Chocks: தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி

Wednesday, January 21, 2026

தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி

தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
  1. முகவுரை 
  2. முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
  3. இரண்டாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
  4. 15 ஆண்டு காலக்கெடு
  5. தொடரலாமா? தொடர வேண்டுமா? 
  6. மூன்றாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
  7. ஒன்றிய அரசின் புதிய சட்டத் திருத்தம்
  8. இருமொழிக் கொள்கை தீர்மானம் 
  9. ஏன் இருமொழிக் கொள்கை சட்டமாக இல்லை?
  10. அண்ணாதுரை தான் ஆள்கிறார் 
  11. ஒன்றிய அரசின் 1976 சட்டத்தில் தமிழ்நாட்டிற்கு விலக்கு
  12. நான்காம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
  13. வீதியில் இருந்து இணையத்திற்கு நகர்ந்தது 
  14. முடிவுரை
  15. விவரணைகள் 
முகவுரை 

"தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி" என்பதின் அடிப்படை நோக்கம், தமிழர்களின் தாய்மொழியாம் தமிழை காப்பதில் தானே இருக்கிறது. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழுக்கு அச்சுறுத்தலாக நிற்கும் வலிமை இந்திக்கு இல்லை. ஆனால், ஒன்றிய அரசுக்கு இந்தியை மாநிலங்களின் மீது திணிக்கும் வலிமைமிக்க அதிகாரம் இருப்பதால், நாம் இந்தி திணிப்புக்கு எதிராக போராட வேண்டிய நிலை உருவாகிறது. இதன் அடிப்படையில், இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன். வாருங்கள், கட்டுரைக்குள் செல்வோம்.

"இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்" என்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற அரசியல் இயக்கங்களில் ஒன்றாகும். மொழிப் பாதுகாப்பு என்ற உணர்விலிருந்து, "மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி" வலியுறுத்தலுக்கு வரையிலான பல பரிணாமங்களை இப்போராட்டம் கண்டது. 1937 முதல் 1986 வரையிலான பல்வேறு கட்டங்களில், தி.க, தி.மு.க உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தமிழ் மொழியை காப்பாற்ற முனைந்தனர். இதன் விளைவாக, இன்று பல துறைகளில் தனித்த அடையாளத்தை தமிழ் மொழி பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் சார்பில், 1937 ஆகஸ்ட் 11 அன்று முதலமைச்சர் ராஜாஜி, பள்ளிகளில் இந்தி கல்வியை கட்டாயப் பாடமாக அறிவித்தார். பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டத்தில் இறங்கிய நிலையில், 1938 ஏப்ரல் 21 அன்று அரசாணை வெளியிட்டு 125 உயர்நிலைப் பள்ளிகளில் கட்டாய இந்தி கல்வி தொடங்கப்பட்டது.

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் வழிநடத்த, பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், மீனாம்பாள் சிவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்குரல் எழுப்ப, மாணவர்களும் போராட்டத்தில் இணைந்தனர். 1937 முதல் 1940 வரை போராட்டம் தீவிரமடைந்தது. அதில் 1,198 பேர் கைது செய்யப்பட்டனர்; தாளமுத்து மற்றும் நடராசன் எனும் இரு இளைஞர்கள் காவல் தடுப்பில் உயிரிழந்தனர்.

இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என பிரிட்டிஷ் இந்தியா கட்டாயப்படுத்தியதை எதிர்த்து காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியதால், 1939 அக்டோபர் 29 அன்று சென்னை மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜாஜி விலகினார். பின்னர், 1940 பிப்ரவரியில் ஆளுநர் எர்ஸ்கின் கட்டாய இந்தி கல்வி அரசாணையை வாபஸ் பெற்றார்.
இரண்டாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1948 ஜூன் 20 அன்று சுதந்திர இந்தியாவின் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, மீண்டும் இந்தி கல்வியை கட்டாயப்படுத்தும் ஆணையை வெளியிட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர், ஒன்றிய காங்கிரஸ் அரசு அனைத்து மாநிலங்களிலும் இந்தியை அமல்படுத்த வலியுறுத்தியது. இதற்கு எதிராக பெரியார் மற்றும் அண்ணாதுரை தலைமையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இறுதியில், 1948 டிசம்பர் 26 அன்று சமரசம் ஏற்பட்டு, இந்தி கட்டாயப் பாடத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, விருப்பப் பாடமாக மாற்றப்பட்டது.

15 ஆண்டு காலக்கெடு

1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபோது, இந்தி அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இணை அலுவல் மொழியாகவும் 15 ஆண்டுகள் (1965 ஜனவரி 26 வரை) தொடரும் என்று 343 ஆம் பிரிவின் கீழ் பிரதமர் நேரு உறுதியளித்தார்.
தொடரலாமா? தொடர வேண்டுமா? 

1963 மே 10 அன்று ஒன்றிய காங்கிரஸ் அரசால் "அலுவல் மொழிச் சட்டம்" (Official Languages Act, 1963) நிறைவேற்றப்பட்டது. இதன் பிரிவு 3 இல், "English language may continue to be used in addition to Hindi" என்று குறிப்பிடப்பட்டது.

தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா, இதில் உள்ள "May" என்பதை "Shall" ஆக மாற்ற வேண்டும்; ஏனெனில் "May" என்றால் "தொடரலாம்" என்பதைக் குறிக்கும் அதாவது எதிர்கால அரசு விரும்பினால் தொடராமலும் போகலாம். ஆனால் "Shall" என்றால் "கட்டாயமாக தொடர வேண்டும்" என்ற பொருள் என அவர் வலியுறுத்தினார்.

ஆனால், ஒன்றிய காங்கிரஸ் அரசின் பெரும்பான்மை வலிமையால் எந்த மாற்றமும் இல்லாமல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பிரதமர் நேரு, "May" என்பதும் "Shall" என்பதும் ஒன்று தான் என்று உறுதியளித்தார். இருந்தாலும், அவர் மறைவுக்குப் பின் என்ன நடக்கும் என்ற அச்சம் தொடர்ந்தது.
மூன்றாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1964 மே 27 அன்று நேரு காலமானார். நேருவுக்கு பிறகு பிரதமராக பதவியேற்ற லால் பகதூர் சாஸ்திரி இந்தியை முதன்மைப்படுத்த முயன்றார். அதன் பின்னணியில், 343 ஆம் பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 15 ஆண்டு காலம் முடிவடையும் தருவாயில், 1965 ஜனவரி 26 முதல் ஒன்றிய அரசு ஆங்கிலத்தை நீக்க முடியும் என்ற சூழல் உருவானது. அத்துடன் ஆங்கிலம் தொடரும் என்பதற்கான நிரந்தர உத்தரவாதமாக "1963 அலுவல் மொழிச் சட்டம்" கருதப்படவில்லை.

போட்டித் தேர்வுகள், கல்வி மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் 1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாகிவிடும் என்ற அச்சம் உருவான நிலையில், 1963 அலுவல் மொழிச் சட்டத்தில் ஆங்கிலம் தொடர்பான "May-Shall" விவகாரத்தில் தி.மு.க போராடி கொண்டிருந்த சூழலில், மாணவர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியைச் சேர்ந்த சின்னசாமி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். காங்கிரஸ் முதலமைச்சர் பக்தவத்சலம், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். காவல்துறை அமைச்சர் கக்கன், மாணவர்கள் மீது கடுமையான அடக்குமுறை மேற்கொண்டார். தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக பொள்ளாச்சியில் பலர் உயிரிழந்தனர்.

1965 ஆம் ஆண்டின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில், காங்கிரஸின் கடும் நடவடிக்கைகள் மக்களின் கோபத்தை மேலும் தீவிரப்படுத்தின. இதன் எதிரொலியாக, 1967 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது; காங்கிரஸ் தோல்வியடைந்தது. விருதுநகரில் மாணவர் தலைவரான சீனிவாசன் காமராஜரை தோற்கடித்தார்.  அரிசி பஞ்சம், நிர்வாக சீர்கேடு, இந்த மொழிப் போராட்டமே காங்கிரஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன் பின்னர் இன்றுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு திரும்பவில்லை.
ஒன்றிய அரசின் புதிய சட்டத் திருத்தம்

இந்தி பேசாத மாநிலங்களில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், 1968 ஜனவரி 08 அன்று பிரதமர் இந்திரா காந்தி, "அலுவல் மொழிகள் (திருத்த) சட்டம், 1967" (Official Languages Act, 1963 as amended in 1967) மூலம், ஆங்கிலப் பயன்பாடு இந்தியுடன் நிரந்தரமாக தொடரும் என சட்டரீதியாக உறுதி செய்தார். அதாவது, 1963 அலுவல் மொழி சட்டத்தின் (Official Languages Act, 1963) பிரிவு 3 திருத்தப்பட்டு, காலவரையற்ற வரம்பில் ஆங்கிலம் தொடரும் என அளிக்கப்பட்ட உத்தரவாதம் இன்றுவரை அமலில் உள்ளது.
 
இருமொழிக் கொள்கை தீர்மானம் 

கோத்தாரி கல்வி ஆணையம் (1964-1966) வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி, ஒன்றிய காங்கிரஸ் அரசு 1968 இல் புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 

இதே பின்னணியில், 1968 ஜனவரி 18 அன்று நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ மொழித் தீர்மானம் 1968 (Official Language Resolution, 1968) நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில், இந்தி, ஆங்கிலம் மற்றும் இன்னொரு இந்திய மொழியை கற்கும் வகையில் மும்மொழிக் கொள்கை (Three Language Formula) பரிந்துரைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு எதிராக, 1968 ஜனவரி 23 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றப்படும் எனும் தீர்மானம் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

ஏன் இருமொழிக் கொள்கை சட்டமாக இல்லை?
 
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் மூன்று முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை,

1.சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் (Hindu Marriage (Tamil Nadu Amendment) Act, 1967)

2.மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றும் சட்டம் (Madras State (Alteration of Name) Act, 1968)

3.இருமொழிக் கொள்கையை வலியுறுத்தும் தீர்மானம் (சட்டமாக அல்ல) (Two-language was adopted as a Policy and not as a Law)

சுயமரியாதை திருமணத்திற்கு சட்டம், தமிழ்நாடு என்ற பெயருக்கு சட்டம். ஆனால், தமிழ்நாட்டின் நாடித்துடிப்பான இருமொழிக் கொள்கைக்கு சட்டம் இல்லை; அது ஒரு தீர்மானம் தான். ஏனெனில், நாடாளுமன்றத்தின் மும்மொழிக் கொள்கைக்கு முரணான நிலையில் மாநில சட்டமன்றம் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும்; ஆனால் சட்டங்களை இயற்ற முடியாது.

மேலும், ஒன்றிய அரசின் நாடாளுமன்றக் கொள்கைக்கு எதிராக மாநில சட்டமன்றம் இயற்றும் எந்தச் சட்டத்துக்கும், ஒன்றிய அரசின் பணியாளரான குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை; அத்துடன் மாநில ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தான் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, சட்டமாக இல்லாவிட்டாலும் நாடாளுமன்றம் கொண்டு வந்த மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பேரறிஞர் அண்ணா மாநில சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அண்ணாதுரை தான் ஆள்கிறார் 

இன்றுவரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தீர்மானத்தை சட்டமாக மாற்ற இயலாத நிலை. அதே நேரத்தில், இந்த தீர்மானத்தை பின்னர் வந்த ஆட்சியாளர்களால் ஒழிக்கவும் முடியாத நிலை. அதற்கு ஒரே காரணம், "அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறார்". அதை பற்றிச் அண்ணாதுரை பேசிய நடையிலே ஒரு பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

"ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன். ஒன்று, சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம். இரண்டு, தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம். மூன்று, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அறிவிப்பு. இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டு வைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டு வந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில் , அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லா விட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்" என்று சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது மிகை இல்லை.
ஒன்றிய அரசின் 1976 சட்டத்தில் தமிழ்நாட்டிற்கு விலக்கு

தி.மு.க.வின் தொடர் அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் வகையில், 1976 இல் ஒன்றிய அரசு "அலுவல் மொழி விதிகள், 1976" (Official Language Rules, 1976) முறையை வகுத்தது.

அதாவது, விதி 1(2) படி, “தமிழ்நாட்டைத் தவிர இந்தியா முழுவதற்கும் பொருந்தும்” (They shall extend to the whole of India, except the State of Tamil Nadu) என்று குறிப்பிடப்பட்டதால், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு ஓர் சட்டப் பின்னணி கிடைத்தது. இதன்மூலம், ஒன்றிய அரசு அலுவலகங்களில் நடைமுறையில் இருக்கும் இந்தி-ஆங்கில இருமொழி விதிகள் தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்பதும் உறுதியானது.
நான்காம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

1986 இல் ஒன்றிய காங்கிரஸ் அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதன் அடிப்படையில், கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, மும்மொழிக் கொள்கையுடன் கூடிய கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகளை நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கவே நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் அபாயம் உள்ளதென தி.மு.க கூறியது. 

1986 நவம்பர் 17 அன்று புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தி.மு.க உறுப்பினர்கள் அரசியல் சட்டத்தின் 17 ஆவது பகுதியை எரித்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ராஜீவ் காந்தி உறுதியளித்தார். சமரசத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படவில்லை. தற்போது இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1986 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் மொழி உணர்வை மீண்டும் எழுப்பியது. தி.மு.கவினர், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தெருக்களில் இறங்கி போராடினர். 1938 மற்றும் 1965 காலகட்டங்களில் நடந்த வரலாற்றுப் போராட்டங்கள் 1986 இல் மீண்டும் நினைவாக உயிர்த்தெழுந்தது குறிப்பிடத்தக்கது.

வீதியில் இருந்து இணையத்திற்கு நகர்ந்தது  

1950-60 களில் மாணவர்களுக்கு அரசு வேலை பெறுவது முக்கிய இலக்காகக் கருதப்பட்டது. அப்போது இந்தி திணிப்பு, வேலை வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும் அபாயமாகப் பார்க்கப்பட்டது. இதனால், நாடெங்கும் போராட்டங்கள் வெடித்து, மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் இதில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தீவிரம் அதிகரிப்புடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த காலம், மொழி மற்றும் வாழ்வாதாரம் ஒன்றிணைந்த அரசியல் உணர்வை தமிழ்நாட்டில் உருவாக்கிய முக்கிய கட்டமாகும்.

இன்று, திராவிட இயக்க ஆட்சியின் தொடர்ச்சியில் ஆங்கிலக் கற்றல் ஊக்குவிக்கப்பட்டதால் பன்னாட்டு வேலை வாய்ப்புகள் பெருகி, தமிழர்களின் உலகளாவிய தொடர்புகளும் உயர்ந்துள்ளன. இதனால், முன்பிருந்தது போல மொழி வேலை அவசரத்துடன் (Employment Urgency) தொடர்புடைய ஒன்றாக இல்லாமல், இப்போது அடையாள உணர்வின் (Identity Emotion) பரிமாணத்தில் அமைந்துள்ளது. அதேபோல், அரசியல் எதிர்ப்பின் வடிவும் காலத்திற்கேற்ப மாறி, தெருக்களில் நடந்த போராட்டங்கள் மாறி சமூக ஊடகங்களில் இடம்பெறும் புதிய வடிவத்தை கொண்டுள்ளன.

ஒன்றிய அரசின் UPSC அமைப்பில் தமிழர்களின் வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து, உயர்நிலை நிர்வாகப் பணிகளும் சேரும் வகையில் TNPSC அமைப்பை திராவிட இயக்க ஆட்சிகள் விரிவாக்கின. இது, குறிப்பாக, கலைஞரின் நடைமுறை நிர்வாகச் சிந்தனையின் ஒரு உதாரணமாகும். இன்றும் இப்படியான நடைமுறை அணுகுமுறை அவசியம், ஏனெனில் ஒன்றிய அரசை நேரடியாக எதிர்ப்பது முன்பு இருந்ததைப் போல எளிதான அரசியல் செயல்பாடு அல்ல.
முடிவுரை

தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு வரலாறு வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; அது மாநில உரிமைகள், கூட்டாட்சிக் கொள்கை, கலாச்சார அடையாளம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளைச் சுற்றிய ஒரு விரிவான அரசியலாகும்.

1937 முதல் இன்று வரை, தெருப் போராட்டங்களிலிருந்து சமூக ஊடக பிரச்சாரங்கள் வரை, தமிழ்நாடு தனது மொழி உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்த நீண்ட பயணம், மொழிப் போராட்டம் இன்னும் முடிவடையாத தொடர்கதை என்பதையும், அதன் பாதுகாப்பு நம் விழிப்புணர்விலே இருப்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

விவரணைகள்

Anti-Hindi agitations of Tamil Nadu





Official Languages Act, 1963  


Official Languages Act, 1963 (As Amended, 1967)


Official Language Rules, 1976


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி

தமிழ்நாட்டின் மொழி உரிமைப் புரட்சி குறிப்பு  =   இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது....