Chocks: இந்திய குடியரசு தின வரலாறு

Tuesday, February 2, 2021

இந்திய குடியரசு தின வரலாறு

இந்திய குடியரசு தின வரலாறு

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. 1921 அகமதாபாத் மாநாடு
  3. நிலைப்பாடு மாறிய காங்கிரஸ்
  4. 1929 லாகூர் மாநாடு
  5. இந்திய அரசியலமைப்பு சட்டம்
  6. குடியரசாக இந்தியா
  7. முடிவுரை 
1921 அகமதாபாத் மாநாடு

1921 டிசம்பர் 27-28 ஆம் தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் "ஆங்கிலேய அரசின் பொருளாதார சுரண்டலில் இருந்து இந்தியா விடுபட முழு சுதந்திரம் தான் ஒரே தீர்வு" என்ற தீர்மானத்தை முதன் முதலாக காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஹஜ்ரத் மொஹானி முன் வைத்தார். அவரது கருத்தை ஆதரித்து குரல் கொடுத்தவர் சுவாமி குமரனந்த் ஆவார். ஆனால் மேலாட்சி கருத்தை வலியுறுத்தி வந்த காந்தியின் ஆதரவு கிட்டாததால் ஹஜ்ரத் மொஹானியின் சுதந்திரம் குறித்த தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்படாமல் போனது.

நிலைப்பாடு மாறிய காங்கிரஸ்

தொடக்கத்தில் ஆங்கிலேய அரசிடம் மேலாட்சி (பிரிட்டிஷ் மன்னர் ஆட்சியின் கீழ் ஒரு சுயராஜ்ய தேசம்) உரிமையை காங்கிரஸ் தலைவர்கள் கேட்டு வந்தாலும் பின்னர் ஆங்கிலேய அரசின் ஒற்றை அம்ச அணுகுமுறை அவர்களை முழு சுதந்திரம் என்ற இலக்கை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சுதந்திரம் கேட்டு போராட தொடங்கிய காங்கிரஸ் தலைமையின் முடிவு பெரிய அளவிலான நாடு தழுவிய இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்றால் மிகையல்ல.

1928 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து ஆலோசிப்பதற்கு பிரிட்டிஷ் உறுப்பினர்களை மட்டும் உள்ளடக்கிய சைமன் கமிஷன் ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்டது. இந்திய உறுப்பினர்கள் எவரையும் சேர்க்காத சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற அமைதி பேரணிக்கு தலைமை தாங்கிய லாலா லஜபதி ராய் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஆங்கிலேய அரசு கொடூரமான அடக்குமுறையை கையாண்டது. காவல்துறை நடத்திய தடியடியின் போது கடுமையான காயங்களுக்கு ஆளான சில வாரங்களுக்குப் பிறகு லாலா லஜபதி ராய் காலமானது காங்கிரஸ் தலைவர்களை கோபப்படுத்தியது.

சைமன் கமிஷன் மீதான அதிருப்திக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்களை திருப்திப்படும் முயற்சியில் வைஸ்ராய் லார்ட் இர்வின் 1929 அக்டோபரில் குறிப்பிடப்படாத எதிர்காலத்தில் இந்தியாவிற்கு மேலாட்சி உரிமையை வழங்குவதாக தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டார். மேலாட்சி உரிமை பற்றிய ஆங்கிலேய அரசின் தெளிவற்ற சலுகை ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்ற காங்கிரஸ் தலைவர்களை திருப்திப்படுத்தவில்லை. அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முழு சுதந்திரத்தை இலக்காகக் கொண்டு போராட்டத்தைத் தொடங்கியது. மேலும் சுதந்திரம் கோரி காங்கிரஸ் முன்னெடுத்த அதிரடி செயல்திட்ட தாக்கத்துடன் காந்தி தண்டி அணிவகுப்பின் மூலம் கீழ்ப்படியாமையின் தொடக்கப் படிகளைத் தொடங்கினார்.

1929 லாகூர் மாநாடு

1929 டிசம்பர் 19 ஆம் தேதியன்று லாகூரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு மேலாட்சிக்கு பதிலாக முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் தலைவராக நேரு "எங்களுக்கு முன்னால் ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது அது முழு சுதந்திரம்" என்று குறிப்பிட்டார். இனி வரும் காலங்களில் காங்கிரஸ் இயக்கத்தினர் முழு சுதந்திரத்திற்காக போராட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சுதந்திரம் குறித்து காங்கிரஸ் முன்மொழிந்த தீர்மானம் மீது ஆங்கிலேய அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. அதை தொடர்ந்து ஆங்கிலேய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 1929 டிசம்பர் 31 ஆம் தேதியன்று சுதந்திரத்தை வலியுறுத்தி காங்கிரஸார் முன்னிலையில் லாகூரில் உள்ள ராவி நதிக்கரையில் ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கையா வடிவமைத்த இந்திய மூவர்ண கொடியை நள்ளிரவில் ஏராளமான மக்கள் முன்னிலையில் முதன் முறையாக நேரு ஏற்றினார்.

மேலும் 1930 ஜனவரி 26 ஆம் தேதியை சுதந்திர தினமாகக் கடைப்பிடிக்குமாறு காங்கிரஸ் பொதுமக்களை கேட்டுக் கொண்டது. இது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியன்று சுதந்திர தினமாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இந்தியா சுதந்திரம் அடையும் வரை காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் இந்திய தேசியக் கொடியை இந்தியா முழுவதும் பொதுவெளியில் ஏற்றி ஜனவரி 26 ஆம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடினர்.
இந்திய அரசியலமைப்பு சட்டம்

1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இந்தியா சுதந்திரம் பெற்றாலும் ஆங்கிலேய அரசு இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டம் (Government of India Act, 1935) தான் 1950 வரை நடைமுறையில் இருந்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு சுயமாக நாட்டை தலைமை தாங்கி வழி நடத்த இந்தியாவுக்கு புதிய அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. இதை தொடர்ந்து 1947 ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று இந்தியாவிற்கான அரசியலமைப்பை தயாரிப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஒரு வரைவுக் குழுவை இந்திய அரசியலமைப்பு சபை அமைத்தது. 

தற்போது வரையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 105 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் ~1,17,369 (English Version) சொற்கள் உள்ளன. இதுவரை உலகில் எழுதப்பட்ட மிக நீண்ட அரசியலமைப்பு சட்டமான இந்திய அரசியலமைப்பு சட்டம் "இந்திய அரசுக்கும் இந்திய குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள், நடைமுறைகள், அதிகாரங்கள், கடமைகள்" உட்பட அனைத்தையும் விவரிக்கிறது. எடுத்துக்காட்டாக ரிசர்வ் வங்கி, கூட்டாட்சி, பொதுவுடைமை, மதசார்பின்மை, நீதிமன்ற அமைப்பு, மக்களாட்சி, மாகாண சுயாட்சி, அடிப்படை உரிமைகள் உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது இந்திய அரசியலமைப்பு சட்டமாகும்.
குடியரசாக இந்தியா

1949 நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்பு சபை இந்தியாவின் உச்ச சட்டமாக டாக்டர் அம்பேத்கர் தயாரித்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டது. ​​குடியரசுக்கு அடிப்படையாக விளங்கும் இந்திய அரசியலமைப்பு ஆவணத்தை தேசிய பெருமைமிகு நாளில் நினைவுகூருவது பொருத்தமானது என்று பலர் நினைத்தனர். 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று லாகூர் மாநாட்டில் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை முதல் முதலில் காங்கிரஸ் வலியுறுத்தியது. அதே தேதியை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் குடியரசு தினத்தை ஜனவரி 26 ஆம் தேதியன்று கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டது.

1950 அன்று முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி ஜனவரி 26 ஆம் தேதியன்று காலை 10:18 மணிக்கு இந்தியாவை இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவித்தார். புதிய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் உலகில் சுய ராஜ்யம் கொண்ட மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா மாறியது. 

முடிவுரை 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நாட்டின் பாதுகாப்பு திறன், கலாச்சாரம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றுகிறது. ஆனால் தற்போது சமூக நல்லிணக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஒன்றிய அரசை நிர்வகிக்கும் பா.ஜ.க கட்சி பாரம்பரியமிக்க குடியரசு தின அணிவகுப்பில் காவி மயத்தை இந்தியாவின் ஒற்றை முகமாக திணிப்பது வேதனைக்குரியது.

விவரணைகள்

Indian Republic Day History


Making of the Tricolor


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...