Chocks: May 2021

Monday, May 17, 2021

அழியாத உயிரினம்

அழியாத உயிரினம்

# மூன்று வகையான கடல் உயிரினம் தான் உயிரியல் ரீதியாக அழியாத (Immortal) உயிரினம் என்று கூறப்படுகிறது. அவை,

*Turritopsis Dohrnii

*Hydra Vulgaris

*Tardigrade

# மூன்று வகையான கடல் உயிரினம் கூறப்பட்டாலும் இதுவரையில் Turritopsis Dohrnii என்ற ஜெல்லி மீன் தான் அதிகளவில் ஆராயப்பட்டுள்ளது.

Turritopsis Dohrnii
Hydra Vulgaris 

Tardigrade
விவரணைகள்

Immortals Animals 


3 Immortal Beings On Planet Earth


Immortal Jellyfish


First Animal Tardigrade To Survive In Space


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

சீனப் பெருஞ்சுவர்

சீனப் பெருஞ்சுவர்

# யூரேசிய ஸ்டெப்பிலிருந்த (Eurasian Steppe) பல்வேறு நாடோடி குழுக்களுக்கு (Nomadic Tribes) எதிராக பாதுகாப்பாக தற்காத்து கொள்ள சீனப் பெருஞ்சுவரை கட்டியது பண்டைய சீனா .

# சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்ட பின்னர் நாடோடி பழங்குடியினர் வடக்கு சீனாவில் ஊடுருவ முடியவில்லை.

# சீனாவின் பொருளாதார முன்னேற்றம், கலாச்சார பாரம்பரியம் , தேசிய ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், போக்குவரத்து செயல்பாடுகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை பாதுகாப்புடன் கொண்டு செலுத்திட சீனப் பெருஞ்சுவர் உதவியது.

# மேலும் சீனாவிற்கும் மத்தியதரைக் கடலுக்கும் (Mediterranean Sea) இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச வர்த்தக பாதையான பட்டு வழி (Silk Road) சாலையை பாதுகாக்க சீனப் பெருஞ்சுவர் உதவியது.

# வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மன்னர்கள் சீனப் பெருஞ்சுவரை கட்டியுள்ளனர்.

# பல தனி ராஜ்ஜியங்களாக சீனா இருந்த காலத்தில் BC 7 ஆம் நூற்றாண்டில் இருந்தே பல சுவர்கள் கட்டப்பட்டதாக அறியப்பட்டாலும் சுவர்களை பெருமளவில் இணைத்து புனரமைத்தது ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசரான கின் வம்சத்தை (Qin Dynasty) சேர்ந்த கின் ஷி ஹுவாங் (Qin Shi Huang) (BC 220 - BC 206) ஆவார்.

# மிங் வம்சம் (Ming Dynasty) (AD 1368 - AD 1644) ஆட்சியின் போது அதிகளவில் சுவர்கள் கட்டப்பட்டன.

# காவல் கோபுரங்கள், பாதுகாப்பு அரண்கள் கொண்ட சீனப் பெருஞ்சுவரின் தற்காப்பு அமைப்பு வரலாற்றில் மிகவும் ஈர்க்கக்கூடிய கட்டடக்கலை சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது.

# யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தளமாக (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்டுள்ள சீனப் பெருஞ்சுவர் உலகின் ஏழு அதிசயங்களில் (Seven Wonders) ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனப் பெருஞ்சுவர் குறித்து சில தகவல்கள்

# முதல் கட்டுமானம் BC 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

# கடைசி கட்டுமானம் AD 1878 இல் கட்டப்பட்டது.

# சுமார் 2,700 ஆண்டுகள் பழமையானது.

# நீளம் 21,196 கிலோமீட்டர்.

விவரணைகள் 

How and Why the Great Wall of China Was Really Built


China's Great Wall Story


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

சுயமரியாதைத் திருமணம்

சுயமரியாதைத் திருமணம்
05 மே 1928 அன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி சுக்கிலநத்தம் சிற்றூரில் சண்முகத்திற்கும் "கைம்பெண்" மஞ்சுளாவிற்கும் பெரியார் தலைமையில் முதல் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 08 டிசம்பர் 1929 அன்று பிரபல சுயமரியாதை தீரர் குத்தூசி குருசாமிசாமிக்கும் குஞ்சிதம் அம்மாளுக்கும் பெரியார் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதை திருமணம் புரிவது தெய்வகுற்றம் என்று கூச்சலிட்ட சனாதனவாதிகளிடம் “நான் என்ன மனிதருக்கும் மாட்டுக்குமா திருமணம் செய்து வைக்கிறேன்? ஆறறிவு மனிதர்களாக பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே திருமணம் செய்து வைக்கிறேன்? அது எப்படி தவறாகும்?” என்று பெரியார் பேசினார்.

1951 இல் அம்பேத்கரின் இந்து சட்ட மசோதா நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டபோதும், பெரும் எதிர்ப்பின் காரணமாக மசோதா நிறைவேற்றப்படாத போது, அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 1955 இல் நேருவின் முயற்சியால் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சில மாற்றங்களுடன் இந்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்து மதத்தின் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் சாஸ்திர சடங்குகளுடன் கலப்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்து சட்ட மசோதா கோரியது. ஆனால் சாதி, மதம், சாஸ்திரம், சடங்கு போன்ற விஷயங்களை உடைத்து நடைபெறும் சுயமரியாதை திருணத்தை அங்கீகரிக்க இந்திய ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பெரியார் எண்ணினார்.

சுயமரியாதைத் திருமணத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த பெரியாரின் கொள்கையை முதல்வர் அண்ணா தமிழ்நாட்டில் சட்டமாக்க விரும்பினார். மசோதா சட்டமாக்க வருவதற்கு முன்பே அண்ணா பெரியாருக்கு மசோதாவின் வரைவு நகலை அனுப்பினார். அதில் “மாலை மற்றும் தாலி” என்று குறிப்பிடப்பட்டு தாலி கட்டாயமாக்கப்பட்டத்தை கவனித்த பெரியார், “மாலை அல்லது தாலி” என்று மாற்றி, தாலியை கட்டாயமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு 1967 இல் இந்து திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களுடன் “சுயமரியாதை திருமணச் சட்டம்” தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணாவால் நிறைவேற்றப்பட்டது.

விவரணை 

சுயமரியாதை திருமணம் பற்றி தந்தை பெரியார் 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

சுதந்திர தேவி சிலை

சுதந்திர தேவி சிலை
# 1860 களில் பிரெஞ்சு சிற்பி பிரடெரிக் அகஸ்டே பார்தோல்டி (Frederic Auguste Bartholdi) எகிப்தின் போர்ட் செய்டில் (Port Said) உள்ள சூயஸ் கால்வாயின் (Suez Canal) நுழைவாயிலில் ஆசியாவிற்கு ஒளியை தரக்கூடிய தீப்பந்தம் ஏந்திய அரேபிய விவசாய பெண்ணின் சிலையை (Egypt Carrying The Light To Asia) வடிவமைக்க விரும்பினார்.

# கிரேக்க சிலையான ரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) வடிவில் எகிப்திய சிலையை வடிவமைக்க விரும்பிய பிரடெரிக் அகஸ்டே பார்தோல்டியின் திட்டம் எகிப்திய நிதிநிலை சுமையால் கைவிடப்பட்டது.

# கைவிடப்பட்ட சிலை வடிவமைப்பை மறுசுழற்சி (Recycle Design) செய்து சுதந்திர தேவி சிலையாக (Statue of Liberty) 1886 இல் நியூயார்க் துறைமுகத்தில் நிறுவ வழிவகை செய்தார் பிரடெரிக் அகஸ்டே பார்தோல்டி.

# அமெரிக்கா - பிரான்ஸ் உறவை வலுப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் 1865 இல் பிரஞ்சு நீதிபதி எட்வர்ட் டி லாபூலே (Edouard De Laboulaye) ஆலோசனையின் பேரில் சுதந்திர தேவி சிலை உருவானது.

# 204.1 டன் எடை கொண்ட சிலையின் கட்டுமானம் 1875 இல் தொடங்கி 1884 இல் முழுமை அடைந்து பிரான்சில் இருந்து கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

# 1886 இல் நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டு பின்னர் 1924 இல் இச்சிலை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

# சுதந்திர தேவி சிலையின் வலது கையில் தீப்பந்தம் ஏந்தியும் இடது கையில் அமெரிக்க விடுதலை நாளான 4 ஜூலை 1776 என எழுதப்பட்ட புத்தகமும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

# மொத்தத்தில் அமெரிக்க புரட்சி போரில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவிய நட்பு கூட்டணிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை கட்டியெழுப்பிய அமெரிக்காவின் வெற்றியைக் கொண்டாடவும், உலகில் சுதந்திர கொள்கைகளை ஊக்குவிக்கவும் அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கியது.

விவரணைகள்

Liberty Statue - Facts


Liberty Statue - Arab Women


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

ரெளலட் - சாஸ்திரி சட்டம்

ரெளலட் - சாஸ்திரி சட்டம்
சுருக்கம் 
  1. முகவுரை
  2. நீதிபதி சிட்னி ரௌலட் குழு 
  3. ரெளலட் சட்டத்தின் வரைவு
  4. ரெளலட் சட்டத்தின் சாராம்சம்
  5. ஜாலியன் வாலாபாக் படுகொலை
  6. காந்தியின் அரசியல் நுழைவு
  7. முடிவுரை
  8. விவரணைகள்
முகவுரை

ஜெர்மன் மற்றும் ரஷ்ய அனுதாபிகள் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆதரிப்பதற்காக வங்காளம் மற்றும் பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவக்கூடும் என்ற தகவல்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான குற்றவியல் சட்டத்தை இயற்ற திட்டமிட்டது. இதையெடுத்து, இந்தியாவில் அரசியல் பயங்கரவாதத்தை (Political Terrorism) விசாரிக்க பிரிட்டிஷ் உயர்நீதிமன்ற நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையில், ரௌலட் ஆணையம் உருவாக்கப்பட்டது. 

நீதிபதி சிட்னி ரௌலட் குழு 

இந்தியாவில் அரசியல் பயங்கரவாதத்தை (Political Terrorism) மதிப்பீடு செய்வதற்காக பிரிட்டிஷ் உயர்நீதிமன்ற நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையிலான ரௌலட் குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.குமாரசாமி சாஸ்திரி உட்பட 6 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இக்குழுவின் வரைவறிக்கையினை ஏற்று 1919 இல் குற்றவியல் சட்டமான ரெளலட் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு இயற்றியது.

ரெளலட் சட்டத்தின் வரைவு

பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடிய இந்தியர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ரெளலட் சட்ட வரைவை (Rowlatt Act Draft) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.குமாரசாமி சாஸ்திரி எழுதினார். அதற்கு, குறியீடாகவே பெரியார் தனது உரைகளில் ரெளலட் சட்டத்தை “ரெளலட்-சாஸ்திரி” சட்டம் என குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.
சி.வி.குமாராசாமி சாஸ்திரியின் சகோதரி சீத்தம்மாளை இந்திய தேசிய காங்கிரஸ் செயலாளர் சர் சி.பி.ராமசாமி ஐயர் திருமணம் செய்து கொண்டதன் வகையில் இருவரும் மைத்துனர்கள். சிட்னி ரௌலட் குழுவில் இந்தியரும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் சி.பி.ராமசாமி ஐயரின் பரிந்துரையால் சி.வி.குமாரசாமி சாஸ்திரி பிரிட்டிஷாரின் ரௌலட் குழு உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெளலட் சட்டத்தின் சாராம்சம்

ரௌலட் ஆணைய பரிந்துரைகளின் அடிப்படையில், பிரிட்டிஷ் அரசாங்கம் 1919 இல் ரௌலட் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் இந்தியர்களை பிணையம் இல்லாமல் கைது செய்யவும், விசாரணையின்றி சிறையில் அடைக்கவும், ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கவும், குறிப்பிட்ட இடங்களில் கட்டாயமாக வசிக்கவும், மேல்முறையீட்டு உரிமைகளை மறுக்கவும் அனுமதித்தது. 

இதற்கிடையில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ரௌலட் சட்டத்தை கடுமையாக எதிர்த்த இந்தியா, சுதந்திரத்திற்குப் பிறகு ரௌலட் சட்டத்தின் மறு உருவாக்கமாக மிசா, தடா, பொடா போன்ற சட்டங்களை இயற்றியது வேதனையுடன் குறிப்பிட வேண்டிய உண்மையாகும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

1919 இல் பைஷாகி பண்டிகையின் போது, ​​அமிர்தசரஸ் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஒன்றுகூடி, அகிம்சை வழியில் ரெளலட் சட்டத்திற்கு எதிராகவும், சுதந்திர ஆதரவாளர்களான சைபுதீன் கிட்ச்லேவ் மற்றும் சத்யபால் கைது செய்யப்பட்டதற்கும் எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டக் கூட்டத்தைக் கலைக்க, பிரிட்டிஷ் இராணுவத் தளபதி ரெஜினால்ட் டயர் உத்தரவின் பேரில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் சுமார் 10 நிமிடங்கள் துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொன்றனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று அழைக்கப்படும் இந்தப் படுகொலை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பிரதான நீரோட்டத்திற்கு வந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு இந்தியாவின் சுதந்திர வேட்கையில் காந்தியின் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கின் தொடக்கத்தைக் குறித்தது.

உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், பிரிட்டிஷ் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டிப்பதற்குப் பதிலாக காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசியதால் கலவரம் தூண்டப்பட்டது என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக சில இந்தியத் தலைவர்கள் பேசியது சர்ச்சையானது.

காந்தியின் அரசியல் நுழைவு

ரௌலட் சட்டத்திற்கு எதிராகவும் ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்தும் ஆகஸ்ட் 1920 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் இந்திய சுதந்திரப் போராட்டதில் ஒரு எழுச்சியை உருவாக்கியது. இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் சீர்திருத்தங்களுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற பிறகு தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் குறிக்கோள், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் இந்தியர்கள் ஒத்துழைப்பதை நிறுத்துவதன் மூலம் இந்தியாவிற்கு சுயாட்சி வழங்க பிரிட்டிஷ் அரசாங்கத்தை வற்புறுத்துவதாகும்.

ஒரு கட்டத்தில், ஒத்துழையாமை இயக்கத்தினருக்கும் பிரிட்டிஷ் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரி சௌரா என்ற நகரில் காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தில் 23 காவல் துறையினரும், 3 ஒத்துழையாமை இயக்க ஆர்வலர்களும் கொல்லப்பட்டனர். அகிம்சைப் போராட்டம் வன்முறையாக மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்தி, வன்முறைப் போராட்டங்களுக்கு எதிராகவும், சௌரி சௌரா வன்முறைக்கு வருத்தம் தெரிவிக்கவும் ஐந்து நாள் உண்ணாவிரதம் இருந்தார். இறுதியாக, பிப்ரவரி 1922 இல் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். மேலும், பலதரப்பட்ட அழுத்தத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் மார்ச் 1922 இல் ரெளலட் சட்டத்தை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
முடிவுரை

ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்ற நிகழ்வுகளின் வேதனையை உலகத்தால் மீண்டும் தாங்க முடியாது. எனவே, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும், இராணுவப் படையை சிக்கனமாகவும் கவனமாகவும் நியாயமாகவும் பயன்படுத்த வேண்டும், அதே நேரத்தில் அமைதியான போராட்டத்திற்கான அடிப்படை உரிமையை சமூக உரிமைகளின் அடித்தளமாக மதிக்க வேண்டும்.

விவரணைகள்

Jallianwala Bagh Massacre History


When India United In Grief For Jallianwala Bagh Massacre


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

போராடடா ஒரு வாளேந்தடா

போராடடா ஒரு வாளேந்தடா
# பழங்காலத்தில் மன்னர்களும் படை வீரர்களும் தங்களது போர்களில் வாளாதிருக்கவில்லை.

# அவர்கள் பல போர்களில் விவேகத்துடன் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

# அப்படிப்பட்ட போர்களில் முதன்மையான ஆயுதமாக இருந்தது வாள் அதாவது வாள் சண்டை தான்.

# வாள் ஏந்தி போராடுவது வீரத்தின் அடையாளம், வெற்றியின் அடையாளம் என கருதப்பட்டுள்ளது.

# பழங்காலத்தில் உலகின் பல நாடுகளுக்கு குறிப்பாக ரோமாபுரிக்கும் சிரியாவுக்கும் அதிகளவில் எஃகு வாள் (Wootz Steel) ஏற்றுமதி செய்தது தமிழ்நாட்டில் ஈரோட்டில் உள்ள "கொடுமணல்" என்ற வணிக நகரமாகும்.
# கொடுமணல் ஏற்றுமதி செய்த எஃகு (Wootz Ingot) மூலம் பற்பல வாள்கள் வடிவமைக்கப்பட்டன எடுத்துக்காட்டாக சிரியாவின் டமாஸ்கஸ் ஸ்டீல் (Damascus Steel).

# கொடுமணல் வாள் தான் உலகின் நவீன வாள் (Modern Swords) பயன்பாட்டுக்கும், கலப்பு உலோக ஆராய்ச்சிக்கும் (Alloys in Material Science) வித்திட்டது.

# சேரர்கள் ஆண்ட கொங்கு பகுதியில் கொடுமணல் வாள் உலகளவில் பிரபலமாக காரணம் அங்கே தான் இரும்பை (Iron) எஃகு (Steel) ஆக்கும் தொழில்நுட்பம் அறியப்பட்டுள்ளது.

# இன்றைய கொடுமணல் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் விதவிதமான வாள்கள், ரோமாபுரி காசுகள், வாள் தயாரிக்கும் கருவிகள் உட்பட நிறைய கிடைத்துள்ளது.

# மின்சாரத்தின் தந்தை (Father of Electricity) என்று அழைக்கப்படும் மைக்கேல் பாரடே (Michael Faraday) 1819 இல் கொடுமணல் வாள் பற்றி அதிகளவில் ஆராய்ச்சி செய்துள்ளார்.

# கொடுமணல் வாள் குறித்த மைக்கேல் பாரடேயின் ஆராய்ச்சி Material Science (Metallurgy) வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.

சுருக்கமாக

# வாள் ஏந்தி போராடியதன் வரலாற்று எச்சமாக இன்று பல நாடுகளில் வீரத்தின் அடையாளமாகவும் எதிரிகளை வீழ்த்த வேண்டியும் அரசியல் தலைவர்களுக்கு வாள் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

# பழங்கால தமிழ்நாட்டின் கொடுமணல் வாள் தான் உலக பிரசித்தம் அவ்வகையில் எஃகு குறித்த ஆராய்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது கொடுமணல் வாள்.

விவரணைகள்

Wootz Steel Before European Industrial Revolution 


Alexander Wanted Steel From Tamil Nadu


Wootz Steel Story Presentation


Kodumanal - The City That Clothed Rome


Technology of Iron and Steel In Tamil Nadu


Kodumanal - Archaeology Department


Present Indian Steel Industry


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Sunday, May 16, 2021

கணினியியல் நிபுணர் அலன் டூரிங்

கணினியியல் நிபுணர் அலன் டூரிங்
சுருக்கம் 
  1. பிறப்பு
  2. கிறிஸ்டோபர் மோர்காம் 
  3. ஜோன் கிளார்க்
  4. இரண்டாம் உலகப்போர்
  5. டூரிங் சோதனை
  6. செயற்கை நுண்ணறிவு
  7. நீதிமன்ற தண்டனை 
  8. இறப்பு 
  9. முடிவுரை 
  10. விவரணைகள்
பிறப்பு (Birth)

23 ஜூன் 1912 அன்று இங்கிலாந்தில் ஜூலியஸ் மதிசன் டூரிங் மற்றும் எத்தேல் சாரா ஸ்டோனி ஆகியோருக்கு இளைய மகனாக அலன் டூரிங் பிறந்தார். அலன் டூரிங்கின் மூத்த சகோதரர் ஜான் டூரிங் ஆவார்.

கிறிஸ்டோபர் மோர்காம் (Christopher Morcom)

அலன் டூரிங்கின் கணிதவியல் (Mathematics), குறியாக்கவியல் (Cryptography), கணினியியல் (Computer) ஆர்வத்திற்கு தூண்டுகோலாக அமைந்தவர் அவருடைய பள்ளிக்கால தோழர் கிறிஸ்டோபர் மோர்காம் கிறிஸ்டோபர் மோர்காம் 13 பிப்ரவரி 1930 அன்று காசநோயால் இறந்ததை அறிந்து துடிதுடித்து போனார் அலன் டூரிங்.

ஜோன் கிளார்க் (Joan Clarke)

அலன் டூரிங் மற்றும் ஜோன் கிளார்க் ஆகிய இருவருக்கும் 1941 அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது பின்னர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி நடக்க இருந்த திருமணத்தை தடுத்தவர் அலன் டூரிங். இத்தகைய சூழலில் அலன் டூரிங்கின் இறுதிக்காலம் வரை நெருங்கிய தோழியாக இருந்தவர் ஜோன் கிளார்க்.

இரண்டாம் உலகப்போர் (Second World War)

இரண்டாம் உலகப்போரில் எனிக்மா இயந்திரம் (Enigma Machine) மூலம் ஜெர்மனி போர் திட்டங்களை வகுத்து வந்தது. ஜெர்மனியின் போர்த்திட்டங்களை முன்கூட்டியே அறிந்திட எனிக்மா இயந்திரத்தின் செய்திகளை படித்தறியும் தேவை இங்கிலாந்துக்கு இருந்தது. இங்கிலாந்துக்காக ஜெர்மனியின் எனிக்மா இயந்திரத்தின் ரகசிய செய்திகளை தனது பாம்பே இயந்திரம் (Bombe Mahine) மூலம் மறைவிலக்கி (Decrypt) முறியடித்தார் லண்டனை சேர்ந்த கணிதவியலாளர் அலன் டூரிங்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்க "முக்கிய காரணம்" என்று சொல்வதைவிட "ஒரே காரணம்" அலன் டூரிங் தான். அலன் டூரிங் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சி மூலம் எனிக்மா இயந்திரத்தை மறைவிலக்கி ஜெர்மனியின் போர்த்திட்டங்களை முன்கூட்டியே அறிந்து இங்கிலாந்தினர் முறியடித்ததின் வாயிலா இரண்டாம் உலகப்போர் 2 ஆண்டுகளுக்கு முன்பே முற்று பெற்று 2 கோடி உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.

டூரிங் சோதனை (Turing Test)

தனது பாம்பே இயந்திரம் (Bombe Machine) வெற்றி பெற்ற பிறகு அலன் டூரிங் தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதன் விளைவாக 1950 இல் கணினி இயந்திரம் மற்றும் நுண்ணறிவு (Computing Machinery and Intelligence) என்னும் தலைப்பில் புதியதோரு ஆராய்ச்சியை மனம் இதழில் (Mind Journal) சமர்ப்பித்தார். கணினியால் சிந்திக்க முடியுமா? என்ற இவ்வாராய்ச்சியின் முக்கிய சாராம்சமாக டூரிங் சோதனை அமைந்தது.

இயந்திரம் மனிதனுடன் உரையாடி ''நாம் மனிதனுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறோம்'' என அவரை நம்ப வைக்க வேண்டும். அப்படி அந்த நபர் நாம் மனிதனுடன்தான் உரையாடிக்கொண்டிருக்கிறோம் என நம்பினால் அந்த இயந்திரம் டூரிங் சோதனையை வென்றது மாறாக நாம் இயந்திரத்துடன் உரையாடுகிறோம் என மனிதன் கண்டறிந்துவிட்டால் அந்த இயந்திரம் டூரிங் சோதனையில் தோல்வியடைந்ததாகப் பொருள்படும்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

அலன் டூரிங் வடிவமைத்த கணினி கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கு வித்திட்டவர் ஜோன் மெக்கார்த்தி (John McGrathy). சுருங்கச்சொன்னால் இன்றைய இயந்திர வழி கற்றலுக்கு (Machine Learning) முன்னோடி டூரிங் சோதனை (Turing Test).

நீதிமன்ற தண்டனை (Court Sentences)

1952 அன்று ஓரினச்சேர்க்கை (Gay) வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் அலன் டூரிங்கை குற்றவாளி என தீர்ப்பளித்து சிறை (Prison) அல்லது மருத்துவ தகுதிகாண் (Probation) அடிப்படையில் வேதியியல் வார்ப்பு (Chemical Castration) சிகிச்சையை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கிய போது தனது ஆராய்ச்சிகளை தொடர ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்தில் மருத்துவ தகுதிகாண் வாய்ப்பை தேர்ந்தெடுத்தார் ஆலன் டூரிங். ஆனால் மருத்துவ ரீதியாக மேற்கொண்ட தொடர் சிகிச்சை முறைகள் ஆலன் டூரிங் உடலின் ஹார்மோன்களை (Hormone) சிதைத்து விட்டது.

இறப்பு (Death)

7 ஜூன் 1954 அன்று தவறுதலாக சயனைடு விஷ புகையை உள்ளிழுத்ததால் (Accidental Cyanide Poison) இறந்தார் அல்லது இங்கிலாந்து அரசின் ரகசிய உளவு அமைப்பு கொலை செய்தது அல்லது மருத்துவ சிகிச்சை ஏற்படுத்திய மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார் என்று அலன் டூரிங்கின் மரணம் குறித்த சதிவலைகள் இன்றும் அவிழாத முடிச்சுகளாக உள்ளது. எப்படி நோக்கினும் இறுதி காலத்தில் சமூகத்தில் மதிப்பற்று தனித்து விடப்பட்டார் அலன் டூரிங் என்பது கசப்பான உண்மையாகும்.

முடிவுரை (Conclusion)

# 1966 முதல் கணினி துறையின் நோபல் பரிசு என்று மெச்சப்படும் டூரிங் பரிசு (Turing Award) அலன் டூரிங் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.

# 2013 அன்று லண்டன் ராயல் அமைப்பு அலன் டூரிங் ஓரினச்சேர்க்கை செயலுக்கு மன்னிப்பு வழங்கியது.

# 2014 அன்று வெளிவந்த The Imitation Game அலன் டூரிங் வாழ்க்கை வரலாறை தழுவிய வெற்றி திரைப்படமாகும்.

# இங்கிலாந்தில் ₤ 50 நோட்டுக்கு அலன் டூரிங் முகம் பொறிக்கப்பட்டு ஜூன் 2021 இல் புழக்கத்திற்கு வரவிருக்கிறது.

# LGBT உரிமைகளுக்கு ஐகான், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கு முன்னோடி அலன் டூரிங் என்றென்றும் போற்றத்தக்கவர்.

மக்கள் பணி ஆற்றும் சாதனையாளர்களை,

கொண்டாடினாலும் தீராது!

அழுதாலும் தீராது!

விவரணைகள் (Reference)

Alan Turing - Celebrating The Life Of A Genius


Alan Turing - Crash Course Computer Science


Alan Turing - Betrayed By The Country He Saved


Alan Turing's Bombe Machine


Apple Logo Story


Alan Turing Helped Win WW 2 And Was Thanked With Criminal Prosecution


The Imitation Game Movie


Modern Computers And Turing Test


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான்

பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமான் பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட...