Chocks: December 2020

Wednesday, December 30, 2020

ஸ்வாலி போர்

ஸ்வாலி போர்

29 நவம்பர் 1612 = ஸ்வாலி போர் (Battle of Swally) 
*1609ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் (British East India Company) இந்தியாவில் வணிகம் செய்ய டெல்லி முகலாய பேரரசர் ஜஹாங்கீர் மன்னரிடம் ஒப்பந்தம் செய்தனர்.

*ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்ய இந்தியா வந்த அந்நேரத்தில் போர்த்துகீசியர் (Portuguese Empire) வியாபாரத்தில் கூடுதல் செல்வாக்குடன் இருந்தனர். 

*அந்நிய வணிகம் கடல் வழியில் நடைபெற்று வந்த அந்நேரத்தில் இந்திய கப்பற்படையில் போர்த்துகீசியர் ஆதிக்கம் செலுத்தினர்.

*1612ஆம் ஆண்டு சூரத் அருகே ஸ்வாலி என்ற இடத்திற்கு கேப்டன் தாமஸ் பெஸ்ட் தலைமையில் ஆங்கிலேயரின் நான்கு போர்க் கப்பல்கள் வந்தன. 

*ஆங்கிலேய வணிகப் பொருட்களின் பாதுகாப்பிற்காகவும் போர்த்துகீசிய கடல் கொள்ளையர்களை விரட்டவும் இக்கப்பற்படை என்றவொரு கதையை முகலாய பேரரசிடம் சொல்லி 1612இல் ஸ்வாலி போர் மூலம் போர்த்துகீசியரின் இந்திய சாம்ராஜ்ய பிடியை தளர்த்தினர் ஆங்கிலேயர்கள். 

*போர்த்துகீசியரின் வலிமையான கப்பற்படையை தோற்கடித்ததன் மூலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வலுவாக காலூன்றினர்.

*இதற்கு பிறகு நடந்தவைகள் இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதியது குறிப்பிடத்தக்கது.

*ஆங்கிலேய ஆட்சிக்கும் நவீன இந்திய கப்பற்படைக்கும் அடித்தளம் இட்டது ஸ்வாலி போர்.

Reference

Battle Of Swally


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

நிலத்துறை

நிலத்துறை

சுருக்கம் 
  1. நில அளவீடு 
  2. புல எண் 
  3. வருவாய்த்துறை
  4. பதிவுத்துறை 
  5. பவர் ஆப் அட்டர்னி
  6. வில்லங்க சான்றிதழ்
  7. நில முதலீடு
  8. முடிவுரை 
  9. விவரணைகள் 
நில அளவீடு 
*1 சென்ட் என்பதன் பொருள் 1 ஏக்கரில் 1/100 அளவு.

*அக்காலத்தில் சங்கிலி தான் இடத்தின் நீளம் அகலம் அளவை கணக்கிடும் கருவியாக இருந்துள்ளது பிற்காலத்தில் தான் Tape வந்தது. 

*1 சங்கிலி = 100 கன்னி

*1 கன்னி = 20 சென்டி மீட்டர் 

*1 சங்கிலி = 100 கன்னி * 20 சென்டி மீட்டர் = 2000 சென்டி மீட்டர் = 20 மீட்டர் = 66 அடி 

*சங்கிலி கணக்கில் சதுரம் பரப்பளவு = நீளம் * அகலம் = 66 அடி நீளம் * 66 அடி அகலம் 

*66 அடி நீளம் * 66 அடி அகலம் = 4356 சதுர அடி = 10 சென்ட் 

*1 ஏக்கர் = 100 சென்ட் = 43,560 சதுர அடி 

*1 சென்ட் = 1/100 ஏக்கர் = 435.6 சதுர அடி

*1 கிரவுண்ட் = 5.5 சென்ட் = 2400 சதுர அடி (435.6 * 5.5)

*100 சென்ட் = 1 ஏக்கர் 

*2.47 ஏக்கர் = 1 ஹெக்டேர் 

சதுரம் மற்றும் செவ்வகம் நிலத்தின் அமைப்பை பொறுத்து அடி கணக்கு மாறும் ஆனால் 1 சென்ட் = 435.6 சதுர அடி என்பது மாறவே மாறாது. ஒரு சதுர நிலத்தில் ஒரு சென்ட் அளவு உத்தேசமாக 20.87 அடி * 20.87 அடி = 435.6 சதுர அடி. சதுரத்தில் நீளம் * அகலம் ஒன்றாக இருக்கும் ஆனால் இதுவே செவ்வகத்தில் மாறுப்படும்.

Heart of the City என்று சொல்லக்கூடிய முக்கியமான பகுதிகளில் நிலப் பரிவர்த்தனை சதுர அடி சார்ந்து விலை இருக்கும். சராசரி பகுதிகளில் நிலப் பரிவர்த்தனை சென்ட், கிரவுண்ட், ஏக்கர் சார்ந்து விலை இருக்கும்.

புல எண் 

நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் என்று பெயர். ஒவ்வொரு புல எண்ணிற்கும் உரிய இடத்தை மதிப்பீடு செய்து அரசாங்கம் ஒரு விலை நிர்ணயம் செய்வதன் பெயர் வழிகாட்டி மதிப்பு.

வருவாய்த்துறை

வருவாய்த் துறையில் நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு, நிலத்திற்கான வரைபட எல்லை போன்ற விவரங்கள் கிடைக்கப்பெறும்.

பட்டா = நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை பட்டா மூலம் முடிவு செய்யப்படுகின்றது. 

சிட்டா = தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. 

அடங்கல் = ஒரு கிராமத்தில் இருக்கிற பலதரப்பட்டவர்கள் வைத்துள்ள நிலங்களின் மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. 

நிலத்திற்கான வரைபட எல்லை = நிலத்தின் இடம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதை காட்டிடும் நிலத்திற்கான வரைபடம். 

அ பதிவேடு = கிராம நிர்வாக அதிகாரி வைத்திருக்கும் அந்த கிராமத்திற்குட்பட்ட நிலங்களின் பதிவேடு. அவை, 

*இடத்தின் வகை - ரயத்துவாரி (ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு நிலம்

*புல எண் / அளவை எண், உட்பிரிவு எண் 

*பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்

*நிலத்தின் பரப்பு

*பட்டா எண்

*தீர்வை

பதிவுத்துறை 

சொத்தை வாங்கும் போது அல்லது சொத்தை விற்கும் போது சொத்தின் கிரயப் பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தல் வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ் கண்ட விவரங்கள் இருக்கும்.

*சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி

*சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி

*அப்புகைப்படங்களில் சார் பதிவாளர் அதிகாரியின் கையொப்பம்

*இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி

*மொத்தம் எத்தனை பக்கங்கள் மற்றும் தாள்கள்

*பதிவு எண் மற்றும் வருடம்

*தமிழ்நாடு அரசு முத்திரை

பவர் ஆப் அட்டர்னி

ஒருவர் தனது சொத்தினை விற்பதற்கு, வாங்குவதற்கு, நிர்வகிப்பதற்கு, விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு கொடுக்கப்படுவது பவர் ஆப் அட்டர்னி அதிகாரம். பவர் எழுதி கொடுத்தவரே அதனை ரத்து செய்யும் அதிகாரமும் உள்ளது பவர் சொத்தை வாங்குவதற்கு முன்னர் முடிந்தளவுக்கு சொத்தின் உரிமையாளரை நேரடியாக அணுகி பவர் அதிகாரத்தை உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் பவர் எழுதிக்கொடுத்த சொத்தின் உரிமையாளர் உயிரோடு இருந்தால் தான் பவர் அதிகாரம் செல்லும் அவர் இறந்துவிட்டால் அந்த பவர் அதிகாரம் செல்லுபடியாகாது. 

வில்லங்க சான்றிதழ்

எந்த சொத்திலும் வில்லங்கம் இருக்கிறதா? வில்லங்கம் இல்லையா? என்பதை அறிய வில்லங்க சான்றிதழ் உதவிடும். சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர், சொத்தை எழுதி வாங்கியவர், சொத்தை பதிவு செய்யப்பட்ட ஆண்டு, சொத்தின் பதிவு எண் போன்ற விவரங்களை வில்லங்க சான்றிதழ் மூலம் அறியலாம். 

2009ஆம் ஆண்டு நவம்பரில் தான் பவர் ஆஃப் அட்டர்னியைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் முறை சட்டபூர்வமானது. அதனால் 2009க்கு முன்னர் சொத்தின் உரிமையாளர் பவர் ஆஃப் அட்டர்னி என்று யாரையாவது நியமித்திருந்தால் அல்லது ரத்து செய்திருந்தால் வில்லங்கச் சான்றிதழில் வராது என்பதை கவனத்தில் கொள்ளவும். அது போல சொத்து பதிவு செய்யப்படாத அடமானப் பத்திரத்தில் இருந்தால் அதையும் கண்டுபிடிக்க முடியாது. மேலும் நாட்டில் நடக்கும் பல்வேறு நில மோசடிகளுக்கு பவர் ஆப் அட்டர்னி முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நில முதலீடு

பல்வேறு வெளிநாடுகளில் தனி நபர் சொத்து என்பது சாதாரண விடயம் மேலும் அங்கே பொருளாதார விகிதாசாரத்தின் அடிப்படையில் சொத்துக்களின் விலையும் குறைவே. ஆனால் இந்தியாவில் ஒருவருக்கு ஒரு வீடு என்ற பாலிசியை தாண்டி நில முதலீடு வணிகமாக காரணத்தால் தான் நிலத்தின் விலையும் நிலத்தில் வில்லங்கமும் இங்கே அதிகமாகி போனது.

இந்தியாவில் பரம்பரை பரம்பரையாக தேவைக்கு அதிகமாக நிலத்தில் முதலீடு செய்து சொத்து சேர்ப்பது கடமையாகி போனது ஆனால் பல கோடி மக்களுக்கு இன்றும் ஒரே ஒரு சொந்த வீடு வாங்குவது பகல் கனவாக உள்ளது காரணம் நில விலை மற்றும் வீடு கட்டுமான செலவு அவ்வளவு ஏறி இருக்கிறது. 

முடிவுரை 

மொத்தத்ததில் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக நிலத்துறை காட்சி அளித்தாலும் இந்திய நிலத்துறை UNORGANIZED தான் அதனை சீர் செய்தால் தான் எதிர்கால நிலத்துறை ஆரோக்கியமாக வலம் வர இயலும்.

விவரணைகள் 

Tamil Nadu Real Estate Regulatory Authority (TNRERA)


தமிழ்நாடு அரசின் நில உரிமை சரிபார்ப்பு சான்றிதழ்


பட்டா & புலப்படம் / சிட்டா சான்றிதழ்


அ-பதிவேடு சான்றிதழ்


South Indian Land Measurement System


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Tuesday, December 29, 2020

தங்கமே தங்கம்

தங்கமே தங்கம்

சுருக்கம் 
  1. தங்கம் வரலாறு 
  2. தங்கம் வேதியியல்
  3. செய்கூலி, சேதாரம் 
  4. கே.டி.எம் / ஹால்மார்க் 
  5. தங்கம் வகைகள் 
  6. தங்கம் வியாபாரம் 
  7. தங்கம் விற்பனை விலை 
  8. தங்கம் வாங்குதல் 
  9. தங்கம் பார்த்தல் 
  10. தங்க கேரட்
  11. தங்கம் துணுக்குகள் 
  12. முடிவுரை 
  13. விவரணைகள் 
தங்கம் வரலாறு 

பிரபஞ்ச நட்சத்திரங்களை இயக்குவது அணுக்கரு பிணைவு (Nuclear Fusion) ஆகும். பிரபஞ்சம் தோன்றிய போது இரு வகை அணுவான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் உருவாகியிருந்தன. ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை முறையே உற்பத்தி செய்கின்றன. ஒரு கட்டத்தில் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி 'சூப்பர்நோவா' என்ற நட்சத்திர வெடிப்பின் வினையால் கிடைப்பது தான் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தங்கம் வேதியியல்

மஞ்சள் நிறமுள்ள தங்கம் Au (அணு எண் 79) என்ற குறியீட்டினை பெற்றது. தங்கம் தண்ணீரை விட 19 மடங்கு கனமாகவும், செம்பு தண்ணீரை விட 9 மடங்கு கனமாகவும் இருக்கும். தங்க நகைகள் செய்ய தங்கம் மற்றும் செம்பு உலோக கலவையை கலக்கும் போது தண்ணீரை விட 15 மடங்கு கனமாக இருக்கும்.

செய்கூலி, சேதாரம் 

24 கேரட் சுத்தமான தங்கத்திற்கு நெகிழும் தன்மை அதிகம் என்பதால் 24 கேரட்டில் தங்க நகைகளை செய்ய முடியாது. எனவே தங்க நகைகள் எளிதில் உடையாமல் இருக்க தூய தங்கத்துடன் குறிப்பிட்டளவில் பிற உலோகமான செம்பு (பெரும்பாலும்), வெள்ளி, பல்லேடியம், காட்மியம் கலப்பதுண்டு. பிற உலோகமும் கலக்கப்பட்டு செய்யப்படும் தங்க நகைகளில் உள்ள தங்கத்தின் அளவு (விழுக்காடு) கேரட் அளவில் மதிப்பிடப்படும். இந்தியாவில் உள்ள தங்க நகைகள் 22 கேரட் வகையை சேர்ந்தது. தங்கத்துடன் கலக்கப்படும் பிற உலோகத்திற்கும் சேர்த்தே “செய்கூலி, சேதாரம்” கணக்கிடப்படுகிறது.

கே.டி.எம் / ஹால்மார்க் 
ஆரம்ப காலத்தில் 60% தங்கம் மற்றும் 40% செம்பு ஆகியவற்றின் கலவையாக தங்க நகைகள் இருந்தது. இதில் தங்கத்தின் தூய்மை மிக குறைவாக இருந்தது. அதனால் ஒரு கட்டத்தில் 92% தங்கம் மற்றும் 8% காட்மியம் கலவையாக தங்க நகைகள் சாலிடரிங் செய்யப்பட்டு வந்தன. இதன் பெயர் தான் கே.டி.எம். கே.டி.எம் என்பது தங்கம் மற்றும் காட்மியம் ஆகியவற்றின் கலவையாகும். 

இந்தியாவில் விற்கப்படும் தங்கத்தின் தூய்மையை சான்றளிக்கும் அமைப்பு BIS ஹால்மார்க் ஆகும். தங்க நகைகள் 916 தூய்மையை பெற்று இருந்தால் அந்நகைகள் BIS ஹால்மார்க் குறியீட்டை பெரும். கே.டி.எம் தங்க நகைகள் 916 தூய்மை சோதனையில் தேர்ச்சி பெறாது. அதனால் தங்க நகைகள் வாங்கும் போது 916 BIS ஹால்மார்க் முத்திரையை பார்த்து வாங்குவது நலம். 

தங்கம் வகைகள் 
இந்தியாவில் "மஞ்சள் தங்கம்" மட்டுமே மற்ற தங்க வகைகளை விட அதிகமான முக மதிப்பைக் கொண்டுள்ளது. தங்கத்திற்கு சேர்க்கப்படும் தோராயமான கலவை,

மஞ்சள் தங்கம் = தூய தங்கம் + குறைந்த செம்பு

ரோஜா தங்கம் = தூய தங்கம் + அதிக செம்பு

வெள்ளை தங்கம் = தூய தங்கம் + நிக்கல் / வெள்ளி / பல்லேடியம்

தங்கம் வியாபாரம் 
புல்லியன் தங்கக் கடை = தங்கக் கட்டி வியாபாரம் 

தங்க நகைக் கடை = தங்க நகை வியாபாரம் 

தங்க நகைக் கடை முதலாளிகள் புல்லியன் தங்கக் கடையில் தங்கக் கட்டிகளை வாங்கி தங்க நகைகள் செய்யும் நிபுணரை (நகை ஆசாரி) கொண்டு நகைகளை செய்து வாடிக்கையாளர்களுக்கு செயின், மோதிரம், தோடு, வளையல் என்று SHOWCASE இல் வைத்து விற்கிறார்கள்.

தங்கம் விற்பனை விலை 

தங்கம் நகை பில் விபரம் "உத்தேச" எடுத்துக்காட்டு 

1 கிராம் தங்க நகை = 1 கிராம் விலை + செய்கூலி + சேதாரம் + ஹால்மார்க் சார்ஜ் + வரி 

இவை எல்லாம் சேர்த்து தான் வாங்கிடும் நகைக்கு "விற்பனை விலை" வைப்பார்கள். மேலும் தேர்வு செய்யும் நகை டிசைனை பொருத்து செய்கூலி, சேதாரம் மாறுபடும். இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் 3% ஜி.எஸ்.டி கட்டுவது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்குதல் 

"கல்" பதித்த தங்க நகை வாங்குவதை தவிருங்கள் இல்லையென்றால் "கல்" பொருளுக்கும் சேர்த்து கூடுதல் விலையை கொடுத்து வாங்க நேரிடும். ஆனால் "கல்" பதித்த நகையை திரும்ப விற்க போனால் நகைக் கடைக்காரர் "கல்" எடையை கழித்து தான் விலை வைப்பார் அதனால் உங்களுக்கு நட்டம் அதிகமா இருக்கும்.

ஒட்டு டிசைன் (தங்கம் டச்சு குறையும்) இல்லாமல் கட்டிங் டிசைன் நகையை வாங்குவது நலம். பிளைன் / கலர் கோடிங் எனாமல் தங்க நகை வாங்கிடலாம். கே.டி.எம் நகை "அலர்ஜி" உண்டாக்கும் புகார் இருப்பதால் இன்று அவை அதிக புழக்கத்தில் இல்லை. நகைகளில் 916 BIS ஹால்மார்க் முத்திரை இருத்தல் அவசியம்.

தங்கம் பார்த்தல் 
கவரிங் நகைகளில் முத்திரை பொறித்து தங்க நகை என்று ஏமாற்றி விற்பவர்களும் உண்டு. அச்சமயங்களில் அதன் தரத்தை கண்டறிய உரை கல்லில் உரசப்பட்ட தங்கத்தில் நைட்ரிக் அமிலத்தை லேசாக வைக்கும்போது அது மின்னி நுரைத்தால் நல்ல தங்கம் ஆனால் பச்சையாக நுரைத்தால் சந்தேகமே வேண்டாம் அது கவரிங்.

தங்க கேரட்

999 = 24 கேரட் = 24/24 = 99.9% தங்கம் 

958 = 23 கேரட் = 23/24 = 95.80% தங்கம் + 4.20% பிற உலோகம் 

916 = 22 கேரட் = 22/24 = 91.60% தங்கம் + 8.40% பிற உலோகம் 

875 = 21 கேரட் = 21/24 = 87.50% தங்கம் + 12.50% பிற உலோகம்

833 = 20 கேரட் = 20/24 = 83.30% தங்கம் + 16.67% பிற உலோகம் 

791 = 19 கேரட் = 19/24 = 79.10% தங்கம் + 20.90% பிற உலோகம் 

750 = 18 கேரட் = 18/24 = 75.00% தங்கம் + 25.00% பிற உலோகம் 

708 = 17 கேரட் = 17/24 = 70.80% தங்கம் + 29.20% பிற உலோகம்

666 = 16 கேரட் = 16/24 = 66.60% தங்கம் + 33.40% பிற உலோகம் 

625 = 15 கேரட் = 15/24 = 62.50% தங்கம் + 37.50% பிற உலோகம் 

583 = 14 கேரட் = 14/24 = 58.30% தங்கம் + 41.70% பிற உலோகம் 

541 = 13 கேரட் = 13/24 = 54.10% தங்கம் + 45.90% பிற உலோகம்

500 = 12 கேரட் = 12/24 = 50.00% தங்கம் + 50.00% பிற உலோகம் 

458 = 11 கேரட் = 11/24 = 45.80% தங்கம் + 54.20% பிற உலோகம் 

416 = 10 கேரட் = 10/24 = 41.60% தங்கம் + 58.40% பிற உலோகம் 

375 = 9 கேரட் = 9/24 = 37.50% தங்கம் + 62.50% பிற உலோகம்

333 = 8 கேரட் = 8/24 = 33.30% தங்கம் + 66.67% பிற உலோகம்

24 கேரட் தங்கம் என்றால் என்ன? 

999 = 24 கேரட் = 24/24 = 99.9% தங்கம் 

22 கேரட் தங்கம் என்றால் என்ன? 

916 = 22 கேரட் = 22/24 = 91.60% தங்கம் + 8.40% பிற உலோகம்

22 கேரட் தங்கம் எல்லாமே "916" என்பது உண்மையா? 

தங்க நகை டச்சு என்று சொல்லப்படுகிற 916 தரத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தங்கத்துடன் பிற உலோகத்தை அதிகம் பயன்படுத்தி தங்க நகை செய்து அதற்கு தங்க பாலீஷ் போட்டால் 916 போலவே தெரியும். இது போன்ற தங்க நகையில் E F (நகை வியாபாரிகளின் சங்கேத மொழி) என்ற சீல் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற தங்க நகையின் டச்சு 85%, 80% என்று குறைவாக இருக்கும். 

இப்படிப்பட்ட தங்க நகையை வாங்கிவிட்டு மீண்டும் அப்பொருளை விற்கப்போனால் தெரியவரும் பிரச்சனை. நன்கு தங்க நகை பார்க்க தெரிந்தவர் அந்நகையை பார்த்ததும் இது தரத்தில குறைவானது அதனால் விலை குறையும் என்பதை சொல்லிவிடுவார். அதனால் தங்க நகைகளில் 916 ஹால்மார்க் முத்திரை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் அப்போது தான் திரும்ப விற்கப்போனால் ஓரளவுக்கு விலை நிற்கும்.

இதற்கிடையில் தங்கத்தின் தரத்தை உறுதி செய்திட ஜூன் 2021 இல் இருந்து இந்தியாவில் தங்க நகை விற்பனைக்கு "ஹால்மார்க்" கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்திட மத்திய அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் துணுக்குகள் 
1991இல் இந்திய பொருளாதார நிலைமை மோசமானதால் ரிசர்வ் வங்கி ~47 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கி மற்றும் ஜப்பான் வங்கியிடம் அடகு வைத்து 400 மில்லியன் டாலர் திரட்டியது. பொருளாதார நிலைமை மேம்பட்ட பிறகு இந்திய அரசாங்கம் தங்கத்தை மீண்டும் வாங்கி ரிசர்வ் வங்கிக்கு மாற்றியது.

வரலாறு முழுவதும் சுமார் ~1,90,000 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு தங்கம் 1950 முதல் வெட்டியெடுக்கப்பட்டது. தங்கம் அழிக்க முடியாதது என்பதால் இந்த உலோகம் அனைத்தும் இன்னும் ஒரு வடிவத்தில் அல்லது இன்னொரு வடிவத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்கள், நாணயங்கள், தங்க நகைகள், தங்க பத்திரங்கள், டிஜிட்டல் தங்கம் போன்ற பல்வேறு வகைகளில் தங்க முதலீட்டுகளை செய்யலாம்.

இந்தியா மற்றும் அரபு நாடுகளில் தான் உலகிலே அதிமாக தங்க கடத்தல் செய்யப்படுகிறது. 

வங்கிகளில் தங்க நகைகளை மதிப்பிடுபிடுபவரின் பெயர் “தங்க மதிப்பீட்டாளர்” (Gold Appraiser).

முடிவுரை 

அவசர காலத்தில் வீட்டை உடனடியாக விற்று பணமாக மாற்ற இயலாது, பங்குகளை லாபத்தில் விற்பதை உறுதிப்படுத்த இயலாது ஆனால் இவ்வுலகில் எல்லா அவசர காலத்திலும் உதவக் கூடிய ஒரே சேமிப்பு தங்கம் (விற்பனை - அடமானம்) என்பதால் அதன் வணிக அரசியலும் ஆய்வுக்குரியதே. 

விவரணைகள் 

மின்னுவதெல்லாம்


தங்கத்தின் தரவுகள் 


தங்கத்தின் வரலாறு 


ஹால்மார்க் தங்கத்திலும் கவனம் தேவை 


Hallmarking Jewellery Is Mandatory From June 2021


வாசித்தமைக்கு நன்றி. 

வணக்கம்.

சேப்பியன்ஸ் புத்தகம்

சேப்பியன்ஸ் புத்தகம் 
வரலாறு இல்லாமல் உலகம் இல்லை, நேற்று என்பதே ஒரு வரலாறு தான். இப்படிப்பட்ட வரலாறு என்பதனை ஒரு சில பக்கங்களில் அடக்கிவிட முடியாது ஆனால் “இறந்த காலம் - நிகழ் காலம் - எதிர் காலம்” ஆகிய மூன்றையும் உள்ளடக்கி “அறிவு புரட்சி - வேளாண் புரட்சி - மனிதக் குல ஒருங்கிணைப்பு - அறிவியல் புரட்சி” ஆகிய தலைப்புகளில் மனிதகுலத்தின் சுருக்கமான வரலாற்றை வரலாற்று பேராசிரியர் யுவால் நோவா ஹராரி தன்னுடைய “சேப்பியன்ஸ்” புத்தகத்தில் பல தரவுகளுடன் விளக்கியுள்ளார். புத்தகத்தை படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது காரணம் அவ்வளவு தகவல்கள். 

நம் சகோதரர்கள் ஹோமோ நியண்டர்தால், ஹோமோ எரக்டஸ் மறைந்து ஹோமோ சேப்பியன்ஸ் (மனிதர்கள்) பூமியின் சேம்பியன்ஸ் என்ற கருதுகோள் உள்ளது ஆனால் அதற்கு பின்னால் உள்ள வரலாறு கொடியது என்பதை இப்புத்தகத்தை படிப்பவர்கள் உணரலாம். 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமோ பேரினத்தின் இறுதிவடிவமான ஹோமோ சேப்பியன்ஸ் இனம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. இவ்வகையில் ஹோமோ சேபியன்ஸ் என அறியப்படும் மனிதர்களாகிய நமக்கெல்லாம் ஆப்பிரிக்கா தான் பூர்வகுடி. ஆப்பிரிக்க மக்களாகிய நாம் சூழலியல் காரணங்களுக்காக பல்வேறு காலகட்டத்தில் ஆப்பிரிக்க தேசத்தை விட்டு வெளியேறி வெவ்வேறு தேசங்களில் ஐக்கியமானோம். அப்படி நாம் சென்ற தேசங்களில் திராவிடர்கள், ஆரியர்கள், எகிப்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள் என்று பல்வேறு இனங்களை கண்டோம். 

70,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அறிவு புரட்சி முதலே மனித கூட்டமானது இயற்கையையும் பிற உயிரினங்களையும் அழிக்கத் தொடங்கி விட்டது. நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்த மனிதன் நாளடைவில் உணவு சங்கிலியில் மட்டுமில்லாமல் உயிரின சங்கிலியிலும் முதலிடம் வந்து விட்டான் என்றும் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய வேளாண் புரட்சியை இன்றும் உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று அரசாங்கங்கள் பெருமை பேசுகின்றன ஆனால் வேளாண் புரட்சியே மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கவும் சொகுசான மேட்டுக்குடி இனப்பிரிவு உருவாவதற்கும் அதனை தொடர்ந்து முதலாளித்துவம் வளர்வதற்கும் வழிவகுத்தது என்றும் விளக்குகிறார்.

ஆதிகால மக்களுக்கு வம்பு (கிசு கிசு) பேசுவதில் இருந்த ஆர்வமே மொழிகள் உருவாகக் காரணம் என்ற விளக்கம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் வேட்டையாடி சமூகமாக இருந்து வேளாண் சமூகமாக மாறிய காலத்தில் உலக மக்கள் பொது ஒத்துழைப்பை வழங்கிட உருவானது பணம், உலக மக்கள் உழைப்பின் மீதான நம்பிக்கையை பெற்றிட உருவானது மதம், உலக மக்கள் வாரி வழங்கும் உழைப்பை பெற்றிட உருவானது ஏகாதிபத்தியம். அதன் அடிப்படையில் மனித சமுதாய சங்கிலியில் ஒரு கண்ணி பணம், ஒரு கண்ணி மதம், ஒரு கண்ணி ஏகாதிபத்தியம் என்றும் மக்களின் பொதுவான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க உருவானதே பேரரசுகள் என்கிறார்.

ஐரோப்பிய மக்களுக்கு முன்னரே பல்வேறு நாட்டினரும் கடல் வழி பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் அவர்களின் நோக்கம் செல்லும் இடங்களில் செல்வங்களை கைப்பற்றுவதே இலக்காக இருந்துள்ளது ஆனால் ஐரோப்பியர்கள் கடல் வழி பயணமாகி தாங்கள் களம் காணும் ஒவ்வொரு இடத்திற்கும் ஆய்வுக் குழுவை அழைத்து செல்வதும் ஆய்வு செய்வதும் பிறகு அவ்விடத்தையே வெற்றி கொள்வதும் இலக்காக இருந்துள்ளது. அவ்வகையில் புதிதாக ஒரு இடத்தை தேடிச் சென்று செல்வங்களை சுமந்து சொந்த நாட்டிற்கு திரும்ப வருவதற்கு பதிலாக செல்வங்கள் இருக்கும் இடத்தையே ஆக்கிரமிப்பு செய்து அந்தந்த இடத்தின் பூர்விகவாசிகளை அழித்தொழித்து அந்த இடத்தையே வளைப்பது தான் ஐரோப்பியர்களின் மூளை என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எழுதியுள்ளார்.

ஹோமோ சேப்பியன்ஸ் என்ற அறிவார்ந்த மனிதர்களாகிய நாம் மாற்று உயிரினத்துடன் உறவு கொண்டும் கணினியின் துணைக்கொண்டும் எதிர்க்காலத்தில் நம்மை விட வலிமையான திறமையான உயிரினமாக “சூப்பர் மனிதன்” பிறக்க வழிவகை செய்ய வாய்ப்பு அதிகம் என்பதையும் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா கைப்பற்றப்பட்ட விதம், ஆப்பிரிக்க அடிமை உருவாக்கப்பட்ட விதம், கிரீன்விச் நேர மண்டலம், மனித வாழ்க்கை முறையினை மாற்றிய முதலாளித்துவம் உட்பட பல்வேறு வரலாற்று செய்திகளை அறிய இன்றே வாசியுங்கள் “சேப்பியன்ஸ்”. 

மனிதன் கடவுளைக் கண்டுபிடித்தபோது வரலாறு தோன்றியது அதே மனிதன் கடவுளாகும்போது அது முடிந்துவிடும் என்ற வரலாற்று பேராசிரியர் யுவால் நோவா ஹராரியின் புகழ்பெற்ற மேற்கோளுடன் முடிக்கிறேன்.

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் புத்தகத்தில் உள்ள சிறு தொகுப்பு 

*1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் பருப்பொருளும் ஆற்றலும் தோன்றுகின்றன. இயற்பியல் பிறக்கிறது. அணுக்களும் மூலக்கூறுகளும் தோன்றுகின்றன, வேதியியல் பிறக்கிறது.

*450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவாகிறது.

*380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோன்றுகின்றன. உயிரியல் பிறக்கிறது.

*60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றுகின்றனர்.

*25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஹோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கற்கருவிகள் உருவாக்கப்படுகின்றன.

*20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பேரினம் ஆப்பிரிக்காவிலிருந்து யுரேசியாவிற்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் உருவாகின்றனர்.

*5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனத்தினர் ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் தோன்றுகின்றனர்.

*3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நெருப்பின் அன்றாடப் பயன்பாடு நடைமுறைக்கு வருகிறது.

*2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது.

*70,000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவுப் புரட்சி மலர்கிறது. மொழி கண்டுபிடிக்கப்படுகிறது. வரலாறு உதயமாகிறது. ஹோமோ சேப்பியன்ஸ் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரவுகின்றனர்.

*45,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் ஆஸ்திரேலியாவில் குடியேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன.

*30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனத்தினர் பூண்டோடு அழிகின்றனர்.

*16,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் அமெரிக்காவில் குடியேறுகின்றனர். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன.

*13,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ ஃபுளோரெசியென்சிஸ் என்ற இன்னொரு மனித இனம் பூண்டோடு அழிகிறது, மனித இனங்களின் ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டுமே எஞ்சி இருக்கிறது.

*12,000 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் புரட்சி மலருகிறது. உணவுக்காகத் தாவரங்கள் பயிரிடப்படுகின்றன, விவங்குகள் பழக்கப்படுத்தப்பட்டு வீடுகளிலும் வயல்களிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படு கின்றனர். நிரந்தரக் குடியேற்றம் தொடங்குகிறது.

*5,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மன்னராட்சி, பேச்சு மொழியின் எழுத்து, வடிவம், பணம் ஆகியனவே தோன்றுகின்றன. பல கடவுளர் கோட்பாட்டை உள்ளடக்கிய மதங்கள் தலைதூக்குகின்றன.

*4,250 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் முதல் பேரரசரான சார்கானின் அக்கேடியப் பேரரசு உதயமாகிறது.

*2,500 ஆண்டுகளுக்கு முன்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. உலகளாவிய பணம் பிறப்பெடுக்கிறது. மனிதகுல நன்மைக்கான உலகளாவிய அரசிய லமைப்பு என்ற பிரகடனத்துடன் பாரசீகப் பேரரசு முளைக்கிறது. அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் புத்தமதம் தோற்றுவிக்கப்படுகிறது.

*2,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஹான் பேரரசும், மத்தியத் தரைக்கடல் பகுதியில் ரோமானியப் பேரரசும் தோன்றுகின்றன. கிறித்தவ மதம் தோற்று விக்கப்படுகிறது.

*1,400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுகிறது.

*500 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் புரட்சி மலருகிறது. மனிதகுலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றத் தொடங்குகிறது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கின்றனர், பெருங்கடல்களை வெற்றி கொள்ளத் தொடங்குகின்றனர், ஒன்றிணைந்த வரலாற்றுக் களமாக உலகம் மாறுகிறது. முதலாளித்துவம் தலைத்தூக்குகிறது.

*200 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்புரட்சி வெடிக்கிறது. குடும்பமும் சமூகமும் புறக்கணிக்கப் பட்டு, நாடும் சந்தையும் அவற்றின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன, தாவரங்களும் விலங்குகளும் பெரும் எண்ணிக்கையில் பூண்டோடு அழிகின்றன.

*தற்போது பூமி என்ற கோளின் எல்லயை மனிதர்கள் கடக்கின்றனர். அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் இருத்தலை அச்சுறுத்துகின்றன. இயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயல்முறையால் அன்றி நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உயிரினங்கள் உருவாவது அதிகரிக்கிறது.

*எதிர்காலத்தில் நுண்ணறிவுசார் வடிவமைப்பின் மூலம் உருவாக்கப்படும் படைப்புகள் வாழ்வின் அடிப்படைக் கோட்பாடாக மாறப் போகின்றன, ஹோமோ சேப்பியன்ஸின் இடத்தை அதிமனிதர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப் போகின்றனர்.

Reference

Yuval Noah Harari


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Tuesday, December 15, 2020

அரசியல் சதுரங்கம்

அரசியல் சதுரங்கம்
அரசியல் என்றால் என்ன?

மக்கள் ஜனநாயகமோ சர்வாதிகாரமோ யார் கீழாவது அடிபணிந்து வாழ்வது பலாயிரம் வருட வரலாறாகும். மக்கள் அடிபணிந்து வாழ அரசியல் தான் துருப்புசீட்டு. அப்பேற்பட்ட அரசியல் சாம்ராஜ்யம் "சமூக அரசியல் மற்றும் அதிகார அரசியல்" என இரு வகைப்படும். மக்களிடம் நேரிடையாக சென்று கொள்கைகளை எடுத்துரைத்து சமூக மாற்றங்களை கொண்டுவர முயல்வது சமூக அரசியல். வலதுசாரி (Conservatism) அல்லது இடதுசாரி (Liberalism) அல்லது மய்யம் (Centrism) கொள்கை கொண்டு மக்களை நேரிடையாக ஆட்சி செய்வது அதிகார அரசியல். அரசியலில் வெற்றி பெற தொடர்ந்து புதுப்பித்தல் (Update) மற்றும் மேம்படுத்தல் (Upgrade), சீரான கட்டமைப்பு, ஊடகங்கள் வாயிலாக மக்களை சென்றடைதல், கொள்கைகளை எடுத்துரைத்தல் முக்கிய தேவையாகும்.

அதிகார அரசியலுக்கு சமூக அரசியலே ஆணிவேர். ஏனெனில் சமூக அரசியல் மூலமே கொள்கை உணர்வை வளர்த்தெடுக்க முடியும் என்பதற்கு பெரியார் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 1994இல் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பேசுகையில் “இந்தியாவில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் திராவிட கட்சிகள் தொடர்ந்து கூடுதல் பலத்துடன் இருப்பதற்கு காரணம் பிற கட்சிகளில் இல்லாத வகையில் அடிப்படை கட்டுமானம் வலுவாக இருப்பதோடு தொண்டர்களும் உணர்வாளர்களாக இருப்பதே” என்றார்.

காங்கிரஸ் - பா.ஜ.க - சமூக அரசியல் 

1885இல் இந்தியா தேசிய காங்கிரஸ் என்ற அதிகார அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்தியா தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் M.G.ரானடே சமூக அரசியல் சீர்திருத்தம் அவசியமானது என்று எண்ணி 1887இல் காங்கிரஸ் ஆதரவில் சுயாதீன பிரிவாக இந்திய தேசிய சமூக மாநாடு (Indian National Social Conference) என்ற சமூக சீர்திருத்தக் இயக்கத்தை தொடங்கினார். பெண்களுக்கு கல்வி, விதவைகளின் மறுமணம், குழந்தைத் திருமணங்களுக்கு தடை, பெண்களுக்கு சொத்துரிமை, வேலையை தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம், பின்தங்கிய வகுப்பினருக்கான ஒதுக்கீடு போன்றவை இந்திய தேசிய சமூக மாநாட்டின் கொள்கைகளாக வரையறுக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்துத்துவா உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக இந்திய தேசிய சமூக மாநாடு இயக்கம் சில ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. இந்திய தேசிய சமூக மாநாடு இயக்கம் ஒரு சிறந்த சமூக இயக்கமாக மாறியிருக்கும் ஆனால் அவர்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் சிக்குண்ட காங்கிரஸ் கட்சியின் பக்கத்தில் நிற்கத் தேர்ந்தெடுத்து அதன் மதிப்பை இழந்தனர் என்று அம்பேத்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
1934 இல் ராம் மனோகர் லோஹியா, ஜெய் பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவா உட்பட பலர் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவாக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை (Congress Socialist Party) உருவாக்கி இடதுசாரியம், அகிம்சை, தாராளவாதம், ஜனநாயகம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டனர். பரவலாக்கப்பட்ட சோசலிசம் மூலம் பின்தங்கிய சமுதாய பிரிவினரை மேம்படுத்துவதற்கான தீவிர சமூக - பொருளாதார (Socio - Economic) நடவடிக்கைகளை ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியில் போதிய ஆதரவு இல்லாததால் 1948 இல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி 1952 இல் ஆச்சார்ய கிருபளானியின் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் (Kisan Mazdoor Praja Party) காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை இணைத்து பிரஜா சோசலிஸ்ட் கட்சியை (Praja Socialist Party) ராம் மனோகர் லோஹியா, ஜெய் பிரகாஷ் நாராயண் உட்பட பலர் இணைந்து உருவாக்கினர். இக்கட்சியும் பின்னர் பல பிரிவுகளாக உடைந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் வலதுசாரிகள், மய்யவாதிகள் மற்றும் இடதுசாரிகள் என என பலர் இருந்தனர் ஆனால் பா.ஜ.க கட்சியில் வலதுசாரிகள் மட்டுமே பங்கு கொண்டனர். சோசலிஸ சமூக அரசியல் இயக்க செயல்பாடுகள் மூலம் காங்கிரஸ் கட்சி வளர முனையவில்லை ஆனால் வலதுசாரிய ஆர்.எஸ்.எஸ் இயக்க செயல்பாடுகள் மூலமே பா.ஜ.க கட்சி வளர்ந்தது என்பது கவனிக்கத்தக்கது.

வல்லரசு என்றால் என்ன?

அடிபணிதல் என்று வரும் போது யார்? ஆணை இடுகிறார் என்ற கேள்வி வந்து விடும். அவ்வகையில் ~760 கோடி மக்கள் வாழும் உலகில் ஆணை இடுபவர்களில் உச்சம் பெற்ற ஒருவர் இருக்கத் தான் செய்வார். அந்த உச்சம் பெற்ற நபர் ஆளும் நாடு தான் வல்லரசு நாடாக அறியப்படும். ராணுவம், விண்வெளி, தொழில்நுட்பம், வணிகம் ஆகிய நான்கு துறையிலும் அந்நாடே ஆதிக்கம் செலுத்தும். இன்றைய முதலாளித்துவ வளர்ச்சியில், உலகமயமாக்கல் வேகத்தில், தொழில்நுட்ப உலகில் வல்லரசு கொள்கை இன்றியமையாதது. ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் ஜனநாயகமும் ஒரு சேர கடைப்பிடிக்கும் நாடு தான் வல்லரசாக இயலும். அவ்வகையில் இன்று அமெரிக்கா உலகின் வல்லரசாக இருக்கிறது அங்கே மக்களும் ஜனநாயக அடிப்படையில் சுதந்திரமாக வாழ்கின்றனர். 

*கண்டிப்பில் ஏகாதிபத்தியம் (Big Brother) 

*தொழிலில் முதலாளித்துவம் (Capitalist) 

*அரவணைப்பில் ஜனநாயகம் (Autonomy)

பழங்காலத்தில் இந்தியா செல்வச்செழிப்புடன் இருந்த காரணத்தால் தான் அந்நியர்கள் இந்தியாவுக்குள் வர்த்தகம் செய்யவும் ஆட்சி செய்யவும் வந்தனர். அவ்வகையில் பழங்காலத்தில் இந்தியாவும் சீனாவும் வல்லரசாக பிறகு டச்சு வல்லரசாக பிறகு பிரிட்டன் வல்லரசாக பிறகு அமெரிக்கா வல்லரசாக இன்று இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு நாடும் வல்லரசாக அந்நாட்டின் நாணயம் பல நாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முதன்மையானதாக இருக்க வேண்டும் அவ்வகையில் இன்று அமெரிக்க நாணயமான டாலர்ஸ் தான் சர்வதேச வர்த்தக புழக்கத்தில் உள்ள பொதுவான நாணயமாகும். மேலும் வல்லரசாக நீடிக்க மக்கள் தொடர்ந்து அதிக வரிப்பணம் கட்டுதல் முதன்மையானது.

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக சீன யுவானை பயன்படுத்திட சீனா முயற்சிக்கிறது என்று பரவலாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்க டாலர் பரிவர்த்தனை ஜூன் 2018இல் 39.35% ஆகவும் ஜூன் 2020இல் 40.33% ஆகவும் கூடியிருக்கிறது ஆனால் சீன யுவான் பரிவர்த்தனை மார்ச் 2018இல் 1.81% ஆகவும் மார்ச் 2020இல் 1.76% ஆகவும் குறைந்திருக்கிறது. தரவுகளின் படி நாணயத்தை  மாற்ற முயலும் சீனாவின் முயற்சி சவாலான பணியாக இருக்கும்.
விவரணைகள்

Ideology and Political Parties 


Ambedkar - Ranade


Five Superpowers in 2050


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Monday, December 14, 2020

காந்தியும் தலித் அரசியலும்

காந்தியும் தலித் அரசியலும்

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, இதே தலைப்பில் இன்னும் விரிவான சான்றுகளைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சுருக்கம் 
  1. முகவுரை
  2. 1909 / 1919 வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
  3. அம்பேத்கர் முன்வைத்த திட்டம்  
  4. ராம்சே மெக்டொனால்ட் உத்தரவு
  5. காந்தியின் உண்ணாவிரதம்
  6. பூனா ஒப்பந்தம்
  7. ஹரிஜன் வரலாறு
  8. இரட்டை உறுப்பினர் தொகுதி
  9. தனித்தொகுதி
  10. முடிவுரை
  11. விவரணைகள்
முகவுரை 

காந்தியம் என்ற "பழமைவாதம்" தலித்துகளுக்கு உரிமை கிடைப்பதைத் தடுக்கிறது என்றார் அம்பேத்கர். அப்பாவியான பசுவைப் போன்ற தலித்துகளுக்கு அரசியல் ஆசையை காட்டுவது "பாவச்செயல்" என்றார் காந்தி. அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே உள்ள அரசியல் கருத்து வேறுபாடுகள் வெறும் தனிப்பட்டவை அல்ல, அவை இந்திய சமூகத்தில் பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருக்கும் சாதியப் போக்கை எடுத்துக்காட்டுகின்றன. இந்தக் கட்டுரையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பூனா ஒப்பந்தம், ஹரிஜன் வரலாறு, இரட்டை உறுப்பினர் தொகுதி மற்றும் தனித்தொகுதி ஆகியவற்றைச் சுருக்கமாக காணலாம்.

1909 / 1919 வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

1909 இல் இந்திய கவுன்சில் சட்டம் (Indian Councils Act, 1909) மூலம் முஸ்லிம்களுக்கான தனி வாக்காளர் (Separate Electorates) தொகுதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 1919 இல் இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act, 1919) மூலம் தனி வாக்காளர் தொகுதி சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட சமூகங்கள், தனித்தொகுதிகளில் தங்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்வதன் மூலம் தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் வாய்ப்பை பெற்றன.

அம்பேத்கர் முன்வைத்த திட்டம் 

தலித்துகளை இந்துக்களாகக் கருதாமல், அரசியல் ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதி, தலித்துகளுக்கு வகுப்புவாத பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அம்பேத்கரும் அவரது சகாக்களும் பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

தலித் மக்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு அம்பேத்கர் முன்வைத்த திட்டங்களில் ஒன்றாக "இரட்டை வாக்குரிமை" உள்ளது. இதன் படி, தலித் வாக்காளர்களுக்கு தேர்தலில் இரு வாக்குகளை செலுத்தும் உரிமை வழங்கப்படுகிறது. ஒரு வாக்கு, பொதுவாக மற்ற வாக்காளர்களுடன் இணைந்து ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்ய, மற்றொரு வாக்கு தலித் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், பிற இயக்கங்களின் கட்டுப்பாட்டிற்குள் வராத, பிற வகுப்பினரின் தலையீடு இல்லாமல், தலித்துகளின் விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும்.

ராம்சே மெக்டொனால்ட் உத்தரவு

இந்து அல்லாத மதங்களைப் போல, தலித்துகளுக்கும் "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்" வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் தலித்துகள் இந்து மதத்திலிருந்து தனியாகப் பிரிந்து செல்லக்கூடும் என்று காந்தி எண்ணியதால், அம்பேத்கரின் திட்டத்திற்கு அவர் உடன்படவில்லை. ஒரு கட்டத்தில், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, காந்தியின் விருப்பத்திற்கு மாறாக, இரண்டாம் வட்ட மேசை மாநாட்டிற்குப் பிறகு, 16 ஆகஸ்ட் 1932 அன்று பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு பல்வேறு ஷரத்துகளை உள்ளடக்கி தலித்துகளுக்கும் வகுப்புவாத பிரதிநிதித்துவக் கொள்கையை அறிவித்தார்.

ராம்சே மெக்டொனால்ட் உத்தரவுப்படி, தலித்துகளுக்கு 20 ஆண்டுகளுக்கு தனி தேர்தல் பிரதிநிதித்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 71 தனித்தொகுதிக்கு இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. இரட்டை வாக்குரிமை மூலம், தலித்துகள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஒரு வாக்கும், பொதுத்தொகுதி வேட்பாளருக்கு மற்றொரு வாக்கும் செலுத்தும் போது, தலித்துகளுக்கு கிடைக்கும் "இரண்டாவது வாக்கு" என்பது அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான அரசியல் ஆயுதமாகவும், இந்தியாவின் பூர்வகுடியினரான தலித்துகளின் அரசியல் அங்கீகாரத்தை உறுதி செய்யும் ஒரு கருவியாகவும் அம்பேத்கர் கருதினார்.

காந்தியின் உண்ணாவிரதம்

இந்து அல்லாத பிற மதத்தினருக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கிய தேர்தல் சலுகைகளை ஏற்றுக் கொண்ட காந்தி, தலித்துகளுக்கு வழங்கிய தேர்தல் ரீதியான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கவனிக்க வேண்டிய நுண்ணரசியலாகும். ஏனெனில், உயர்சாதியினரின் சார்பின்றி தலித்துகள் தங்களின் அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து கொள்ளும் தேர்தல் செயல்முறையால், இந்து மதத்தின் அமைப்பு சீர்குலைந்து விடும் என்று காந்தி கருதினார். இதையொட்டி, தனது சொந்த சத்தியாகிரகக் கொள்கைக்கு எதிராக, தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமையுடன் கூடிய 71 தனித்தொகுதி பிரகடனத்தை ரத்து செய்யக் கோரி, அம்பேத்கரை அச்சுறுத்தும் வகையில் காந்தி பூனா ஏரவாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். காந்தியின் போராட்டத்தை விட எமது மக்களின் அரசியல் அதிகாரம் முக்கியமானது என்று அம்பேத்கர் கூறினார்.

எரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதம் இருந்த போது, ​​"காந்தி சாகட்டும், அவரை விட நமது உரிமைகள் முக்கியம், காந்தியின் உண்ணாவிரத அரசியலை நம்ப வேண்டாம்" என்று பெரியார் ரஷ்யாவிலிருந்து அம்பேத்கருக்கு அறிவுரை கூறி தந்தி அனுப்பினார். இத்தகைய காலச்சூழலில், 20 செப்டம்பர் 1932 அன்று ஏரவாடா சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் காந்தி. சிறைக்குள் காந்தி சோர்ந்துவிடக்கூடாது என்பதற்காக தொண்டர்கள் ராமர் பஜனை பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். வெளியில், தலித்துகள் மீது வன்முறைத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டன, காந்தியின் உயிரைக் காப்பாற்ற தலித்துகள் தங்கள் அரசியல் உரிமைகளை விட்டுத்தர நிர்பந்திக்கப்பட்டனர்.

அரசியலில் சலசலப்பை உண்டாக்கிய காந்தியின் உண்ணாவிரதம் குறித்து விவாதிக்க அம்பேத்கரும் பிற தலைவர்களும் பூனாவில் ஒன்று கூடினர். 22 செப்டம்பர் 1932 அன்று ஏரவாடா சிறையில் காந்தியை சந்தித்து, "உங்களுக்கு எங்கள் மீது இரக்கம் இல்லையா? எங்கள் சமூகத்திற்கு நீங்கள் உதவினால் கதாநாயகனாக மாறுவீர்" என்று அம்பேத்கர் பேசினார். ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய காந்தி, "எனது உயிர் அல்லது ஒப்பந்தம், எது தேவை?" என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காந்தி தனது விவாதத்தை முடித்தார். 

பூனா ஒப்பந்தம்

காந்தியின் அகிம்சை அல்லாத உண்ணாவிரத அணுகுமுறையால், "பல் இல்லாத பாம்பு" போல தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கொண்ட 71 தனித்தொகுதிக்குப் பதிலாக, இட ஒதுக்கீடு அடிப்படையில் 148 தனித்தொகுதி வழங்கப்பட்டது. அன்றைய காலச்சூழலில், காந்தியின் தந்திரமான உண்ணாவிரதம் காரணமாக, வேறு வழியின்றி, அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை இல்லாத 148 தனித்தொகுதிகளை ஒப்புக்கொண்டார். அதையொட்டி, 24 செப்டம்பர் 1932 அன்று மாலை 5:00 மணிக்கு தலித்துகளின் சார்பாக அம்பேத்கர் மற்றும் உயர்சாதியினரின் சார்பாக மதன் மோகன் மாளவியா உட்பட 23 பேரால் "பூனா ஒப்பந்தம்" கையெழுத்திடப்பட்டது. இதன் அடிப்படையில், 1935 இல் இந்திய அரசாங்கச் சட்டத்தில் (Government of India Act, 1935) "வகுப்புவாரி கொடை" ஷரத்து இணைக்கப்பட்டது.

20 செப்டம்பர் 1932 அன்று உண்ணாவிரதத்தை தொடங்கிய காந்தி, நான்கு நாட்கள் கழித்து பூனா ஒப்பந்தம் உறுதியாகியதும், 24 செப்டம்பர் 1932 அன்று உண்ணாவிரதத்தை கைவிட்டார். காந்தியின் தலையீட்டால், பூனா ஒப்பந்தம் மூலம் தலித்துகளுக்கு 71 தனித்தொகுதிக்கு பதிலாக இரட்டிப்பாக 148 தனித்தொகுதி கிடைத்தது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் இங்கே தான் "காந்தி கணக்கு" வெளிப்படுகிறது. 148 தனித்தொகுதி கிடைத்தாலும், "இரட்டை வாக்குரிமை" என்ற அம்சம் நீக்கப்பட்டதன் மூலம் இந்து மதத்தின் தலைமை மற்றும் அரசியல் அதிகாரம் உயர்சாதியினரின் கைகளில் நிலைபெறுவதையும், தலித்துகள் இந்து மதத்தின் ஓர் அங்கமாக இருப்பதையும் பூனா ஒப்பந்தம் உறுதி செய்தது.

ஹரிஜன் வரலாறு 

5-8 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கோலோச்சிய பக்தி இயக்கம் மெல்ல 15 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வட இந்திய பக்தி இயக்கத்தில் மீரா பாய், ரவிதாஸ், துளசிதாஸ், கபீர்தாஸ், நரசிங் மேத்தா, ராமானந்தர், குரு நானக் (சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்) போன்றோர் கோலோச்சினர். வட இந்திய பக்தி இயக்க காலகட்டத்தில், தங்கள் தந்தை யார் என்று தெரியாமல் தேவதாசிகளுக்கு பிறந்த தலித் குழந்தைகளை கடவுள் விஷ்ணுவின் குழந்தைகள் என்று பொருள்படும்படி தலித் மக்களை "ஹரிஜன்" என்று அழைத்தார் கவிஞர் நரசிங் மேத்தா. மேலும், துளசிதாஸ் எழுதிய ராமாயணத்தில் "பிராமணன், வைசியன், ஹரிஜன் ஆகியோர் மீது சத்திரியன் தமது சக்தியை வீணாக பயன்படுத்தமாட்டான்" என்று பரசுராமனிடம் வர்ணக் கொள்கையை லட்சுமணன் உரைப்பதாக எழுதியுள்ளார்.

1932 இல் பூனா ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு 1933 இல் தலித் மக்களின் விடுதலைக்கு ஹரிஜன் சேவா சங்கம் மற்றும் ஹரிஜன் பத்திரிகை ஆகியவற்றை தொடங்கினார் காந்தி. நரசிங்க மேத்தா மற்றும் துளசிதாஸ் மேற்கோள்காட்டிய ஹரிஜன் சொல்லையே காந்தி பயன்படுத்தினார். தலித்துகளை "தீண்டத்தகாதவர்கள்" என்பதற்குப் பதிலாக "ஹரிஜனங்கள்" என்று அழைக்க வேண்டும் என்றும், ஹரிஜனங்கள் என்று அழைப்பது தலித்துகளின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் என்பதற்கில்லை, ஆனால் தீண்டத்தகாதவர்கள் என்ற கடுஞ்சொல்லைப் பயன்படுத்துவதை மக்கள் தவிர்ப்பார்கள் என்றும் காந்தி சுட்டிக்காட்டினார். இப்படி தலித்துகளை ஹரிஜன் என்று காந்தி "சொல்லிலே தேன் தடவி" அழைத்ததை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். இதற்கிடையில், காந்தியின் "ஹரிஜன் சேவா சங்கம்" வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், 1935 இல் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்திலே கவிதா கிராமத்தில் உயர்சாதியினர் தலித்துகளின் பயன்பாட்டிற்காக உள்ள கிணற்று நீரில் மண்ணெண்ணெய் கலந்து அதை பயன்படுத்த விடாமல் தடுத்தனர். இதனால், கவிதா கிராமத்தை சேர்ந்த தலித்துகள் பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

இரட்டை உறுப்பினர் தொகுதி

1950 களில் இரட்டை உறுப்பினர் தொகுதியில் பொது மற்றும் தலித் ஆகிய இரு பிரிவுகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில், அதிக ஓட்டுகளை பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். மேலும், இரண்டு வெற்றியாளர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும் என்றால், இருவரும் பொதுப் பிரிவினராக இருக்கலாம், இருவரும் தலித் பிரிவினராக இருக்கலாம், அல்லது ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒருவராகவும் இருக்கலாம்.

1957 நாடாளுமன்றத் தேர்தலில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இரட்டை உறுப்பினர் தொகுதியான பார்வதிபுரம் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் பொதுப் பிரிவில் போட்டியிட்ட வி.வி.கிரி, பொதுப் பிரிவு போட்டி வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தாலும், பிற அனைத்து வேட்பாளர்களையும் விட தலித் பிரிவைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றதால் அவர்கள் வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. எனவே, வி.வி.கிரி 565 வாக்குகளின் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். இதையடுத்து, இரட்டை உறுப்பினர் தொகுதி தேர்தல் முறைக்கு எதிராக வி.வி.கிரி வழக்கு தொடர்ந்தார், ஆனால் அவரது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு, 1961 இல் நாடாளுமன்றத்தில் சட்ட நடவடிக்கை (The Two-Member Constituencies (Abolition) Act, 1961) மூலம் இரட்டை உறுப்பினர் தொகுதி முறை ஒழிக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து இரட்டை உறுப்பினர் தொகுதிகளும் ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாக மாற்றப்பட்டன.

தனித்தொகுதி 

இரட்டை வாக்குரிமை மற்றும் இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிந்த பிறகு, தற்போது தனித்தொகுதி (Reserved Constituency) மட்டுமே இன்றைய தேர்தல் நடைமுறையில் இருக்கிறது. அதாவது, தனித்தொகுதிக்கான தேர்தலில், அந்த தொகுதியைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்களும் தலித் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

# 543 இந்திய மக்களவை தொகுதியில் 131 தனித்தொகுதி.

# 39 தமிழ்நாடு மக்களவை தொகுதியில் 7 தனித்தொகுதி.

# 234 தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியில் 46 தனித்தொகுதி.

முடிவுரை

இந்தியாவின் உலகளாவிய அடையாளமாகவும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவராகவும் பரவலாகக் கொண்டாடப்படும் காந்தி, பூனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உயர்சாதியினர் தலித்துகளை சமமாக ஏற்றுக்கொள்ளத் தவறினால், தனது உண்ணாவிரதத்தை மீண்டும் தொடங்குவதாக உறுதியளித்தார்.

இருப்பினும், தீண்டாமைக்கு எதிராக ஆங்கில இதழ்களில் தலித்துகளை "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்றும், சாதி அமைப்பை பாதுகாக்க குஜராத்தி இதழ்களில் "அந்தியாஜா" (கடைசியாகப் பிறந்தவர்) என்றும் எழுதிய காந்தியை அம்பேத்கர் விமர்சனம் செய்தார். ஒரு சூழலில் தலித் உரிமைகளுக்காக வாதிடும் போது, மற்றொரு சூழலில் சாதி படிநிலைகளை வலுப்படுத்துவது என்று தலித் அரசியலில் காந்தியின் இரட்டை அணுகுமுறை கவனமாக ஆராயப்பட வேண்டும்.

விவரணைகள் 

அம்பேத்கரை நினைவுகூர்வது எப்படி?


The Rise and Fall of the term Harijan


How Gandhi made Ambedkar a Villain 


Never a Mahatma - A Look at Ambedkar's Gandhi


How Ambedkar and Gandhi's contrasting views paved way for Caste Reservation


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Sunday, December 13, 2020

மெட்ராஸ் அரசியல்

மெட்ராஸ் அரசியல்

சுருக்கம் 
  1. முகவுரை 
  2. கல்வி நிலையங்கள் 
  3. இந்திய தேசிய காங்கிரஸ்
  4. மெட்ராஸ் அரசியல் சுவடுகள் 
  5. பெரியார் வருகைக்கு பின்னர் 
  6. திராவிட சமத்துவம்
  7. பிரிவினை அரசியல் 
  8. முடிவுரை 
முகவுரை 

திராவிட அரசியலின் ஆணிவேர் மெட்ராஸ் அரசியலில் இருந்து தான் தொடங்குகிறது. மெட்ராஸ் அரசியல் என்பது சுதந்திரத்திற்கு முந்தைய கலகக்குரலாகவும், திராவிட அரசியல் என்பது சுதந்திரத்திற்கு பிந்தைய கலகக்குரலாகவும் குறிக்கப்படுகிறது.

திராவிட, தலித், தமிழ் தேசிய அரசியல் கொள்கைகள் என்பது பார்ப்பனர்களுக்கு கசப்பு மருந்தாகும் காரணம் உண்மை கசக்கும். சுருங்கச்சொன்னால், பார்ப்பனர் அல்லாதோர் அரசியலை குறிக்கின்ற மெட்ராஸ் அரசியல் என்பது "திராவிட அரசியல் + தலித் அரசியல் + தமிழ் தேசிய அரசியல்" கலவையாகும். மேலும், நீதிக்கட்சியில் தொடங்கி பேரறிஞர் அண்ணா முதல் கலைஞர் காலம் வரை திராவிட அரசியலில் "தலித் அரசியல் + தமிழ் தேசிய அரசியல்" ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஆனால், திராவிட அரசியலில் இருந்து பிய்த்து கொண்டு தனி அரசியல் ஆதாயம் பெற ஒரு சில தலித் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் காத்துக் கிடக்கின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

கல்வி நிலையங்கள் 

மெட்ராஸ் அரசியல் செயற்பட்டால் ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் பல்வேறு கல்வி நிலையங்கள் மெட்ராஸ் பிரசிடென்சியில் உருவாகின. இதில் விதிவிலக்காக ஆங்கிலேய அரசின் நிதியில்லாமல், தமிழ்நாட்டில் முதல் கல்லூரியாக பச்சையப்பா கல்லூரியை பச்சையப்பா முதலியார் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

*1835 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 

*1837 ஆம் ஆண்டில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி தொடங்கப்பட்டது.

*1840 ஆம் ஆண்டில் பிரசிடென்சி கல்லூரி தொடங்கப்பட்டது.

*1842 ஆம் ஆண்டில் பச்சையப்பா கல்லூரி தொடங்கப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸ்

28 டிசம்பர் 1885 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பம்பாயில் உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரியில் தொடங்கப்பட்டது. 72 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் 22 பேர் மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்தவர்கள் என்பதன் மூலம் மெட்ராஸ் அரசியலின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பல்வேறு இயக்கங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. அவை,

*பம்பாய் பிரசிடென்சி அசோசியேஷன் (1885) 

*அலகாபாத் மக்கள் சங்கம் (1885) 

*கல்கத்தா இந்திய சங்கம் (1876) 

*மெட்ராஸ் மகாஜன சபை(1884)

*லாகூர் இந்திய சங்கம் (1877) 

*பூனா சர்வஜனிக் சபை (1870) 

மெட்ராஸ் அரசியல் சுவடுகள் 

*1817 இல் Madras Literary Society (MLS) ஜான் ஹென்றி நியூபோல்ட் என்பவரால் நிறுவப்பட்டது. 

*1830 இல் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் Royal Asiatic Society உடன் இணைந்தது MLS.

*1890 இல் MLS நூலகத்தின் புத்தகத் தொகுப்பின் பெரும்பகுதி Connemara Public Library க்கு மாற்றப்பட்டது.

*1844 இல் மெட்ராஸில் இந்தியாவிற்கு சொந்தமான முதல் செய்தித்தாள் The Crescent பத்திரிகையை தொடங்கினார் காசுலு லட்சுமிநரசு செட்டி. 

*1852 இல் தென்னிந்தியாவில் முதன்முதலாக மேற்கத்திய அரசியல் அமைப்பின் அடிச்சுவட்டில் காசுலு லட்சுமிநரசு செட்டி தலைமையில் பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதி இந்து மக்களின் இயக்கமாக Madras Native Association (MNA) ஏற்படுத்தப்பட்டது.

*MNA அமைப்பின் முக்கிய குறிக்கோள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் உயர் ஜாதி இந்து மக்களின் குறைகளையும் விருப்பங்களையும் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகும். 

*இந்து குழந்தைகளை ஐரோப்பிய மிஷனரிகள் மதமாற்றம் செய்வதாக MNA குற்றம்சாட்டியது.

*1868 இல் காசுலு லட்சுமிநரசு செட்டி மறைந்த பிறகு பார்ப்பனர் அல்லாத இந்துத்துவா அமைப்பாக செயல்பட்ட MNA அமைப்பு செயலிழந்தது.

*1852 இல் The Madras Hindu Debating Society (TMHDS)  வெங்கடராயுலு நாயுடு என்பவரால் தொடங்கப்பட்டது.

*1868 இல் Triplicane Native Literary Society (TNLS) மிர் இப்ராஹிம் அலி என்பவரால் தொடங்கப்பட்டது. 

*1878 இல் ஜி.சுப்ரமணிய ஐயர் தலைமையில் எம்.வீரராகவாச்சாரி, டி.டி.ரங்காச்சாரி, பி.வி.ரங்காச்சாரி, டி.கேசவ ராவ் பந்த், சுப்பா ராவ் பண்டுலு ஆகியோர் பங்களிப்புடன் The Hindu பத்திரிகை தொடங்கப்பட்டது.

*இந்திய வேதங்களையும் உபநிடதங்களையும் பரப்பிய Theosophical Society நியூயார்க்கில் இருந்து அடையாருக்கு 1882 இல் மாற்றப்பட்டது. 

*1882 இல் Swadesamitran பத்திரிகை இந்திய தேசிய உணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜி.சுப்ரமணிய ஐயரால் நிறுவப்பட்டது.

*1884 இல் செயலிழந்த MNA அமைப்பை புதுப்பிக்கும் விதமாக Madras Mahajana Sabha (MMS) என்னும் அமைப்பு எம்.வீரராகவாச்சாரி, ஜி.சுப்பிரமணிய ஐயர் மற்றும் பி.ஆனந்தாச்சார்லு ஆகியோரால் தொடங்கப்பட்டது.

*1884 இல் TNLS அமைப்பை Triplicane Literary Society (TLS) என்று பி.ஆனந்தச்சார்லு புதுப்பித்தார். 

*1891 இல் திராவிட மகாஜன சபை திராவிட சமூக அரசியலின் முன்னோடியாக அறியப்படும் அயோத்தி தாசர் என்பவரால் தொடங்கப்பட்டது.

*ஒடுக்கப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டி அயோத்தி தாசர் மெட்ராஸ் மகாஜன சபையுடன் வாதிட்டார்.

*மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக நான்காம் வகுப்பு வரை இலவச கல்வியும், பயன்படுத்தப்படாத நிலங்களை ஒதுக்கவும் கோரி ஆங்கிலேயர்களுடன் வாதிட்டார் அயோத்தி தாசர்.

*1891 இல் பறையர் மகாஜன சபை (1892 இல் ஆதிதிராவிட மகாஜன சபை என்றானது) இரட்டைமலை சீனிவாசன் என்பவரால் தொடங்கப்பட்டது.

*1930 - 1932 காலகட்டத்தில் அம்பேத்கருடன் லண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று  ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக சிறப்புற செயல்பட்டார் இரட்டைமலை சீனிவாசன்.

*1912 இல் மெட்ராஸ் யுனைடெட் லீக் (1914 இல் மெட்ராஸ் திராவிடர் சங்கம் என்றானது) இயக்கத்தை திராவிட அதிகார அரசியலின் முன்னோடியாக அறியப்படும் டாக்டர் சி.நடேசன் என்பவரால் தொடங்கப்பட்டது.

*1916 இல் மெட்ராஸ் விக்டோரியா மெமோரியல் ஹாலில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) சி.நடேசன், டி.எம்.நாயர் மற்றும் பி.தியாகராயர் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது. 

*அயோத்தி தாசர் நடத்திய பத்திரிகை திராவிட பாண்டியன் / ஒரு பைசா தமிழன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பத்திரிகை பறையன், நீதிக்கட்சி நடத்திய பத்திரிகை ஜஸ்டிஸ் ஆகும்.

பெரியார் வருகைக்கு பின்னர் 

*1924 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் ஊரில் சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை கீழ் சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தீண்டாமை உத்தரவுக்கு எதிராக வைக்கம் போராட்டம் நடைபெற்றது.

*வைக்கம் போராட்டத்தில் பெரியார், மாதவன், கேசவமேனோன், சகோதரன் ஐயப்பன், நாராயண குரு மற்றும் பல்வேறு சமூக நீதி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

*1924 இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியார் தன் பொறுப்புகளை ராஜாஜிடம் கொடுத்துவிட்டு இப்போராட்டத்தில் களப்பணி ஆற்றினார்.

*வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சாதிய பாகுபாடுகளை ஊக்குவிப்பதை வருந்தி அக்கட்சியில் இருந்து விலகி 1925 இல் சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார். 

*பெரியார் தாம் நடத்திய குடிஅரசு பத்திரிகையில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வளரும் நீதிக்கட்சி செயல்பாடுகள் குறித்து பாராட்டி எழுதி வந்தார்.

*நாளடைவில் நீதிக்கட்சியானது பெரியாரின் சமூக நீதி திட்டங்களையும், பெரியாரின் தலைமையையும், சுய மரியாதை கொள்கைகளையும் ஏற்று கொண்டது .

*1944 இல் நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தி கொண்டு சமூக சீர்திருத்தங்களில் தொடர்ந்து ஈடுபட்டது.

*1949 இல் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இருந்து விலகி ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார் அண்ணா.

*1957 முதல் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்ட தொடங்கியது தி.மு.கழகம். 

*1961 இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி ஈ.வெ.கி. சம்பத் தமிழ் தேசியக் கட்சிவை தொடங்கினார். 

*1972 இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.கவை தொடங்கினார்.

*1994 இல் தி.மு.கவில் இருந்து வெளியேறி வைகோ ம.திமு.கவை தொடங்கினார். 

*மேலும் திராவிடம் சார்ந்து பல்வேறு இயக்கங்கள் தமிழ்நாட்டில் தோன்றின. 

திராவிட சமத்துவம்

மக்களை படிக்க, சிந்திக்க, எழுத செய்து சமுதாயத்தின் தலைகீழாக்கத்தை நேர் செய்தது திராவிட இயக்கம். இன்னும் சொல்லப்போனால் பேரரசுகள் வீழ்ந்து ஜனநாயகம் பிறந்த பிறகும் பார்ப்பனியம் பாதை மாறாமல் ஏற்ற தாழ்வை உறுதி செய்து கொண்டிருந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ஏற்றத்தாழ்வை எதிர்த்து வீறு கொண்டு கிளம்பிய இயக்கம் திராவிட இயக்கமாகும்.

பெரியார் காட்டிய பாதையில், பேரறிஞர் அண்ணா சென்ற வழியில், கலைஞர் கொண்ட கொள்கையில் ஈடுபாடு கொண்டு இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் எண்ணற்ற தோழர்கள் திராவிட அரசியலை முன்னெடுத்து செல்வது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தேர்தல்களில் வென்று அரசியல் அதிகாரங்கள் கிடைத்த போதெல்லாம் தி.மு.க பார்ப்பனிய கொள்கைகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக சமூகத்திற்கு தேவையான பல திட்டங்களையும் கொண்டு வந்து சேர்த்தது. தேர்தல் அரசியலில் வென்று பெரியாரின் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்து சாத்தியம் ஆக்கியவர் அண்ணா. குறிப்பாக சுயமரியாதை திருமணம், கைம்பெண் மறுமணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, கோவிலில் தமிழ் ஆகமங்கள் ஒலிப்பது, கோவில் நிலங்களை மற்றும் கோவில் சொத்துக்களை பராம்பரிக்க இந்து அறநிலையத்துறை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை, சமசீர் பாடத்திட்டம், அறிவியல் வளர்ச்சி, நில உச்சவரம்பு சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை, மருத்துவ காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளி நலவாரியம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சமூகநல திட்டங்கள் திராவிட அரசியல் வாயிலாக தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. திராவிட அரசியலின் திட்டங்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிவினை அரசியல் 

*வலதுசாரி அரசியல் = பார்ப்பனீயம் = மனு நீதி = பார்ப்பனிய சமூகத்தை பேணுகிறது.

*திராவிட அரசியல் = சமத்துவம் = சமூக நீதி = அனைத்து சமூகத்தை பேணுகிறது.

சில தலைவர்கள் திராவிட அரசியல் மன்றத்தில் இருந்து தலித் அரசியலையும் தமிழ்தேசிய அரசியலையும் பிரிக்க முயற்சிக்கின்றனர். தலித் அரசியலும் தமிழ்தேசிய அரசியலும் திராவிட அரசியல் மன்றத்தில் இருந்து பிரிக்கப்பட்டால் அது கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளில் பிரிவினைவாதமாக செயல்படும்.

*தலித் அரசியல் = தலித்தியம் = தலித் நீதி = தலித்திய சமூகத்தை பேணுகிறது. 

*தமிழ் தேசிய அரசியல் = இடைநிலை சாதியம் = சாதிய நீதி = சாதிய பிரிவினைகளை பேணுகிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான சமூக நீதியில் "தலித் விடுதலை + தாய் மொழி" முக்கியத்துவம் இருக்கும் போது "திராவிட அரசியல்" மீது சேற்றை வாரி இறைத்து "தலித் + தமிழ் தேசிய" பிரிவினை அரசியல் பேசுவது நாகரிகமற்ற செயல் ஆகும். திராவிடம் மீது பழியை சுமத்தி தலித்தியம் பேசும் தலைவர்கள் தலித்திய மக்களை ஓட்டுகளாக பார்ப்பதும், தமிழ் தேசியம் பேசும் தலைவர்கள் இடைநிலை சாதிகளை ஆண்டைகளாக பார்ப்பதும் கவனிக்க வேண்டிய நுண்ணரசியலாகும்.

முதலாளித்துவ பார்வையுடன் பார்ப்பனியம் பேணும் பார்ப்பனிய அதிகாரம் கைமாறி இடதுசாரிய பார்வையுடன் சமத்துவம் பேணும் திராவிட அதிகாரம் மலருவது இன்றைய காலத்தின் தேவை. இங்கே திராவிடம் பேணும் சமத்துவம் விடுபட்டு, தலித்தியம் அல்லது தமிழ் தேசியம் மட்டுமே முன்னெடுக்கப்பட்டால் அவை பார்ப்பனிய முறையிலான ஆட்சிக்கே வித்திடும். ஏனெனில், ஒற்றை பார்வையுடன் தலித்தியமயமாக்கல் மற்றும் தமிழ் தேசியமயமாக்கல் கோருவது என்பது சமத்துவத்தை மறுக்கும் அதிகார அரசியல் ஆகும். சுருங்கச்சொன்னால், திராவிடம் கோரும் அதிகார இலக்கு என்பது சமத்துவம் ஆனால் தலித்தியம் மற்றும் தமிழ் தேசியம் கோரும் அதிகார இலக்கு என்பது பார்ப்பனிய முதலாளித்துவம் ஆகும்.

திராவிடம் தவிர்த்து தலித்தியம் மற்றும் தமிழ் தேசியம் மட்டுமே பேசுபவர்கள் "திராவிட வரலாறு" குறித்து படித்தறிந்து தங்களை மெருகேற்றி கொண்டு திராவிட பாதையில் பயணிக்க வேண்டும். தலித் அரசியல் பேசிய சத்யவாணி முத்து தேர்ந்தெடுத்தது திராவிட அரசியல் பாதையே, தமிழ் தேசிய அரசியல் பேசிய ம.பொ.சி இறுதியில் தேர்ந்தெடுத்தது திராவிட அரசியல் பாதையே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முடிவுரை 

உலகம் முழுவதும் கட்சிக்கும் ஆட்சிக்கும் "உச்ச அதிகாரம்" பெறப்போவது "ஒற்றை நபர்" தானே? அதிலென்ன கொள்கை வேறுபாடு இருந்துவிட போகிறது என்று சிலர் கேட்கலாம். ஆம், தலைமைக்கு ஒற்றை நபர் தான் ஆனால் முதலாளித்துவ பாசிச கொள்கை கொண்டு செயல்படும் ஒற்றை நபருக்கு பதிலாக இடதுசாரிய சமத்துவ கொள்கை கொண்டு செயல்படும் ஒற்றை நபர் தான் தேவை.

வாசித்தும் பேசியும் எழுதியும் வளர்ந்த அரசியல் களம் மெட்ராஸ் அரசியல் களம். அதற்கேற்ப திராவிடர்கள் யார்? ஆரியர்கள் யார்? என்பதை மக்கள் அறிய முற்பட வேண்டும். அப்படி அறிந்தால் தான் பிரிந்து நிற்கும் தலித் மற்றும் தமிழ் தேசியவாதிகள் திராவிட அரசியல் இழையில் இணைய இயலும். பார்ப்பன கொள்கையை கடைபிடிக்காத பார்ப்பனர்களும் நம்முடன் இணையலாம். 

ஆங்காங்கே குறைகள் இருப்பினும் "திராவிடம் + தலித்தியம் + தமிழ் தேசியம்" ஒரே கலவையாக வருங்காலத்தில் ஒன்றிணைய வேண்டும் இல்லையேல் வலதுசாரி இயக்கம் வளர நம் பிரிவினைகளே (Divide & Rule) காரணமாக அமைந்திடும். 

# Democratism > Totalitarianism 

# Communism > Capitalism

# Dravidianism > Aryanism

விவரணைகள் 

Madras Politician Gazulu Lakshminarasu Chetty


Madras Organisations and Conference



Theosophy and Origins of Indian National Congress


திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன்


நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த கதை


Political Backdrop of Tamil Nadu


Why Dravidian History Month should be observed?


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

டேட்-லேபியங்கா கொலைகள்

டேட்-லேபியங்கா கொலைகள் பொருளடக்கம்  முகவுரை ஹெல்டர் ஸ்கெல்டர் டெர்ரி மெல்ச்சர் கொலைக்கான காரணங்கள்  முடிவுரை பின்குறிப்பு  விவரணைகள்  முகவுர...