Chocks: April 2021

Monday, April 12, 2021

தாய் மொழி தினம்

தாய் மொழி தினம்
# 1947 இல் இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற போது, பாகிஸ்தானின் (மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான்) மொத்த மக்கள் தொகை சுமார் 7 கோடி ஆக இருந்தது.

# 7 கோடியில் 3.6 கோடி மக்கள் கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) வசித்து வந்தனர்.

# 1948 இல் பாகிஸ்தான் அரசு உருதுவை பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. 

கிழக்கு பாகிஸ்தானில் தாய் மொழியாக வங்காளம் பேசப்பட்டு வந்ததால், கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கட்டாய உருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

# உருது தவிர, வங்காளமும் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கோரினர்.

# 23 பிப்ரவரி 1948 அன்று பாகிஸ்தான் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் உருது அல்லது ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என முடிவெடுத்தனர்.

# இந்த முடிவை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தான் சபை உறுப்பினர் திரேந்திரநாத் தத்தா "வங்காளி மொழியையும் சேர்க்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

# பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், கிழக்கு பாகிஸ்தான் முதல்வர் க்வாஜா நசீமுதினின் உதவியுடன் வங்காள மொழிக்கு ஆதரவான தீர்மானத்தை தோற்கடித்த பிறகு, கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்களின் தாய் மொழியான வங்காளத்தை மீட்க போராட்டம் நடத்தினர்.

# 21-22 பிப்ரவரி 1952 அன்று உருது மொழி திணிப்பை எதிர்த்து டாக்காவில் திரளாக மக்கள் நடத்திய போராட்டத்தில் ரபீக் உதீன் அகமது, ஷபியூர் ரஹ்மான், அப்துல் ஜப்பார், அப்துல் பரகத், அப்துஸ் சலாம் ஆகியோர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.

# மொழிப்போர் தியாகிகள் உயிரிழந்த அதே இடத்தில் 1963 இல் நிரந்தரச் சின்னம் நிறுவப்பட்டது. 

கிழக்கு பாகிஸ்தான் மக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, 16 பிப்ரவரி 1956 அன்று பாகிஸ்தான் அரசு மொழிகளில் ஒன்றாக வங்காளியையும் சேர்த்தது.

பாகிஸ்தானின் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானில் நடந்த மொழி போராட்டம் வெற்றி பெற்றதும், அங்கு உள்ள மக்களின் எழுச்சி தேச விடுதலைப் போராட்டத்தை நோக்கி நகர்த்தியது.

# 1971 இல் இல் இந்திய பிரதமர் இந்திரா காந்தி உட்பட பலதரப்பட்ட சர்வதேச உதவிகளை பெற்று, கிழக்கு பாகிஸ்தான் "வங்கதேசம்" என்ற தனி நாடாக மாறியது.

# வங்காள மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் விதமாக, 21 பிப்ரவரி 1999ஆம் ஆண்டு முதல் UNESCO அமைப்பு உலக தாய் மொழி தினமாக கொண்டாடுகிறது.

பின் குறிப்பு 

1. ரபீக் உதீன் அகமது (30 அக்டோபர் 1926 - 21 பிப்ரவரி 1952)

2. ஷபியூர் ரஹ்மான் (24 ஜனவரி 1918 - 22 பிப்ரவரி 1952)

3. அப்துல் ஜப்பார் (11 அக்டோபர் 1919 - 21 பிப்ரவரி 1952)

4. அப்துல் பரகத் (16 ஜூன் 1927 - 21 பிப்ரவரி 1952)

5. அப்துஸ் சலாம் (27 நவம்பர் 1925 - 7 ஏப்ரல் 1952) (21 பிப்ரவரி சூட்டில் காயப்பட்டு 7 ஏப்ரல் அன்று மறைந்தார்)

விவரணை 

International Mother Language Day


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

தேர்தல் வைப்புத்தொகை

தேர்தல் வைப்புத்தொகை
சுருக்கம் 
  1. முகவுரை 
  2. வைப்புத்தொகை 
  3. ஆறில் ஒரு பங்கு 
  4. விவரணைகள் 
முகவுரை 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of People Act, 1951) மூலம் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட வைப்புத்தொகையை (Election Deposit) தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் செய்வது கட்டாயமாகும். சுதந்திரமான நியாயமான தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுக்கிறது அவற்றில் வைப்புத்தொகை செலுத்துவது முக்கியமானதாகும் ஏனெனில் விளையாட்டுத்தனம் இல்லாமல் சமூக அரசியல் எண்ணம் கொண்ட வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வைப்புத்தொகை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 

தேர்தலில் அனைத்து பரிமாற்றங்களும் மின்னணு முறையில் இருக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் தேர்தல் ஆணையமும் வலியுறுதிக்கிறது ஆனால் விதிவிலக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வைப்புத்தொகை ரொக்கமாக செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைப்புத்தொகை 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.  சட்டமன்றம் மற்றும் இதர தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். பழங்குடியினர் / ஆதி திராவிடர்கள் வைப்புத்தொகையில் 50% சலுகை பெற்று நாடாளுமன்ற தேர்தலுக்கு 12,500 ரூபாயும் இதர தேர்தலுக்கு 5,000 ரூபாயும் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். 

ஆறில் ஒரு பங்கு 

வேட்பாளர் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கைப் பெற வேண்டும் இல்லையென்றால் வேட்பாளரின் வைப்புத்தொகையை தேர்தல் ஆணையம் திருப்பித் தராது. உதாரணமாக ஒரு தொகுதியில் 1,00,000 வாக்குகள் பதிவாகியிருந்தால் வைப்புத்தொகையை காப்பாற்றுவதற்காக (திரும்ப பெறுவதற்காக) பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்காக ஒவ்வொரு வேட்பாளரும் 16,667க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற வேண்டும். தேர்தல் அரசியலில் வைப்புத்தொகையை திரும்ப பெறுவது முக்கியமானது ஏனெனில் வைப்புத்தொகை இழப்பு கௌரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. 

1951-52 இல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் மொத்த வேட்பாளர்களில் ~40% வேட்பாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை இழந்தனர். 2019 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த வேட்பாளர்களில் ~86% வேட்பாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை இழந்தனர்.

விவரணைகள் 

Election Deposit Meaning


வைப்புத்தொகை என்றால் என்ன?


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

அமெரிக்காவும் இந்தியாவும் சுயாட்சியும்

அமெரிக்காவும் இந்தியாவும் சுயாட்சியும்
அமெரிக்க அரசியலமைப்பு 👇

# பிரிட்டன் ஆட்சியிலிருந்து விடுதலை பெற 13 காலனிகளும் ஒருங்கிணைந்து காங்கிரஸ் பேரவையை (Continental Congress) தொடங்கி, மக்கள் நலனும் விடுதலை நலனும் கருதி திட்டங்களை வகுத்து வந்தனர்.

# பல்வேறு தொடர் போராட்டங்கள் மூலம் 1776 இல் 13 காலனிகளும் விடுதலை அடைந்தனர்.

# பிறகு, மக்கள் நலத்திட்டங்களை செயலாற்ற 13 காலனிகளும் கூட்டமைப்பாக இணைந்து கூட்டமைப்பு சட்டத்தை (Articles of Confederation) இயற்றினர்.

# இங்கே காங்கிரஸ் பேரவை (Continental Congress) கூட்டமைப்பு காங்கிரஸ் (Congress of the Confederation) என்றானது.

# 13 காலனிகளின் கூட்டமைப்பில் "வலுவான மத்திய அதிகாரம்" இல்லாததால், நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், கூட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பொருளாதார சுமை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கியது.

# இதை கருத்தில் கொண்டு, கூட்டமைப்பு சட்டத்தை கைவிட்டு 1787 இல் உலகின் முதல் நவீன அரசியலமைப்பு சட்டமான அமெரிக்க அரசியலமைப்பு (Constitution of the United States) உருவாக்கப்பட்டது.

# இங்கே கூட்டமைப்பு காங்கிரஸ் (Congress of the Confederation) அமெரிக்க காங்கிரஸ் (United States Congress) ஆக மாறியது.

# அமெரிக்க காங்கிரஸில் மாநில பிரதிநிதிகள் (Lower House = House of Representatives / Upper House = Senate) தங்களது மாநில கோரிக்கைகளை எடுத்துரைப்பர்.

# அமெரிக்க அரசியலமைப்பு வழியாக Legislative (Congress), Executive (President), Judicial (Supreme Court) என்ற கூட்டாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு, அதிபருக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டது.

# அதே சமயம், அதிபர் மாநில அரசின் முடிவுகளில் தலையீடாமலும், மாநில அரசுகள் அதிபரின் முடிவுகளில் தலையீடாமலும் இருக்கும் வகையில் மாற்றமில்லாமல் "மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி" என்ற கொள்கை கடைப்பிடிப்பது உறுதி செய்யப்பட்டது

# இருப்பினும், சில நேரங்களில் மாநிலங்களின் கோரிக்கையை மீறி, அதிபர் சில காரியங்களை சாதித்துக் கொள்ள இயலும்; எடுத்துக்காட்டாக, Obama Healthcare.

# மொத்தத்தில், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பாணியை பின்பற்றி, பல்வேறு நாடுகள் தங்கள் அரசியலமைப்புகளை உருவாக்கியுள்ளன.

இந்திய அரசியலமைப்பு 👇

முகலாயர்கள் பாதையில் இந்தியா

# இந்தியா, வரலாற்றில் ஒரே நாடாக இருந்ததில்லை. ஆனால் 16 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் தங்களது நிர்வாக வசதிக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஒற்றை நிர்வாகத்தின் கீழ் (மத்திய அரசு) இணைத்தனர்.

# மாகாணங்களில் (மாநிலங்களில்) சுபேதார் (கவர்னர்) முகலாயரின் ஏஜென்ட்டாக செயல்பட்டார்.

# முகலாயர்கள் ஆட்சிக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசும் அதிகார குவியலால் "மத்திய அரசு" அமைப்பை விரும்பி செயல்படுத்தியது.

# பிரிட்டிஷ் அரசு தங்களது காலனிய ஆட்சியை வலுவாக்குவதற்காக பிரித்தாளும் சூழ்ச்சியை (Divide & Rule Policy) கையாண்டு, பெரியண்ணன் பாணியில் "மத்திய அரசு" என்ற ஒற்றை போக்கை கடுமையாக அமல்படுத்தியது.

# காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகள் முகலாயர்கள் மற்றும் பிரிட்டிஷர்கள் கடைப்பிடித்த முறைகளை மாறி மாறி பின்பற்றி வருகின்றன.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

# 1946 இல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது மற்றும் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரங்களை இந்தியத் தலைமைக்கு மாற்றுவது குறித்த விவாதம் நடத்துவதற்காக மூன்று பிரதிநிதிகளை கொண்ட அமைச்சரவை தூதுக்குழு (Cabinet Mission Plan) இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லீயின் முன்முயற்சியில் வடிவமைக்கப்பட்டது.

# அமைச்சரவை தூதுக்குழு (Cabinet Mission Plan) பரிந்துரைகளின் பேரில், 1946 இல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் (Constituent Assembly of India) இந்திய அரசியலமைப்பை உருவாக்க அமைக்கப்பட்டது.

1946 இல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் 296 உறுப்பினர்கள் (சுதேச மாநிலங்களிலிருந்து 93 உறுப்பினர்கள்) மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (Constituent Assembly of India were elected by the Provincial Legislative Assemblies in 1946).

2 செப்டம்பர் 1946 அன்று, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திலிருந்து இடைக்கால இந்திய அரசு (Interim Government of India) நிறுவப்பட்டது. இது பிரிட்டிஷ் இந்தியாவை சுதந்திர இந்தியாவாக (Transition of British India to Independent India) மாற்றுவதற்கான பணியைக் கொண்டிருந்தது.

# 9 டிசம்பர் 1946 அன்று புதுதில்லியில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.

# டாக்டர் சச்சிதானந்த் அவையை இடைக்கால ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 11 டிசம்பர் 1946 அன்று, டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதியாகவும், எச்.சி. முகர்ஜி துணை ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

# இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் எட்டு முக்கிய குழுக்களை நியமித்தது; அதில் மிக முக்கியமானது வரைவுக் குழு (Drafting Committee).
# 29 ஆகஸ்ட் 1947 அன்று, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம், இந்தியாவுக்கான வரைவு அரசியலமைப்பை (Draft Constitution for India) தயாரிக்க, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் ஒரு வரைவுக் குழுவை (Drafting Committee) அமைத்தது.

# இந்திய அரசு சட்டம் 1935 (Government of India Act 1935) க்கு மாற்றாக, புதிய இந்திய அரசியலமைப்பு (Constitution of India) 26 நவம்பர் 1949 அன்று, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தால் நாட்டின் அடிப்படை சட்ட நிர்வாக ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; இதன் மூலம், டொமினியன் இந்தியா, குடியரசு இந்தியாவாக மாறியது.

# குடியரசு தினமாக கொண்டாடப்படும் 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு (Constitution of India) நடைமுறைக்கு வந்தது.

# 1952 இல் முதல் நாடாளுமன்ற தேர்தல் மூலம் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் வரை, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றமே இந்தியாவின் தற்காலிக நாடாளுமன்றமாக இருந்தது (Constituent Assembly of India was the provisional Parliament of India until a new Parliament was constituted by the first parliamentary elections in 1952).

இந்திய மாநில சுயாட்சி

# 1930 - 1940 களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் "ஒன்றியம்" (Union) என்ற சொல்லை காட்டிலும் "கூட்டமைப்பு" (Federation) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டுமென மாநிலங்கள் முன்வைத்த கோரிக்கை ஈடேறவில்லை.

# இந்து - முஸ்லீம் மக்களின் தூதுவராக முஸ்லீம் லீக் சார்பில் செயல்பட்ட ஜின்னா, 1937 வரையில் மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மைக்குரிய சிறப்புப் பிரதிநிதித்துவம் போன்ற கொள்கைகளைப் பற்றியே பேசி வந்தார்.

# ஆனால், முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இடங்களில் மாநில சுயாட்சி உரிமை தரக்கூடாது என்று வாதிட்டனர் இந்துத்துவாதிகள்.

# ஒரு கட்டத்தில் பார்ப்பன இந்துத்துவாதிகள் மேற்கொண்ட சமநிலை அற்ற அரசியல் போக்கினால் மனம் கொதித்து, ஜின்னா பாகிஸ்தான் நாடு மற்றும் பெரியார் திராவிட நாடு கேட்டு கோரிக்கைகளை வைத்தனர்.

# தனி நாடு கோரிக்கை குறித்து ஜின்னாவும் பெரியாரும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

# இதற்கிடையில், அமைச்சரவை தூதுக்குழு (Cabinet Mission Plan) முன்வைத்த திட்டங்களுக்கு ஜின்னாவின் முஸ்லீம் லீக் மற்றும் நேருவின் காங்கிரஸ் ஆரம்பத்தில் ஒப்புதல் அளித்தது.

# பின்னர், மதத்தின் அடிப்படையில் மாகாணங்களை குழுப்படுத்தும் யோசனையை மட்டும் காங்கிரஸ் நிராகரித்தது.

# மதத்தின் அடிப்படையில் மாகாணங்கள் பிரிக்கப்படாவிட்டால், அது இந்து மதத்தின் செல்வாக்கிற்கு வழிவகுக்கும் என்று கருதிய ஜின்னாவின் முஸ்லீம் லீக், தமது ஒப்புதலை வாபஸ் வாங்கியது.

# இதற்குப் பிறகு, "பாகிஸ்தான்" என்ற தனி நாடு கோரிக்கையை விடுதலைக்கான ஒரே வழியாகக் கருதி, 16 ஆகஸ்ட் 1946 இல் ஜின்னாவின் நேரடி நடவடிக்கை நாள் (Direct Action Day) அமைந்தது.

# பலகட்ட போராட்டங்களுக்கும், பலர் உயிரிழந்த சம்பவங்களுக்கும் பிறகு, 14 ஆகஸ்ட் 1947 இல் பாகிஸ்தான் தனித் நாடாக உருவாகியது.

# 1963 இல் "பிரிவினைவாதம் சட்டவிரோதமானது" என்று நேரு சட்டம் இயற்ற, "திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்ட போதிலும், அதன் காரணங்கள் அப்படியே தான் இருக்கின்றன" என்றார் அண்ணா.

# ஒரு வேளை பாகிஸ்தான் நம்மோடு இருந்திருந்தால், இந்திய அரசியலமைப்பின் சட்ட முகவரி மாறியிருக்கலாம்; இந்துத்துவாதிகள் வலுவிழந்திருக்கலாம்; மாநிலங்களும் சுயாட்சி பெற்றிருக்கலாம்.

இன்றைய நிலை 

# திராவிட நாடு கோரிக்கை வலுவிழந்த பின்னர் "மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்திலே சுயாட்சி" என்ற முழக்கத்தை தி.மு.க இன்று வரை மிக தீவிரமாக பேசி வருகிறது.

அண்ணாயிசம் பேசிய எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில சுயாட்சி முழக்கத்தை கண்டும் காணாமலும் விட்டது.

# பின்னர் ஜெயலலிதா "நானே பிரதமர்! நானே முதல்வர்!" என்ற பாணியிலும், எடப்பாடி "நானே அடிமை! எனக்கேது உரிமை!" என்ற பாணியிலும் ஆட்சி செய்தனர்.

# மொத்தத்தில், தி.மு.கவின் மாநில சுயாட்சி கொள்கைகளை அ.தி.மு.க குழிதோண்டி புதைத்தது.

ரத்தின சுருக்கமாக

# அமெரிக்க மாநிலங்கள் இணைந்து மத்திய அரசை உருவாக்கி, "இயன்றவரை" மாநில சுயாட்சியை உறுதி செய்தது (Federation = கூட்டாட்சி)."

# இந்திய மத்திய அரசு மாநிலங்களை உருவாக்கி, "இயன்றவரை" மாநில சுயாட்சியை குறைத்தது (Unitary = ஒற்றையாட்சி).

பின் குறிப்பு (Article 32, 131, 226)

Article 32 பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்த்து, பொதுமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக வழக்குகளை தொடுக்கலாம். Article 32 இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அசல் (Original) அதிகாரத்தை அளிக்கிறது, ஆனால் இது தனித்துவமான (Exclusive) அதிகாரமல்ல. அதற்கு காரணம், Article 226 பிரிவின் கீழ், உயர் நீதிமன்றங்கள் மாநில அளவிலான உரிமைகளைப் பாதுகாக்கும் அதிகாரம் பெற்றுள்ளன. எனவே, இரு நீதிமன்றங்களும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் முறைகளை வழங்குகின்றன, ஆனால் அவை வேறு வேறு நிலைகளில் செயல்படுகின்றன.

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அல்லது மாநில அரசுகளுக்கிடையிலான வழக்குகளை தொடுக்க மாநில அரசுகள் Article 131 பிரிவை பயன்படுத்தலாம். இது உச்ச நீதிமன்றத்திற்கு அசல் (Original) மற்றும் பிரத்தியேக (Exclusive) அதிகார வரம்புகளை வழங்குகிறது. இதன் மூலம், அரசுகளுக்கு இடையில் எழும் மோதல்களில் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

Article 131 மூலம் முதன்முதலாக 1962 இல் மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக கையகப்படுத்தல் சட்டம் தொடர்பாக வழக்கு தொடுத்தது மேற்கு வங்க காங்கிரஸ் அரசு. 2020 இல் மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தது கேரளா கம்யூனிஸ்ட் அரசு.

Original = மேல்முறையீடாக இல்லாமல் ஒரு வழக்கை ஒரு நீதிமன்றம் முதன்முறையாக விசாரிக்கிறது.

Exclusive = குறிப்பிட்ட வகை வழக்குகளை விசாரிக்க அந்த நீதிமன்றத்திற்கு மட்டும் உரிமை உண்டு.
விவரணைகள்

நூல் 1 = மாநில சுயாட்சி - முரசொலி மாறன்

நூல் 2 = திராவிட தேசீயம் : மாநில சுயாட்சி ஏன் - அண்ணா

நூல் 3 = மலர்க மாநில சுயாட்சி (இரண்டு தொகுதிகள்) - கு.ச.ஆனந்தன்

மாநில சுயாட்சி உரிமைக்குரலின் கதை


மாநில சுயாட்சி குறித்து சுப.வீ விளக்கம்


மாநில சுயாட்சி குறித்து தலைவர் கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்கள்


Constituent Assembly of India


1962 State of West Bengal vs Union of India


2020 State of Kerala vs Union of India


A State can use Article 32 to protect Citizen's Fundamental Rights


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

அரசியலும் சினிமாவும் சாதியும்

அரசியலும் சினிமாவும் சாதியும்
சுருக்கம் 
  1. முகவுரை
  2. பிரியா காம்ப்ளக்ஸ்
  3. அக்கால திரை சூழல்
  4. இக்கால திரை சூழல்
  5. சாதிய போக்கு
  6. திசை மாறிய சினிமா
  7. அரசியல் கட்சி
  8. எம்.ஜி.ஆரின் அரசியல் 
  9. முதல்வராக எம்.ஜி.ஆர்
  10. அரிதாரமும் அதிகாரமும்
  11. இன்றைய தமிழ் சினிமா
  12. முடிவுரை
முகவுரை

நீரின்றி அமையாது உலகு போல திரையின்றி அமையாது உலகு என்பதன் மூலம் சினிமா நமது ரத்தத்தில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாக தான் பார்க்கிறேன். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை தவிர்த்து கிராமம், சமூகம், திருவிழா, அரசியல், சினிமா தான் முக்கியமான அடையாளங்கள் ஆகும். சாதியும் திருவிழாவும் கிராமமும் கூட்டமைப்பும் ஒரு சேர பயணிக்கும் ஊராக மதுரை உள்ளது. இதனால் தான் மதுரையை பலதரப்பட்ட மக்கள் Big Village என்பார்கள். இப்படிப்பட்ட மதுரை தான் அரசியலுக்கும் சினிமாவுக்கும் பயன்படுத்தப்படுகிறது அல்லது தேவைப்படுகிறது.

பிரியா காம்ப்ளக்ஸ்

1974 இல் மதுரையில் பிரபல பிரியா காம்ப்ளக்ஸ் தொடங்கப்பட்டது (சினிப்ரியா, சுகப்ரியா, மினிப்ரியா - முதலில் இரண்டு பிறகு மூன்றானது). இங்கே முதலில் ஒரு காட்சி சிவாஜி நடித்த "திருவிளையாடல்" திரையிடப்பட்டு பின்னர் நாகேஷ் நடித்த "கை நிறைய காசு" திரையிடப்பட்டு உள்ளது. 

பிரியா காம்ப்ளக்ஸ் திரையரங்கில் வெளியான உரிமைக்குரல் (1974) திரைப்படத்திற்கு ஹவுஸ்புல் ஆவதை காட்டிலும் கூட்டம் மிக அதிகமாக இருந்துள்ளது. ஆனால் எம்.ஜி.ஆரின் தீவிர "கிடா மீசை" ரசிகர் ஒருவர் கூட்டநெரிசலையும் மீறி டிக்கெட் கவுண்டருக்கு வெளியே நின்றிருந்த மனிதக்கூட்டத்தின் தோள்கள் மீது ஏறி கிடுகிடுவென நடந்தோடி முதலில் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றுள்ளார் என்று அறியப்படுகிறது. அந்த அளவுக்கு மதுரையும் அரசியலும் சினிமாவும் சாதியும் பின்னிப் பிணைந்துள்ளன.

அக்கால திரை சூழல்

1970 காலகட்டத்தில் திரையரங்கம் தான் தமிழ்நாட்டின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாகும். அக்கால திரை ரசிகர்கள் அடிக்கடி திரையரங்கங்கள் சென்று திரைப்படங்களை கண்டு மகிழ்ச்சியுற்றாலும் திரையரங்கங்கள் மூட்டை பூச்சி, எலி தொந்தரவுகளுடன் சுகாதாரமற்ற சூழலில் ஏ.சி வசதியில்லாமல் கதவுகள் அடைக்கப்பட்டு நல்ல காற்றோட்டம் இல்லாமல் சிலர் ஆஸ்துமா நோய்க்கு கூட ஆட்பட்டுள்ளனர் என்று அறியப்படுகிறது.

இக்கால திரை சூழல்

1990களுக்கு பிறகு ஏ.சி வசதி, அகண்ட திரை, திரையை மறைக்காத சீட் அமைப்பு, பெரிய பார்க்கிங் வசதி என்று திரையரங்க சூழல் நவீனப்படுத்தப்பட்டது. 2010 களுக்கு பிறகு நவீன கோட்பாட்டின்படி வெளிநாட்டு பாணியில் பல திரையரங்குகள் வந்துவிட்ட காரணத்தால் திரையரங்குகளில் முட்டை போண்டா வியாபாரம் நிறுத்தப்பட்டது, பாப்கார்ன் விலை அதிகமாக்கப்பட்டது, அரங்கிற்குள் தண்ணீர் தவிர வெளி ஸ்நாக்ஸ் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்று திரையரங்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால் சீட்களை கிழிப்பது, டாய்லெட்களை அசுத்தம் செய்வது, ரசிகர்களுக்குள் சண்டையிடுவது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் விலைகள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது. திரையரங்கத்திற்கு உள்ளே ஸ்நாக்ஸ் டெலிவரி வந்துவிட்டது.

மேலும் இப்போது சினிமா டூ தொலைக்காட்சி டூ கணினி டூ மொபைல் என்று மாறிவிட்டாலும் Fundamentals Are Same Everywhere என்ற கூற்றின்படி திரைக்கு முன்னால் மக்கள் காட்டும் ஆர்வம் மாறவில்லை. அகண்ட திரை, சின்னச் திரை, கணினி திரை, மொபைல் திரை என்று உலகம் இன்று கைக்குள் வந்தேவிட்டது.

சாதிய போக்கு

தமிழ் சினிமாவின் போக்கை பொறுத்த மட்டில் 1970 கள் வரை ஒரு மாதிரியும் 1980களுக்கு பிறகு வேறு மாதிரியும் வளர்ந்து வந்துள்ளது. 1970 களிலும் மதுரையை மய்யமாக வைத்து சாதி பார்வையுடன் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு இருந்தாலும் (பட்டிக்காடா பட்டணமா மூக்கையா சேர்வை போல) 1980 களுக்கு பிறகே மதுரையை சுற்றியுள்ள முக்குலத்தோர் சாதி குறித்து பேசும் இனவரைவியல் களமாக தமிழ் சினிமா உருவெடுத்தது அதன் ஆரம்பமாக பாரதிராஜாவின் மண் வாசனை திரைப்படமும் உச்சமாக கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படமும் அமைந்தது.

1980 களில் நடுப்பகுதி காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் சாதி குறித்த திரைப்படங்கள் வந்த காரணத்தால் மேற்கு தமிழ்நாட்டில் கவுண்டர் சாதி குறித்த திரைப்படங்கள் மற்றும் வட தமிழ்நாட்டில் வன்னியர் சாதி குறித்த திரைப்படங்கள் பிற்காலத்தில் வெளிவர காரணமாகின. இடைநிலை சாதி பெருமை பேசும் திரைப்படங்களில் தலித் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரமாக அல்லது அடிமை சேவகம் புரியும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். தமிழ் சினிமாவில் சாகச நாயகர்களின் கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை ஆனால் நகைச்சுவை கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மக்களின் சமூக ஏற்றத்தாழ்வு யதார்த்தத்தை பேசும் கதாபாத்திரங்கள் ஆகும். இதில் தேர்ந்த திரை அனுபவம் இருப்பின் நான் கூறிய கூற்றை உங்களால் ஏற்கமுடியும்.

திசை மாறிய சினிமா

சினிமாவை பயன்படுத்தி தி.மு.க வளர்ந்தது பிறகு ஏன் 1980 களுக்கு பிறகான சில சினிமாக்களை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள்? என சிலர் கேட்கலாம். இங்கே தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். தி.மு.கவினர் பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன், ரத்தக்கண்ணீர், பூம்புகார், பணம், ராஜகுமாரி, மந்திரி குமாரி போன்று பல்வேறு சமூக நீதி கருத்துக்களை பேசிய திரைப்படங்கள் மூலம் சினிமாவை ஆண்டது 1950-1970 காலகட்டம் தான். 

சமூக நீதி ஏற்படுத்தி கொடுத்த வளர்ச்சியில் 1980-1990 காலகட்டத்தில் பல தரப்பட்ட வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள் சினிமாவில் நுழைந்து சமூக நீதி திசையில் இருந்து இடம் பெயர்ந்து அவரவர் விருப்பம் போல கதைக்களங்களை தேர்வு செய்து படங்களை எடுத்தனர். இதில் கோவையை மையப்படுத்தி கவுண்டர் கதை, மதுரையை மையப்படுத்தி முக்குலத்தோர், வட தமிழ்நாட்டை மையப்படுத்தி வன்னியர் படங்கள் வரத் துவங்கின. இதில் பொருளாதாரத்தில் முன்னேறிய நகரமாக கோவையும் பின் தங்கிய நகரமாக மதுரையும் வட தமிழ்நாடும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மதுரை மாநகரில் விசேஷ நாட்களில் பிரபு மற்றும் கார்த்திக் முக படங்களை தங்களது கட் அவுட்டில் முக்குலத்தோர் மக்கள் வைத்து கொள்வதும் பிரசாந்த் மற்றும் விக்ரம் முக படங்களை தங்களது கட் அவுட்டில் தலித் மக்கள் வைத்து கொள்வதும் மதுரை சாதிய போக்கை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும். 1980 களுக்கு பிறகு சாதி மயமாக்கப்பட்டு இன்று மதுரை என்றாலே சாதி, சண்டை, சச்சரவு என்ற பிம்பம் வளர்ந்துவிட்டது. இதற்கு தமிழ் சினிமாவும் ஒரு முக்கிய காரணியாகும். இதில் நவீன காலத்தில் உச்சமாக அமைந்த சாதிய படம் சுந்தரபாண்டியன். எல்லா நகரங்களையும் போலவே "கருப்பு - வெள்ளை" பக்கங்களை கொண்ட நகரம் தான் மதுரை. ஆனால் திரைப்பட சாதி பிம்பம் கொண்டு திரைப்படங்களில் மதுரைக்காரனை பாசக்காரனாக சாதிக்காரனாக மோசக்காரனாக தனித்து காட்டியது நீண்ட ஆய்வுக்குரியது.

ரஜினியிடம் இருந்து வேறுபடுத்தி தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்ள முக்குலத்தோர் கதைக்களமான தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களை கமல்ஹாசன் பயன்படுத்தி இருக்கலாம். மேலும் கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் சைவத்தை வெறுத்த "வைணவர்", சமூக போராளி "தலித்" இறப்பது, "இஸ்லாமியர்" கோமாளியாக தோற்றமளித்தது ஏனென்பது ஆய்வுக்குரியது. மணிரத்னம் சித்தரித்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய கதாபாத்திரங்களும் ஆய்வுக்குரியது.

அரசியல் கட்சி

சினிமா பிடித்தாலும் அரசியலையும் சினிமாவையும் ஒன்றாக பார்க்கக்கூடாது என்ற புரிதல் மக்களுக்கு தெரிய வேண்டும். சினிமாவை "ரசியுங்கள்" அரசியலை "அறியுங்கள்". பட்டவர்த்தனமாக சொல்ல வேண்டுமென்றால் தி.மு.க மக்களுக்கு செய்ததில் பாதியை கூட அ.தி.மு.க செய்ததில்லை என்பதை அறிவதற்கு வாசிப்பு அல்லது சுய புரிதல் அவசியம். ஆனால் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா திரை பிம்பத்தால் அரசியலையும் சினிமாவையும் ஒன்றாக பார்த்துப்பழகிய "பலரால்" குறிப்பாக சில இடைநிலை சாதி மக்களால் தமிழ்நாட்டில் அதிக முறை ஆட்சி செய்யும் வாய்ப்பு அ.தி.மு.கவுக்கு கிடைத்தது.

அ.தி.மு.க கட்சியை தொடங்க எம்.ஜி.ஆர் மதுரையை தேர்ந்த்தெடுக்க காரணமில்லாமல் இல்லை. திரைப்படத்தில் பேசப்படும் இடைநிலை சாதிகளையும் (குறிப்பாக முக்குலத்தோர் - கவுண்டர்) அ.தி.மு.கவையும் இணைத்து பார்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் களத்தை நன்கு அறிந்து கொள்ளலாம். பிறப்பால் சிவாஜி முக்குலத்தோர் சாதியை சேர்ந்தவர் என்றாலும் அவர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்தது என்னவோ எம்.ஜி.ஆர் தான்.

"சினிமா - அரசியல் - மதுரை" என்ற அடிப்படையிலே எம்.ஜி.ஆர் (அ.தி.மு.க), விஜயகாந்த் (தே.மு.தி.க), கமல்ஹாசன் (ம.நீ.ம) போன்றவர்கள் கட்சி தொடங்க மதுரையை தேர்வு செய்தனர்.

எம்.ஜி.ஆரின் அரசியல் 

1971 இல் பாபு (சிவாஜி) மற்றும் ரிக்சாக்காரன் (எம்.ஜி.ஆர்) திரைப்படங்களில் கதாநாயகர்கள் ரிக்சா ஓட்டுபவர்களாக நடித்திருப்பர். இதில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தங்களது கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்தில் எம்.ஜி.ஆரே ஏழைப் பங்காளனாக மக்களின் மனங்களை வெல்ல ஏதுவாக அமைக்கப்பட்டதை யாவரும் அறியலாம்.

எம்.ஜி.ஆர் ஏழைப் பங்காளனாக விவசாயி, மீனவன், கூலித் தொழிலாளி, ஆடு மாடு மேய்ப்பாளன், நரிக்குறவர், வண்டிக்காரன், ரிக்சாக்காரன் போன்ற வேடங்களை ஏற்று அடித்தட்டு மக்களை காப்பவராகவும் பண்ணையார், ரவுடி கும்பல், சாராய கடத்தல், பெரிய முதலாளிகளை வில்லனாக சித்தரித்து அவர்களை அடித்து உதைத்து சட்டத்தின் முன் நிறுத்தும் மக்களின் தலைவனாக அடுத்தடுத்து நடித்து தமிழ் மக்களின் பேராதரவை உழைக்கும் வர்க்கத்தின் பாசத்தை பெற்றார். ஆனால் தேர்ந்த நடிகராக அறியப்படும் சிவாஜி ஒரு கட்டத்தில் மேட்டிமை வேடங்களிலே நடித்து தனது இடைநிலை சாதி வலைக்குள் சிக்கிக் கொண்டார்.

அறிஞர் அண்ணா இருந்த வரையில் சமூக நீதி கருத்துக்களை தமது திரைப்படங்களில் எடுத்துரைத்தார் எம்.ஜி.ஆர். பின்னர் 1972 இல் அ.தி.மு.க கட்சி தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் சமூக நீதி கருத்துக்களை விட தேங்காய் ஸ்ரீனிவாசன், ஐசரி வேலன் போன்ற நடிகர்களை கொண்டு எம்.ஜி.ஆரின் சுய பெருமைகள் குறித்து பேசும் காட்சிகள் தான் அதிகம் இடம்பெற்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1970 கள் வரை ரசிகர்களின் ஆரவாரம், ரசிகர் மன்ற செயல்பாடுகள், திரைப்படங்களின் லாப கணக்கில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் "கிட்டத்தட்ட" ஒன்றே. இன்னும் சொல்ல போனால் 1970 களுக்கு பிறகு சிவாஜிக்கு வெற்றி படங்கள் அதிகம் எம்.ஜி.ஆருக்கு தோல்வி படங்கள் அதிகம். அதையும் மீறி "உயிர்" ரசிகர்களின் செல்வாக்கை வைத்துக் கொண்டும் சிறந்த நடிகரும் தமிழரும் தேவருமான சிவாஜி அரசியலில் எப்படி வீழ்ச்சியடைந்தார்? சராசரி நடிகரும் மலையாளியும் நாயருமான எம்.ஜி.ஆர் அரசியலில் எப்படி எழுச்சியடைந்தார்? என்பது குறித்து நீண்ட ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

முதல்வராக எம்.ஜி.ஆர்

முதல்வராக எம்.ஜி.ஆர் ஏழைப் பங்காளனாக இருக்கவில்லை இன்னும் சொல்லப் போனால் நவீன தமிழ்நாட்டின் இருண்ட காலம் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலம் தான். இவர் ஆட்சியில் துப்பாக்கிச் சூடு உட்பட பல்வேறு மக்கள் விரோத போக்குகள் அரங்கேறியுள்ளது. சினிமாவில் எம்.ஜி.ஆர் தண்டித்த பண்ணையார், ரவுடி கும்பல், சாராய வியாபாரி, பெரிய முதலாளி உட்பட பலதரப்பட்ட மேட்டிமை மக்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஏற்றம் பெற்றதே உண்மை வரலாறு. அரசியலில் குண்டர்கள், கரை வேட்டிகள் காவல்துறையில் தலையீடு, கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்களானது, சாராய கடை டாஸ்மாக் கார்ப்பரேட் ஆனது, பத்திரிகை தணிக்கை, துப்பாக்கிச் சூடு இப்படி பல இழிவான செயல்களை தமிழ்நாட்டின் அரசியல் உலகில் அறிமுகம் செய்து வைத்ததே எம்.ஜி.ஆர் தான்.

சிவாஜி நேர் வழியில் தன்னை முக்குலத்தோராக அடையாளம் காட்டி அரசியலில் சறுக்கினார். ஆனால் சினிமா கவர்ச்சி மூலம் அரசியலில் தனது கோர முகமூடியை கழட்டாமல் அனைவருக்குமான தலைவராக எம்.ஜி.ஆர் தன்னை வெளிக்காட்டி மக்கள் மனங்களை வசியப்படுத்தினார். அக்காலத்தில் முக்குலத்தோரும் தலித்களும் வெறுக்காத நடிகராக எம்.ஜி.ஆர் வலம் வந்தார் ஆனால் அம்மக்களுக்கு அவர் அரசியலில் மிகப்பெரிய அளவில் நன்மைகளை செய்யவில்லை.

அரிதாரமும் அதிகாரமும்

திரைப்பட உலகை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆண்டிருந்தாலும் அதற்காக அவர்களின் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை ஏற்க இயலாது காரணம் தராசில் நிலைநிறுத்தி பார்க்கும் போது அவர்களின் சமூக நீதி அரசியல் செயல்பாடுகள் மலிவானது. அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் உள்ளொன்று வைத்து புறமொன்று செயல்பட்ட முதல்வர். எம்.ஜி.ஆரை போன்று இன்றைய நடிகர்களின் புதிய அரசியல் வரவையும் தராசில் நிலைநிறுத்தி பார்த்தால் உங்களுக்கே உண்மை விளங்கும் அவர்களின் முகமூடி அவிழும். 

"முதல்வர் நாற்காலிக்கு" வருவதற்கு முன்னர் எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ ஆக, தி.மு.க பொருளாளராக பணிபுரிந்துள்ளார் மற்றும் தனது நற்பணி மன்றங்கள் மூலம் விஜயகாந்த் சில நன்மைகளை செய்துள்ளார் என்பதை ஏற்கலாம். இதில் எம்.ஜி.ஆர் முதல்வராக அமர்ந்து முதல்வராகவே மறைந்தார் ஆனால் திரையில் எம்.ஜி.ஆர் காட்டிய வெள்ளை மனசை அரசியலில் பின்பற்றவில்லை மற்றும் கூட்டணி அரசியலுக்குள் நுழைந்த பிறகு தே.மு.தி.க முடிந்த கதையாகி போனது.

முக்குலத்தோரில் பலர் விஜயை ஒதுக்கவும் அஜித்தை கொண்டாடவும் காரணம் சாதி மத பேதம் தான். இதன் அடிப்படையில் தான் "பார்ப்பனர்" சோ ராமசாமி ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு அடுத்து தான் அஜித்துக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்று புகழ்ந்து பேசினார். என்னை பொறுத்தவரையில் ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம் தான் ஆனால் அரிதாரம் பூசிக் கொண்டு நேராக அதிகாரம் தாருங்கள் என கேட்பதே அயோக்கியத்தனம்.

இன்றைய தமிழ் சினிமா

தலித் மற்றும் இடைநிலை சாதி காதல் உறவு குறித்த திரைப்படங்கள் "காதல்" படம் மூலம் தொடங்கிற்று எனலாம். இன்றைய தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் (அசுரன்), மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள், கர்ணன்), பா.ரஞ்சித் (காலா, கபாலி), எஸ்.பி.ஜனநாதன் (பேராண்மை, பொறம்போக்கு), பாலாஜி சக்திவேல் (காதல், வழக்கு எண் 18/9), சுசீந்திரன் (மாவீரன் கிட்டு, ஜீவா) மற்றும் சில இயக்குனர்களின் சீரிய முயற்சியால் சமூக நீதி கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

முதல்நிலை - இடைநிலை, இடைநிலை - இடைநிலை உறவுகளை விட இடைநிலை - கடைநிலை உறவுகளை பற்றி பேசும் படங்கள் அதிகளவில் வெளிவர வேண்டும். இத்தகைய சூழலில் திரௌபதி போன்ற பிற்போக்கு திரைப்படங்கள் வெளிவருதை கண்டு வேதனைப்படுகிறேன்.

முடிவுரை

மக்கள் அனைவரும் "சினிமா வேறு - அரசியல் வேறு" என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியம் இல்லையேல் நமக்கான அரசியல் அதிகார அரசியலாக இல்லாமல் அரிதார அரசியலாகிவிடும். யாரொருவரும் இயக்கும் சினிமாவில் இருந்து, நடிக்கும் சினிமாவில் இருந்து, ரசிக்கும் சினிமாவில் இருந்து, உண்ணும் உணவில் இருந்து, உடுத்தும் உடையில் இருந்து, பேசும் சொற்களில் இருந்து இங்கே அனைத்தும் அரசியலுக்கு உட்பட்டே இயங்குகிறது. இதில் நமக்கான அரசியல் அடையாளங்களை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பிற்போக்கு படங்களை தோல்வியுற செய்து முற்போக்கு படங்களை வெற்றி பெற செய்வோம்.

விவரணைகள்

நூல் 1 = தமிழ்ச் சினிமா : அரிதார அரசியலும் நாற்காலிக் கனவுகளும் - குமரன் தாஸ்

நூல் 2 = தமிழ் சினிமா : புனைவில் இயங்கும் சமூகம் - ஸ்டாலின் ராஜாங்கம்

நூல் 3 = எண்பதுகளின் தமிழ் சினிமா - ஸ்டாலின் ராஜாங்கம்

அ.தி.மு.க பிறந்த கதை


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

இயக்குனர் ஸ்ரீதர்

இயக்குனர் ஸ்ரீதர்

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. சினிமாவும் ஸ்ரீதரும்
  3. ஈஸ்ட்மென் கலர்
  4. புதிய போக்கு
  5. முடிவுரை
  6. விவரணைகள்
முகவுரை 

இளங்கோவன் (அம்பிகாபதி, ஹரிதாஸ், ஏழை படும் பாடு, ஜெனோவா போன்ற படங்கள்) தமிழ் திரையுலகின் முதல் புகழ் பெற்ற திரைக்கதை ஆசிரியராகக் கருதப்படுகிறார். இவர் மீது கொண்ட ஈர்ப்பால் திரையுலகில் நுழைந்த ஸ்ரீதர், 1950 களில் எதிர்பாராதது, மாமன் மகள், அமரதீபம், மாதர் குல மாணிக்கம், யார் பையன், எங்கள் வீட்டு மகாலட்சுமி, உத்தம புத்திரன், மஞ்சள் மகிமை போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதே இளங்கோவன் உடன் இணைந்து 'சித்தூர் ராணி பத்மினி' (1963) படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதினார். ஜெமினி கணேசன் மற்றும் சரோஜாதேவியை உச்ச நட்சத்திரங்களாக நிலை நிறுத்திய 'கல்யாண பரிசு' (1959) திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சினிமாவும் ஸ்ரீதரும்

# இந்தி சினிமாவில் தடம் பதித்த முன்னோடி தமிழ் திரைக்கலைஞர்.

# காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், ஸ்ரீதர் இயக்கிய 'தேன் நிலவு'.

# வெளிநாட்டில் (ஐரோப்பா) படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம், ஸ்ரீதர் இயக்கிய 'சிவந்த மண்' ஆகும்.

# கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு' என ஒரே படத்தில் பணியாற்ற தொடங்கிய முன்னோடி ஸ்ரீதர்.

# 'வெண்ணிற ஆடை' படம் மூலம் ஜெயலலிதாவின் சினிமா வாழ்வுக்கு அடித்தளமிட்டவர் ஸ்ரீதர். ஆனால், பின்னாளில் ஜெயலலிதா ஸ்ரீதரை ஏளனம் செய்தது வரலாறு.

# தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவைப் படங்களைப் பட்டியலிட்டால், அதில் ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' மற்றும் 'கலாட்டா கல்யாணம்' கண்டிப்பாக இடம்பெறும்.

# படத்தின் வெற்றியை தீர்மானிக்க, பாடலிலிருந்து உரையாடலுக்கு மாற்றியவர் கலைஞர் என்றால், நடிகரின் படத்தை இயக்குனரின் படமாக மாற்றியவர் ஸ்ரீதர் என்றால் அது மிகையல்ல.

# இந்தி பட உலகில் வெளிவந்த 'Screen' சினிமா இதழை முன்மாதிரியாக கொண்டு, தமிழ் பட உலகில் 'சித்ராலயா' சினிமா இதழை வெளியிட்டு, மேற்குலக படங்களை பற்றிய நவீன விமர்சன பார்வையில் எழுதியவர் ஸ்ரீதர்.

# 'வெண்ணிற ஆடை' படத்தில் பாலிவுட் பிரபலம் ஹேமமாலினி நடிகையாக அறிமுகமாக வேண்டியவர். ஆனால், மிகவும் ஒல்லியாக இருந்த காரணத்தால், அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு, அந்த கதாபாத்திரத்தை நிர்மலாவுக்கு கொடுத்தார்.

# காட்சிகளை Trademark செய்யும் வகையில் இயக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தவர். எடுத்துக்காட்டாக, 'காதலிக்க நேரமில்லை' படத்தில் பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சி தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை Trademark படமாக கருதப்படுகிறது.

# படங்களுக்கு பெயர் சூட்டுவதில் புதுமைகளை கையாண்டவர் ஸ்ரீதர். எடுத்துக்காட்டாக, 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'சிவந்த மண்', 'உரிமைக்குரல்', 'உத்தரவின்றி உள்ளே வா', 'வெண்ணிற ஆடை', 'தேன் நிலவு' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

# பள்ளிக்கால நண்பர் சடகோபன் என்ற சித்ராலயா கோபு, திரையுலகில் ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். ஸ்ரீதரின் படங்களில் நகைச்சுவை பகுதிகளை பெரும்பாலும் மேற்பார்வை இட்டவர் சித்ராலயா கோபு தான். சித்ராலயா கோபு இயக்கிய முதல் படம் 'காசே தான் கடவுளடா'.

# இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய P.மாதவன், C.V.ராஜேந்திரன், சித்ராலயா கோபு, P.வாசு, சந்தான பாரதி போன்றோர் பின்னாளில் புகழ் பெற்ற இயக்குநர்களாக மாறினர். நடிகர் சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான C.V.ராஜேந்திரன், ஸ்ரீதரின் சகோதரர் (Cousin) ஆவார்.

# ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, காஞ்சனா, ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கவிதா போன்றோரைக் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குனர் ஸ்ரீதர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், சரோஜா தேவி, தேவிகா, ராஜஸ்ரீ ஆகியோரின் திரைவாழ்வையும் ஸ்திரப்படுத்தினார்.

# முதன்முதலாக இந்தியா - பாகிஸ்தான் கதைக்களத்தை படமாக்க எண்ணி, 1965 இல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து நடிகர் சிவாஜி கணேசனை வைத்து 'ஒரு பிடி மண்' (முதலில் இதன் பெயர் 'நெஞ்சிருக்கும் வரை') என்ற படத்தை இயக்க நினைத்தார். ஆனால், போர் விரைவாக முடிந்ததால், அந்த படத்தை இயக்கும் எண்ணத்தை கைவிட்டு, அதை தொடராக 'பொம்மை' இதழில் எழுதினார்.

ஈஸ்ட்மென் கலர்

கருப்பு வெள்ளை படங்களின் காலத்தில் ஈஸ்ட்மென் கலர் படங்களை பலரும் எடுக்க முன்னுதாரமாக இருந்தவர். எடுத்துக்காட்டாக, 'காதலிக்க நேரமில்லை', 'வெண்ணிற ஆடை', 'ஊட்டி வரை உறவு', 'சிவந்த மண்', 'உத்தரவின்றி உள்ளே வா', 'அவளுக்கென்று ஓர் மனம்', 'உரிமை குரல்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

எம்.ஜி.ஆர் - சிவாஜி மட்டுமே ஈஸ்ட்மென் கலர் படங்களில் நடித்து வந்த காலத்தில், பிற நடிகர்களை வைத்து ஈஸ்ட்மென் கலர் படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்டவர். எம்.ஜி.ஆர் முன் சிகரெட் பிடித்த ஒரே இயக்குனரான ஸ்ரீதர், எம்.ஜி.ஆரை வைத்து ஈஸ்ட்மென் கலரில் 'உரிமை குரல்' மற்றும் 'மீனவ நண்பன்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை எடுத்தார்.

புதிய போக்கு 

இயன்றவரை நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை உயிரோட்டமாக பிரதிபலித்து தமிழ் திரையுலகில் மாறுபட்ட இடம் பிடித்த ஸ்ரீதர், பழமைவாதத்தை உடைத்தெறிந்து காட்சிகளுக்கு புதிய உயிரூட்டத்தை அளித்தார். தமிழ் சினிமாவின் திருப்புமுனை இயக்குநராக போற்றப்படும் இவர், குடும்பம், சமூகம் மற்றும் காதல் சார்ந்த கதைகளை திறமையாக இயக்கி, நவீன தமிழ் சினிமாவில் முக்கோண காதல் மற்றும் நகைச்சுவைக் கதைகளுக்கான புதிய போக்குகளை (Trendsetter) உருவாக்கினார். 

ஸ்ரீதர் தொடங்கிய புதிய பாதையில் K.பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா போன்றோர் பயணித்தனர். மேலும், புதுமுகங்களை அதிகளவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஸ்ரீதரின் கோட்பாட்டை K.பாலசந்தர் மற்றும் பாரதிராஜா பின்பற்றினார்கள்.

முடிவுரை 

கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்த ஸ்ரீதர், நவீன தமிழ் சினிமாவின் முன்னோடியாவார். பல புகழ்பெற்ற இயக்குநர்களுக்கும் முன்னோடியாக அறியப்படுபவர். இருப்பினும், தற்கால தமிழ் சினிமாவின் நிலப்பரப்பை வடிவமைப்பதில் ஸ்ரீதரின் முக்கிய பங்கை ஊடகங்கள் மறந்துவிட்டன என்பது வேதனையான உண்மை.

பிறப்பு = 22 ஜூலை 1933 

இறப்பு = 20 அக்டோபர் 2008

விவரணைகள் 

ஸ்ரீதர் - 50 கலர் பாடல்கள் 


ஸ்ரீதர் பற்றிய தகவல்கள் - 1


ஸ்ரீதர் பற்றிய தகவல்கள் - 2


ரஜினிகாந்த் - ஸ்ரீதர் 


எம்.எஸ்.வி பற்றி ஸ்ரீதர்


மனோபாலா பார்வையில் 


கு.ஞானசம்பந்தன் பார்வையில் 


ஜெயலலிதா - ஸ்ரீதர் கருத்து வேறுபாடு 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பா.ஜ.க சுருக்கமான வரலாறு

பா.ஜ.க சுருக்கமான வரலாறு
*இந்தியாவில் "வலதுசாரிகள், சங்கப் பரிவார், கரசேவர்கள்" பொருள் = இந்துத்துவா நிலைப்பாடு கொண்டவர்கள்.

இந்துத்துவா அமைப்புகளின் தொடக்கம் 

# 1909, 1918, 1932 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய மதன் மோகன் மாளவியா, இந்துத்துவா பிரச்சாரத்தை மேற்கொள்ள 1915 இல் இந்து மகாசபை அமைப்பை நிறுவினார். 

# அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்து அடையாளத்தை உருவாக்குவதில்  முக்கிய பங்கு வகித்த மதன் மோகன் மாளவியா, ஏராளமான இந்துத்துவா தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்தினார். 

# 1920 இல் பாலகங்காதர திலகர் இறந்த பிறகு, அவரது சீடர் பி.எஸ்.மூஞ்சே காங்கிரஸின் மதச்சார்பற்ற மற்றும் அகிம்சை அணுகுமுறையுடன் உடன்படவில்லை, அதற்கு பதிலாக இந்து மகாசபையுடன் பணிபுரிய தொடங்கினார்.

# பி.எஸ்.மூஞ்சே 1927 முதல் 1937 வரை வி.டி.சாவர்க்கர் பதவியேற்கும் வரை இந்து மகாசபை தலைவராக பணியாற்றினார். 

# வி.டி.சாவர்க்கரின் தலைமையில், இந்து மகாசபை இந்துத்துவா சித்தாந்தத்தை பரப்ப வியூகம் வகுத்து, அரசியல் ரீதியாய காங்கிரஸின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் தீவிர எதிர்ப்பாளராக உருவெடுத்தது.

# இந்து மகாசபையை சேர்ந்த பி.எஸ்.மூஞ்சே, கே.பி.ஹெட்கேவருக்கு ஒரு புரவலராக விளங்கி அவரது மருத்துவ படிப்புக்கு நிதியளித்தார்.

இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக  பரப்புவதற்காக கே.பி.ஹெட்கேவர் 1925 இல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பை நிறுவினார்.

# ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த எம்.எஸ்.கோல்வல்கர் மற்றும் எஸ்.எஸ்.ஆப்தே ஆகியோர் சுவாமி சின்மயானந்தா ஆலோசனையுடன் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை 1964 இல் தொடங்கினர்.

காந்தி கொலை 

# ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான நாதுராம் கோட்சே 1948 இல் இந்தியாவின் தேசத்தந்தை என போற்றப்படும் காந்தியை சுட்டு கொன்றார்.

# காந்தி படுகொலைக்கு பிறகு நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்டார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில காலம் தடை செய்யப்பட்டது.

பாபர் மசூதி சர்ச்சையின் தொடக்கம் 

# 1949 இல் பாபர் மசூதிக்குள் சட்டவிரோதமாக ராமர்-ஜானகி சிலைகளை இந்துத்துவாதிகள் வைத்தனர்.

# மேலும் சுதந்திர இந்தியாவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதே தங்களது முதன்மையான கொள்கையென ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம் உட்பட பல இந்துத்துவா அமைப்புகள் கொக்கரித்தது.

நேரு-லியாகத் ஒப்பந்தம்

# 1950 இல் இந்திய பிரதமர் நேரு - பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் இடையில் "லியாகத்-நேரு ஒப்பந்தம்" கையெழுத்திடப்பட்டது.

# இரு நாட்டிலும் வசிக்கும் சிறுபான்மையினரின் சமூக பாதுகாப்பையும் அரசியல் உரிமைகளையும் வழங்குவதே ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

லியாகத்-நேரு ஒப்பந்தத்தின் "சில" நோக்கங்கள்,

1. கட்டாய மத மாற்றங்கள் அங்கீகரிக்கப்படாது.

2. இரு நாடுகளும் சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தல்.

3. அபகரித்து செல்லப்பட்ட பெண்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. தங்கள் சொத்துக்களை விற்பனை செய்ய நாட்டிற்கு திரும்பிச் செல்ல அகதிகளுக்கு உரிமை உண்டு.

5. கடத்தப்பட்டோரை விடுவிக்கப்படல், சூறையாடப்பட்ட பொருட்களை ஒப்படைக்கவும் வழிவகை செய்தல்.

# ஒப்பந்தத்தின் மூலம் கிழக்கு வங்காளத்தில் (வங்கதேசம்) உள்ள சிறுபான்மை இந்துக்களை பாகிஸ்தானின் கருணைக்கு விட்டுவிட்டதாக குற்றம் சாட்டி நேரு அமைச்சரவையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பணிபுரிந்த சியாமா பிரசாத் முகர்ஜி 1950 இல் பதவி விலகினார்.

பாரதிய ஜன சங்கத்தின் தொடக்கம் 

பதவி விலகிய சியாமா பிரசாத் முகர்ஜி 1951 இல் பாரதிய ஜன சங்கம் என்ற இந்துத்துவா அரசியல் கட்சியை தொடங்கினார்.

பாரதிய ஜன சங்கம் தொடங்க "நேரு-லியாகத் ஒப்பந்தம்" மட்டும் காரணமல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

# 1953 இல் சியாமா பிரசாத் முகர்ஜி மறைந்த பிறகு தீனதயாள் உபாத்தியாயா, வாஜ்பாய், எல்.கே.அத்வானி மற்றும் பலர் பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவராக இருந்துள்ளனர்.

பசு ஒரு மத அரசியல் விலங்கு 

# 1966 இல் பசுவதைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி, டெல்லியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பாரதிய ஜன சங்கம் ஆதரவுடன் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.  

# அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜரின் இல்லத்தை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். 

# போராட்டம் வன்முறையாக மாறி, பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு, காவல்துறை துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.

# காமராஜரின் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு எதிரான முந்திய பேச்சால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் அவரது இல்லத்தை குறி வைத்து தாக்குதல் நடத்திய போதும் காமராஜர் காயத்திலிருந்து தப்பித்தார். 

# இந்நிகழ்விற்கு, "பிற்போக்கு மற்றும் சமூக விரோத சக்திகள்" தான் காரணம் என்று கூறி வன்முறையை பகிரங்கமாகக் கண்டனம் செய்தார் காமராஜர். 

# "பிராமணரல்லாத தலைவரின் வெற்றிக்கு எதிரான பிராமண வெறுப்பின் வெளிப்பாடே இந்த தாக்குதல்" என்று காமராஜர் மீதான தாக்குதலை பெரியார் கண்டித்தார்.

நேருவின் மரணத்திற்கு பிறகு, சுதந்திர இந்தியாவில் நேருவியன் மதச்சார்பின்மையின் சகாப்தத்திலிருந்து விலகி, 1966 இல் டெல்லியில் நடந்த முதல் இந்துத்துவா கலவரம் இந்திய தேசிய அரசியலில் வகுப்புவாதத்தை முன்னிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.

# பசுவை ஒரு மத அரசியல் விலங்காக வைத்து பசு பாதுகாப்புக்கு ஆதரவைத் திரட்டுவதில் சவால்களை எதிர்கொண்ட பிறகு, ஒரு கட்டத்தில் இந்துத்துவா அரசியல்வாதிகள் ராம ஜென்மபூமி இயக்கத்தின் மீது தங்கள் முதன்மையான கவனத்தை மாற்றினர். 

# பசு அரசியலில் இருந்து விலகி ராமரை மத அரசியல் சின்னமாக மாற்றி அரசியல் ஆதரவை பெற தொடங்கிய பின்னர், சங்கப் பரிவார் அமைப்புகள் இறுதியில் 1992 இல் பாபர் மசூதியை இடித்து 2024 இல் ராமர் கோவில் கட்டுவதற்கு வழிவகுத்தது.

ஜனதா கட்சியின் தொடக்கம் 

# நெருக்கடி நிலை முடிந்து 1977 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஜனதா கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 

# ஜன சங்கம் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவும், ஜனதா கட்சி உறுப்பினராகவும் ஆக இரட்டை உறுப்பினராக (Dual Membership) இருக்கக்கூடாது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து ஜன சங்கம் உறுப்பினர்கள் விலக வேண்டும் என்று கோரினார் சரண் சிங்.

# இதனை, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட ஜன சங்கம் உறுப்பினர்கள் ஏற்கவில்லை. 

# இரட்டை உறுப்பினர் பதவி, மகன் காந்திலால் தேசாய் மீதான குற்றச்சாட்டு, நெருக்கடி நிலை குறித்து இந்திரா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீதான விசாரணை போக்குகள் உள்ளிட்ட பிரச்னைகளால் செய்வதறியாது நின்ற மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்திட, சரண் சிங் பிரதமர் ஆனார். 

# பிரதமர் சரண் சிங் அமைச்சரவையில் ஜன சங்கம் சார்பில் வாஜ்பாய், அத்வானி  பங்கேற்கவில்லை.

# இந்திரா காந்தியின் காங்கிரஸ் ஆரம்பத்தில் சரண் சிங்கிற்கு ஆதரவளித்தது, ஆனால் அதன் ஆதரவை மிக விரைவில் விலக்கிக் கொண்டது, அதற்காக சரண் சிங் 24 நாட்களுக்குள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

# ஜனாதிபதி நீலம் ரெட்டி, ஜெகசீவன்ராம் ராம் பிரதமராக பதவி ஏற்று பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பை வழங்காமல் புதிய நாடாளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது சர்ச்சையானது.

# இந்த பின்னணியில், ஜனதா கட்சி இரண்டு பிரிவாக நின்றது, 1980 நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சிக்கு ஜெகஜீவன் ராம் பிரதமர் வேட்பாளராக நிற்க, ஜனதா (Secular) கட்சிக்கு சரண் சிங் பிரதமர் வேட்பாளராக நிற்க, அந்த தேர்தலில் மொத்த ஜனதா கூடாரமே தோற்றது, இந்திரா காந்தி வெற்றி பெற்று 4 வது முறையாக மீண்டும் பிரதமரானார்.

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்கம் 

தேர்தலில் ஜனதா கட்சி தோற்ற பிறகு,  வாஜ்பாய், எல்.கே.அத்வானி உள்ளிட்ட ஜன சங்கம் உறுப்பினர்கள், ஜனதா கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியை 1980 இல் தொடங்கினர். 

# பாரதிய ஜனதா கட்சி மூலம் வாஜ்பாய், அத்வானி மெல்ல மெல்ல நாட்டிலே இந்துத்துவா வெறியை வளர்த்தனர்.

பா.ஜ.க ஆட்சியின் தொடக்கம் 

# 1996 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க 161 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.

# 1996 இல் பிரதமர் வாஜ்பாய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை மாறாக மூன்றாவது அணி ஒன்றிணைந்தன் மூலம் தேவகௌடா பிறகு குஜ்ரால் இந்திய நாட்டின் பிரதமர் ஆனார்கள்.

# குஜ்ரால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு 1998 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க 182 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.

# இதையெடுத்து, அ.தி.மு.க உட்பட பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமர் ஆனார்.

# பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்த ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாயிடம் மாநிலத்தில் தி.மு.க ஆட்சியை கவிழ்க்க சொல்லி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதற்கு, வாஜ்பாய் இணங்காத காரணத்தால் திடீரென கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜ.க ஆட்சியை கவிழ்த்தார்.

# உலக அரசியல் அரங்கில், இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்களுடன் இந்திய அரசின் நிலைத்தன்மை வீழ்ந்த சூழலில், அரசியல் கண்ணியத்தை மீட்டெடுக்கும் வகையில், 1999 இல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் (CMP-Common Minimum Programme) மூலம் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை தி.மு.க சந்தித்தது.

# 1999 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க 182 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.

# இதையெடுத்து, தி.மு.க உட்பட பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமர் ஆனார்.
# இதற்கிடையே, பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் இறுதி காலத்தில், கொள்கை வேறுபாடுகள் அதிகரிக்க தொடங்கிய நேரத்தில் கூட்டணியை விட்டு தி.மு.க விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி இடிப்பு 

# 1992 இல் டெல்லியில் உள்துறை அமைச்சர் முன்னிலையில் சங்கப் பரிவார் தலைவர்களுக்கும் பாபர் மசூதி பாதுகாப்பு குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

# டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும், 06 டிசம்பர் 1992 முதல் அயோத்தி கோவிலுக்கு கரசேவை தொடங்க போவதாகவும் சங்கப் பரிவார் அமைப்பினர் அறிவித்தனர்.

# இதையொட்டி, மாநில பா.ஜ.க அரசின் ஆதரவோடும் பாதுகாப்போடும் 1,50,000 இந்துத்துவா கரசேவர்கள் பாபர் மசூதியை இடித்த போது, மாநில காவல்துறை உட்பட ஒட்டுமொத்த உத்தரப் பிரதேச மாநிலத்துறைகளும் கைகட்டி வேடிக்கை பார்த்தன.

# வலதுசாரிகள், 1966 டெல்லி கலவரத்தை விட அதிகமான ஆள்பலம் மற்றும் ஆயுத பலத்துடன், 06 டிசம்பர் 1992 அன்று பாபர் மசூதி இடிப்பை நடத்தினர்.

# ஆரம்பத்தில் நீதிமன்ற அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட அயோத்தி வழக்கு, சங்கப் பரிவார் அமைப்புகளின் வன்முறையால் வீதிக்கு வந்தது.

# பாபர் மசூதி இடிப்பின் விளைவாக, உடனடியாக நாடு முழுவதும் கலவரம் வெடித்தது, அதில் சுமார் 2000 பேர், பெரும்பாலும் முஸ்லீம்கள், கொல்லப்பட்டனர்.

# பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.

குஜராத் ரயில் எரிப்பு 

# 1992 இல் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, 10 வருடங்கள் கழித்து மிகப் பெரிய வன்முறை வெறியாட்டமாக குஜராத் முதல்வராக மோடி இருந்த நேரத்தில் 2002 இல் குஜராத் கலவரத்தை அரங்கேற்றியது காவி கும்பல்.

# 2002 இல் கோத்ரா ரயில் நிலையம் அருகே அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி ரயிலை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தியதில் அந்த ரயிலில் பயணம் செய்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர்.

# ரயிலில் இறந்தவர்கள் இந்துக்கள் என்பதால் இஸ்லாமியர்கள் தான் வன்முறையாளர்கள் என்று பிரச்சாரத்தை மேற்கொண்ட சங்கப் பரிவார் அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட தொடங்கினர்.

# 2002 பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற குஜராத் கலவரத்தில் சுமார் 2000+ பேர் பலியாகினர்.

# குஜராத் கலவரத்தின் வீரியம் எந்தளவுக்கு இருந்தது என்றால் அன்றைய குஜராத் முதல்வர் மோடிக்கு 2005 இல் அமெரிக்கா அரசாங்கம் விசா தர மறுக்கும் அளவுக்கு இருந்தது.

பா.ஜ.க பிரதமராக மோடி

2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க போதிய பெரும்பான்மையுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் விரோத திட்டங்களை மனம் போன போக்கில் நிறைவேற்றி தங்களது இந்துத்துவா கோரா முகத்தை நிரூபித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக,

*நீட் தேர்வு

*காவி மயம்

*இந்தி திணிப்பு

*உதய் மின் திட்டம்

*அயோத்தி பிரச்சினை

*ஊடகத்தை கைப்பற்றுதல்

*புதிய வேளாண்மை சட்டம்

*மாநில அரசுகளை உடைத்தல்

*புதிய தேசிய கல்வி கொள்கை

*ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்

*இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம்

*முறையாக செயல்படுத்தப்படாத ஜி.எஸ்.டி

*இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கம்

*திட்டமிடல் இல்லாத பணமதிப்பிழப்பு நடவடிக்கை

# இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததற்கு, "லியாகத்-நேரு ஒப்பந்தத்தை குறிப்பிட்டு பாகிஸ்தானும் வங்கதேசமும் பிரிவினைக்கு பின்னர் அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்களை பாதுகாக்க தவறியதாகவும், அந்த தவறை மோடி அரசு திருத்துவதாகவும், புதிய சட்ட திருத்தமானது அனைத்து சமுதாய மக்களுக்கும் பாதுகாப்பை வழங்க உறுதி செய்திடும்" என்று அமித் ஷா கூறியுள்ளார்.

# ஆனால், இது அப்பட்டமான பொய் பிரச்சாரமாகும். ஏனெனில், புதிய சட்ட திருத்தம் இஸ்லாமியர்களையும் ஈழ தமிழர்களையும் கணக்கில் கொள்ளவில்லை. அதுவே இந்துத்துவா முகமாகும்.

முடிவுரை 

# ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிகப்பெரிய பலமே அது அரசியல் அமைப்பாக இல்லாமல் கலாச்சார அமைப்பாக பதிவு செய்து கொண்டதால் பலதரப்பட்ட மக்கள் (அரசு ஊழியர்கள் உட்பட) அதில் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்கெடுக்க முடிகிறது.

# மோடி - அமித் ஷா அம்பு எனில் எய்பவன் ஆர்.எஸ்.எஸ் என்றால் மிகையல்ல.

துணுக்கு செய்தி 

# 1920 களில் சிந்து சமவெளி நாகரிகம் "திராவிட நாகரிகம்" என்ற கருத்தியல் சர்வதேச கவனத்தை பெற்ற போது அதனை எதிர்த்து களம் காண "ஆரியர்கள்" பல்வேறு வலதுசாரி இயக்கங்களை தொடங்கினர்.

# 1978 இல் ஜனதா ஆட்சியில் பிரதமர் மொரார்ஜி தேசாய், காங்கிரஸ் முதலாளிகள் மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால், இன்றைய மோடிக்கு முன்னோடியாக வெற்றி பெறாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்.

# தமிழ்நாட்டை சேர்ந்த  காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக (1964-1967) பதவி வகித்ததை போல தமிழ்நாட்டை சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி அகில இந்தியா பா.ஜ.க தலைவராக (2001-2002) இருந்துள்ளார்.

Saffron Family

*RSS = Rashtriya Swayamsevak Sangh

*VHP = Vishva Hindu Parishad

*BJP = Bharatiya Janata Party

*Student Wing = ABVP = Akhil Bharatiya Vidyarthi Parishad (RSS)

*Labour Wing = BMS = Bharatiya Mazdoor Sangh (RSS)

*Farmer Wing = BKS = Bharatiya Kisan Sangh (RSS)

*Youth Wing = BJYM = Bharatiya Janata Yuva Morcha (BJP)

*Women Wing = Mahila Morcha (BJP)

*Militant Wing = Bajrang Dal (VHP)

விவரணைகள் 

Issue of Gujarat Chief Minister Narendra Modi's Visa Status


Vajpayee Wanted To Sack Modi


Vajpayee Gave Advice To Modi


பா.ஜ.க உருவான கதை


தாமரை மலர்ந்த கதை 


12 April 2002 - DMK Warms to Advani


3 March 2002 - DMK to Quit if Ayodhya Temple gets nods


21 December 2003 - DMK Quits NDA Government


BJP Showed True Colours Says Kalaignar 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம். 

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...