Chocks: January 2022

Saturday, January 29, 2022

நீரின் நண்பர்

நீரின் நண்பர்

சுருக்கம்
  1. முகவுரை
  2. பயிற்சியும் தொடக்கமும்
  3. திருப்புமுனையும் சாதனையும்
  4. வாய்ப்பும் ஓய்வும்
  5. கல்வியும் வேலையும்
  6. நண்பன் விளையாட்டு அறக்கட்டளை
  7. முடிவுரை
  8. விவரணைகள்
முகவுரை

விளையாட்டுகளில் பங்கேற்பதன் மூலம் ஆண்களும் பெண்களும் உடல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் வலிமை பெற்றவர்களாக இருக்க வேண்டுமென தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பேசியிருக்கிறார். அப்படியாக விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட ஒருவர் ஈரோட்டில் பிறந்தார்.

குற்றாலத்துக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல், இவர் பெயருக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு மட்டுமல்ல நீரிலே தான் இவரது விளையாட்டு வாழ்வு தொடங்கியது. ஆம், சரியாக கணித்துவிட்டீர்கள்! குற்றாலீஸ்வரனை பற்றித் தான் காண இருக்கிறோம்.

பயிற்சியும் தொடக்கமும்

8 நவம்பர் 1981 அன்று வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் சிவகாமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் குற்றாலீஸ்வரன். அவர் ஒரு மாத குழந்தையாக இருந்த போதே குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது.
பெற்றோர் ஊக்குவிப்பும் சென்னை D.A.V பள்ளியின் ஆதரவும் குற்றாலீஸ்வரனின் நீச்சல் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தது. குழந்தை பருவத்திலே நீச்சல் விளையாட்டில் ஆர்வம் செலுத்தியவர் இளம் வயதிலே முறையான நீச்சல் பயிற்சி பெற தொடங்கினார். முதல் முதலாக மாவட்ட அளவிலான "Ribbon Meet” எனப்படும் நீச்சல் போட்டியில் பங்கேற்று ஆறாவது இடத்தை பெற்றார். பின்னர் கடலில் 5 கிலோமீட்டர் நீச்சல் போட்டியில் பங்கேற்று நான்காவது இடத்தைப் பெற்றார். 1990 களில் பல மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்.

திருப்புமுனையும் சாதனையும்

பெரும்பாலும் குளங்களில் நீந்தி வெல்வதை சலிப்பாக உணர்ந்த குற்றாலுக்கு கடலில் 5 கிலோமீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

ஏப்ரல் 1994 ஆம் ஆண்டு தனது 12 வயதில் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்துள்ள பாக்கு நீரிணையை (Palk Strait) கடந்து நீந்தினார். பிறகு ஆகஸ்ட் 1994 ஆம் ஆண்டு அன்று ஆங்கிலக் கால்வாயை (English Channel) கடந்து நீந்தினார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ராட்னெஸ்ட் கால்வாய் (Rottnest Channel), இத்தாலியின் மெசினா நீரிணை (Straits of Messina), இத்தாலியின் ஜானோன் சர்சியோ (Zannone Circeo) மற்றும் இறுதியாக பத்து டிகிரி கால்வாயை (Ten Degree Channel) கடந்து நீந்தினார்.

1966 ஆம் ஆண்டு 36 வயதில் வங்காளத்தை சேர்ந்த மிஹிர் சென் ஒரு நாட்காட்டி ஆண்டிற்குள் ஐந்து கால்வாய்களில் நீந்தி சாதனை புரிந்திருந்தார். இவ்வாறு, 1994 ஆம் ஆண்டு ஒரு நாட்காட்டி ஆண்டிற்குள் ஆறு கால்வாய்களில் நீந்தி மிஹிர் சென்னின் சாதனையை குற்றாலீஸ்வரன் முறியடித்தார். இதையொட்டி கின்னஸ் உலக சாதனையில் நுழைந்தார். 1994 ஆம் ஆண்டு குற்றாளீஸ்வரன் உலக சாதனை படைக்க ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசு உதவியும் ஆதரவும் தந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ஒன்றிய அரசு இவரது சாதனையை அங்கீகரித்து 1996 ஆம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருதை வழங்கியது. அந்த நேரத்தில் இவ்விருதை வென்ற இளைய நபர் என்ற பெருமையையும் பெற்றார்.
வாய்ப்பும் ஓய்வும்

1994 ஆம் ஆண்டு சாதனை படைத்த பிறகு 1995 மற்றும் 1998 ஆகிய மூன்றாண்டு இடையில் உலகம் முழுவதும் நடைபெற்ற பல சர்வதேச நீச்சல் போட்டிகளில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்கேற்றார். நீச்சல் உலகத் தொடருக்கு (World Series Swimming) உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நீச்சல் வீரர்களில் ஆசியாவைச் சேர்ந்த ஒரே வீரர் குற்றாலீஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உலகெங்கிலும் நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவிற்காக பல்வேறு பதக்கங்களை வென்றார்.

1990 களின் தொடக்கத்தில் நீச்சல் பங்களிப்பிற்கு தமிழ்நாடு மாநில அரசு மற்றும் 1990 களின் பிற்பகுதியில் இந்திய ஒன்றிய அரசு நிதியுதவி அளித்து ஆதரவை நல்கினாலும் 1990 களின் இறுதியில் தனியார் நிறுவன Sponsors ஆதரவுக்கரம் நீட்டிட விருப்பம் காட்டாததால் தொழில்முறை நீச்சலில் (Professional Swimming) இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறும் முடிவை எடுத்தார்.

கல்வியும் வேலையும்

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் (Anna University Campus) பொறியியலில் இளங்கலை பட்டமும் Sponsorship மூலம் அமெரிக்காவின் டல்லாஸ்ஸில் உள்ள University of Texas கல்லூரியில் முதுகலை பட்டமும் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள Sloan Institute of Management கல்லூரியில் மேலாண்மை பட்டமும் பெற்றார்.

Intel, Barclays, Citi, Virtusa, Flow Capital போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தவர் தற்போது கனடாவில் Nanban Ventures நிறுவனத்தில் பொது பங்குதாரராக பணிபுரிந்து வருகிறார்.

நண்பன் விளையாட்டு அறக்கட்டளை

விளையாட்டு மற்றும் கல்விக்கு இடையே ஒரு தேர்வை எதிர் கொண்டபோது Sponsorship குறைபாடு காரணமாக ​​குற்றாலீஸ்வரன் கல்வியை தேர்ந்தெடுத்தார். இந்த பொருளாதார குறைபாட்டை உணர்ந்து விளையாட்டை அனைவருக்கும் உரிய நிலையானதாக மாற்றும் முயற்சியில் அடிமட்டத்திலிருந்து விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு 29 ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினம் அன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நண்பன் விளையாட்டு அறக்கட்டளை (Nanban Sports Foundation) என்னும் நிறுவனத்தை குற்றாலீஸ்வரன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தனது சொந்த விளையாட்டு பயண அனுபவத்தில் கற்ற பாடத்தை வைத்து சமூகத்திற்கு திருப்பி அளித்தல் (Contributing to society) என்ற முறையில் குற்றாலீஸ்வரன் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது.
முடிவுரை

விளையாட்டு துறைகளில் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போல நீச்சல் லாபகரமான துறையும் அல்ல கவர்ச்சிகரமான துறையும் அல்ல. போதிய Sponsorship இல்லாமல் நீச்சல் விளையாட்டில் கலந்து கொண்டு தொடர்ந்து பதக்கங்களை வென்று காட்சி பெட்டிகளை (Showcase) அலங்கரித்து இருந்திருந்தால் மட்டும் குற்றாலீஸ்வரனின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்காது. அதையொட்டியே நீச்சல் விளையாட்டில் வளரக்கூடிய வயதில் தனது ஆசைக்குரிய தொழில்முறை நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து பின்னர் உரிய கல்வி பெற்று அதற்குரிய பணி செய்து இன்று சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்க கூடிய நிலைக்கு குற்றாலீஸ்வரன் முன்னேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வானில் சிறகடித்து பறக்கும் பறவையை போல உயர பறப்பதற்கு பல வீரர்கள் வலிமையாக இருந்தும் உரிய Sponsorship இல்லாததால் தொடர் ஊக்கமும் பொருளாதார உதவியும் இன்றி தவிக்கிறார்கள். இனி வருங்காலங்களில் ஒலிம்பிக் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் இந்தியா கடைசி இடத்தில் தான் இருக்கும் என்ற சூழல் மாற தான் வேண்டும் என்றால் அதற்கு குற்றாலீஸ்வரன் போன்று நல்லுள்ளம் கொண்ட பெருநிறுவனங்கள் பலதரப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கவும் Sponsorship செய்யவும் முன் வர வேண்டும்.

சுருங்கச் சொன்னால் ஒரு பொறியாளரின் வாழ்க்கைத் தரம் போலவே ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கைத் தரம் அமைய வேண்டுமானால் ஊக்கம் அளித்தால் மட்டும் போதாது செலவழிக்கவும் முன் வர வேண்டும் என்பதே இறுதி பார்வை.

விவரணைகள்






வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Tuesday, January 18, 2022

இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை

இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை
19 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் இருந்தே பார்ப்பனர் அல்லாதோர் சங்கமும் முஸ்லீம் லீக் அமைப்பும் வகுப்புவாரி உரிமைகளை கோரி வந்தனர். 1912 இல் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கம் மாகாண சேவைகளில் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதித்துவம் பற்றி விசாரிக்க ராயல் ஆணையத்தை (Royal Commission) நியமித்தது. பார்ப்பனர் அல்லாத இந்துக்களின் அந்தஸ்தை உயர்த்த குறிப்பிடத்தக்க அளவில் பாடுபட்ட நீதிக்கட்சி, அரசு ஊழியர்கள் தேர்வு மற்றும் கல்வி சேர்க்கையில் இட ஒதுக்கீடு அவசியம் என்றும் போராடியது. 1916 இல் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி, தொழில், அரசுப் பணிகளில் பங்கேற்கவும் பார்ப்பனர் அல்லாதோரின் நலன்களை பாதுகாக்கவும் "பார்ப்பனர் அல்லாதோர் கொள்கை" (Non-Brahmin Manifesto) அறிக்கை வெளியிடப்பட்டது.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, கல்லூரி மாணவர் சேர்க்கை குழுவை (College Students Admission Committee) உருவாக்கி, உயர்கல்வியில் பிராமண ஆதிக்கத்தை குறைக்க முயற்சித்தது. எடுத்துக்காட்டாக, 1921 மற்றும் 1922 இடையே, மருத்துவக் கல்லூரிகளில் பிராமண மாணவர்களின் எண்ணிக்கை 58 இல் இருந்து 33 ஆகக் குறைந்தது; அதே சமயம், பார்ப்பனரல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 15 இல் இருந்து 36 ஆக இரு மடங்காக அதிகரித்தது. இந்த மாற்றம், நீதிக்கட்சி குழுவின் முயற்சியின் நேரடி விளைவாகும்.
1921 இல் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்த, அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் கல்வி இட ஒதுக்கீடுக்காக சமூகங்களை வகைப்படுத்தி, நீதிக்கட்சி அரசு இந்தியாவில் முதல் வகுப்புவாத அரசாங்க ஆணையை (Communal G.O) அமல்படுத்தியது. ஆரம்ப புள்ளி விவரங்கள் சமமற்ற பிரதிநிதித்துவத்தை காட்டியதால், 1922 இல் இரண்டாவது வகுப்புவாத அரசாங்க ஆணை உடன் திருத்தத்திற்கு வழிவகுத்தது. இது பார்ப்பனர் அல்லாதவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சமூகங்களுக்கு அனைத்து வேலை தரங்களையும் (Grades) திறக்கும் ஒரு ரோஸ்டர் முறையை (Roster System) அறிமுகப்படுத்தியது. இருப்பினும், பார்ப்பனர்களின் லாபி 1927 வரை ஆணைகளை முழுமையாக செயல்படுத்துவதை தாமதப்படுத்தியது.

இறுதியில், பெரியாரின் தொடர் முயற்சிகள் காரணமாக 1928 இல் கட்சி சாராத மெட்ராஸ் மாகாண முதல்வர் பி.சுப்பராயனால் மூன்றாவது வகுப்புவாத அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 44%, பார்ப்பனர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தலா 16% மற்றும் பட்டியல் சாதியினர் 8% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சமூக அரசியல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இந்த ஏற்பாடு சுதந்திரத்திற்கு பிறகும் நடைமுறையில் இருந்தது. இது பார்ப்பனர் அல்லாதவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியது.

இதற்கிடையே, 1950 இல் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காத சி.ஆர்.ஸ்ரீநிவாஸன் என்ற பார்ப்பன மாணவரும், மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத போதும் சம்பகம் துரைராஜன் என்ற பார்ப்பன மாணவியும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (1928) ஆணை அமலில் இருந்தால் தங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காது என்று தனித்தனியாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இரு வழக்குகளும் இணைக்கப்பட்டு "மெட்ராஸ் மாநில அரசு எதிர் சம்பகம் துரைசாமி வழக்கு" என்ற பெயரில் விசாரிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினரான பார்ப்பனர் ஆலடி கிருஷ்ணசுவாமி ஐயர், சம்பகம் துரைராஜன் சார்பில் ஆஜராகி வாதாடினார். இது அதிகார அரசியலில் பார்ப்பனர்களின் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வழக்கை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம் "கல்வித்துறையானது, மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு கூடாது அதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (1928) செல்லாது" என்று தீர்ப்பளித்தது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் சமத்துவ உரிமைக்கு எதிராக இட ஒதுக்கீடுகளை வழங்குவது இந்திய அரசியலமைப்பின் 16(2) பிரிவின்படி, உரிமையை மீறுவதாகும் என்று கூறி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுதந்திர இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமைகள் பறிபோனதாக குற்றம் சாட்டி தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் காமராஜர் பிரதமர் நேருவிடம் தமிழ்நாட்டில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை விளக்கி நியாமான நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதையொட்டி, பிரதமர் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1951 இல் இந்திய அரசியலமைப்பின் 15(4) பிரிவின்படி, “சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய மாநில அரசாங்கத்தை அனுமதிக்கிறது” என்ற முதல் சட்ட திருத்தத்தை அமல்படுத்தியது. அதன்படி, வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
# இதையொட்டி, பிரிவு 15, உட்பிரிவு 4 சட்டத்தின் மூலம் SC/ST பிரிவுக்கு 15%, BC பிரிவுக்கு 25% மற்றும் OC பிரிவுக்கு 60% என்று இட ஒதுக்கீடு சீரமைக்கப்பட்டது. 

# 1951 இல் முதல்வர் குமாரசாமி ராஜா SC/ST பிரிவுக்கு 16% மற்றும் BC பிரிவுக்கு 25% என இட ஒதுக்கீட்டை சீரமைத்தார். 

# 1969 இல் முதல்வர் கலைஞர் SC/ST பிரிவுக்கு 18% மற்றும் BC பிரிவுக்கு 31% என இட ஒதுக்கீட்டை உயர்த்தினார். 

# 1980 இல் முதல்வர் எம்.ஜி.ஆர் BC பிரிவுக்கு 31% இல் இருந்து 50% என இட ஒதுக்கீட்டை ஏற்றினார். 

# 1990 இல் முதல்வர் கலைஞர் ST பிரிவுக்கு 1%, SC பிரிவுக்கு 18%, BC பிரிவுக்கு 30% மற்றும் MBC பிரிவுக்கு 20% என இட ஒதுக்கீட்டை திருத்தினார். 

சம்பகம் துரைசாமி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுக்கவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பெரியார் மேற்கொண்ட அதிரடி போராட்டத்தால் விளைந்த முதல் சட்ட திருத்தம் தான் மண்டல் ஆணையத்தை நியமிக்க உதவியது என்று சொன்னால் மிகையாகாது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கலைஞர். 07 ஆகஸ்ட் 1990 அன்று வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு சமூகத்தில் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு நிறுவன வேலைவாய்ப்பில்  27% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. அந்நேரத்தில், தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு பகிர்வு 69% நிலையை அடைந்தது.

வி.பி.சிங் அரசு வழங்கிய 27% இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் 1992 இல் உச்சநீதிமன்றத்தில் இந்திரா சஹானி தொடுத்த வழக்கில் மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. அந்நேரத்தில், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தனர். இதையொட்டி,  69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கில், 1993 இல் அ.தி.மு.க முதல்வர் ஜெயலலிதா "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழ் பணி நியமனங்கள் அல்லது பதவிகள்)" சட்டத்தை  இயற்றி 1994 இல் குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றார். இச்சட்டமானது இந்திய அரசியலமைப்பின் 31(B) பிரிவின்படி ஒன்பதாவது அட்டவணையில் (குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள், ஒழுங்குமுறைகள், விதிகள் எதுவும் செல்லாததாக கருதப்படக்கூடாது) இணைக்கப்பட்டு எதிர்கால நீதிமன்றங்களின் தலையீட்டிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பல்வேறு தமிழ்நாட்டு முதல்வர்களின் முயற்சியால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை 69% ஆக உயர்த்தி, அதற்கான உரிய சட்டங்களை இயற்றி, சட்ட மோதல்களில் இருந்து இட ஒதுக்கீட்டு விதிகளைப் பாதுகாத்து உள்ளனர். மொத்தத்தில், பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்று வரை இட ஒதுக்கீடு முறையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
// துணுக்கு செய்தி //

1924 இல் நீதிக்கட்சி அரசு ரோஸ்டர் முறையை பயன்படுத்தி அரசு ஊழியர்களை நியமிக்க பணியாளர் தேர்வு வாரியத்தை (Staff Selection Board - S.S.B) நிறுவியது. இந்த அமைப்பு குறிப்பிட்ட சதவீதங்களின் அடிப்படையில் ஒரு கேடருக்குள் வெவ்வேறு பிரிவுகளுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது. S.S.B அமைப்பின் அடித்தளம் பின்னர் இன்றைய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமாக (Tamil Nadu Public Service Commission - T.N.P.S.C) மாற்றப்பட்டது.

விவரணைகள் 

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு கடந்து வந்த பாதை - News7 Tamil


20% MBC இட ஒதுக்கீட்டின் கதை - News7 Tamil


இட ஒதுக்கீட்டுக் கொள்கை 



Reservation Policy: A Vital Strategy for Social Transformation



Reservation for Backward Classes in Tamil Nadu 


State of Madras vs Champakam Dorairajan


Indra Sawhney vs Union Of India


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

சில நேரங்களில் சில நிறுவனங்கள்

சில நேரங்களில் சில நிறுவனங்கள்

விவரங்கள்
  1. முகவுரை 
  2. SSI நிறுவனம்
  3. ABCL நிறுவனம்
  4. Satyam நிறுவனம்
  5. Pentafour நிறுவனம்
  6. DSQ Software நிறுவனம்
  7. விவரணைகள்
முகவுரை 

"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்" என்ற பழமொழி அனைத்து வணிகர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் மேலாண்மை திறன் (Management Skills) சில வணிகர்களுக்கு பல்வகை வணிகத்தில் வெற்றியை தரக்கூடும். அதே நேரத்தில் கைவசம் உள்ள தெரிந்த தொழிலை விட்டுவிட்டு சரியான திட்டமிடல் இல்லாமல், பல்வகை வணிகம் (Diversified Business) செய்ததால் சந்தை மதிப்பை இழந்த நிறுவனங்கள் ஏராளம். அப்படி சரிந்த சில நிறுவனங்களை பற்றி காண்போம்.

SSI நிறுவனம்

1991 இல் சென்னையை தலைமையிடமாக கொண்டு SSI நிறுவனத்தை சுரேஷ் கல்பாத்தி தொடங்கினார். கணினி வழிக் கற்பித்தல் மையமாக தொடங்கப்பட்டு, 1999 இல் மென்பொருள் சேவைகளை வழங்குவதற்காக IT துறையிலும் தடம் பதித்தது. மாணாக்கர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று சீராக வளர்ந்து கொண்டிருந்த SSI நிறுவனம், 2003 இல் தொழிற்பயிற்சி சேவை நிறுவனமான Aptech நிறுவன பங்குகளை வாங்கி தங்களின் Education பிரிவை Aptech நிறுவனத்துடன் இணைத்தது.

வெவ்வேறு காலத்தில் FMCG துறையில் ஈடுபட Velvette International, Entertainment துறையில் ஈடுபட Telephoto, Hospitality துறையில் ஈடுபட Ooty Dasaprakash, Real Estate துறையில் ஈடுபட Binny Mills போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தது SSI நிறுவனம். இவ்வாறு, தங்களின் முகமதிப்பான (Face Value) கணினி சார்ந்த கல்வி தொழிலை விட்டு வெளியேறி பல்வகை வணிகத்தில் (Diversified Business) ஈடுபட்டதும் கேதன் பரேக்கின் K-10 பங்குகளில் ஒன்றாக சிக்கிய பின்னரும் SSI நிறுவனம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தது. அதை தொடர்ந்து, SSI நிறுவனம் தனது IT பிரிவை Scandent Solutions நிறுவனத்திற்கும் Real Estate பிரிவை PVP குழுமத்திற்கும் விற்றது. இன்று சுரேஷ் கல்பாத்தி குடும்பத்தினர் AGS திரையரங்குகள், AGS திரைப்பட தயாரிப்பு, AGS திரைப்பட விநியோகம், Veranda Learning Solutions, Kalpathi Investments போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ABCL நிறுவனம்
1995 முதல் அமிதாப் பச்சனின் ABCL நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மையில் ஈடுபட்டு வந்தது. இந்தியாவில் 1996 இல் உலக அழகி போட்டியை ஏற்பாடு செய்ததன் மூலம் ABCL நிறுவனத்திற்கு நிதிச்சுமை ஏற்பட்டது. இறுதியாக, 1999 இல் ABCL நிறுவனம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு நிலுவைத்தொகையான 90 கோடி ரூபாயை கட்சிக்காரர்களுக்கு செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு சென்றது. பல்வேறு நிதிக் கடமைகளில் தவறியதைத் தொடர்ந்து தொழில்துறை மற்றும் நிதி மறுகட்டமைப்புக்கான பணியகத்தால் (Board for Industrial and Financial Reconstruction) ABCL நிறுவனம் பொருளாதார நோய்வாய்ப்பட்ட பிரிவாக (The Sick Industrial Companies) பட்டியலிடப்பட்டது. ABCL தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் குப்தாவின் மோசமான நிர்வாகமே நிறுவனத்தின் மோசமான செயல்பாட்டிற்கு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர் கோகோ கோலா இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட வாய்ப்புகள் இன்றியும், கடன் சுமையாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அமிதாப் பச்சன், ஒரு கட்டத்தில் தனக்கு தெரிந்தது நடிப்பு மட்டுமே என்பதை உணர்ந்தார். அதையெடுத்து, பிரபல நடிகர் என்ற கர்வத்தை விட்டுவிட்டு தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவிடம் வாய்ப்பு கேட்டு அவரது ஆதரவில் 2000 இல் மொஹப்பதீன் திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடிக்க தொடங்கினார். அத்துடன் 2000 முதல் தொலைக்காட்சியில் கவுன் பனேகா குரோர்பதியை (Kaun Banega Crorepati) தொகுத்து வழங்க முடிவு செய்தார். இறுதியில், Sahara குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் ஆதரவு மற்றும் ஊடக வருமானம் மூலம் அமிதாப் பச்சன் மீண்டு வர தொடங்கினார்.

2000 பிற்பகுதியில் திரையுலகில் அமிதாப் பச்சன் மீண்டும் வெற்றி பெற தொடங்கிய பிறகு, நலிவடைந்த ABCL நிறுவனத்தின் மறுமலர்ச்சிக்கு ஆலோசனை வழங்க, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அமர் சிங்கின் நண்பரும், முன்னணி பங்குத் தரகருமான கேதன் பரேக்கை அணுகியது. அதன் பிறகு, ABCL நிறுவனத்தில் முதலீடு செய்ய நிதி திரட்டி வந்த கேதன் பரேக், K-10 இல் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்ககளின் முதலீட்டாளர்கள் மூலம் ABCL நிறுவனத்தில் தனது நிதியையும் முதலீடு செய்தார். இவ்வாறு, கேதன் பரேக் கொண்டு வந்த நிதியை பயன்படுத்தி, கடனை அடைக்கவும், புதிய முயற்சிகளை தொடங்கவும் ABCL நிறுவனம் திட்டமிட்டது.

கேதன் பரேக்கின் Triumph International Finance India நிறுவனம் வழங்கிய மூலதன மறுசீரமைப்பு திட்ட ஆலோசனையின்படி அமிதாப் பச்சன் செயல்பட தொடங்கினார். மேலும், ABCL நிறுவனம் AB Corp எனப் பெயர் மாற்றப்பட்டு, புதிய தலைமை செயல் அதிகாரியாக ரமேஷ் புலபாகா தலைமையில் புதிய நிர்வாக குழு 2001 இல் உருவாக்கப்பட்டது. நாளடைவில் AB Corp பல்வேறு மாற்றங்களை கண்டு இறுதியில் திரைப்பட தயாரிப்புகளை குறைத்து கொண்டது. சுருக்கமாக, Sahara குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் பங்கு ஆய்வாளர் கேதன் பரேக் ஆகியோர் அமிதாப் பச்சனின் வாழ்க்கையை மறுசீரமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.

Satyam நிறுவனம்


1987 இல் ஐதராபாத்தை தளமாக கொண்டு Satyam தொழில்நுட்ப நிறுவனத்தை ராமலிங்க ராஜு நிறுவினார். ராமலிங்க ராஜுவுக்கு தேஜா ராஜு மற்றும் ராம ராஜு என்று இரு மகன்கள். Maytas Infra நிறுவனத்தை மூத்த மகன் தேஜா ராஜு வழிநடத்தினார் மற்றும் Maytas Properties நிறுவனத்தை இளைய மகன் ராம ராஜு வழிநடத்தினார். ராமலிங்க ராஜுவின் Satyam நிறுவனத்தின் பெயரை திருப்பி போட்டால் Maytas என்பது குறிப்பிடத்தக்கது. 2008 பிற்பகுதியில் மகன்களுக்கு சொந்தமான Maytas Properties & Maytas Infra நிறுவனங்களை Satyam நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ராமலிங்க ராஜு முன்மொழிந்தார். இந்த கையகப்படுத்தல் மூலம் Satyam நிறுவனம் தனது வணிகத்தை பல்வகைப்படுத்தி உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்த உதவும் என்றார் ராமலிங்க ராஜு. இதையெடுத்து, Satyam நிறுவனத்தின் "What Business Demands" என்ற Tagline, "Play The Game, Transform The Business" என்று மாற்றப்பட்டது.  

Satyam - Maytas இணைப்பு திட்டம் குறித்த செய்திகள் பங்குச்சந்தையில் காட்டுத்தீயாக பரவ, Satyam நிறுவனத்தின் 2,10,000 பங்குத்தாரர்களில் பெரும்பாலானோர் இந்த ஒப்பந்தம் நெறிமுறையற்றது என்றும் ராமலிங்க ராஜுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு பிணை எடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் கருதினர். இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால், Satyam நிறுவனத்தின் பங்கு விலையில் கடும் சரிவை ஏற்படுத்தியது. Satyam - Maytas இணைப்பு திட்டம் Satyam நிறுவனம் கவிழ்வதற்கு அச்சாரம் இட்டது. மேலும், ராமலிங்க ராஜுவின் செயல்திட்டம் குறித்து இந்திய வணிக நெறிமுறை மீதான விவாதத்தைத் தூண்டியது.

கொந்தளிப்புக்கு மத்தியில், Maytas நிறுவனங்களை கையகப்படுத்த Satyam நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மறுத்தது. இதையொட்டி, Maytas நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டார் ராமலிங்க ராஜு. அத்துடன்,  2009 இல் ராமலிங்க ராஜு, Satyam நிறுவனத்தின் கணக்குகளை பல ஆண்டுகளாக கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அந்நிறுவனத்தின் கணக்கியல் புத்தகங்களில் இருந்த சுமார் 7,000 கோடி ரூபாய் பொய் கணக்கு (Accounting Fraud) என்பதை அவர் வெளிப்படுத்தினார். Maytas நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், அவை Satyam நிறுவனத்தின் பதிவுகளில் உள்ள மோசடி பரிவர்த்தனைகளை மறைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார். Satyam - Maytas இணைப்பு தொடர்பான சர்ச்சையை அடுத்து, கணக்கு மோசடியை ஏற்று ராமலிங்க ராஜு ராஜினாமா செய்தார். Satyam ஊழல் அம்பலமானதும், விசாரணையின் போது K-10 பட்டியலில் Satyam நிறுவனமும் அடங்கும் என்பதால், கேதன் பரேக்கின் பல கோடி ஊழலில் Satyam தொடர்பு குறித்து அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) ஆய்வு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சினைக்கு பிறகு, Satyam நிறுவனத்தை Mahindra குழுமம் வாங்கியது.

Pentafour நிறுவனம்
1976 இல் சென்னையை தலைமையிடமாக கொண்டு Pentagon Agency and Consultancy என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. AC, UPS, Water Heater, Stabilizer போன்ற நுகர்வோர் மின்னணு பொருட்களை தயாரித்து வர்த்தகம் செய்தல் மற்றும் திட்ட நிதி, நிர்வாகம் தொடர்பான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் நிறுவனம் ஈடுபட்டது. 1985 இல் Pentagon Agency எனப் பெயர் மாற்றப்பட்டு மேற்கூறிய நுகர்வோர் தயாரிப்புகளுக்கான குத்தகை, வாடகை கொள்முதல் மற்றும் அமெரிக்காவிற்கு தோல் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் தடம் பதித்தது.

1991 இல் Pentafour Software and Exports Limited (PSEL) என பெயர் மாற்றப்பட்டு IT மற்றும் Media தொழிலில் முதன்மையாக செயல்பட தடம் பதித்தது. அதையொட்டி, Pentafour Software நிறுவனம் மென்பொருளில் ஈடுபட Pentasoft Technologies என்ற பெயரிலும், வரைகலை தொழிலில் ஈடுபட Pentamedia Graphics என்ற பெயரிலும் இரு நிறுவனமாக கட்டமைக்கப்பட்டது. 1997 இல் எழுத்தாளர் சுஜாதா தொடங்கிய Media Dreams நிறுவனத்தை 2000 இல் Pentamedia Graphics வாங்கியது. இந்நிறுவனம் சில Animation திரைப்படங்கள் மற்றும் பாரதி, பாண்டவர் பூமி, லிட்டில் ஜான், பம்மல் கே சம்மந்தம், விசில் உட்பட சில திரைப்படங்களை தயாரித்தது. மோனிஷா என் மோனலிசா, படையப்பா, காதலர் தினம், முதல்வன், எம்.குமரன் S/O மகாலட்சுமி, குளிர் 100 டிகிரி உட்பட சில திரைப்படங்களின் Special Effects பணிகளை செய்தது. Pentafour நிறுவனர் சந்திரசேகரனின் மகள் அனிதா உதீப், விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா பாடலை பாடியவர் மற்றும் குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளடைவில், Pentafour நிறுவனர் சந்திரசேகரன் Software மற்றும் Graphics சேவைகள் வணிகத்துடன் Resorts, Multiplex, Sports போன்ற பல்வகைப்பட்ட தொழில் முயற்சிகளில் இறங்கினார். இவ்வாறு, தங்களின் முகமதிப்பான மென்பொருள் மற்றும் வரைகலை சார்ந்த தொழிலை தாண்டி பல்வகை வணிகத்தில் (Diversified Business) ஈடுபட்டதும் கேதன் பரேக்கின் K-10 பங்குகளில் ஒன்றாக சிக்கிய பின்னரும் Pentafour நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்க அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்தது.

DSQ Software நிறுவனம்
1992 இல் சென்னையை தலைமையிடமாக கொண்டு DSQ Software நிறுவனத்தை கொல்கத்தாவை சேர்ந்த தினேஷ் டால்மியா தொடங்கினார். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட DSQ Software நிறுவனம் 2000 பணியாளர்களுடன் 2000 இல் சுமார் 675 கோடி ரூபாய் வருவாயை  ஈட்டியது. இதற்கிடையே, கேதன் பரேக்கின் பங்குச்சந்தை ஊழல் வெடித்த பிறகு, 2002 இல் DSQ Software நிறுவனம் பின்னடைவை சந்திக்க, 2003 இல் DSQ Software நிறுவனத்தை Scandent Solutions நிறுவனத்திற்கு விற்றுவிட்டு, 2003 முதல் 2006 வரை அமெரிக்காவில் வசித்து வந்தார் தினேஷ் டால்மியா. பின்னர் வெவ்வேறு காலகட்டத்தில் Scandent Solutions நிறுவனத்தை Cambridge Solutions நிறுவனம் வாங்க, அதை Xchanging நிறுவனம் வாங்க, அதை DXC Technologies நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

கேதன் பரேக் செய்த K-10 பங்குச்சந்தை ஊழலில் DSQ Software நிறுவன பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்த தினேஷ் டால்மியா உள் வர்த்தகம் (Insider Trading) செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2013 இல் 7 ஆண்டுகளுக்கு பங்கு வர்த்தகம் செய்ய தினேஷ் டால்மியா மற்றும் அவரது குழுமத்தை SEBI தடை செய்தது. மேலும், 2019 இல் SEBI வழிகாட்டுதல்களுக்கு இணங்க தவறியதற்காக தினேஷ் டால்மியாவுக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. உள் வர்த்தக முறைகேடு மட்டுமின்றி வெவ்வேறு காலகட்டத்தில் அமெரிக்காவில் தொழில் தொடங்க வீழ்ச்சியடைந்த DSQ Software நிறுவனத்தின் 1.30 கோடி பங்குகளை முன்னுரிமை ஒதுக்கீடு மூலம் போலி நிறுவனங்களுக்கு மாற்றி அமெரிக்க முதலீட்டாளர்களை சுமார் 600 கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கிலும், கொல்கத்தா பங்குச்சந்தையில் 10 லட்சம் போலி பங்குகளின் விற்பனை மூலம் 20 கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கிலும் தினேஷ் டால்மியா கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

விவரணைகள் 

தெரிந்ததை விட்டால் வம்பு, தெரியாததைத் தொட்டால் சங்கு


// SSI நிறுவனம் // 


2008 - SSI to merge with PVP Ventures


// ABCL நிறுவனம் //

1995 - Launch of ABCL 


1999 - ABCL is a sick company


From Bankruptcy to Crorepati


When Amitabh Bachchan Went Bankrupt


Big B Bailout for Big B


Amitabh Bachchan Survived Tax Investigation


Parekh Spills the Beans


// Satyam நிறுவனம் //

YouTube Video on Satyam Scam in English


YouTube Video on Satyam Scam in Tamil


// DSQ Software நிறுவனம் // 

Rise and fall of Dinesh Dalmia 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

வலிய சென்று சிக்கிய Sahara நிறுவனம்

வலிய சென்று சிக்கிய Sahara நிறுவனம்

சுருக்கம்
  1. முகவுரை
  2. Sahara குழுமம்
  3. சுப்ரதா ராய்
  4. SEBI - IPO - DRHP
  5. எப்படி சிக்கியது?
  6. என்ன சொன்னது?
  7. SEBI அமைப்பு இடைக்கால உத்தரவு
  8. SEBI அமைப்பு இறுதி உத்தரவு
  9. தீர்ப்பாயம் உத்தரவு
  10. நீதிமன்றம் தீர்ப்பு
  11. தவணை முறை
  12. முடக்கமும் சமர்ப்பித்தலும்
  13. சம்மனும் தேநீரும்
  14. பிடிவாரண்ட் உத்தரவு
  15. கைதும் ஜாமீனும்
  16. பண மோசடி வழக்கு
  17. முடிவில் நடந்தது என்ன?
  18. என்ன நடந்து இருக்கும்?
  19. முடிவுரை
  20. இதர செய்திகள்
  21. விவரணைகள்
இதர செய்திகள்
  1. கின்னஸ் சாதனை
  2. பாடம் கற்கவில்லை
  3. Birla - Sahara Papers
முகவுரை

வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் கட்டிக் கொண்டு குத்துதே, குடையுதே என்பதே வலிய சென்று சிக்கிக் கொள்வதின் சாராம்சம். அதாவது தான் உண்டு தன் வளர்ச்சி உண்டு என்றிருந்த SPCL நிறுவனம், சந்தை நடைமுறைகளை பற்றி தெரியாமல் வலிய சென்று பங்குச்சந்தை மூலம் நிதி திரட்ட SEBI அமைப்பிடம் விண்ணப்பித்தது. அதை தொடர்ந்து நடந்த விசாரணை படலத்தில் SPCL நிறுவனத்தின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. SPCL நிறுவனம் செய்த மோசடி என்ன? எப்படி சிக்கியது? என்பதை காண்போம்.
Sahara குழுமம்

1978 அன்று உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு Sahara India Pariwar என்ற தனியார் கூட்டு நிறுவனத்தை சுப்ரதா ராய் என்பவர் நிறுவினார். நிதி, பத்திரம், கடன், கூட்டுறவு, காப்பீடு, மருத்துவம், கல்வி, தங்கும் விடுதி, வீடு, நிலம், மனை, விளையாட்டு, மின்சார உற்பத்தி, மின்சார வாகனம், ஊடகம், பொழுதுபோக்கு, சில்லறை வணிகம், மின் வணிகம், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு வணிகத் துறைகளை Sahara குழுமம் நடத்தி வருகிறது. மேலும், Sahara குழுமம் வெவ்வேறு காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, இந்திய ஹாக்கி அணி, இந்திய பார்முலா ஒன் அணி, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி போன்ற பல விளையாட்டு போட்டிகளுக்கு Sponsorship செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுப்ரதா ராய்

சுப்ரதா ராயின் மூத்த மகன் சுஷாந்தோ ராய் ரிச்சாவை மற்றும் இளைய மகன் சீமான்டோ ராய் சாந்தினியை திருமணம் புரிந்தனர். 2004 அன்று லக்னோவில் உள்ள Sahara மண்டபத்தில் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் இருவரின் திருமணமும் ஒரே நாளில் ஆடம்பரமாக நடைபெற்றது. திருமண விருந்தினர்களின் போக்குவரத்து வசதிக்காக, பேருந்துகளை போல சரளமாக விமானங்கள் இயக்கப்பட்டது அன்றைய காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

சுப்ரதா ராய்க்கு அரசியல் நண்பர்கள் பலர் இருந்தாலும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முலாயம் சிங், அமர் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீர் பகதூர் சிங் நெருக்கமானவர்களாக விளங்கினார்கள். உத்தரப் பிரதேசம் முதல்வர் முலாயம் சிங் ஆட்சிக் காலத்தில் “அமர் சிங் - சுப்ரதா ராய்” கூட்டணி தனி ஆவர்த்தனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், 1999 அன்று அமர் சிங்கின் நெருங்கிய நண்பரான நடிகர் அமிதாப் பச்சனின் ABCL நிறுவனம் திவாலான போது அமர் சிங்குடன் கைகோர்த்து கடன் தொல்லையில் இருந்து அமிதாப் பச்சனை மீட்டெடுத்தார் சுப்ரதா ராய். அதன் பின்னர் “அமர் சிங் - சுப்ரதா ராய் - அமிதாப் பச்சன்” கூட்டணி பிரசித்தி பெற்றது.
SEBI - IPO - DRHP

SPCL மோசடி என்பது Sahara India Real Estate Corporation Limited (SIRECL) மற்றும் Sahara Housing Investment Corporation Limited (SHICL) ஆகிய இரு நிறுவனங்களுடன் தொடர்புடையது. Sahara மோசடியை பற்றி அறிவதற்கு முன்னர் SEBI, IPO மற்றும் DRHP பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
Securities and Exchange Board of India (SEBI)

1990 களின் முற்பகுதியில் இந்திய முதலீட்டு பரிவர்த்தனைகள் காகித அடிப்படையிலானவை மற்றும் 1988 அன்று நிறுவப்பட்ட SEBI அமைப்பு வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரத்தை மட்டுமே கொண்டிருந்தது. ஹர்ஷத் மேத்தா ஊழல், பங்குச்சந்தை ஒழுங்குமுறையில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தியது. இந்த சிக்கலை தீர்க்க ஒன்றிய அரசை தூண்டியதன் விளைவாக SEBI அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் நோக்கில் SEBI Act, 1992 சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் SEBI அமைப்பை வெறும் ஒழுங்குமுறை அமைப்பிலிருந்து ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக உயர்த்தியது. பங்குச்சந்தை ஒழுங்குமுறையில் உள்ள குறைபாடுகளை களையவும், வர்த்தக முறைகேடுகளை விசாரிக்கவும், பரிவர்த்தனை செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தவும் சுதந்திரமாக செயல்பட SEBI அமைப்புக்கு அதிகாரம் அளித்தது. இதையொட்டி, முதலீட்டாளர் - தரகர் செயல்பாடுகளை திறம்பட மேற்பார்வை செய்யும் வகையில் SEBI அமைப்பு ஒரு வலுவான பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளராக உருவெடுத்தது.
Initial Public Offering (IPO)

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் முதல் முறையாக பங்குச்சந்தை மூலம் நிறுவன பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து நிதி திரட்டும் போது, அது Initial Public Offering (IPO) எனப்படும். மேலும், பொது மக்களுக்கு தனது பங்குகளை விற்கும் நிறுவனமானது பொது மக்களால் முதலீடு செய்யப்பட்ட நிதியை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைய தயாராக இருக்கும் போது அவர்களுக்கு ஒரு எழுத்துறுதி ஒப்பந்ததாரர் (Underwriter) தேவை. பொதுவாக, இந்த பணி முதலீட்டு வங்கிகளால் (Investment Banks) செய்யப்படுகிறது. அவர்கள் IPO செல்லும் நிறுவனத்தின் தரத்தை அளந்து, அதற்கேற்ப பங்கின் விலையை மதிப்பிடுகிறார்கள். நிறுவனத்தின் பங்குகளை யார் வாங்குவார்கள் என்பதன் அடிப்படையில் நிலையான விலையில் விற்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையை எழுத்துறுதி ஒப்பந்ததாரர் உத்தரவாதம் அளிக்கிறார். மொத்தத்தில், முதலீட்டு வங்கிகளின் உதவியுடன் ஒரு நிறுவனம் தனது பங்குகளை வெளியிடுகிறது.

முதல் நிலை சந்தையில் (Primary Market), நிறுவனங்கள் முதல் முறையாக IPO மூலம் புதிய பங்குகளை பொதுமக்களுக்கு விற்கின்றன. அதை தொடர்ந்து, இரண்டாம் நிலை சந்தையில் (Secondary Market), முதலீட்டாளர்கள் தங்களுக்கு சொந்தமான பங்குகளை வாங்கி விற்கின்றனர்.
Draft Red Herring Prospectus (DRHP)

பங்குச்சந்தையில் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு விற்று பணத்தை திரட்ட நினைக்கும் நிறுவனமானது SEBI அமைப்புக்கு Draft Red Herring Prospectus (DRHP) ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும். தங்கள் அனைத்து நிறுவனத்தின் வணிக செயல்பாடு, நிதிநிலை அறிக்கை, விளம்பரதாரர் நிரல், பங்குச்சந்தை மூலம் நிதி திரட்டுவதற்கான நோக்கம், திரட்டப்படும் பணம் எவ்வாறு பயன்படப் போகிறது போன்ற விரிவான தகவல்களை DRHP ஆவணம் வழங்குகிறது. 

மேலும், இந்த ஆவணம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்களையும் விவரிக்கிறது. சுருக்கமாக, ஒரு நிறுவனத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய DRHP ஆவணத்தின் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா? வேண்டாமா? என்பதை SEBI அமைப்பு முடிவு செய்யும்.

எப்படி சிக்கியது?

Sahara குழுமத்தை சேர்ந்த Sahara Housingfina Corporation Limited (SHCL) மற்றும் Sahara One Media & Entertainment Limited (SOMEL) ஆகிய இரு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில், 1993 அன்று தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த Sahara Prime City Limited (SPCL) நிறுவனம் Sahara குழுமத்தின் மூன்றாவது நிறுவனமாக 2009 அன்று பங்குச்சந்தையில் நுழைய திட்டமிட்டது.

30 செப்டம்பர் 2009 அன்று, Sahara Prime City Limited (SPCL) நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைய முடிவு செய்து, முன்மொழியப்பட்ட IPO தொடர்பாக SEBI அமைப்பிடம் DRHP தொகுப்பை தாக்கல் செய்தது. DRHP தொகுப்பை ஆய்வு செய்ததில் Sahara India Real Estate Corporation Limited (SIRECL) மற்றும் Sahara Housing Investment Corporation Limited (SHICL) ஆகிய இரு நிறுவனங்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகள் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை என்று SEBI அமைப்பு சந்தேகித்தது.

அதே காலகட்டத்தில், 25 டிசம்பர் 2009 மற்றும் 04 ஜனவரி 2010 அன்று SIRECL மற்றும் SHICL ஆகிய இரு நிறுவனங்களும் கடனீட்டுப் பத்திரங்கள் (Optionally Fully Convertible Debentures - OFCD) மூலம் முறையற்ற வழியில் நிதி திரட்டுவதாக SEBI அமைப்பு புகார்களை பெற்றது. இந்த புகார்களின் விளைவாக, SEBI அமைப்பின் சந்தேகங்கள் அடுத்த கட்ட விசாரணைக்கு நகர்ந்தன. இரு நிறுவனங்களையும் விசாரிக்கத் தொடங்கி, இறுதியில் Sahara குழுமத்திடம் நிதி திரட்டும் நடைமுறைகள் பற்றி விளக்கம் கேட்டது. அப்போது தான் SIRECL மற்றும் SHCIL ஆகிய இரு நிறுவனங்களும் OFCD பத்திரங்கள் மூலம் சுமார் 3.07 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து முறைகேடாக சுமார் 24,000 கோடி ரூபாய் திரட்டியிருப்பது SEBI அமைப்புக்கு தெரிய வந்தது.

சுருங்கச்சொன்னால், OFCD பத்திரங்கள் என்றால் “மூலதனத்தை திரட்டுவதற்காக ஒரு நிறுவனம் கடனீட்டுப் பத்திரங்களை வெளியிடுகிறது. அதற்கு ஈடாக இது முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தேதியில் அசல் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து முழுமையாக திருப்பிச் செலுத்துகிறது அல்லது பங்குகளாக மாற்றி கொள்ள அனுமதிக்கிறது” என்று பொருள்படும்.
என்ன சொன்னது?

21 பிப்ரவரி 2010 அன்று, SIRECL மற்றும் SHICL ஆகிய இரு நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக மேற்கண்ட புகார்கள் தொடர்பாக SPCL நிறுவனத்தின் முதலீட்டு வங்கியான Enam Securities Private Limited (ESPL) நிறுவனத்திடம் SEBI அமைப்பு தகவல் கேட்டது. இதை தொடர்ந்து, சட்ட ஆலோசனையின் அடிப்படையில், SIRECL மற்றும் SHICL ஆகிய இரு நிறுவனங்களுக்கும் OFCD பத்திரங்கள் “பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும்” இணங்கி வழங்கப்பட்டதாக ESPL நிறுவனம் பதிலளித்தது.

“தனிப்பட்ட சலுகை (Private Placement of Shares) மூலம் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு OFCD பத்திரங்கள் விற்கப்படுகிறது என்றும் இதற்காக நிறுவனங்கள் சட்டம் (Companies Act, 1956) 60 B பிரிவின் கீழ் இரு நிறுவனங்களும் தகவல் குறிப்பாணை (Information Memorandum) வழங்கியது என்றும் SIRECL நிறுவனம் 13 மார்ச் 2008 அன்று உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் நிறுவனங்களின் பதிவாளரிடம் (Registrar of Companies - ROC) RHP வழங்கியது என்றும் SHICL நிறுவனம் 15 அக்டோபர் 2009 அன்று மகாராஷ்டிரா நிறுவனங்களின் பதிவாளரிடம் RHP வழங்கியது என்றும்” SIRECL மற்றும் SHICL ஆகிய இரு நிறுவனங்களும் 26 பிப்ரவரி 2010 அன்று தெரிவித்தது.

இந்நிலையில், OFCD பத்திரங்களை வெளியிடுவதற்கு Disclosure and Investor Protection (DIP) வழிகாட்டுதலின் கீழ், Sahara குழுமம் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று SEBI அமைப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இதற்கு, “கடன் (Debt) மற்றும் பங்கு (Equity) பண்புகள் இரண்டையும் இணைக்கிற OFCD கலப்பின பத்திரங்கள் (Hybrid Securities) விவகாரம் SEBI அமைப்பின் அதிகார வரம்பிற்குள் வராது. அவை, பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) கீழ் உள்ள நிறுவனங்களின் பதிவாளர் (ROC) மூலம் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் எங்களின் இரு நிறுவனங்களும் OFCD பத்திரங்களை வழங்குவதற்கு முன் ROC அமைப்பிடம் முறையான அனுமதியை பெற்றது” என்றது Sahara குழுமம்.

SEBI அமைப்பு இடைக்கால உத்தரவு

இடைக்கால விசாரணைக்கு பின்னர் “பட்டியலிடப்படாத தனியார் நிறுவனங்கள் OFCD மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவதை நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 73 தடை செய்கிறது, ஏனெனில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட அனுமதிக்கப்படுகின்றன” என்று SEBI அமைப்பு எடுத்துரைத்தது.

OFCD பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட விரும்பும் நிறுவனம் நிறுவனங்களின் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும், அக்கோரிக்கை SEBI அமைப்பின் எல்லைக்குள் கொண்டு வரப்படும். எனவே, ஆய்வுகளின் அடிப்படையில் SEBI சட்டம், 1992 வழங்கிய பத்திரங்களின் வரையறையின் வரம்பிற்குள் OFCD திட்டம் வருவதையும் Sahara குழுமத்தின் இரு நிறுவனங்களின் செயல்பாடுகளும் நிறுவனங்கள் சட்டம், Disclosure and Investor Protection (DIP) வழிகாட்டுதல் மற்றும் Issue of Capital and Disclosure Requirements (ICDR 2009) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளை மீறுவதாக SEBI அமைப்பு கண்டறிந்தது. இதையொட்டி, “இரு நிறுவனங்களும் OFCD பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதை நிறுத்தி, முதலீட்டாளர்களிடம் திரட்டப்பட்ட சுமார் 24,000 கோடி ரூபாயை 15% வட்டியுடன் திருப்பி தர வேண்டும் அல்லது உரிய நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்” என்று 24 நவம்பர் 2010 அன்று SEBI அமைப்பு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. 

13 டிசம்பர் 2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் SEBI அமைப்பின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக Sahara குழுமம் தடை ஆணையை பெற்றது. இதற்கிடையில், SEBI அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்காமல் இரு நிறுவனங்களும் கடனீட்டு பத்திரங்களின் “பொது வெளியீடு” மூலம் நிதி திரட்டுவதாகவும், இது தொடர்பாக எந்த முதலீட்டாளர்களின் புகார்களுக்கும் உடனடி தீர்வு வழங்கப்படாது என்று 07 ஜனவரி 2011 அன்று SEBI அமைப்பு ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. மேலும், SEBI அமைப்பின் இடைக்கால உத்தரவுக்கு எதிரான தடை ஆணையை 07 ஏப்ரல் 2011 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் நீக்கியது. இதை எதிர்த்து, Sahara  குழுமம் ஏப்ரல் 2011 அன்று உச்ச நீதிமன்றத்தை நாடியது, அதற்கு OFCD விசாரணையை தொடருமாறு SEBI  அமைப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

SEBI அமைப்பு இறுதி உத்தரவு

“Securities Contracts (Regulation) Act, 1956 சட்டம் 2(h) பிரிவுக்கு உட்பட்டு பத்திரங்கள் என்ற வரையறையின் கீழ் OFCD பத்திரங்கள் வருகின்றன. கலப்பின பத்திரங்களாக இருந்தாலும் அவை சந்தைப்படுத்தக்கூடிய கடன் பத்திரங்களின் வகைக்கு வெளியே வராது என்றும் கடனீட்டு பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட விரும்பும் நிறுவனங்கள் SEBI அமைப்பை தான் அணுக வேண்டும் என்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமல் SIRECL மற்றும் SHICL ஆகிய இரு நிறுவனங்களும் OFCD பத்திரங்களை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது என்றும் இரு நிறுவனங்களும் சுமார் 3.07 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய பணத்தை திருப்பி தருவதே சரியானது” என்று 23 ஜூன் 2011 அன்று முழு நேர உறுப்பினர்கள் (Whole Time Memebers - WTM) மூலம் SEBI அமைப்பு தனது இறுதி உத்தரவை பிறப்பித்தது. 

இறுதி உத்தரவை பெற்ற பிறகு SEBI அமைப்புக்கு அதிகார வரம்பு இல்லை என்று கூறி Sahara குழுமம் ஜூலை 2011 அன்று உச்ச நீதிமன்றத்தை நாடியது. அதற்கு தீர்ப்பாயத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்ப்பாயம் உத்தரவு

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி Sahara குழுமம், பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (Securities Appellate Tribunal - SAT) அணுகியது. SEBI அமைப்பின் உத்தரவு சரியென்றும் Sahara குழுமம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் 18 அக்டோபர் 2011 அன்று பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் தீர்ப்பு

நவம்பர் 2011 அன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக Sahara குழுமம் தடை ஆணையை பெற்றது. ஜனவரி 2012 அன்று விசாரணையின் போது சொத்துக்கள் மற்றும் கையிருப்பு விவரங்களை வழங்குமாறு Sahara குழுமத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு SEBI மற்றும் தீர்ப்பாயம் அமைப்பின் உத்தரவையே உறுதி செய்யும் விதமாக, “SIRECL மற்றும் SHICL ஆகிய இரு நிறுவனங்களும் முறையே 19,400.87 கோடி ரூபாய் மற்றும் 6,380.50 கோடி ரூபாய் பணத்தை முதலீட்டாளர்களுக்கு 15% வட்டியுடன் திருப்பி தருமாறும், மேலும் அதை 3 மாதங்களுக்குள் SEBI அமைப்பிடம் வைப்புத்தொகையாக (Deposit) செலுத்த வேண்டும், தவறினால் SEBI அமைப்பு அவர்களின் சொத்துக்களை இணைக்கலாம் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கலாம்” என்று 31 ஆகஸ்ட் 2012 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முதலீட்டாளர்களுக்கு பணம் நேரடியாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக OFCD பத்திரதாரர்களின் விவரங்களை SEBI அமைப்பிடம் சமர்ப்பிக்குமாறு Sahara குழுமம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

31 ஆகஸ்ட் 2012 உத்தரவை எதிர்த்து Sahara குழுமம் உச்ச நீதிமன்றத்தில் 05 அக்டோபர் 2012 அன்று மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. 08 ஜனவரி 2013 அன்று Sahara குழுமம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தவணை முறை

உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு Sahara குழுமம் இணங்கவில்லை என்று கூறி SEBI அமைப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் 02 நவம்பர் 2012 அன்று வழக்குத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து, Sahara குழுமம் மூன்று தவணைகளில் பணத்தை Deposit செய்ய வேண்டும் என்றும் முதல் தவணையாக 5,120 கோடி ரூபாயை உடனடியாக செலுத்தவும் 2013 ஜனவரி முதல் வாரத்தில் 10,000 கோடி ரூபாயை செலுத்தவும் 2013 பிப்ரவரி முதல் வாரத்தில் மீதமுள்ள தொகையை செலுத்தவும் 05 டிசம்பர் 2012 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, முதல் தவணைத் தொகையான 5,120 கோடி ரூபாயை 06 டிசம்பர் 2012 அன்று செலுத்திய பிறகு, மற்ற இரண்டு தவணைகளை அடுத்தடுத்த காலக்கெடுவுக்குள் செலுத்த மறுத்தது. மீதமுள்ள தொகையை ஏற்கனவே முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பணத்தை திருப்பிச் செலுத்தியதாகக் கூறியது.

இதைத் தொடர்ந்து, முதல் தவணை தொகையான ரூ.5,120 கோடியை 06 டிசம்பர் 2012 அன்று செலுத்திய பிறகு, மற்ற இரண்டு தவணைகளை அடுத்தடுத்த காலக்கெடுவுக்குள் செலுத்த மறுத்தது. இது குறித்த விசாரணையின் போது, மீதமுள்ள தொகையை முதலீட்டாளர்களுக்கு நேரடியாக திருப்பிச் செலுத்திவிட்டதாக Sahara குழுமம் கூறியது.

முடக்கமும் சமர்ப்பித்தலும்

தவணை தொகை தொடர்பான Sahara குழுமத்தின் முரணான தகவல்களால் அதன் வங்கி கணக்குகளை முடக்கவும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் SEBI அமைப்பு தாமதிக்கக்கூடாது என்று 06 பிப்ரவரி 2013 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 13 பிப்ரவரி 2013 அன்று Sahara குழுமத்தின் நிதி ஆதாரங்களை முடக்கியதுடன் அதன் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் Aamby Valley City உள்ளிட்ட சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு SEBI அமைப்பு உத்தரவிட்டது.

SEBI அமைப்பால் உத்தரவிட்ட நிதி முடக்கத்தை எதிர்த்து 06 மார்ச் 2013 அன்று SAT அமைப்பிடம் முறையிட்டது Sahara குழுமம். 23 மார்ச் 2013 அன்று வங்கிக் கணக்குகளை முடக்கியதற்கு எதிராக இடைக்கால நிவாரணம் வழங்க SAT அமைப்பு மறுத்தது. இதையொட்டி, ஏப்ரல் 2013 அன்று SIRECL மற்றும் SHICL நிறுவனங்கள் 127 லாரிகளில் 31,669 அட்டைப்பெட்டிகள் அடங்கிய ஐந்து கோடி ஆவணங்களை SEBI தலைமையகத்திற்கு அனுப்பியது. ஆவணச் சரிபார்ப்பு செலவை Sahara குழுமம் ஏற்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆவணங்களை ஆய்வு செய்ததற்காக பிப்ரவரி 2016 அன்று Sahara குழுமம் செலுத்திய வைப்புத்தொகைக்கு கிடைத்த வட்டியில் இருந்து 41.5 கோடி ரூபாபையை SEBI அமைப்பு பெற்றது. மேலும்,  SEBI அமைப்பு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கிய பிறகு, Sahara குழுமம் ஆவணங்களை திரும்ப பெற்றது.

ஆவணச் சரிபார்ப்பு படலத்தில், சுமார் 3.07 முதலீட்டாளர்களின் (பத்திரதாரர்கள்) விவரங்களை SEBI அமைப்பால் முழு அளவில் கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், OFCD பத்திர உரிமைகோரல்கள் தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு அனுப்பட்ட ஆயிரக்கணக்கான நோட்டீஸ்கள் “முழுமையற்ற முகவரி, அப்படிப்பட்ட நபர் இல்லை” போன்ற காரணங்களுக்காக வழங்கப்படாமல் (Undelivered) SEBI அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, இணையதளம் மற்றும் பத்திரிகை மூலம் OFCD பத்திர உரிமைகோரல்கள் விளம்பரங்களை வெளியிட்டது.

சம்மனும் தேநீரும்

வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க Sahara குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இயக்குநர்களுக்கு 26 மார்ச் 2013 அன்று SEBI அமைப்பு சம்மன் அனுப்பியது. சம்மனை தொடர்ந்து, 10 ஏப்ரல் 2013 அன்று SEBI அலுவலகத்தில் சுப்ரதா ராய் மற்றும் இயக்குநர்கள் ஆஜரானார்கள். விசாரணைக்கு பிறகு, “எனக்கு ஒரு கோப்பை தேநீர் கூட வழங்கப்படவில்லை” என்று செய்தியாளர்களிடம் சுப்ரதா ராய் கூறினார். அன்றைய தினத்தன்று வழக்கை விட்டுவிட்டு சில ஊடகங்கள் தேநீர் பற்றி விவாதித்தது நகைப்புக்குரியது.

பிடிவாரண்ட் உத்தரவு

முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்த பணத்தை திருப்பி செலுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியதற்காக Sahara குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய அனுமதி கோரி 15 மார்ச் 2013 அன்று SEBI அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து, 22 ஏப்ரல் 2013 அன்று Sahara குழுமம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 24,000 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாததற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், நிவாரணத்திற்காக வெவ்வேறு மன்றங்களை அணுகி “நீதிமன்றங்களைக் கையாள்கிறது” (Manipulating Courts) என்று Sahara குழுமம் மீது குற்றம் சாட்டியது.

SEBI அமைப்பு விசாரணை தொடங்கியதில் இருந்து இரு நிறுவனங்களிலும் உள்ள சுமார் 3.07 கோடி முதலீட்டாளர்களில் சில ஆயிரம் முதலீட்டாளர்களே தங்கள் பணத்தைக் கோர முன் வந்தனர். இதையொட்டி, ஏற்கனவே மற்ற முதலீட்டாளர்களுக்கு செலுத்த வேண்டிய 22,885 கோடி ரூபாயை திருப்பி செலுத்திவிட்டதால், யாரும் உரிமை கோர முன்வரவில்லை என்று Sahara குழுமம் தொடர்ந்து கூறி வந்தது. அவ்வாறு தனது முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளித்ததாக கூறிய பணத்திற்கு பயன்படுத்தப்பட்ட நிதி ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது CBI மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் (ROC) விசாரணையை எதிர்கொள்ள Sahara குழுமம் தயாராக இருக்க வேண்டும் என்று 09 ஜனவரி 2014 அன்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

21 நவம்பர் 2013 அன்று Sahara குழுமம் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளின் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமைப் பத்திரங்களை SEBI அமைப்பிடம் ஒப்படைக்க தவறியதை அடுத்து, சுப்ரதா ராய் மற்றும் இயக்குநர்கள் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் அதன் அனைத்து நிறுவனங்களின் சொத்துக்களையும் தனிப்பட்ட முறையில் விற்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி, தடையை தளர்த்த கோரிய சுப்ரதா ராயின் முறையீட்டை 28 ஜனவரி 2014 அன்று  உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

SIRECL மற்றும் SHICL ஆகிய இரு நிறுவனங்களால் சுமார் 3.07 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட சுமார் 24,000 கோடி ரூபாயை திரும்பப் பெறுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 31 ஆகஸ்ட் 2012 மற்றும் 05 டிசம்பர் 2012 உத்தரவுகளுக்கு இணங்காததற்காக 26 பிப்ரவரி 2014 அன்று சுப்ரதா ராய் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென 20 பிப்ரவரி 2014 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 26 பிப்ரவரி 2014 அன்று சுப்ரதா ராய் தனது தாயாரின் உடல்நிலையைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையெடுத்து, சுப்ரதா ராய்க்கு எதிராக உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த உச்ச நீதிமன்றம், அவரை கைது செய்து 04 மார்ச் 2014 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

கைதும் ஜாமீனும்

தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரை கவனித்துக் கொள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரியும், சிறைக்கு வெளியில் இருந்தால் மட்டுமே தன்னால் திருப்பி செலுத்துவதற்கான பணத்தை ஈட்ட முடியும் என்று கோரியும் சுப்ரதா ராய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதை தொடர்ந்து, OFCD பத்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பிச் செலுத்தத் தவறியதற்காக சுப்ரதா ராய் 28 பிப்ரவரி 2014 அன்று லக்னோவில் கைது செய்யப்பட்டார். இறுதியில், சுப்ரதா ராய் 04 மார்ச் 2014 அன்று உச்ச நீதிமன்றத்தால் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

திகார் சிறையில் பல மாதங்கள் இருந்த போது, “வாழ்க்கை உங்களுக்கு சிறைத்தண்டனை கொடுக்கும் போது ​​புத்தகங்களை உருவாக்குவதே சாலச்சிறந்தது” என்று கூறி சுப்ரதா ராய் “வாழ்க்கை மந்திரங்கள்” (Life Mantras) என்ற தலைப்பில் ஒரு தத்துவ புத்தகத்தை எழுதினார். அதை 1 பிப்ரவரி 2016 அன்று கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவால் வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், 06 மே 2016 அன்று அதிகாலை சுப்ரதா ராயின் தாயார் சாபி ராய் காலமானார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த சுப்ரதா ராய்க்கு, அவரது தாயாரின் இறுதிச் சடங்குகளை செய்ய 06 மே 2016 முதல் நான்கு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் பரோல் வழங்கியது. இதையெடுத்து, அண்மையில் சுப்ரதா ராய் இறக்கும் வரை அவரது பரோலை உச்ச நீதிமன்றம் பலமுறை நீட்டித்தது சர்ச்சையானது.

பண மோசடி வழக்கு

இந்த வழக்கு விசாரணையில் சரியான நிதி ஆதாரங்களை வழங்காததால் கறுப்புப் பணத்தை (Black Money) மறைப்பதற்காக Sahara குழுமம் பெரும் பண மோசடி (Money Laundering) செய்திருக்கலாம் என்று பரவலாக ஊகிக்கப்பட்டது. ஏனெனில், பண மோசடி முறையில், புலனாய்வு அமைப்புகளால் கூட பணத்தின் மூல ஆதாரத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் பணம் முதலீடு செய்யப்படுகிறது. இதையெடுத்து, Sahara குழுமத்திற்கு எதிராக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பண மோசடி கோணத்தின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் (Enforcement Directorate) 13 நவம்பர் 2014 அன்று வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

நிழல் உலக நடவடிக்கைகளில் தாவூத் இப்ராகிமின் எழுச்சியை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால், அவரது D Company பண மோசடிக்கு பெயர் போனது. இத்தகைய சூழலில், 2001 முதல் 2013 வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு Major Sponsorship செய்தது Sahara குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், 2015 அன்று SIRECL மற்றும் SHICL ஆகிய இரு நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய 20 மணி நேர சோதனையில், ஆய்வு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வழக்கில் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் கிட்டத்தட்ட 95% ரொக்கமாக நடந்ததை கண்டறிந்தது.

முடிவில் நடந்தது என்ன?

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி OFCD பத்திரதாரர்கள் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தி SEBI அமைப்பு பல விளம்பரங்களை வெளியிட்டது. இது தொடர்பான இறுதிச்சுற்று விளம்பரங்கள் 26 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்டது. மேலும், 19 ஜூன் 2018 அன்று “பத்திரதாரர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி மற்றும் இறுதி வாய்ப்பு 02 ஜூலை 2018 ஆகும், அதன் பிறகு எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது” என்று பத்திரதாரர்களுக்கு SEBI அமைப்பு தெரிவித்தது.

“SEBI - Sahara” போரில், SEBI அமைப்பின் மேற்பார்வையின் கீழ் Sahara குழுமம் செலுத்திய தொகை குறித்தும், பத்திரதாரர்களுக்கு திருப்பித் தரப்பட்ட தொகை குறித்தும் சர்ச்சை நீடித்து வந்த நிலையில் “30 நவம்பர் 2021 நிலவரப்படி SIRECL மற்றும் SHICL ஆகிய இரு நிறுவனங்களும் அசல் 25,781.37 கோடி ரூபாய்க்கு எதிராக 15,485.80 கோடி ரூபாயை Deposit செய்துள்ளது. வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் 22 நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் வழிகாட்டுதல்களை கோரி 21 அக்டோபர் 2021 அன்று இடைக்கால மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும், “அசல் 81.70 கோடி ரூபாய்க்கு 53,642 அசல் பத்திரச் சான்றிதழ்களை உள்ளடக்கிய 19,644 விண்ணப்பங்களை SEBI அமைப்பு பெற்றது. அதில் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அசல் 70.09 கோடி ரூபாய் மற்றும் வட்டி 67.98 கோடி ரூபாய் சேர்த்து 138.07 கோடி ரூபாய்க்கு 48,326 அசல் பத்திரச் சான்றிதழ்களை உள்ளடக்கிய 17,526 விண்ணப்பதாரர்களுக்கு SEBI அமைப்பு NEFT / RTGS பரிமாற்றம் மூலம் பணத்தை திருப்பிச் செலுத்தியது” என்றார்.

என்ன நடந்து இருக்கும்?

இதுவரை, SEBI அமைப்பிடம் 15,485.80 கோடி ரூபாயை Sahara குழுமம் Deposit செய்துள்ளது. சுமார் 3.07 கோடி முதலீட்டாளர்களில் 17,526 முதலீட்டாளர்கள் SEBI அமைப்பிலிருந்து 138.07 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளனர். மீதமுள்ள பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைக் கோர இன்னும் முன்வரவில்லை என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் Sahara குழுமம் செலுத்திய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இன்னும் SEBI வசம் உள்ளது. மேலும், விடை தெரியாத கேள்விகள் சிலவும் அப்படியே உள்ளன. எடுத்துக்காட்டாக,

1. இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா? என்ற கவியரசு வரிகளுக்கு ஏற்ப ஏன் சுமார் 3.07 கோடி முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெற முன்வரவில்லை?

2. கடன் பெற்றதாக போலி ஆவணம் தயாரித்து முறைகேடாக சம்பாதித்த பணத்தை முறையான பணமாக மாற்ற பண மோசடி நடந்ததா?

3. பண மோசடி வலைப்பின்னலுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை காப்பாற்ற சுப்ரதா ராய் மோசடியின் ஒற்றை முகமாக ஆக்கப்பட்டாரா?

4. முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே சுமார் 20,000 கோடி ரூபாயை செலுத்திவிட்டதாக Sahara குழுமம் கூறுவது உண்மை என்றால், அந்த முதலீட்டாளர்கள் யார்?

முடிவுரை

வலிய சென்று தொடங்கிய ஆட்டம் ஒரு நாள் முடிவுக்கு வர வேண்டும். இதனால், தற்போது நடைபெற்று வரும் Sahara வழக்கில், இரண்டு வாய்ப்புகள் மட்டுமே சாத்தியமாகும். அவை,

1. கடனீட்டு பத்திரங்களை வாங்கிய முதலீட்டாளர்கள் பணத்தைக் கோர முன்வர வேண்டும்.

அல்லது

2. கடனீட்டு பத்திரங்கள் போலியானவை என்றால், பணமோசடி நடந்திருக்க வேண்டும்.

2009-2010 காலகட்டத்தில் கடனீட்டுப் பத்திரங்கள் மூலம் சுமார் 24,000 கோடி ரூபாயை திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டாலும், அதற்கு முன்னும் பின்னும், அரசின் தீவிர ஆய்வுக்கு மத்தியிலும், Sahara குழுமம் ஆயிரக்கணக்கான கோடிகளை திரட்டியிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. இதற்கிடையில், சுப்ரதா ராய் 14 நவம்பர் 2023 அன்று Deposit பணம் மற்றும் Depositor விவரங்கள் தொடர்பான சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வராமல் மாரடைப்பு காரணமாக காலமானார். இருப்பினும், இந்த வழக்கு நீதிமன்றம் மற்றும் SEBI முன் நிலுவையில் உள்ளது. மொத்தத்தில், Sahara வழக்கில் என்ன தீர்வு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதர செய்திகள்

// கின்னஸ் சாதனை //

20 அக்டோபர் 2012 அன்று 42,813 பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் தேசிய கீதத்தைப் பாடி கின்னஸ் உலக சாதனை படைத்தனர். இதை முறியடிக்கும் வகையில், 06 மே 2013 அன்று உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் 1,21,653 Sahara ஊழியர்கள் இந்திய தேசிய கீதத்தை பாடி கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

சுப்ரதா ராய் நீதிமன்றங்களில் OFCD வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி வந்த வேளையில் “ஒரே நேரத்தில் அதிக மக்கள் தேசிய கீதம் பாடினார்கள்” என்ற கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினார். கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சுப்ரதா ராய் பொது மன்றத்தில் தனது சமூக மதிப்பை (Social Value) தக்க வைத்துக் கொள்வதற்காக தேசபக்தியை பயன்படுத்தினார் என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது.

// பாடம் கற்கவில்லை //

Reserve Bank of India (RBI) நீண்ட காலமாக வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (Non Banking Financial Company - NBFC) செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், 2007-2008 காலகட்டத்தின் போது, வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான Sahara India Financial Corporation Limited (SIFCL - Chit Funds Company) நிறுவனம் “நேரடி முதலீட்டு விதிமுறை, வைப்பாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வட்டி விகிதம், சொத்து / பொறுப்பு மேலாண்மை வழிகாட்டுதல், தகவல் தொடர்பு வழிகாட்டுதல், பண மோசடி தடுப்பு விதிமுறை, வைப்புத்தொகை முதிர்ச்சியடையும் நேரத்தில் வைப்பாளர்களுக்குத் தெரியப்படுத்துதல்” ஆகிய விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என RBI குற்றம் சாட்டியது. அதை தொடர்ந்து, பொதுமக்களின் வைப்புத்தொகை மூலம் SIFCL நிறுவனம் நிதி திரட்டுவதை 04 ஜூன் 2008 அன்று RBI தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கு பல திருப்பங்களை கண்டது தனிக்கதை. 

சுருக்கமாக, Sahara குழுமம் நிதி திரட்டுவது தொடர்பாக 2007-2008 காலகட்ட SIFCL வழக்கில் இருந்து பாடம் கற்காமல் மீண்டும் நிதி திரட்டுவது தொடர்பாக 2009-2010 காலகட்ட OFCD மோசடி வழக்கில் சிக்கியது.

// Birla - Sahara Papers //

அக்டோபர் 2013 அன்று Birla குழுமத்தின் அலுவலகங்களில் மத்திய புலனாய்வு துறையும் நவம்பர் 2014 அன்று Sahara குழுமத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையும் சோதனைகளை நடத்தியது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட “ஆவணங்கள், மின்னஞ்சல்கள், விரிதாள்கள், நாட்குறிப்புகள், குறிப்பேடுகள்” கொண்ட தொகுப்பு Birla - Sahara Papers என்றழைக்கப்பட்டது. 

நவம்பர் 2016 அன்று Birla - Sahara Papers ஆவணங்கள் பொது மன்றத்தில் கசிந்தன. இந்த ஆவணங்களில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரங்கள் இருப்பதாக கூறப்பட்டது. எடுத்துக்காட்டாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 55 கோடி, மத்தியப் பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 10 கோடி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் 4 கோடி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித் 1 கோடி உட்பட பல்வேறு தலைவர்கள் லஞ்சப் பணம் பெற்றதாக ஆவணங்கள் குறிப்பிடுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, சமாஜ்வாதி, சிவசேனா, லோக் ஜனசக்தி, இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 18 கட்சிகளை சேர்ந்தவர்கள் சிக்கினர்.

நவம்பர் 2016 அன்று பணமதிப்பு நீக்கம் (Demonetization) நடந்த அதே நேரத்தில் கசிந்த Birla - Sahara Papers குறித்து முக்கிய ஊடகங்கள் அமைதியாக இருந்தன. இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சில எதிர்க்கட்சிகள் மட்டுமே பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், Birla மற்றும் Sahara குழுமம் தீர்வு ஆணையத்தை (Settlement Commission) அணுகி, தங்கள் மீதான புகார்களை தீர்த்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்பப் பெறுவதற்காக முயற்சித்தது. ஆனால், கைப்பற்றப்பட்ட Birla - Sahara Papers ஆவணங்களை அதிகாரிகள் தக்கவைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் 08 நவம்பர் 2016 அன்று  தீர்வு ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். மேலும், “Birla - Sahara Papers ஆவணங்களின் அடிப்படையில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று Common Cause என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

“கணினி அச்சு ஆவணங்களை சட்டப்பூர்வ ஆதாரமாக ஏற்றுக்கொண்டால் நாட்டில் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள், ஏனெனில் அத்தகைய அச்சில் யார் வேண்டுமானாலும் யாருடைய பெயரையும் எழுதலாம்” என்று ஒன்றிய அரசு தரப்பு வாதித்தது. 11 ஜனவரி 2017 அன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அமிதவ ராய் ஆகியோர் “கணினி அச்சு ஆவணங்கள் விசாரணைக்கு முற்றிலும் பொருத்தமற்றவை, ஏனெனில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் தொடர்பான சான்றுகளை நிரூபிக்க எவ்வித ஆதார மதிப்பும் இல்லை” என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
விவரணைகள்

Initial Public Offering


Sahara OFCD Scam


RBI about SIFCL on 2008


Regulators vs Sahara Story


Rise and Fall of Sahara Group


Aamby Valley City in Sahara probe
 

Who are those "Ghost" depositors?


OFCD Refund Advertisement by SEBI


SEBI issues warning on Sahara Securities


Supreme Court Judgement on 31 August 2012


Subrata Roy and Amitabh Bachan are Friends in need


Sahara sets world record for singing National Anthem


Supreme Court refuses probe into Sahara-Birla Papers


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...