Chocks: டிரம்ப்பும் ஜெயலலிதாவும் எதிர்வினையும்

Friday, February 5, 2021

டிரம்ப்பும் ஜெயலலிதாவும் எதிர்வினையும்

டிரம்ப்பும் ஜெயலலிதாவும் எதிர்வினையும்

சுருக்கம் 
  1. டொனால்ட் டிரம்ப் 
  2. ஜனாதிபதி தேர்தல் 
  3. 45 வது ஜனாதிபதி
  4. தேர்தலில் தோல்வி 
  5. ஜெயலலிதா 
  6. உறவுகள் 
  7. காவிரி தந்த கலைசெல்வி
  8. முதலமைச்சர் 
  9. சச்சரவுகளும் வழக்குகளும் 
  10. சொத்துக் குவிப்பு வழக்கு
  11. அ.தி.மு.க கொண்டாட்டம் 
  12. அமெரிக்காவும் இந்தியாவும் 
  13. முடிவுரை 
  14. விவரணைகள் 

டொனால்ட் டிரம்ப் 
பிரெட் டிரம்ப்புக்கும் மேரி டிரம்ப்புக்கும் ஐந்தில் நான்காவது பிள்ளையாக டொனால்ட் டிரம்ப் 14 ஜூன் 1946 இல் நியூ யார்க்கில் பிறந்தார். அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும் தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் வலம் வந்தார். என்.பி.சி தொலைக்காட்சியின் தி ஆப்ரீன்ட்டிஸ் (The Apprentice) தொடரில் நடித்ததன் மூலம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா முழுவதும் பிரபலமானார். 1980 இல் கிராண்ட் ஹையாட் நியூ யார்க் ஹோட்டலை புனரமைத்து கட்டிடத்தின் வெளிப்புறத்தை கண்ணாடியில் அடைத்தது டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்க நகரத்தின் சிறந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபராக மாற்றியது.

ஜனாதிபதி தேர்தல் 

தொழிலதிபராக டொனால்ட் டிரம்ப் அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பல முறை தனது அரசியல் கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் 2016 தேர்தலில் தான் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து 2016 அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை எதிர்த்து குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். மேலும் அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதியாக தமது 70 வயதில் 20 ஜனவரி 2017 இல் பதவியேற்றார். 

45 வது ஜனாதிபதி

45 வது ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (Trans-Paicific Partnership) அமெரிக்காவிற்கு மோசமான ஒப்பந்தம் என்றும், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) அமெரிக்க நாட்டிற்கு பேரழிவு என்றும், ஈரான் அணுசக்தி (Iran Nuclear Deal) ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்றும், உலக சுகாதார நிறுவனத்திற்கு (World Health Organisation) நிதி பங்களிப்பு தேவையற்றது என்று பல்வேறு விமர்சனங்களை செய்து அவற்றிலிருந்து அமெரிக்க அரசாங்கம் விலக டிரம்ப் ஆணை பிறப்பித்தார். மேலும் உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) அமெரிக்காவிற்கு எதிராக நியாயமற்ற முறையில் செயல்படுகிறது என்றும், நேட்டோ (NATO) வரி செலுத்தும் அமெரிக்க மக்களுக்கு நியாயமாக இல்லை என்றும், இதுவரை செய்யப்பட்ட மிக மோசமான வர்த்தக ஒப்பந்தம் நாப்டா (NAFTA) என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரமான ஒப்பந்தம் கோரஸ் (KORUS) என்றும் தொடர்ந்து ஒப்பந்தங்களை பாதுகாப்பதை விட அல்லது தேவையான மாற்று கொள்கைகளை உருவாக்குவதை விட டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தங்களை விட்டு விலகுவதில் அல்லது கண்டிப்பதில் தான் சிறந்து விளங்கினார் என கூறுவதே சரியாகும். 

வலதுசாரி தொழிலதிபர்களை மகிழ்வித்தது, குடும்ப உறுப்பினர்களை உயர் அரசாங்க பதவியில் அமர்த்தியது, இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியது, வடக்கு சிரியாவிலிருந்து பிரச்சனைகளை முழுமையாக தீர்க்காமல் அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெற்றது, இறக்குமதி கட்டணங்களை அதிமாக விதித்து சீனாவுடன் வர்த்தக யுத்தத்தைத் தூண்டியது, சட்டவிரோத இடம்பெயர்வுகளைத் தடுப்பதற்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைத் திட்டம் என தனது ஆட்சிக் காலத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு தவறான போக்குகளை கடைபிடித்து ஆட்சி செய்து வந்தார் டொனால்ட் டிரம்ப். 

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை புறக்கணித்தும் முரண்பட்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தலைக் குறைத்து டொனால்ட் டிரம்ப் ஆற்றிய எதிர்வினைகளை பல்வேறு அமெரிக்க ஊடங்கங்கள் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு நிரூபிக்கப்படாத சிகிச்சை சோதனைகள் வெற்றி என தவறான தகவல்களை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப்.

தேர்தலில் தோல்வி 

2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து தேர்தலில் மோசடி நடந்தாக முன்வைத்த குற்றசாட்டுகள் தோல்வியுற்ற பிறகே தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் டொனால்ட் டிரம்ப். இதற்கிடையில் டொனால்ட் டிரம்ப் பேசிய சர்ச்சையான கருத்துக்கள், இனவெறி கொள்கைகள் மற்றும் அவரது ஆட்சிக் காலத்தை அமெரிக்க நீதிமன்றங்கள், பிரபல ஊடகங்கள், பிரபல நட்சத்திரங்கள் உட்பட பலரால் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா 
ஜெயராமுக்கும் வேதவல்லி என்ற சந்தியாவுக்கும் மகளாக கோமளவல்லி என்ற ஜெயலலிதா 24 பிப்ரவரி 1948 இல் மாண்டியாவில் பிறந்தார். இளம் வயதிலே தந்தை ஜெயராம் இறந்துவிட தாய் வேதவல்லி அரவணைப்பில் வளர்ந்தார். பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளி மற்றும் சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்துவிட்டு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க வாய்ப்பு வந்த போது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியதால் கல்லூரி படிப்பைக் கைவிட்டு ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதல்முறையாக ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் 28 படங்கள் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் 99 படங்கள் என மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்தார்.

உறவுகள் 

ஆரம்ப காலத்தில் ஜெயலலிதா, தாய் சந்தியா, அண்ணன் ஜெயக்குமார், அவரது பிள்ளைகள் தீபக், தீபா என்று குடும்பத்துடன் ஒன்றாக போயஸ் கார்டனில் வசித்தார்கள். சந்தியா காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறிவிட அதன்பின் ஜெயலலிதாவுக்கு சொந்த குடும்ப உறவுகள் கசந்ததும் பிற்கால சசிகலா குடும்ப உறவுகள் இனித்ததும் தான் நுண்ணரசியலின் ஆரம்ப பகுதியாகும். 

காவிரி தந்த கலைசெல்வி

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் எம்.ஜி.ஆருடன் பிணக்கு ஏற்பட்டு அவரை விட்டு ஜெயலலிதா விலகியதாக அல்லது விலக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஒரு கட்டத்தில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் அதிலிருந்து மீண்டு 1981 இல் மதுரையில் நடந்த ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டில் “காவிரி தந்த கலைசெல்வி” என்ற நடன நாடகத்தை ஆர்.எம்.வீரப்பன் சிபாரிசில் நடத்தினார். பின்னர் அதே ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதாவுக்கு எதிராக குத்துதே குடையுதே என்று புலம்பியது அரசியல் கதையாகும். 

“காவிரி தந்த கலைசெல்வி” நடனம் ஜெயலலிதாவை மீண்டும் எம்.ஜி.ஆருடன் பிணைத்தது. பிறகு 4 ஜூன் 1982 இல் அ.தி.மு.கவில் இணைந்து சத்துணவுத் திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் கொள்கை பரப்புச் செயலாளராகவும் ஆனார். இதனை தொடர்ந்து 24 மார்ச் 1984 இல் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். 

முதலமைச்சர் 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஜானகி தலைமையில் ஓர் அணியாகவும் ஜெயலலிதாவின் தலைமையில் ஓர் அணியாகவும் பிரிந்தது. 1989 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடத்திலும் ஜானகி தலைமையிலான அ.தி.மு.க அணி ஒரு இடத்திலும் வென்றது. 1989 சட்டமன்ற தேர்தல் வெற்றி காரணமாக தி.மு.க ஆட்சியை பிடித்தது. தமது படுதோல்வி காரணமாக ஜானகி அரசியலிலிருந்து விலகினார். 

பிறகு ஒருங்கிணைந்த அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா. ராஜிவ் காந்தி மரணத்தை தொடர்ந்து 1991 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். பிறகு தொடர்ந்து 2001, 2011, 2016 (5 டிசம்பர் 2016 வரை) சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பணி புரிந்தார்.

சச்சரவுகளும் வழக்குகளும் 

முதலமைச்சராகப் பணி புரிந்த காலத்தில் மகாமக விபத்து, வளர்ப்புமகன் திருமணம், வண்ணத் தொலைக்காட்சி வழக்கு, டான்சி நில வழக்கு, பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு, நிலக்கரி இறக்குமதி வழக்கு, டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, வருமான வரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

சொத்துக் குவிப்பு வழக்கு

பல்வேறு வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்றாலும் இறுதியாக சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. 1991–1996 பதவிக் காலத்தில் வருமானத்திற்கு மீறி சுமார் 66.65 கோடி சொத்துக்களை ஜெயலலிதா மற்றும் கூட்டாளிகள் சேர்த்தனர் என்றும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா 20 செப்டம்பர் 2014 அன்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் அல்ல என கூறி அவர்களை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி 11 மே 2015 அன்று தீர்ப்பளித்தார்.

சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்றும் நால்வரில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட அவருக்கு 100 கோடி அபராதமும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று 14 பிப்ரவரி 2017  அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அ.தி.மு.க கொண்டாட்டம் 

நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் குற்றவாளி என்றும் 100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரான ஜெயலலிதாவுக்கு இன்று 100 கோடி செலவில் நினைவு சின்னம், ஊரெங்கும் சிலை திறப்பு, கோவில் திறப்பு, ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம், ஜெயலலிதாவுக்கு தமிழர் குலச்சாமி பட்டம், ஆண்டுதோறும் ஜெயலலிதா பிறந்த 24 பிப்ரவரி அரசு விழா என்று கொண்டாடி வருகிறது அ.தி.மு.க. நரகாசுரன் அழிவை கொண்டாடும் பண்டிகை தீபாவளி என்றொரு கதை உண்டு அது போல ஒரு வேளை ஜெயலலிதா அழிவை அ.தி.மு.க கொண்டாட முடிவு செய்துள்ளது என்றே தோன்றுகிறது.

அமெரிக்காவும் இந்தியாவும் 

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்த ஆட்சியை அமெரிக்க - ஐரோப்ப ஊடகங்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், தொண்டு நிறுவனங்கள், ஒரு சில கார்பரேட் நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என்று ஒட்டுமொத்தமாக டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் லீலைகள் பற்றி மிக கடுமையாக எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்தது, கருத்தை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கே நம்பிக்கை நட்சத்திரமாக 46 வது ஜனாதிபதியாக ஜோ பிடென் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். 

இங்கோ பல இந்திய ஊடங்கங்கள், இந்திய நட்சத்திரங்கள், இந்திய நிறுவனங்கள் மோடி ஆட்சியின் லீலைகள் பற்றியோ குற்றவாளி ஜெயலலிதாவை அரசு பணத்தில் கொண்டாடுவது குறித்தோ வாய் திறக்கவில்லை, கருத்தை பதிவு செய்யவில்லை. நடவு நடும் விவசாயிகள் நடத்தும் அகிம்சை போராட்டத்தில் டெல்லியில் ஆணிகளை  நடும் கம்பிகளை சுற்றும் பா.ஜ.க அரசாங்கத்தை எதிர்த்து பிரபலங்கள் பேசவில்லை, குற்றவாளி ஜெயலலிதாவின் இமேஜ் கட்டிக் காக்கப்படுவதை பலரும் எதிர்க்கவில்லை. 
ஆனால் உங்களுக்கு நான் ஒன்றை உறுதியாக சொல்வேன் அமெரிக்க அரசாங்கம் டொனால்ட் டிரம்ப்பை கொண்டாடி விடாது, ஜெர்மனிய அரசாங்கம் ஹிட்லரை கொண்டாடி விடாது காரணம் அங்கே பிரபல ஊடகங்களும் பிரபல நட்சத்திரங்களும் சாமானிய மக்களும் கொண்டாட விடமாட்டார்கள் ஏனெனில் இந்தியாவை விட அங்கே மக்கள் நீதி கூடுதலாக இருக்கிறது. 

முடிவுரை 

இந்தியா மக்களால் இந்தியாவில் பிரபலமானவர்கள் சாமானிய மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதே சிறந்த நன்றி கடனாகும். அதனைவிடுத்து அரசாங்கம் கடைபிடிக்கும் பாசிச போக்கிற்கு துணை போவது பிரபலங்களுக்கு  அழகல்ல ஏனெனில் ஊடகங்கள் - நட்சத்திரங்கள் - நிறுவனங்கள் சாமானிய மக்களுக்கு ஆதரவாக நிற்பதே சாலச்சிறந்தது. இந்தியாவில் நடைபெறும்  பாசிசத்தை எதிர்த்து அந்நிய பிரபலங்கள் குரல் எழுப்பும் நிலையில் இந்திய பிரபலங்களும் அவர்களை பார்த்து மனம் வருந்தி திருந்த வேண்டும், மக்களுக்கு ஆதரவாக குரல் தர வேன்டும்.

விவரணைகள் 

Trump Is Better At Destroying Deals Than Making Them


Inside US Capitol At The Height Of The Siege


Joe Biden Defeated Donald Trump


Hollywood Supports Indian Farmers Protest


Largest Wedding Banquet Reception - Jayalalitha Foster Son Marriage


Most Wedding Guests - Jayalalitha Foster Son Marriage


சொத்துக் குவிப்பு வழக்கு


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - 1


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - 2


அ.தி.மு.க பிறந்த கதை


முப்பாடலும் ஜெயலலிதாவும்


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -