Chocks: தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி

Wednesday, January 21, 2026

தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி

தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
  1. முகவுரை 
  2. இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம்
  3. முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
  4. இரண்டாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
  5. 15 ஆண்டு காலக்கெடு
  6. நேருவின் வாக்குறுதி 
  7. தொடரலாமா? தொடர வேண்டுமா? 
  8. மூன்றாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
  9. பெரியாரின் நிலைப்பாடு
  10. இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டமும் 1967 ஆட்சி மாற்றமும்
  11. ஒன்றிய அரசின் புதிய சட்டத் திருத்தம்
  12. இருமொழிக் கொள்கை தீர்மானம் 
  13. ஏன் இருமொழிக் கொள்கை சட்டமாக இல்லை?
  14. அண்ணாதுரை தான் ஆள்கிறார் 
  15. ஒன்றிய அரசின் 1976 சட்டத்தில் தமிழ்நாட்டிற்கு விலக்கு
  16. நான்காம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
  17. வீதியிலிருந்து இணையத்திற்கு நகர்ந்தது 
  18. முடிவுரை
  19. விவரணைகள்
முகவுரை 

"தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி" என்பதின் அடிப்படை நோக்கம், தமிழர்களின் தாய்மொழியாம் தமிழை காப்பதில் தானே இருக்கிறது.  நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழிக்கு இந்தி மொழி நேரடி அச்சுறுத்தலாக இருக்க வலிமை இல்லை. ஆனால், ஒன்றிய அரசிடம் இந்தியை மாநிலங்களின் மீது திணிக்கும் அதிகாரம் இருக்கிறது. அதனால் தான் இந்தித் திணிப்புக்கு எதிராக நாம் போராட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்குப் பின்னால் சமஸ்கிருதம் ஒளிந்திருக்கிறது. அந்த சமஸ்கிருதத்தின் பின்னால் சனாதனம் ஒளிந்திருக்கிறது. இந்தப் புரிதலோடு இக்கட்டுரையை வாசியுங்கள். வாருங்கள், கட்டுரைக்குள் செல்வோம்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம்

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகவும் முக்கியமான அரசியல் இயக்கங்களில் ஒன்றாகும். 1937 முதல் பல்வேறு காலகட்டங்களில் தி.க, தி.மு.க உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தமிழ் மொழியைக் காப்பாற்றப் போராடி வந்துள்ளனர். இப்போராட்டம் தமிழ் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வில் தொடங்கி, படிப்படியாக மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக் கோட்பாட்டை வலியுறுத்தும் பரந்த அரசியல் கோரிக்கையாக வளர்ச்சி பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

தி.மு.க தலைவர் கலைஞரின் ஐந்து பெரும் முழக்கங்களில் "இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி" என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டின் அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இம்முழக்கம், கலைஞர் காலம் தொடங்கி மு.க.ஸ்டாலின் வழியாக உதயநிதி ஸ்டாலின் வரை உயிர்ப்புடன் தொடர்கிறது. இந்தித் திணிப்பை நமது மொழிப்போர் தளபதிகள் வீரியத்துடன் எதிர்த்து வருவதன் விளைவாக, இன்று பல துறைகளில் தனித்த அடையாளத்தைத் தமிழ் மொழி பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசின் சார்பில், 1937 ஆகஸ்ட் 11 அன்று முதலமைச்சர் ராஜாஜி, பள்ளிகளில் இந்தி கல்வியை கட்டாயப் பாடமாக அறிவித்தார். பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டத்தில் இறங்கிய நிலையில், 1938 ஏப்ரல் 21 அன்று அரசாணை வெளியிட்டு 125 உயர்நிலைப் பள்ளிகளில் கட்டாய இந்தி கல்வி தொடங்கப்பட்டது.

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் வழிநடத்த, பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், மீனாம்பாள் சிவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்குரல் எழுப்ப, மாணவர்களும் போராட்டத்தில் இணைந்தனர். பெரியார் படையின் தளபதியாக அண்ணா செயல்பட்டார். அந்தப் போராட்டத்தில் 7 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே!" என்று முழக்கமிட்டு போராடினார். அவர் தான் பின்னாளில் நாடறிந்த அரசியல் தலைவர் கலைஞர். 1937 முதல் 1940 வரை வெவ்வேறு கால அளவுகளில், வெவ்வேறு வகைகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் 1,198 பேர் கைது செய்யப்பட்டனர்; தாளமுத்து மற்றும் நடராசன் எனும் இரு இளைஞர்கள் காவல் தடுப்பில் உயிரிழந்தனர். 

இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என பிரிட்டிஷ் இந்தியா கட்டாயப்படுத்தியதை எதிர்த்து காங்கிரசு தீர்மானம் நிறைவேற்றியதால், 1939 அக்டோபர் 29 அன்று சென்னை மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜாஜி விலகினார். பின்னர், 1940 பிப்ரவரியில் ஆளுநர் எர்ஸ்கின் கட்டாய இந்தி கல்வி அரசாணையை வாபஸ் பெற்றார்.
இரண்டாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1948 ஜூன் 20 அன்று சுதந்திர இந்தியாவின் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி தலைமையிலான காங்கிரசு அரசு, மீண்டும் இந்தி கல்வியை கட்டாயப்படுத்தும் ஆணையை வெளியிட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர், ஒன்றிய காங்கிரசு அரசு அனைத்து மாநிலங்களிலும் இந்தியை அமல்படுத்த வலியுறுத்தியது. இதற்கு எதிராக பெரியார் மற்றும் அண்ணா தலைமையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இறுதியில், 1948 டிசம்பர் 26 அன்று சமரசம் ஏற்பட்டு, இந்தி கட்டாயப் பாடத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, விருப்பப் பாடமாக மாற்றப்பட்டது.

15 ஆண்டு காலக்கெடு

1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபோது, இந்தி அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இணை அலுவல் மொழியாகவும் 15 ஆண்டுகள் (1965 ஜனவரி 26 வரை) தொடரும் என்று 343 ஆம் பிரிவின் கீழ் பிரதமர் நேரு உறுதியளித்தார்.
நேருவின் வாக்குறுதி 

// பிராங்க் அந்தோணி - நேரு // ⏬

1959 இல் ஆங்கிலோ-இந்திய நியமன உறுப்பினரான பிராங்க் அந்தோணி 8 வது அட்டவணையில் ஆங்கிலத்தைச் சேர்ப்பதற்கான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். ஆனால், ஆங்கிலம் ஏற்கனவே அரசியலமைப்புச் பாதுகாப்பைப் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டு, அந்த தீர்மானத்தை மேலும் முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் நேரு அறிவுறுத்தினார். தனது நிலைப்பாடு ஆங்கிலத்திற்கு எதிரானதல்ல; மாறாக, அது தேவையற்ற சர்ச்சைகளையும் மொழி சார்ந்த பதட்டங்களையும் உருவாக்கக்கூடும் என்று நேரு எச்சரித்தார். 

அதே நாடாளுமன்ற விவாதத்தில், 1959 ஆகஸ்ட் 7 அன்று ஆங்கிலம் தொடர்ந்து அலுவலகப் பயன்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த நேரு, நவீன உலகத்துடனும் அறிவியல் முன்னேற்றங்களுடனும் இந்தியாவை இணைப்பதற்கு ஆங்கிலம் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார். இந்தி திணிக்கப்படாது என்று உறுதியாகக் கூறி, இந்தி பேசாத பிராந்தியங்களில் நிலவிய அச்சங்களை நேரு தணித்தார்.

// ஈ.வி.கே. சம்பத் - நேரு // ⏬

ஆங்கிலத்தைத் தக்கவைத்துக் கொள்வதாக பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியை மீறி, 1965 முதல் இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி மாறும் என்று 1960 ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். இது தி.க, தி.மு.க தலைமையில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டியது.

தி.மு.க.வின் போராட்டக் குழுத் தலைவர் ஈ.வி.கே.சம்பத் நேருவுக்கு கடிதம் எழுதி, "இந்தியை விரும்பாதவர்கள் மீது திணிக்க மாட்டோம்" என்ற நேருவின் வாக்குறுதியை நினைவூட்டினார். இதற்கு பதிலளித்த நேரு, "யார் மீதும் இந்தி திணிக்கப்படாது" என்று மீண்டும் உறுதியளித்தார். அதே போல குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஹைதராபாத்தில் இந்தி பிரசார சபாவில் பேசும்போது, "இந்தி பேசாதவர்களின் உணர்வுகள் புறக்கணிக்கப்படாது, இந்தி எவர் மீதும் திணிக்கப்படாது" என்று உறுதியளித்தார். நேரு மற்றும் குடியரசுத் தலைவர் இருவரிடமிருந்தும் இந்த உறுதிமொழிகளைப் பெற்ற பிறகு, தி.மு.க. திட்டமிட்டிருந்த போராட்டத்தைக் கைவிட்டது.

அண்ணாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவரும், இந்தித் திணிப்பு குறித்துத் தெளிவு கோரி 1960 ஆகஸ்ட் மாதம் நேருவுக்குக் கடிதம் எழுதியவருமான ஈ.வி.கே. சம்பத், வெறும் 8 மாதங்களில் 1961 ஏப்ரல் மாதம் தி.மு.கவிலிருந்து விலகினார் என்பது வருத்தத்துக்குரிய அரசியல் நிகழ்வாகும்.
தொடரலாமா? தொடர வேண்டுமா? 

1963 மே 10 அன்று  "அலுவல் மொழிச் சட்டம்" (Official Languages Act, 1963) நாடாளுமன்றத்தில் காங்கிரசு அரசால் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரிவு 3 இல், "English language may continue to be used in addition to Hindi" என்று குறிப்பிடப்பட்டது.

அலுவல் மொழிச் சட்டத்தில் உள்ள "May" என்பதை "Shall" ஆக மாற்ற வேண்டும்; ஏனெனில் "May" என்றால் "தொடரலாம்" என்பதைக் குறிக்கும், அதாவது எதிர்கால அரசு விரும்பினால் தொடராமலும் போகலாம். ஆனால் "Shall" என்றால் "கட்டாயமாக தொடர வேண்டும்" என்று பொருள் என தி.மு.க சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணா வலியுறுத்தினார். 

ஆனால், ஒன்றிய காங்கிரசு அரசின் பெரும்பான்மை வலிமையால் எந்த மாற்றமும் இல்லாமல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பிரதமர் நேரு, "May" என்பதும் "Shall" என்பதும் ஒன்று தான் என்று உறுதியளித்தார். 
மூன்றாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1963 அலுவல் மொழிச் சட்டம் ஆங்கிலம் தொடரும் என்பதற்கான நிரந்தர உத்தரவாதமாக இல்லாததால், போட்டித் தேர்வுகள், கல்வி மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் இந்தி முழுமையாகத் திணிக்கப்படும் என்ற கவலை தமிழ்நாட்டில் பரவியது. இந்தப் பின்னணியில், 1964 ஜனவரி 25 அன்று திருச்சியைச் சேர்ந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, "தமிழ் வாழ்க, இந்தி ஒழிக" என முழக்கமிட்டபடி தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதனிடையே, 1964 மே 27 அன்று நேரு காலமானதையடுத்து பிரதமராகப் பொறுப்பேற்ற லால் பகதூர் சாஸ்திரி, இந்தியை முதன்மைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். அரசியலமைப்பின் 343 ஆம் பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 15 ஆண்டு காலம் முடிவடையும் நிலையில், 1965 ஜனவரி 26 முதல் ஒன்றிய அரசு ஆங்கிலத்தை நீக்கி இந்தியை ஒரே அலுவலக மொழியாக்கலாம் என்ற அச்சம் உருவானது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன.

1965 ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தைத் துக்க நாளாக அனுசரிக்குமாறு அண்ணா அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில், மாணவர்கள் மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசின் மொழிக் கொள்கைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். குடியரசு தினத்திற்கு அவமரியாதை செய்வதை அரசு பொறுத்துக் கொள்ளாது என்றும், அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பக்தவத்சலம் எச்சரித்தார். 

பொதுநலன் கருதி தி.மு.க. துக்க நாளை ஜனவரி 25 ஆம் தேதிக்கு மாற்றியபோதும், அண்ணா மற்றும் 3,000 தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதே நாளில், மதுரையில் அரசியலமைப்பின் 17 வது பகுதியை பொதுவெளியில் எரிக்கத் திட்டமிட்டு பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் நடத்தினர். இந்தக் கடும் தாக்குதலால் கொதித்தெழுந்த மாணவர் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது.

பெ.சீனிவாசன், கா.காளிமுத்து, நா.காமராசன், ரவிச்சந்திரன், திருப்பூர் சு.துரைசாமி, சேடபட்டி இரா.முத்தையா, துரை முருகன், ராஜா முகமது, நாவளவன், எம்.நடராஜன், எல்.கணேசன் உள்ளிட்ட பல்வேறு மாணவத் தலைவர்கள், வெவ்வேறு ஊர்களில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பி போராடினர். குறிப்பாக, ஆட்சிமொழி தொடர்பான இந்திய அரசியலமைப்பின் 17 வது பகுதி (343-351 பிரிவுகள்) தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

முதலமைச்சர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு ஆட்சியில், காவல்துறை அமைச்சர் கக்கனின் உத்தரவின்படி மாணவர் போராட்டங்கள் துப்பாக்கிச் சூட்டின் மூலம் கடுமையாக ஒடுக்கப்பட்டன; முதன்முறையாக ராணுவமும் குவிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்; பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலரும் பலியானார்கள். பொள்ளாச்சியில் போலீசார் ஒரு முதியவரை சுட்டுக் கொன்றதாகவும், அந்த குண்டு அவரது உடலைத் துளைத்து பின்னால் மறைந்திருந்த ஒரு குழந்தையையும் கொன்றதாகவும், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்காற்றிய பேராசிரியர் அ.ராமசாமி தனது "இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு" நூலில் பதிவு செய்துள்ளார். அரசு புள்ளிவிவரப்படி 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் 70 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை 300 பேர் வரை இருந்திருக்கலாம்.

தி.மு.கவின் எதிர்ப்பு மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தலின் பேரில், 1965 பிப்ரவரி 11 அன்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கட்டாய இந்தித் திணிப்பு இருக்காது என்றும், நேருவின் உறுதிமொழி காக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது. 
பெரியாரின் நிலைப்பாடு 

1963 இல் திருவண்ணாமலை இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் ப.உ.சண்முகம் பெற்ற வெற்றி, முதலமைச்சர் காமராஜருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதே காலகட்டத்தில், சீனப் போரின் காரணமாக பிரதமர் நேருவும் அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தார். இதனால் நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான ஒரு அலை உருவானது.

இந்த நிலையை மாற்றி காங்கிரசை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், காங்கிரசு முதலமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற சீரமைப்பு திட்டத்தை காமராஜர் நேருவிடம் முன்வைத்தார். "காமராஜர் திட்டம்" என அழைக்கப்பட்ட அந்தத் திட்டம் இறுதியில் காமராஜருக்கே அரசியல் பின்னடைவாக அமைந்தது.

1960 களில் முதலமைச்சர் காமராஜரை "பச்சைத் தமிழன்" என்று பாராட்டி அவருக்குத் தனது ஆதரவை பெரியார் வழங்கினார். பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய ராஜாஜியின் நிர்வாகத்துடன் ஒப்பிடும்போது, சூத்திரர்களின் துன்பங்களைப் புரிந்துகொண்ட காமராஜரின் ஆட்சி மக்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்றும், தமிழ்நாட்டின் செழிப்புக்கு வழிவகுக்கும் என்றும் பெரியார் நம்பினார். எனவே, தமிழ் மக்களின் நலனுக்காகவும், சாதி ஒழிப்பு இயக்கத்தின் முன்னேற்றத்திற்காகவும், காமராஜர் அரசை பெரியார் ஆதரித்தார்.

இந்நிலையில், காமராஜர் திட்டத்தின் மூலம் காமராஜர் திடீரெனப் பதவி விலகியதை பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், 1965 ஆம் ஆண்டு முதலமைச்சர் பக்தவத்சலத்தின் ஆட்சியில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளை கண்டித்து பெரியார் அறிக்கை வெளியிட்டார். எனினும், இந்தி திணிப்பிற்கு எதிரான தனது அடிப்படை நிலைப்பாட்டில் பெரியார் உறுதியாகவே இருந்தார் என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டமும் 1967 ஆட்சி மாற்றமும்

அலுவல் மொழிச் சட்டத்தில் ஆங்கிலப் பயன்பாடு குறித்த "May-Shall" சர்ச்சையைத் தீர்க்க அண்ணா முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சம் கொண்ட தமிழ் மாணவர்கள் தன்னிச்சையாக போராட்டத்தில் இறங்கினார்கள். மாணவர்களின் போராட்டம் ஒரு புறமும், தி.மு.கவினரின் போராட்டம் இன்னொரு புறமும் என இரண்டு தனித்தனி போராட்டங்களாக நடைபெற்று வந்தன.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சென்னையில் கைது செய்யப்பட்ட கலைஞர், பாளையங்கோட்டை சிறையில் சுமார் 62 நாட்கள் தனி அறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், மாணவர் போராட்டத்தை பின்னணியில் இருந்து அண்ணாதான் திட்டமிட்டு இயக்கினார் என்ற காங்கிரசு கட்சியின் அபாண்டமான குற்றச்சாட்டுகளை அண்ணா கடுமையாக மறுத்தார்.

அண்ணா தலைமையிலான தி.மு.க, 1965 இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களை போராட வற்புறுத்தவில்லை என்பதே களத்தின் யதார்த்தமாக இருந்தது. உண்மையில், மாணவர் போராட்டத்தை தி.மு.க பயன்படுத்தவும் இல்லை; தி.மு.க வழிகாட்டலில் மாணவர் போராட்டம் நடைபெறவும் இல்லை.  போராட்டத்தில் பங்கேற்ற சில மாணவர்கள் தங்களின் திராவிட உணர்வுமிகுதியால் பின்னர் நேரடியாக அரசியலில் நுழைந்தது முற்றிலும் தனி நிகழ்வாகும்.

1965 இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது காங்கிரசு அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள், பொதுமக்களின் கோபத்தை கணிசமாகத் தூண்டி, தமிழ் மொழி உணர்வைத் தீவிரப்படுத்தின. நிர்வாகச் சீர்கேடுகளையும் அரிசிப் பற்றாக்குறையையும் சரிசெய்வதற்குப் பதிலாக, காங்கிரசு அரசு மாணவர் போராட்டங்களை அடக்குவதற்கே முன்னுரிமை அளித்தது. தமிழர்களின் வாழ்வை மேம்படுத்தும் இயக்கமாக தன்னை முன்னிறுத்திய தி.மு.கவின் கொள்கைகள் பொதுமக்களையும் மாணவர்களையும் பெரிதும் கவர்ந்தன. இதன் விளைவாக, 1967 தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்று, அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அத்துடன், தி.மு.கவின்  இளைய தலைவர்களை உருவாக்கிய இந்த தேர்தலில் காங்கிரசு தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், விருதுநகரில் மாணவர் தலைவர் பெ.சீனிவாசன் காங்கிரசு தலைவர் காமராஜரை தோற்கடித்தார். சுருக்கமாகச் சொன்னால், அரிசிப் பற்றாக்குறை, நிர்வாக சீர்கேடு மற்றும் மொழிப் போராட்ட அடக்குமுறை தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஒன்றிய அரசின் புதிய சட்டத் திருத்தம்

இந்தி பேசாத மாநிலங்களில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், 1968 ஜனவரி 08 அன்று பிரதமர் இந்திரா காந்தி, "அலுவல் மொழிகள் (திருத்த) சட்டம், 1967" (Official Languages Act, 1963 as amended in 1967) மூலம், ஆங்கிலப் பயன்பாடு இந்தியுடன் நிரந்தரமாக தொடரும் என சட்டரீதியாக உறுதி செய்தார். அதாவது, 1963 அலுவல் மொழி சட்டத்தின் (Official Languages Act, 1963பிரிவு 3 திருத்தப்பட்டு, காலவரையற்ற வரம்பில் ஆங்கிலம் தொடரும் என அளிக்கப்பட்ட உத்தரவாதம் இன்றுவரை அமலில் உள்ளது.
 
இருமொழிக் கொள்கை தீர்மானம் 

கோத்தாரி கல்வி ஆணையம் (1964-1966) வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி, ஒன்றிய காங்கிரசு அரசு 1968 இல் புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 

இதே பின்னணியில், 1968 ஜனவரி 18 அன்று நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ மொழித் தீர்மானம் 1968 (Official Language Resolution, 1968) நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில், இந்தி, ஆங்கிலம் மற்றும் இன்னொரு இந்திய மொழியை கற்கும் வகையில் மும்மொழிக் கொள்கை (Three Language Formula) பரிந்துரைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு எதிராக, 1968 ஜனவரி 23 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றப்படும் எனும் தீர்மானம் அண்ணாவின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

ஏன் இருமொழிக் கொள்கை சட்டமாக இல்லை?
 
அண்ணாவின் ஆட்சியில் மூன்று முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை,

1.சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் (Hindu Marriage (Tamil Nadu Amendment) Act, 1967)

2.மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றும் சட்டம் (Madras State (Alteration of Name) Act, 1968)

3.இருமொழிக் கொள்கையை வலியுறுத்தும் தீர்மானம் (சட்டமாக அல்ல) (Two-language was adopted as a Policy and not as a Law)

சுயமரியாதை திருமணத்திற்கு சட்டம், தமிழ்நாடு என்ற பெயருக்கு சட்டம். ஆனால், தமிழ்நாட்டின் நாடித்துடிப்பான இருமொழிக் கொள்கைக்கு சட்டம் இல்லை; அது ஒரு தீர்மானம் தான். ஏனெனில், நாடாளுமன்றத்தின் மும்மொழிக் கொள்கைக்கு முரணான நிலையில் மாநில சட்டமன்றம் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும்; ஆனால் சட்டங்களை இயற்ற முடியாது.

மேலும், ஒன்றிய அரசின் நாடாளுமன்றக் கொள்கைக்கு எதிராக மாநில சட்டமன்றம் இயற்றும் எந்தச் சட்டத்துக்கும், ஒன்றிய அரசின் பணியாளரான குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை; அத்துடன் மாநில ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தான் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, சட்டமாக இல்லாவிட்டாலும் நாடாளுமன்றம் கொண்டு வந்த மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அண்ணா மாநில சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அண்ணாதுரை தான் ஆள்கிறார் 

இன்றுவரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தீர்மானத்தை சட்டமாக மாற்ற இயலாத நிலை. அதே நேரத்தில், இந்த தீர்மானத்தை பின்னர் வந்த ஆட்சியாளர்களால் ஒழிக்கவும் முடியாத நிலை. அதற்கு ஒரே காரணம், "அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறார்". அதை பற்றிச் அண்ணாதுரை பேசிய நடையிலே ஒரு பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

"ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன். ஒன்று, சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம். இரண்டு, தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம். மூன்று, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அறிவிப்பு. இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டு வைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டு வந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில் , அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லா விட்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்" என்று சட்டமன்றத்தில் அண்ணா பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது மிகை இல்லை.
ஒன்றிய அரசின் 1976 சட்டத்தில் தமிழ்நாட்டிற்கு விலக்கு

தி.மு.க.வின் தொடர் அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் வகையில், 1976 இல் ஒன்றிய அரசு "அலுவல் மொழி விதிகள், 1976" (Official Language Rules, 1976) முறையை வகுத்தது.

அதாவது, விதி 1(2) படி, “தமிழ்நாட்டைத் தவிர இந்தியா முழுவதற்கும் பொருந்தும்” (They shall extend to the whole of India, except the State of Tamil Nadu) என்று குறிப்பிடப்பட்டதால், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு ஓர் சட்டப் பின்னணி கிடைத்தது. இதன்மூலம், ஒன்றிய அரசு அலுவலகங்களில் நடைமுறையில் இருக்கும் இந்தி-ஆங்கில இருமொழி விதிகள் தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்பதும் உறுதியானது.
நான்காம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1986 இல் ஒன்றிய காங்கிரசு அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதன் அடிப்படையில், ஏழை கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, மும்மொழிக் கொள்கையுடன் கூடிய கல்வி வழங்கும் உண்டு உறைவிடப் பள்ளிகளான நவோதயா வித்யாலயா பள்ளிகளை நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கவே நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் அபாயம் உள்ளதென தி.மு.க கூறியது.

1986 நவம்பர் 17 அன்று புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தி.மு.க உறுப்பினர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் 17 வது பகுதியை எரித்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ராஜீவ் காந்தி உறுதியளித்தார். சமரசத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படவில்லை. தற்போது இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1986 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் மொழி உணர்வை மீண்டும் எழுப்பியது. தி.மு.கவினர், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தெருக்களில் இறங்கி போராடினர். 1938 மற்றும் 1965 காலகட்டங்களில் நடந்த வரலாற்றுப் போராட்டங்கள் 1986 இல் மீண்டும் உயிர்த்தெழுந்தது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு = அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும் ஒன்றிய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதற்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 1963 இல் 20 பள்ளிகளுடன் தொடங்கப்பட்டு, மெல்ல மெல்ல நாடு முழுவதும் நிறுவப்பட்டன. அவற்றின் நோக்கங்களும், மொழிக் கொள்கையும் நவோதயா வித்யாலயா பள்ளிகளிலிருந்து அடிப்படையில் வேறுபட்டவை.

வீதியிலிருந்து இணையத்திற்கு நகர்ந்தது 

1950-60 களில் மாணவர்களுக்கு அரசு வேலை பெறுவது முக்கிய இலக்காகக் கருதப்பட்டது. அப்போது இந்தித் திணிப்பு, வேலை வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும் அபாயமாகப் பார்க்கப்பட்டது. இதனால், நாடெங்கும் போராட்டங்கள் வெடித்து, மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் இதில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தீவிரம் அதிகரிப்புடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த காலம், மொழி மற்றும் வாழ்வாதாரம் ஒன்றிணைந்த அரசியல் உணர்வை தமிழ்நாட்டில் உருவாக்கிய முக்கிய கட்டமாகும்.

இன்று, திராவிட இயக்க ஆட்சியின் தொடர்ச்சியில் ஆங்கிலக் கற்றல் ஊக்குவிக்கப்பட்டதால் பன்னாட்டு வேலை வாய்ப்புகள் பெருகி, தமிழர்களின் உலகளாவிய தொடர்புகளும் உயர்ந்துள்ளன. இதனால், முன்பிருந்தது போல மொழி வேலை அவசரத்துடன் (Employment Urgency) தொடர்புடைய ஒன்றாக இல்லாமல், இப்போது அடையாள உணர்வின் (Sense of Identity) பரிமாணத்தில் அமைந்துள்ளது. அதேபோல், அரசியல் எதிர்ப்பின் வடிவும் காலத்திற்கேற்ப மாறி, தெருக்களில் நடந்த போராட்டங்கள் மாறி சமூக ஊடகங்களில் இடம்பெறும் புதிய வடிவத்தை கொண்டுள்ளன.

ஒன்றிய அரசின் UPSC அமைப்பில் தமிழர்களின் வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து, உயர்நிலை நிர்வாகப் பணிகளும் சேரும் வகையில் TNPSC அமைப்பை திராவிட இயக்க ஆட்சிகள் விரிவாக்கின. இது, குறிப்பாக, கலைஞரின் நடைமுறை நிர்வாகச் சிந்தனையின் ஒரு உதாரணமாகும். இன்றும் இப்படியான நடைமுறை அணுகுமுறை அவசியம், ஏனெனில் ஒன்றிய அரசை நேரடியாக எதிர்ப்பது முன்பு இருந்ததைப் போல எளிதான அரசியல் செயல்பாடு அல்ல.
முடிவுரை

தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு வரலாறு வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; அது மாநில உரிமைகள், கூட்டாட்சிக் கொள்கை, கலாச்சார அடையாளம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளைச் சுற்றிய ஒரு விரிவான  பண்பாட்டு அரசியல் ஆகும்.

1937 முதல் இன்று வரை, தெருப் போராட்டங்களிலிருந்து சமூக ஊடக பிரச்சாரங்கள் வரை, தமிழ்நாடு தனது மொழி உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ச்சியாகப் பாடுபட்டு வருகிறது. இதற்கிடையில், "May-Shall" தொடர்பான தெளிவின்மைகளும், சட்டத்தின் 17 வது பகுதி குறித்த சிக்கல்களும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில், இந்த நீண்டநெடிய மொழிப் போராட்டம் முற்றுப்பெறாத தொடர்கதையாகத் தொடர்ந்தாலும், மொழிப் பாதுகாப்பு நமது விழிப்புணர்வையே சார்ந்துள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

விவரணைகள்

1937, 1948, 1965, 1986 = Anti-Hindi agitations of Tamil Nadu

1950 = Article 343(2) in Constitution of India

Part XVII = Official Language (343 to 351)


1959 = Nehru’s Response to Frank Anthony’s Resolution


1960 = Letters Exchanged Between E.V.K.Sampath & Nehru



1963 = Official Languages Act, 1963  


1967 = Official Languages Act, 1963 (As Amended, 1967)


1968 = Official Language Resolution, 1968


1968 = Annadurai’s Resolution on the Two-Language Policy  


1976 = Official Language Rules, 1976


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

Tamil Nadu's Language Rights Revolution

Tamil Nadu's Language Rights Revolution Note  =  This post gives a basic overview based on available information and is not a complete a...