ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் வரலாறு
சுருக்கம்
- முகவுரை
- பேரரசுகள்
- ஐரோப்பியர்களின் மூளை
- ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின் கதை
- அமெரிக்க உள்நாட்டு போர்
- அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கம்
- முடிவுரை
முகவுரை
உலகின் தொன்மையான சமூகங்கள் அனைத்திலுமே கட்டாய வேலை வாங்கும் கொடுமையான அடிமை முறை நடைமுறையில் இருந்துள்ளது ஆனால் ஐரோப்பியர்களே அடிமை முறையை பொருளாதார உற்பத்தி முறையாக மாற்றினார்கள். அக்காலத்தில் உயிர் போகும் வரை பல்வேறு விதமான கட்டாய வேலைகளில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கூலி தரப்படாத வேலை பயனாளருக்கு பொருளாதாரப் லாபம் என்ற முதலாளித்துவ கணக்கும் பொருளாதாரத்தில் தனக்கு கீழே வாழும் இல்லாதவர்களை வேலை வாங்க ஆதிக்கம் செலுத்த விரும்பும் மேட்டுக்குடி மக்களின் பேராசையே அக்காலத்தில் அடிமை முறை கொடி கட்டிப் பறக்க காரணமாயிற்று.
பேரரசுகள்
பழங்கால எகிப்தியத்தில் அடிமை முறை அதிகளவில் இருந்தது. அடிமை யூதர்கள் கட்டியதே உலகப்புகழ் பெற்ற எகிப்திய பிரமிடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. போர்களில் தோற்ற படைவீரர்களை, வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கியவர்களை எகிப்திய பேரரசு அடிமைப்படுத்தியது. எகிப்திய பேரரசர் பாரோ அடிமைகளை தனது அந்தரங்க தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வார் அல்லது தனக்கு வேண்டியவர்களுக்கு குறிப்பாக தன்னை புகழும் கவிஞர்களுக்கு பரிசளித்து மகிழ்வார். இப்படி உலகில் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகள் 2500 வருடகாலம் நீடித்ததாக சான்றுகள் உள்ளன.
ஐரோப்பியர்களின் மூளை
அக்காலத்தில் கடல் வழி பயணங்களை மேற்கொண்ட பல்வேறு நாட்டினருக்கும் அந்நிய நாட்டின் செல்வங்களை கைப்பற்றி சொந்த நாட்டிற்கு திரும்புவதே இலக்காக இருந்துள்ளது ஆனால் ஐரோப்பியர்களுக்கு கடல் வழி பயணமாகி வளமுள்ள நாட்டையே வெற்றி கொள்வது இலக்காக இருந்துள்ளது.
அவ்வகையில் அறிமுகமில்லாத நாட்டிற்கு சென்று செல்வங்களை கைப்பற்றி சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு பதிலாக செல்வங்கள் இருக்கும் நாட்டையே ஆக்கிரமிப்பு செய்து அந்தந்த நாட்டின் பூர்விகவாசிகளை அழித்தொழிப்பது அல்லது அடிமைகளாக மாற்றுவது என களம் கண்ட புதிய நாட்டை வளைத்து நவீன உலகில் அடிமை முறைக்கு வித்திட்டது ஐரோப்பியர்களின் மூளை.
ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின் கதை
ஆப்பிரிக்க வரலாறும் அமெரிக்க வரலாறும் அடிமை முறையில் இருந்து தான் ஆரம்பமானது. பிரித்தானிய ஆட்சியின் கீழ் அடிமையாக கட்டுண்டு கிடந்த அமெரிக்கா அடிமைச்சங்கிலியில் இருந்து விடுதலை கோரி 1776 ஆம் ஆண்டு சுதந்திர நாடாக தன்னை அறிவித்து கொண்டது. அதன் பின்னர் அமெரிக்கா சுதந்திர நாடாக அறியப்பட்டாலும் அந்நாடு பிற அடிமை நாடுகளின் விடுதலைக்கு குரல் கொடுக்கவில்லை மாறாக அடிமை முறையை பேணிக் காத்து வளர்த்து வந்தது. அவ்வகையில் ஒரு காலத்தில் சுரங் வேலை, விவசாய வேலை, வீட்டு வேலை, இயந்திர தொழில் வேலை, கட்டுமான வேலை, அந்தரங்க வேலை என்று பல்வேறு வேலைகளுக்கு அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் கொடி கட்டிப் பறந்தது. ஆப்பிரிக்க அடிமைகளை அமெரிக்கர்களுக்கு விற்று பிரித்தானியர்கள் கொள்ளை லாபம் ஈட்டினர். 1800கள் காலகட்டத்தில் அமெரிக்காவில் சுமார் 30 லட்சம் ஆப்பிரிக்க அடிமைகள் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்று பல்வேறு வளங்கள் சொந்த மண்ணில் இல்லாமலும் அமெரிக்கா அடிமைத்தளத்தில் இருந்து மீண்டு உலகை ஆளும் வல்லரசு நாடாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் பல்வேறு வளங்கள் சொந்த மண்ணில் இருந்தும் ஆப்பிரிக்கா உள்நாட்டு பிரிவினை குழப்பங்களால் உலகிலே மோசமான நாடாக பின்தங்கி நிற்கிறது. இன்று ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு விற்கப்பட்ட அல்லது கடத்தப்பட்ட ஆப்பிரிக்க சந்ததியினரே இன்றைய நவீன அமெரிக்காவில் "ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள்" (நீக்ரோக்கள் - கறுப்பினத்தவர்கள்) என்று அழைக்கப்படலாயினர்.
அமெரிக்க உள்நாட்டு போர்
ஆப்பிரிக்க மக்களை அடிமைத்தளத்தில் இருந்து விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்ற போது தென் மாநில அமெரிக்கர்கள் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைக் கருதி ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென் மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர் (Confederate States of America). இவ்வாறு ஒன்றிய அரசியலுக்கும் மாநில அரசியலுக்கும் இடையில் உரசல் உலவியதை தொடர்ந்து 1861 ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது. உள்நாட்டுப் போரில் தென் மாநிலங்களை ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தலைமையில் அமைந்த வட மாநிலங்கள் வெற்றிக் கொண்டது.
1 ஜனவரி 1863 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மக்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் விடுதலைப் பிரகடனத்தை (Emancipation Proclamation) ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வெளியிட்டார். மேலும் புனரமைப்பு திட்டங்களையும் (Reconstruction Era) வலியுறுத்தினார். புனரமைப்பு நடவடிக்கை மூலம் 11 தென் மாநில கூட்டமைப்பு எழுப்பிய பிரிவினை எச்சங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டது. அதோடு அடிமை முறையை ஒழித்து விடுவிக்கப்பட்ட அடிமைகளை அமெரிக்க குடிமக்களாக மாற்றியது. 31 ஜனவரி 1865 ஆம் ஆண்டு காங்கிரஸ் 13வது திருத்தத்தை (அடிமை முறை ஒழிப்பு சட்டம்) நிறைவேற்றியது. 6 டிசம்பர் 1865 ஆம் ஆண்டு பல்வேறு மாநிலங்களால் அச்சட்டம் அங்கீகரிக்கப்பட்டு அமெரிக்க அடிமை முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கம்
அமெரிக்காவில் சட்டபூர்வமாக ஆப்பிரிக்கர்கள் அடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் வெள்ளை இனவெறி மக்கள் ஆப்பிரிக்கர்கள் சுதந்திரமாக வாழ விரும்பவில்லை. உதாரணமாக மாண்ட்கோமெரி நகர கட்டளைப்படி ஆப்பிரிக்கர்கள் பேருந்துகளின் பின்புற இருக்கைகளில் அமர வேண்டியிருந்தது. மேலும் பேருந்தின் முன்புற இருக்கைகள் நிரம்பினால் பின்புற இருக்கைகளை வெள்ளையர்களுக்கு விட்டுக்கொடுக்க ஆப்பிரிக்கர்கள் ஆணையிடப்பட்டனர். 1 டிசம்பர் 1955 ஆம் ஆண்டு பேருந்தில் பின்புற இருக்கையின் முதல் வரிசையில் ஆப்பிரிக்கர் ரோசா பார்க்ஸ் அமர்ந்திருந்த போது வெள்ளையின ஓட்டுநர் அவரது இருக்கையை வெள்ளையருக்கு விட்டுக் கொடுக்குமாறு கோரிய போது ரோசா பார்க்ஸ் இருக்கையில் இருந்து எழ மறுப்பு தெரிவித்தார். அந்த காரணத்தால் அவர் உடனே கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து “மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்பு” என்று போக்குவரத்து அமைப்பில் உலவிய இனப்பிரிவினைக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அரசியல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ரோசா பார்க்ஸ் கைது நிகழ்வு அமெரிக்காவில் இனப் பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தது.
மார்ட்டின் லூதர் கிங் மற்றும் அவரது நண்பர்களின் தொடர் போராட்டங்களால் ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கு எதிராக 1965 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் ஆப்பிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார். நாளடைவில் ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கு என தனியாக இயங்கி வந்த பள்ளிகள், கோவில்கள், கடைகள் எல்லாம் படிப்படியாக மறைந்து கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகும் அளவிற்கு கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.
முடிவுரை
ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் நல்வாழ்வு இன்று மேம்பட்டு இருப்பினும் 25 மே 2020 ஆம் ஆண்டு கழுத்து நெரிபட்டு மனித விரோதக் கொலையில் பலியான ஜார்ஜ் பிளாய்ட் அவர்களை மறக்க முடியுமா? அவ்வகையில் "வெள்ளையர் - கறுப்பினத்தவர்" போர் முழுமையாக முடியவில்லை ஆனால் உலக மக்களிடம் "வெள்ளையர் - கறுப்பினத்தவர்" இடைவெளி குறித்த புரிதல் ஏற்பட்டு இருக்கிறது இல்லையேல் "ஜார்ஜ் பிளாய்ட்" குறித்த சோகக் கதை இவ்வளவு தூரம் உலக மக்களை சென்றடைந்து இருக்க வாய்ப்பில்லை. வருங்காலத்தில் என்றாவது ஒரு நாள் கறுப்பின மக்களின் முழுமையான விடுதலை கிட்டும் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.
விவரணைகள்
I Have A Dream - Martin Luther King
Reconstruction Era
13th Amendment For Abolishing Slavery
Emancipation Proclamation
A Timeline Of American History
History Of Slavery
10 Important Case Judgements In American History
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment