Chocks: அரசியலும் சினிமாவும் சாதியும்

Monday, April 12, 2021

அரசியலும் சினிமாவும் சாதியும்

அரசியலும் சினிமாவும் சாதியும்
சுருக்கம் 
  1. முகவுரை
  2. பிரியா காம்ப்ளக்ஸ்
  3. அக்கால திரை சூழல்
  4. இக்கால திரை சூழல்
  5. சாதிய போக்கு
  6. திசை மாறிய சினிமா
  7. அரசியல் கட்சி
  8. எம்.ஜி.ஆரின் அரசியல் 
  9. முதல்வராக எம்.ஜி.ஆர்
  10. அரிதாரமும் அதிகாரமும்
  11. இன்றைய தமிழ் சினிமா
  12. முடிவுரை
முகவுரை

நீரின்றி அமையாது உலகு போல திரையின்றி அமையாது உலகு என்பதன் மூலம் சினிமா நமது ரத்தத்தில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாக தான் பார்க்கிறேன். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை தவிர்த்து கிராமம், சமூகம், திருவிழா, அரசியல், சினிமா தான் முக்கியமான அடையாளங்கள் ஆகும். சாதியும் திருவிழாவும் கிராமமும் கூட்டமைப்பும் ஒரு சேர பயணிக்கும் ஊராக மதுரை உள்ளது. இதனால் தான் மதுரையை பலதரப்பட்ட மக்கள் Big Village என்பார்கள். இப்படிப்பட்ட மதுரை தான் அரசியலுக்கும் சினிமாவுக்கும் பயன்படுத்தப்படுகிறது அல்லது தேவைப்படுகிறது.

பிரியா காம்ப்ளக்ஸ்

1974 இல் மதுரையில் பிரபல பிரியா காம்ப்ளக்ஸ் தொடங்கப்பட்டது (சினிப்ரியா, சுகப்ரியா, மினிப்ரியா - முதலில் இரண்டு பிறகு மூன்றானது). இங்கே முதலில் ஒரு காட்சி சிவாஜி நடித்த "திருவிளையாடல்" திரையிடப்பட்டு பின்னர் நாகேஷ் நடித்த "கை நிறைய காசு" திரையிடப்பட்டு உள்ளது. 

பிரியா காம்ப்ளக்ஸ் திரையரங்கில் வெளியான உரிமைக்குரல் (1974) திரைப்படத்திற்கு ஹவுஸ்புல் ஆவதை காட்டிலும் கூட்டம் மிக அதிகமாக இருந்துள்ளது. ஆனால் எம்.ஜி.ஆரின் தீவிர "கிடா மீசை" ரசிகர் ஒருவர் கூட்டநெரிசலையும் மீறி டிக்கெட் கவுண்டருக்கு வெளியே நின்றிருந்த மனிதக்கூட்டத்தின் தோள்கள் மீது ஏறி கிடுகிடுவென நடந்தோடி முதலில் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றுள்ளார் என்று அறியப்படுகிறது. அந்த அளவுக்கு மதுரையும் அரசியலும் சினிமாவும் சாதியும் பின்னிப் பிணைந்துள்ளன.

அக்கால திரை சூழல்

1970 காலகட்டத்தில் திரையரங்கம் தான் தமிழ்நாட்டின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாகும். அக்கால திரை ரசிகர்கள் அடிக்கடி திரையரங்கங்கள் சென்று திரைப்படங்களை கண்டு மகிழ்ச்சியுற்றாலும் திரையரங்கங்கள் மூட்டை பூச்சி, எலி தொந்தரவுகளுடன் சுகாதாரமற்ற சூழலில் ஏ.சி வசதியில்லாமல் கதவுகள் அடைக்கப்பட்டு நல்ல காற்றோட்டம் இல்லாமல் சிலர் ஆஸ்துமா நோய்க்கு கூட ஆட்பட்டுள்ளனர் என்று அறியப்படுகிறது.

இக்கால திரை சூழல்

1990களுக்கு பிறகு ஏ.சி வசதி, அகண்ட திரை, திரையை மறைக்காத சீட் அமைப்பு, பெரிய பார்க்கிங் வசதி என்று திரையரங்க சூழல் நவீனப்படுத்தப்பட்டது. 2010 களுக்கு பிறகு நவீன கோட்பாட்டின்படி வெளிநாட்டு பாணியில் பல திரையரங்குகள் வந்துவிட்ட காரணத்தால் திரையரங்குகளில் முட்டை போண்டா வியாபாரம் நிறுத்தப்பட்டது, பாப்கார்ன் விலை அதிகமாக்கப்பட்டது, அரங்கிற்குள் தண்ணீர் தவிர வெளி ஸ்நாக்ஸ் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்று திரையரங்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால் சீட்களை கிழிப்பது, டாய்லெட்களை அசுத்தம் செய்வது, ரசிகர்களுக்குள் சண்டையிடுவது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் விலைகள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது. திரையரங்கத்திற்கு உள்ளே ஸ்நாக்ஸ் டெலிவரி வந்துவிட்டது.

மேலும் இப்போது சினிமா டூ தொலைக்காட்சி டூ கணினி டூ மொபைல் என்று மாறிவிட்டாலும் Fundamentals Are Same Everywhere என்ற கூற்றின்படி திரைக்கு முன்னால் மக்கள் காட்டும் ஆர்வம் மாறவில்லை. அகண்ட திரை, சின்னச் திரை, கணினி திரை, மொபைல் திரை என்று உலகம் இன்று கைக்குள் வந்தேவிட்டது.

சாதிய போக்கு

தமிழ் சினிமாவின் போக்கை பொறுத்த மட்டில் 1970 கள் வரை ஒரு மாதிரியும் 1980களுக்கு பிறகு வேறு மாதிரியும் வளர்ந்து வந்துள்ளது. 1970 களிலும் மதுரையை மய்யமாக வைத்து சாதி பார்வையுடன் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு இருந்தாலும் (பட்டிக்காடா பட்டணமா மூக்கையா சேர்வை போல) 1980 களுக்கு பிறகே மதுரையை சுற்றியுள்ள முக்குலத்தோர் சாதி குறித்து பேசும் இனவரைவியல் களமாக தமிழ் சினிமா உருவெடுத்தது அதன் ஆரம்பமாக பாரதிராஜாவின் மண் வாசனை திரைப்படமும் உச்சமாக கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படமும் அமைந்தது.

1980 களில் நடுப்பகுதி காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் சாதி குறித்த திரைப்படங்கள் வந்த காரணத்தால் மேற்கு தமிழ்நாட்டில் கவுண்டர் சாதி குறித்த திரைப்படங்கள் மற்றும் வட தமிழ்நாட்டில் வன்னியர் சாதி குறித்த திரைப்படங்கள் பிற்காலத்தில் வெளிவர காரணமாகின. இடைநிலை சாதி பெருமை பேசும் திரைப்படங்களில் தலித் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரமாக அல்லது அடிமை சேவகம் புரியும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். தமிழ் சினிமாவில் சாகச நாயகர்களின் கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை ஆனால் நகைச்சுவை கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மக்களின் சமூக ஏற்றத்தாழ்வு யதார்த்தத்தை பேசும் கதாபாத்திரங்கள் ஆகும். இதில் தேர்ந்த திரை அனுபவம் இருப்பின் நான் கூறிய கூற்றை உங்களால் ஏற்கமுடியும்.

திசை மாறிய சினிமா

சினிமாவை பயன்படுத்தி தி.மு.க வளர்ந்தது பிறகு ஏன் 1980 களுக்கு பிறகான சில சினிமாக்களை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள்? என சிலர் கேட்கலாம். இங்கே தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். தி.மு.கவினர் பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன், ரத்தக்கண்ணீர், பூம்புகார், பணம், ராஜகுமாரி, மந்திரி குமாரி போன்று பல்வேறு சமூக நீதி கருத்துக்களை பேசிய திரைப்படங்கள் மூலம் சினிமாவை ஆண்டது 1950-1970 காலகட்டம் தான். 

சமூக நீதி ஏற்படுத்தி கொடுத்த வளர்ச்சியில் 1980-1990 காலகட்டத்தில் பல தரப்பட்ட வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள் சினிமாவில் நுழைந்து சமூக நீதி திசையில் இருந்து இடம் பெயர்ந்து அவரவர் விருப்பம் போல கதைக்களங்களை தேர்வு செய்து படங்களை எடுத்தனர். இதில் கோவையை மையப்படுத்தி கவுண்டர் கதை, மதுரையை மையப்படுத்தி முக்குலத்தோர், வட தமிழ்நாட்டை மையப்படுத்தி வன்னியர் படங்கள் வரத் துவங்கின. இதில் பொருளாதாரத்தில் முன்னேறிய நகரமாக கோவையும் பின் தங்கிய நகரமாக மதுரையும் வட தமிழ்நாடும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மதுரை மாநகரில் விசேஷ நாட்களில் பிரபு மற்றும் கார்த்திக் முக படங்களை தங்களது கட் அவுட்டில் முக்குலத்தோர் மக்கள் வைத்து கொள்வதும் பிரசாந்த் மற்றும் விக்ரம் முக படங்களை தங்களது கட் அவுட்டில் தலித் மக்கள் வைத்து கொள்வதும் மதுரை சாதிய போக்கை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும். 1980 களுக்கு பிறகு சாதி மயமாக்கப்பட்டு இன்று மதுரை என்றாலே சாதி, சண்டை, சச்சரவு என்ற பிம்பம் வளர்ந்துவிட்டது. இதற்கு தமிழ் சினிமாவும் ஒரு முக்கிய காரணியாகும். இதில் நவீன காலத்தில் உச்சமாக அமைந்த சாதிய படம் சுந்தரபாண்டியன். எல்லா நகரங்களையும் போலவே "கருப்பு - வெள்ளை" பக்கங்களை கொண்ட நகரம் தான் மதுரை. ஆனால் திரைப்பட சாதி பிம்பம் கொண்டு திரைப்படங்களில் மதுரைக்காரனை பாசக்காரனாக சாதிக்காரனாக மோசக்காரனாக தனித்து காட்டியது நீண்ட ஆய்வுக்குரியது.

ரஜினியிடம் இருந்து வேறுபடுத்தி தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்ள முக்குலத்தோர் கதைக்களமான தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களை கமல்ஹாசன் பயன்படுத்தி இருக்கலாம். மேலும் கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் சைவத்தை வெறுத்த "வைணவர்", சமூக போராளி "தலித்" இறப்பது, "இஸ்லாமியர்" கோமாளியாக தோற்றமளித்தது ஏனென்பது ஆய்வுக்குரியது. மணிரத்னம் சித்தரித்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய கதாபாத்திரங்களும் ஆய்வுக்குரியது.

அரசியல் கட்சி

சினிமா பிடித்தாலும் அரசியலையும் சினிமாவையும் ஒன்றாக பார்க்கக்கூடாது என்ற புரிதல் மக்களுக்கு தெரிய வேண்டும். சினிமாவை "ரசியுங்கள்" அரசியலை "அறியுங்கள்". பட்டவர்த்தனமாக சொல்ல வேண்டுமென்றால் தி.மு.க மக்களுக்கு செய்ததில் பாதியை கூட அ.தி.மு.க செய்ததில்லை என்பதை அறிவதற்கு வாசிப்பு அல்லது சுய புரிதல் அவசியம். ஆனால் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா திரை பிம்பத்தால் அரசியலையும் சினிமாவையும் ஒன்றாக பார்த்துப்பழகிய "பலரால்" குறிப்பாக சில இடைநிலை சாதி மக்களால் தமிழ்நாட்டில் அதிக முறை ஆட்சி செய்யும் வாய்ப்பு அ.தி.மு.கவுக்கு கிடைத்தது.

அ.தி.மு.க கட்சியை தொடங்க எம்.ஜி.ஆர் மதுரையை தேர்ந்த்தெடுக்க காரணமில்லாமல் இல்லை. திரைப்படத்தில் பேசப்படும் இடைநிலை சாதிகளையும் (குறிப்பாக முக்குலத்தோர் - கவுண்டர்) அ.தி.மு.கவையும் இணைத்து பார்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் களத்தை நன்கு அறிந்து கொள்ளலாம். பிறப்பால் சிவாஜி முக்குலத்தோர் சாதியை சேர்ந்தவர் என்றாலும் அவர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்தது என்னவோ எம்.ஜி.ஆர் தான்.

"சினிமா - அரசியல் - மதுரை" என்ற அடிப்படையிலே எம்.ஜி.ஆர் (அ.தி.மு.க), விஜயகாந்த் (தே.மு.தி.க), கமல்ஹாசன் (ம.நீ.ம) போன்றவர்கள் கட்சி தொடங்க மதுரையை தேர்வு செய்தனர்.

எம்.ஜி.ஆரின் அரசியல் 

1971 இல் பாபு (சிவாஜி) மற்றும் ரிக்சாக்காரன் (எம்.ஜி.ஆர்) திரைப்படங்களில் கதாநாயகர்கள் ரிக்சா ஓட்டுபவர்களாக நடித்திருப்பர். இதில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தங்களது கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்தில் எம்.ஜி.ஆரே ஏழைப் பங்காளனாக மக்களின் மனங்களை வெல்ல ஏதுவாக அமைக்கப்பட்டதை யாவரும் அறியலாம்.

எம்.ஜி.ஆர் ஏழைப் பங்காளனாக விவசாயி, மீனவன், கூலித் தொழிலாளி, ஆடு மாடு மேய்ப்பாளன், நரிக்குறவர், வண்டிக்காரன், ரிக்சாக்காரன் போன்ற வேடங்களை ஏற்று அடித்தட்டு மக்களை காப்பவராகவும் பண்ணையார், ரவுடி கும்பல், சாராய கடத்தல், பெரிய முதலாளிகளை வில்லனாக சித்தரித்து அவர்களை அடித்து உதைத்து சட்டத்தின் முன் நிறுத்தும் மக்களின் தலைவனாக அடுத்தடுத்து நடித்து தமிழ் மக்களின் பேராதரவை உழைக்கும் வர்க்கத்தின் பாசத்தை பெற்றார். ஆனால் தேர்ந்த நடிகராக அறியப்படும் சிவாஜி ஒரு கட்டத்தில் மேட்டிமை வேடங்களிலே நடித்து தனது இடைநிலை சாதி வலைக்குள் சிக்கிக் கொண்டார்.

அறிஞர் அண்ணா இருந்த வரையில் சமூக நீதி கருத்துக்களை தமது திரைப்படங்களில் எடுத்துரைத்தார் எம்.ஜி.ஆர். பின்னர் 1972 இல் அ.தி.மு.க கட்சி தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் சமூக நீதி கருத்துக்களை விட தேங்காய் ஸ்ரீனிவாசன், ஐசரி வேலன் போன்ற நடிகர்களை கொண்டு எம்.ஜி.ஆரின் சுய பெருமைகள் குறித்து பேசும் காட்சிகள் தான் அதிகம் இடம்பெற்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1970 கள் வரை ரசிகர்களின் ஆரவாரம், ரசிகர் மன்ற செயல்பாடுகள், திரைப்படங்களின் லாப கணக்கில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் "கிட்டத்தட்ட" ஒன்றே. இன்னும் சொல்ல போனால் 1970 களுக்கு பிறகு சிவாஜிக்கு வெற்றி படங்கள் அதிகம் எம்.ஜி.ஆருக்கு தோல்வி படங்கள் அதிகம். அதையும் மீறி "உயிர்" ரசிகர்களின் செல்வாக்கை வைத்துக் கொண்டும் சிறந்த நடிகரும் தமிழரும் தேவருமான சிவாஜி அரசியலில் எப்படி வீழ்ச்சியடைந்தார்? சராசரி நடிகரும் மலையாளியும் நாயருமான எம்.ஜி.ஆர் அரசியலில் எப்படி எழுச்சியடைந்தார்? என்பது குறித்து நீண்ட ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

முதல்வராக எம்.ஜி.ஆர்

முதல்வராக எம்.ஜி.ஆர் ஏழைப் பங்காளனாக இருக்கவில்லை இன்னும் சொல்லப் போனால் நவீன தமிழ்நாட்டின் இருண்ட காலம் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலம் தான். இவர் ஆட்சியில் துப்பாக்கிச் சூடு உட்பட பல்வேறு மக்கள் விரோத போக்குகள் அரங்கேறியுள்ளது. சினிமாவில் எம்.ஜி.ஆர் தண்டித்த பண்ணையார், ரவுடி கும்பல், சாராய வியாபாரி, பெரிய முதலாளி உட்பட பலதரப்பட்ட மேட்டிமை மக்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஏற்றம் பெற்றதே உண்மை வரலாறு. அரசியலில் குண்டர்கள், கரை வேட்டிகள் காவல்துறையில் தலையீடு, கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்களானது, சாராய கடை டாஸ்மாக் கார்ப்பரேட் ஆனது, பத்திரிகை தணிக்கை, துப்பாக்கிச் சூடு இப்படி பல இழிவான செயல்களை தமிழ்நாட்டின் அரசியல் உலகில் அறிமுகம் செய்து வைத்ததே எம்.ஜி.ஆர் தான்.

சிவாஜி நேர் வழியில் தன்னை முக்குலத்தோராக அடையாளம் காட்டி அரசியலில் சறுக்கினார். ஆனால் சினிமா கவர்ச்சி மூலம் அரசியலில் தனது கோர முகமூடியை கழட்டாமல் அனைவருக்குமான தலைவராக எம்.ஜி.ஆர் தன்னை வெளிக்காட்டி மக்கள் மனங்களை வசியப்படுத்தினார். அக்காலத்தில் முக்குலத்தோரும் தலித்களும் வெறுக்காத நடிகராக எம்.ஜி.ஆர் வலம் வந்தார் ஆனால் அம்மக்களுக்கு அவர் அரசியலில் மிகப்பெரிய அளவில் நன்மைகளை செய்யவில்லை.

அரிதாரமும் அதிகாரமும்

திரைப்பட உலகை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆண்டிருந்தாலும் அதற்காக அவர்களின் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை ஏற்க இயலாது காரணம் தராசில் நிலைநிறுத்தி பார்க்கும் போது அவர்களின் சமூக நீதி அரசியல் செயல்பாடுகள் மலிவானது. அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் உள்ளொன்று வைத்து புறமொன்று செயல்பட்ட முதல்வர். எம்.ஜி.ஆரை போன்று இன்றைய நடிகர்களின் புதிய அரசியல் வரவையும் தராசில் நிலைநிறுத்தி பார்த்தால் உங்களுக்கே உண்மை விளங்கும் அவர்களின் முகமூடி அவிழும். 

"முதல்வர் நாற்காலிக்கு" வருவதற்கு முன்னர் எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ ஆக, தி.மு.க பொருளாளராக பணிபுரிந்துள்ளார் மற்றும் தனது நற்பணி மன்றங்கள் மூலம் விஜயகாந்த் சில நன்மைகளை செய்துள்ளார் என்பதை ஏற்கலாம். இதில் எம்.ஜி.ஆர் முதல்வராக அமர்ந்து முதல்வராகவே மறைந்தார் ஆனால் திரையில் எம்.ஜி.ஆர் காட்டிய வெள்ளை மனசை அரசியலில் பின்பற்றவில்லை மற்றும் கூட்டணி அரசியலுக்குள் நுழைந்த பிறகு தே.மு.தி.க முடிந்த கதையாகி போனது.

முக்குலத்தோரில் பலர் விஜயை ஒதுக்கவும் அஜித்தை கொண்டாடவும் காரணம் சாதி மத பேதம் தான். இதன் அடிப்படையில் தான் "பார்ப்பனர்" சோ ராமசாமி ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு அடுத்து தான் அஜித்துக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்று புகழ்ந்து பேசினார். என்னை பொறுத்தவரையில் ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம் தான் ஆனால் அரிதாரம் பூசிக் கொண்டு நேராக அதிகாரம் தாருங்கள் என கேட்பதே அயோக்கியத்தனம்.

இன்றைய தமிழ் சினிமா

தலித் மற்றும் இடைநிலை சாதி காதல் உறவு குறித்த திரைப்படங்கள் "காதல்" படம் மூலம் தொடங்கிற்று எனலாம். இன்றைய தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் (அசுரன்), மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள், கர்ணன்), பா.ரஞ்சித் (காலா, கபாலி), எஸ்.பி.ஜனநாதன் (பேராண்மை, பொறம்போக்கு), பாலாஜி சக்திவேல் (காதல், வழக்கு எண் 18/9), சுசீந்திரன் (மாவீரன் கிட்டு, ஜீவா) மற்றும் சில இயக்குனர்களின் சீரிய முயற்சியால் சமூக நீதி கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

முதல்நிலை - இடைநிலை, இடைநிலை - இடைநிலை உறவுகளை விட இடைநிலை - கடைநிலை உறவுகளை பற்றி பேசும் படங்கள் அதிகளவில் வெளிவர வேண்டும். இத்தகைய சூழலில் திரௌபதி போன்ற பிற்போக்கு திரைப்படங்கள் வெளிவருதை கண்டு வேதனைப்படுகிறேன்.

முடிவுரை

மக்கள் அனைவரும் "சினிமா வேறு - அரசியல் வேறு" என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியம் இல்லையேல் நமக்கான அரசியல் அதிகார அரசியலாக இல்லாமல் அரிதார அரசியலாகிவிடும். யாரொருவரும் இயக்கும் சினிமாவில் இருந்து, நடிக்கும் சினிமாவில் இருந்து, ரசிக்கும் சினிமாவில் இருந்து, உண்ணும் உணவில் இருந்து, உடுத்தும் உடையில் இருந்து, பேசும் சொற்களில் இருந்து இங்கே அனைத்தும் அரசியலுக்கு உட்பட்டே இயங்குகிறது. இதில் நமக்கான அரசியல் அடையாளங்களை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பிற்போக்கு படங்களை தோல்வியுற செய்து முற்போக்கு படங்களை வெற்றி பெற செய்வோம்.

விவரணைகள்

நூல் 1 = தமிழ்ச் சினிமா : அரிதார அரசியலும் நாற்காலிக் கனவுகளும் - குமரன் தாஸ்

நூல் 2 = தமிழ் சினிமா : புனைவில் இயங்கும் சமூகம் - ஸ்டாலின் ராஜாங்கம்

நூல் 3 = எண்பதுகளின் தமிழ் சினிமா - ஸ்டாலின் ராஜாங்கம்

அ.தி.மு.க பிறந்த கதை


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

1 comment:

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -