Chocks: அரசியல் சதுரங்கம்

Tuesday, December 15, 2020

அரசியல் சதுரங்கம்

அரசியல் சதுரங்கம்
அரசியல் என்றால் என்ன?

மக்கள் ஜனநாயகமோ சர்வாதிகாரமோ யார் கீழாவது அடிபணிந்து வாழ்வது பலாயிரம் வருட வரலாறாகும். மக்கள் அடிபணிந்து வாழ அரசியல் தான் துருப்புசீட்டு. அப்பேற்பட்ட அரசியல் சாம்ராஜ்யம் "சமூக அரசியல் மற்றும் அதிகார அரசியல்" என இரு வகைப்படும். மக்களிடம் நேரிடையாக சென்று கொள்கைகளை எடுத்துரைத்து சமூக மாற்றங்களை கொண்டுவர முயல்வது சமூக அரசியல். வலதுசாரி (Conservatism) அல்லது இடதுசாரி (Liberalism) அல்லது மய்யம் (Centrism) கொள்கை கொண்டு மக்களை நேரிடையாக ஆட்சி செய்வது அதிகார அரசியல். அரசியலில் வெற்றி பெற தொடர்ந்து புதுப்பித்தல் (Update) மற்றும் மேம்படுத்தல் (Upgrade), சீரான கட்டமைப்பு, ஊடகங்கள் வாயிலாக மக்களை சென்றடைதல், கொள்கைகளை எடுத்துரைத்தல் முக்கிய தேவையாகும்.

அதிகார அரசியலுக்கு சமூக அரசியலே ஆணிவேர். ஏனெனில் சமூக அரசியல் மூலமே கொள்கை உணர்வை வளர்த்தெடுக்க முடியும் என்பதற்கு பெரியார் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 1994இல் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பேசுகையில் “இந்தியாவில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் திராவிட கட்சிகள் தொடர்ந்து கூடுதல் பலத்துடன் இருப்பதற்கு காரணம் பிற கட்சிகளில் இல்லாத வகையில் அடிப்படை கட்டுமானம் வலுவாக இருப்பதோடு தொண்டர்களும் உணர்வாளர்களாக இருப்பதே” என்றார்.

காங்கிரஸ் - பா.ஜ.க - சமூக அரசியல் 

1885இல் இந்தியா தேசிய காங்கிரஸ் என்ற அதிகார அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்தியா தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் M.G.ரானடே சமூக அரசியல் சீர்திருத்தம் அவசியமானது என்று எண்ணி 1887இல் காங்கிரஸ் ஆதரவில் சுயாதீன பிரிவாக இந்திய தேசிய சமூக மாநாடு (Indian National Social Conference) என்ற சமூக சீர்திருத்தக் இயக்கத்தை தொடங்கினார். பெண்களுக்கு கல்வி, விதவைகளின் மறுமணம், குழந்தைத் திருமணங்களுக்கு தடை, பெண்களுக்கு சொத்துரிமை, வேலையை தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம், பின்தங்கிய வகுப்பினருக்கான ஒதுக்கீடு போன்றவை இந்திய தேசிய சமூக மாநாட்டின் கொள்கைகளாக வரையறுக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்துத்துவா உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக இந்திய தேசிய சமூக மாநாடு இயக்கம் சில ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. இந்திய தேசிய சமூக மாநாடு இயக்கம் ஒரு சிறந்த சமூக இயக்கமாக மாறியிருக்கும் ஆனால் அவர்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் சிக்குண்ட காங்கிரஸ் கட்சியின் பக்கத்தில் நிற்கத் தேர்ந்தெடுத்து அதன் மதிப்பை இழந்தனர் என்று அம்பேத்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
1934 இல் ராம் மனோகர் லோஹியா, ஜெய் பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவா உட்பட பலர் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவாக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை (Congress Socialist Party) உருவாக்கி இடதுசாரியம், அகிம்சை, தாராளவாதம், ஜனநாயகம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டனர். பரவலாக்கப்பட்ட சோசலிசம் மூலம் பின்தங்கிய சமுதாய பிரிவினரை மேம்படுத்துவதற்கான தீவிர சமூக - பொருளாதார (Socio - Economic) நடவடிக்கைகளை ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியில் போதிய ஆதரவு இல்லாததால் 1948 இல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி 1952 இல் ஆச்சார்ய கிருபளானியின் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் (Kisan Mazdoor Praja Party) காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை இணைத்து பிரஜா சோசலிஸ்ட் கட்சியை (Praja Socialist Party) ராம் மனோகர் லோஹியா, ஜெய் பிரகாஷ் நாராயண் உட்பட பலர் இணைந்து உருவாக்கினர். இக்கட்சியும் பின்னர் பல பிரிவுகளாக உடைந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் வலதுசாரிகள், மய்யவாதிகள் மற்றும் இடதுசாரிகள் என என பலர் இருந்தனர் ஆனால் பா.ஜ.க கட்சியில் வலதுசாரிகள் மட்டுமே பங்கு கொண்டனர். சோசலிஸ சமூக அரசியல் இயக்க செயல்பாடுகள் மூலம் காங்கிரஸ் கட்சி வளர முனையவில்லை ஆனால் வலதுசாரிய ஆர்.எஸ்.எஸ் இயக்க செயல்பாடுகள் மூலமே பா.ஜ.க கட்சி வளர்ந்தது என்பது கவனிக்கத்தக்கது.

வல்லரசு என்றால் என்ன?

அடிபணிதல் என்று வரும் போது யார்? ஆணை இடுகிறார் என்ற கேள்வி வந்து விடும். அவ்வகையில் ~760 கோடி மக்கள் வாழும் உலகில் ஆணை இடுபவர்களில் உச்சம் பெற்ற ஒருவர் இருக்கத் தான் செய்வார். அந்த உச்சம் பெற்ற நபர் ஆளும் நாடு தான் வல்லரசு நாடாக அறியப்படும். ராணுவம், விண்வெளி, தொழில்நுட்பம், வணிகம் ஆகிய நான்கு துறையிலும் அந்நாடே ஆதிக்கம் செலுத்தும். இன்றைய முதலாளித்துவ வளர்ச்சியில், உலகமயமாக்கல் வேகத்தில், தொழில்நுட்ப உலகில் வல்லரசு கொள்கை இன்றியமையாதது. ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் ஜனநாயகமும் ஒரு சேர கடைப்பிடிக்கும் நாடு தான் வல்லரசாக இயலும். அவ்வகையில் இன்று அமெரிக்கா உலகின் வல்லரசாக இருக்கிறது அங்கே மக்களும் ஜனநாயக அடிப்படையில் சுதந்திரமாக வாழ்கின்றனர். 

*கண்டிப்பில் ஏகாதிபத்தியம் (Big Brother) 

*தொழிலில் முதலாளித்துவம் (Capitalist) 

*அரவணைப்பில் ஜனநாயகம் (Autonomy)

பழங்காலத்தில் இந்தியா செல்வச்செழிப்புடன் இருந்த காரணத்தால் தான் அந்நியர்கள் இந்தியாவுக்குள் வர்த்தகம் செய்யவும் ஆட்சி செய்யவும் வந்தனர். அவ்வகையில் பழங்காலத்தில் இந்தியாவும் சீனாவும் வல்லரசாக பிறகு டச்சு வல்லரசாக பிறகு பிரிட்டன் வல்லரசாக பிறகு அமெரிக்கா வல்லரசாக இன்று இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு நாடும் வல்லரசாக அந்நாட்டின் நாணயம் பல நாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முதன்மையானதாக இருக்க வேண்டும் அவ்வகையில் இன்று அமெரிக்க நாணயமான டாலர்ஸ் தான் சர்வதேச வர்த்தக புழக்கத்தில் உள்ள பொதுவான நாணயமாகும். மேலும் வல்லரசாக நீடிக்க மக்கள் தொடர்ந்து அதிக வரிப்பணம் கட்டுதல் முதன்மையானது.

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக சீன யுவானை பயன்படுத்திட சீனா முயற்சிக்கிறது என்று பரவலாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்க டாலர் பரிவர்த்தனை ஜூன் 2018இல் 39.35% ஆகவும் ஜூன் 2020இல் 40.33% ஆகவும் கூடியிருக்கிறது ஆனால் சீன யுவான் பரிவர்த்தனை மார்ச் 2018இல் 1.81% ஆகவும் மார்ச் 2020இல் 1.76% ஆகவும் குறைந்திருக்கிறது. தரவுகளின் படி நாணயத்தை  மாற்ற முயலும் சீனாவின் முயற்சி சவாலான பணியாக இருக்கும்.
விவரணைகள்

Ideology and Political Parties 


Ambedkar - Ranade


Five Superpowers in 2050


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...