடகங்கள் ஏற்படுத்திய "மோடி பிரம்மாண்டம்" தமிழ்நாட்டில் எடுபடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். பற்பல மன்னர்கள் தொடங்கி ஜெயலலிதா வரை வீழ்ந்திட காரணம் அவர்கள் விரும்பி ஏற்ற “பிரம்மாண்டம்". "பிரம்மாண்டம்" தான் யூதம் வளர தடையாக இருந்தது. "எளிமையும் நெகிழ்வும்" தான் கிறிஸ்தவம் வளர காரணமாக இருந்தது.காந்தி, பெரியார் போன்றோர் எளிமையுடனும் நெகிழ்வுடனும் பயனப்பட்டனர்.

எப்படி சாத்தியமானது?

எகிப்து, கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளின் வரலாற்று எச்சங்கள் உலகளவில் பயன்பாட்டில் இருந்தாலும் அந்நாடுகள் தங்கள் நீண்ட வரலாற்றை விட்டு விலகியே பொதுவெளியில் பயணிக்கின்றன. ஆனால் தமிழ் வரலாற்றுடனும் அதன் மரபுகளுடனும் நாம் காலங்காலமாக இணைந்தே பொதுவெளியில் பயணிக்கிறோம். அப்படி நம்மவர்கள் பொதுவெளியில் பயணிக்க காரணம் "எளிமையும் நெகிழ்வும்" தான். ஆரியம் ஆதிக்கம் செய்யும் முன்னரே "எளிமையுடனும் நெகிழ்வுடனும்" பயணித்தவர்கள் நம் முன்னோர். எடுத்துக்காட்டாக "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பழமொழி கூட எளிமையை நெகிழ்வை பறைசாற்றுகிறது.

"எளிமையும் நெகிழ்வும்" தான் தமிழ் மரபு தொடர்ச்சியாக தழைத்தோங்க காரணம் என்பது சர்வதேச அளவில் வரலாற்று ஆசிரியர்கள் தரும் விடையாகும். உலகளவில் குறிப்பாக எகிப்து, கிரேக்கம், ரோம் இலக்கியங்கள் மன்னர்களை பற்றியே சிலாகித்து பேசியது ஆனால் தமிழ் இலக்கியங்கள் மக்களை பற்றி"யும்" பேசியது.

முடிவுரை

பண்டைய எகிப்து, கிரேக்கம், உரோம் ஆகியவற்றின் கலாச்சார பாரம்பரியம் இன்றைய மேற்கத்திய கலாச்சாரம்சாரத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தாலும், அதன் பண்டைய தொடர்ச்சி மறைந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் தமிழ்நாடும், தமிழ் பண்பாடும் நேற்றும் இன்றும் என்றும் செழித்தோங்க காரணம் நமது மண் குடிமக்களின் எளிமையான வாழ்வியலை சார்ந்த மன உறுதியே காரணம். ஒரு சான்றாக, குடிமக்கள் சார்ந்த ஓர் அற்புத காப்பியமான சிலப்பதிகாரம் போல் மற்ற நாகரிகங்கள் தங்கள் குடிமக்களின் தனித்துவமான காப்பிய பங்களிப்புகளை கொண்டிருக்கவில்லை, இருந்தால் அவை ஒற்றை மதம் சார்ந்து எழுந்தவையாக இருக்கும்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

தமிழ்நாட்டில் இரும்பு காலம்

தமிழ்நாட்டில் இரும்பு காலம் கால வரிசை = முதலில் கற்காலம் அதன் பிறகு வெண்கல காலம் அதன் பிறகு இரும்பு காலம்! பொருளடக்கம் முகவுரை   தமிழர்கள் ...