Chocks: மெட்ராஸ் அரசியல்

Sunday, December 13, 2020

மெட்ராஸ் அரசியல்

மெட்ராஸ் அரசியல்

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. கல்வி நிலையங்கள் 
  3. இந்திய தேசிய காங்கிரஸ்
  4. மெட்ராஸ் அரசியல் சுவடுகள் 
  5. பெரியார் வருகைக்கு பின்னர் 
  6. திராவிட சமத்துவம்
  7. பிரிவினை அரசியல் 
  8. முடிவுரை 
முகவுரை 

திராவிட அரசியலின் ஆணிவேர் மெட்ராஸ் அரசியலில் இருந்து தான் தொடங்குகிறது. மெட்ராஸ் அரசியல் என்பது சுதந்திரத்திற்கு முந்தைய கலகக்குரலாகவும், திராவிட அரசியல் என்பது சுதந்திரத்திற்கு பிந்தைய கலகக்குரலாகவும் குறிக்கப்படுகிறது.

திராவிட, தலித், தமிழ் தேசிய அரசியல் கொள்கைகள் என்பது பார்ப்பனர்களுக்கு கசப்பு மருந்தாகும் காரணம் உண்மை கசக்கும். சுருங்கச்சொன்னால், பார்ப்பனர் அல்லாதோர் அரசியலை குறிக்கின்ற மெட்ராஸ் அரசியல் என்பது "திராவிட அரசியல் + தலித் அரசியல் + தமிழ் தேசிய அரசியல்" கலவையாகும். மேலும், நீதிக்கட்சியில் தொடங்கி பேரறிஞர் அண்ணா முதல் கலைஞர் காலம் வரை திராவிட அரசியலில் "தலித் அரசியல் + தமிழ் தேசிய அரசியல்" ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஆனால், திராவிட அரசியலில் இருந்து பிய்த்து கொண்டு தனி அரசியல் ஆதாயம் பெற ஒரு சில தலித் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் காத்துக் கிடக்கின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

கல்வி நிலையங்கள் 

மெட்ராஸ் அரசியல் செயற்பட்டால் ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் பல்வேறு கல்வி நிலையங்கள் மெட்ராஸ் பிரசிடென்சியில் உருவாகின. இதில் விதிவிலக்காக ஆங்கிலேய அரசின் நிதியில்லாமல், தமிழ்நாட்டில் முதல் கல்லூரியாக பச்சையப்பா கல்லூரியை பச்சையப்பா முதலியார் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

*1835 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 

*1837 ஆம் ஆண்டில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி தொடங்கப்பட்டது.

*1840 ஆம் ஆண்டில் பிரசிடென்சி கல்லூரி தொடங்கப்பட்டது.

*1842 ஆம் ஆண்டில் பச்சையப்பா கல்லூரி தொடங்கப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ்

28 டிசம்பர் 1885 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பம்பாயில் உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரியில் தொடங்கப்பட்டது. 72 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் 22 பேர் மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்தவர்கள் என்பதன் மூலம் மெட்ராஸ் அரசியலின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பல்வேறு இயக்கங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. அவை,

*பம்பாய் பிரசிடென்சி அசோசியேஷன் (1885) 

*அலகாபாத் மக்கள் சங்கம் (1885) 

*கல்கத்தா இந்திய சங்கம் (1876) 

*மெட்ராஸ் மகாஜன சபை(1884)

*லாகூர் இந்திய சங்கம் (1877) 

*பூனா சர்வஜனிக் சபை (1870) 

மெட்ராஸ் அரசியல் சுவடுகள் 

*1817 இல் Madras Literary Society (MLS) ஜான் ஹென்றி நியூபோல்ட் என்பவரால் நிறுவப்பட்டது. 

*1830 இல் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் Royal Asiatic Society உடன் இணைந்தது MLS.

*1890 இல் MLS நூலகத்தின் புத்தகத் தொகுப்பின் பெரும்பகுதி Connemara Public Library க்கு மாற்றப்பட்டது.

*1844 இல் மெட்ராஸில் இந்தியாவிற்கு சொந்தமான முதல் செய்தித்தாள் The Crescent பத்திரிகையை தொடங்கினார் காசுலு லட்சுமிநரசு செட்டி. 

*1852 இல் தென்னிந்தியாவில் முதன்முதலாக மேற்கத்திய அரசியல் அமைப்பின் அடிச்சுவட்டில் காசுலு லட்சுமிநரசு செட்டி தலைமையில் பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதி இந்து மக்களின் இயக்கமாக Madras Native Association (MNA) ஏற்படுத்தப்பட்டது.

*MNA அமைப்பின் முக்கிய குறிக்கோள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் உயர் ஜாதி இந்து மக்களின் குறைகளையும் விருப்பங்களையும் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகும். 

*இந்து குழந்தைகளை ஐரோப்பிய மிஷனரிகள் மதமாற்றம் செய்வதாக MNA குற்றம்சாட்டியது.

*1868 இல் காசுலு லட்சுமிநரசு செட்டி மறைந்த பிறகு பார்ப்பனர் அல்லாத இந்துத்துவா அமைப்பாக செயல்பட்ட MNA அமைப்பு செயலிழந்தது.

*1852 இல் The Madras Hindu Debating Society (TMHDS)  வெங்கடராயுலு நாயுடு என்பவரால் தொடங்கப்பட்டது.

*1868 இல் Triplicane Native Literary Society (TNLS) மிர் இப்ராஹிம் அலி என்பவரால் தொடங்கப்பட்டது. 

*1878 இல் ஜி.சுப்ரமணிய ஐயர் தலைமையில் எம்.வீரராகவாச்சாரி, டி.டி.ரங்காச்சாரி, பி.வி.ரங்காச்சாரி, டி.கேசவ ராவ் பந்த், சுப்பா ராவ் பண்டுலு ஆகியோர் பங்களிப்புடன் The Hindu பத்திரிகை தொடங்கப்பட்டது.

*இந்திய வேதங்களையும் உபநிடதங்களையும் பரப்பிய Theosophical Society நியூயார்க்கில் இருந்து அடையாருக்கு 1882 இல் மாற்றப்பட்டது. 

*1882 இல் Swadesamitran பத்திரிகை இந்திய தேசிய உணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜி.சுப்ரமணிய ஐயரால் நிறுவப்பட்டது.

*1884 இல் செயலிழந்த MNA அமைப்பை புதுப்பிக்கும் விதமாக Madras Mahajana Sabha (MMS) என்னும் அமைப்பு எம்.வீரராகவாச்சாரி, ஜி.சுப்பிரமணிய ஐயர் மற்றும் பி.ஆனந்தாச்சார்லு ஆகியோரால் தொடங்கப்பட்டது.

*1884 இல் TNLS அமைப்பை Triplicane Literary Society (TLS) என்று பி.ஆனந்தச்சார்லு புதுப்பித்தார். 

*1891 இல் திராவிட மகாஜன சபை திராவிட சமூக அரசியலின் முன்னோடியாக அறியப்படும் அயோத்தி தாசர் என்பவரால் தொடங்கப்பட்டது.

*ஒடுக்கப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டி அயோத்தி தாசர் மெட்ராஸ் மகாஜன சபையுடன் வாதிட்டார்.

*மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக நான்காம் வகுப்பு வரை இலவச கல்வியும், பயன்படுத்தப்படாத நிலங்களை ஒதுக்கவும் கோரி ஆங்கிலேயர்களுடன் வாதிட்டார் அயோத்தி தாசர்.

*1891 இல் பறையர் மகாஜன சபை (1892 இல் ஆதிதிராவிட மகாஜன சபை என்றானது) இரட்டைமலை சீனிவாசன் என்பவரால் தொடங்கப்பட்டது.

*1930 - 1932 காலகட்டத்தில் அம்பேத்கருடன் லண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று  ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக சிறப்புற செயல்பட்டார் இரட்டைமலை சீனிவாசன்.

*1912 இல் மெட்ராஸ் யுனைடெட் லீக் (1914 இல் மெட்ராஸ் திராவிடர் சங்கம் என்றானது) இயக்கத்தை திராவிட அதிகார அரசியலின் முன்னோடியாக அறியப்படும் டாக்டர் சி.நடேசன் என்பவரால் தொடங்கப்பட்டது.

*1916 இல் மெட்ராஸ் விக்டோரியா மெமோரியல் ஹாலில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) சி.நடேசன், டி.எம்.நாயர் மற்றும் பி.தியாகராயர் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது. 

*அயோத்தி தாசர் நடத்திய பத்திரிகை திராவிட பாண்டியன் / ஒரு பைசா தமிழன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பத்திரிகை பறையன், நீதிக்கட்சி நடத்திய பத்திரிகை ஜஸ்டிஸ் ஆகும்.

பெரியார் வருகைக்கு பின்னர் 

*1924 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் ஊரில் சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை கீழ் சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தீண்டாமை உத்தரவுக்கு எதிராக வைக்கம் போராட்டம் நடைபெற்றது.

*வைக்கம் போராட்டத்தில் பெரியார், மாதவன், கேசவமேனோன், சகோதரன் ஐயப்பன், நாராயண குரு மற்றும் பல்வேறு சமூக நீதி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

*1924 இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியார் தன் பொறுப்புகளை ராஜாஜிடம் கொடுத்துவிட்டு இப்போராட்டத்தில் களப்பணி ஆற்றினார்.

*வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சாதிய பாகுபாடுகளை ஊக்குவிப்பதை வருந்தி அக்கட்சியில் இருந்து விலகி 1925 இல் சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார். 

*பெரியார் தாம் நடத்திய குடிஅரசு பத்திரிகையில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வளரும் நீதிக்கட்சி செயல்பாடுகள் குறித்து பாராட்டி எழுதி வந்தார்.

*நாளடைவில் நீதிக்கட்சியானது பெரியாரின் சமூக நீதி திட்டங்களையும், பெரியாரின் தலைமையையும், சுய மரியாதை கொள்கைகளையும் ஏற்று கொண்டது .

*1944 இல் நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தி கொண்டு சமூக சீர்திருத்தங்களில் தொடர்ந்து ஈடுபட்டது.

*1949 இல் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இருந்து விலகி ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார் அண்ணா.

*1957 முதல் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்ட தொடங்கியது தி.மு.கழகம். 

*1961 இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி ஈ.வெ.கி. சம்பத் தமிழ் தேசியக் கட்சிவை தொடங்கினார். 

*1972 இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.கவை தொடங்கினார்.

*1994 இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி வைகோ ம.திமு.கவை தொடங்கினார். 

*மேலும் திராவிடம் சார்ந்து பல்வேறு இயக்கங்கள் தமிழ்நாட்டில் தோன்றின. 

திராவிட சமத்துவம்

மக்களை படிக்க, சிந்திக்க, எழுத செய்து சமுதாயத்தின் தலைகீழாக்கத்தை நேர் செய்தது திராவிட இயக்கம். இன்னும் சொல்லப்போனால் பேரரசுகள் வீழ்ந்து ஜனநாயகம் பிறந்த பிறகும் பார்ப்பனியம் பாதை மாறாமல் ஏற்ற தாழ்வை உறுதி செய்து கொண்டிருந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ஏற்றத்தாழ்வை எதிர்த்து வீறு கொண்டு கிளம்பிய இயக்கம் திராவிட இயக்கமாகும்.

பெரியார் காட்டிய பாதையில், பேரறிஞர் அண்ணா சென்ற வழியில், கலைஞர் கொண்ட கொள்கையில் ஈடுபாடு கொண்டு இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் எண்ணற்ற தோழர்கள் திராவிட அரசியலை முன்னெடுத்து செல்வது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தேர்தல்களில் வென்று அரசியல் அதிகாரங்கள் கிடைத்த போதெல்லாம் தி.மு.க பார்ப்பனிய கொள்கைகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக சமூகத்திற்கு தேவையான பல திட்டங்களையும் கொண்டு வந்து சேர்த்தது. தேர்தல் அரசியலில் வென்று பெரியாரின் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்து சாத்தியம் ஆக்கியவர் அண்ணா. குறிப்பாக சுயமரியாதை திருமணம், கைம்பெண் மறுமணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, கோவிலில் தமிழ் ஆகமங்கள் ஒலிப்பது, கோவில் நிலங்களை மற்றும் கோவில் சொத்துக்களை பராம்பரிக்க இந்து அறநிலையத்துறை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை, சமசீர் பாடத்திட்டம், அறிவியல் வளர்ச்சி, நில உச்சவரம்பு சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை, மருத்துவ காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளி நலவாரியம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சமூகநல திட்டங்கள் திராவிட அரசியல் வாயிலாக தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. திராவிட அரசியலின் திட்டங்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிவினை அரசியல் 

*வலதுசாரி அரசியல் = பார்ப்பனீயம் = மனு நீதி = பார்ப்பனிய சமூகத்தை பேணுகிறது.

*திராவிட அரசியல் = சமத்துவம் = சமூக நீதி = அனைத்து சமூகத்தை பேணுகிறது.

சில தலைவர்கள் திராவிட அரசியல் மன்றத்தில் இருந்து தலித் அரசியலையும் தமிழ்தேசிய அரசியலையும் பிரிக்க முயற்சிக்கின்றனர். தலித் அரசியலும் தமிழ்தேசிய அரசியலும் திராவிட அரசியல் மன்றத்தில் இருந்து பிரிக்கப்பட்டால் அது கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளில் பிரிவினைவாதமாக செயல்படும்.

*தலித் அரசியல் = தலித்தியம் = தலித் நீதி = தலித்திய சமூகத்தை பேணுகிறது. 

*தமிழ் தேசிய அரசியல் = இடைநிலை சாதியம் = சாதிய நீதி = சாதிய பிரிவினைகளை பேணுகிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான சமூக நீதியில் "தலித் விடுதலை + தாய் மொழி" முக்கியத்துவம் இருக்கும் போது "திராவிட அரசியல்" மீது சேற்றை வாரி இறைத்து "தலித் + தமிழ் தேசிய" பிரிவினை அரசியல் பேசுவது நாகரிகமற்ற செயல் ஆகும். திராவிடம் மீது பழியை சுமத்தி தலித்தியம் பேசும் தலைவர்கள் தலித்திய மக்களை ஓட்டுகளாக பார்ப்பதும், தமிழ் தேசியம் பேசும் தலைவர்கள் இடைநிலை சாதிகளை ஆண்டைகளாக பார்ப்பதும் கவனிக்க வேண்டிய நுண்ணரசியலாகும்.

முதலாளித்துவ பார்வையுடன் பார்ப்பனியம் பேணும் பார்ப்பனிய அதிகாரம் கைமாறி இடதுசாரிய பார்வையுடன் சமத்துவம் பேணும் திராவிட அதிகாரம் மலருவது இன்றைய காலத்தின் தேவை. இங்கே திராவிடம் பேணும் சமத்துவம் விடுபட்டு, தலித்தியம் அல்லது தமிழ் தேசியம் மட்டுமே முன்னெடுக்கப்பட்டால் அவை பார்ப்பனிய முறையிலான ஆட்சிக்கே வித்திடும். ஏனெனில், ஒற்றை பார்வையுடன் தலித்தியமயமாக்கல் மற்றும் தமிழ் தேசியமயமாக்கல் கோருவது என்பது சமத்துவத்தை மறுக்கும் அதிகார அரசியல் ஆகும். சுருங்கச்சொன்னால், திராவிடம் கோரும் அதிகார இலக்கு என்பது சமத்துவம் ஆனால் தலித்தியம் மற்றும் தமிழ் தேசியம் கோரும் அதிகார இலக்கு என்பது பார்ப்பனிய முதலாளித்துவம் ஆகும்.

திராவிடம் தவிர்த்து தலித்தியம் மற்றும் தமிழ் தேசியம் மட்டுமே பேசுபவர்கள் "திராவிட வரலாறு" குறித்து படித்தறிந்து தங்களை மெருகேற்றி கொண்டு திராவிட பாதையில் பயணிக்க வேண்டும். தலித் அரசியல் பேசிய சத்யவாணி முத்து தேர்ந்தெடுத்தது திராவிட அரசியல் பாதையே, தமிழ் தேசிய அரசியல் பேசிய ம.பொ.சி இறுதியில் தேர்ந்தெடுத்தது திராவிட அரசியல் பாதையே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முடிவுரை 

உலகம் முழுவதும் கட்சிக்கும் ஆட்சிக்கும் "உச்ச அதிகாரம்" பெறப்போவது "ஒற்றை நபர்" தானே? அதிலென்ன கொள்கை வேறுபாடு இருந்துவிட போகிறது என்று சிலர் கேட்கலாம். ஆம், தலைமைக்கு ஒற்றை நபர் தான் ஆனால் முதலாளித்துவ பாசிச கொள்கை கொண்டு செயல்படும் ஒற்றை நபருக்கு பதிலாக இடதுசாரிய சமத்துவ கொள்கை கொண்டு செயல்படும் ஒற்றை நபர் தான் தேவை.

வாசித்தும் பேசியும் எழுதியும் வளர்ந்த அரசியல் களம் மெட்ராஸ் அரசியல் களம். அதற்கேற்ப திராவிடர்கள் யார்? ஆரியர்கள் யார்? என்பதை மக்கள் அறிய முற்பட வேண்டும். அப்படி அறிந்தால் தான் பிரிந்து நிற்கும் தலித் மற்றும் தமிழ் தேசியவாதிகள் திராவிட அரசியல் இழையில் இணைய இயலும். பார்ப்பன கொள்கையை கடைபிடிக்காத பார்ப்பனர்களும் நம்முடன் இணையலாம். 

ஆங்காங்கே குறைகள் இருப்பினும் "திராவிடம் + தலித்தியம் + தமிழ் தேசியம்" ஒரே கலவையாக வருங்காலத்தில் ஒன்றிணைய வேண்டும் இல்லையேல் வலதுசாரி இயக்கம் வளர நம் பிரிவினைகளே (Divide & Rule) காரணமாக அமைந்திடும். 

# Democratism > Totalitarianism 

# Communism > Capitalism

# Dravidianism > Aryanism

விவரணைகள் 

Madras Politician Gazulu Lakshminarasu Chetty


Madras Organisations and Conference



Theosophy and Origins of Indian National Congress


திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன்


நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த கதை


Political Backdrop of Tamil Nadu


Why Dravidian History Month should be observed?


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...