Chocks: தடுப்பூசி வரலாறு

Sunday, April 11, 2021

தடுப்பூசி வரலாறு

தடுப்பூசி வரலாறு 

# காலங்காலமாக நோயெதிர்ப்பு மருத்துவ பரிசோதனைகளில் இந்தியா, சீனா உட்பட சில நாடுகள் ஈடுபட்டு இருந்தாலும் நவீன தடுப்பூசி மருத்துவத்திற்கு மூலகர்த்தா எட்வர்ட் ஜென்னர் (17 - May - 1749 / 26 - Jan - 1823) ஆவார்.
# 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் பிறந்த எட்வர்ட் ஜென்னர் இறுதியில் மருத்துவ வரலாற்றில் மிகவும் பிரபலமான விஞ்ஞானிகளில் ஒருவராகவும் நோயெதிர்ப்புத் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவராகவும் மாறினார்.

# பிரிட்டிஷ் மருத்துவ நடைமுறை மற்றும் கல்வியின் முறைகள் படிப்படியாக மாற்றமடைந்து கொண்டிருந்த நேரத்தில் மதகுருவின் மகனாக எட்வர்ட் ஜென்னர் பிறந்தார். 

# எட்வர்ட் ஜென்னருக்கு ஐந்து வயதான போது தந்தை இறந்துவிட்டார் பிறகு அவரை மதகுருவான மூத்த சகோதரர் வளர்த்தார்.

# இலக்கணப் பள்ளியில் படித்துவிட்டு ஒரு கட்டத்தில் எட்வர்ட் ஜென்னர் 13 வயதில் அருகிலுள்ள அறுவை சிகிச்சை நிபுணரிடம் பயிற்சி பெற்றார். 

# அடுத்த 8 ஆண்டுகளில் எட்வர்ட் ஜென்னர் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றிய நல்ல அறிவைப் பெற்றார்.

# எட்வர்ட் ஜென்னர் தனது 21 வயதில் பயிற்சியை முடித்தவுடன் லண்டனில் மிக முக்கியமான அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் பணிப்புரிந்த ஜான் ஹண்டரிடம் உதவியாளராக சேர்ந்தார்.

# உடற்கூறியல் மற்றும் உயிரியலாளர் தர பரிசோதனை நிபுணராக உயிரியல் மாதிரிகளை சேகரித்தது மட்டுமல்லாமல் உடலியல் செயல்பாட்டின் ஆராய்ச்சியாளராகவும் வலம் வந்தார் ஜான் ஹண்டர். 

# எட்வர்ட் ஜென்னர் ஜான் ஹண்டரிடமிருந்து நிறைய மருத்துவ அறிவியலைக் கற்றுக்கொண்டார்.

# தனது மருத்துவ ஆராய்ச்சியில் கால்நடைகளால் பாதிக்கப்படக்கூடிய ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாத நோயான மாட்டம்மை தாக்குதலுக்கு ஆளான ஒருவர் தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றே பெரியம்மை நோயால் பாதிக்கப்பட முடியாது என்ற உண்மையை எட்வர்ட் ஜென்னர் கண்டறிந்தார்.

# இதன் அடிப்படையில் மாட்டாமை கிருமிகளை மனிதர்களுக்கு செலுத்தி அவர்களுக்கு பெரியம்மை தாக்குகிறதா? என பரிசோதனை செய்ய முடிவெடுத்தார்.
# பரிசோதனை முயற்சியாக மாட்டாமை (Cow Pox) நோயால் பாதிக்கப்பட்ட பால்காரி சாரா நெல்ம்ஸின் (Sarah Nelmes) கொப்புளங்களில் உள்ள சீழில் ஒரு துளியை தனது தோட்டக்காரரின் 8 வயது மகனான ஜேம்ஸ் பிப்ஸின் (James Phipps) கையில் சிராய்ப்புகளை ஏற்படுத்தி வைத்தார்.

# சில நாட்கள் கழித்து ஜேம்ஸ் பிப்ஸின் கையில் பெரியம்மை (Small Pox) நோயால் பாதிக்கப்பட்ட கொப்புளங்களில் உள்ள சீழை செலுத்தினார். 
# அச்சிறுவனை பெரியம்மை நோய் தாக்கவில்லை என்பதன் அடிப்படையில் எட்வர்ட் ஜென்னரின் மருத்துவ கணிப்பு உண்மையானது.

# தொடர்ந்து தனது 11 மாத மகன் ராபர்ட் உட்பட 23 நபர்களிடம் இந்த நோயெதிர்ப்பு பரிசோதனைகளை செய்து வெற்றி பெற்றார். 

# தான் கண்டுபிடித்த புதிய மருந்துக்கு வாக்சின் (Vaccine) என்றும் தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு வாக்சினேசன் (Vaccination) என்றும் பெயரிட்டார்.

# லத்தீன் மொழியில் வாக்சா என்றால் பசு வாக்சினா என்றால் மாட்டம்மை. 

# பெரியம்மை நோய்க்கு எதிரான எட்வர்ட் ஜென்னரின் தடுப்பூசி முறை பிரபலமடைந்தது.

# எட்வர்ட் ஜென்னரிடம் தனது படைவீரர்கள் அனைவருக்கும் பெரியம்மை தடுப்பு மருந்தை செலுத்த கூறினார் நெப்போலியன். 

# மேலும் மனிதகுலம் செழிக்க நோயெதிர்ப்பு மருத்துவ ஆராய்ச்சிக்கு வித்திட்ட எட்வர்ட் ஜென்னர் எந்த கோரிக்கையை வைத்தாலும் நிராகரிக்காமல் செய்வேன் என்றார்.

# பிழைகள் அல்லது அவ்வப்போது சிக்கல்கள் இருந்த போதிலும் எட்வர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்த்தடுப்பு மருந்தின் நலன்களை நிரூபித்து பெரியம்மை நோயின் இறப்பு விகிதம் சரிய காரணமாக அமைந்தார்.

# எட்வர்ட் ஜென்னர் ஒரு இசை பிரியர், கவிதை பிரியர் மற்றும் குறிப்பாக இயற்கையியல் பிரியராக குக்கூவின் கூடு கட்டும் பழக்கம் மற்றும் பறவை இடம்பெயர்வு குறித்து பல அவதானிப்புகளை செய்தார்.

# எட்வர்ட் ஜென்னர் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றாலும் தனது கண்டுபிடிப்பின் மூலம் தன்னை வளப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. 

# எட்வர்ட் ஜென்னர் பாராட்டுகளை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு சில மதவாதிகளின் தாக்குதல்களுக்கு ஆளானாலும் தடுப்பூசி ஆராய்ச்சி நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

# எட்வர்ட் ஜென்னருக்கு மருத்துவ சேவையை பாராட்டி பிரிட்டிஷ் பாராளுமன்றம் 1802 இல் 10,000 டாலர் மற்றும் 1806 இல் 20,000 டாலர் பரிசளித்தது. 

# இன்று கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலக மருத்துவர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட விதை விதைத்தவர் எட்வர்ட் ஜென்னர் என்றால் மிகையல்ல.

விவரணைகள்

Edward Jenner - Britannica


Edward Jenner and History of Small Pox and Vaccination


The Origin of Vaccines


Small Pox Vaccination


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...