Chocks: காந்தியும் தலித் அரசியலும்

Monday, December 14, 2020

காந்தியும் தலித் அரசியலும்

காந்தியும் தலித் அரசியலும் 

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. பூனா ஒப்பந்தம்
  3. ஹரிஜன் வரலாறு 
  4. இரட்டை உறுப்பினர் தொகுதி
  5. தனித்தொகுதி 
  6. முடிவுரை 
  7. விவரணைகள் 
முகவுரை 

காந்தியம் என்ற பழமைவாதம் தலித் மக்களுக்கு உரிமை கிடைப்பதைத் தடுக்கிறது என்றார் அம்பேத்கர். பசுவைப் போன்ற தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் என்னும் ஆசையை காட்டுவது பாவம் என்றார் காந்தி. அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான அடித்தள மோதல் வெறுமனே தனிப்பட்டதல்ல மாறாக அவை இந்திய சமூகத்தில் பரவலாகவும் ஆழமாகவும் இயங்கும் சாதியின் போக்கை எடுத்துக்காட்டுகின்றன. இக்கட்டுரை வாயிலாக பூனா ஒப்பந்தம், ஹரிஜன் வரலாறு, இரட்டை உறுப்பினர் தொகுதி, தனித்தொகுதி பற்றிய சிறு விளக்கத்தை பார்க்கலாம்.

பூனா ஒப்பந்தம்

16 ஆகஸ்ட் 1932 அன்று வட்ட மேசை மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மெக்டொனால்ட் வகுப்புவாத பிரதிநிதித்துவ கொள்கையை அறிவித்தார். இதன் மூலம் உயர் சாதி இந்து, தலித்தியம், இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், சீக்கியம், ஆங்கிலோ-இந்தியர், ஐரோப்பியர் பிரிவினருக்கு வகுப்புவாத பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் மற்றும் ரெட்டைமலை சீனிவாசனின் சீரிய முயற்சியால் தேர்தலில் தலித் பிரிவினருக்கு வகுப்புவாத பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் 71 தனித்தொகுதிகளை அளிக்க பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. தலித் மக்களுக்கு வகுப்புவாரிய முறைப்படி 71 தனித்தொகுதிக்கு இரட்டை வாக்குரிமை உறுதி செய்யப்பட்டது. இரட்டை வாக்குரிமை என்ற சிறப்பு சட்டத்தின் மூலம் தலித் மக்கள் தங்களின் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு 1 வாக்கும் பொதுத்தொகுதி வேட்பாளருக்கு 1 வாக்கும் அளிக்கலாம். இதில் தலித் மக்களுக்கு கிடைத்த இரண்டாவது வாக்கு என்பது தலித் வகுப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசியல் ஆயுதம் என்பதை அம்பேத்கர் உணர்ந்தார். வகுப்புவாத பிரதிநிதித்துவம் இந்திய பூர்வ குடியான தலித் மக்களின் அரசியல் அங்கீகாரத்தை உறுதி செய்தது.

உயர் சாதி இந்துக்களின் சார்பின்றி தலித் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பிரதிநிதித்துவத்தால் இந்து சமூகத்தின் வர்ண அமைப்பு சீர்குலையும் என காந்தி கருதினார். தலித் பிரதிநிதித்துவம் தவிர்த்து பிற சாதி மத மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கிய தேர்தல் சலுகை அறிவிப்புகளை காந்தி ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்க நுண்ணரசியல். தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாக்குரிமையுடன் கூடிய 71 தனித்தொகுதி அறிவிப்பை ரத்து செய்ய கோரி  காந்தி தனது சத்தியாகிரக கொள்கைக்கு எதிராகவே அம்பேத்கரை அச்சுறுத்தும் வகையில் பூனா ஏர்வாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். காந்தியின் உயிரைவிட எமது மக்களின் அரசியல் அதிகாரம் முக்கியம் என அம்பேத்கர் அறிவித்தார். காந்தியின் உண்ணாவிரத அரசியலை நம்ப வேண்டாம் என அறிவுரை கூறி பெரியார் ரஷ்யாவில் இருந்து அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினார். இத்தகைய காலச்சூழலில் 20 செப்டம்பர் 1932 அன்று உப்பு கலந்த வெந்நீரை அருந்தி ஏர்வாடா சிறையில் உண்ணாவிரத்தை தொடங்கினார் காந்தி. சிறைக்குள் காந்தி களைப்படையக்கூடாது என்று ராமர் பஜனை பாடல்களை தொண்டர்கள் பாடியபடி இருந்தனர். வெளியில் தலித் மக்கள் மீது வன்முறை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு காந்தியின் உயிரைக் காத்திட தலித் மக்கள் தமது அரசியல் உரிமையினை விட்டுத் தர நிர்பந்திக்கப்பட்டனர். 

அரசியலில் சலசலப்பை உண்டாக்கிய காந்தியின் உண்ணாவிரதம் குறித்து ஆலோசனை செய்திட அம்பேத்கரும் பிற தலைவர்களும் பூனாவில் கூடினர். ஏர்வாடா சிறையில் காந்தியை சந்தித்து "உங்களுக்கு எங்கள் மீது இரக்கம் இல்லையா?" என்று அம்பேத்கர் பேச்சைத் தொடங்கினார். எனது உயிர் அல்லது ஒப்பந்தம் எது? என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என தமது பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டார் காந்தி. இறுதியில் காந்தியின் இறுக்கமான அரசியல் தலையீட்டால் தலித் பிரிவினருக்கு 148 தொகுதி அளிக்க முடிவானது. அன்றைய காலசூழலில் காந்தியின் உண்ணாவிரதம் என்னும் தந்திர அரசியலால் வேறு வழியில்லாமல் தலித் மக்களின் உயிரைக் காக்கவே அம்பேத்கர் 148 தொகுதிக்கு சம்மதித்தார். தலித் மக்கள் சார்பாக அம்பேத்கரும் உயர்குடி இந்து மக்கள் சார்பாக மதன் மோகன் மாளவியாவும் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பூனா ஒப்பந்தம் இறுதியான பிறகு காந்தி உண்ணாவிரதத்தை கைவிட்டார். 20 செப்டம்பர் 1932 அன்று தொடங்கிய காந்தியின் நான்கு நாள் உண்ணவிரதப் போராட்டம் 24 செப்டம்பர் 1932 அன்று முடிந்தது. காந்தியின் தலையீட்டால் பூனா ஒப்பந்தம் முறைப்படி 71 தனித்தொகுதிக்கு பதில் கூடுதல் எண்ணிக்கையில் 148 தொகுதி கிடைத்து இருக்கிறதே என்று சிலர் கேட்கலாம் ஆனால் இங்கே தான் "காந்தி கணக்கு" வெளிப்படுகிறது. பூனா ஒப்பந்தம் முறைப்படி 148 தொகுதி உறுதியானாலும் வகுப்பு வாரியம் பெற்று தந்த இரட்டை வாக்குரிமை இல்லாமல் போனதன் மூலம் இந்து மத தலைமை உயர் சாதியினரின் கைகளில் இருப்பதை உறுதி செய்து கொண்டார் காந்தி.

ஹரிஜன் வரலாறு 

5-8 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கோலோச்சிய பக்தி இயக்கம் 15ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வட இந்திய பக்தி இயக்கத்தில் மீரா பாய், ரவிதாஸ், துளசிதாஸ், கபீர்தாஸ், நரசிங் மேத்தா, குரு நானக் (சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்), ராமானந்தர் போன்றோர் கோலோச்சினர். வட இந்திய பக்தி இயக்க காலகட்டத்தில் தந்தை பெயர் தெரியாமல் தேவதாசி பெண்களுக்கு பிறந்த தலித் குழந்தைகளை கடவுள் ஹரியின் குழந்தைகள் (ஜனங்கள்) என்று பொருள்படும்படி தலித் மக்களை "ஹரிஜன்" என்று அழைத்தார் நரசிங் மேத்தா. மேலும் துளசிதாஸ் எழுதிய ராமாயணத்தில்  “பிராமணர், வைசியன், ஹரிஜன் மீது சத்திரியன் தமது சக்தியை வீணாக பயன்படுத்தமாட்டான்” என பரசுராமனிடம் வர்ணக் கொள்கையை லட்சுமணன் உரைப்பதாக எழுதியுள்ளார். 

1932 இல் பூனா ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு 1933 இல் தலித் மக்களின் விடுதலைக்கு ஹரிஜன் சேவா சங்கம் மற்றும் ஹரிஜன் பத்திரிகை ஆகியவற்றை தொடங்கினார் காந்தி. நரசிங்க மேத்தா மற்றும் துளசிதாஸ் மேற்கோள்காட்டிய ஹரிஜன் சொல்லையே காந்தி பயன்படுத்தினார். தலித் மக்களை தீண்டத்தகாதவர் என அழைக்காமல் ஹரிஜன் என அழைப்பதே சரி என்றும் தீண்டத்தகாதவர் பெயரை ஹரிஜன் என பெயர் மாற்றி அழைப்பதால் அவர்களின் சமூக அந்தஸ்து உயர்ந்திடும் என்பதற்கில்லை ஆனால் தீண்டத்தகாதவர் என்ற கடுஞ்சொல் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்கக்கூடும் என்றும் எடுத்துரைத்தார் காந்தி. இப்படி தலித் மக்களை ஹரிஜன் என்று சொல்லிலே தேன் தடவி காந்தி பயன்படுத்துவதாக எண்ணி அம்பேத்கர் அதனை கடுமையாக எதிர்த்தார். 

காந்தியின் ஹரிஜன் சேவா சங்கமும் வெற்றி பெறவில்லை. ஏனெனில் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்திலே கவிதா கிராமத்தில் உயர் சாதி இந்து மக்கள் தலித்துகள் பயன்பாட்டிற்கு மட்டுமுள்ள கிணற்று நீரில் மண்ணெண்ணெய் கலந்து அதனை பயன்படுத்த விடாமல் தடுத்தனர். இதனால் கவிதா கிராம தலித் மக்கள் பல்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர். 

இரட்டை உறுப்பினர் தொகுதி

இரட்டை உறுப்பினர் தொகுதியில் இருந்து ஒரு பொது வேட்பாளரும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளரும் எம்.பிகளாக தேர்வு செய்யப்படுவர். பொது வேட்பாளருக்கு தாழ்த்தப்பட்ட வேட்பாளருக்கு தனித் தனியாக 2 வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இரட்டை உறுப்பினர் தொகுதி வாக்காளர்களுக்கு மட்டும் 2 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் வேலூர், மயிலாடுதுறை, திண்டிவனம், நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய 5 தொகுதிகள் இரட்டை வாக்குரிமை தொகுதிகளாக இருந்தன. 

1957 இல் ஆந்திர தேர்தலில் இரட்டை வாக்குரிமை தொகுதியான பார்வதிபுரம் தொகுதியில் பொது பிரிவிலும், தாழ்த்தப்பட்ட பிரிவிலும் பழங்குடியின வேட்பாளர்களே வெற்றிப் பெற்று போட்டியிட்ட வி.வி.கிரி தோல்வியுற்றார். இதையடுத்து வி.வி.கிரி இரட்டை உறுப்பினர் தொகுதி தேர்தல் முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதனை தொடர்ந்து 1961 இல் நாடாளுமன்றத்தில் பெருவாரியான ஆதரவு இல்லாத போதும் விடாப்பிடியாக காங்கிரஸ் இரட்டை உறுப்பினர் தொகுதி முறையை ஒழித்து தனித்தொகுதி சட்டத்தை மட்டும் அமலுக்கு கொண்டுவந்தது.

தனித்தொகுதி 

இரட்டை வாக்குரிமையை காந்தி பறித்தார். இரட்டை உறுப்பினர் தொகுதி முறையை காங்கிரஸ் பறித்தது. இன்று தனித்தொகுதி மட்டுமே இருக்கிறது. அதாவது தனித்தொகுதிக்கான  தேர்தலில் தலித்துக்கள் மட்டுமே வேட்பாளர்களாக போட்டியிடலாம் அனைத்துத் பிரிவு மக்களும் ஏதோ ஒரு தலித் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

543 இந்திய மக்களவை தொகுதியில் 131 தனித்தொகுதி.

234 தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியில் 46 தனித்தொகுதி (தலித் - 44, பழங்குடிகள் - 2)

39 தமிழ்நாடு மக்களவை தொகுதியில் 7 தனித்தொகுதி.

முடிவுரை 

ஆங்கில இதழ்களில் தீண்டாமைக்கு எதிராக தலித் மக்களை "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்றும் குஜராத்தி இதழ்களில் வருணாசிரம கொள்கைக்கு ஆதரவாக தலித் மக்களை "அந்தியாஜா" (கடைசியாக பிறந்தவர்) என்றும் இரட்டை நிலைப்பாட்டுடன் எழுதுபவர் காந்தி என்று குற்றம் சாட்டினார் அம்பேத்கர். இவ்வகையில் காந்தி தேசிய தலைவர் என்றாலும் தலித் அரசியல் விவகாரத்தில் அவர் நடந்து கொண்டவிதம் சர்ச்சைக்கும் ஆய்வுக்கும் உரியதே.

எப்படி இருப்பினும் வலதுசாரி ஆட்சியால் நாட்டில் நடக்கும் அவலங்களை பார்க்கும் போது நிச்சயமாக இன்று நமக்கு காந்தியும் அம்பேத்கரும் அதிகம் தேவைப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை என கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

விவரணைகள் 

அம்பேத்கரை நினைவுகூர்வது எப்படி?


The Rise And Fall Of The Term Harijan


How Gandhi Made Ambedkar A Villain 


Never A Mahatma - A Look At Ambedkar's Gandhi


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -