Chocks: November 2023

Wednesday, November 29, 2023

பிணவறை வழக்கு

பிணவறை வழக்கு

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம் 
  1. முகவுரை
  2. என்ன பந்தயம்?
  3. பந்தயத்தை ஏற்ற நண்பர்
  4. சடலத்தின் அருகில் சடலமாய்
  5. குற்றவாளியான நண்பர்
  6. முடிவுரை
  7. துணுக்கு செய்தி 
  8. விவரணைகள் 
முகவுரை

1977 இல் கோட்டயம் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் 'துணிச்சல்’ பற்றி உரையாடினர். இவ்விவாதம், அவர்களுக்கிடையே ஒரு பந்தயத்தை முன்மொழிவதுடன் முடிந்தது.

என்ன பந்தயம்?

'பிணவறையில் உள்ள ஒரு சடலத்தின் உதட்டில் அடையாளக் குறியுடன் கூடிய சிகரெட் (Marked Cigarette) வைக்கப்படும். பந்தயத்தை ஏற்பவர், நள்ளிரவு 12 மணிக்கு மருத்துவ கல்லூரி பிணவறைக்கு சென்று, அந்த சிகரெட்டை சடலத்தின் உதட்டில் இருந்து எடுத்து வர வேண்டும்' என்ற பந்தயம் முடிவு செய்யப்பட்டது

பந்தயத்தை ஏற்ற நண்பர்

வினையான விவாதத்தில் பந்தயத்தை ஏற்றுக் கொண்ட நண்பர், விடுதியில் இருந்து கிளம்பி நள்ளிரவு 12 மணிக்கு பிணவறையை நோக்கிச் சென்றார். பிணவறைக்கு வெளியே இருந்த காவலாளி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பிணவறையை, முன் ஏற்பாடு செய்யப்பட்ட சாவியைக் கொண்டு திறந்து, அமைதியாக நுழைந்தார். சடலத்தின் உதட்டில் சிகரெட் இருப்பதை அறிந்து கொள்ள, தீக்குச்சியின் வெளிச்சத்தைப் பயன்படுத்தினார்.

சடலத்தின் அருகில் சடலமாய்

பந்தயத்தில் குறிப்பிடப்பட்டதன் பேரில், பிணவறைக்குள் ஒரு சடலத்தின் உதட்டில் சிகரெட் இருப்பதை நண்பர் கண்டார். சடலத்தின் உதட்டிலிருந்து சிகரெட்டை எடுக்க நண்பர் சடலத்தை நெருங்கிய போது, திடீரென சடலம் அசைந்தது. அடுத்த நொடியில், சிகரெட் விழுங்குவது போல் மறைந்து போய்விட்டது. சடலத்தின் அசைவையும் சிகரெட்டின் மறைவையும் கண்ட நண்பர் அதிர்ச்சியில் மூழ்கினார். அதிர்ச்சியின் தீவிர விளைவாக, திகிலடைந்த அவர் சடலத்தின் அருகிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

குற்றவாளியான நண்பர்

விசாரணையின் தொடக்கத்தில் கோட்டயம் காவல்துறைக்கு தலைவலியாக அமைந்த இவ்வழக்கு, இறுதியில் பந்தயத்தை பரிந்துரைத்த நண்பர் தான் குற்றவாளி என்பதைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தது.

பந்தயத்தை பரிந்துரைத்த நண்பர் அதன்படி நடக்காமல், தனது சக நண்பரை திகிலூட்டும் நோக்கில் பிணவறையில் சடலங்களுக்கு இடையே மறைந்து, குறிப்பிட்ட சடலத்தை மெல்ல அசைத்து, வெளிச்சம் இல்லாத நேரத்தில் சிகரெட்டை மறைத்து இறந்து போன நண்பரை அதிர்ச்சியூட்டி இருக்கிறார். நீதிமன்றம், அந்நண்பரை குற்றவாளி என தீர்ப்பளித்து சிறைத் தண்டனை விதித்தது.

முடிவுரை

'பெரிய சித்தப்பா இறந்ததைப் பற்றி சின்ன சித்தப்பாகிட்ட கேட்க வந்தா, வந்த இடத்துல தீடீரென்று சின்ன சித்தப்பாவும் இறந்து போனார்' என்ற கிராம சொலவடை உண்டு. அது போல, 'சடலத்தை தேடிப் போன நண்பரும் சடலமாகி போனார்'. துணிச்சலைப் பற்றிய விவாதத்தின் வெளிப்பாடாக விளையாட்டுக்காக செய்யப்பட்ட பந்தயம் ஒரு விபரீத விளையாட்டாக மாறிவிட்டது. 

துணுக்குச் செய்தி 

பிணவறை வழக்கின் கதையைத் தழுவி Mortuary என்ற மலையாள திரைப்படம் 1983 இல் வெளியானது. மலையாள திரைப்படத்தை தழுவி Amma Pillai என்ற தமிழ் திரைப்படம் 1990 இல் வெளியானது. Amma Pillai திரைப்படத்தில் ஜெயலலிதாவின் 1990 காலகட்ட அரசியலை S.S.சந்திரன் மற்றும் கோவை சரளா நையாண்டி செய்திருப்பர்.
விவரணைகள் 

Mortuary Movie


Amma Pillai Movie


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Sunday, November 5, 2023

நுழைவுத் தேர்வை ரத்து செய்த கலைஞர்

நுழைவுத் தேர்வை ரத்து செய்த கலைஞர்

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம் 
  1. பகுதி 1 
  2. பகுதி 2
  3. பகுதி 3 
  4. பகுதி 4 
  5. 2005-2006 கதையின் சுருக்கம்
  6. தமிழ்நாட்டில் நடைபெற்ற கடைசி TNPCEE தேர்வு
  7. விவரணைகள் 

பகுதி 1 

# 09.06.2005 தேதியிட்ட அரசாணையின்படி (G.O Ms 184) நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற ஜெயலலிதாவின் உத்தரவை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர் 2005 இல் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தலைமையிலான அமர்வு ரத்து செய்தது. 

பகுதி 2 

# பிரியதர்ஷினி தொடர்ந்த வழக்கில், அன்றைய உயர்நீதிமன்றம், நுழைவுத் தேர்வு கூடாது என்று ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு நினைத்தால், அதற்கு முறையான சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

பகுதி 3 

# G.O ஆணை செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, 2006 இல் Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act என்ற சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலின்றி ஜெயலலிதா இயற்றினார், மைனர் நிஷாந்த் ரமேஷ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்தது. 

பகுதி 4 

# குடியரசு தலைவரின் ஒப்புதலை பெரும் முயற்சியில் ஈடுபடாமல் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்றார். 

# இதற்கிடையே, 2006 இல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 

# இதையடுத்து, பதவியேற்ற தி.மு.க அரசு சார்பில், ஜெயலலிதாவை போல "தும்பை விட்டு வாலை பிடிக்காமல்" நுழைவுத் தேர்வை முறைப்படி ரத்து செய்ய இயற்றிய சட்டத்தை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார் முதல்வர் கலைஞர். 

# கலைஞரின் அரசு இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி அப்துல் கலாம்.

# அதன்படி கலைஞரின் முறையான முயற்சியால் 07.03.2007 அன்று நுழைவுத் தேர்வுக்கு முடிவுரை எழுதப்பட்டது. 

# இது தான் நுழைவுத் தேர்வு ரத்துக்கான உண்மை வரலாறு.

2005-2006 கதையின் சுருக்கம்

பிரியதர்ஷினி வழக்கில், நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உரிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆனால், நீதிமன்ற அறிவுரைப்படி ஜனாதிபதி ஒப்புதலை பெற ஜெயலலிதா முயற்சியே செய்யவில்லை.

பிரியதர்ஷினி வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை முறையாக கேட்காமல் ஜெயலலிதா தொடர்ந்து செயல்பட்டதால் மைனர் நிஷாந்த் வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முறைப்படி சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அதை ரத்து செய்தார் கலைஞர்.

நுழைவுத் தேர்வு கடந்து வந்த பாதை 

1984 இல் MGR தலைமையிலான அ.தி.மு.க அரசு, தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, 1984-85 முதல் Tamil Nadu Professional Courses Entrance Examination (TNPCEE) அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் நலனுக்காக போராடிய பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிரானது நுழைவுத் தேர்வு முறை என்று தி.மு.க கடுமையாக எதிர்த்தது.

1997 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு, ஒற்றை சாளர சேர்க்கை முறை (Single Window Admission System) அறிமுகப்படுத்தியது. அதுவரை, மாணவர்கள் பல கல்லூரிகளுக்கு பல விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால், ஒற்றை சாளர முறை மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கையை ஒரே அமர்வில் உறுதி செய்தது.

2005 இல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, மாணவர்களை பாதிக்கும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றி வாக்குறுதியை முறையாக செயல்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கவில்லை. ஜனாதிபதியுடன் ஒப்பிடும்போது தன்னை உயர்ந்தவர் என்று ஜெயலலிதா நினைத்து கொண்டார் போலும். ஒரு வழியாக அதன் பின்னர், 2006 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு, ஜனாதிபதி ஒப்புதலுடன் Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006 மூலம் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் அவை சார்ந்த இதர படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற கடைசி TNPCEE தேர்வு

Examination = 18-19 May 2006 

Results = 04 June 2006 

நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி கலைஞர் எடுத்த முயற்சியால், 2007 முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, +2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு முறை உறுதி செய்யப்பட்டது. 

குறிப்பு = அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனிரத்னா ஆனந்தகிருஷ்ணன், உயர்கல்விக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை முறையை அறிமுகப்படுத்திய தி.மு.க அரசின் கொள்கை வரைமுறைக்கு (Policy Formation) வழிகாட்டியாக இருந்தார்.
விவரணைகள் 

G.O Ms No 184 (09.06.2005)


Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006 


N.Priyadarshini vs The Secretary To Government on 27 June, 2005


Minor Nishanth Ramesh vs The State Of Tamil Nadu on 27 February, 2006 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

காந்தி அகிம்சைவாதியா?

காந்தி அகிம்சைவாதியா?

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. அகிம்சை இயக்கங்கள்
  3. கீழ்ப்படியாமை இயக்கம்
  4. இரட்டை வாக்குரிமை விவகாரம் 
  5. வெள்ளையனே வெளியேறு இயக்கம் 
  6. சமூக சேவை திட்டங்கள் 
  7. விமர்சனங்கள் 
  8. இறுதி முடிவு 
  9. ஆரிய காந்தி முதல் திராவிட காந்தி 
  10. முடிவுரை 
முகவுரை 

முதல் உலகப் போருக்குப் பிறகு, 1919 இல் "மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்" மூலம், இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, முதல் உலகப் போரின் இறுதிக் காலகட்டத்தில், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கிய காந்தி, நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, பெண்களின் உரிமைகளை ஆதரிக்க, வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த, முதன்மையாக சுயாட்சியையும் பின்னர் முழுச் சுதந்திரத்தையும் அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.

அகிம்சை இயக்கங்கள்

1917 இல் சம்பாரன் சத்தியாகிரகம் (Champaran Satyagraha), 1918 இல் கெடா சத்தியாகிரகம் (Kheda Satyagraha), 1920 இல் முஸ்லிம்களால் தொடங்கப்பட்ட கிலாஃபத் இயக்கத்திற்கு ஆதரவு (Khilafat Movement), 1920 இல் ஒத்துழையாமை இயக்கம் (Non-Cooperation Movement), 1930-1934 இல்  உப்பு சத்தியாகிரகம் உட்பட கீழ்ப்படியாமை இயக்கம் (Civil Disobedience Movement, இரண்டு கட்டங்களில்: 1930-1931 மற்றும் 1932-1934), மற்றும் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) ஆகியவை காந்தியின் முக்கிய அகிம்சை இயக்கப் போராட்டங்கள் ஆகும்.

காந்தியின் "ஒத்துழையாமை இயக்கம்" 1920 முதல் 1922 வரை நடந்தது. அப்போது, 1921 இல் பால கங்காதர திலகரின் முதல் ஆண்டு நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்தவும், சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவிக்கவும், இந்தியர்களிடம் தன்னார்வப் பங்களிப்புகளைக் கோரி ஒரு கோடி ரூபாய் திலக் சுயராஜ் நிதியை (Tilak Swaraj Fund) திரட்டும் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

கீழ்ப்படியாமை இயக்கம்

பிரிட்டிஷ் அரசின் உப்பு வரியை எதிர்க்க 1930 இல் "கீழ்ப்படியாமை இயக்கம்" சார்பில் நடைபெற்ற தண்டி யாத்திரை எனப்படும் உப்பு சத்தியாகிரகம், அரபிக்கடல் நோக்கிய நீண்ட நடைப்பயணமாக அமைந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான காந்தியின் எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்தச் செயலுக்குப் பிறகு, மக்களிடையே சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றது. 

இதை தொடர்ந்து, 1931 இல் "காந்தி-இர்வின் உடன்படிக்கை" மூலம் கீழ்ப்படியாமை இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர், மற்றும் காந்தி லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால், இரண்டாவது வட்ட மேசை மாநாடு எந்த முக்கியமான முடிவுகளையும் எட்டாமல் தோல்வியடைந்ததால், காந்தி இந்தியா திரும்பிய பிறகு கீழ்ப்படியாமை இயக்கத்தை (1932-1934) மீண்டும் தொடங்கினார்.

இரட்டை வாக்குரிமை விவகாரம்

கீழ்ப்படியாமை இயக்கத்தை மீண்டும் தொடங்கிய காந்தி கைது செய்யப்பட்டார். காந்தி எரவாடா சிறையில் இருந்த காலத்தில், பிரிட்டிஷ் அரசு தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை (Separate Electorates) வழங்கியது. தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டால், அவர்கள் இந்து மதத்திலிருந்து பிரிக்கப்படுவார்கள் என கருதிய காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

அதன் விளைவாக, சமூக அழுத்தத்திற்கு உள்ளான அம்பேத்கர், வேறு வழியின்றி காந்தியுடன் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பூனா ஒப்பந்தத்தின் மூலம், தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கொண்ட தொகுதிகளுக்குப் பதிலாக, இட ஒதுக்கீடு கொண்ட தொகுதிகள் (Joint Electorates) வழங்கப்பட்டதால், தலித்துகளின் அரசியல் உரிமைகள் திசைமாறியதாக கருதப்படுகிறது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 

இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்தது, ஆனால் காந்தியின் முழுச் சுதந்திரக் கோரிக்கையை மறுத்தது. க்ரிப்ஸ் தூதுக்குழு (Cripps Mission) போருக்குப் பிறகு மட்டுமே மேலாட்சி அந்தஸ்து (Dominion Status) வழங்க முடியும் என்று முன்மொழிந்தது. உடனடி சுதந்திரம் இல்லை என்பதால், காந்தி இதை நிராகரித்தார்.

இதனால், உடனடி சுதந்திரத்தைக் கோரி 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தைத் தனது சக்திவாய்ந்த "செய் அல்லது இறப்பு" அழைப்புடன் காந்தி தொடங்கினார். அதையடுத்து காந்தி, நேரு உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மே 1944 வரை புனேவின் ஆகா கான் அரண்மனைச் சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவரது செயலாளர் மகாதேவ் தேசாய் மற்றும் மனைவி கஸ்தூர்பா இருவரும் இறந்தனர்.

ஜப்பான் படையெடுப்பு இந்தியாவை அச்சுறுத்தியபோது, காந்தி ஜப்பானிய படைகளுக்கு எதிராகவும் தீவிர அகிம்சை எதிர்ப்பை முன்மொழிந்தார். இருப்பினும், பிரிட்டிஷ் முதலில் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் வழங்கினால் இராணுவ பாதுகாப்பை ஆதரிப்பதை சுருக்கமாகப் பரிசீலித்தார். எனினும், அவர் உண்மையில் இராணுவப் பங்கேற்பை ஒருபோதும் ஆமோதிக்கவில்லை. "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தின் மூலம், போர் முடிந்தவுடன் முழுமையான சுதந்திரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், பகுதி சுயாட்சியோ தாமதமான சுதந்திரமோ அல்ல என்பதில் காந்தியும் இந்திய மக்களும் உறுதியாக இருந்தனர்.

சமூக சேவை திட்டங்கள்

சுகாதாரம், கல்வி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு, நிவாரணப் பணி, காதி நெசவு, தையல் மற்றும் விவசாயம் போன்ற திட்டங்களின் மூலம் விளிம்புநிலை கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை முன்னேற்றுவதற்காக காந்தி 1915 இல் கோச்சராப் ஆசிரமம், 1936 இல் சேவாகிராம் ஆசிரமம் மற்றும் 1945 இல் கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையை நிறுவினார்.

விமர்சனங்கள்

நேதாஜி, பகத் சிங், அம்பேத்கர் ஆகியோரின் அரசியல் குறித்த காந்தியின் நிலைப்பாடுகள், தலித்துகளுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாக்குரிமையைப் பறிக்கும் விதமாக எரவாடா சிறையில் மேற்கொண்ட அவரது உண்ணாவிரதம், இந்து மதத்தில் தலித்துகளின் நிலை பற்றிய அவரது கருத்துகள் மற்றும் சனாதனம் குறித்த அவரது பார்வைகள் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உரியவை.

இறுதி முடிவு 

பௌத்த மதத்தை தழுவிய அம்பேத்கர் மற்றும் கடவுள் நம்பிக்கையை மறுத்த பெரியாரைப் போல தீர்க்கமான பாதையைத் தேர்ந்தெடுக்காமல், காந்தி இந்து மதத்திற்குள் இருந்தபடியே மதத்தைச் சீரமைக்க முயன்றார். பார்ப்பன இந்துக்களுக்கும், பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் ஒரே நேரத்தில் நல்லவராகத் தோற்றம் அளிக்க முயற்சித்தார். இந்த வழிமுறைகளுக்கு எதிராக, இந்துத்துவத்தை பரப்பும் RSS அமைப்பின் உறுப்பினரான நாதுராம் கோட்சே, 1948 இல் காந்தியைப் படுகொலை செய்தார்.

ஆரிய காந்தி முதல் திராவிட காந்தி

அகிம்சைவாதியாக வாழ்ந்த ஆரிய காந்தி

இறுதியில் கொல்லப்பட்ட திராவிட காந்தி

இதுவே காந்தியின் இரண்டடி சுருக்கமாகும்.

இறந்த காந்தியார் நம் காந்தியார்; இந்த நாட்டுக்கு "காந்தி தேசம், காந்திஸ்தான்" என்று பெயரிட வேண்டும்; இருந்தவர் ஆரிய காந்தி, இறந்தவர் திராவிட காந்தி என்று பெரியார் பேசியதும், "உத்தமர் காந்தியின் உயிரைக் குடித்தது ஒரு ஊதாரி பார்ப்பான்" என்று கலைஞரின் முரசொலி தலையங்கம் வெளியிட்டதும் கவனிக்கத்தக்க அரசியல் செய்திகளாகும்.

மொத்தத்தில், காந்தியை பல அடுக்குகளில் ஆய்வு செய்யலாம்; ஆனால், காந்தியின் "அரசியல் இருப்பு", பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டது என்பதை மறுக்க முடியாது.

முடிவுரை 

"காந்தி அகிம்சைவாதியா?" என்ற கேள்வி, காந்தியின் அகிம்சைக் கொள்கையை மறுப்பதற்காக அல்ல; மாறாக, அவரது சிக்கலான அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனபூர்வமாக ஆராய்வதற்காகவே எழுப்பப்படுகிறது. அதே நேரத்தில், தற்போது காவிமயத்தை நோக்கி நகரும் இந்தியாவில், இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட, காந்தியின் அகிம்சை வழிமுறைகளும், அவரது குறியீட்டு மதிப்பும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. காந்தியை விமர்சிக்கும் உரிமையும், அதே நேரத்தில் பாசிச சக்திகளுக்கு எதிராக காந்தியை கருவியாகப் பயன்படுத்தும் தேவையும் ஒரே காலத்தில் இருக்க முடியும் என்பதே இந்த விவாதத்தின் மையக்கருத்து.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Saturday, November 4, 2023

இந்தியாவின் சுதந்திர போராட்டம் - அகிம்சைக்கு அப்பால்

இந்தியாவின் சுதந்திர போராட்டம் - அகிம்சைக்கு அப்பால்

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. சிற்றரசர்களின் போராட்டம்
  3. வேலூர் கிளர்ச்சி
  4. 1857 கிளர்ச்சி
  5. சபேக்கர் சகோதரர்கள்
  6. புரட்சிகர இயக்கங்களின் எழுச்சி
  7. கெதர் இயக்கத்தின் முயற்சி
  8. ராஷ் பிஹாரி போஸ்
  9. கிறிஸ்மஸ் தின சதி
  10. ஜாலியன் வாலாபாக் படுகொலை
  11. பகத் சிங்கின் புரட்சி
  12. இந்தியா தேசிய ராணுவம்
  13. பம்பாய் கலகம்
  14. அன்றும் இன்றும்
  15. முடிவுரை
  16. விவரணைகள்
முகவுரை

ஆரம்பத்தில் வணிக நோக்கங்களுடன் வந்து பின்னர் அரசர்களுக்கு இடையிலான மோதல்களை பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தனர். இத்தகைய ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை சுற்றியுள்ள மேலாதிக்க தகவல்கள், காந்தியின் அகிம்சை பிரச்சாரத்தை மட்டுமே முன்னிறுத்துகிறது. இந்த வரலாற்று மரபின் தாக்கம் உலக அரங்கில் தொடர்ந்து எதிரொலிக்கிறது. எவ்வாறாயினும், இந்தியாவின் சுதந்திர போராட்டமானது ஒப்பீட்டளவில் குறைவாக அறியப்பட்ட புரட்சி பரிமாணத்தையும் உள்ளடக்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிற்றரசர்களின் போராட்டம்

17 ஆம் நூற்றாண்டில் வணிக நோக்கத்திற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் ஒரு கட்டத்தில் நமது அரசுகளுக்கு எதிராக தங்களது இராணுவ படைகளுடன் நின்றார்கள். அப்படிப்பட்ட ஆங்கிலேய அரசுக்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டில் முத்து வடுகநாதர், மருது பாண்டியர்கள், வேலு நாச்சியார், குயிலி, பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்து கோன், கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, மருதநாயகம், ஹைர் அலி, திப்பு சுல்தான், உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, வேலுத்தம்பி, பழங்குடியினர் போன்றோர் போராடி மடிந்தார்கள்.
வேலூர் கிளர்ச்சி

சிப்பாய்களின் உடை மற்றும் தோற்றத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்துக்கள் நெற்றியில் விபூதி, நாமம், திலகம் ஆகியவற்றை இடக்கூடாது மற்றும் முஸ்லீம்கள் தாடி, மீசையை மழிக்க வேண்டும் என்ற ஆங்கிலேய அரசின் உத்தரவு, மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சி என்று சிப்பாய்கள் நினைத்தனர். இது 1806 ஆம் ஆண்டு வேலூர் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது 1857 இந்திய கிளர்ச்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முந்தையது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களை கொன்று காலையில் வேலூர் கோட்டையை கைப்பற்றி மைசூர் சுல்தானகத்தின் கொடியை சிப்பாய்கள் ஏற்றினார்கள். ஆங்கிலேய அரசு வேலூர் கிளர்ச்சியை ஒரே நாளில் அடக்கியது. 1857 கிளர்ச்சி போன்ற உடனடி வெளிப்புற ஆதரவு இல்லாதது வேலூர் கிளர்ச்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
1857 கிளர்ச்சி

ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்திய தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் இந்துக்களை புண்படுத்தும் மாட்டிறைச்சி கொழுப்பும், இஸ்லாமியர்களை புண்படுத்தும் பன்றி இறைச்சி கொழுப்பும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின்னணியில் 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய வீரர்கள் கிளர்ச்சி செய்தனர். டெல்லி, ஆக்ரா, கான்பூர் மற்றும் லக்னோ வரை பரவிய கலகத்தை ஆங்கிலேயர்கள் நசுக்கினர் ஆனால் அவர்களது அதிகார வளர்ச்சி கேள்விக்குள்ளானது. அதையொட்டி கலகத்தின் வழக்கு விசாரணையானது கிழக்கிந்திய கம்பெனியின் திறமையின்மையின் மீது விழுந்தது. 1858 ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றம் இந்திய அரசாங்க சட்டத்தை நிறைவேற்றி இந்தியா மீதான அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்திடமிருந்து பிரிட்டனின் நேரடி கண்காணிப்புக்கு மாற்றியது.
சபேக்கர் (Chapekar) சகோதரர்கள்

1897 ஆம் ஆண்டு புனே நகரில் பிளேக் தொற்றுநோய்க்கு தீர்வு காணும் நோக்கில் முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்கு பொறுப்பான ஆங்கிலேய அதிகாரியான W.C.ராண்ட் என்பவரை சபேக்கர் சகோதரர்கள் படுகொலை செய்தனர். குடியிருப்புகளுக்குள் கட்டாய ஊடுருவல், நோயாளிகளை கொடுமைப்படுத்தல், பெண்களை இழிவுபடுத்தல் உள்ளிட்ட பிளேக் தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு கொடுங்கோலன் ராண்டின் மதிப்பீடுகள் மிருகத்தனமானவை என்று குற்றம் சாட்டி சபேக்கர் சகோதரர்கள் அவரை படுகொலை செய்தனர். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு பிறகு, சபேக்கர் சகோதரர்கள் ஆங்கிலேய அதிகாரி W.C.ராண்டை கொலை செய்த சம்பவம் போர்க்குணமிக்க தேசியவாதத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வாக அமைந்தது.
புரட்சிகர இயக்கங்களின் எழுச்சி

சுதந்திர கிளர்ச்சியின் மையமாக விளங்கிய வங்காளத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் பரவாமல் தடுக்க முயன்ற ஆங்கிலேய அரசு, 1905 ஆம் ஆண்டு வங்காளத்தை கிழக்கு வங்காளம் மற்றும் மேற்கு வங்காளம் என இரு மாகாணங்களாகப் பிரித்தது. இந்தப் பின்னணியில், லால்-பால்-பால் மூவரின் தலைமையிலான சுதேசி இயக்கமும், ஆயுதமேந்திய வழியில் செயல்பட்ட புரட்சி குழுக்களின் இயக்கமும் ஆங்கிலேய அரசுக்கு சவாலாக மாறின.

எம்.என்.ராய், எஸ்.ஏ.டாங்கே, முசாபர் அகமது, ஷௌகத் உஸ்மானி, நளினிபூசன் தாஸ்குப்தா மற்றும் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் புரட்சிகர சிந்தனைகளால் மக்களைத் திரட்டி, பெஷாவர், மீரட் மற்றும் கான்பூர் சதித்திட்டங்களின் வழியாக இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். மேலும், 1934 ஆம் ஆண்டு இந்தியாவிற்கென தனித்துவமான அரசியலமைப்புச் சபையை உருவாக்க முதன்முதலில் பரிந்துரைத்தவர் எம்.என்.ராய். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சி இறுதியாக 1946 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

1911 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினை திரும்பப் பெறப்பட்டாலும், புரட்சிகர நடவடிக்கைகளை ஆங்கிலேய அரசு கடுமையாக ஒடுக்கி, பலரை கைது செய்தாலும், இவ்வியக்கங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரகசியமாகத் தொடர்ந்து செயல்படத் தொடங்கின. இதே காலகட்டத்தில், கிளர்ச்சியை மையமாகக் கொண்ட பல்வேறு இந்திய பத்திரிகைகள் சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக வாசகர்களிடையே பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

கெதர் (Ghadar) இயக்கத்தின் முயற்சி

1914 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட, புலம்பெயர்ந்த இந்தியப் புரட்சியாளர்கள் அமெரிக்காவில் சீக்கியரான சோகன் சிங் பக்னாவின் தலைமையில் "கெதர் இயக்கம்" என்ற புரட்சிகர அமைப்பை உருவாக்கினர். இந்த இயக்கம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரட்சிகளை ஏற்படுத்தும் திட்டத்துடன் செயல்பட்டது.

1915 ஆம் ஆண்டு நடைபெற்ற கெதர் கிளர்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். இது, இந்தியப் படைகளில் கிளர்ச்சியை தூண்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டது. மேலும், முதல் உலக போரின் போது, இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்த இயக்கம் ஜெர்மனியுடன் கூட்டுசேர்ந்து இந்தியாவுக்குள் ஆயுதங்களை கடத்த முயற்சித்தது. இந்த திட்டம், "இந்து–ஜெர்மன் சதி" (Hindu–German Conspiracy) என்ற பெயரில் அறியப்பட்டது. இதில் பலர் தேசிய அளவில் கவனம் பெற்றனர். இயக்கம் தோல்வியடைந்தாலும், இந்திய விடுதலைக்காக போராடிய புரட்சிகர தலைவர்கள் காட்டிய உறுதி மற்றும் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது.

ராஷ் பிஹாரி போஸ்

ராஷ் பிஹாரி போஸ் ஒரு முக்கியமான புரட்சித் தலைவர் ஆவார். அவர் ஜுகாந்தர் இயக்கம், அனுசீலன் சமிதி மற்றும் கெதர் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார். ஜுகாந்தர் மற்றும் அனுசீலன் சமிதி இயக்கங்கள் வங்காளத்தில் தோன்றியவை, இவை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தன. 1912 ஆம் ஆண்டு டெல்லி சதி எனப்படும் வழக்கில், இந்தியாவின் வைஸ்ராய் ஹார்டிங்கை கொலை செய்யும் முயற்சியில் பங்கு பெற்றதற்காக அவர் பிரித்தானியர்களால் தீவிரமாக கண்காணிக்கப்படத் தொடங்கினார். பின்னர் அவர் இந்திய விடுதலை சங்கத்தின் தலைவராக ஆனார். இந்த அமைப்பு இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து இந்திய எதிர்ப்புப் போராளிகளை ஒன்றிணைத்தது. ஒரு கட்டத்தில்,  ஜப்பானுக்கு தப்பி சென்று, 1940 களில் மோகன் சிங்குடன் இணைந்து இந்திய தேசிய இராணுவத்தை (INA) கட்டமைக்கும் பணியில் ராஷ் பிஹாரி போஸ் முக்கிய பங்கு வகித்தார்.
கிறிஸ்மஸ் தின சதி

1906 ஆம் ஆண்டு ஆயுத போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தரும் நோக்கத்துடன் பாகா ஜதின், ஜதீந்திர நாத் பானர்ஜி, அரவிந்தோ கோஷ், பேரின் கோஷ், ஹேமச்சந்திர கனுங்கோ, உபென் பானர்ஜி போன்ற தலைவர்கள் இணைந்து ஜுகாந்தர் என்ற புரட்சிகர அமைப்பை கொல்கத்தாவில் உருவாக்கினர். 

1915 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த இந்திய புரட்சியாளர்கள், கொல்கத்தாவிற்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் நோக்கத்துடன் அன்னி லார்சன் மற்றும் மேவரிக் ஆகிய இரண்டு கப்பல்களை கைப்பற்றினர். அவர்கள் அந்தமான் தீவுகளின் சிறைச்சாலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி சிறையில் அடைக்கப்பட்ட புரட்சியாளர்களை விடுவிக்கவும் இந்திய கடற்கரை மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஆங்கிலேய அரசை அச்சுறுத்தவும் கிளர்ச்சிக்கு திட்டமிட்டனர். கிறிஸ்மஸ் தின சதி என அழைக்கப்பட்ட கிளர்ச்சி, முந்தைய கெதர் இயக்கத்தின் கிளர்ச்சியை போலவே, ஆங்கிலேய அரசின் உளவுத்துறை சேவைகளால் முறியடிக்கப்பட்டது.
1900 காலகட்ட புரட்சிகர இயக்கங்களின் நடவடிக்கைகளின் விளைவாக, 1916 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு சட்டம் உட்பட கடுமையான போர்க்காலச் சட்டம் இயற்றப்பட்டது. பல போராளிகளின் கைது செய்யப்பட்டனர். புரட்சி இயக்கங்கள் இரகசிய நடவடிக்கைகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

முதலாம் உலக போருக்கு பிறகு, பிப்ரவரி 1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டம், முறையான விசாரணைகள் இல்லாமல் கைது செய்யப்படுவதையும், நடுவர் மன்றம் இல்லாத விசாரணையையும் அனுமதிப்பதன் மூலம் ஆங்கிலேய அதிகாரத்தை பலப்படுத்தியது. ஏப்ரல் 1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும் சுதந்திர போராட்ட வீரர்களான சைபுதீன் கிட்ச்லேவ் மற்றும் சத்யபால் ஆகியோரின் கைதுக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவிக்க அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் அமைதியான முறையில் மக்கள் கூட்டம் கூடியது. கர்னல் ரெஜினோல்ட் டயர் உத்தரவின் பேரில் ஆங்கிலேய படைகள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் விளைவாக சுமார் 1500 பேர் கொல்லப்பட்டனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை எனப்பட்ட இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க அளவில் மக்களின் சீற்றத்தை தூண்டிய நிலையில், ஆங்கிலேய அரசின் வெறுப்பை முறியடிக்க புரட்சியை துறந்து அன்பை மட்டுமே மக்கள் பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தி ரவுலட் சட்டத்திற்கு எதிராக சத்தியாகிரகம் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் காந்தி.

அகிம்சை பேச்சுகளும், அமைதியான போராட்டங்களும் அகிம்சையின் முகமாக காந்தியை நிலைநிறுத்திய அதே நேரத்தில், சிலர் வன்முறையைத் தேர்ந்தெடுத்து பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முயன்றனர். பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது தண்டிக்கப்பட்டனர், இது மக்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் அதிகரித்தது.

பகத் சிங்கின் புரட்சி

இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தின் (HSRA) உறுப்பினரான பகத் சிங், சோசலிச மற்றும் புரட்சிகர சிந்தனையின் தாக்கத்தால் உந்தப்பட்டு, தனது கூட்டாளிகளுடன் இணைந்து, ஆங்கிலேய அரசுக்கு எதிரான முக்கியமான தாக்குதல்களில் ஈடுபட்டார்.

சைமன் ஆணைக்குழுவுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசின் காவல்துறை நடத்திய தடியடியில் காயமடைந்து, அதன் விளைவாக இந்திய தேசியவாதி லாலா லஜ்பத் ராய் உயிரிழந்தார். இதையடுத்து, பகத் சிங், சிவராம் ராஜகுரு மற்றும் சுக்தேவ் தபார், அந்த தடியடிக்கு உத்தரவிட்ட அதிகாரி ஜேம்ஸ் அலெக்சாண்டர் ஸ்காட்டை கொல்லும் திட்டத்தை வகுத்தனர். ஆனால், தவறான அடையாளம் காரணமாக, அவர்கள் உதவி கண்காணிப்பாளர் ஜான் பி.சாண்டர்ஸைக் கொன்றனர்.

1927 ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரி கொலையும், 1929 ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற தாக்குதலும், பகத் சிங்கை நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டவராக மாற்றின. இறுதியில், ஆங்கிலேய அரசுக்கு எதிரான தாக்குதல்களுக்காக பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர்.
இந்தியா தேசிய ராணுவம்

இரண்டாம் உலக போரின் போது, ஆகஸ்ட் 1942 ஆம் ஆண்டு ஜப்பானிய பேரரசின் வழிகாட்டலில், இராணுவ அதிகாரி மோகன் சிங் தலைமையின் கீழ், ராஷ் பிஹாரி போஸ் வழிவகுத்த கொள்கையில், இந்திய சுதந்திரத்தை வேண்டி இந்திய போர்க்கைதிகளால் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. ஆசியாவில் ஜப்பானின் போரில் அதன் பங்கு தொடர்பாக இந்திய தேசிய இராணுவ தலைமைக்கும் ஜப்பானிய இராணுவ தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் டிசம்பர் 1942 ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்டது.

அகிம்சையால் சுதந்திரம் பெற முடியாது என்பதில் சுபாஷ் சந்திர போஸ் (நேதாஜி) உறுதியாக இருந்தார். எனவே, இரண்டாம் உலக போரின் போது, "எனது எதிரியின் எதிரி என் நண்பன்" என்பதன் அடிப்படையில், இந்திய சுதந்திரத்தை வேண்டி ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற பிரிட்டன் எதிர்ப்பு நாடுகளிடம் இராஜதந்திர ரீதியிலான உதவி கேட்க சுபாஷ் சந்திர போஸ் திட்டமிட்டார். ஜெர்மனியின் உதவி கிடைக்காததால் ஜப்பான் மிக முக்கியமான முறையில் உதவ முடியும் என்ற நம்பிக்கையில் சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானுக்குச் சென்றார்.

இதே காலகட்டத்தில், சுபாஷ் சந்திர போஸ் "சுதந்திர இந்தியா" பிரச்சாரத்தை தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆதரவைப் பெற முசோலினி மற்றும் ஹிட்லர் போன்ற வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்தாலும், வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், கலைக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தை சுபாஷ் சந்திர போஸிடம் ஒப்படைத்தார் ராஷ் பிஹாரி போஸ். 1943 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் இவ்வியக்கம் புத்துயிர் பெற்று சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு (Provisional Government of India) என்று அழைக்கப்பட்டது. பல இந்தியர்களுக்கு போராடும் ஊக்கத்தை கொடுத்த இவ்வியக்கத்தின் சக்திவாய்ந்த முழக்கமாக, தமிழர் செம்பகராமன் பிள்ளை உருவாக்கிய "ஜெய் ஹிந்த்" முழக்கம் விளங்கியது.

இதற்கிடையே, இரண்டாம் உலக போரின் முடிவில், ஜப்பான் தடுமாற தொடங்கிய போது, பிரிட்டனும் ரஷ்யாவும் ஒரே அணியில் இருந்த போதிலும், பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் ரஷ்யா உதவக்கூடும் என்று கருதிய சுபாஷ் சந்திர போஸ் ரஷ்யாவிடம் உதவி பெற திட்டமிட்டதாக பரவலாக கூறப்படுகிறது. இருப்பினும், 1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸின் மர்மமான மறைவுக்கும் ஜப்பானின் சரணடைவுக்கும் பிறகு, முகமது ஜமான் கியானியின் தலைமையில் மீதமுள்ள வீரர்கள் ஆங்கிலேய அரசிடம் சரணடைந்தனர்.
பம்பாய் கலகம்

1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய கடற்படையில் பணியாற்றிய இந்திய மாலுமிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தனர். பம்பாய் கலகம் அல்லது வேந்திய இந்திய கடற்படைக் கலகம் என அழைக்கப்பட்ட இந்த கலகம் பம்பாய்யைத் தொடர்ந்து கொல்கத்தா, கராச்சி, விசாகப்பட்டினம், சென்னை, கொச்சி உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவியது. சுதந்திரம் கோரி சுமார் 20,000 மாலுமிகள் இதில் பங்கேற்றனர்.

கலகத்திற்கான முக்கிய காரணங்களாக, ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட மோசமான உணவு, இனப் பாகுபாடு, மற்றும் இந்திய தேசிய இராணுவ (INA) வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கலகக்காரர்கள் இறுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் சரணடைந்த போதிலும், காந்தியின் அகிம்சை போராட்டம், நேதாஜியின் ஆயுதப் போராட்டம், பம்பாய் கலகம் போன்ற எழுச்சி போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு பெரும் அடியாக அமைந்தது. இதனால், பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதை விரைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
அன்றும் இன்றும்

சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டை கட்டியமைக்கும் அடித்தளமாக காந்தியின் அகிம்சை கொள்கைகளை நேரு உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில், புரட்சியாளர்களின் பங்களிப்பும் "அருங்காட்சியகங்கள், ஆவணப்படங்கள், கல்வி திட்டங்கள் மற்றும் தேசிய நினைவேந்தல்கள்" ஆகியவற்றின் மூலம் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டது.

எவ்வாறாயினும், உலக அமைதிக்கான பார்வையின் அடிப்படையில், இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் ஒரு கணிசமான முரண்பாடு தெளிவாகக் காணப்படுகிறது. அமைதி மற்றும் சர்வதேச சமாதானத்தைப் பற்றி பல உலக அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும், அவர்கள் அணு ஆயுத உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அதே நேரத்தில், உரிமைக்காக குரல் எழுப்பும் மனிதர்களை "பயங்கரவாதிகள்" என அடையாளப்படுத்துகிறார்கள். இந்த வகையான முரண்பாடுகள், நீடித்த அமைதியை நிலைநிறுத்துவதாகக் கூறும் உலக வல்லரசுகளின் அர்ப்பணிப்பின் நம்பகத்தன்மையை கடுமையாகச் கேள்விக்குள்ளாக்குகின்றன.
முடிவுரை

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை ஒரு சம்பவத்துடன் இணைக்க முடியாது. இருப்பினும், காந்தியின் அகிம்சை திட்டம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பெருமை சேர்த்தது. காந்தியின் அகிம்சை அணுகுமுறை உலகளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், “பாளையக்காரர் முதல் போஸ்” வரையிலான புரட்சிகர தலைவர்களை உள்ளடக்கிய சுதந்திர போராட்டத்தின் முழு வரலாற்று பின்னணியும் பாரபட்சமின்றி ஆராயப்பட வேண்டும்.

மேலும், ஆங்கிலேய அரசு கலைக்கப்பட்ட பிறகு இந்திய ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கான சுதந்திர போராட்ட தலைவர்களின் உள்நோக்கங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். அதன் மூலம் அகிம்சை அல்லது புரட்சியின் அடிப்படையில், சுதந்திர போராட்ட தலைவர்கள் மக்களின் நல்வாழ்வை போதிக்கும் சமூக நீதிக்காக போராடினார்களா அல்லது பிரிவினைகளை ஆதரிக்கும் ஆரிய நீதிக்காக போராடினார்களா என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.
விவரணைகள்






வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Tamil Nadu's Language Rights Revolution

Tamil Nadu's Language Rights Revolution Note  =  This post gives a basic overview based on available information and is not a complete a...