Chocks: எரிபொருள் அரசியல் முன்னெடுப்பு

Monday, March 1, 2021

எரிபொருள் அரசியல் முன்னெடுப்பு

எரிபொருள் அரசியல் முன்னெடுப்பு

சுருக்கம் 
  1. பெட்ரோலியம்
  2. முகவுரை
  3. குஜராத் அரசு
  4. ராஜஸ்தான் அரசு 
  5. சிறப்பு பொருளாதார மண்டலம்
  6. ஏற்றுமதி - இறக்குமதி
  7. இந்திய எண்ணெய் விலை செயல்முறை
  8. எரிபொருள் வரி சூட்சுமம்
  9. மாநில அரசுகளுக்கு மாற்று வழிகள்
  10. தங்கம் - எண்ணெய் அரசியல்
  11. இந்திய எண்ணெய் நிறுவனங்கள்
  12. எண்ணெய் ஒரு முக்கிய சாவி 
  13. சிக்கல்கள்
  14. முடிவுரை 
  15. கண்ணோட்டம் 
  16. விவரணைகள் 
பெட்ரோலியம்

லத்தீன் மொழியில் பெட்ரோலியம் என்றால் "பாறைக்குள் இருக்கும் எண்ணெய்" (பெட்ரா = பாறை / ஓலியம் = எண்ணெய்). இறந்த நுண்ணுயிர்கள் கடலின் அடிவாரத்திலோ கடலின் மணல் பகுதியிலோ புதைந்து விடுகின்றன. பூமியின் வெப்பம் (Heat), அழுத்தம் (Pressure), சிதைவு (Decompose) போன்ற செயல்பாடுகளால் பல்லாயிரம் ஆண்டுகள் செல்ல செல்ல இறந்த உயிரினங்கள் எண்ணெய் போன்ற திரவமாகி விடுகிறது. அதுவே பெட்ரோலியம் (கச்சா எண்ணெய்) எனப்படுகிறது. கச்சா எண்ணெய் (Crude Oil) சுத்திகரிப்பு மூலம் பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள், பெட்ரோ கெமிக்கல், மெழு போன்ற பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது.
முகவுரை

வளைகுடா நாட்டில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து ஒன்றிய அரசு எண்ணெய் பெருநிறுவனங்களின் துணையுடன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து கலால் வரியை விதித்து மாநிலங்களுக்கு எரிபொருளை வழங்கி வருகிறது. இதற்கு மாநில அரசு மாநிலத்துக்குரிய வரியை விதித்து மக்களுக்கு எரிபொருளை வழங்கி வருகிறது. 

இந்நிலையை தவிர்க்க வேண்டி மாநில அரசுகள் நேரடியாக சுத்திகரிப்பு செய்த எண்ணெய்யை இறக்குமதி செய்து விநியோகித்தால் மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க இயலும். எடுத்துக்காட்டாக Tamil Nadu Petroleum Corporation (TNPC) என்ற அரசு நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி சுத்திகரிப்பு செய்த எண்ணெய்யை இறக்குமதி செய்து மக்களுக்கு இன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோலை 50-55 ரூபாய்க்கு விநியோகம் செய்ய இயலும்.

கல்வி பட்டியலை ஒன்றிய அரசு பட்டியலிலிருந்து நீக்கி மாநில அரசு பட்டியலில் இணைக்க கோருவது போல எரிபொருள் சேவையை சுயாதீனமாக பூர்த்தி செய்து கொள்ள மாநில எரிபொருள் நிறுவனத்தை இந்திய நிறுமங்கள் சட்டம், 1956 (Companies Act, 1956) மூலம் தொடங்க இயலும் என்பதை மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும்.
குஜராத் அரசு

இதுவரையில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டுமே மாநில அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. 1979 இல் குஜராத் முதல்வர் பாபுபாய் ஜே. படேல் தலைமையில் இந்திய நிறுமங்கள் சட்டம், 1956 (Companies Act, 1956) மூலம் குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (Gujarat State Petroleum Corporation Limited) தொடங்கப்பட்டது. 

1977-1980 குஜராத் முதல்வர் பாபுபாய் ஜே. படேல் ஜனதா கட்சியை சேர்ந்தவர். 1977-1979 இந்திய பிரதமர் மொராஜி தேசாய் (குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்) மற்றும் 1979-1980 இந்திய பிரதமர் சரண் சிங் ஆகியோர் ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அரசு 

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் ராஜஸ்தான் அரசு இணைந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் 2013 இல் பார்மர் சுத்திகரிப்பு (Barmer Refinery) நிலையம் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது. 2018 இல் பிரதமர் நரேந்திர மோடி இந்நிலையத்திற்கான கட்டுமான வேலைகளை தொடங்கி வைத்தார். செயல்முறைக்கு வந்த பிறகு பார்மர் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவுக்கான இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு நிலையமாக செயல்படும்.
சிறப்பு பொருளாதார மண்டலம்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் The Special Economic Zone Act, 2005 சட்டத்தின் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ((Special Economic Zones) உருவாக்கப்பட்டது. இதன்கீழ் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு எளிமையான வரி மற்றும் எளிதான சட்ட இணக்கங்கள் ஒன்றிய அரசால் செய்து தரப்படுகின்றன.

குஜராத் மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டல சலுகையை பயன்படுத்தி தனியார் பெருநிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஜாம்நகரில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறதுஇதுவே உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையமாகும். ரிலையன்ஸ் நிறுவனம் இந்த வரிச்சலுகையை அனுபவித்து சுத்திகரிப்பு செய்யப்பட்ட எரிபொருளை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 
ஏற்றுமதி - இறக்குமதி

இந்தியாவுக்கு வெளியே பொருட்கள் அல்லது சேவைகளை எடுத்துச் செல்வது ஏற்றுமதி (Export) ஆகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இடத்திலிருந்து பொருட்கள் அல்லது சேவைகளை கொண்டு வருதல் இறக்குமதி (Import) ஆகும். பெரும்பாலும் கடல்வழி துறைமுகம், வான்வழி விமானம், தரைவழி கனரக வாகனம் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயல்பாடுகள் நடைபெறுகின்றன. சிறப்பு பொருளாதார மண்டல பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயல்பாடுகளுக்கு வரிச்சலுகை உண்டு.
இந்திய எண்ணெய் விலை செயல்முறை

Retail Price ⏬

Crude Oil Price + Refinery Price + Excise Tax + Dealer Commission + State Tax
2016 தரவுப்படி ஒன்றிய அரசு 96% கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பல்வேறு வகையான எரிபொருட்களாக சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. 

எரிபொருள் விலை நிர்ணயத்திற்கு உத்தேச எடுத்துக்காட்டு,

# ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் = 28 ரூபாய்

# பெட்ரோல் சுத்திகரிப்பு செலவு = 4 ரூபாய்

# ஒரு லிட்டர் சுத்திகரிப்பட்ட பெட்ரோல் = 28 + 4 = 32 ரூபாய்

# கலால் வரி (ஒன்றிய அரசு) = 33 ரூபாய்

# டீலர் கமிஷன் (விற்பனையாளர்) = 3.7 ரூபாய்

# மாநில வரி (மாநில அரசு) = 15% + 13 ரூபாய்

என்று எல்லாம் சேர்த்து சில்லறை விலையாக 92 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது.

# ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் = 28 ரூபாய்

# டீசல் சுத்திகரிப்பு செலவு = 5 ரூபாய்

# ஒரு லிட்டர் சுத்திகரிப்பட்ட டீசல் = 28 + 5 = 33 ரூபாய்

# கலால் வரி (ஒன்றிய அரசு) = 32 ரூபாய்

# டீலர் கமிஷன் (விற்பனையாளர்) = 2.5 ரூபாய்

# மாநில வரி (மாநில அரசு) = 11% + 9 ரூபாய்

என்று எல்லாம் சேர்த்து சில்லறை விலையாக 84 ரூபாய்க்கு டீசல் விற்கப்படுகிறது.

எரிபொருளுக்கான கலால் வரியை வணிக நிறுவனங்கள் செலுத்திவிட பின்னர் கலால் வரி செலவை உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருளுடன் சேர்த்து அதிகமான விலையில் நுகர்வோருக்கு விற்கிறார்கள். இதற்கிடையில், 2021 பட்ஜெட் அறிவிப்பின் மூலம் எரிபொருள் சேவைக்கு வேளாண்மை வரி (Cess) என்று புதிய வரியும் வந்துள்ளது. இவ்வகையில் கச்சா எண்ணெயின் தொடர் விலை சரிவுக்கு பிறகும் ஒன்றிய அரசு எரிபொருள் விலையை குறைக்காமல் ஏற்றிக்கொண்டே இருப்பதன் காரணம் "வணிக அரசியல்". 
எரிபொருள் சுத்திகரிப்பு செலவு மற்றும் எரிபொருள் நிறுவன விற்பனையாளர்கள் பெறும் கமிஷன் என்பது தவிர்க்க இயலாதது ஆனால் மக்களுக்கு விதிக்கப்படுகிற எரிபொருளுக்கான வரி என்பது குறைக்க இயலக்கூடிய காரியமாகும். இல்லையேல் மொத்தத்தில் "வணிக அரசியல்" காரணமாக சிக்குண்டு கிடப்பதை விட மாநில அரசுகள் எரிபொருள் சேவையை கையிலெடுத்து அதன் விலையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றிய அரசும் தனியார் பெருநிறுவனமும் இணைந்து ஏழையை இன்னும் ஏழை ஆக்கும் சூழல் தான் நிலவும்.

எரிபொருள் வரி சூட்சுமம் 

# 1 Litre Refined Petrol Price = 32 Rupees 

# 1 Litre Retail Petrol Price = 92 Rupees 

ஒரு லிட்டர் சுத்திகரிப்பட்ட பெட்ரோலின் விலையான 32 ரூபாய்க்கு மக்கள் செலுத்தும் கலால் வரி 33 ரூபாய் (103%) மற்றும் மாநில வரி 24 ரூபாய் (74%) என சேர்த்து மொத்தம் 57 ரூபாய் (177%) வரி செலுத்தப்படுகிறது. ஆனால் பொதுவெளியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60-70% வரி விதிக்கப்படுவதாக மக்கள் நம்புகிறார்கள் அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விலையான 92 ரூபாய்க்கு 57 ரூபாய் வரி (62%) ஆனால் உண்மையில் ஒரு லிட்டர் சுத்திகரிப்பட்ட பெட்ரோலின் விலையான 32 ரூபாய்க்கு 57 ரூபாய் வரி (177%) விதிக்கப்படுவதாக சொல்வதே கணக்கியல் முறையாகும். ஏனெனில் நிலையான கணக்கு முறைமையில் (Standar Accounts System) அடிப்படை விலைக்கு மட்டுமே வரி கணக்கிடப்பட வேண்டும். இங்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் விலையான 32 ரூபாய் தான் அடிப்படை விலை. எனவே, 32 ரூபாய்க்கு 57 ரூபாய் வரி என்ற கணக்கில் 177% வரி விதிக்கப்படுகிறது.

மாநில அரசுகளுக்கு மாற்று வழிகள்

1972 வரை ஒன்றிய அரசின் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) தான் அனைத்து மாநில மக்களின் உணவு தானிய தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. ஒன்றிய அரசு உணவு பகிர்மானத்தில் பாரபட்சம் காட்டும் சூழல் உண்டானதால் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசாங்கம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) நிறுவனத்தை இந்திய நிறுமங்கள் சட்டம், 1956 (Companies Act, 1956) மூலம் தொடங்கி மாநில மக்களின் உணவு தானிய தேவைகளை மாநில அரசாங்கமே எடுத்து நடத்தும் வகையில் வழி செய்தது. கலைஞரின் இந்த முன்னெடுப்புக்கு அன்றைய ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் கலைஞர் அதனை எதிர்கொண்டு மக்களுக்கான இத்திட்டத்தை வெற்றி பெற வைத்தார். தமிழ்நாடு அரசின் இம்முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து வெவ்வேறு காலகட்டத்தில் பிற மாநிலங்களும் மாநில ரேஷன் கடை முன்னெடுப்புகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இன்று போக்குவரத்துத் துறை, வணிகத் துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவத் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை போன்ற பல்வேறு துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போல எரிபொருள் துறையை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். 

மாநில அரசே வளைகுடா நாட்டில் இருந்து சுத்திகரிப்பட்ட பெட்ரோல், டீசல் எரிபொருளை அதிகளவில் கொள்முதல் செய்து மாநில பெட்ரோல் விற்பனை நிலையங்களை அமைத்து மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யலாம். இத்திட்டத்தால் அரசு வேலைவாய்ப்பு உருவாகும் அல்லது வழக்கம் போல் தனியார் நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்களை நடத்தலாம். மாநில அரசே எரிபொருளை கொள்முதல் செய்வதால் இறக்குமதி வரி மட்டுமே செலுத்த வேண்டும். கலால் வரி செலுத்த வேண்டியதில்லை. இதன் அடிப்படையில் இன்றைய தேதியில் கலால் வரிக்குரிய 30 ரூபாய் நமக்கு மிச்சமாகும்.

தங்கம் - எண்ணெய் அரசியல்

உலகளாவிய தங்க அரசியலை "எளிதில்" அசைக்க இயலாது காரணம் அனைவரும் கட்டாயம் வாங்கும் பொருளல்ல தங்கம். வல்லரசு நிறுவனங்கள் தான் தங்கத்தை தீர்மானிக்கிறது. உலக அரசுகள் அவசர கால நிதி தேவைகளுக்காக தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. உலகிலே அதிக தங்க சேமிப்பு வைத்திருப்பது அமெரிக்க அரசு (8134 டன்), இந்திய அரசின் தங்க சேமிப்பு (658 டன்).
உலகளாவிய எண்ணெய் அரசியலை "எளிதில்" அசைக்க இயலும் காரணம் அனைவரும் கட்டாயம் வாங்கும் பொருள் எண்ணெய். இதை அசைக்க இயலும் என்பதன் வெளிப்பாடு தான் "2020 ரஷ்யா - சவூதி எண்ணெய்" விலை யுத்தமாகும். மேலும் வளைகுடா போர், சவூதி - அமெரிக்க கூட்டணி, ரிலையன்ஸ் முதலீடு  போன்றவை மூலம் உலகளாவிய எண்ணெய் வரலாறுகளை நாம் அறிய இயலும்.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

ஒன்றிய அரசு மற்றும் தனியார் வசம் எண்ணெய் நிறுவனங்கள் நிறைய உள்ளது அதில் அம்பானி - அதானி குழுமத்திற்கு பெரும் பங்கு உள்ளது. 2017 தரவுப்படி இந்தியாவில் உள்ள மொத்த எரிபொருள் நிலையங்கள் 60,799.

# Government of India = IOCL / BPCL / HPCL

# Indian Oil Corporation - IOCL =26,849

# Bharat Petroleum Corporation Limited - BPCL =14,675

# Hindustan Petroleum Corporation Limited - HPCL = 14,161

# Private Companies = 5,114
எண்ணெய் ஒரு முக்கிய சாவி 

தங்கம் விலை திடீர் திடீரென கூடினாலும் அது ஆடம்பரமான அலங்கார பொருள் மற்றும் முதலீட்டுக்கு உரிய பொருள் ஆனால் எரிபொருள் பல கோடி மக்களின் அன்றாட தேவையாகும். ஏனெனில் எரிபொருள் என்பது "உணவுக்கும் போக்குவரத்துக்கும்" முக்கியமான "சாவி" ஆகும். அவ்வகையில் எரிபொருள் விலை ஏற்றத்தை அந்நிய பல காரணங்களை கூறிக்கொண்டு அவ்வளவு எளிதில் கடந்துவிட இயலாது அதற்கு மாநில அரசு நல்ல தீர்வு காண முற்பட தான் வேண்டும். மொத்தத்தில் அனைத்து விதமான சாதனங்களையும் ஆராய்ந்து நல்லதொரு வாய்ப்பு இருக்குமானால் மாநில அரசே எரிபொருளை ஏற்று நடத்துவது நன்மை பயக்கும்.

சிக்கல்கள்

ஒரு மாநில அரசு சுயாதீனமாக எரிபொருளை இறக்குமதி செய்தால் ஒன்றிய அரசின் வழியில் செயல்படும் பிற மாநில அரசுகளின் எரிபொருள் சேவை கேள்விக்குள்ளாகும். அதை சமநிலை செய்ய ஒன்றிய அரசு இறக்குமதியாகும் எரிபொருளுக்கு இறக்குமதி வரியை கூட்டலாம் அல்லது புதிய வரியை ஏற்படுத்தலாம். 

மேலும் மாநில அரசே எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ளவும் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் (அம்பானி - அதானி) அவ்வளவு எளிதில் விடாது. ஆகையால் மாநில அரசு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு முன் எதிர் தரப்பினரின் தாக்குதலை சந்தித்து களத்தில் போராடி வெற்றி பெற சட்ட நிபுணர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

முடிவுரை 

எரிபொருள் விலையை குறைக்க ஒன்றிய அரசு எண்ணெய் சட்டவிதிகளை மாற்ற வேண்டும் அதற்கு பெருநிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் இல்லாவிட்டால் மாநில அரசு TNPC அமைப்பை ஏற்படுத்தி எரிபொருளை சுயாதீனமாக கொள்முதல் செய்து எரிபொருள் விலையை குறைக்க முயல்வதே சாலச் சிறந்தது. ஏனெனில் தினசரி எரிபொருள் விலை உயர்வை மக்கள் சர்வ சாதாரணமாக பழகிக் கொண்டால் அது வருங்காலத்திற்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ஆகையால் எரிபொருள் விலையை குறைக்க வேண்டி அல்லது குறைவான விலையில் எரிபொருளுக்கே மாற்றுவழிகளை நன்கு ஆராய வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக மேற்கூறிய திட்டம் எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை ஆனால் ஒன்றிய அரசு உரிமை கொண்டாடும் எரிபொருள் கொள்கையில் மாநில அரசு தலையிட்டு மக்களுக்காக எரிபொருள் விலை குறைப்பு செய்ய இயலும் என்றால் அது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.

கண்ணோட்டம் 

*SEZ Act was proposed on June 2005 and Reliance Jamnagar refinery was expanded on August 2005.

*RIL export refined petroleum to countries where oil prices are sold less when compared to India.

*RIL earns high profit through those exports because RIL's refinery is located in SEZ which is meant for tax benefits.

*If India Government doesn't allow tax benefits for private petroleum export, RIL have to pay heavy tax for exporting petroleum but RIL can question SEZ Act.

*If suppose RIL obeys Indian Government and pay heavy tax for exporting petroleum, Indian Government can use that for reducing Petroleum prices within India.

*If this happened then no need for TNPC formation.

*If not we got no choice left and only TNPC is the feasible route.

*Concept of GSPC and TNPC are entirely different as follows,

# GSPC = State Owned Refinery House (Import > Crude Oil > Refinery > Products > Distribution)

# TNPC = State Owned Distribution House (Import > Products > Distribution)

விவரணைகள் 


Reliance Refinery


Petrol - Diesel Price History


Indian Oil History


Special Economic Zones


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...