Chocks: தி.மு.க மீதான அட்டகத்தி குற்றச்சாட்டுகள்

Thursday, February 8, 2024

தி.மு.க மீதான அட்டகத்தி குற்றச்சாட்டுகள்

தி.மு.க மீதான அட்டகத்தி குற்றச்சாட்டுகள்

சில எதிர்க்கட்சிகள் தி.மு.க செய்த அரசியல் சாதனைகளை குறிப்பிடவோ அல்லது ஏற்கவோ தயாராக இல்லை மாறாக அவர்கள் பெரும்பாலும் மூன்று அட்டகத்தி குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்துகிறார்கள். அவை,
  1. வாரிசு அரசியல் 
  2. ஊழல் அரசியல் 
  3. ஈழ அரசியல்
1.வாரிசு அரசியல் 

நடிகரின் மகன் நடிகரானால், மருத்துவரின் மகன் மருத்துவரானால், பொறியாளரின் மகன் பொறியாளரானால் தமிழ் கூறும் நல்லுலகில் சிலர் "ஒரே குடும்பத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக, கலைத் தாகத்தைத் தீர்க்க ஒரு நடிகர், நவீன விஞ்ஞான சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர், வன்பொருள் மற்றும் மென்பொருளை வடிவமைக்க ஒரு பொறியாளர்" கிடைத்தாக பெருமிதம் கொள்வர். ஆனால், கீழ்ப்பட்டுள்ள சமூகம் மேம்பட ஒரே குடும்பத்தில் இருந்து வாரிசாக ஒரு அரசியல்வாதி கிடைத்தால் மட்டும் "வாரிசு அரசியல்" குற்றச்சாட்டை சொல்லிவிடுவர். 

ஆனால், ஏன் வாரிசு அரசியல் தவறில்லை / தவிர்க்க இயலாதது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை காண்போம். இந்திரா காந்தி இறந்த போது யார் அடுத்த பிரதமர்? என்ற சலசலப்பு காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தது. அப்போது பிரணப் முகர்ஜி உட்பட சிலர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்கள் ஆனால் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியும் கட்சியும் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் ராஜீவ் காந்தியை காங்கிரஸ் அரசியலுக்குள் கொண்டு வந்தனர். ராஜீவ் காந்தி காங்கிரஸ் அரசியலுக்குள் வந்த காரணத்தால் தான் காங்கிரஸ் கட்சி தலைவி இந்திரா காந்தியை இழந்த சோகத்திலும் கட்சிக்குள் "இளம் ரத்தம்" பாய்ச்சப்பட்டு புத்துணர்ச்சி பெற்று 1984 ஆம் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. 

தலைவன் இறந்த பிறகு தொண்டன் தலைவன் ஆகலாமே? என்று சிலர் கேள்வி கேட்கலாம். அப்படி கேள்வி கேட்பதற்கு நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சரி வரவே வராது. காரணம் உலகளவில் தனக்கு பிறகு யார் வாரிசு என்பதை சொல்லாமல் ஒரு தலைவன் இறந்துவிட்டால், இரண்டு விஷயங்கள் மட்டுமே நடக்கும். ஒன்று பாகுபலி சண்டையில் தலைவன் இறந்த பிறகு காலகேயர்கள் போல சுக்குநூறாக ஓடிவிடுவது அல்லது கோஷ்டி பூசலால் அண்ணன் எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும்? என்று உளவாளிகள் நேரம் பார்ப்பது. 

இன்று அ.தி.மு.க கட்சி அழிவின் விளிம்பில் நிற்க காரணம் என்ன? ஜெயலலிதா நேரடி வாரிசு இல்லாமலும் தனக்கு பிறகு யார் வாரிசு என்பதை சொல்லாமலும் இறந்து போக, இன்று அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்பதை மறக்காதீர். அதே சமயம், தலைவரின் வாரிசு என்ற காரணத்திற்காக யாருக்கும் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், எந்தக் கட்சியின் வாரிசும் அவர்களின் வேர்களையும் கொள்கைகளையும் புரிந்து கொண்டால் மட்டுமே அரசியல் களத்தில் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியும் என்றால் அது மிகையாகாது.

2.ஊழல் அரசியல் 

வீராணம் ஊழல், மேம்பாலம் கட்டுமான ஊழல், அலைக்கற்றை ஊழல், சர்க்காரியா ஆணையம், வர்மா ஆணையம், ஜெயின் ஆணையம் என்று தி.மு.கவுக்கு ஊழலில் பங்கு மற்றும் ராஜீவ் காந்தி படுகொலையில் பங்கு என்று தி.மு.கவுக்கு எதிராக ஆதாரமில்லாத புகார் பட்டியல் அள்ளி வீசப்படுகிறது ஆனால் "தி.மு.க தலைமை" மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. 

ராஜீவ் காந்தியின் படுகொலையால் தி.மு.க எந்த நன்மையையும் அடையவில்லை என்பதும் மாறாக இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் ஆதாயங்களைப் பெற்றது அ.தி.மு.க என்பதும் அரசியல் ரீதியாக தெளிவாகத் தெரிந்தது. மேலும், கலைஞரின் "விஞ்ஞானப் பூர்வமான ஊழல்" குறித்து சர்க்காரியா ஆணையம் மேற்கோள் காட்டியதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால், இது வெறும் புரளி, ஏனெனில் ஆணையத்தின் அறிக்கையில் அப்படி எந்தக் குறிப்பும் இல்லை. அதே போல் பதியப்பட்ட ஊழல் வழக்குகள் மற்றும் விசாரணை ஆணையங்களில் இருந்து குற்றமற்றதாக வெளியே வந்த கட்சி தி.மு.க மட்டுமே. மொத்தத்தில், அ.தி.மு.க கட்சி தலைவி ஜெயலலிதா போல C1 (Convicted) குற்றவாளி யாரும் தி.மு.க தலைமையில் கிடையாது.

3. ஈழ அரசியல்

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் குழுவை மட்டுமே தீவிரமாக ஆதரித்தது ஆனால் கலைஞரின் தி.மு.க ஒட்டுமொத்த கிளர்ச்சிக் குழுக்களையும் ஆதரித்தது என்றால் மிகையாது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவின் அ.தி.மு.க விடுதலைப் புலிகள் மீதான ஆதரவை வாபஸ் பெற்றது. அத்துடன் பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று கூறியது. உண்மை இவ்வாறு இருக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று கூறி அ.தி.மு.கவை ஆதரித்தது அரசியல் முரணானது. ஈழ அரசியல் தொடர்பாக தி.மு.க ஆற்றிய சில பணிகளைப் பார்ப்போம்.
 
*31 ஜனவரி 1976 அன்று பிரதமர் இந்திரா காந்தி "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நட்புறவு கெட கலைஞரின் ஈழ பாசம் காரணமாக இருக்கிறது" என்று  குற்றம்சாட்ட அதற்கு கலைஞர் "ஆட்சிக் கலைப்புக்கு அதுவே காரணம் என்றால் அதைவிடப் பெருமையான ஒன்று தி.மு.கவுக்கு இருக்க முடியாது" என்றார்.

*15 செப்டம்பர் 1981 அன்று ஈழத் தமிழர்களுக்கான பிரச்சனையில் கலைஞர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். 

*10 ஆகஸ்ட் 1983 அன்று ஒன்றிய அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் கவனம் செலுத்த வலியுறுத்தி கலைஞர் மற்றும் அன்பழகன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினர்.

*13 மே மாதம் 1985 அன்று இலங்கையில் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப தமிழ்நாட்டில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organization - TESO - டெசோ) உருவாக்கப்பட்டு அதன் தலைவராக கலைஞர், உறுப்பினர்களாக அன்பழகன், கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

*16 மே 1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஈழ ஆதரவு மறியல் போரில் கலைஞர் கலந்து கொண்டு கைதாகி சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். 

*3 ஜூன் 1986 அன்று கலைஞரின் பிறந்தநாள் ரத்து செய்யப்பட்டு அன்று உண்டியல் வழியே வசூலான 2,75,000 ரூபாய் நிதியை ஈழ போராளி இயக்கங்களுக்குத் கலைஞர் பகிர்ந்தளித்தார்.

*6 நவம்பர் 1987 அன்று சென்னையில் "ஈழத் தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு" சார்பாக பல்வேறு கட்சியினர், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் பெருமக்கள் கலந்து கொண்ட மனித சங்கிலியை தி.மு.க நடத்தியது.

*15 மார்ச் 1989 அன்று பிரதமர் ராஜீவ் காந்தியை டெல்லியில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கலைஞர் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். 

*31 ஜனவரி 1991 அன்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க அரசு ஆட்சி நடத்துகிறது என்ற காரணம் கூறப்பட்டு தி.மு.க அரசு கலைக்கப்பட்டது.

*23 ஏப்ரல் 2008 அன்று சட்டப்பேரவையில் "இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றினார்.

*24 ஏப்ரல் 2009 அன்று கலைஞர் அவர்களின் ஈழ ஆதரவு கோரிக்கைக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
விவரணைகள் 



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...