தங்கமே தங்கம்
சுருக்கம்
- தங்கம் வரலாறு
- தங்கம் வேதியியல்
- செய்கூலி, சேதாரம்
- கே.டி.எம் / ஹால்மார்க்
- தங்கம் வகைகள்
- தங்கம் வியாபாரம்
- தங்கம் விற்பனை விலை
- தங்கம் வாங்குதல்
- தங்கம் பார்த்தல்
- தங்க கேரட்
- தங்கம் துணுக்குகள்
- முடிவுரை
- விவரணைகள்
தங்கம் வரலாறு
பிரபஞ்ச நட்சத்திரங்களை இயக்குவது அணுக்கரு பிணைவு (Nuclear Fusion) ஆகும். பிரபஞ்சம் தோன்றிய போது இரு வகை அணுவான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் உருவாகியிருந்தன. ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை முறையே உற்பத்தி செய்கின்றன. ஒரு கட்டத்தில் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி 'சூப்பர்நோவா' என்ற நட்சத்திர வெடிப்பின் வினையால் கிடைப்பது தான் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மஞ்சள் நிறமுள்ள தங்கம் Au (அணு எண் 79) என்ற குறியீட்டினை பெற்றது. தங்கம் தண்ணீரை விட 19 மடங்கு கனமாகவும், செம்பு தண்ணீரை விட 9 மடங்கு கனமாகவும் இருக்கும். தங்க நகைகள் செய்ய தங்கம் மற்றும் செம்பு உலோக கலவையை கலக்கும் போது தண்ணீரை விட 15 மடங்கு கனமாக இருக்கும்.
செய்கூலி, சேதாரம்
24 கேரட் சுத்தமான தங்கத்திற்கு நெகிழும் தன்மை அதிகம் என்பதால் 24 கேரட்டில் தங்க நகைகளை செய்ய முடியாது. எனவே தங்க நகைகள் எளிதில் உடையாமல் இருக்க தூய தங்கத்துடன் குறிப்பிட்டளவில் பிற உலோகமான செம்பு (பெரும்பாலும்), வெள்ளி, பல்லேடியம், காட்மியம் கலப்பதுண்டு. பிற உலோகமும் கலக்கப்பட்டு செய்யப்படும் தங்க நகைகளில் உள்ள தங்கத்தின் அளவு (விழுக்காடு) கேரட் அளவில் மதிப்பிடப்படும். இந்தியாவில் உள்ள தங்க நகைகள் 22 கேரட் வகையை சேர்ந்தது. தங்கத்துடன் கலக்கப்படும் பிற உலோகத்திற்கும் சேர்த்தே “செய்கூலி, சேதாரம்” கணக்கிடப்படுகிறது.
கே.டி.எம் / ஹால்மார்க்
ஆரம்ப காலத்தில் 60% தங்கம் மற்றும் 40% செம்பு ஆகியவற்றின் கலவையாக தங்க நகைகள் இருந்தது. இதில் தங்கத்தின் தூய்மை மிக குறைவாக இருந்தது. அதனால் ஒரு கட்டத்தில் 92% தங்கம் மற்றும் 8% காட்மியம் கலவையாக தங்க நகைகள் சாலிடரிங் செய்யப்பட்டு வந்தன. இதன் பெயர் தான் கே.டி.எம். கே.டி.எம் என்பது தங்கம் மற்றும் காட்மியம் ஆகியவற்றின் கலவையாகும்.
இந்தியாவில் விற்கப்படும் தங்கத்தின் தூய்மையை சான்றளிக்கும் அமைப்பு BIS ஹால்மார்க் ஆகும். தங்க நகைகள் 916 தூய்மையை பெற்று இருந்தால் அந்நகைகள் BIS ஹால்மார்க் குறியீட்டை பெரும். கே.டி.எம் தங்க நகைகள் 916 தூய்மை சோதனையில் தேர்ச்சி பெறாது. அதனால் தங்க நகைகள் வாங்கும் போது 916 BIS ஹால்மார்க் முத்திரையை பார்த்து வாங்குவது நலம்.
தங்கம் வகைகள்
மஞ்சள் தங்கம் = தூய தங்கம் + குறைந்த செம்பு
ரோஜா தங்கம் = தூய தங்கம் + அதிக செம்பு
வெள்ளை தங்கம் = தூய தங்கம் + நிக்கல் / வெள்ளி / பல்லேடியம்
தங்கம் வியாபாரம்
புல்லியன் தங்கக் கடை = தங்கக் கட்டி வியாபாரம்
தங்க நகைக் கடை = தங்க நகை வியாபாரம்
தங்க நகைக் கடை முதலாளிகள் புல்லியன் தங்கக் கடையில் தங்கக் கட்டிகளை வாங்கி தங்க நகைகள் செய்யும் நிபுணரை (நகை ஆசாரி) கொண்டு நகைகளை செய்து வாடிக்கையாளர்களுக்கு செயின், மோதிரம், தோடு, வளையல் என்று SHOWCASE இல் வைத்து விற்கிறார்கள்.
தங்கம் விற்பனை விலை
தங்கம் நகை பில் விபரம் "உத்தேச" எடுத்துக்காட்டு
1 கிராம் தங்க நகை = 1 கிராம் விலை + செய்கூலி + சேதாரம் + ஹால்மார்க் சார்ஜ் + வரி
இவை எல்லாம் சேர்த்து தான் வாங்கிடும் நகைக்கு "விற்பனை விலை" வைப்பார்கள். மேலும் தேர்வு செய்யும் நகை டிசைனை பொருத்து செய்கூலி, சேதாரம் மாறுபடும். இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் 3% ஜி.எஸ்.டி கட்டுவது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வாங்குதல்
"கல்" பதித்த தங்க நகை வாங்குவதை தவிருங்கள் இல்லையென்றால் "கல்" பொருளுக்கும் சேர்த்து கூடுதல் விலையை கொடுத்து வாங்க நேரிடும். ஆனால் "கல்" பதித்த நகையை திரும்ப விற்க போனால் நகைக் கடைக்காரர் "கல்" எடையை கழித்து தான் விலை வைப்பார் அதனால் உங்களுக்கு நட்டம் அதிகமா இருக்கும்.
ஒட்டு டிசைன் (தங்கம் டச்சு குறையும்) இல்லாமல் கட்டிங் டிசைன் நகையை வாங்குவது நலம். பிளைன் / கலர் கோடிங் எனாமல் தங்க நகை வாங்கிடலாம். கே.டி.எம் நகை "அலர்ஜி" உண்டாக்கும் புகார் இருப்பதால் இன்று அவை அதிக புழக்கத்தில் இல்லை. நகைகளில் 916 BIS ஹால்மார்க் முத்திரை இருத்தல் அவசியம்.
தங்கம் பார்த்தல்
கவரிங் நகைகளில் முத்திரை பொறித்து தங்க நகை என்று ஏமாற்றி விற்பவர்களும் உண்டு. அச்சமயங்களில் அதன் தரத்தை கண்டறிய உரை கல்லில் உரசப்பட்ட தங்கத்தில் நைட்ரிக் அமிலத்தை லேசாக வைக்கும்போது அது மின்னி நுரைத்தால் நல்ல தங்கம் ஆனால் பச்சையாக நுரைத்தால் சந்தேகமே வேண்டாம் அது கவரிங்.
தங்க கேரட்
999 = 24 கேரட் = 24/24 = 99.9% தங்கம்
958 = 23 கேரட் = 23/24 = 95.80% தங்கம் + 4.20% பிற உலோகம்
916 = 22 கேரட் = 22/24 = 91.60% தங்கம் + 8.40% பிற உலோகம்
875 = 21 கேரட் = 21/24 = 87.50% தங்கம் + 12.50% பிற உலோகம்
833 = 20 கேரட் = 20/24 = 83.30% தங்கம் + 16.67% பிற உலோகம்
791 = 19 கேரட் = 19/24 = 79.10% தங்கம் + 20.90% பிற உலோகம்
750 = 18 கேரட் = 18/24 = 75.00% தங்கம் + 25.00% பிற உலோகம்
708 = 17 கேரட் = 17/24 = 70.80% தங்கம் + 29.20% பிற உலோகம்
666 = 16 கேரட் = 16/24 = 66.60% தங்கம் + 33.40% பிற உலோகம்
625 = 15 கேரட் = 15/24 = 62.50% தங்கம் + 37.50% பிற உலோகம்
583 = 14 கேரட் = 14/24 = 58.30% தங்கம் + 41.70% பிற உலோகம்
541 = 13 கேரட் = 13/24 = 54.10% தங்கம் + 45.90% பிற உலோகம்
500 = 12 கேரட் = 12/24 = 50.00% தங்கம் + 50.00% பிற உலோகம்
458 = 11 கேரட் = 11/24 = 45.80% தங்கம் + 54.20% பிற உலோகம்
416 = 10 கேரட் = 10/24 = 41.60% தங்கம் + 58.40% பிற உலோகம்
375 = 9 கேரட் = 9/24 = 37.50% தங்கம் + 62.50% பிற உலோகம்
333 = 8 கேரட் = 8/24 = 33.30% தங்கம் + 66.67% பிற உலோகம்
24 கேரட் தங்கம் என்றால் என்ன?
999 = 24 கேரட் = 24/24 = 99.9% தங்கம்
22 கேரட் தங்கம் என்றால் என்ன?
916 = 22 கேரட் = 22/24 = 91.60% தங்கம் + 8.40% பிற உலோகம்
22 கேரட் தங்கம் எல்லாமே "916" என்பது உண்மையா?
தங்க நகை டச்சு என்று சொல்லப்படுகிற 916 தரத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தங்கத்துடன் பிற உலோகத்தை அதிகம் பயன்படுத்தி தங்க நகை செய்து அதற்கு தங்க பாலீஷ் போட்டால் 916 போலவே தெரியும். இது போன்ற தங்க நகையில் E F (நகை வியாபாரிகளின் சங்கேத மொழி) என்ற சீல் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற தங்க நகையின் டச்சு 85%, 80% என்று குறைவாக இருக்கும்.
இப்படிப்பட்ட தங்க நகையை வாங்கிவிட்டு மீண்டும் அப்பொருளை விற்கப்போனால் தெரியவரும் பிரச்சனை. நன்கு தங்க நகை பார்க்க தெரிந்தவர் அந்நகையை பார்த்ததும் இது தரத்தில குறைவானது அதனால் விலை குறையும் என்பதை சொல்லிவிடுவார். அதனால் தங்க நகைகளில் 916 ஹால்மார்க் முத்திரை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் அப்போது தான் திரும்ப விற்கப்போனால் ஓரளவுக்கு விலை நிற்கும்.
இதற்கிடையில் தங்கத்தின் தரத்தை உறுதி செய்திட ஜூன் 2021 இல் இருந்து இந்தியாவில் தங்க நகை விற்பனைக்கு "ஹால்மார்க்" கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்திட மத்திய அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் துணுக்குகள்
1991இல் இந்திய பொருளாதார நிலைமை மோசமானதால் ரிசர்வ் வங்கி ~47 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கி மற்றும் ஜப்பான் வங்கியிடம் அடகு வைத்து 400 மில்லியன் டாலர் திரட்டியது. பொருளாதார நிலைமை மேம்பட்ட பிறகு இந்திய அரசாங்கம் தங்கத்தை மீண்டும் வாங்கி ரிசர்வ் வங்கிக்கு மாற்றியது.
வரலாறு முழுவதும் சுமார் ~1,90,000 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு தங்கம் 1950 முதல் வெட்டியெடுக்கப்பட்டது. தங்கம் அழிக்க முடியாதது என்பதால் இந்த உலோகம் அனைத்தும் இன்னும் ஒரு வடிவத்தில் அல்லது இன்னொரு வடிவத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்கள், நாணயங்கள், தங்க நகைகள், தங்க பத்திரங்கள், டிஜிட்டல் தங்கம் போன்ற பல்வேறு வகைகளில் தங்க முதலீட்டுகளை செய்யலாம்.
இந்தியா மற்றும் அரபு நாடுகளில் தான் உலகிலே அதிமாக தங்க கடத்தல் செய்யப்படுகிறது.
வங்கிகளில் தங்க நகைகளை மதிப்பிடுபிடுபவரின் பெயர் “தங்க மதிப்பீட்டாளர்” (Gold Appraiser).
முடிவுரை
அவசர காலத்தில் வீட்டை உடனடியாக விற்று பணமாக மாற்ற இயலாது, பங்குகளை லாபத்தில் விற்பதை உறுதிப்படுத்த இயலாது ஆனால் இவ்வுலகில் எல்லா அவசர காலத்திலும் உதவக் கூடிய ஒரே சேமிப்பு தங்கம் (விற்பனை - அடமானம்) என்பதால் அதன் வணிக அரசியலும் ஆய்வுக்குரியதே.
விவரணைகள்
மின்னுவதெல்லாம்
தங்கத்தின் தரவுகள்
தங்கத்தின் வரலாறு
ஹால்மார்க் தங்கத்திலும் கவனம் தேவை
Hallmarking Jewellery Is Mandatory From June 2021
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment