Chocks: நிலத்துறை

Wednesday, December 30, 2020

நிலத்துறை

நிலத்துறை

சுருக்கம் 
  1. நில அளவீடு 
  2. புல எண் 
  3. வருவாய்த்துறை
  4. பதிவுத்துறை 
  5. பவர் ஆப் அட்டர்னி
  6. வில்லங்க சான்றிதழ்
  7. நில முதலீடு
  8. முடிவுரை 
  9. விவரணைகள் 
நில அளவீடு 
*1 சென்ட் என்பதன் பொருள் 1 ஏக்கரில் 1/100 அளவு.

*அக்காலத்தில் சங்கிலி தான் இடத்தின் நீளம் அகலம் அளவை கணக்கிடும் கருவியாக இருந்துள்ளது பிற்காலத்தில் தான் Tape வந்தது. 

*1 சங்கிலி = 100 கன்னி

*1 கன்னி = 20 சென்டி மீட்டர் 

*1 சங்கிலி = 100 கன்னி * 20 சென்டி மீட்டர் = 2000 சென்டி மீட்டர் = 20 மீட்டர் = 66 அடி 

*சங்கிலி கணக்கில் சதுரம் பரப்பளவு = நீளம் * அகலம் = 66 அடி நீளம் * 66 அடி அகலம் 

*66 அடி நீளம் * 66 அடி அகலம் = 4356 சதுர அடி = 10 சென்ட் 

*1 ஏக்கர் = 100 சென்ட் = 43,560 சதுர அடி 

*1 சென்ட் = 1/100 ஏக்கர் = 435.6 சதுர அடி

*1 கிரவுண்ட் = 5.5 சென்ட் = 2400 சதுர அடி (435.6 * 5.5)

*100 சென்ட் = 1 ஏக்கர் 

*2.47 ஏக்கர் = 1 ஹெக்டேர் 

சதுரம் மற்றும் செவ்வகம் நிலத்தின் அமைப்பை பொறுத்து அடி கணக்கு மாறும் ஆனால் 1 சென்ட் = 435.6 சதுர அடி என்பது மாறவே மாறாது. ஒரு சதுர நிலத்தில் ஒரு சென்ட் அளவு உத்தேசமாக 20.87 அடி * 20.87 அடி = 435.6 சதுர அடி. சதுரத்தில் நீளம் * அகலம் ஒன்றாக இருக்கும் ஆனால் இதுவே செவ்வகத்தில் மாறுப்படும்.

Heart of the City என்று சொல்லக்கூடிய முக்கியமான பகுதிகளில் நிலப் பரிவர்த்தனை சதுர அடி சார்ந்து விலை இருக்கும். சராசரி பகுதிகளில் நிலப் பரிவர்த்தனை சென்ட், கிரவுண்ட், ஏக்கர் சார்ந்து விலை இருக்கும்.

புல எண் 

நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் என்று பெயர். ஒவ்வொரு புல எண்ணிற்கும் உரிய இடத்தை மதிப்பீடு செய்து அரசாங்கம் ஒரு விலை நிர்ணயம் செய்வதன் பெயர் வழிகாட்டி மதிப்பு.

வருவாய்த்துறை

வருவாய்த் துறையில் நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு, நிலத்திற்கான வரைபட எல்லை போன்ற விவரங்கள் கிடைக்கப்பெறும்.

பட்டா = நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை பட்டா மூலம் முடிவு செய்யப்படுகின்றது. 

சிட்டா = தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. 

அடங்கல் = ஒரு கிராமத்தில் இருக்கிற பலதரப்பட்டவர்கள் வைத்துள்ள நிலங்களின் மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. 

நிலத்திற்கான வரைபட எல்லை = நிலத்தின் இடம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதை காட்டிடும் நிலத்திற்கான வரைபடம். 

அ பதிவேடு = கிராம நிர்வாக அதிகாரி வைத்திருக்கும் அந்த கிராமத்திற்குட்பட்ட நிலங்களின் பதிவேடு. அவை, 

*இடத்தின் வகை - ரயத்துவாரி (ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு நிலம்

*புல எண் / அளவை எண், உட்பிரிவு எண் 

*பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்

*நிலத்தின் பரப்பு

*பட்டா எண்

*தீர்வை

பதிவுத்துறை 

சொத்தை வாங்கும் போது அல்லது சொத்தை விற்கும் போது சொத்தின் கிரயப் பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தல் வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ் கண்ட விவரங்கள் இருக்கும்.

*சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி

*சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி

*அப்புகைப்படங்களில் சார் பதிவாளர் அதிகாரியின் கையொப்பம்

*இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி

*மொத்தம் எத்தனை பக்கங்கள் மற்றும் தாள்கள்

*பதிவு எண் மற்றும் வருடம்

*தமிழ்நாடு அரசு முத்திரை

பவர் ஆப் அட்டர்னி

ஒருவர் தனது சொத்தினை விற்பதற்கு, வாங்குவதற்கு, நிர்வகிப்பதற்கு, விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு கொடுக்கப்படுவது பவர் ஆப் அட்டர்னி அதிகாரம். பவர் எழுதி கொடுத்தவரே அதனை ரத்து செய்யும் அதிகாரமும் உள்ளது பவர் சொத்தை வாங்குவதற்கு முன்னர் முடிந்தளவுக்கு சொத்தின் உரிமையாளரை நேரடியாக அணுகி பவர் அதிகாரத்தை உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் பவர் எழுதிக்கொடுத்த சொத்தின் உரிமையாளர் உயிரோடு இருந்தால் தான் பவர் அதிகாரம் செல்லும் அவர் இறந்துவிட்டால் அந்த பவர் அதிகாரம் செல்லுபடியாகாது. 

வில்லங்க சான்றிதழ்

எந்த சொத்திலும் வில்லங்கம் இருக்கிறதா? வில்லங்கம் இல்லையா? என்பதை அறிய வில்லங்க சான்றிதழ் உதவிடும். சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர், சொத்தை எழுதி வாங்கியவர், சொத்தை பதிவு செய்யப்பட்ட ஆண்டு, சொத்தின் பதிவு எண் போன்ற விவரங்களை வில்லங்க சான்றிதழ் மூலம் அறியலாம். 

2009ஆம் ஆண்டு நவம்பரில் தான் பவர் ஆஃப் அட்டர்னியைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் முறை சட்டபூர்வமானது. அதனால் 2009க்கு முன்னர் சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் அல்லது ரத்து செய்திருந்தால் வில்லங்கச் சான்றிதழில் வராது என்பதை கவனத்தில் கொள்ளவும். அது போல சொத்து பதிவு செய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால் அதையும் கண்டுபிடிக்க முடியாது. மேலும் நாட்டில் நடக்கும் பல்வேறு நில மோசடிகளுக்கு பவர் ஆப் அட்டர்னி முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நில முதலீடு

பல்வேறு வெளிநாடுகளில் தனி நபர் சொத்து என்பது சாதாரண விடயம் மேலும் அங்கே பொருளாதார விகிதாசாரத்தின் அடிப்படையில் சொத்துக்களின் விலையும் குறைவே. ஆனால் இந்தியாவில் ஒருவருக்கு ஒரு வீடு என்ற பாலிசியை தாண்டி நில முதலீடு வணிகமாக காரணத்தால் தான் நிலத்தின் விலையும் நிலத்தில் வில்லங்கமும் இங்கே அதிகமாகி போனது.

இந்தியாவில் பரம்பரை பரம்பரையாக தேவைக்கு அதிகமாக நிலத்தில் முதலீடு செய்து சொத்து சேர்ப்பது கடமையாகி போனது ஆனால் பல கோடி மக்களுக்கு இன்றும் ஒரே ஒரு சொந்த வீடு வாங்குவது பகல் கனவாக உள்ளது காரணம் நில விலை மற்றும் வீடு கட்டுமான செலவு அவ்வளவு ஏறி இருக்கிறது. 

முடிவுரை 

மொத்தத்ததில் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக நிலத்துறை காட்சி அளித்தாலும் இந்திய நிலத்துறை UNORGANIZED தான் அதனை சீர் செய்தால் தான் எதிர்கால நிலத்துறை ஆரோக்கியமாக வலம் வர இயலும்.

விவரணைகள் 

Tamil Nadu Real Estate Regulatory Authority (TNRERA)


தமிழ்நாடு அரசின் நில உரிமை சரிபார்ப்பு சான்றிதழ்


பட்டா & புலப்படம் / சிட்டா சான்றிதழ்


அ-பதிவேடு சான்றிதழ்


South Indian Land Measurement System


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -