சேப்பியன்ஸ் புத்தகம்
வரலாறு இல்லாமல் உலகம் இல்லை, நேற்று என்பதே ஒரு வரலாறு தான். இப்படிப்பட்ட வரலாறு என்பதனை ஒரு சில பக்கங்களில் அடக்கிவிட முடியாது ஆனால் “இறந்த காலம் - நிகழ் காலம் - எதிர் காலம்” ஆகிய மூன்றையும் உள்ளடக்கி “அறிவு புரட்சி - வேளாண் புரட்சி - மனிதக் குல ஒருங்கிணைப்பு - அறிவியல் புரட்சி” ஆகிய தலைப்புகளில் மனிதகுலத்தின் சுருக்கமான வரலாற்றை வரலாற்று பேராசிரியர் யுவால் நோவா ஹராரி தன்னுடைய “சேப்பியன்ஸ்” புத்தகத்தில் பல தரவுகளுடன் விளக்கியுள்ளார். புத்தகத்தை படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது காரணம் அவ்வளவு தகவல்கள்.
நம் சகோதரர்கள் ஹோமோ நியண்டர்தால், ஹோமோ எரக்டஸ் மறைந்து ஹோமோ சேப்பியன்ஸ் (மனிதர்கள்) பூமியின் சேம்பியன்ஸ் என்ற கருதுகோள் உள்ளது ஆனால் அதற்கு பின்னால் உள்ள வரலாறு கொடியது என்பதை இப்புத்தகத்தை படிப்பவர்கள் உணரலாம். 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமோ பேரினத்தின் இறுதிவடிவமான ஹோமோ சேப்பியன்ஸ் இனம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. இவ்வகையில் ஹோமோ சேபியன்ஸ் என அறியப்படும் மனிதர்களாகிய நமக்கெல்லாம் ஆப்பிரிக்கா தான் பூர்வகுடி. ஆப்பிரிக்க மக்களாகிய நாம் சூழலியல் காரணங்களுக்காக பல்வேறு காலகட்டத்தில் ஆப்பிரிக்க தேசத்தை விட்டு வெளியேறி வெவ்வேறு தேசங்களில் ஐக்கியமானோம். அப்படி நாம் சென்ற தேசங்களில் திராவிடர்கள், ஆரியர்கள், எகிப்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள் என்று பல்வேறு இனங்களை கண்டோம்.
70,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அறிவு புரட்சி முதலே மனித கூட்டமானது இயற்கையையும் பிற உயிரினங்களையும் அழிக்கத் தொடங்கி விட்டது. நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்த மனிதன் நாளடைவில் உணவு சங்கிலியில் மட்டுமில்லாமல் உயிரின சங்கிலியிலும் முதலிடம் வந்து விட்டான் என்றும் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய வேளாண் புரட்சியை இன்றும் உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று அரசாங்கங்கள் பெருமை பேசுகின்றன ஆனால் வேளாண் புரட்சியே மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கவும் சொகுசான மேட்டுக்குடி இனப்பிரிவு உருவாவதற்கும் அதனை தொடர்ந்து முதலாளித்துவம் வளர்வதற்கும் வழிவகுத்தது என்றும் விளக்குகிறார்.
ஆதிகால மக்களுக்கு வம்பு (கிசு கிசு) பேசுவதில் இருந்த ஆர்வமே மொழிகள் உருவாகக் காரணம் என்ற விளக்கம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் வேட்டையாடி சமூகமாக இருந்து வேளாண் சமூகமாக மாறிய காலத்தில் உலக மக்கள் பொது ஒத்துழைப்பை வழங்கிட உருவானது பணம், உலக மக்கள் உழைப்பின் மீதான நம்பிக்கையை பெற்றிட உருவானது மதம், உலக மக்கள் வாரி வழங்கும் உழைப்பை பெற்றிட உருவானது ஏகாதிபத்தியம். அதன் அடிப்படையில் மனித சமுதாய சங்கிலியில் ஒரு கண்ணி பணம், ஒரு கண்ணி மதம், ஒரு கண்ணி ஏகாதிபத்தியம் என்றும் மக்களின் பொதுவான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க உருவானதே பேரரசுகள் என்கிறார்.
ஐரோப்பிய மக்களுக்கு முன்னரே பல்வேறு நாட்டினரும் கடல் வழி பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் அவர்களின் நோக்கம் செல்லும் இடங்களில் செல்வங்களை கைப்பற்றுவதே இலக்காக இருந்துள்ளது ஆனால் ஐரோப்பியர்கள் கடல் வழி பயணமாகி தாங்கள் களம் காணும் ஒவ்வொரு இடத்திற்கும் ஆய்வுக் குழுவை அழைத்து செல்வதும் ஆய்வு செய்வதும் பிறகு அவ்விடத்தையே வெற்றி கொள்வதும் இலக்காக இருந்துள்ளது. அவ்வகையில் புதிதாக ஒரு இடத்தை தேடிச் சென்று செல்வங்களை சுமந்து சொந்த நாட்டிற்கு திரும்ப வருவதற்கு பதிலாக செல்வங்கள் இருக்கும் இடத்தையே ஆக்கிரமிப்பு செய்து அந்தந்த இடத்தின் பூர்விகவாசிகளை அழித்தொழித்து அந்த இடத்தையே வளைப்பது தான் ஐரோப்பியர்களின் மூளை என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எழுதியுள்ளார்.
ஹோமோ சேப்பியன்ஸ் என்ற அறிவார்ந்த மனிதர்களாகிய நாம் மாற்று உயிரினத்துடன் உறவு கொண்டும் கணினியின் துணைக்கொண்டும் எதிர்க்காலத்தில் நம்மை விட வலிமையான திறமையான உயிரினமாக “சூப்பர் மனிதன்” பிறக்க வழிவகை செய்ய வாய்ப்பு அதிகம் என்பதையும் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா கைப்பற்றப்பட்ட விதம், ஆப்பிரிக்க அடிமை உருவாக்கப்பட்ட விதம், கிரீன்விச் நேர மண்டலம், மனித வாழ்க்கை முறையினை மாற்றிய முதலாளித்துவம் உட்பட பல்வேறு வரலாற்று செய்திகளை அறிய இன்றே வாசியுங்கள் “சேப்பியன்ஸ்”.
மனிதன் கடவுளைக் கண்டுபிடித்தபோது வரலாறு தோன்றியது அதே மனிதன் கடவுளாகும்போது அது முடிந்துவிடும் என்ற வரலாற்று பேராசிரியர் யுவால் நோவா ஹராரியின் புகழ்பெற்ற மேற்கோளுடன் முடிக்கிறேன்.
யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் புத்தகத்தில் உள்ள சிறு தொகுப்பு
*1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் பருப்பொருளும் ஆற்றலும் தோன்றுகின்றன. இயற்பியல் பிறக்கிறது. அணுக்களும் மூலக்கூறுகளும் தோன்றுகின்றன, வேதியியல் பிறக்கிறது.
*450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவாகிறது.
*380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோன்றுகின்றன. உயிரியல் பிறக்கிறது.
*60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றுகின்றனர்.
*25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஹோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கற்கருவிகள் உருவாக்கப்படுகின்றன.
*20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினம் ஆப்பிரிக்காவிலிருந்து யுரேசியாவிற்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் உருவாகின்றனர்.
*5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனத்தினர் ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் தோன்றுகின்றனர்.
*3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நெருப்பின் அன்றாடப் பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது.
*2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது.
*70,000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவுப் புரட்சி மலர்கிறது. மொழி கண்டுபிடிக்கப்படுகிறது. வரலாறு உதயமாகிறது. ஹோமோ சேப்பியன்ஸ் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரவுகின்றனர்.
*45,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் ஆஸ்திரேலியாவில் குடியேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன.
*30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனத்தினர் பூண்டோடு அழிகின்றனர்.
*16,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் அமெரிக்காவில் குடியேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன.
*13,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ ஃபுளோரெசியென்சிஸ் என்ற இன்னொரு மனித இனம் பூண்டோடு அழிகிறது, மனித இனங்களின் ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டுமே எஞ்சி இருக்கிறது.
*12,000 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் புரட்சி மலருகிறது. உணவுக்காகத் தாவரங்கள் பயிரிடப்படுகின்றன, விவங்குகள் பழக்கப்படுத்தப்பட்டு வீடுகளிலும் வயல்களிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படு கின்றனர். நிரந்தரக் குடியேற்றம் தொடங்குகிறது.
*5,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மன்னராட்சி, பேச்சு மொழியின் எழுத்து, வடிவம், பணம் ஆகியனவே தோன்றுகின்றன. பல கடவுளர் கோட்பாட்டை உள்ளடக்கிய மதங்கள் தலைதூக்குகின்றன.
*4,250 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் முதல் பேரரசரான சார்கானின் அக்கேடியப் பேரரசு உதயமாகிறது.
*2,500 ஆண்டுகளுக்கு முன்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. உலகளாவிய பணம் பிறப்பெடுக்கிறது. மனிதகுல நன்மைக்கான உலகளாவிய அரசிய லமைப்பு என்ற பிரகடனத்துடன் பாரசீகப் பேரரசு முளைக்கிறது. அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் புத்தமதம் தோற்றுவிக்கப்படுகிறது.
*2,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஹான் பேரரசும், மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோமானியப் பேரரசும் தோன்றுகின்றன. கிறித்தவ மதம் தோற்று விக்கப்படுகிறது.
*1,400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுகிறது.
*500 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் புரட்சி மலருகிறது. மனிதகுலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றத் தொடங்குகிறது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கின்றனர், பெருங்கடல்களை வெற்றி கொள்ளத் தொடங்குகின்றனர், ஒன்றிணைந்த வரலாற்றுக் களமாக உலகம் மாறுகிறது. முதலாளித்துவம் தலைத்தூக்குகிறது.
*200 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்புரட்சி வெடிக்கிறது. குடும்பமும் சமூகமும் புறக்கணிக்கப் பட்டு, நாடும் சந்தையும் அவற்றின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன, தாவரங்களும் விலங்குகளும் பெரும் எண்ணிக்கையில் பூண்டோடு அழிகின்றன.
*தற்போது பூமி என்ற கோளின் எல்லயை மனிதர்கள் கடக்கின்றனர். அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் இருத்தலை அச்சுறுத்துகின்றன. இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையால் அன்றி நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உயிரினங்கள் உருவாவது அதிகரிக்கிறது.
*எதிர்காலத்தில் நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உருவாக்கப்படும் படைப்புகள் வாழ்வின் அடிப்படைக் கோட்பாடாக மாறப் போகின்றன, ஹோமோ சேப்பியன்ஸின் இடத்தை அதிமனிதர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப் போகின்றனர்.
Reference
Yuval Noah Harari
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment