Chocks: February 2021

Tuesday, February 9, 2021

ஐஸ் கிரீம் வரலாறு

ஐஸ் கிரீம் வரலாறு
*ஐஸ் கிரீம் என்ற சொல் "ஐஸ்டு கிரீம்" (Iced Cream) என்னும் சொல்லில் இருந்து உருவானது. 

*அமெரிக்காவில் ஐஸ் கிரீம் மிக பெரிய தொழிற்சாலையாக விளங்கி வருகிறது.

*அமெரிக்காவின் முதல் ஐஸ் கிரீம் பார்லர் 1776 இல் நியூ யார்க் நகரில் திறக்கப்பட்டது. 

*உலகம் முழுவதும் 30% ஐஸ் கிரீம் சந்தை வெண்ணிலா சுவையை கொண்டுள்ளது. 

*உலகின் பிரபல ஐஸ் கிரீம் வகைகள் Sundae, Banana Split, Dondurma, Affogato, Pistacchio. 

*தமிழ்நாட்டில் பிரபல ஐஸ் கிரீம் நிறுவனங்கள் Cream Stone, Boomerang, Ibaco, Arun, Amul.

*2019 இல் உலகளாவிய ஐஸ் கிரீம் சந்தையின் மதிப்பு ~ 62 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (~ 4,51,200 கோடி).

40 கி.பி காலகட்டத்தில் ரோம் மன்னர் நீரோ (Nero) தனது அரண்மனை விருந்தினர்களை சிறப்பிக்க ஊழியர்களை ஏவி அப்பெனின் மலை (Apennine Mountain) உச்சியில் இருந்து ஐஸ் கட்டிகளை கொண்டு வரச்செய்து பழம், தேன், ஒயின் ஆகியவற்றை கலந்து உறைந்த ஐஸ் கிரீம்களை (Forzen Dessert) தயாரித்து பரிமாறி உள்ளார்.

மங்கோலிய குதிரைப்படை வீரர்கள் நீண்ட பயணத்தின் போது தங்கள் உணவிற்கு இறைச்சியை கொள்கலனில் (Closed Container) எடுத்து செல்வார்கள். குதிரையின் வேகமான இயக்கத்தாலும் (Galloped) சில இடங்களின் குளிர் வெப்பநிலையாலும் (Cool Temperature) ஐஸ் கிரீம் போன்ற பொருளை உருவாக்கியுள்ளது.

நவீன ஐஸ் கிரீம் மங்கோலியாவில் தோன்றி அங்கிருந்து சீனாவுக்கு பரவியுள்ளது. அரபு வணிகர்களால் (Arab Traders) அல்லது சீனாவுக்கு சென்று இத்தாலி திரும்பிய மார்க்கோ போலோவால் (Marco Polo) ஐஸ் கிரீம் ஐரோப்பாவுக்கு பரவியிருக்க வேண்டும்.

இந்து குஷ் மலையிலிருந்து டெல்லிக்கு ஐஸ் கட்டிகளை கொண்டு வந்து உறைந்த ஐஸ் கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல குல்பி (Kulfi) ஐஸ் கிரீம் முகலாய சாம்ராஜ்யத்தில் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. குல்பி ஐஸ் கிரீம் பாரசீக ஐஸ் கிரீமான பஸ்தானி சொன்னாட்டியில் இருந்து வந்தது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்குலகில் உணவு சாப்பிட (Food Etiquette) நாப்கின்கள் (Napkins) மற்றும் வெட்டுக்கருவிகள் (Cutlery) கொண்டு கண்டிப்பான நடைமுறை பின்பற்றப்பட்டது. சுவையான ஐஸ் கிரீம் கூட மிகுந்த கவனத்துடன் குவளையில் ஒரு டீஸ்பூன் (Dish & Spoon) கொண்டு பரிமாறப்பட்டது.

1903 இல் கோன் தயாரிப்புக்கு காப்புரிமை இட்டாலோ மார்ச்சியோனிக்கு (Italo Marchiony) வழங்கப்பட்டது. இதற்கிடையில், 23 ஜூலை 1904 செயின்ட் லூயிஸ் உலக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி உணவகத்தில் சிரியாவை சேர்ந்த ஏர்னஸ்ட் ஹம்வி (Ernest Hamwi) வாப்பிள் - பேஸ்ட்ரி (Waffle - Pastry) ஸ்டால் வைத்திருந்தார் அவருக்கு அருகில் ஒரு ஐஸ் கிரீம் ஸ்டால் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐஸ் கிரீம் பரிமாறும் குவளைகள் (Dish) தீர்ந்ததால் ஐஸ் கிரீம் விற்பனையாளர் சோகத்தில் மூழ்கிவிட ஐஸ்கிரீம் விற்பனையாளரின் பிரச்சினைக்கு ஏர்னஸ்ட் ஹம்வி சுலபமான தீர்வைக் கண்டார்.

ஏர்னஸ்ட் ஹம்வி விரைவாக தனது வாப்பிள் (Waffle) ஒன்றை கோன் (Cone) அல்லது கார்னூகோபியா (Cornucopia) வடிவத்தில் உருட்டி அதில் இரண்டு ஸ்கூப் (Scoop) ஐஸ் கிரீம்களில் நிரப்பி அதன் மூலம் "கோன் ஐஸ் கிரீம்" உருவாக அடித்தளமிட்டர். உலகம் முழுவதும் கோன் ஐஸ் கிரீம் பிரபலம் அடைய ஏர்னஸ்ட் ஹம்வி தான் முதன்மையான காரணமாவார்.
விவரணைகள் 





வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Friday, February 5, 2021

டிரம்ப்பும் ஜெயலலிதாவும் எதிர்வினையும்

டிரம்ப்பும் ஜெயலலிதாவும் எதிர்வினையும்

சுருக்கம் 
  1. டொனால்ட் டிரம்ப் 
  2. ஜனாதிபதி தேர்தல் 
  3. 45 வது ஜனாதிபதி
  4. தேர்தலில் தோல்வி 
  5. ஜெயலலிதா 
  6. உறவுகள் 
  7. காவிரி தந்த கலைசெல்வி
  8. முதலமைச்சர் 
  9. சச்சரவுகளும் வழக்குகளும் 
  10. சொத்துக் குவிப்பு வழக்கு
  11. அ.தி.மு.க கொண்டாட்டம் 
  12. அமெரிக்காவும் இந்தியாவும் 
  13. முடிவுரை 
  14. விவரணைகள் 

டொனால்ட் டிரம்ப் 
பிரெட் டிரம்ப்புக்கும் மேரி டிரம்ப்புக்கும் ஐந்தில் நான்காவது பிள்ளையாக டொனால்ட் டிரம்ப் 14 ஜூன் 1946 இல் நியூ யார்க்கில் பிறந்தார். அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும் தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் வலம் வந்தார். என்.பி.சி தொலைக்காட்சியின் தி ஆப்ரீன்ட்டிஸ் (The Apprentice) தொடரில் நடித்ததன் மூலம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா முழுவதும் பிரபலமானார். 1980 இல் கிராண்ட் ஹையாட் நியூ யார்க் ஹோட்டலை புனரமைத்து கட்டிடத்தின் வெளிப்புறத்தை கண்ணாடியில் அடைத்தது டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்க நகரத்தின் சிறந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபராக மாற்றியது.

ஜனாதிபதி தேர்தல் 

தொழிலதிபராக டொனால்ட் டிரம்ப் அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பல முறை தனது அரசியல் கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் 2016 தேர்தலில் தான் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து 2016 அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை எதிர்த்து குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். மேலும் அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதியாக தமது 70 வயதில் 20 ஜனவரி 2017 இல் பதவியேற்றார். 

45 வது ஜனாதிபதி

45 வது ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (Trans-Paicific Partnership) அமெரிக்காவிற்கு மோசமான ஒப்பந்தம் என்றும், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) அமெரிக்க நாட்டிற்கு பேரழிவு என்றும், ஈரான் அணுசக்தி (Iran Nuclear Deal) ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்றும், உலக சுகாதார நிறுவனத்திற்கு (World Health Organisation) நிதி பங்களிப்பு தேவையற்றது என்று பல்வேறு விமர்சனங்களை செய்து அவற்றிலிருந்து அமெரிக்க அரசாங்கம் விலக டிரம்ப் ஆணை பிறப்பித்தார். மேலும் உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) அமெரிக்காவிற்கு எதிராக நியாயமற்ற முறையில் செயல்படுகிறது என்றும், நேட்டோ (NATO) வரி செலுத்தும் அமெரிக்க மக்களுக்கு நியாயமாக இல்லை என்றும், இதுவரை செய்யப்பட்ட மிக மோசமான வர்த்தக ஒப்பந்தம் நாப்டா (NAFTA) என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரமான ஒப்பந்தம் கோரஸ் (KORUS) என்றும் தொடர்ந்து ஒப்பந்தங்களை பாதுகாப்பதை விட அல்லது தேவையான மாற்று கொள்கைகளை உருவாக்குவதை விட டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தங்களை விட்டு விலகுவதில் அல்லது கண்டிப்பதில் தான் சிறந்து விளங்கினார் என கூறுவதே சரியாகும். 

வலதுசாரி தொழிலதிபர்களை மகிழ்வித்தது, குடும்ப உறுப்பினர்களை உயர் அரசாங்க பதவியில் அமர்த்தியது, இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியது, வடக்கு சிரியாவிலிருந்து பிரச்சனைகளை முழுமையாக தீர்க்காமல் அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெற்றது, இறக்குமதி கட்டணங்களை அதிமாக விதித்து சீனாவுடன் வர்த்தக யுத்தத்தைத் தூண்டியது, சட்டவிரோத இடம்பெயர்வுகளைத் தடுப்பதற்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைத் திட்டம் என தனது ஆட்சிக் காலத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு தவறான போக்குகளை கடைபிடித்து ஆட்சி செய்து வந்தார் டொனால்ட் டிரம்ப். 

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை புறக்கணித்தும் முரண்பட்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தலைக் குறைத்து டொனால்ட் டிரம்ப் ஆற்றிய எதிர்வினைகளை பல்வேறு அமெரிக்க ஊடங்கங்கள் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு நிரூபிக்கப்படாத சிகிச்சை சோதனைகள் வெற்றி என தவறான தகவல்களை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப்.

தேர்தலில் தோல்வி 

2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து தேர்தலில் மோசடி நடந்தாக முன்வைத்த குற்றசாட்டுகள் தோல்வியுற்ற பிறகே தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் டொனால்ட் டிரம்ப். இதற்கிடையில் டொனால்ட் டிரம்ப் பேசிய சர்ச்சையான கருத்துக்கள், இனவெறி கொள்கைகள் மற்றும் அவரது ஆட்சிக் காலத்தை அமெரிக்க நீதிமன்றங்கள், பிரபல ஊடகங்கள், பிரபல நட்சத்திரங்கள் உட்பட பலரால் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா 
ஜெயராமுக்கும் வேதவல்லி என்ற சந்தியாவுக்கும் மகளாக கோமளவல்லி என்ற ஜெயலலிதா 24 பிப்ரவரி 1948 இல் மாண்டியாவில் பிறந்தார். இளம் வயதிலே தந்தை ஜெயராம் இறந்துவிட தாய் வேதவல்லி அரவணைப்பில் வளர்ந்தார். பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளி மற்றும் சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்துவிட்டு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க வாய்ப்பு வந்த போது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியதால் கல்லூரி படிப்பைக் கைவிட்டு ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதல்முறையாக ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் 28 படங்கள் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் 99 படங்கள் என மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்தார்.

உறவுகள் 

ஆரம்ப காலத்தில் ஜெயலலிதா, தாய் சந்தியா, அண்ணன் ஜெயக்குமார், அவரது பிள்ளைகள் தீபக், தீபா என்று குடும்பத்துடன் ஒன்றாக போயஸ் கார்டனில் வசித்தார்கள். சந்தியா காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறிவிட அதன்பின் ஜெயலலிதாவுக்கு சொந்த குடும்ப உறவுகள் கசந்ததும் பிற்கால சசிகலா குடும்ப உறவுகள் இனித்ததும் தான் நுண்ணரசியலின் ஆரம்ப பகுதியாகும். 

காவிரி தந்த கலைசெல்வி

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் எம்.ஜி.ஆருடன் பிணக்கு ஏற்பட்டு அவரை விட்டு ஜெயலலிதா விலகியதாக அல்லது விலக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஒரு கட்டத்தில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் அதிலிருந்து மீண்டு 1981 இல் மதுரையில் நடந்த ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டில் “காவிரி தந்த கலைசெல்வி” என்ற நடன நாடகத்தை ஆர்.எம்.வீரப்பன் சிபாரிசில் நடத்தினார். பின்னர் அதே ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதாவுக்கு எதிராக குத்துதே குடையுதே என்று புலம்பியது அரசியல் கதையாகும். 

“காவிரி தந்த கலைசெல்வி” நடனம் ஜெயலலிதாவை மீண்டும் எம்.ஜி.ஆருடன் பிணைத்தது. பிறகு 4 ஜூன் 1982 இல் அ.தி.மு.கவில் இணைந்து சத்துணவுத் திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் கொள்கை பரப்புச் செயலாளராகவும் ஆனார். இதனை தொடர்ந்து 24 மார்ச் 1984 இல் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். 

முதலமைச்சர் 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஜானகி தலைமையில் ஓர் அணியாகவும் ஜெயலலிதாவின் தலைமையில் ஓர் அணியாகவும் பிரிந்தது. 1989 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடத்திலும் ஜானகி தலைமையிலான அ.தி.மு.க அணி ஒரு இடத்திலும் வென்றது. 1989 சட்டமன்ற தேர்தல் வெற்றி காரணமாக தி.மு.க ஆட்சியை பிடித்தது. தமது படுதோல்வி காரணமாக ஜானகி அரசியலிலிருந்து விலகினார். 

பிறகு ஒருங்கிணைந்த அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா. ராஜிவ் காந்தி மரணத்தை தொடர்ந்து 1991 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். பிறகு தொடர்ந்து 2001, 2011, 2016 (5 டிசம்பர் 2016 வரை) சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பணி புரிந்தார்.

சச்சரவுகளும் வழக்குகளும் 

முதலமைச்சராகப் பணி புரிந்த காலத்தில் மகாமக விபத்து, வளர்ப்புமகன் திருமணம், வண்ணத் தொலைக்காட்சி வழக்கு, டான்சி நில வழக்கு, பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு, நிலக்கரி இறக்குமதி வழக்கு, டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, வருமான வரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

சொத்துக் குவிப்பு வழக்கு

பல்வேறு வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்றாலும் இறுதியாக சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. 1991–1996 பதவிக் காலத்தில் வருமானத்திற்கு மீறி சுமார் 66.65 கோடி சொத்துக்களை ஜெயலலிதா மற்றும் கூட்டாளிகள் சேர்த்தனர் என்றும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா 20 செப்டம்பர் 2014 அன்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் அல்ல என கூறி அவர்களை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி 11 மே 2015 அன்று தீர்ப்பளித்தார்.

சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்றும் நால்வரில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட அவருக்கு 100 கோடி அபராதமும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று 14 பிப்ரவரி 2017  அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அ.தி.மு.க கொண்டாட்டம் 

நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் குற்றவாளி என்றும் 100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரான ஜெயலலிதாவுக்கு இன்று 100 கோடி செலவில் நினைவு சின்னம், ஊரெங்கும் சிலை திறப்பு, கோவில் திறப்பு, ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம், ஜெயலலிதாவுக்கு தமிழர் குலச்சாமி பட்டம், ஆண்டுதோறும் ஜெயலலிதா பிறந்த 24 பிப்ரவரி அரசு விழா என்று கொண்டாடி வருகிறது அ.தி.மு.க. நரகாசுரன் அழிவை கொண்டாடும் பண்டிகை தீபாவளி என்றொரு கதை உண்டு அது போல ஒரு வேளை ஜெயலலிதா அழிவை அ.தி.மு.க கொண்டாட முடிவு செய்துள்ளது என்றே தோன்றுகிறது.

அமெரிக்காவும் இந்தியாவும் 

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்த ஆட்சியை அமெரிக்க - ஐரோப்ப ஊடகங்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், தொண்டு நிறுவனங்கள், ஒரு சில கார்பரேட் நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என்று ஒட்டுமொத்தமாக டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் லீலைகள் பற்றி மிக கடுமையாக எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்தது, கருத்தை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கே நம்பிக்கை நட்சத்திரமாக 46 வது ஜனாதிபதியாக ஜோ பிடென் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். 

இங்கோ பல இந்திய ஊடங்கங்கள், இந்திய நட்சத்திரங்கள், இந்திய நிறுவனங்கள் மோடி ஆட்சியின் லீலைகள் பற்றியோ குற்றவாளி ஜெயலலிதாவை அரசு பணத்தில் கொண்டாடுவது குறித்தோ வாய் திறக்கவில்லை, கருத்தை பதிவு செய்யவில்லை. நடவு நடும் விவசாயிகள் நடத்தும் அகிம்சை போராட்டத்தில் டெல்லியில் ஆணிகளை  நடும் கம்பிகளை சுற்றும் பா.ஜ.க அரசாங்கத்தை எதிர்த்து பிரபலங்கள் பேசவில்லை, குற்றவாளி ஜெயலலிதாவின் இமேஜ் கட்டிக் காக்கப்படுவதை பலரும் எதிர்க்கவில்லை. 
ஆனால் உங்களுக்கு நான் ஒன்றை உறுதியாக சொல்வேன் அமெரிக்க அரசாங்கம் டொனால்ட் டிரம்ப்பை கொண்டாடி விடாது, ஜெர்மனிய அரசாங்கம் ஹிட்லரை கொண்டாடி விடாது காரணம் அங்கே பிரபல ஊடகங்களும் பிரபல நட்சத்திரங்களும் சாமானிய மக்களும் கொண்டாட விடமாட்டார்கள் ஏனெனில் இந்தியாவை விட அங்கே மக்கள் நீதி கூடுதலாக இருக்கிறது. 

முடிவுரை 

இந்தியா மக்களால் இந்தியாவில் பிரபலமானவர்கள் சாமானிய மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதே சிறந்த நன்றி கடனாகும். அதனைவிடுத்து அரசாங்கம் கடைபிடிக்கும் பாசிச போக்கிற்கு துணை போவது பிரபலங்களுக்கு  அழகல்ல ஏனெனில் ஊடகங்கள் - நட்சத்திரங்கள் - நிறுவனங்கள் சாமானிய மக்களுக்கு ஆதரவாக நிற்பதே சாலச்சிறந்தது. இந்தியாவில் நடைபெறும்  பாசிசத்தை எதிர்த்து அந்நிய பிரபலங்கள் குரல் எழுப்பும் நிலையில் இந்திய பிரபலங்களும் அவர்களை பார்த்து மனம் வருந்தி திருந்த வேண்டும், மக்களுக்கு ஆதரவாக குரல் தர வேன்டும்.

விவரணைகள் 

Trump Is Better At Destroying Deals Than Making Them


Inside US Capitol At The Height Of The Siege


Joe Biden Defeated Donald Trump


Hollywood Supports Indian Farmers Protest


Largest Wedding Banquet Reception - Jayalalitha Foster Son Marriage


Most Wedding Guests - Jayalalitha Foster Son Marriage


சொத்துக் குவிப்பு வழக்கு


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - 1


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - 2


அ.தி.மு.க பிறந்த கதை


முப்பாடலும் ஜெயலலிதாவும்


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Wednesday, February 3, 2021

வித்தியாசமான அடக்க முறைகள்

வித்தியாசமான அடக்க முறைகள்
பிணத்தை எரிக்கவும் புதைக்கவும் இல்லாமல் "சிலர்" வித்தியாசமான முறையில் பிணத்தை அடக்கம் செய்வார்கள். அந்த "சிலர்" யாரெனில்,

1. பிலிப்பினோ மரபுகள் (Filipino Burial)

2. மடகாஸ்கர் ஃபமதிஹானா (Famadihana)

3. தென் கொரிய மணிகள் (South Korea Beads)

4. நோர்டிக் நீர் அடக்கம் (Nordic Water Burial)

5. திபெத்திய வான புதைகுழி (Tibetan Sky Burial)

6. ஜோரோஸ்ட்ரிய இறுதிச் சடங்கு (Zoroastrian Funeral)

7. கோமஞ்சே மேடை புதைகுழி (Comanche Platform Burial)

பிலிப்பினோ மரபுகள்

*டிங்குவியன் (Tinguian) மக்கள் இறந்தவருக்கு ஆடம்பரமான ஆடையை அணிவித்து சடலத்தை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து உதட்டில் சிகரெட்டை வைப்பார்கள். 

*பெங்குட் (Benguet) மக்கள் இறந்தவரின் கண்களை மூடி வீட்டின் நுழைவாயில் முன்னர் நாற்காலியில் உட்கார வைப்பார்கள்.

*செபுவானோ (Cebuano) மக்கள் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு சிவப்பு நிற ஆடையை அணிவித்து அக்குழந்தைகள் பேய்களைப் பார்க்கும் வாய்ப்பைக் குறைக்கிறார்கள். 

*சாகடா (Sagada) மக்கள் இறந்தவர் ஆத்மாக்களை சொர்க்கத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவர எண்ணி சவப்பெட்டிகள் குன்றில் தொங்கவிடப்படுகின்றன.

*கேவைட் (Cavite) மக்கள் மரணத்திற்கு முன் அந்நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வெற்று மரத்தில் இறந்தவரை செங்குத்தாக அடைக்கிறார்கள்.

*பிலிப்பைன்ஸ் பிராந்திய இறுதிச் சடங்குகளின் பன்முகத்தன்மையை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

மடகாஸ்கர் ஃபமதிஹானா 

*குடும்ப உறுப்பினர் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எலும்புகளைத் திருப்புவது (Turning Of The Bones) என்று அழைக்கப்படுகிற இச்சடங்கு நடத்தப்படுகிறது.

*ஒவ்வொரு ஒற்றைப்படை வருடமும் முடிந்தால் இந்த எழுச்சியூட்டும் இரண்டாம் அடக்க முறை நிகழ்வு நடைபெறுகிறது.

*மடகாஸ்கரின் மலைப்பகுதிகளில் உள்ள குடும்பங்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளைச் சுற்றி கூடுகின்றன. 

*சடலங்கள் கல்லறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு பழைய துணிகள் அகற்றப்பட்டு புதிய பட்டு ஆடைகளால் மாற்றப்படுகின்றன. 

*பின்னர் இறந்தவர்களின் பெயர்கள் புதிய துணியில் எழுதப்பட்டு சடலங்களை தலைக்கு மேல் சுமந்து இசைக்கு நடனமாடி கல்லறையைச் சுற்றிவிட்டு மீண்டும் கல்லறையில் வைக்கப்படுகின்றன.

*குடும்ப உறவினர்கள் சர்ச்சைகளைத் தீர்த்து ஒன்றிணைய இவ்விழாவை  பயன்படுத்தி கொள்கிறார்கள்.

*இறந்த நபர் வாழ்ந்த வாழ்க்கையை இசைத்து நடனமாடி கொண்டாடுவதில் நம்பிக்கையும் மகிழ்வும் கொள்கிறார்கள்.
தென் கொரிய மணிகள் 

*தென் கொரியர்கள் இறந்தவரின் அஸ்தியை மணிகளாக மாற்றுகின்றனர்.

*இந்த மணிகள் இளஞ்சிவப்பு அல்லது கருப்பு வண்ணங்களை கொண்டதாக உள்ளது.

*குவளைகளுக்குள் இருக்கும் மணிகள் பின்னர் வீட்டினுள் நடு அரங்கில் அலங்காரம் செய்து வைக்கப்படுகிறது.
நோர்டிக் நீர் அடக்கம்

*நோர்டிக் நாடுகளில் இறந்தவரைத் அடக்கம் செய்யும் சடங்கில் தண்ணீர் முக்கிய இடம் வகிக்கிறது.

*தொலைதூரப் பயணத்திற்கு பாதுகாப்பாக சென்று திரும்பிவர படகுகள் உதவியதால் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கும் படகுகள் பாதுகாப்பை உறுதி செய்திடும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

*கல்லறைகள் கப்பல்களை ஒத்ததாக கட்டப்பட்டு கப்பலின் வடிவத்தை கோடிட்டுக் காட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டன.

*உயர் பதவியில் இருந்த நோர்மன்களுக்கு (Vikings) ஒரு படி மேலே சென்று அவர்கள் உண்மையான படகுகளுடன் புதைக்கப்பட்டன.
திபெத்திய வான புதைகுழி

*ஒரு மலை உச்சியில் இறந்த உடல்கள் வைக்கப்படும்.

*விலங்குகள் குறிப்பாக கேரியன் பறவைகள் (Carrion Birds) அந்த இறந்த உடல்களை கொத்தி சாப்பிடும்.
ஜோரோஸ்ட்ரிய இறுதிச் சடங்கு

*டவர் ஆப் சைலன்ஸ் (Tower of Silence) என்ற வட்டமான உயர்த்தப்பட்ட கட்டமைப்பில் இறந்த உடல்கள் வைக்கப்படும்.

*கேரியன் பறவைகள் குறிப்பாக கழுகுகள் இறந்த உடல்களை கொத்தி சாப்பிடும்.
கோமஞ்சே மேடை புதைகுழி

*இறந்த உடலை போர்வையில் போர்த்தி குதிரையில் ஏற்றப்பட்டு பொருத்தமான புதைகுழியைத் தேடி சவாரி செய்வர்.

*பிறகு இறந்த உடலை குதிரையில் இருந்து கீழே இறக்கி உடலை கற்களால் மூடி அடக்கம் செய்து விட்டு சவாரி முகாமுக்கு திரும்புவர்.

*பிறகு துக்கம் கொண்டவர்கள் இறந்தவரின் உடைமைகள் அனைத்தையும் எரிப்பர்.

*முதன்மையான துக்கம் கொண்டவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்த தனது கைகளை வெட்டுவார்.

*கிறிஸ்தவ மிஷனரிகள் கோமஞ்சே மக்களிடம் இறந்தவர்களை சவப்பெட்டிகளில் புதைக்கும்படி வற்புறுத்தியதால் அதுவே இன்றைய நடைமுறை ஆயிற்று.
விவரணைகள் 

Filipino Burial



South Korean Beads


Nordic Water Burial


Tibetan Sky Burial


Zoroastrian Funeral


Comanche Platform Burial


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

தொ.ப என்கிற தொ.பரமசிவன்

தொ.ப என்கிற தொ.பரமசிவன் 

சுருக்கம் 
  1. முகவுரை
  2. கல்விப்பணி
  3. பண்பாடு
  4. அழகர் கோவில்
  5. அறியப்படாத தமிழகம்
  6. காலத்தின் தேவை தொ.ப
  7. முடிவுரை
  8. விவரணைகள்
முகவுரை

வரலாற்றியல், சமூகவியல், மானுடவியல், தொல்லியல், இலக்கியவியல், கலையியல் என்று பல துறைகளில் ஆய்வு செய்தவர் தொ.ப என்கிற தொ.பரமசிவன். பெரியாரிய அடிப்படையில் திராவிடத்திற்கும் நாட்டார் மரபிற்கும் உள்ள தொடர்பை திராவிடக் கருத்தியலோடு ஆய்வு செய்ததில் முன்னோடி ஆவார்.

கல்விப்பணி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950 இல்  பிறந்தார் தொ.பரமசிவன். தந்தை இளம் வயதிலேயே இறந்து விட தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். பொருளாதாரத்தில் இளங்கலை படிப்பை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் தமிழில் முதுகலை படிப்பை மதுரை பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்ட ஆய்வை மதுரைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய பிறகு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.

பண்பாடு

பண்பாடு என்றால் நாகரிகம், நாகரிகம் என்றால் வெளிப்பாடு அவ்வகையில் "பண்பாடு என்றால் வெளிப்பாடு” என்பதை நிறுவியவர். கூடி வாழ்தல், விருந்தினர் உபசரிப்பு, உதவும் மனப்பான்மை, முதியோரை மதித்தல், பெற்றோரை பேணுதல், கல்வியறிவு பெறுதல், அனைவரையும் அரவணைத்தல் போன்றவைகளை நாட்டார் பண்பாட்டு கூறுகளாகவும் மானம் காக்க பயன்படும் கோவணம் என்பதும் பண்பாடு தான் நாட்டார் தெய்வத்திற்கு படையலிடப்படும் கறி விருந்து என்பதும் பண்பாடு தான் என்பதை உரக்க கூறியவர்.
அழகர் கோவில்

புத்தங்கங்கள் துணையுடன் மேற்கொள்ளப்படும் மேசை ஆய்வுக்கு மாற்றாக அக்காலத்திலே கள ஆய்வுக்கு அடிகோலிட்டவர் தொ.ப. அவ்வகையில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட அழகர் கோவில் நூலானது ஆய்வு நூல் என்பதையும் தாண்டி ஒரு வரலாற்று ஆவண நூலாகும். 1976 - 1979 ஆகிய மூன்று ஆண்டுகளில் தொ.ப நிகழ்த்திய கள ஆய்வின் விளைவாக எழுதப்பட்ட அழகர் கோவில் நூல் நான்கு பாகங்களை உள்ளடக்கியது.

அழகர் கோவில் அமைவிடம், அழகர் கோவில் தோற்ற வரலாறு, அழகர் கோவிலுக்கும் பிற வைணவ கோவிலுக்கும் உள்ள வேறுபாடுகள், வெவ்வேறு ஆட்சியின் கீழ் அழகர் கோவில் நிர்வாகம், இலக்கிய குறிப்புகள், சமூகத் தொடர்புகள், சித்திரை திருவிழா, மரபுக் கதைகள், வர்ணிப்புப் பாடல்கள், நாட்டுப்புற சங்கதிகள், கோவில் பணியாளர்கள், பதினெட்டாம்படிக் கருப்பசாமி, பழமுதிர்சோலை, வாலி வழிபாடு, கல்வெட்டுக் குறிப்புகள், பட்டயங்கள், தொழில் அட்டவணைகள், வேடமிட்டு வழிபடும் அடியவர்கள், வினாப் பட்டிக்கு விடையளித்தோர் பட்டியல், சித்திரைத் திருவிழாவுக்கு மாட்டுவண்டி கட்டி வந்த அடியவர்களின் ஊர்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், துணை நூற்பட்டியல், விவரணைகள் உட்பட பல்வேறு செய்திகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூதத்தாழ்வார், இளம்பெருவழுதியார் பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தின் அடிப்படையில் இக்கோவிலானது பௌத்தக் கோயிலாக இருந்து வைணவக் கோவிலாக மாறிருக்க வேண்டும் என்று மயிலை சீனி வேங்கடசாமியின் கூற்றை ஆமோதிக்கிறார். நாட்டுப்புற மக்களாகிய கள்ளர், இடையர், வலையர், பள்ளர், பறையர் ஆகியோர் அழகர் கோவிலோடு இன்றளவும் கொண்ட உறவு முறைகள் குறித்து மிக நேர்த்தியாக விவரித்துள்ளார். இப்படி அழகர் கோவில் குறித்த தொன்ம வரலாறுகளை, வழிபாட்டு மரபுகளை, சமூக நடைமுறைகளை அறிந்திட “அழகர் கோவில்” நூல் வாசிப்பு முக்கிய இடம் வகிக்கிறது.

அறியப்படாத தமிழகம்

தொ.பவின் ஆராய்ச்சி தனித்துவத்தை அறிந்திட “அறியப்படாத தமிழகம்” நூல் முக்கிய இடம் வகிக்கும். நாம் அறிந்த தமிழ்நாட்டின் அறியாத பண்பாட்டு வரலாற்று பக்கங்களை படம் பிடித்த நூல் “அறியப்படாத தமிழகம்”. சங்க காலம், பௌத்தம் , சமணம், பக்தி இயக்கம், இசுலாமியம், கிருத்துவம் என பல்வேறு நிலைகளில் தமிழ் மக்களின் வாழ்வியலை ஆராயும் இந்நூலானது "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என நீரின் மேன்மை குறித்த வாக்கியத்துடன் தொடங்கி “கறுப்பு - சிவப்பு” குறித்த அழகுணர்ச்சி வரை பண்பாட்டு அசைவுகள் தளத்தில் இருந்து ஒரு பொருட்டாக பலரும் கருதாத செய்திகளை எடுத்துக் கொண்டு அதில் பண்பாடும் வரலாறும் எப்படி பொதிந்துள்ளது என விளக்குகிறது. எடுத்துக்காட்டாக உலகின் முதல் ரசாயனமாக அறியப்படும் உப்பில் இருந்தே உணவின் பல சுவைகள் எழுந்துள்ளது, சம்பாவும் அளமும் (உப்பும்) சேர்த்து கொடுக்கப்பட்டதே சம்பளம் என்றானது, குளிர்ப்பதற்கு பயன்படுத்தும் நீர் குளம் என்றானது, ஊர் மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் நீர் ஊருணி என்றானது, ஏர் தொழிலுக்கு பயன்படுத்தும் நீர் ஏரி என்றானது, பல்லாங்குழி விளையாட்டில் உள்ள விதிமுறைகள் வாழ்க்கையின் நெறிமுறைகளை விளக்குகிறது, தமிழ்நாட்டில் அந்நியர்களின் ஆட்சிக்கும் ஆரியர்களின் ஆதிக்கத்திற்கும் பிறகு நமது பண்பாடு அதிகளவில் உருமாறியது உட்பட பல்வேறு தகவல்களை அலசுகிறது “அறியப்படாத தமிழகம்” நூல்.

காலத்தின் தேவை தொ.ப

தொ.ப புத்தகங்களை படித்தால் "மத சகிப்புத்தன்மை என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தை" என்பதை அறியலாம் காரணம் பல நூற்றாண்டுகளாக அனைவரையும் அரவணைத்து செல்லும் சமூக பண்பாட்டையும் சமூக மரபையும் கொண்ட நாட்டார் மக்களுக்கு “மத சகிப்புத்தன்மை” என்பது ஆரியர்கள் உருவாக்கிய கவர்ச்சி சொல்லாகும். ஏனெனில் யாதும் ஊரே யாவரும் கேளிர் (எல்லா ஊரும் நமது ஊரே எல்லா மனிதரும் நமது உறவே) என்று எடுத்துரைத்த மண் நமது திராவிட மண்.

அந்நிய மதங்கள் என்று சிலரால் வெறுக்கப்படும் கிறிஸ்துவம், இஸ்லாம் மதங்கள் இந்தியாவுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னரே கூட இந்தியா ஒரு மதத்தின் முகமாக இருந்ததில்லை. ஆரியர்கள் வற்புறுத்தும் இந்துத்துவா இந்தியாவின் ஆதி மத கோட்பாடாக இருக்கவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும். இந்துத்துவா என்ற ஒற்றை சங்கிலியில் மக்களை இறுக்கிட நினைக்கும் இவ்வேளையில் தொ.ப போன்றவர்களின் ஆய்வுகளை படித்தறிவது அவசியமாகிறது இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு தமிழனின் கடமையாகிறது அப்படி செய்தால் தான் நமது தலைமுறை அடுத்த தொ.பவை உருவாக்க இயலும் வருங்காலத்தை தற்காத்திட இயலும்.

முடிவுரை

உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனின்றி 24 டிசம்பர் 2020 அன்று பெரியார் மறைவுற்ற அதே நாளில் 70 வயதில் பெரியார்வாதியான தொ.ப காலமானார். இவருக்கு மனைவி பாப்பா என்ற இசக்கியம்மாள், மகன் மாசான மணி, மகள் விஜயலெட்சுமி, பேரக்குழந்தைகள் ஆகியோர் உள்ளனர்.

கொண்டாடப்பட வேண்டிய மனிதர்

ஆனால் காலத்தின் கோலங்கள்

சமூக மரபு துரித உணவானது

வாசிப்பு மரபு குறைவானது

சிந்தனை மரபு சாகக்கிடக்குது

நமது மரபை பேச தவறினால்

நமது வரலாறை பேச தவறினால்

நமது பண்பாட்டை பேச தவறினால்

நாம் யார்? அவாள் யார்? என்பதை உணர தவறிவிடுவோம்.

விவரணைகள்

யார் இந்த பேராசிரியர் தொ.பரமசிவன்?


தமிழர் பண்பாட்டை ஆராய்ந்த பேராசான்


பெரியாரும் தமிழ்த்தேசியமும்


அதிகாரத்தால் மறைக்கப்பட்ட தமிழர்களின் பண்பாட்டை மீட்டவர்


அதிகாரத்துக்கு எதிரானவர் பெரியார்


மானுடவியலாளர் தொ.பரமசிவன்


நம்மாழ்வார் அய்யா குறித்து தொ.பரமசிவன்


திருநெல்வேலியின் மூல வளங்கள் அழிந்தன


சமணம் குறித்த பார்வை 


சாதியும் சமூகமும்


பெரியாரும் பேசுவார் பெரியாழ்வாரும் பேசுவார்


சோறும் நீரும் விற்பனைக்கு அல்ல


பயணங்கள்


பண்பாட்டு அசைவுகள்


மஞ்சள் மகிமை


தொ.பரமசிவனின் படைப்புகள்


தொ.பரமசிவனின் புத்தங்கங்கள் விற்பனைத்தளம் 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Tuesday, February 2, 2021

முருகன் பற்றிய பார்வை

முருகன் பற்றிய பார்வை

சுருக்கம் 
  1. முருகன் வணக்க மரபு
  2. ஆற்றுப்படை வீடு
  3. முருகன் - வள்ளி
  4. வெறியாடல்
  5. தென் இந்திய - வட இந்திய வேறுபாடு
  6. விநாயகர் வழிபாடு
  7. முடிவுரை
  8. விவரணைகள் 
முருகன் வணக்க மரபு

வேல் ஆயுதம் கொண்டு உணவு தேடிய சமூகத்தில் வேடன் என்றவன் உணவு உற்பத்தி செய்யும் சமூகத்தில் வேலன் என்றானான். சேயோன் மேய மைவரை உலகமும் என தொல்காப்பியம் குறிஞ்சி நிலத்தை பற்றி குறிப்பிடுகிறது. குறிஞ்சி நிலம் என்றால் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். மலைகளுக்கு உரிய வணக்க மரபாக சேயோன் என்ற முருகன் இருக்கின்றான். முருகு என்றால் அழகு / இளமை எனப்படும். மேலும் அழகு / இளமை என்றால் நிறத்தை குறிப்பதல்ல இயற்கையை குறிப்பதாகும். முருகு + அன் = ஆண்பால் பெயர் விகுதியால் முருகன் ஆகிற்று.
ஆற்றுப்படை வீடு

நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை நூலின்படி 4 ஆற்றுப்படை வீடுகளும் 2 பொதுவான இடங்களும் தான் முருகனின் தளங்கள். ஆற்றுப்படை என்றால் ஆற்றுப்படுத்துதல் / வழிப்படுத்துதல் எனப்படும். மன்னனிடம் சென்று ஆற்றுப்படுத்தி கொள்வது போர்ப்படை வீடாகும் அதுவே முருகனிடம் சென்று ஆற்றுப்படுத்தி கொள்வது முருகாற்றுப்படை வீடாகும். நக்கீரர் கூற்றின்படி முருகனின் அருளை பெற்று பக்தர்கள் தங்களது கவலைகளை ஆற்றுப்படுத்தி கொள்ளும் இடம் திருமுருகாற்றுப்படை (திரு + முருகு + ஆற்று + படை) ஆகும். நாளடைவில் இந்த ஆற்றுப்படை வீடு ஆறுபடை வீடு என தவறாக திரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலே முருகனுக்கு பெருங்கோவில்கள் கட்டப்பட்டன.

திருப்பரங்‌ குன்றமர்‌ சேயைம்‌ போற்றுவாம்‌ 

# 1. திருப்பரங்குன்றம் = மதுரை = மலை கீழ்

சீரலை வாய்வரு சேயைப் போற்றுவோம்

2. திருச்செந்தூர் = தூத்துக்குடி = கடல்

ஆவினன் குடிவரும் அமலற் போற்றுவோம் 

3. திருவாவினன்குடி = திண்டுக்கல் = மலை கீழ்

ஏரகத் தறுமுகன் அடிகள் ஏத்துவோம்

4. திருவேரகம் = நாகர்கோயில் = மலை கீழ்

குன்றுதோ றாடிய குமரற் போற்றுவோம் 

# 5. குன்று தோறாடல் = பல்வேறு குன்றுகள் = பொதுவான இடங்கள்

பழமுதிற் சோலையம் பகவற் போற்றுவோம்

# 6. பழமுதிர் சோலை = பல்வேறு சோலைகள் = பொதுவான இடங்கள்

முருகன் - வள்ளி

முருகன் - வள்ளி தான் தமிழர்களின் நம்பிக்கை அதாவது வள்ளி என்ற குறத்திப் பெண் முருகனை மணந்து கொண்ட கதை. தாழ்த்தப்பட்ட பெண்ணாக கருதப்பட்ட வள்ளியை வணங்க ஆரியர்களுக்கு மனம் வரவில்லை. இதனால் அரசன் இந்திரன் மகள் தெய்வானையை முருகனுடன் கதைத்து இரண்டு பெண்டாட்டிக்கு கணவனாக முருகனை மாற்றிவிட்டனர் ஆரியர்கள்.

வெறியாடல்

ஆண்மகன் மேல் காதல் வயப்படும் குறிஞ்சிப் பெண்ணின் உடலில் சில மாற்றங்கள் (உடல் இளைப்பது, கவலையின்றி இருப்பது, வெறித்து பார்ப்பது) உண்டாகின்றன. மகளின் மாற்றங்களுக்குரிய உண்மை காரணத்தை அறியாமல் மகள் முருகனால் தீண்டப்பட்டாள் என்று முடிவு செய்து முருகனுக்குச் சாந்தி செய்யும் எண்ணத்தோடு முருகன் பூசாரியான வேலனை அழைக்கிறார் தாய். வேலனின் வெறியாடல் மூலம் மகளிடம் அணங்கிய முருகனின் சினத்தை தணித்து மகளை நலம் பெற வைப்பதே தாயின் நோக்கமாகும். சங்க காலத்தில் வெறியாடல் ஓர் முக்கியமான விழா என்பது குறிப்பிடத்தக்கது.

தென் இந்திய - வட இந்திய வேறுபாடு

தென் இந்திய முருகன் வட இந்தியாவில் கார்த்திகேயன் என்ற பிரம்மச்சாரியாக வணங்கப்படுகிறான். தென் இந்திய பிரம்மச்சாரி விநாயகர் வட இந்திய கணேஷ் ஆக சித்தி புத்தி என இரு பெண்களுக்கு கணவனாக வணங்கப்படுகிறான். தமிழ்நாட்டில் அண்ணன் விநாயகர் தம்பி முருகன் அதே சமயம் வட இந்தியாவில் அண்ணன் கார்த்திகேயன் தம்பி விநாயகர். இதற்கிடையில் வட இந்திய பெண்கள் தமிழ்நாட்டில் உள்ள சைவ வைணவ தளங்களுக்கு பெருவாரியாக செல்வதுண்டு குறிப்பாக மீனாட்சி அம்மன், ஸ்ரீ ரங்கம், இராமேஸ்வரம் போன்ற கோவில்களுக்கு. ஆனால் அப்பெண்கள் முருகனை மட்டும் வணங்க மாட்டார்கள் காரணம் பிரம்மச்சாரி கார்த்திகேயன் (நம்மூரில் முருகன்) இவர்களை ஆட்கொள்வான் என்ற மூடநம்பிக்கை.

மகாபாரதம் என்ற புராண கதையில் 16 வது காண்டம் பகுதியில் முருகனை ஸ்கந்தன் என்று ஆரியர்கள் வர்ணித்துள்ளனர். ஆனால் முருகனும் வேலும் தமிழர்களின் வாழ்வியல் உடன் தொடர்புடையது அதற்கு ஆரியர்கள் கூறும் புராண வரலாறு எல்லாம் கிடையாது. கொற்றவையை பார்வதி ஆக்கி "சிவன் - பார்வதி" தம்பதியினரின் மகன் முருகன் என்பதும் ஆரியர்களின் புராண புரட்டு தான். மொத்தத்தில் தென் இந்திய - வட இந்திய இந்து வழிபாட்டு முறைகள் பலவும் ஒன்று போல அமையவில்லை. ஆனால் நாம் அனைவரும் "இந்து என்ற ஒரு மத சிந்தனையை வற்புறுத்தி" ஆரியர்கள் பல விடயங்களை ஜோடித்து மாய ஆன்மீக உலகை உருவாக்கி உள்ளார்கள்.

விநாயகர் வழிபாடு
சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்ததில்லை. பௌத்தம், ஜைனம் சமய வீழ்ச்சிக்கு மற்றும் பக்தி இயக்க எழுச்சிக்கு இடையில் தான் தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு நுழைந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் தேவாரப் பாடல்களில் தான் விநாயகர் பற்றிய குறிப்பு ஆரம்பமாகியுள்ளது. இவ்வகையில் பேரரசு காலத்தில் பிராமணர்களின் எழுச்சிக்கு பிறகு 6 - 7ஆம் நூற்றாண்டில் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவியிருக்கக்கூடும்.

முடிவுரை

வேலுடன் வீற்றிருக்கும் தமிழ்க்கடவுள் முருகனை ஆரியர்கள் ஸ்கந்தன், சுப்பிரமண்யன் என்று மாற்றினாலும் முருகன் நேற்றும் இன்றும் நாளையும் என்றும் எளிய மக்களின் இறை நம்பிக்கையாக வீற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.

விவரணைகள் 

முருகனின் வேல் 


வெறியாடல் விளக்கம் 


விநாயகர்  அரசியலுக்கு வந்த வரலாறு


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பங்கு வர்த்தக மோசடிகள்

பங்கு வர்த்தக மோசடிகள்

சுருக்கம் 
  1. முகவுரை
  2. எடுத்துக்காட்டு
  3. கவனத்துடன் அணுகவும் 
  4. பெரும் பொருளியல் நிலைத் தேக்கம்
  5. விவரணைகள் 
முகவுரை 

பங்கு வர்த்தகம் செய்பவர்கள் பங்கு விளையாட்டை எவ்விடத்தில் "நிறுத்த" வேண்டும் என்பதை அறிந்து செயல்பட முற்பட வேண்டும் இருப்பினும் முகம் தெரியாத பல நபர்களின் வலைப்பின்னலில் ஒருங்கிணைந்த இக்கூட்டு விளையாட்டில் "நிறுத்த இயலாது" என்பது உண்மை தான். இதனால் பங்குகளின் விலை தொடர்ந்து செயற்கையாக ஏறவும் இறங்கவும் நேரிட்டால் தேவையான பண கையிருப்பு இல்லாத முதலீட்டாளர்கள் கதை சோகத்தில் தான் முடியும்.

எடுத்துக்காட்டு 

1. ஒரு நிறுவனத்தின் பங்கு வீக்கத்தை விட அதன் விலையை செயற்கையாக ஏற்றி கவிழ்ப்பது.

# Stocks Price Manipulation

Example = GameStop, Enron, Sino - Forest 

2. பல முதலீட்டாளர்களை ஒரே வலைப்பின்னலில் வைத்துக் கொண்டு ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வைத்து அந்நிறுவனத்தையே கைப்பற்றுவது.

# Stocks Purchase Through Single Network

Example = Essar Bought Tamil Nadu Mercantile Bank

3. முதலீட்டாளர்கள் பணத்தை அதிகளவில் முதலீடு செய்ய வேண்டி ஒரு நிறுவனத்தின் முதலாளி போலியாக நிகர லாபத்தை கூடுதலாக காட்டி தாக்கல் செய்வது.

# Company Accounts Manipulation

Example = Satyam Scandal 

4. ஒரு நிறுவனமே புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க பங்கு சந்தையில் பரபரப்பாக தகவல்களை கசியவிடுவது.

# Company Management Rumours

Example = Satyam & Maytas Merging

5. நிறுவன பங்குகளை லாபத்துடன் விற்று முதலாளி வெளியேறினாலும் முதலீட்டாளர்கள் ரிஸ்க் கையெழுத்து போட்டு பங்குகளை வாங்குவதால் புதிய நிறுவன முதலாளி எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழல்.

# Sales Of Company

Example = Merging Of Companies Have Pros & Cons Based On Purchaser Management

6. ஒரு நிறுவனத்தின் நிதி திறனை விட தன் சொந்த தேவைகளுக்காக வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு கூடுதல் கடன்களை முதலாளி பெற்றுக் கொண்டு ஒரு கட்டத்தில் நிறுவனத்தையே திவால் ஆக்குவது.

# Receiving Debts Greater Than The Net Worth

Example = Vijaya Mallya Bankruptcy (Kingfisher Airlines - Air Deccan Acquisition Failure Model)

7. வெளிப்படைத்தன்மை இல்லாமல் வெறும் தாள்களில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி அதற்கு பணத்தை முதலீடு செய்வது.

# Tax Havens

Example = Panama Papers 

கவனத்துடன் அணுகவும் 

நிதி மோசடிகள் அனைத்தும் ஒரே கோட்டில் இருப்பதாக தோன்றும் ஆனால் நுட்பமான முறையில் அவையெல்லாம் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டு இருப்பதை கூர்ந்து கவனித்தால் அறியலாம். நிதி மோசடிகள் பணத்தை மட்டுமல்ல நம்பிக்கையையும் முதலாக கொண்டு ஏமாற்றும் செயலாகும். எனவே பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவோர் தக்க கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி இல்லையெனிலும் படுதோல்வியை தவிர்த்து கொள்ளலாம்.

பெரும் பொருளியல் நிலைத் தேக்கம்

2008 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பங்கு சந்தை, வங்கி, உற்பத்தி, வீட்டுச் சந்தை, காப்பீடு உட்பட பல்வேறு துறைகளும் தடுமாறி பெரும் பொருளியல் நிலைத் தேக்கமாக மாறியது. இப்பொருளாதார தேக்கத்தில் அன்றைய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் துரித நடவடிக்கையால் இந்தியா தப்பித்தது நினைவுகூறத்தக்கது.

2008 இல் அமெரிக்கா தன்னுடைய பொருளாதார மந்தநிலையை உணர லேமன் பிரதர்ஸ் என்ற நிறுவனத்தின் சரிவு தான் ஆரம்பப் புள்ளி. இதன் பிறகு தான் பொருளாதார மந்தநிலை உலகம் முழுவதும் காட்டுத்தீயாக பரவி பெரும் பொருளியல் நிலைத் தேக்கமாகியது.

# Lehman Brother's = Largest Bankruptcy Filed In American History #

விவரணைகள் 

Ponzi And Pyramid Schemes


TMB And Essar Ownership


Satyam Scandal


Enron Scandal


Game Stop Scandal


Panama Papers


2008 Financial Crisis

https://www.youtube.com/watch?v=GPOv72Awo68

Lehman Brothers Collapse

https://www.youtube.com/watch?v=ByE67TJKwzM

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

ஐயப்பனும் மதுரையும்

ஐயப்பனும் மதுரையும்
சுருக்கம் 
  1. மதுரை பாண்டியர்கள் ஆட்சி
  2. பந்தளம் அரசு
  3. திருவாங்கூர் ராஜ்யம்
  4. பூஞ்சார் அரசு
  5. ஐயப்பன் கோவில் கதை
  6. ஐயப்பன் பிறந்த கதை
  7. ஐயனாரும் ஐயப்பனும்
  8. துணுக்கு செய்தி 
  9. விவரணைகள்
மதுரை பாண்டியர்கள் ஆட்சி

சங்க கால பாண்டியர்களை தொடர்ந்து களப்பிரர்கள் பாண்டிய நாட்டை கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு ஆண்டனர். பின்னர் களப்பிரர்கள் வீழ்ந்து கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.10 ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலப் பாண்டியர்கள் ஆண்டனர். இடைக்காலப் பாண்டியரான வீரகேசரி பாண்டியரின் மரணத்திற்கு பின் இடைக்காலப் பாண்டியர்கள் வீழ்ந்து கி.பி. 10 ஆம் முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை மதுரையில் சோழர்களின் ஆதிக்கம் இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் சோழர்களிடம் இருந்து மீண்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை பிற்காலப் பாண்டியர்கள் ஆண்டனர். கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தென்காசி பாண்டியர்கள் ஆண்டனர்.
பந்தளம் அரசு

பாண்டிய நாட்டில் ஆட்சி குழப்பம் நிலவிய போது பாண்டிய அரச குடும்ப உறுப்பினர்கள் சிலர் ராஜ ராஜசேகர வர்மன் தலைமையில் கேரளாவுக்கு 903 இல் முதல் குழுவாக இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்தவர்கள் கொல்லம் பகுதியை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த வேனாட் மன்னரின் உதவியை நாடி கொன்னியின் அடர்ந்த வனப்பகுதிகளில் குடியேறினர். பின்னர் வேனாட் மன்னரின் படையில் ஒரு சிறிய இராணுவப் படை பிரிவினை பெற்று 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிற்றரசாக பந்தளம் அரசை கொன்னி பகுதியில் 903 இல் நிறுவினர்.

பந்தளம் அரச குடும்பத்தினர் தங்கள் அன்றாட வழிபாடுகளுக்காக கொன்னியில் சிவனுக்கு ஸ்ரீ மஹாதேவர் கோவில் ஆலயம் கட்டினர். கேரள திருவாங்கூர் பகுதியை சோழர்கள் தொடர்ந்து தாக்கியதால் 1194 இல் கொன்னியை விட்டு வெளியேறி பந்தளத்தில் குடியேறினர். பந்தள அரசானது கொன்னி, ஆரியங்காவு, குளத்துப்புழை, அச்சன்கோவில், சபரிமலை, தென்காசியில் சில மலைக்காட்டுப் பகுதிகளை உள்ளடக்கி ஆண்டு வந்தது. போர்த்துகீசியத்துக்கு எதிரான குளச்சல் போரில் திருவாங்கூர் ராஜ்யத்திற்கு ஆதரவாக பந்தள அரசும் போரில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

திருவாங்கூர் ராஜ்யம்

1729 இல் வேனாட் மன்னர் மார்த்தாண்ட வர்மா வேனாட் அரச அமைப்பை புதுப்பித்து தென்னிந்தியாவில் பலம் பொருந்திய திருவாங்கூர் ராஜ்யத்தை ஸ்தாபித்தார். திருவாங்கூர் ராஜ்ய தலைநகராக முதலில் பத்மநாபபுரம் (1729 - 1795) பின்னர் திருவனந்தபுரம் (1795 - 1945) இயங்கியது. 1789 இல் திப்பு சுல்தானும் அவரது படைகளும் திருவாங்கூர் ராஜ்ய பகுதியில் நடத்திய பேரழிவுகரமான தாக்குதலுக்கு போர் நஷ்ட ஈட்டு தொகை செலுத்துவதற்கு பந்தள அரசரிடம் ரூ.2,20,000 திருவாங்கூர் ராஜ்யத்தின் மன்னர் கேட்டார். சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களிடம் வரி வசூலித்து போர் ஈட்டுத் தொகையை பந்தள அரசர் கட்டினார்.
திருவாங்கூர் மீது திப்பு சுல்தான் தாக்கிய காலகட்டத்திற்கு பிறகு பந்தளம் அரசர் தனது அதிகாரங்கள் அனைத்தையும் திருவாங்கூர் மன்னர் கார்த்திகா திருனல் ராம வர்மாவுக்கு மாற்றி 1820 இல் திருவாங்கூர் ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டு திருவாங்கூர் மன்னரின் கீழ் வாழும் ஒரு தலைவரின் நிலையை ஏற்க முடிவு செய்தார். அதனை தொடர்ந்து 1820 முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகத்தை திருவாங்கூர் ராஜ்யம் கவனித்து வந்தது. அப்போது திருவாங்கூர் ராஜ்யம் பந்தளம் அரச குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கியது. இப்போது சபரிமலை கோவிலின் நிர்வாகம் கேரள அரசின் தேவஸ்தான குழுவிடம் உள்ளது.

பூஞ்சார் அரசு

பாண்டிய நாட்டில் ஆட்சி குழப்பம் நிலவிய போது பாண்டிய அரச குடும்ப உறுப்பினர்கள் சிலர் மானவிக்ரம குலசேகர பெருமாள் தலைமையில் 1160 இல் கேரளாவுக்கு இரண்டாவது குழுவாக இடம்பெயர்ந்தனர். இவர்கள் கோட்டயம் பகுதியில் பூஞ்சார் அரசை (1160 - 1947) நிறுவினர். திருவாங்கூர் பகுதியில் இருந்த திண்டுக்கல், கம்பம், போடிநாயக்கனூர், இடுக்கி, பீர்மேடு மற்றும் கண்ணன் தேவன் மலைக் குன்று போன்ற பகுதிகளை ஆண்டனர்.

ஐயப்பன் கோவில் கதை

முதலாம் பந்தள அரசர் ராஜ ராஜசேகர வர்மன் வேட்டையாட வனப்பகுதிக்குச் சென்று போது பம்பை ஆற்றங்கரையில் ஒரு குழந்தையை கண்டெடுத்து பந்தளம் அரண்மனைக்கு கொண்டு வந்தார். குழந்தைக்கு மணிகண்டன் எனப் பெயரிட்டு குருகுல கல்வியில் சேர்த்துவிட்டு வளர்த்து வந்தார். குருகுல கல்வியை முடித்த மணிகண்டனுக்கு இளவரசர் பட்டத்தை சூட்ட முடிவுசெய்தார் பந்தள அரசர். 

அரசரின் சொந்த மகன் ஊனமுற்று கடமைகளைச் செய்வதற்கான திறனைக் கொண்டிருக்கவில்லை என்பதால் பிற்காலத்தில் நிழல் அரசனாக தாமே வலம் வரவுள்ள வாய்ப்பை எண்ணி அரசவை மந்திரி தீய எண்ணத்துடன் வளர்ப்பு மகன் இளவரசன் ஆவதை விட சொந்த மகன் இளவரசன் ஆவதே சிறந்தது என்று அரசரின் மனைவியிடம் தெரிவித்தார். தனது சொந்த மகனே அரசனாக வேண்டும் என எண்ணி அரசரின் மனைவியும் அரசவை மந்திரியின் உள்ளடி திட்டத்தை அறியாமல் அவருடன் இணைந்து மணிகண்டன் முடி சூடாமல் இருக்க திட்டம் தீட்டினார். இத்திட்டத்தின்படி ராணிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் வலி நீங்கிட மணிகண்டன் புலிப் பால் கொண்டு வரவும் ஆணையிடப்பட்டது.
காட்டிற்கு புலிப் பால் தேடிச் சென்ற மணிகண்டன் காட்டில் மகிஷி எனும் அரக்கியைக் கொன்று புலிகள் மற்றும் அதன் குட்டிகளுடன் அரண்மனை நோக்கி வந்தான். புலியுடன் சவாரி செய்து மணிகண்டன் வந்த காட்சியை கண்டு குடும்பத்தினரும், மக்களும் மணிகண்டனை என் ஐயனே, என் அப்பனே எனத் துதித்தனர். இதனால் மணிகண்டனுக்கு ஐயப்பன் எனப் பெயர் வந்தது. பின்னர் அரச வாழ்வையும் குடும்ப வாழ்வையும் துறந்த ஐயப்பன் பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் அமர்ந்த இடமே சபரிமலை என்றும் அதனை கோவிலாக வடிவமைத்தது பந்தளம் அரசர் என்று கருதப்படுகிறது.

ஐயப்பன் பிறந்த கதை

அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கை மகிசீ. மகிசாசுரனின் வதத்திற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்து பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். மகிசீ தவத்தால் இசைந்த பிரம்மா சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என வரம் அளித்தார்.

பாற்கடல் அமுதத்தை கடைந்து தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது ஆழ்ந்த யோகத்தில் இருந்த சிவனால் மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. தனது ஆழ்ந்த யோகம் களைந்த பின் திருவிளையாடலை அறிந்த சிவன் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். பிறகு சிவனுக்காக விஷ்ணு மீண்டும் மோகினியாக அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் "இயற்கைக்கு புறமாக" ஒன்று சேர்ந்ததால் பிறந்தவரே ஐயப்பன். இது அறிவியலுக்கு புறம்பான புராணக் கதை என்பது திண்ணம்.

ஐயனாரும் ஐயப்பனும்

தமிழ் நாட்டின் ஐயனார் வழிபாடு கேரளாவில் ஐயப்பன் வழிபாடானது. கேரள ஐயப்பனை பக்தர்கள் சாஸ்தா எனவும் அழைக்கின்றனர். அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர் என பொருள்படும் சாஸ்தா என்ற பெயர் புத்தருக்குரியது என்பது அமரகோசம், நாமலிங்கானு சாசனம் முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியலாம். புத்தருக்கு சாக்கிய வம்சத்து முனிவர் (சாக்கிய முனி) என்ற பெயரும் உண்டு. ஜைன சமயத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரரில் இருபதாவது தீர்த்தங்கரர் முனீஸ்வரநாதர் ஆவார். ஆசீவக கோட்பாட்டின் படி ஆண் நாடியா பெண் நாடியா என பகுத்தறிய இயலாத நிலையான ஐய நிலையினை கைவரப் பெற்றவர்களே ஐயன் (சாத்தன்) என்றும் ஐயனார் (சாத்தனார்) என்றும் வழங்கப் பெற்றது. ஐயம், ஐயா, ஐயர் மற்றும் ஐயங்கார் சொற்கள் ஆசீவக பண்பாட்டில் இருந்து தோன்றியவை.
சாஸ்தா என்ற வடமொழியின் திரிபாக சாத்தன் அல்லது சாத்தனார் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராக பண்டைய காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. சாத்தனாருக்கு ஐயப்பன் என்ற பெயரும் வழங்கப்படுகிறது ஏனெனில் சாஸ்தா என்ற வடமொழியின் நேரான தமிழ்ச்சொல் ஐயன் அல்லது ஐயனார் என்பதாகும். ஐயன் என்றால் மூத்தோன், உயர்ந்தோன், குரு, ஆசான் என பொருள்படும். பண்டைய தமிழ் நாட்டிலிருந்த பௌத்த மதத்தினர் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் கொண்டிருந்தனர் என்பது சங்க கால நூல்களின் வாயிலாக தெரிய வருகின்றது. பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த சமயத்தை சேர்ந்த சாத்தனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சங்க கால புலவர்களில் சிலர் சாத்தனார் பெயரை கொண்டதன் அடிப்படையில் அவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் ஆசீவகம், பௌத்தம், சமணம் அழிந்த பின்னர் அதன் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் உள்வாங்கி கொண்டு வைதீக வைணவம் புத்தரைத் விஷ்ணுவின் ஓர் அவதாரமாக்கியது, வைதீக சைவம் புத்தரான சாத்தனாரை விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து சாத்தனாரைத் தமது தெய்வ பிரிவில் ஒன்றாக்கியது. பௌத்த துறவியான தாராதேவியை திரௌபதி அம்மன், பகவதி அம்மன், சரஸ்வதி அம்மன் என்று மாற்றினர்.

விஷ்ணு கோவில்கள் வரதராசர், திருவரங்கர், வெங்கடேசர் என்று வெவ்வேறு பெயருடனும் சிவன் கோவில்கள் கபாலீஸ்வரர், தியாகராசர், சொக்கலிங்கர் என்று வெவ்வேறு பெயருடனும் வழங்கப்படுவது போல புத்தரின் சாஸ்தா கோவில்கள் சாத்தனார், ஐயனார், முனீஸ்வரர், தருமராசா என்று வெவ்வேறு பெயருடன் கிராம இந்து தேவதை கோவில்கள் என்னும் தாழ்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது இந்து மதம்.

துணுக்கு செய்தி

ஐயப்பனும் மதுரையும் என்ற தலைப்பில் கேரளா - தமிழ்நாடு ஆன்மீகம் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் வைக்கம் போராட்டம் என்ற தலைப்பில் கேரளா - தமிழ்நாடு அரசியல் குறித்து எழுதப்பட்டுள்ள துணுக்கு செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
கேரளாவில் திருவாங்கூர் அரசின் கீழ் வைக்கம் சோமநாதர் கோவிலின் வழிபாட்டு உரிமை நம்பூதிரிகளின் வசம் இருந்தது. ஈழவர்களும் மற்றும் பிற கீழ் சாதிகளும் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 1905 இல் திருவாங்கூர் நம்பூதிரிகளின் அநீதிக்கு எதிராக ஈழவர்கள் நடத்திய போராட்டத்தை திவான் வேலுப்பிள்ளை முறியடித்தார். பின்னர் திருவாங்கூர் ராஜ்யத்தின் சட்டசபையில் (Sree Moolam Popular Assembly) ஸ்ரீ நாராயண குருவின் பரிபாலன சபை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களான போது இக்கோரிக்கை மீண்டும் எழுந்தது ஆனால் உடனடியாக நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து 30 மார்ச் 1924 அன்று ஸ்ரீ நாராயண குருவின் சீடரான டி.கே.மாதவன் முயற்சியில் கோவிலுக்குள் செல்லவும் கோவிலை சுற்றியிருக்கும் தெருக்களில் நடக்கவும் அனுமதி அளிக்கக் கோரி வைக்கம் போராட்டம் ஆரம்பமானது. வைக்கம் போராட்டம் துவங்கிய போது தினமும் ஒற்றை எண்ணிக்கையில் சிலர் கோவிலுக்கு அருகில் தடுக்கப்பட்ட பகுதியில் நின்று போராட அவர்களை திருவாங்கூர் அரசு கைது செய்திட என்று இப்படி சுமார் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் போராட்ட தலைவர்களான டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்றவர்களை திருவாங்கூர் அரசு கைது செய்தது.

போராட்டத்தில் தொய்வு ஏற்பட அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து ஆதரவு திரட்ட போராட்ட குழுவினர் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து மே மாதம் 1924 இல் வைக்கம் போராட்ட குழுவினரிடம் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியாருக்கு மக்களைத் திரட்டி உறுதியாக போராட்டம் நடத்தவது கைவந்த கலையாக இருந்தது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் தீவிரமாக செயல்படுவார் என்பதால் பெரியார் அழைக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராஜாஜிடம் கொடுத்துவிட்டு இப்போராட்டத்தில் பெரியார் களப்பணி ஆற்றினார்.

தொடர்ந்து வைக்கம் போராட்டத்தில் பெரியார், ஸ்ரீ நாராயண குரு, டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப், சகோதரன் ஐயப்பன், அய்யாமுத்துக் கவுண்டர், எம்.வி.நாயுடு மற்றும் பல்வேறு சமூக நீதி ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு களப்பணி ஆற்றினர். திருவாங்கூர் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பசுப்புரா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சமத்துவம் போதிக்கும் பெரியார் மரணமடைய வேண்டுமென வைதீகர்கள் “சத்ரு சம்ஹார யாகம்” நடத்தினர் ஆனால் யாகம் நடந்து கொண்டிருந்த போதே திருவாங்கூர் அரசு மன்னர் மரணமடைந்தார் என்பது வரலாறு.

மன்னர் மறைவுக்கு பிறகு கைது செய்யப்பட்ட போராட்ட வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் வைக்கத்திற்கு வருகை தந்த காந்தி ராணி மற்றும் பெரியாரிடம் சமரசம் பேசியதன் விளைவாக போராட்ட குழுவினரின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து திருவாங்கூர் அரசு நிறைவேற்றியது. அதை தொடர்ந்து 08 அக்டோபர் 1925 அன்று வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது. வைக்கம் போராட்டத்தில் தொண்டாற்றிய பெரியாருக்கு “வைக்கம் வீரர்” என்ற பட்டத்தை திரு.வி.க வழங்கினார். 

1927 மார்ச் 20 அன்று மகத் பகுதியில் உள்ள பொதுக் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அம்பேத்கர் “மகத் போராட்டம்” நடத்திட பெரியார் தலைமையில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” ஏற்படுத்திய தாக்கம் அம்பேத்கருக்கு உத்வேகம் அளித்தது. மேலும் 1924-1925 காலகட்டத்தில் மக்கள் எழுச்சியுடன் வைக்கம் போராட்ட களத்தில் முன்னணியில் நின்று பெரியார் நடத்திய போராட்டம் ஆலய நுழைவு போராட்டத்திற்கு அச்சாரம் இட்டது. அதை தொடர்ந்து 11 ஜூலை 1939 அன்று ஆலய பிரவேச சட்டம் நிறைவேற்றப்பட்டது.

விவரணைகள்

சுவாமி ஐயப்பன் திரைப்படம் 


ஐயப்பனும் மதுரையும் - 1


ஐயப்பனும் மதுரையும் - 2


சபரிமலை - பாண்டியர் வரலாறு


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...