Chocks: கடந்த 60 வருட அமெரிக்க அதிபர் அரசியல்

Friday, November 12, 2021

கடந்த 60 வருட அமெரிக்க அதிபர் அரசியல்

கடந்த 60 வருட அமெரிக்க அதிபர் அரசியல்

சுருக்கம்
  1. முகவுரை
  2. பதவிக்காலம்
  3. ஜான் F கென்னடி
  4. லின்டன் B ஜான்சன்
  5. ரிச்சர்ட் நிக்சன்
  6. ஜெரால்டு போர்டு
  7. ஜிம்மி கார்ட்டர்
  8. ரொனால்ட் ரீகன்
  9. ஜார்ஜ் HW புஷ்
  10. பில் கிளின்டன்
  11. ஜார்ஜ் W புஷ்
  12. பராக் ஒபாமா
  13. டொனால்ட் டிரம்ப்
  14. முடிவுரை
  15. விவரணைகள் 
முகவுரை

இன்று உலகின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியாக கருதப்படுவது அமெரிக்க அதிபர் பதவி. அமெரிக்க அதிபர், ஆளுநர், செனட்டர் உட்பட பல்வேறு அரசியல்வாதிகள் அரசியலில் குதிப்பதற்கு முன் பெரும்பாலும் ராணுவப்படை, கடற்படை, விமானப்படை, காவல்படை, ஆய்வகம் என்று ஏதாவது ஒன்றில் பணியாற்றி இருப்பார்கள். மேலும் பெரும்பாலான அமெரிக்க அரசியல்வாதிகள் சட்டப்படிப்பு கல்வியை பயின்று இருப்பார்கள். அமெரிக்காவில் பல்துறை வாய்ப்புகளை வழங்கக்கூடிய சட்டப்படிப்பானது பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்புக்கு இணையாக கருதப்படுகிறது. இந்தியாவில் அதிகளவில் சட்டம் பயின்ற அரசியல்வாதிகள் தி.மு.கவிலும் காங்கிரஸிலும் இருப்பது கவனிக்கத்தக்கது.
பதவிக்காலம்

பதவி வகிக்கும் காலம், பதவி சேவை காலம், பதவி ஏற்கும் நாள், பதவி விலகும் நாள் என அனைத்தும் ஒன்றிய அரசால் இயற்றப்பட்ட சட்டத்தின் படி நடைபெறுகிறது. அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. ஒருவர் அதிகபட்சமாக 2 முறை அதிபர் பதவியை (4*2=8 ஆண்டுகள்) வகிக்கலாம். நவம்பர் மாதத்தின் (நவம்பர் 2 முதல் 8 வரைக்குள்) முதல் வார திங்கள் கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய் கிழமை அன்று அமெரிக்கா அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. 

1932 வரை நவம்பரில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து புதிய அதிபர் மார்ச் 4 அன்று பதவியேற்பதே வழக்கமானது. தேர்தல் வாக்குகளை எண்ணி இறுதி முடிவை வெளியிடுவது, நாட்டின் தலைநகருக்கு மக்கள் பயணம் செய்வது தாமதாவது என்று நவம்பர் முதல் மார்ச் வரை 4 மாத கால இடைவெளி பல்வேறு நிர்வாக இடையூறுகளை ஏற்படுத்தி வந்ததால் 23-01-1933 அன்று அங்கீகரிக்கப்பட்ட 20 வது சட்ட திருத்தம் மூலம் தேர்தல் நாள் மற்றும் பதவியேற்பு நாள் இடைவெளி குறைக்கப்பட்டது. அதன் மூலம் மார்ச் 4 க்கு பதிலாக ஜனவரி 20 அதிபரின் முதல் தொடக்க நாளாகவும் காங்கிரஸின் முதல் கூட்டம் மார்ச் 4 க்கு பதிலாக ஜனவரி 3 ஆகவும் மாற்றப்பட்டது.
03-11-1936 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வென்ற பிராங்க்ளின் D ரூஸ்வெல்ட் முதல் முறையாக 1937 மார்ச் 4 க்கு பதிலாக 1937 ஜனவரி 20 அன்று அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். 1936 முதல் நடைபெற்ற அனைத்து அதிபர் பதவியேற்பும் ஜனவரி 20 அன்றே நடைபெற்று வருகிறது.

# பதவி வகிக்கும் காலம் = 4 ஆண்டுகள்

# பதவி சேவை காலம் = 8 ஆண்டுகள் (4*2=8)

# பதவி ஏற்கும் நாள் = ஜனவரி 20

# பதவி விலகும் நாள் = ஜனவரி 20

1961 முதல் 2021 ஆகிய 60 ஆண்டுகளில் அதிபர் பதவியை 8 ஆண்டுகள் முழுமை செய்தது ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன், ஜார்ஜ் W புஷ், பராக் ஒபாமா ஆகிய நால்வர் மட்டுமே (4*8=32 ஆண்டுகள்).

ஜான் F கென்னடி

20-01-1961 முதல் 22-11-1963 வரை ஜான் F கென்னடி அதிபராக இருந்தார். 1960 இல் முதல் முறையாக அதிபர் தேர்தலுக்கு போட்டிட்டு வென்ற ஜான் F கென்னடி பதவிக்காலம் முடிவடையும் முன்னராகவே படுகொலை செய்யப்பட்டார். 22-11-1963 அன்று டல்லாஸ் மாநகரில் அமெரிக்க அதிபர் ஜான் F கென்னடி படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் அமெரிக்காவின் அடுத்தடுத்த அதிபர்கள் லின்டன் B ஜான்சன், ரிச்சர்ட் நிக்சன், ஜார்ஜ் HW புஷ் ஆகியோர் டல்லாஸ் மாநகரில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற தங்கி இருந்தது இன்று வரை சர்ச்சைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. 22-11-1963 அன்று ஜான் F கென்னடி படுகொலைக்கு பிறகு 20-01-1981 வரை 4 அதிபர்கள் முறையே லின்டன் B ஜான்சன், ரிச்சர்ட் நிக்சன், ஜெரால்டு போர்டு, ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் அதிபர் பதவியை 2 முறை முழுமையாக வகிக்கவில்லை.

1917 முதல் அமெரிக்காவில் நாடகம், இசை, இலக்கியம் மற்றும் ஊடகவியல் துறைகளில் சாதனை புரிந்தோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுவது புலிட்சர் பரிசு. 1957 இல் செனட்டராக இருந்த ஜான் F கென்னடி Profiles in Courage என்ற நூலிற்காக புலிட்சர் பரிசை பெற்றார். இப்பரிசை பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் ஜான் F கென்னடி ஆவார்.
25-05-1961 அன்று "பத்தாண்டுகள் முடிவதற்குள் ஒரு மனிதனை நிலவில் இறக்கி அவரை பத்திரமாக பூமிக்கு திருப்பி அனுப்பும் இலக்கை அடைய அமெரிக்கா தன்னை அர்ப்பணிக்கும்" என்று அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் வியத்தகு விரிவாக்கம் குறித்து அதிபர் ஜான் F கென்னடி பேசினார். 1963 இல் ஜான் F கென்னடி மறைந்துவிட்டாலும் 20-07-1969 அன்று அப்பல்லோ 11 திட்டத்தின் கீழ் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் மேற்பரப்பில் இறங்கியபோது ஜான் F கென்னடி முன்னெடுத்த இலக்கு அடையப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் சிவில் உரிமைகளை பெறவும் இன பிரிவினையை முடிவுக்கு கொண்டு வரவும் போராட்டம் நடைபெற்று வந்த காலகட்டத்தில் 11-06-1963 அன்று அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட அமெரிக்காவில் இன பாகுபாடு சமூக உறவுகளை பாதிக்கிறது என்றும் உள்நாட்டில் பாகுபாட்டை போதிக்கும் போது சர்வதேச அளவில் சுதந்திரத்தை நாம் போதிக்க முடியாது என்றும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை, சமனான சட்டம், கல்வி வாய்ப்பு, பொது வசதி பெறும் வகையில் அமெரிக்கர்களின் சிவில் உரிமைகளை பாதுகாத்திடும் சட்டத்தை காங்கிரஸ் இயற்றிட வேண்டினார் அதிபர் ஜான் F கென்னடி. 

சகோதரர் ராபர்ட் F கென்னடி தலையீடு, கியூபா ஏவுகணை நெருக்கடி, மர்லின் மன்றோ தொடர்பு, பறக்கும் தட்டு ஆராய்ச்சி போன்றவை ஜான் F கென்னடி அரசியலின் சர்ச்சைக்குரிய பக்கமாகும்.

லின்டன் B ஜான்சன்

22-11-1963 முதல் 20-01-1965 மற்றும் 20-01-1965 முதல் 20-01-1969 வரை லின்டன் B ஜான்சன் அதிபராக இருந்தார். 22-11-1963 அன்று ஜான் F கென்னடி மறைவு காரணமாக துணை அதிபராக இருந்த லின்டன் B ஜான்சன் உடனடியாக அதிபராக பதவியேற்றார்.
02-07-1964 அன்று அமெரிக்காவில் அநீதியின் கடைசி அடிச்சுவடுகளை அகற்ற வேண்டும் என்று கூறி ஜான் F கென்னடி விரும்பிய சிவில் உரிமைகள் சட்டத்தில் கையெழுத்திட்டார். 1964 இல் முதல் முறையாக அதிபர் தேர்தலுக்கு போட்டிட்டு வென்ற லின்டன் B ஜான்சன் 1968 இரண்டாம் முறைக்கு அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை.

ரிச்சர்ட் நிக்சன்

20-01-1969 முதல் 20-01-1973 மற்றும் 20-01-1973 முதல் 09-08-1974 வரை ரிச்சர்ட் நிக்சன் அதிபராக இருந்தார். 1968 இல் முதல் முறையாக அதிபர் தேர்தலுக்கு போட்டிட்டு வென்ற ரிச்சர்ட் நிக்சன் 1972 இரண்டாம் முறையாகவும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால் அமெரிக்க அரசியல் வரலாறை புரட்டிப்போட்ட வாட்டர்கேட் ஊழல் காரணமாக அதிபர் பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய இயலாமல் ராஜினாமா செய்ய வேண்டிய இழுக்கை பெற்ற முதலும் கடைசியுமான அமெரிக்க அதிபரானார் ரிச்சர்ட் நிக்சன்.
வாட்டர்கேட் ஊழல் குறித்து சுருக்கமாக சொல்வதென்றால் "1972 இல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் குடியரசு கட்சியை சேர்ந்த ரிச்சர்ட் நிக்சன் தலைமையில் இயங்கிய அந்தரங்க குழு அதிகார துஷ்பிரயோகம் செய்து ஜனநாயக கட்சி தலைவர்களின் நடவடிக்கைளை கண்காணித்தது, உரையாடல்களை ஒட்டுக்கேட்டது". 1972 முதல் 1974 காலகட்டத்தில் நடைபெற்ற வாட்டர்கேட் ஊழல் குற்றச்சாட்டை மறுத்து வந்த ரிச்சர்ட் நிக்சன் பின்னர் 09-08-1974 அன்று அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இந்திய அரசியலில் பா.ஜ.க ஆட்சியின் கீழ் நடைபெற்ற பெகாசஸ் சம்பவம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியது.

ஜெரால்டு போர்டு

09-08-1974 முதல் 20-01-1977 வரை ஜெரால்டு போர்டு அதிபராக இருந்தார். 10-10-1973 அன்று கையூட்டு, வரி ஏய்ப்பு போன்ற குற்றச்சாட்டு காரணமாக துணை அதிபர் ஸ்பைரோ அக்நியூ ராஜினாமா (வாட்டர் கேட் ஊழலும் 1972-1974 காலகட்டத்தில் தான் நடைபெற்றது) செய்ய அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பரிந்துரையின் பெயரில் ஜெரால்டு போர்டு 06-12-1973 அன்று துணை அதிபரானார். 09-08-1974 அன்று வாட்டர்கேட் ஊழல் காரணமாக அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா செய்ய துணை அதிபரான ஜெரால்டு போர்டு உடனடியாக அதிபரானார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிபர் / துணை அதிபர் தேர்தலை சந்திக்காமல் துணை அதிபர் பின்னர் அதிபர் பதவிகளை அலங்கரித்த ஒரே அரசியல்வாதி ஜெரால்டு போர்டு ஆவார்.
அமெரிக்க அரசியல் உலகில் வாட்டர்கேட் ஊழலால் உருவான பிளவை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக விளக்கமளித்து முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் செய்த ஊழல் குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கி சர்ச்சைக்குரிய நடவடிக்கையை எடுத்தார் அதிபர் ஜெரால்டு போர்டு. வாட்டர்கேட் ஊழலுக்குப் பின் மற்றும் வியட்நாம் போரின் இறுதி காலகட்டத்தில் அதிபராக பதவியேற்ற ஜெரால்டு போர்டு 1976 இல் முதல் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஜிம்மி கார்ட்டர்

20-01-1977 முதல் 20-01-1981 வரை ஜிம்மி கார்ட்டர் அதிபராக இருந்தார். 1977 இல் முதல் முறையாக அதிபர் தேர்தலுக்கு போட்டிட்டு வென்ற ஜிம்மி கார்ட்டர் 1980 இரண்டாம் முறைக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பொருளாதார கொள்கை மற்றும் வெளியுறவு கொள்கை குளறுபடி, 1979 எண்ணெய் நெருக்கடி தாக்கத்தால் ஜிம்மி கார்ட்டர் 1980 தேர்தலில் தோல்வியடைந்தார்.
ரொனால்ட் ரீகன்

20-01-1981 முதல் 20-01-1989 வரை ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தார். 1980 மற்றும் 1984 ஆகிய இரு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ரொனால்ட் ரீகன்.
அரசாங்க செலவினங்களை குறைத்தல், வரி விகிதத்தை குறைத்தல், அரசாங்க ஒழுங்குமுறைகளை குறைத்தல் மற்றும் பணவீக்கத்தை குறைக்க பண விநியோகத்தை இறுக்கமாக்குதல் ஆகிய நான்கு பொருளாதார முயற்சிகளை ரொனால்ட் ரீகன் மேற்கொண்டார். ரீகானோமிக்ஸ் என அழைக்கப்படும் இந்த நான்கு திட்டங்களின் முடிவுகளும் இன்று வரை விவாத பொருளாக மாறியிருக்கிறது. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலம் நிலவி வந்த பனிப்போர் அரசியலை முடிவுக்கு கொண்டுவந்தவர் ரொனால்ட் ரீகன்.

சதாம் உசேன் செய்த அட்டூழியங்களை கண்டும் காணாமலும் புறக்கணித்தது, முஜாஹிதீன் - அல் கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்கள் வளர வழிவகை செய்தது, ஈரான் - ஈராக் நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கியது ரொனால்ட் ரீகன் அரசியலின் சர்ச்சைக்குரிய பக்கமாகும்.

ஜார்ஜ் HW புஷ்

20-01-1989 முதல் 20-01-1993 வரை ஜார்ஜ் HW புஷ் அதிபராக இருந்தார். 1988 இல் முதல் முறையாக அதிபர் தேர்தலுக்கு போட்டிட்டு வென்ற ஜார்ஜ் HW புஷ் 1992 இரண்டாம் முறைக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி, பங்குச்சந்தை தடுமாற்றம், எண்ணெய் விலை உயர்வு, சேமிப்பு மற்றும் கடன் நெருக்கடி (S & L என்பார்கள்), சோவியத் யூனியனின் பிரிவினை, தலைவருக்குரிய கவர்ச்சி (Charisma) குறைபாடு உட்பட பல்வேறு காரணங்கள் ஜார்ஜ் HW புஷ் 1992 தோல்விக்கு வித்திட்டது. ஒரு முறை அதிபராக இருந்த ஜார்ஜ் HW புஷ்க்கு அவரது மகனும் பல்வேறு சர்ச்சைக்கு சொந்தக்காரருமான ஜார்ஜ் W புஷ் இரு முறை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில் கிளின்டன்

20-01-1993 முதல் 20-01-2001 வரை பில் கிளின்டன் அதிபராக இருந்தார். 1992 மற்றும் 1996 ஆகிய இரு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் பில் கிளின்டன். பில் கிளின்டனுக்கு பிடித்த அரசியல்வாதி ஜான் F கென்னடி என்பது குறிப்பிடத்தக்கது. வெளியுறவு கொள்கையை சீராக்கியது, ரஷ்யாவுடன் நல்லுறவை பேணியது, சுற்றுச்சூழல் மேம்பாடு, அமெரிக்க ராணுவத்தில் நவீனமயமாக்கல், சுகாதார சீர்திருத்த முயற்சி, எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது, GPS ஆராய்ச்சிக்கு வித்திட்டது என்று பல்வேறு செயல்பாடுகளை பில் கிளின்டன் நிறைவேற்றினார்.
பவுலா ஜோன்ஸ் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கு, மோனிகா லெவின்ஸ்கி உடனான உறவு, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்தது, விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதியை குறைத்தது, 2000 ஆம் ஆண்டில் அல்-கொய்தா பயிற்சி முகாமில் ஒசாமா பின்லேடனை கொல்லும் வாய்ப்பு இருந்தும் அவரை உயிருடன் பிடிக்குமாறு உத்தரவிட்டது (இதன் பிறகே 11-09-2001 அன்று அமெரிக்க உலக வர்த்தக மையக் கட்டடத்தின் தாக்குதல் நடைபெற்றது) போன்றவை பில் கிளின்டன் அரசியலின் சர்ச்சைக்குரிய பக்கமாகும்.

// பில் கிளின்டன் - மோனிகா லெவின்ஸ்கி - பவுலா ஜோன்ஸ் - லிண்டா டிரிப் //
07-01-1998 = பில் கிளின்டனை பாலியல் துன்புறுத்தலுக்கு குற்றம் சாட்டிய பவுலா ஜோன்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மோனிகா லெவின்ஸ்கி பில் கிளின்டனுடன் ஒருபோதும் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்று பிரமாண வாக்குமூலம் அளித்தார்.

12-01-1998 = மோனிகா லெவின்ஸ்கி கொடுத்த பிரமாண வாக்குமூலத்திற்கு முரணானதாக பில் கிளின்டன் - மோனிகா லெவின்ஸ்கி உரையாடல் டேப்களைப் வழக்கறிஞர் கென்னத் ஸ்டாரிடம் லிண்டா டிரிப் அளித்தார். மோனிகா லெவின்ஸ்கியின் நெருங்கிய நண்பராக பென்டகன் அலுவலகத்தில் பணியாற்றியதாகவும் அதிபர் பில் கிளின்டன் உறவு பற்றி மோனிகா லெவின்ஸ்கி தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் லிண்டா டிரிப் கூறினார்.

26-01-1998 = மோனிகா லெவின்ஸ்கி உடன் தான் உடலுறவு கொள்ளவில்லை என்று தொலைக்காட்சி வாயிலாக பில் கிளின்டன் பேசினார்.

29-07-1998 = நடுவர் மன்றம் (Grand Jury) முன் தானாக முன்வந்து சாட்சியமளிக்க பில் கிளின்டன் ஒப்புக்கொண்டார்.

17-08-1998 = நடுவர் மன்றம் (Grand Jury) முன் மோனிகா லெவின்ஸ்கி உடன் தனது பொருத்தமற்ற நெருக்கமான தொடர்பை ஒப்புக்கொண்டார் பில் கிளின்டன். அன்று மாலை தொலைக்காட்சி உரையில் நாட்டு மக்களிடம் மோனிகா லெவின்ஸ்கியுடன் தனக்கு உறவு இருந்ததை முதல்முறையாக ஒப்புக்கொண்டார். உண்மையில் நடந்த தவறுக்கு நான் மட்டுமே முழு பொறுப்பு என்றார்.

11-09-1998 = வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு காங்கிரஸ் வெளியிட்டது. அடுத்தடுத்த நாட்களில் பில் கிளிண்டனின் சாட்சியத்தின் வீடியோ, பில் கிளின்டன் - மோனிகா லெவின்ஸ்கி தொலைபேசி உரையாடல் அறிக்கை வெளியிடப்பட்டன.

19-12-1998 = மோனிகா லெவின்ஸ்கி உடனான உறவை மறைத்து பொய்ச் சாட்சியம் அளித்ததாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்து நீதியை தடுத்தாகவும் பில் கிளின்டன் மீது குடியரசுக் கட்சி குற்றஞ்சாட்டி அவரது பதவி நீக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றியது.

12-02-1999 = செனட் சபை குற்றச்சாட்டு விசாரணையை முடித்து பில் கிளின்டனை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தனர்.

19-01-2001 = புதிய அதிபர் தலைமையேற்கும் முன்னர் கடந்த அதிபர் காலத்தில் அரசியல் பணி நியமனம் பெற்றவர்கள் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுவர். அவ்வாறு ராஜினாமா செய்ய மறுத்த காரணத்தால் பில் கிளின்டன் நிர்வாகத்தின் இறுதி நாளில் மோனிகா லெவின்ஸ்கி விசாரணையில் முக்கிய பங்காற்றிய  லிண்டா டிரிப் பணி நீக்கம் செய்யப்பட்டார். 

ஜார்ஜ் W புஷ்

20-01-2001 முதல் 20-01-2008 வரை ஜார்ஜ் W புஷ் அதிபராக இருந்தார். 2000 மற்றும் 2004 ஆகிய இரு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜார்ஜ் W புஷ்.
9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவை மீண்டும் கட்டமைத்தது, ராணுவத்தை பலப்படுத்தியது, தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது, வெளியுறவு கொள்கை மேம்படுத்தியது, உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்தது போன்ற பல்வேறு செயல்பாடுகளை ஜார்ஜ் W புஷ் நிறைவேற்றினார்.

பெரும் மந்த நிலை, பொருளாதார சீர்கேடு, தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் உளவு, 9/11 தாக்குதல், ஈராக் போர், உரிய விசாரணையின்றி தூக்கிலிடப்பட்ட சதாம் உசேன் போன்றவை ஜார்ஜ் W புஷ் அரசியலின் சர்ச்சைக்குரிய பக்கமாகும்.

பராக் ஒபாமா

20-01-2008 முதல் 20-01-2017 வரை பராக் ஒபாமா அதிபராக இருந்தார். 2008 மற்றும் 2012 ஆகிய இரு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு முதல் கறுப்பின அதிபராக வென்றார் பராக் ஒபாமா.
பெரும் மந்த நிலையில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுத்தது, ஒபாமா மருத்துவ காப்பீடு திட்டம், வாகனத் துறையின் மறுமலர்ச்சி, புவி வெப்பமடைதலுக்கு எதிரான ஒழுங்குமுறைகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை பராக் ஒபாமா நிறைவேற்றினார்.

ஒபாமாவின் குடியுரிமை மற்றும் மத நம்பிக்கை பற்றிய தெளிவின்மை, துப்பாக்கி கலாச்சாரம், உள்நாட்டு கடன் சுமை அதிகரித்தது, நிர்வாக குளறுபடி, பாகிஸ்தான் அரசின் அனுமதியின்றி அந்நாட்டிற்குள் நுழைந்து ஒசாமா பின்லேடன் படுகொலை செய்யப்பட்டது போன்றவை பராக் ஒபாமா அரசியலின் சர்ச்சைக்குரிய பக்கமாகும்.

டொனால்ட் டிரம்ப்

20-01-2017 முதல் 20-01-2021 வரை டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தார். 2016 தேர்தலில் முதல் முறையாக அதிபர் தேர்தலுக்கு போட்டிட்டு வென்ற டொனால்ட் டிரம்ப் 2021 தேர்தலில் இரண்டாம் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (Trans-Paicific Partnership) அமெரிக்காவிற்கு மோசமான ஒப்பந்தம் என்றும், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) அமெரிக்க நாட்டிற்கு பேரழிவு என்றும், ஈரான் அணுசக்தி (Iran Nuclear Deal) ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்றும், உலக சுகாதார நிறுவனத்திற்கு (World Health Organisation) நிதி பங்களிப்பு தேவையற்றது என்று பல்வேறு விமர்சனங்களை செய்து அவற்றிலிருந்து அமெரிக்க அரசாங்கம் விலக டிரம்ப் ஆணை பிறப்பித்தார். மேலும் உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) அமெரிக்காவிற்கு எதிராக நியாயமற்ற முறையில் செயல்படுகிறது என்றும், நேட்டோ (NATO) வரி செலுத்தும் அமெரிக்க மக்களுக்கு நியாயமாக இல்லை என்றும், இதுவரை செய்யப்பட்ட மிக மோசமான வர்த்தக ஒப்பந்தம் நாப்டா (NAFTA) என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரமான ஒப்பந்தம் கோரஸ் (KORUS) என்றும் தொடர்ந்து ஒப்பந்தங்களை பாதுகாப்பதை விட அல்லது தேவையான மாற்று கொள்கைகளை உருவாக்குவதை விட டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தங்களை விட்டு விலகுவதில் அல்லது கண்டிப்பதில் சிறந்து விளங்கினார் என்பது அமெரிக்க ஊடகவியலாளர்களின் கருத்தாகும்.

வலதுசாரி தொழிலதிபர்களை மகிழ்வித்தது, குடும்ப உறுப்பினர்களை உயர் அரசாங்க பதவியில் அமர்த்தியது, இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியது, வடக்கு சிரியாவிலிருந்து பிரச்சனைகளை முழுமையாக தீர்க்காமல் அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெற்றது, இறக்குமதி கட்டணங்களை அதிமாக விதித்து சீனாவுடன் வர்த்தக யுத்தத்தைத் தூண்டியது, சட்டவிரோத இடம்பெயர்வுகளைத் தடுப்பதற்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைத் திட்டம் என தனது ஆட்சிக் காலத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் ஆட்சி செய்து வந்தார் டொனால்ட் டிரம்ப்.

முடிவுரை

2020 இல் முதல் முறையாக அதிபர் தேர்தலுக்கு 78 வயதில் போட்டிட்டு வென்ற ஜோ பிடென் 2024 இரண்டாம் முறைக்கு அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2020 இல் முதல் பெண், முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய - அமெரிக்கர் என்ற அடிப்படையில் 56 வயதில் துணை அதிபரானார் கமலா ஹாரிஸ். துணை அதிபராக இருப்பவர் ஒரு கட்டத்தில் அதிபராக வெல்வது அமெரிக்க அரசியல் நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவில் தற்போதைய அரசியல் சூழல் தொடர்ந்தால் 2024 அல்லது 2028 அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் அமெரிக்கா அதிபராகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

விவரணைகள் 

American Presidency History


JFK Assassination in Tamil


Cuban Missile Crisis History


Clinton - Monica Lewinsky Scandal


Richard Nixon - Watergate Scandal


9/11 Impact Anatomy


President George W Bush's address to the nation after 9/11 attacks


Obama Healthcare


// Mini Biography //

35th President JFK


36th President LBJ


37th President Richard Nixon


38th President Gerald Ford


39th President - Jimmy Carter


40th President Ronald Reagan


41st President George HW Bush


42nd President Bill Clinton


43rd President George W Bush


44th President Barack Obama


45th President Donald Trump


46th President Joe Biden


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...