Chocks: நெருக்கடி நிலைக்கு முந்தைய அரசியல் காலச்சூழல்

Thursday, February 8, 2024

நெருக்கடி நிலைக்கு முந்தைய அரசியல் காலச்சூழல்

நெருக்கடி நிலைக்கு முந்தைய அரசியல் காலச்சூழல்

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. கோலக்நாத் மற்றும் கேசவானந்த பாரதி வழக்கு
  3. மக்கள் இயக்க போராட்டங்கள் 
  4. ராஜ் நரேன் வழக்கு
  5. நெருக்கடி நிலை
  6. முடிவுரை 
  7. விவரணைகள் 
முகவுரை 

1970 களில் இந்திரா காந்தி ஆட்சியின் போது "தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம், காங்கிரஸ் எதிர்ப்பு தலைவர்களின் பிரச்சாரம், மாணவர்களின் தொடர் போராட்டம் மற்றும் நீதிமன்ற முடிவுகள்" ஆகியவற்றை சுற்றி பதட்டங்கள் தோன்றின. இந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் கோலக்நாத் வழக்கு, கேசவானந்த பாரதி வழக்கு, மாணவர் இயக்கம் மற்றும் ராஜ் நரேன் வழக்கு ஆகியவை அடங்கும்.

கோலக்நாத் மற்றும் கேசவானந்த பாரதி வழக்கு

1967 கோலக்நாத் வழக்கு அடிப்படை உரிமைகளை, குறிப்பாக சொத்துரிமையை திருத்துவதற்கான அரசாங்கத்தின் திறனுக்கு வரம்புகளை ஏற்படுத்தியது. இருப்பினும், 1973 கேசவானந்த பாரதி வழக்கு "அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை" அறிமுகப்படுத்தி, ஜனநாயகம் கொடுத்துள்ள  அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மாற்றாத வரை திருத்தங்களை அனுமதித்தது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இந்தியாவில் அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகார இயக்கவியலை கணிசமாக வடிவமைத்தன.

மக்கள் இயக்க போராட்டங்கள் 

1967 இல் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சி மாணவராக படித்து வந்தார் ஜார்ஜ் ரெட்டி. கல்லூரியில் பாரபட்சம், நிர்வாக ஊழல் மற்றும் வலதுசாரி ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர மகத்தான மாணவர் எழுச்சிக்கு தலைமை தாங்கினார் ஜார்ஜ் ரெட்டி. கல்வியில் தங்கப்பதக்கம் பெற்ற ஜார்ஜ் ரெட்டி 1972 இல் வலதுசாரி சக்திகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரது படுகொலை, பல்கலைக்கழகத்தில் முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கத்தை தொடங்க அடிகோலியது. ஆயுத எழுத்து திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் ஜார்ஜ் ரெட்டியை அடிப்படையாகக் கொண்டது.
ஜார்ஜ் ரெட்டியின் ஹைதராபாத் மாணவர் கிளர்ச்சி, நாடு முழுவதும் உள்ள மாணவர்களை அணி திரட்டவும் போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் தூண்டியது. ஜார்ஜ் ரெட்டியின் மூலோபாயம் (Strategy) 1973 இல் குஜராத்தில் மாணவர்கள் நடத்திய நவநிர்மான் அந்தோலன் போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைத்த ஒரே வெற்றிகரமான மக்கள் இயக்க போராட்டம் நவநிர்மான் அந்தோலன் ஆகும். 

ஹைதராபாத் மற்றும் குஜராத் மாணவர்கள் இயக்கத்தை பீகார் இயக்கத்திற்கான அடித்தளமாக ஜெயபிரகாஷ் நாராயண் (Jayaprakash Narayanan @ JP) பயன்படுத்தினார். 1974 இல் நாடு முழுவதும் சமூக மாற்றத்திற்காக வாதிட்ட ஜெயபிரகாஷ் நாராயண், பீகார் மாநில அரசுக்கு எதிராக மாணவர் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். பீகார் இயக்கம் மாணவர் போராட்டமாக இல்லாமல் அரசியல் முழக்கங்கள் கலந்த போராட்டமானது. ஜன சங்கம், சமாஜ்வாதி, லோக்தளம் மற்றும் கம்யூனிஸ்ட் பிரிவு குழுக்கள் பீகார் இயக்கத்தை வழிநடத்தின. இதற்கிடையில், ஜார்ஜ் பெர்னாண்டஸ், நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கமான ரயில்வே ஊழியர்களின் தேசிய வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கினார். 1970 களில் நடந்த சக்திவாய்ந்த எதிர்ப்புக்கள் அரசாங்கத்தின் மீது பெருகிய பொது அதிருப்தியை எடுத்துக்காட்டின.
ராஜ் நரேன் வழக்கு

இந்திரா காந்தி 1971 இந்திய பொதுத்தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவிய ராஜ் நரேன், இந்திரா காந்தி தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 1975 இல் ராஜ் நரேன் வழக்கில், அலகாபாத் நீதிமன்றம் இந்திரா காந்தி தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறிந்து, பின்னர் ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இந்தத் தீர்ப்பு பின்னர் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்திரா காந்தியின் பிரதமர் பதவியே ஆட்டம் கண்டது.
நெருக்கடி நிலை

உள்நாட்டு அரசியல் அமைதியின்மையை காரணமாக சுட்டிக்காட்டி, பிரதமர் இந்திரா காந்தி 1975 இல் சர்ச்சைக்குரிய நெருக்கடி நிலையை விதித்தார். அமைதி நிலையை மீட்டெடுப்பதை நோக்கமாக கூறப்பட்டாலும், நெருக்கடி நிலை காலம் பரவலான மனித உரிமை மீறல்களால் கறைபட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர், பத்திரிகை தணிக்கை செய்யப்பட்டது மற்றும் கட்டாய கருத்தடை திட்டம் நிறைவேற்றப்பட்டது. 
முடிவுரை 

1970 களில் கோலக்நாத் வழக்கு, கேசவானந்த பாரதி வழக்கு, ராஜ் நரேன் வழக்கு, மக்கள் இயக்க போராட்டங்கள் போன்றவற்றால் நிலவிய அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்திரா காந்தி 1975 இல் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். 1977 இல் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, இந்திரா காந்தி புதிய பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மக்கள் மத்தியில் எதேச்சாதிகாரம் பின்னடைவை ஏற்படுத்தியதால் காங்கிரஸ் பொதுத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. நெருக்கடி நிலைக்கு பிந்தைய பொதுத்தேர்தல் ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஒரு தீர்க்கமான வெற்றியை விளைவித்தது.
விவரணைகள் 

Golaknath vs State Of Punjab (1967)


Kesavananda Bharati vs State Of Kerala (1973)


State Of U.P vs Raj Narain (1975)


George Reddy to JP - Student Protests in the 1970s Shook Up India


Rise and Fall of Janata Party Government

https://www.peepultree.world/livehistoryindia/story/eras/janata-party-first-non-congress-government

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...