Chocks: சேடப்பட்டியும் ஒத்த ஓட்டும்

Sunday, February 11, 2024

சேடப்பட்டியும் ஒத்த ஓட்டும்

சேடப்பட்டியும் ஒத்த ஓட்டும்

கேள்விஇந்திரா காந்தி அரசு மற்றும் சேடபட்டி சூர்யநாராயண ராஜேந்திரன் என்ற நடிகர் S.S.R தொடர்புடைய "அரசியல் நிகழ்வு" என்ன?
பதில் =  1970 இல் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்களை ரத்து செய்யும் வகையில் "மன்னர் மானிய ஒழிப்பு" (Abolition of Privy Purse) மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார், அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் ஆதரவாக 149 ஓட்டுகளும் எதிராக 75 ஓட்டுகளும் பதிவாகி , தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அடைய ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா தோல்வியடைந்தது. இம்மசோதா நிறைவேற்றப்படாமல் போனது இந்திரா காந்தியின் அரசியல் கவர்ச்சிக்கு பேரிடியாக அமைந்தது. அன்று பிரதமர் இந்திரா காந்தியின் சமூக சீர்திருத்தங்களை தி.மு.க ஆதரித்த போதும், அந்த ஒரு வாக்கை தி.மு.க மாநிலங்கவை உறுப்பினர் நடிகர் S.S.R செலுத்தவில்லை.

இதற்கு, “நான் விரைவதற்குள் மாநிலங்களவை கதவுகள் மூடப்பட்டதே தான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு காரணம்” என்று SSR விளக்கம் அளித்தார். மசோதாவை மறைமுகமாக எதிர்க்க SSR அவர்களுக்கு இந்திரா காந்தியின் எதிரணியினர் லஞ்சம் கொடுத்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த மசோதா வாக்கெடுப்பு சர்ச்சைக்கு பிறகு நடிகர் SSR இன் அரசியல் வாழ்வும் திரை வாழ்வும் இறங்கு முகம் கண்டது.

இதே காலகட்டத்தில் காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களால் பிரதமர் இந்திரா காந்தி ஓரங்கட்டப்பட்டு, காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்திரா காந்தியின் அரசு சிறுபான்மை அரசாக பதவி வகித்தது. இருப்பினும், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க போன்ற கட்சிகளின் பிரச்சினை அடிப்படையிலான ஆதரவுடன் (Issue-based Support) ஆட்சியில் நீடித்தது. சமூகவுடைமை (Socialism) கொள்கைகளை வலியுறுத்தி ஆட்சி செய்து வந்த இந்திரா காந்தி, தனது அரசியல் நிலையை வலுப்படுத்தி, காங்கிரஸை பலமான ஆளுங்கட்சியாக நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 1970 டிசம்பரில் மக்களவையை ஓராண்டு முன்னதாகவே கலைத்து, 1971 இல் பொதுத் தேர்தலை சந்தித்தார். 1971 இல் இந்திரா காந்தியின் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் “மன்னர் மானிய ஒழிப்பு மசோதா” மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு இந்திய அரசியலமைப்பின் 26 வது சட்ட திருத்தமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

கேள்வி = ஜெயலலிதா மற்றும் சேடப்பட்டி முத்தையா தொடர்புடைய "அரசியல் நிகழ்வு" என்ன?
பதில் = 1991 முதல் 1996 வரை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா இருந்த போது எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 1999 இல் தி.மு.க அரசால் சேடபட்டி முத்தையா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையெடுத்து, அ.தி.மு.க சார்பில் ஒன்றிய அமைச்சரான சேடபட்டி முத்தையா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் பிரதமர் வாஜ்பாய் கோரிக்கை விடுத்தார். இந்த பின்னணியில், ஜெயலலிதாவின் உத்தரவை தொடர்ந்து சேடபட்டி முத்தையா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு பின்னர், பதிலுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி, ஒன்றிய அமைச்சர்களான பூட்டா சிங், ராமகிருஷ்ணா ஹெக்டே, ராம் ஜெத்மலானி ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் வாஜ்பாய் நீக்க வேண்டும் அல்லது சேடப்பட்டி முத்தையாவை மீண்டும் தனது அமைச்சரவையில் வாஜ்பாய் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில், பூட்டா சிங்கின் அமைச்சர் பதவியை பறித்த வாஜ்பாய் மற்ற இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும் சேடப்பட்டி முத்தையாவை அமைச்சரவையில் சேர்க்கவும் இணங்கவில்லை.

இவ்வாறு, வாஜ்பாய் அரசுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்த ஜெயலலிதா ஒரு கட்டத்தில் வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டார். இதை தொடர்ந்து, 1999 இல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 270 வாக்குகளும் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் வாஜ்பாய் (பா.ஜ.க) அரசு கவிழ்ந்தது. இந்நிலையில், அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சேடப்பட்டி முத்தையா, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அளிக்கப்பட்ட சீட்டில் வாக்களிக்காமல் (Abstained) அதை தனது பாக்கெட்டில் வைத்திருந்தார். ஜெயலலிதாவின் அ.தி.மு.க நிலைப்பாட்டின்படி, பா.ஜ.க அரசுக்கு எதிராக வாக்களிக்காமல், பா.ஜ.க அரசிடம் விலைப் போனதாலே நடுநிலை வகித்தார் என்று எழுந்த குற்றச்சாட்டு சேடப்பட்டி முத்தையாவின் அரசியல் வாழ்வை வெகுவாக பாதித்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, கட்சி நடவடிக்கைகளில் சேடபட்டி முத்தையாவை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த போது சேடப்பட்டி முத்தையா நிதியுதவி கேட்டு ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பினார். ஜெயலலிதாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் விரக்தியடைந்தவர், அ.தி.மு.கவில் இருந்து விலகி 2006 இல் தி.மு.கவில் இணைந்தார்.

முடிவுரை = சுருக்கமாகச் சொன்னால், "ஒத்த ஓட்டு" இரண்டு சேடப்பட்டியார்களின் அரசியல் வாழ்க்கையை உலுக்கியது. 1970 இல் சேடபட்டி சூர்யநாராயண ராஜேந்திரன் (நடிகர் S.S.R) மற்றும்  1999 இல் சேடபட்டி முத்தையா.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

சீமானின் வரலாறு காவி

சீமானின் வரலாறு காவி  பொருளடக்கம் முகவுரை ஏன் பெரியார் மட்டும்  அதிகமாக எதிர்க்கப்படுகிறார்? பெரியாருக்கு பின்னால் திரண்ட படை  தமிழ் தேசியத்...